Home இஸ்லாம் சொற்பொழிவுகள் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (23, 24)
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (23, 24) PDF Print E-mail
Thursday, 07 November 2019 08:35
Share

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இருபத்தி மூன்றாவது சொற்பொழிவு

     அறிஞர், ஆர்.பி.எம் கனி ரஹ்மதுல்லாஹி அலைஹி     

ஹிஜ்ரி எட்டில், மக்கா வெற்றிக்குப் பின்னர், மக்ஸூம் கூட்டத்தஎச் சேர்ந்த ஃபாத்திமா என்ற பெண் திருட்டுக் குற்றத்தின்மீது தண்டிக்கப்பட இருந்தாள். அப்போது அவளை விடுதலை செய்துவிடும்படி உஸாமா இப்னு ஜைது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அப்போது இரவு நேரம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து நின்று பேசினார்கள். அல்லா ஹ்வை புகழ்ந்துவிட்டு அவர்கள் சொன்னதாவது:

முன்னால் உங்களிடையே பணக்காரன் ஒருவன் திருடினால் அவனை விடுதலை செய்துவிடுவதும், உங்களில் பலகீனன் ஒருவன் திருடிவிட்டால் அவனை தண்டிப்பதுமாய் இருந்து வஎதுள்ளீர்கள். (இனி அவ்வாறு இருக்க முடியாது.)

முஹம்மதின் ஆத்மாவைத் தன்வசம் வைத்துள்ள(இறை)வனின் மீது சத்தியமாக, முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே திருடினாலும் சரிதான், நான் அவள் கரங்களை வெட்டி விடவே உத்தரவிடுவேன். (புகாரி)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இருபத்தி நான்காவது சொற்பொழிவு

     அறிஞர், ஆர்.பி.எம் கனி ரஹ்மதுல்லாஹி அலைஹி     

ஹிஜ்ரி எட்டு, துல்கஃதா மாதம் ஜெர்ரா என்னுமிடத்துல் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவு இது.

ஹுனைன் யுத்தத்தில் கிடைத்த பொருள்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குரைஷிகளுக்கும், அரேபியாவின் பல்வேறு கூட்டத்தாருக்கும் பங்குவைத்துக் கொடுத்தார்கள். ஆனால் அன்ஸார்களுக்கு மட்டும் அதில் பங்கு கொடுக்கவில்லை. இதனால், அன்ஸார்கள் கோபமுற்று முணுமுணுத்துக் கொண்டிருந்தனர். இதுபற்றிக் கேள்வியுற்ற நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்ஸார்களை தனியே அழைத்து உருக்கமாக இந்த பிரசங்கத்தை நிகழ்த்தினார்கள்:

(அல்லாஹ்வைப்போற்றி நன்றி தெரிவித்த பின்னர்) "அன்ஸார்களே, உங்களைப்பற்றி என் காதுக்கு எட்டும் செய்தி என்ன? என்னைப்பற்றி உங்கள் இதயங்களீல் உண்டாகியுள்ள கசப்புதான் என்ன?

நீங்கள் வழிதவறிச் செல்வதை நான் காணவில்லையா? அல்லாஹ் என் மூலம் உங்களுக்கு நேர்வழி காட்டவில்லையா? நீங்கள் ஐக்கியமின்றி ஒருவருக்கொருவர் எதிரிகளாய் இருந்த சமயம் உங்களை அல்லாஹ் என் மூலம் ஐக்கியப்படுத்தவில்லையா? தேவையுள்லவர்களாய் (ஏழைகளாய்) இருந்த உங்களை அல்லாஹ் என் மூலம் செல்வர்களாக்கவில்லையா?"

[ நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதைக்கேட்டாலும் அதற்கு நேரடியாக பதிலளிக்காமல், அல்லாஹ்வும், அவன் திருத்தூதரும் பேருதவியாளர்கள், கருணையாளர்கள் என்றே அவர்கள் கூறி வந்தனர்.]

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள்: "அன்ஸார்களே, அல்லாஹ்வின் தூதருக்கு பதிலளியாதபடி உங்களை தடுப்பது எது?"

அவர்கள் சொன்னார்கள்: "அல்லாஹ்வின் ரஸூலே, நாங்கள் சொல்ல என்ன இருக்கிறது? சகல நல்லுதவியும், காருண்யமும் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்குமே உரியதாகும்."

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: "அல்லாஹ்வின் மீது ஆணை, நீங்கள் விரும்பினால் நீங்கள் இவ்விதம் செய்யலாம்; 'நீர் நம்பப்படாதவராய் எங்களிடம் வந்தீர்; நாங்கள் உம்மீது நம்பிக்கை வைத்தோம். நிர்க்கதியாளராய் வந்தீர்; நாங்கள் உமக்கு உதவினோம். வீட்டைவிட்டு விரட்டப்பட்டீர்; புகலிடம் தந்தோம். யாசிப்பவராய் வந்தீர்; உம்மிடம் தயாளம் காட்டினோம்' - இவ்விதம் நீங்கள் கூறினால் அது உண்மைதான்; நியாயமான பேச்சுத்தான்.

அன்ஸார்களே, உங்கள் இஸ்லாத்தில் (ஈமானில்) எனக்கும் நம்பிக்கையுண்டு. ஆனால், (மற்ற) மக்கள் இஸ்லாமில் ஒட்டுவதற்காக இவ்வுலகச்செல்வத்தில் மிகவும் சிறியதை அவர்களுக்குப் பகிர்ந்தளித்தேன். இதற்காக என்மீது கோபப்படுகிறீர்களா? நான் அவர்களுக்கு அவற்றைக் கொடுக்கக் காரணம், அவர்கள் மிகவும் சமீபகாலம் வரை இணைவைப்பதுடன் சம்பத்தப்பட்டிருந்தவர்கள். அவர்கள் மனதைச் சரியாக்குவதற்கு அவ்விதம் செய்வது அவசியமாய் இருக்கிறது.

அன்ஸார்களே, அந்த மக்கள் ஆடுகள், ஒட்டகங்களுடன் வீடு செல்கையில், நீங்கள் அல்லாஹ்வின் தூதருடன் உங்கள் இருக்கைக்குப் போவது உங்களுக்கு திருப்தி தரவில்லையா? அவர்கள் தங்களோடு கொண்டு செல்வனவற்றைவிட நீங்கள் உங்களோடு கொண்டு செல்வது அல்லாஹ்வின் மீது ஆணையாக, மிக மிகச் சிறந்தத்தாகும்.

குடிபெயர்தல் இல்லையென்றால் நான் அன்ஸார்களில் ஒருவனாக இருந்திருப்பேன். மற்ற மக்கள் ஒரு பள்ளத்தாக்கிலான வழியில் போகும்போது, அன்ஸார்கள் வேறொரு பள்ளத்தாக்கிலான வழியில் செல்வார்களாயின், நான் அன்ஸார்கள் செல்லும் வழியிலேயே செல்வேன்.

அன்ஸார்கள் உங்களுடையவர்; (மற்ற)மக்கள் வெளியுடையாவார்கள்.. நீங்கள் நிச்சயமாக எனக்குப் பின்னர் கடுமையான சுயநலத்தை எதிர்நோக்க வேண்டியதிருக்கும். எனவே, அல்லாஹ்வையும், அவனது தூதரையும் (இறுதிநாளில்) சந்திக்கும் வரை பொறுமையுடன் இருங்கள். நிச்சயமாக, (மறுமையில்) எனது " ஹவ்ளில் (ஒளுச்செய்யுமிடத்தில்) உங்களைச் சந்திப்பேன். (புகாரி)

இன்ஷா அல்லாஹ், சொற்பொழிவு தொடரும்

www.nidur.info