Home இஸ்லாம் கட்டுரைகள் அற்பமாகக் கருதப்படும் அழகிய நன்மைகள்
அற்பமாகக் கருதப்படும் அழகிய நன்மைகள் PDF Print E-mail
Monday, 15 July 2019 09:10
Share

அற்பமாகக் கருதப்படும் அழகிய நன்மைகள்

கண்ணியமும் மகத்துவமுமிக்க அல்லாஹூதஆலா தன்னுடைய திருமறையில் கூறுகின்றான்:

ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். அனைத்துப் பொருட்கள் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன்: 2: 148)

முஸ்லிம்களாக இருக்கக்கூடியவர் அனைவரும் தாம் இறந்த பிறகு மறுமையில் நற்பேற்றினைப் பெற்றிட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். அதற்காக தங்களால் இயன்ற அளவிற்கு நற்செயல்களும் செய்து வருவார்கள்.

மறுமையில் நாம் சொர்க்கம் செல்ல வேண்டுமென்றால் நாம் கொண்டுள்ள நம்பிக்கை மட்டும் போதாது. நற்செயல்களும் அவசியம் என்பதை மேலே கூறியுள்ள குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் தெளிவுப்படுத்துகிறான்.

மேலும் அல்லாஹூதஆலா கூறுகிறான்:

நம்பிக்கைக் கொண்டோரே! ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தா செய்யுங்கள்! உங்கள் இறைவனை வணங்குங்கள். நன்மையைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள் (அல்குர்ஆன்: 22:77)

தொழுகை,நோன்பு போன்ற செயல்கள் மட்டும் இன்றி நாம் இதெல்லாம் நன்மைகளை சேர்த்து விடுமா என்று அற்பமாகக் கருதி அதை செயல்படுத்தாமல் விட்டு விடுகின்ற செயல்கள் கூட நமக்கு மறுமையில் அதிக நன்மைகளை பெற்றுத் தரும் என்பதை தெரிந்து கொண்டு அதனடிப்படையில் நம்முடைய அமல்களை அமைத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக அத்தகைய நன்மைகளை இங்கு நாம் பார்க்க இருக்கின்றோம்.

மேலும் இவ்வுலக வாழ்வைப் பொறுத்தவரையிலும் யார் எப்போது மூஃமினாக இருப்பார்கள். எப்போது தடம் புரளுவார்கள் என்பதை சொல்ல இயலாது. அதனால் எப்போதும் நாம் இறைநம்பிக்கையாளர்களாக திகழ வேண்டுமெனில் இத்தகைய சிறிய செயல்களை கடைபிடித்து வர வேண்டும்.

அதுமட்டுமின்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இத்தகைய செயல்களைப் பற்றி நமக்கு ஆர்வமூட்டியுள்ளார்கள்.அதை செயல்படுத்தும் படியும் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள். அதை செயல்படுத்துவதால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் நமக்கு சொல்லித் தந்து விட்டு சென்று விட்டார்கள். ஆனால் அதை நடைமுறைப்படுத்தி நமது வாழ்வில் வெற்றி பெறுவது நமது கையில் தான் உள்ளது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

இருள் நிறைந்த ஒரு பகுதியைப் போன்று (வரவிருக்கும்) குழப்பத்திற்கு (முன்) நற்செயல்களில் போட்டி போடுங்கள்.(அப்போது) ஒரு மனிதன் காலையில் முஃமினாக இருப்பான். மாலையில் காபிராகி விடுவான். மாலையில் முஃமினாக இருப்பான். காலையில் காபிராகி விடுவான்.உலகத்தின் செல்வங்களுக்காக தனது மார்க்கத்தை விற்று விடுவான். (அபூஹீரைரா ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம் 186)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏழு விஷயங்களை ஏவினார்கள்.

1. நோயாளியை நலம் விசாரிப்பது.

2. ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்வது.

3. தும்மியவருக்கு துவாச்செய்வது.

4. பலவீனமானவர்களுக்கு உதவி செய்வது.

5. ஸலாமை பரப்புவது.

6. அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்வது.

7. சத்தியம் செய்தவருக்கு அதனை நிறைவேற்ற உதவி செய்வது.

(அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி முஸ்லிம்)

நோயாளி:

நோயாளிகளை நலம் விசாரியுங்கள்!. பசியாளிக்கு உணவளியுங்கள். கைதியை விடுதலை செய்யுங்கள். (அபுமூசா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)

ஒரு முஸ்லிம் தம் சகோதரரை காலையில் உடல் நலம் விசாரித்தால் அன்று மாலை வரை அவருக்காக எழுபதாயிரம் மலக்குகள் துவாச் செய்வார்கள். அவரை மாலையில் நலம் விசாரித்தால் காலை வரை எழுபதாயிரம் மலக்குகள் துவாச் செய்வர்கள். அவருக்கு சுவனத்தில் பறித்த கனிகள் கிடைக்கும். (அலீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)

நோயாளிக்காக ஓத வேண்டிய துஆ:

அல்லாஹீம்ம ரப்பனா அத்ஹிபில் பஃஸ இஷ்பி அன்தஷ் ஷாஃபி லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக ஷஃபாஅன் லாயுஹாதிரு ஸக்மா (பொருள்: இறைவா! மக்களின் இரட்சகனே! கஷ்டத்தை போக்கி வைப்பாயாக! நோயை விட்டும் குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் குணமளித்தலைத் தவிர வேறு குணமளித்தல் கிடையாது. அது எந்த நோயையும் விட்டு வைக்காது என்று கூறுவார்கள்.(ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: புகாரி முஸ்லிம்)

ஜனாஸாவில் கலந்துக்கொள்வது: யார் ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொள்கிறாரோ, அவருக்கு ஒரு கீராத் நன்மை உண்டு. யார் ஜனாஸாவை நல்லடக்கம் செய்யும் வரை அதில் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு கீராத் நன்மைகள் உண்டு. அப்போது, இரண்டு கீராத் என்றால் என்னவென்று கேட்கப்பட்டபோது, இரு கீராத்கள் என்பது, இரண்டு மாபெரும் மலைகளைப் போன்றதாகும் என்றார்கள். (அபூஹீரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி முஸ்லிம்)

எந்தவொரு முஸ்லிமான மனிதர் மரணித்து அவரின் ஜனாஸாவில் அல்லாஹ்வுக்கு இனைவைக்காத நாற்பது முஃமின்கள் கலந்து கொள்கிறார்களோ, அவரின் விஷயத்தில் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்பானே தவிர வேறில்லை (அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

நீங்கள் ஜனாஸா தொழுகையைத் தொழுதால் இதயச்சுத்தியுடன் அம்மயித்திற்கு துவாச் செய்யுங்கள். (அபூஹீரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபுதாவுத்)

ஜனாஸா துஆ:

அல்லாஹீம்ம மக்ஃபிர்லஹீ, வர்ஹம்ஹீ, வஆஃபிஹி, வஆஃபு அன்ஹீ, வஅக்ரிமு நுஸ்லஹீ, வ வஸ்ஸிஹ் முத்கலஹீ வஃஸில்ஹீ பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத். வநக்கிஹி மினல் கதயாய கமா நக்கைத தவ்பல் அப்யலு மினத்தனஸி. வஅப்தில்ஹீ தாரன் கைரன் மின் தாரிஹி. வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி. வஸவ்ஜன் கைரன் மின் ஸவ்ஜிஹி. வஅத்கில்ஹீல் ஜன்னத்த வஅஇத்ஹீ மின் அதாபின் கப்ர். வமின் அதாபின் நார்

(பொருள்: இறைவா! அவரின் பிழைகளை பொறுப்பாhக! அவருக்கு கிருபை காட்டுவாயாக! அவருக்கு ஈடேற்றத்தை தருவாயாக! அவரை மன்னிப்பாயாக! அவரின் தங்குமிடத்தை சிறப்பாக்கி வைப்பாயாக! அவர் நுழையுமிடத்தை விஸ்தீரணமாக்கி வைப்பாயாக! அழுக்கை விட்டு வெண்மையான ஆடையை நீ தூய்மைப்படுத்துவதுபோல் தண்ணீரைக் கொண்டும், பனிக்கட்டியைக் கொண்டும் அவரைக் கழுவுவாயாக! அவரின் இல்லத்தை விட சிறந்த இல்லத்தை தருவாயாக! அவரின் மனைவியை விட சிறந்த மனைவியை தருவாயாக! அவரை சுவனத்தில் நுழைய செய்வாயாக! கப்ருடைய வேதனையை விட்டும், நரகின் வேதனையை விட்டும் பாதுகாப்பாயாக! (அபு அப்திர்ரஹ்மான் அவ்பு பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

தும்மல்:

நிச்சயமாக அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். உங்களில் ஒருவர் தும்மி, அல்ஹம்துலில்லாஹ் கூறுவாரேயானால், அதனை செவியுறும் ஒவ்வொருவரும் அவருக்கு யர்ஹமுகல்லாஹ்(அல்லாஹ் உமக்கு கிருபை செய்வானாக) என்று கூறுவது கடமையாகி விட்டது. கொட்டாவி ஷைத்தானில் நின்றுமுள்ளதாகும். கொட்டாவி வந்தால் இயன்றவரை தடுக்கட்டும். உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால் ஷைத்தான் அவரைப் பார்த்து சிரிக்கிறான். (அபூஹீரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)

வேறொரு அறிவிப்பில் யர்ஹமுகல்லாஹ் என்று கூறினால், தும்மியவர் யஹ்தீகுமல்லாஹீ வயுஸ்லிஹீ பாலகும் (அல்லாஹ் உமக்கு நேர்வழி காட்டுவானாக! உமது நிலையை சீராக்குவானாக!) என்ற கூறட்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னால் இருவர் தும்மினர். ஒருவருக்கு யர்ஹமுகல்லாஹ் என்று கூறினார்கள். மற்றவருக்கு அதை கூறவில்லை.யாருக்கு கூறவில்லையோ, அவர் அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு துவா செய்தீர்கள். எனக்கு செய்யவில்லையே? என்று கேட்க,அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர் அல்லாஹ்வை புகழ்ந்தார். நீர் அவ்வாறு அல்லாஹ்வை புகழவில்லை என்று பதில் கூறினார்கள். (அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தும்மினால் தங்கள் கரத்தையோ அல்லது துணியையோ தங்கள் வாயில் வைத்துக் கொள்வார்கள்.இதன் மூலம் அதன் சப்தத்தை தாழ்த்துவார்கள். (அபூஹீரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவுது)

ஸலாம்:

உங்கள் வீடுகளில் நுழையும்போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! (24:61 அந்நூர்) (24:27 ல் அடுத்த வீடுகளுக்கும் சென்றால் ஸலாம் கூற வேண்டும்.

உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதைவிட அழகிய முறையிலோ அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள் (அல்குர்ஆன் 4:86 அந்நிசா)

ஒரு மனிதர், இஸ்லாத்தில் நற்செயல்களில் எது சிறந்தது? எனக் கேட்டார். அதற்கவர்கள், ஏழைகளுக்கு உணவளிப்பதும், அறிந்தவருக்கும், அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும் என்று பதிலளித்தர்கள். (அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி முஸ்லிம்)

நீங்கள் ஈமான் கொள்ளாதவரை சுவனத்தில் நுழைய மாட்டீர்கள்.நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தாதவரை ஈமான் கொணடவர்களாக ஆக மாட்டீர்கள். உங்களுக்கு ஒரு விஷயத்தை அறிவித்து தரட்டுமா?அதனை நீங்கள் கடைபிடித்தால் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துபவர்களாக ஆவீர்கள். அது ஸலாமை உங்களுக்கு மத்தியில் பரப்புங்கள்.(அபூஹீரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

இரு மனிதர்கள் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள். அவ்விருவரில் யார் ஸலாமை முதலில் கொண்டு ஆரம்பிக்கிறாரோ,மக்களில் அல்லாஹ்விடம் மிக மேன்மையானவராக திகழ்வார் (அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: திர்மிதி, அபூதாவுது)

தீங்கு தரும் பொருளை அகற்றுவது ஒரு மனிதர் பாதையில் நடந்து சென்ற போது முற்கிளையைக் கண்டு அதை எடுத்து அகற்றிப் போட்டார். அவரின் இந்த நல்ல செயலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு அவருக்கு பாவமன்னிப்பு அளிக்கிறான். (அபூஹீரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2472)

தொல்லை தரும் பொருளை அகற்றிப் போடுவது தர்மமாகும். (அபூஹீரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 246)

நல்ல வார்த்தைகளை பேசுதல்: நல்ல வார்த்தை பேசுவது தர்மமாகும் (அபூஹீரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6023)

பேரீச்சம் பழத்தின் கீற்றைக் கொண்டாவது நீங்கள் நரகத்தை விட்டுத் தப்பிக்க நினையுங்கள். இல்லையென்றால் நல்ல வார்த்தையின் மூலம் (நரகத்தை விட்டு தப்பியுங்கள்) (அபூஹீரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)

ஆதமுடைய மகன் ஒரு சில வார்த்தைகளை மொழிகிறான். அது அவனை சொர்க்கத்திற்கு கொண்டு செல்கிறது. வேறு சில வார்த்தைகளை மொழிகிறான் அது அவனை, அவனுக்கும் சொர்க்கத்திற்கும் இடையில் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையிலான தூரத்தை ஏற்படுத்தி விடுகிறது.

மற்றவருக்காக துவா செய்தல்: ஒரு மனிதன் தன்னுடைய சகோதரனுக்காக மறைவில் துவா செய்தால், உனக்கும் அவ்வாறே ஏற்படட்டும் என்று வானவர்கள் அவருக்காக வேண்டுவார்கள். (அபுதர்தா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவுது 1534)

கால்நடைகள் மீது இரக்கம் காட்டுதல்: ஒரு மனிதர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அவருக்கு தாகம் ஏற்ப்பட்டது. உடனே அவர் ஒரு கிணற்றில் இறங்கி அதிலிருந்து குடித்தார். பிறகு கிணற்றிலிருந்து அவர் வெளியே வந்த போது நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கை தொங்க விட்டபடி ஈரமண்ணை நக்கிக் கொண்டிருந்தது.

அவர், உடனே கிணற்றில் இறங்கி தனது காலுறையில் தண்ணீரை நிரப்பி கொண்டு, அதை வாயால் கவ்வி மேலே ஏறி அந்த நாய்க்கும் புகட்டினார். அவருடைய இந்த செயலை அல்லாஹ் ஏற்று அவரை மன்னித்தான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற, சஹாபாக்கள், அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகளுக்கு உதவும் விஷயத்திலுமா பலன் கிடைக்கும் என்று கேட்டனர். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆம். உயிருடைய ஒவ்வொரு பிராணியின் விஷயத்திலும் அதற்கான பிரதிபலன் உண்டு என்றார்கள். (அபூஹீரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2363, 6009)

ஆகவே அற்பம், சிறிய செயல்கள் என்று நாம் முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்து வந்த இத்தகயை செயல்களை நம்முடைய வாழ்வில் செயல்படுத்தி மறுமையில் வெற்றி பெறக்கூடிய மக்களாக ஆக வேண்டும்.

source: http://sukrymuhajiree.blogspot.com/2016/04/blog-post_99.html