Home கட்டுரைகள் அப்துர் ரஹ்மான் உமரி சுதந்திரம் இலவசமில்லை!
சுதந்திரம் இலவசமில்லை! PDF Print E-mail
Monday, 10 February 2020 17:26
Share

சுதந்திரம் இலவசமில்லை!

     Abdurrahman Umari     

[  நாட்டார்கள், நாட்டை விட கொள்கைகளும் கோட்பாடுமே முக்கியம் என்று நம்புவார்களேயானால், நாடு நாசமாவது நிச்சயம். அவ்வாறு தேசம் துண்டாகிவிடாமல் பாரதத்தை நம் கடைசி மூச்சு வரைப் பேணிப் போற்றிக் காப்பது குடிமக்களின் தலையாய கடமை.

 சுதந்திரம் ஒரு மிகச் சந்தோஷமான சங்கதி. ஆனால் சுதந்திரம் இலவசமில்லை! நம் தோள்களில் பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது. நாட்டில் நடக்கும் நல்லதும் கெட்டதும் இனிமேல் விடிவது நம் தலையிலேயே!

அன்னியரைக் குற்றம் சொல்லி காலம் தள்ளும் நாள் கடந்தாயிற்று. நாம் பெற்ற சுதந்திரத்தையும், வகுத்துக்கொண்ட அரசியல் அமைப்பு சட்டத்தையும் பேணிப் போற்றிக் காக்க வேண்டுமானால், நம் சமூகத்தின் கொடூரமான ஏற்றத்தாழ்வுகளை சடுதியில் களையவேண்டும்.

 

அண்ணல் அம்பேத்கர்

வீணை தரமானதாக இருந்தாலும் நாதம் மீட்டுவோரின் திறனைப் பொறுத்தே அமையும். அது போல, ஒரு நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மிகச் சிறப்பாகவே இயற்றப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அதை சரிவர பின்பற்றாவிட்டால், அது நல்வீணையை நலம் கெட புழுதியில் எறிவதற்கு சமமே.

அரசியலமைப்புக் கோப்பினால் ஒரு நாட்டை எப்படி சட்டம், ஒழுங்கு, நீதி நிலவ நடத்தி செல்வது என்று, கோடிட்டுக்காட்ட மட்டுமே முடியும். மக்களும், மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளும் சட்டபூர்வமான வழிமுறைகளைப் புறக்கணித்து, புரட்சிப் பாதையில் பயணிக்கும் பட்சத்தில், அரசியலமைப்புச் சட்டம் வாடி வதங்கி முடங்கிவிடும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி

நம் நாட்டின் எதிர்காலம் பற்றிய என் கவலைகளையும், கற்பனைகளையும் இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்: 1950 ஜனவரி 26-ஆம் நாள், நம் நாடு விடுதலை (மூலத்தில் அவ்வாறே) அடையும். என் முழுமுதற் கவலை நாம் நமது சுதந்திரத்தைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே.

ஏனென்றால் நம் சரித்திரத்தின் ஏடுகளைப் புரட்டிப் பார்க்கும்போது, பல்வேறு காலக் கட்டங்களில் துருக்கியரிடத்திலும், முகலாயரிடத்திலும், ஆங்கிலேயரிடத்திலும் நாட்டின் விடுதலையை விலை போட்டு விற்றோ, பணயம் வைத்தோ, பயனடைந்து ஏப்பம் விட்ட எட்டப்பர்களை நிறையவே நிதர்சனமாக நித்தமும் பட்டவர்த்தனமாக பார்க்க முடிகிறது.

பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்ற பழமொழி பிறிதொருமுறை பலிக்காது என்று எப்படி நிச்சயமாக நம்புவது? நிம்மதியாய்த்தான் தூங்குவது?

நம்மவரிடையே நாள்தோறும் நிலவும் ஜாதி, மத, மொழி, இன, வட்டார வேறுபாடுகள் போதாதென்று, இப்போது புதிதாக எதிரும் புதிருமான விதவிதமான கோட்பாடுகளைக் கொண்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வேறு! குட்டையைக் குழப்பும் வகையில்!

நாட்டார்கள், நாட்டை விட கொள்கைகளும் கோட்பாடுமே முக்கியம் என்று நம்புவார்களேயானால், நாடு நாசமாவது நிச்சயம். அவ்வாறு தேசம் துண்டாகிவிடாமல் பாரதத்தை நம் கடைசி மூச்சு வரைப் பேணிப் போற்றிக் காப்பது குடிமக்களின் தலையாய கடமை.

1950 ஜனவரி 26-ஆம் நாள், இந்தியாவை ஒரு குடியரசாக அறிவித்து, இனிமேல் இங்கே மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் மக்களின் அரசாங்கமே செல்லுபடியாகும், செங்கோல் ஓச்சும் என்று பாருக்கெல்லாம் பறையறைந்து பிரகடனம் செய்யப்போகிறோம். இது சம்பந்தமான என் கவலையும் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் கவலையைப் போன்றதே

நம் நாட்டின் இறையாண்மையின் மாட்சிமை மன்னுலகம் எல்லாம் மின்னுமா? அல்லது அதன் செங்கோல் சிதைந்து, தம்மை தண்டல்காரர்களாக தாங்களே நியமித்துக்கொண்டவர்களின் தடியாட்சி தலைவிரித்தாடுமா?

பழமையான நம் பாரதநாட்டின் புராணங்களையும் சரித்திரத்தையும் உன்னிக் கவனித்தால், ஜனநாயக வழிமுறைகளும் பாராளுமன்ற பாரம்பரியங்களும், குடியாட்சியும் பல்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு பகுதிகளில் பரிமளித்ததைப் புரிந்துகொள்ளலாம்

ஜனநாயகம் நமக்கு புதியது அல்ல!

புத்த சங்கங்கள் பாராளுமன்றங்களே அன்றி வேறில்லை. சோழர்களின் குடவோலை முறையும் இன்ன பிற உதாரணங்களும் நமக்கு அறிவிப்பது என்னவென்றால் முடியாட்சி தழைத்த காலங்களிலும், நடைமுறையில் பல்வேறு முடிவுகள் ஜனநாயக முறைப்படியே எடுக்கப்பட்டன என்பதே

இப்படி நெடுநாள் நம்மிடையே நிலவிய ஜனநாயக பாரம்பரியங்களை ஏற்கெனவே ஒரு முறை தொலைத்துத் தீர்த்துக்கட்டி தலைக்கு தண்ணீரும் விட்டுக்கொண்டு விட்டோம். அதே மட சாம்பிராணித்தனத்தை மீண்டும் செய்யமாட்டோம் என்று என்ன நிச்சயம் ?

நமது குடியரசு கோப்பளவில் இல்லாது, நடைமுறையிலும் சோபிக்க, நாம் செய்ய வேண்டியனவற்றில் தலையாயாவது என்னவெனில்;

1. நமது இலக்கை அடைய, அரசியல் நிர்ணயச் சட்டத்தையும் அந்தச் சட்டம் அங்கீகரிக்கும் வழி முறைகளையும் மட்டுமே கையாள வேண்டும். வன்முறை, வெறியாட்டம், ஒத்துழையாமை, பணியாமை, சத்தியாக்கிரஹம்* – இவை அனைத்தையுமே களைந்து கழட்டி விட வேண்டும். வேற்றோர் ஆட்சியில், வாடி வதங்கிய நாளில், சட்டமேது? சாத்திரம்தானேது? என்றிருந்த நிலை விலகி, இன்று மக்களாட்சி மலர்ந்த பின்னாலும் வன்முறையையோ, சத்தியாகிரஹத்தையோ, கடைப்பிடிப்பது அராஜகத்துக்கு இலக்கணமாகும். அட்டூழியத்துக்கு அச்சாரமாகும்.

2. அடுத்து, ஜான் ஸ்டூவர்ட் மில் எச்சரித்தபடி,“எவ்வளவுதான் தூய தியாகியாக இருந்தாலும் ஒரு தனி மனிதனை தெய்வமேபோல் துதித்து, தங்கள் சித்தம் எம் பாக்கியம் என்று அவர் பாதங்களில் சுதந்திரத்தை படையலாக்கிப் பறி கொடுத்துவிடக் கூடாது.”

நாட்டுக்கு பெருந்தொண்டாற்றியவரை துதித்தலும், நன்றி பாராட்டுதலும் முறையே – ஆனால், அயர்லாந்தின் அறிஞர் டேனியல் ஓ கானல் சொன்னபடி,“நன்றிக்காக ஒருவன் தன் மானத்தைத் துறக்கமுடியாது; நன்றிக்காக ஒருத்தி தன் கற்பைத் துறக்கமுடியாது; நன்றிக்காக ஒரு நாடு தன் சுதந்திரத்தைத் துறக்கமுடியாது;”

இந்த விஷயம் நம் நாட்டைப் பொறுத்தவரை மிக மிக முக்கியம். பெற்றோர்களிடம் பக்தி, ஆசிரியர்களிடம் பக்தி, முதியோர்களிடம் பக்தி, மத குருமார்களிடம் பக்தி என்ற பாரம்பரியத்தில் திளைத்த நாம், தனி நபர் துதியிலும் தடங்கோ தயக்கமோ இல்லாமல் இறங்கத் தலைபடுவோம். ஆன்மீக காரியங்களில் பக்தி முக்திக்கு வழி வகுக்கலாம் – அரசியலில் பக்தி சர்வாதிகார சக்திக்கு வித்து ஆகும்.

3. அடுத்து, அரசியல் அளவில் ஜனநாயகம் என்பதோடு நில்லாமல், தினசரி வாழ்வில் நம் சமுதாயத்தில் ஜனநாயகம் விளங்க வழி காணவேண்டும்.    ஜனநாயகத்தின் அடிப்படை நாதமும், ஆதார சுருதியுமான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியன பல்கி பெருக்கெடுக்க பேணவேண்டும். இதற்கு முதற்கண் நம் நாட்டில் சமத்துவம் என்பதோ சகோதரத்துவம் என்பதோ லவலேசமும் நடைமுறையில் இல்லை என்று ஏற்றுக்கொண்டு, அந்த அவல நிலையை மாற்ற விழைய வேண்டும்.

1950 ஜனவரி 26-ஆம் நாள் அரசியல் சட்டப்படி இந்தியர் அனவரும் சமம் என்றாலும், பொருளாதார, சமுதாய கண்ணோட்டத்தில் நம் மக்களிடையே நிலவும் கடும் ஏற்றத்தாழ்வுகள், மலையயும் மடுவையையும் ஒத்தனவே. பொருளாதார நிலையிலும் சமுதாய சம்பிரதாயங்களிலும் நிலவும் கொடும் வேறுபாடுகளை களையவும், சம வாய்ப்புகள் எல்லோருக்கும் கிடைக்கவும் ஏற்பாடு செய்யவில்லை என்றால் அரசியல் அளவில் மட்டுமேயான ஜனநாயகம், அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் போன்று விழுந்து நொறுங்குவது திண்ணம். நம்மிடையே நிலவும் ஜாதி, மத, மொழி, இன, வட்டார வித்தியாசங்களை மீறி சகோதரத்துவம் காண்வது மிகவும் கடினம். ஆயினும் சகோதரத்துவத்தை அடையாவிடில் சுதந்திரமும் சமத்துவமும் விழலுக்கு இறைத்த நீரே !

இவை என் கருத்துப்படி நம் தலையாய கடமைகள். நான் சொல்வது சிலர் செவிக்கு நாராசமாயிருக்கலாம். ஆனால் நம் நாட்டில், அதிகாரமும் ஆட்சியும் ஆதிக்கமும் மிகச்சிலரே அனுபவிப்பதும், மிகப் பெரும்பான்மையோர் ஆட்டு மந்தையே போல் அடக்கப்பட்டு அடிமட்ட வாசிகளாக வாழ்வதும் நிதர்சனமான உண்மை. தாழ்த்தப்பட்ட மக்களின் தாகம், தமக்கும் தன்மானத்துடன் வாழ வாய்ப்பு. இந்த நியாயமான கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டால், அது வர்க்கப் போராட்டமாக வெடித்து வினையாகும். நாம் பாடுபட்டு பெற்ற சுதந்திரத்திற்கும், வகுத்துக்கொண்ட ஜனநாயகத்துக்கும் விஷமாகும்

சுதந்திரம் ஒரு மிகச் சந்தோஷமான சங்கதி. ஆனால் சுதந்திரம் இலவசமில்லை! நம் தோள்களில் பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது. நாட்டில் நடக்கும் நல்லதும் கெட்டதும் இனிமேல் விடிவது நம் தலையிலேயே. அன்னியரைக் குற்றம் சொல்லி காலம் தள்ளும் நாள் கடந்தாயிற்று. நாம் பெற்ற சுதந்திரத்தையும், வகுத்துக்கொண்ட அரசியல் அமைப்பு சட்டத்தையும் பேணிப் போற்றிக் காக்க வேண்டுமானால், நம் சமூகத்தின் கொடூரமான ஏற்றத்தாழ்வுகளை சடுதியில் களையவேண்டும்.

மக்களால், மக்களுக்கான, மக்களின் அரசு என்றென்றும் மலர்ந்திருக்கச் செய்ய இதுவே ஒரே வழி

source:  https://www.facebook.com/syed.umari.7/posts/1160427804161613