Home கட்டுரைகள் குண நலம் நல்ல உபசரிப்பு பாதுகாப்பின் திறவுகோல்!
நல்ல உபசரிப்பு பாதுகாப்பின் திறவுகோல்! PDF Print E-mail
Friday, 27 December 2019 09:56
Share

நல்ல உபசரிப்பு பாதுகாப்பின் திறவுகோல்!

     முஹம்மத் பகீஹுத்தீன்     

[ நல்லுறவு எத்தகைய நிலையிலும் தொடர்ந்து பேணுவது ஈமானிய மனிதர்களின் பண்பாகும். நல்லுறவு பேணுவதற்கு எந்த ஜாதியும் இல்லை, எந்த மதமும் இல்லை.

உழைக்காமல் பாதுகாப்பைப் பெற முடியாது. வா வா தோழா உழைப்போம் முதலில்,    அறுவடையை அடுத்த பரம்பரைக்கு விட்டு விடுவோம்.]

அமைதியான நதியில் ஓடிய ஓடம் ஏப்ரல் 21 இல் தடம் புரண்டது. அந்த சதிக்குப் பின்னால் யார் என்பது பலருக்குப் புதிராக உள்ளது. அது வல்லரசுகளின் இரும்புக் கரம் உலகில் அன்றாடம் செய்யும் கபட நாடகம் என்பது கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய வருகிறது.

எனவே கருத்து முரண்பாடுகளை வைத்து மோதிக் கொள்வதில் அர்த்தமில்லை. எதிர்ப்பு இஸ்லாத்திற்கு எதிரானது. இஸ்லாத்தைப் பாதுகாப்பது எப்படி என்பதைத்தான் இப்போது நாம் சிந்திக்க வேண்டும். அதனை இதற்கு முன்பு அறிமுகப்படுத்தியதை விட அழகான முறையில் வசீகரமாக எப்படி முன்வைக்கலாம் என்பதையே சிந்திக்க வேண்டும்.

ஏன் நாம் உலகிற்கு ஒரு முன்மாதிரி நாடாக இருக்கக் கூடாது! ஏன் கெடுபிடிகளுக்கு மத்தியில் கூட ஒற்றுமையாக இஸ்லாத்தை முன்வைப்பதில் எமது பணிகள் அமையக் கூடாது!

இஸ்லாத்தின் உயிரோட்டத்தை எமது நடத்தையில் காட்டுவோம். உலகமே எம்மைப் பார்த்து விழித்துக் கொள்ளட்டும். எண்ணமே வாழ்வு. எமது எண்ணம் பரந்த விரிந்த இலக்கை நோக்கி சிறகடிக்கட்டும்.

ஒரு புள்ளியில் இருந்து ஆரம்பிப்போம்

நம்மைச் சுற்றியுள்ள சின்ன வட்டத்தை கொஞ்சம் உற்றுப் பார்ப்போம். பாரிய மாற்றத்துக்கான காய்கள் அங்கே உள்ளன.

வீட்டுக்கு வரும் பால்காரன், தபால்காரன், கழிவகற்ற வரும் ஊழியன், தண்ணீர் மற்றும் மின்சாரம் பில் கொண்டு வருபவன், வீட்டு வேலைக் காரன், வீட்டுக்கு வரும் வேலைக்காரன், சேவகன், மருத்துவிச்சி, கிராம நிலதாரி, அயலவர்கள், இவர்களுடன் எமது உறவு எப்படி உள்ளது?!

அவர்களுடனான எமது தொடர்பு, உபசரிப்பு, உரையாடல், முகமலர்ச்சி, முகமன் கூறுவது, பேச்சு, வாழ்த்து என அவர்களோடு எப்படிப் பழகு கின்றோம்? எமது பழக்க வழக்கம் இஸ்லாத்தின் தூதாக அவனது உள்ளத்தை ஆளும் அல்லவா?

நாங்கள் நபிகளாரின் வாழ்வை வரலாற்றில் ஒரு ஏடாக மாத்திரம் பார்க்கக் கூடாது. இந்த அசாதாரண சூழலில் எமது உறவும் தொடர்பும் தான் பாதுகாப்பு வேலியாக வரும். எமக்கு அல்லாஹ் வின் உதவி தேவை என்றால் நாம் ஒரு சாண் முன்னே போகக் கூடாதா!

தாயிப் நகரத்தில் இருந்து வந்த நபிகளாரைக் காப்பாற்றியது ஒரு முஸ்லிம் அல்ல.

உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மதீனாவிற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றது ஒரு முஸ்லிம் அல்ல.

அகபா சந்திப்பின்போது இறைதூதருக்கு மெய்ப் பாதுகாவலராக இருந்தவர் ஒரு முஸ்லிம் அல்ல.

ஹிஜ்ரத் பயணத்திற்கு பாதுகாப்பான வழியை காட்டியது ஒரு முஸ்லிம் அல்ல.

இஸ்லாத்தை ஏற்கவில்லையே என்பதற்காக மக்காவாசிகளின் உடமைகளை பாதுகாக்க மாட்டேன் என இறைதூதர் மறுக்கவில்லை.

அபூதாலிப் கலிமா சொல்லவில்லையே என்பதற்காக நபிகளார் அவரின் பாதுகாப்பை மறுதலிக்கவில்லை.

எனவே நல்லுறவு எத்தகைய நிலையிலும் தொடர்ந்து பேணுவது ஈமானிய மனிதர்களின் பண்பாகும். நல்லுறவு பேணுவதற்கு எந்த ஜாதியும் இல்லை. எந்த மதமும் இல்லை. இறைதூதர் மரணிக்கும் போது வயிற்றுப் பசிக்காக இரவல் வாங்கியதும் ஒரு யூதனிடமே.

எல்லாம் வல்ல இறைவன் பாதுகாப்பு, உலக நியதிகளை மீறி எல்லா நேரமும் நடைபெறாது. உலக நியதிகளின் படி பாதுகாப்பு கிடைப்பது தான் விதி. விதிவிலக்காக வரும் பாதுகாப்பை விசயம் புரியாமல் எதிர்பார்த்தால் கைசேதம்தான் மிஞ்சும்.

எனவே நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களுடன் நல்ல முறையில் பழகுவோம். முன்மாதிரியாக நடப்போம். எமது நடை, உடை, பாவனை, உபசாரம், இன்முகம் அனைத்துமே இஸ்லாத்தின் தூதாக மாறும்.

கெடிபிடிகள் உள்ள காலத்தில் எமது நன்னடத்தையை விதையாய் விதைப்போம். நாளை மறுமையில் அது மரமாகி கனிதரும் நிச்சியம்.

சத்தியம் வெல்லும். அதற்கு எமது அர்ப்பணங்கள் பசளையாக அமைய வேண்டும் என்பதுதான் இறை நியதியாகும். முதுகுப் புறமாக குத்திய கத்தி வயிற்றை துளைத்து முன்பக்கம் வந்து ரத்தம் வடிந்தோடியதை பார்த்து விட்டுத்தான் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் வெற்றி பெற்றுவிட்டேன்’ என நபித்தோழர் கூறினார்கள்.

உழைக்காமல் பாதுகாப்பைப் பெற முடியாது. வா வா தோழா உழைப்போம் முதலில். அறுவடையை அடுத்த பரம்பரைக்கு விட்டு விடுவோம்.

நன்றி மீள்பார்வை நெட்

சத்திய பாதை இஸ்லாம்

http://islam-bdmhaja.blogspot.com/2019/12/blog-post_19.html