Home கட்டுரைகள் நாட்டு நடப்பு குடியுரிமைத் திருத்தம்.. ஜனநாயகத்தின் மாபெரும் களங்கம்!
குடியுரிமைத் திருத்தம்.. ஜனநாயகத்தின் மாபெரும் களங்கம்! PDF Print E-mail
Tuesday, 17 December 2019 18:55
Share

குடியுரிமைத் திருத்தம்.. ஜனநாயகத்தின் மாபெரும் களங்கம்!

      அ.மார்க்ஸ்       

மோடி - அமித் ஷா தலைமையிலான பா.ஜ.க அரசு, அதன் ‘பிரியமான’ திட்டங்களில் ஒன்றான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது எனில், தோற்றுப்போனது எது?

வேறு எதுவுமல்ல, நமது அரசியல் சட்டம்தான். ரத்தம் ஒழுக ஒழுக அடித்து வீழ்த்தப்படும் நிலையை எட்டியிருக்கிறது அரசியல் சட்டம். 1950, ஜனவரி 26-ல் நிறைவேற்றப்பட்ட நமது அரசியல் சட்டம், உலகின் பல ஜனநாயக நாடுகளில் உள்ள அரசியல் சட்டங்களைவிட பல மடங்கு சிறப்பானது.

சிவில் உரிமைகள், மதம், இனம் தொடர்பான உரிமைகள் என எல்லாம் வரையறுக்கப்பட்ட காலகட்டத்தில், அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட நம் அரசியல் சட்டம், உலகளாவிய பிரகடனங்களில் உள்ள நல்ல கூறுகளையெல்லாம் உள்வாங்கி இயற்றப்பட்டது. ஆனால், பா.ஜ.க-வும் அதைப் பின்னின்று இயக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இந்த அரசியல் சட்டத்தை எந்நாளும் ஏற்றுக் கொண்டதில்லை.

1999-ம் ஆண்டில் முதன்முதலாக வாஜ்பாய் தலைமையில் பா.ஜ.க கூட்டணி அரசு உருவானபோது அவர்கள் முதலில் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்று, நீதிபதி வெங்கடாசலையா தலைமையில் நமது அரசியல் சட்டம் பற்றி ஆய்வுசெய்ய ஒரு குழு அமைத்ததுதான்.

அப்போது, அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் செயல்பட்டுக்கொண்டிருந்த சங் பரிவார அமைப்புகளில் ஒன்று, ஸ்லேட்டன் தீவில் வாஜ்பாய்க்கு வரவேற்பு அளித்தது. அந்த நிகழ்வில் அவர், ‘‘இன்று நமக்கு நாடாளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை கிடையாது. ஆனால், ஒரு காலத்தில் நாம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுவோம். அப்போது நாம் நமது `கனவு இந்தியா’வை உருவாக்குவோம்’’ என முழங்கினார்.

யூத இனவாதத்தைப் பின்பற்றும் பா.ஜ.க!

2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறாவிடாலும், அதிக தொகுதிகளில் வென்றது. அப்போதைய தேர்தல் அறிக்கையில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்துக்களுக்கு இங்கு குடியுரிமை வழங்குவது பற்றி கூறப்பட்டது. இந்தியா, பல மதத்தினரும் வசிக்கும் மதச்சார்பற்ற ஜனநாயக நாடு. குறிப்பிட்ட ஒரு மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது சாத்தியமல்ல. எனினும், இப்படி ஒரு மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை அளிப்பது என்னும் கருத்தை யூத இனவாத அரசான இஸ்ரேலில் இருந்து பா.ஜ.க எடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் எந்த நாட்டிலிருந்தும் வரும் யூதர்களுக்கு இஸ்ரேலில் குடியுரிமை அளிக்க வழிவகை செய்வதுதான் ‘அலியாஹ்’ எனும் சட்டம். அதேபோன்று உலகின் எந்த நாட்டிலிருந்து வரும் இந்துக்களுக்கும் இந்தியாவில் குடியுரிமை அளிக்கப்படும் என்பதுதான் பா.ஜ.க தன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. அதைத்தான் இப்போது தேசியக் குடியுரிமைச் சட்டத்திருத்தமாகச் செய்திருக்கிறது. ஆனால், இந்திய அரசியல் சட்டத்தில் அதற்கு இடமில்லை.

அத்துடன், பிரபலமான கேசவானந்த பாரதி வழக்கில் அரசியல் சட்ட அடிப்படைகளை பெரும்பான்மையின் அடிப்படையில் மாற்றிவிட இயலாது என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. அதனால், இன்று கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் பா.ஜ.க அறுதிப் பெரும்பான்மை பெற்றிருந்தபோதும், பெரும்பான்மை மத அடிப்படையில் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க முடியவில்லை. அதனால், அவர்கள் இப்படி தம் அரசியல் கொள்கைகளை நசுக்கி நசுக்கி கொஞ்சம் கொஞ்சமாகச் செயல்படுத்திவருகின்றனர்.

2014-ம் ஆண்டில் பா.ஜ.க ஆட்சி அமைக்கப்பட்டபோது அஸ்ஸாம் மாநிலத்தில் ‘குடியுரிமைப் பதிவேடு’ தயாரிக்கும் திட்டத்தை அவர்கள் தொடங்கினர். தேசிய அளவிலான குடியுரிமைப் பதிவேடு உருவாக்கப்படும் என்பதையும் அறிவித்தார்கள். 1971, மார்ச் 24-ம் தேதியை இறுதித் தேதியாக அறிவித்து, அதற்கு முன்னர் வரை அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும் என அறிவித்து, ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இன்று அது நிறைவேற்றப்பட்டது. இதனால், அஸ்ஸாமில் வசிக்கும் 40 லட்சம் மக்கள் குடியுரிமையை இழந்தனர். அதிகம் கல்வியறிவு இல்லாத ஏழை மக்கள் உரிய சான்றிதழ்களைக் கொடுக்க இயலாமல் பட்ட துன்பங்கள் சொல்லி மாளாது. அதில் வங்கதேச முஸ்லிம்கள் மட்டுமன்றி, ஏராளமான இந்துக்களும் இருந்தது பா.ஜ.க அரசுக்குப் பிரச்னையானது.

கால நீட்டிப்புச் செய்து பாதிக்கப்பட்டவர் களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட பிறகு, இன்று அஸ்ஸாமில் குடியுரிமை அற்றவர்களாக 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதிலும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்துக்களாக உள்ளது பா.ஜ.க அரசின் நோக்கத்துக்கு இடையூறாக உள்ளது.

உரிமைகளைப் பெறுவதற்கான உரிமை!

அஸ்ஸாமில் இப்படி குடியுரிமை அற்றவர்களாக ஆக்கப்பட்டவர்களை என்ன செய்யப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. ஹிட்லரின் கொடுமைகளின் ஊடாக குடியுரிமைற்று பெரும்துன்பங்களுக்கு ஆளானவர்களில் ஒருவரான அறிஞர் ஹன்னா ஆரென்ட் குறிப்பிட்டுள்ளதுபோல், இன்றைய அரசமைப்பு களில் குடியுரிமை என்பது ‘உரிமைகளைப் பெறுவதற்கான உரிமை’. குடியுரிமை அற்றவர் களுக்கு, வேலை பெறுவதற்கு, படிப்பதற்கு, வணிகம் செய்வதற்கு என எதற்கும் உரிமையில்லை. அப்படி குடியுரிமையற்ற லட்சக்கணக்கானோரை என்ன செய்யப்போகிறார்கள்? அரசிடம் திட்டம் இல்லை. வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் என்றாலும், இன்று அங்கே அவர்களை இந்திய அரசு திருப்பி அனுப்ப முடியாது. அப்படி அனுப்புவதற்கான ஒப்பந்தம் எதையும் இந்திய அரசு வங்க அரசுடன் செய்துகொள்ளவில்லை. மிகப்பெரிய தடுப்புக்காவல் முகாம்களை அமைத்து அடைத்துவைக்கப்போகிறார்களா? அப்படியான முகாம்கள் அமைக்கப்படுவதாகவும் செய்திகள் வரத்தான் செய்கின்றன.

இதற்கெல்லாம் பதில் இல்லாமலேயே இப்போது இந்திய அளவில் குடியுரிமைப் பதிவேடு உருவாக்கப்படும் என அறிவித்திருப்ப துடன், முதற்கட்டமாக ‘குடியுரிமை திருத்த மசோதா’ அறிவிக்கப்பட்டு, மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அ.தி.முக உள்ளிட்ட பா.ஜ.க ஆதரவுக் கட்சிகளின் துணையுடன் இது நடந்துள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், தி.மு.க முதலான கட்சிகள் எதிர்த்துள்ளன.

இந்தச் சட்டம், குடியுரிமை அற்றவர்கள் விண்ணப்பிப்பதற்கான இறுதித் தேதி 2014, டிசம்பர் 31 என்கிறது. அதற்கு முன்னதாக வந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் இங்கே வாழ்ந்திருக்க வேண்டும் எனும் நிபந்தனை, இதன்மூலம் ஐந்து ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அப்பட்டமான சட்ட மீறல்!

பா.ஜ.க அரசின் இந்தப் புதிய குடியுரிமைச் சட்டம் வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எனும் மூன்று முஸ்லிம் நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு மட்டுமே இந்த உரிமையை அளிக்கிறது. அத்துடன் இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், ஜெயின்கள், பார்சிகள், கிறிஸ்துவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்த உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நுழைவதற்கான 1920-ம் ஆண்டு ‘கடவுச்சீட்டுச் சட்டம்’ (Passport Act) மற்றும் 1946-ம் ஆண்டு ‘வெளிநாட்டவர் சட்டம்’ (Foreigners Act) ஆகியவற்றிலிருந்து இந்த ஆறு மதத்தவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை. வேறு சொற்களில் சொல்வதானால், இந்த நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம்களுக்கு மட்டும் இந்த உரிமை மறுக்கப் படுகிறது. இது அப்பட்டமாக நமது அரசியல் சட்ட அடிப்படையை மீறுகிறது. மத அடிப்படை யில் இவ்வாறு தரம் பிரித்துச் சலுகைகள் அளிப்பதை, நமது அரசியல் சட்டப் பிரிவுகள் ஏற்பதில்லை.

ஆனால், இந்த அரசியல் சட்டமீறலை நியாயப்படுத்த அமித் ஷா சொல்லும் ‘நியாயம்’ ஒன்றுதான். அதாவது, இந்த மூன்றும் முஸ்லிம் நாடுகளாம். எனவே, அங்கிருந்து முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டு வருவதற்கு வாய்ப்பில்லையாம். அண்டை நாடுகளிலிருந்து துன்புறுத்தப்பட்டு வருபவர்களுக்காகத்தான் இந்தச் சலுகைகள் என்றால், அண்டை நாடுகளான மியான்மரிலிருந்து வரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள், இலங்கை யிலிருந்து வரும் தமிழர்கள் ஆகியோரை இந்தச் சட்டம் ஏன் உள்ளடக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் இல்லை. நேபாளத்துக்கும் நம் நாட்டுக்கும் ஒரே எல்லைக்கோடுதான். இதுநாள்வரை எளிதில் அங்கும் இங்கும் போய் வரக்கூடிய நிலைதான் உள்ளது. கூர்காக்கள் அங்கிருந்து இங்கு வந்து வேலை செய்கின்றனர். ஏன் நேபாளம் உள்ளடக்கப்படவில்லை?

அடுத்து இந்த மூன்று நாடுகளும் முஸ்லிம் நாடுகளானாலும் அவற்றில் ஷியா முஸ்லிம்கள், நாத்திகர்கள் ஆகியோர் துன்புறுத்தப்படுகின்றனர். அவர்களுக்கும் இன்றைய சட்டம் இடம் கொடுக்கவில்லை. ஆக, நமது அரசியல் சட்ட அடிப்படைக்கு எதிராக இன்றைய இந்தச் சட்டம் அமைகிறது. மதச்சார்பின்மையைப் புறக்கணிக்கிறது.

முன்னதாக மோடி அரசு இந்தச் சட்டத்தை வெளியிட்டபோது, அதில் இந்த நாடுகளில் உள்ள இந்த ஆறு மதத்தினர்களில் உள்ள, துன்புறுத்தப் படும் சிறுபான்மையினருக்கு மட்டுமே இந்தச் சலுகைகள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அமித் ஷா முன்வைத்து நிறைவேற்றி யுள்ள வடிவில் ‘துன்புறுத்தப்படும் சிறுபான்மை யினர்’ எனும் பதம் நீக்கப்பட்டுள்ளது. காரணங்கள் காட்டப்படவில்லை. இவ்வாறு துன்புறுத்தல் இல்லாதபோதும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை அளிக்கப்படும் என்பதுதான் அமித் ஷா சொல்லும் சேதி. இஸ்ரேலின் அலியாஹ் சட்ட வடிவம் இங்கே அப்படியே ஏற்கப்பட்டுள்ளது. ஆக, மத அடிப்படையில் இன்று 15 கோடிக்கும் மேற்பட்ட இந்திய முஸ்லிம்கள் மட்டும் இன்று இந்திய மக்களிடையே தனியே பிரித்து நிறுத்தப் படுகின்றனர்.

அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் முதலான மாநிலங்களின் பழங்குடிப் பகுதிகள் மற்றும் அருணாசலப்பிரதேசம், நாகாலாந்து முதலான மாநிலங்களின் ‘உட்கோட்டு அனுமதி பகுதிகள்’ (inner-line permit areas) ஆகியவற்றுக்கு இந்தச் சட்டத்திலிருந்து சில சிறப்பு விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னொரு வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு இந்த விலக்கு அளிக்கப்படாதது ஏன் எனத் தெரிய வில்லை. அதற்கும் விலக்கு அளிக்கப் படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அண்டை நாடுகளிலிருந்து ஊடுருவல் நிகழ்கின்றன என்றால், அதைத் தடுப்பதை யாரும் எதிர்க்கவில்லை. வங்கதேசத்திலிருந்து அஸ்ஸாமுக்குள் ஊடுருவல் நடப்பதைத் தடுக்க, இப்போது இரட்டை முள்வேலிகள் வைத்து, ராணுவ காவல் அமைக்கப்பட்டுள்ளது. அதையெல்லாம் யாரும் எதிர்க்கவில்லை. ஊடுருவலை சாக்காக வைத்துக்கொண்டு இவ்வாறு முஸ்லிம்கள் மட்டும் அரசியல் சட்ட உரிமைகளிலிருந்து ஒதுக்கப்படுவதைத்தான் ஏற்க இயலவில்லை.

மோடி – அமித் ஷா அரசின் இந்த நடவடிக்கை உலகளவில் கண்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் குடியுரிமைச் சட்ட நிறைவேற்றத்தின்மூலம் குறிப்பிட்ட ஒரு சமூகம் அடையாளம் காணப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளதையொட்டி உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது தடை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அரசின் மத உரிமைகள் தொடர்பான கூட்டாட்சி முகமை ஒன்று பரிந்துரைத்துள்ளது.

இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என ரொமிலா தாபர், பிரபாத் பட்நாயக், அருணா ராய் முதலான மனச்சாட்சியுள்ள 600 முக்கிய அறிஞர்கள் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள் ளனர். வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் இந்தச் சட்டத்துக்கு எதிரான இயக்கம் உள்ளது. இருப்பினும், பா.ஜ.க அரசு நம் அரசியல் சட்டத்துக்கு விரோதமான இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இது இன்னும் சில நாள்களில் நடைமுறைக்கு வரும் என்பதில் ஐயமில்லை.

சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்திய வரலாற்றில் இந்த நாள்கள் பெரும்களங்கமாகப் பதியும் என்பதில் சந்தேகமில்லை. இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் அன்றைய அட்டர்னி ஜெனரல் நிரேன் டே, ‘‘அவசரநிலை அறிவிக்கப்பட்டால், அதன் பிறகு குடிமக்களுக்கு தங்களின் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை கிடையாது’’ என்று கரகரத்த குரலில் சொல்லிய அந்தக் காட்சிதான் நினைவுக்குவருகிறது.

இன்றைய அரசமைப்பில் `குடியுரிமை’ என்பது உயிரினும் மேலானது... அது இன்று ஆபத்துக்குள்ளாகியுள்ளது!

- அ.மார்க்ஸ், எழுத்தாளர், மனித உரிமை செயற்பாட்டாளர்

source:   vikatan