Home கட்டுரைகள் குண நலம் மௌனம் பேசும் - Dr. ஃபஜிலா ஆசாத்
மௌனம் பேசும் - Dr. ஃபஜிலா ஆசாத் PDF Print E-mail
Thursday, 13 February 2020 08:00
Share

மௌனம் பேசும்

    Dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்     

[   உணர்ச்சி வசப்படுகிறவர்களால் உண்மையை உணர முடியாது. விழிப்புணர்ச்சியோடு செயல்பட இயலாது. எந்த சூழலிலும் தன் உணர்ச்சிகளை தன் கைவசம் வைத்துக் கொள்கிறவர்களால் மட்டுமே எதையும் திட்டமிட்டபடி செய்ய முடியும்.]

பேச வேண்டிய நேரத்திலே மௌனமாக இருப்பதும் தவறு. மௌனமாக இருக்க வேண்டிய நேரத்திலே பேசுவதும் தவறு என்பார்கள். மௌனமாக இருக்க வேண்டிய நேரம் என்றால், எந்த நேரத்திலும் நியாயத்தை பேசுவதில் என்ன தவறு இருக்க போகிறது என்று தான் பலருக்கும் தோன்றும்.

இடம் பொருள் ஏவல் கருதி, மௌனமே பல இடங்களில் சிறந்த மொழியாவது மட்டுமல்லாமல், சிறந்த செயலாகவும் இருக்கும். எல்லாவற்றிற்கும் உடனடியாக ரியாக்ட் பண்ணாமல் சில விஷயங்களை நாம் தூர நின்று பார்ப்பதே மகிழ்ச்சி தரும் என்கிறது வாழ்வியல்.

அது ஒரு கோடை காலம். மழையற்ற வெயிலின் கடுமையில் எப்போதும் இல்லாத அளவு வறட்சி ஏற்பட, அந்த கிராமத்தில் இருந்த குளத்தில் நீர் வற்றி விடுகிறது. மற்ற பறவைகள் எல்லாம் வேறு நீர்நிலைகள் நோக்கி பறக்க, அந்த குளத்தில் இருந்த ஆமை மேல் அதீத நட்பு கொண்ட இரண்டு வெள்ளைப் புறாக்கள் மட்டும் நட்பை பிரிய முடியாமல் நீரற்ற அந்த குளத்தையே சுற்றி சுற்றி வருகின்றன.

ஆனால் வறண்டு போன இந்த பகுதியில் வெறுமனே இருப்பதால் ஒருவருக்கும் பயனில்லையேஸ தாங்களும் உயிர் வாழவேண்டும் ஆமையும் காப்பாற்றப் பட வேண்டும் என்ன செய்யலாம் என்று சிந்திக்கும்போது அங்கு தூரத்தில் ஒரு நீண்ட கயிறு தென்படுகிறது. உடனே புறாக்களுக்கு ஒரு ஐடியா பளிச்சிடுகிறது.

அடுத்த நாள் அதிகாலையில் அந்த கயிற்றின் இரு பகுதியையும் இரண்டு பறவைகளும் தங்கள் கால்களில் கட்டிக் கொள்ள, ஆமையை கயிற்றின் நடுப்பகுதியை அதன் வாயல் கவ்விக் கொள்ள செய்து வேறு நீர்நிலைக்கு தூக்கி செல்வதென்று முடிவாகிறது.

திட்டம் செயல் படும்போது பக்குவப் பட்ட அந்த பறவைகள் தங்கள் நட்பு ஆமையிடம் உலக நடப்பை எடுத்து சொல்கின்றன. நாம் பல இடங்களை கடந்து போக வேண்டி இருக்கிறது. பலர் பல மாதிரி இருப்பார்கள். ஏதேதோ வேண்டாத பேச்சுகள் உன் காதில் விழலாம். உன் பொறுமையை அவை விலை பேசலாம். நன்கு புரிந்து கொள். அதற்கு பதில் சொல்வதற்கான நேரம் இது அல்ல. ஏனென்றால் நாங்கள் என்ன தான் கயிறைப் பிடித்து தூக்கி சென்றாலும் உன்னுடைய வாயைத் திறந்தால் அவ்வளவுதான். நீ கிழே விழுந்து விடுவாய். இது பாட்டி கதையில் வரும் காகத்தின் வடை அல்ல உன் ‘உயிர்’ என்று எச்சரிக்கின்றன.

ஆமையும் புரிந்து தலை அசைக்க, பயணம் தொடங்குகிறது. வறண்ட காடுகள், பாலைவனம் எல்லாம் தாண்டி இதோ மக்கள் நடமாட்டம் மிக்க பசுமையான ஒரு ஊர் தென்படுகிறது. இன்னும் சற்று தூரம் சென்றால் அவர்கள் செல்ல வேண்டிய ஏரி வந்து விடும். அங்கு ஆமையை இறக்கி விட்டு விட்டு தங்கள் நட்பு தொடர அதனோடு அங்கு நிம்மதியாக இருக்கலாமென பறவைகளுக்குள் மகிழ்ச்சி எழுகிறது.

அப்போது அந்த ஊரில் நடமாடும் மனிதர்கள் பலரும் இரு பறவைகள் ஆமையை தூக்கி செல்லும் அதிசயக் காட்சியை அண்ணாந்து பார்த்து, அவரவர்களுக்குரிய வகையில், அவர்கள் அறிந்த முறையில், வியப்பை வெளிப் படுத்துகின்றனர். சிலர் கை தட்டி தங்கள் அன்பை, மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். சிலர் கல்லை விட்டு எறிந்து தங்கள் இருப்பை பறைசாட்டுகின்றனர். சிலர் கடுமையான விமர்சனங்களால் தங்கள் அறிவை கொளுத்திப் போடுகின்றனர்.

அந்த ஆமை ஊனமுற்றதாக இருக்குமோ, அது ஏதோ பெரும் குற்றம் செய்திருக்குமோ, இதை எங்கே இந்த பறவைகள் நாடு கடத்துகின்றனஸ. இப்படி பலவாறு போகிறது எல்லையற்ற விமர்சனங்கள்ஸ

முதலில் அவர்கள் பாராட்டி கை தட்டும் சத்தத்தால் பெருமிதம் கொண்ட ஆமையால் இப்போது அவர்கள் கூச்சலையும், பலவாறான விமர்சனத்தையும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நிறைகள் பேசப் படும்போது, அதன் எண்ணிக்கை கூடும் போது, இத்தனை பேரால் தான் பாராட்டப் படுகிறோமே என பெருமிதம் கொள்ளும் மனம்.. அந்த அத்தனை பேரும் தன்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. அவர்கள் கை தட்டமட்டுமல்ல, சில சூழலில் கைகொட்டியும் சிரிப்பார்கள்ஸ தங்கள் சிறு நிறைகளையும் பெரிது படுத்தும் அவர்கள் தங்கள் சிறுசிறு குறைகளையும் பூதாகரமாக சுட்டிக் காட்டுவார்கள்ஸ என்பதை புரிந்து கொள்ள முடியாமல் போகிறது.

விவாதங்களும் விமர்சனங்களும் அந்த ஆமையை என்னவோ செய்கிறது.. எங்கே இவர்கள் தன்னை பலவீனமானவனாக நினைத்து விடுவார்களோ என இயலாமையாக இருக்கிறது. தான் ஒரு காட்சி பொருளாகி விட்டோமோ என ஈகோ துடிக்கிறது.. இந்த பறவைகள் எனக்கு உதவி செய்கிறது என்றால் இந்த பறவைகளுக்கு நானும் பல உதவிகள் செய்திருக்கிறேன் என தன்மானம் நிமிர்கிறது. தன்னை சுற்றி எழும் விமர்சனங்களுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டுமென அந்த ஆமைக்கு குறுகுறுவென இருக்கிறது.

ஆனால் அதற்கு தன் வாயைத் திறக்க வேண்டும். வாயைத் திறந்தால் அவ்வளவு தான் கயிற்றைப் பிடித்துக் கொண்டிருக்கும் தன் பிடி தளர்ந்து உயரத்திலிருந்து கீழே விழ வேண்டி இருக்கும் என எந்த முன்னெச்சரிக்கையும் மனம் மறக்கடித்து விடுகிறது.

உணர்ச்சி வசப்படுகிறவர்களால் உண்மையை உணர முடியாது. விழிப்புணர்ச்சியோடு செயல்பட இயலாது. எந்த சூழலிலும் தன் உணர்ச்சிகளை தன் கைவசம் வைத்துக் கொள்கிறவர்களால் மட்டுமே எதையும் திட்டமிட்டபடி செய்ய முடியும்.

ஆமையும் தன்னை மறந்து, அந்த சூழலின் வயப்பட்டு, தன்னை நிலை நிறுத்த விளக்கம் கொடுப்பதற்காக வாயை திறக்கிறது.. அவ்வளவு தான்.. வாயால் கயிற்றைப் பிடித்திருந்த பிடி தகர்ந்து, நிலை குலைந்து கிழே விழும் நேரம்ஸ நல்ல வேளையாக குளம் வந்து விட குளத்திலே விழுவதால் சிறு அதிர்ச்சியுடன் உயிர் தப்புகிறது.

ஆனால் அப்போதுதான், தான் எத்தனை பெரிய தவறு செய்தோம் என்பது அதற்கு புலப்படுகிறது. ஒரு அடி தள்ளி விழுந்திருந்தால் கூட விபரீதமாக போய் இருக்குமே என உடல் நடுங்கி பெருமூச்சு எழுகிறது.

இந்த கதை உங்களுக்கு எதை நினைவு படுத்துகிறது என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்

உங்களுக்கு வேண்டியவர்கள் நல்ல மனதோடு உதவி செய்யும் போது, யாரோ ஒருவர் அதை விமர்சனம் பண்ணினால் கூட, அவர்கள் எனக்கு சும்மா ஒன்றும் உதவி செய்து விடவில்லை. நான் இப்படி செய்திருக்கிறேன் அப்படி செய்திருக்கிறேன் என்று உதவுபவர்களையே நிதானம் இழந்து குற்றம் சுமத்தும் சந்தர்ப்பம் பெரும்பாலும் பலருக்கும் எழுகிறது.

அதனால் எந்த உதவியும் யாரும் செய்ய வேண்டாம் என வலிந்து சிரமங்களை கை கொள்ள துடிக்கிறது வைராக்கியம் கொண்ட மனம். அல்லது அப்படி யாரும் சொல்லாவிட்டால் கூட எங்கே எதுவும் சொல்லி விடுவார்களோ என வேண்டாத கற்பனைகள் செய்து கொண்டு சுற்றத்தையும் நட்பையும் தள்ளி வைத்து மனம் தனக்குள் இறுகிக் கொள்கிறது. வேண்டாத இடங்களில் வார்த்தைகள் வீரியம் கொண்டு வெடித்து எழ அதனால் பிரச்னைகள் மேலும் பெரிதாகிறது.

எந்த சூழலிலும், தான் நினைப்பதை எல்லாம் சொல்வதற்கு இது சரியான நேரம் தானா அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என சிந்தித்து மௌனம் கொள்ள வேண்டிய இடத்தில் வார்த்தைகளை வசப்படுத்துவதே நிலையான மகிழ்ச்சி தரும்.

அவர்கள் அப்படி நடந்து கொண்டதால் தான், நான் இப்படி நடக்க வேண்டியாதாகி விட்டது என தனக்குத் தானே நியாயம் கற்பித்துக் கொள்வதில் என்ன பலன் இருக்கப் போகிறது.

உங்களுக்கான அந்தநேர நியாயத்தை மட்டும் பார்க்கும் போது, அது நிம்மதியை இழக்க செய்யலாம். நிம்மதியில் கவனம் வைத்து சிந்தித்து செயல் படவேண்டும் என்பதை புரிந்து கொண்டு நிதானம் இழக்காமல் செயல்பட்டால் உங்களுக்கான நியாயம் நிச்சயம் நல்ல முறையில் நிலைபெறும்.

எது வேண்டும் நமக்கு!

From: Fajila Azad < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it >

Thanks to Mudhuvai HIDHAYATH (Jazaakallaahu khair)