கவனம் இல்லாத தொழுகை; கவனம் இல்லாத பாலுறவு - இரண்டிலும் எந்தப் பயனும் இல்லை! |
![]() |
![]() |
![]() |
Wednesday, 15 January 2020 17:44 | |||
கவனம் இல்லாத தொழுகை; கவனம் இல்லாத பாலுறவு - இரண்டிலும் எந்தப் பயனும் இல்லை! நீடூர் S.A.மன்சூர் அலீ திருமறையின் 23 வது அத்தியாயத்தின் முதல் 11 வசனங்களின் தமிழ் மொழிபெயர்ப்பைக் கீழே தந்துள்ளோம் உங்கள் சிந்தனைக்கு. ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். இன்னும், அவர்கள் வீணானவற்றை விட்டு விலகியிருப்பார்கள். ஸகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள். மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர – நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள். ஆனால், இதற்கு அப்பால் எவர் நாடுகிறாரோ அவர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள். இன்னும், அவர்கள் தங்கள் அமானிதங்களையும், வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளைப் பேணுவார்கள். இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள். இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். (23:1-11) இந்த இறை வசனங்களில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன? வெற்றி, ஈமான், தொழுகை, உள்ளச்சம், ஸகாத், ”வீணானவை”, பாலியல், அமானத், வாக்குறுதி, சுவனம் - இவை தான்! இவற்றுள் ஈமான், தொழுகை, ஸகாத், சுவர்க்கம் - ஆகிய சொற்கள் திருமறையில் பல இடங்களில் திரும்பவும் திரும்பவும் சொல்லப்படுபவை. இந்த மூன்று விஷயங்களுக்கும் ஒரு விதமான நெருங்கிய தொடர்பு உண்டு! முதலில் உள்ளச்சம். அதாவது தொழுகையின் போது வல்லோன் அல்லாஹ்வுக்கு முன்னால் அடிபணிந்து நிற்கும் ஒரு அடிமையின் மன நிலைக்குப் பெயர் தான் உள்ளச்சம். தொழுகையில் இந்த மனநிலையை நிலை நிறுத்திட தொழுகையில் நமக்கு கவனக் குவிப்பு அவசியம். அதாவது concentration, mindfulness and attention - இவையெல்லாம் அவசியம் என்று சொல்லலாம். வீணானவை என்பது எவற்றையெல்லாம் குறிக்கும்? நமக்குப் பயனளிக்காத அனைத்தையும் குறிக்கும்! நண்பர்களுடன் அரட்டை அடித்தல், சினிமா, கிரிக்கெட், இசை, தேவையற்ற விவாதங்கள், வெட்டிப் பேச்சுக்கள் எல்லாமே - வீணானவை தான்! ஆனால் "ஈமான்" கொண்டவர்கள், "வீணானவற்றில்" மூழ்கி விடாமல் விலகி விடுவதால், அவர்கள் "உள்ளச்சத்தோடு" "தொழுகிறார்கள்! இவர்களின் "பாலுறவு வாழ்க்கையும்" மிகச் சிறப்பாக இருக்கும்; காரணம் என்ன தெரியுமா? தொழுகை தரும் கவனக்குவிப்பு, பாலுறவிலும் பிரதி பலிக்கும்; எனவே அவர்கள் தங்கள் வெட்கத் தலங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். இதனை மீண்டும் வரிசைப் படுத்துவோம். வெற்றியுடன் துவங்குகிறது இறை வசனம். வெற்றியை இறை நம்பிக்கையோடு சேர்த்துச் சொல்கிறான் வல்லோன் அல்லாஹ்! ஈமான் தொழுகையுடன் இணைக்கப்படுகிறது. தொழுகை உள்ளச்சத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளச்சம் நமக்கு கவனக் குவிப்பை (concentration and mindfulness) வழங்குகிறது. ஐந்து வேளை தொடர்ந்து தொழுபவர்கள் “வீணானவற்றில்” மூழ்கிட மாட்டார்கள். தொழுகை தரும் கவனக் குவிப்பு – இறை நம்பிக்கையாளனின் தாம்பத்திய வாழ்க்கையைச் சிறப்பாக ஆக்கி விடுகின்றது. எனவே அவன் தன் திருமண பந்தத்தைத் தவிர்த்த வழிகளில் செல்வதில் இருந்து காக்கப்படுகின்றான். மனைவியிடம் தரும் "வாக்குறுதிகளை" தவறாது நிறைவேற்றுகிறான். மனைவி குளிர்ந்து போய் விடுகின்றாள். கணவன் எந்நேரத்திலும் தனக்காகவே இருக்கின்றான் என்று நம்புகிறாள் (trust). இது தான் உலகிலேயே அவர்களுக்குச் சுவர்க்கம்! இவர்களே சுவனத்தின் வாரிசுதாரர்கள்! பாடம் என்ன? கவனம் இல்லாத தொழுகை; கவனம் இல்லாத பாலுறவு - இரண்டிலும் எந்தப் பயனும் இல்லை! பாலுறவு சிறப்பாக இருந்தால் அதன் "விளைவு" என்ன? சூரத்துல் முஃமினூன் அத்தியாயத்தின் இதற்கு அடுத்து வரும் மூன்று வசனங்களைப் படியுங்கள்; புரியும்! -சுன்னத்தான இல்லறம் source: https://www.facebook.com/sunnatinillaram/posts/486573164805772
|