சக்தி பெறுவோம்! சமூகத்தை சக்தி படுத்துவோம்! |
![]() |
![]() |
![]() |
Tuesday, 25 December 2018 08:52 | |||
சக்தி பெறுவோம்! சமூகத்தை சக்தி படுத்துவோம்! மௌலவி, ஹாஃபிழ், பஷீர் அஹமது உஸ்மானி உலகத்தையே இஸ்லாம் வழிநடத்திய காலகட்டம் என்று பொன்னெழுத்துக்களால் வரலாற்றில் பதியப்பட்டிருக்கின்றது. அந்த காலகட்டங்களில் முஸ்லிம் சமூகம் எல்லா வகையான சக்திகளையும், வலிமைகளையும், ஆற்றல்களையும் பெற்றிருந்தது எனவும் புகழப்பட்டுள்ளது. தான் பெற்றிருந்த சக்தியை இஸ்லாத்தின் உயர்வுக்கும், எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் அனைத்து வழிகளிலும் அந்த சமூகம் பயன்படுத்தியது. அதன் விளைவாக உலகமே இஸ்லாத்தின் தலைமையின் கீழ் நிழலும், நிம்மதியும் பெற்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியான ஓர் உயரிய நிலைக்கு இஸ்லாத்தின் தலைமையை இந்த உலகம் முழுமைக்கும் மீண்டும் கொண்டு வரவேண்டிய கடமையும், கடப்பாடும் இந்த உம்மத்திற்கு இருக்கின்றது. சக்தி பெறுவதும், தான் பெற்றிருக்கும் சக்தியைக் கொண்டு தன் சமூகத்தை சக்திபடுத்துவதும் ஓர் முஃமினின் தலையாய கடமை என இஸ்லாம் வலியுறுத்துகிறது. அல்லாஹ்வே முன்மாதிரி : எல்லாம் வல்ல அல்லாஹ் சக்தியும், ஆற்றலும் நிறைந்தவன். அவன் “தான் சக்தி பெற்றிருப்பதோடு நின்று விடாமல் தன்னை நம்புகின்றவர்களையும், தன்னைச் சார்ந்திருப்பவர்களையும் சக்திபடுத்துகின்றான். إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (20 ) திண்ணமாக! அல்லாஹ் அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றல் கொண்டவன் ஆவான்”. (அல்குர்ஆன்: 2: 20) وَكَانَ اللَّهُ قَوِيًّا عَزِيزًا (25 ) “அல்லாஹ் பேராற்றல் உடையவனாகவும், யாவற்றையும் மிகைத்தோனாகவும் இருக்கின்றான்”. (அல்குர்ஆன்: 33: 25) هُوَ الَّذِي أَيَّدَكَ بِنَصْرِهِ وَبِالْمُؤْمِنِينَ “நபியே! தன்னுடைய உதவியினாலும், இறைநம்பிக்கையாளர்கள் மூலமும் உமக்கு வலிமையை வழங்கியவன் அவனே!”. (அல்குர்ஆன்: 8: 62) முஃமின்களில் சிறந்தவர், அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானவர் யார்?.. عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللَّهِ مِنْ الْمُؤْمِنِ الضَّعِيفِ “பலகீனமான இறைநம்பிக்கையாளரை விட சக்தியும், வலிமையும் நிறைந்த இறைநம்பிக்கையாளரே சிறந்தவரும், அல்லாஹ்விற்கு அதிக விருப்பமானவரும் ஆவார்” என மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள். (நூல்: திர்மிதி) வலிமையோடு இருங்கள் எனும் இறைக்கட்டளை : உடல் வலிமை, மன வலிமை, ஆன்மீக வலிமை, கல்வியாற்றல், பொருளாதார பலம், அரசியல், அதிகார பலம், வீர தீரம், ஆயுதபலம் என சக்தியின் வகைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஒரு முஃமினைப் பொறுத்தவரை மனித வாழ்க்கைக்கும், சமூக வாழ்க்கைக்கும், இவ்வுலக வாழ்க்கைக்கும், மறுமை வாழ்க்கைக்கும் பயன் தருகிற எல்லா வகையான ஆற்றலையும் பெற்றிருப்பது மிகவும் அவசியம் ஆகும். وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ وَمِنْ رِبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِنْ دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ اللَّهُ يَعْلَمُهُمْ “மேலும், உங்களால் இயன்ற அளவுக்கான ஆற்றல்களையும், வலிமைகளையும் பெற்றவர்களாக எப்போதும் தயாராக இருங்கள். தயார் நிலையிலுள்ள குதிரைப்படைகளையும் திரட்டி வையுங்கள்! ஏனெனில், உங்களின் விரோதியையும், உங்களைப் படைத்த ரப்பின் விரோதியையும், இவர்கள் அல்லாத வேறு பகைவர்களையும் எதிர் கொள்வதற்காக வேண்டி. அந்தப் பகைவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள். ஆனால், அல்லாஹ் அவர்களை நன்கறிவான்”. (அல்குர்ஆன்: 8: 60) இந்த இறைவசனத்தில் பகைவர்களையும், விரோதிகளையும் எதிர் கொள்வதற்கு வலிமை அவசியம் என்பதையும், முஸ்லிம் சமூகம் எதிர் கொள்வதற்காக எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதையும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இந்த இறைவசனம் ஜிஹாதை மட்டும் வலியுறுத்தவில்லை. மாறாக, ஷைத்தான் நமக்கு விரோதியாவான் அவனை எதிர் கொள்ள சில போது நமக்கு ஆன்மீக வலிமை அவசியம். அறியாமை நமக்கு விரோதியாகும் அதை எதிர் கொள்ள சில போது அறிவாற்றல் அவசியம். ஏழ்மையும், வறுமையும் நமக்கு விரோதியாகும் அவைகளை எதிர் கொள்ள சில போது மன வலிமையும், சில போது பொருளாதார பலமும் அவசியம். கொடுங்கோன்மை நிறைந்த ஆட்சியாளார்களை எதிர் கொள்ள சில போது அரசியல் வலிமை அவசியம். அதிகார வரம்பை நமக்கெதிராக சுழற்றும் அதிகாரிகளுக்கு எதிராக சில போது அதிகார பலம் அவசியம் இப்படியாக நாம் சக்தி பெற்று நம்முடைய சமூகத்தையும் நாம் சக்தி படுத்த கடமைப் பட்டிருக்கின்றோம். தார்மீக கடமை : ஒரு முஃமினிடம் ஏதேனும் ஒரு ஆற்றல் இடம் பெறுகிற போது அதைக் கொண்டு சன்மார்க்கத்தையும், சமூகத்தையும் சக்திபடுத்துவது, பலப்படுத்துவது அவர் மீது தார்மீக கடமையாகும். ولد عمر فقيهًا، حازمًا، واضحًا صريحًا، مضحيًّا، بعد إسلامه مباشرة كانت أول كلمة قالها: يا رسول الله، ألسنا (استخدم صيغة الجمع) على الحق؟
முஸ்லிம்களின் மீதான துன்புறுத்தல் எல்லை மீறிய காலகட்டம் அது, மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது அழைப்புப் பணியை இரகசியமாகவும், முஸ்லிம்களை பாதுகாக்கவும் முடிவுசெய்து அர்கம் இப்னு அபுல் அர்கம் அல் மகஜூமீ என்பவரின் வீட்டை தேர்வு செய்து அங்கே ஒன்று கூடச் செய்தார்கள். சில முஸ்லிம்களை ஹபஷாவிற்கு ஹிஜ்ரத் அனுப்ப (தஞ்சம் புக வைக்க) முடிவு செய்தார்கள். பின்னர் கொஞ்சம் மாற்றம் நிலவியது, சில பலன்களும் கிடைத்தது. இந்த காலகட்டத்தில் ஹம்ஸா அவர்களும் உமர் அவர்களும் அடுத்தடுத்து இஸ்லாத்தை தழுவினர். ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், இஸ்லாத்தை தழுவிய பின் முஸ்லிம்களின் மீதான மதிப்பு உயர்ந்தது. உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தை தழுவிய பின் முஸ்லிம்களின் பலம் கூடியது. இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: “ஒரு நாள் உமரிடம் உங்களுக்கு ஃபாரூக் என்ற பெயர் வரக் என்ன காரணம்? என்று கேட்டேன். அதற்கவர் “எனக்கு மூன்று நாள்களுக்கு முன் ஹம்ஸா முஸ்லிமானார், பிறகு நான் முஸ்லிமானேன். நான் முஸ்லிமான போது “அல்லாஹ்வின் தூதரே! நாம் உயிர் வாழ்ந்தாலும் இறந்தாலும் உண்மையில் தானே இருக்கின்றோம்! ஆம்! என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். நீங்களும் அப்படித்தானே! என்று கேட்க, அதற்கும் ஆம்! என்றே பதில் கூறினார்கள். அப்படியென்றால், ஏன் மறைவாக செயல்பட வேண்டும். உங்களை சத்திய மார்க்கத்தைக் கொண்டு அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாம் வெளிப்படையாக செயல்பட்டே ஆகவேண்டும்” என்று கூறி முஸ்லிம்களை இரண்டு அணிகளாக பிரித்து ஓர் அணியல் நானும், இன்னொரு அணியில் ஹம்ஜாவும் இருந்து கொண்டு நபியவர்களை இரு அணிகளுக்கும் மத்தியில் ஆக்கிக் கொண்டோம். திருகையிலிருந்து மாவுத் துகள்கள் பறப்பது போன்று எங்களது அணிகளில் இருந்து புழுதிகள் பறந்தன. அதே வேகத்தில் நாங்கள் கஃபாவில் நுழைந்தோம். என்னையும், ஹம்ஸாவையும் ஒன்றாகக் கண்ட குறைஷியர்களுக்கு ஏற்பட்ட கலக்கம் வாழ்க்கையில் அதுவரை ஏற்பட்டிருக்காது. இந்த காட்சியைக் கண்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அகமும், முகமும் மலர்ந்தவர்களாக அன்று தான் அல் ஃபாரூக் எனப் பெயரிட்டார்கள்” என்று கூறினார்கள். (நூல்: மனாகிப் உமர், தாரீக் உமர், ரஹீக் அல் மக்தூம்) حين يقول: لما أسلم عمر ظهر الإسلام، ودُعِي إليه علانية، وجلسنا حول البيت حلقًا، وطفنا بالبيت، وانتصفنا ممن غلظ علينا، ورددنا عليه بعض ما يأتي به. இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: “உமர் முஸ்லிமாகும் வரை நாங்கள் கஅபாவுக்கு அருகில் கூட தொழமுடியாதவர்களாகவே இருந்தோம். உமர் முஸ்லிமானதற்கு பிறகே கஅபாவில் தொழுதோம். அங்கே அமர்ந்து பேசினோம். நாங்கள் பலமிக்கவர்களாகவும் மாறினோம்” ( நூல்: இப்னு ஹிஷாம், பக்கம்: 72) இன்றைக்கும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறகு உலக அறிஞர்களால், ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களால் அதிகம் கொண்டாடப்படுபவர்களில் முதல் இடம் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தான். அன்றைக்கு அவர்கள் ஏற்படுத்திய சக்தியின் பிம்பம் ஏறத்தாழ 1440 ஆண்டுகளுக்குப் பின்னரும் ஆளுமை செலுத்திக் கொண்டிருக்கின்றது என்றால் அது மிகையல்ல. எனவே, நாமும் சக்தி பெறுவோம்! இஸ்லாத்தையும், முஸ்லிம் சமூகத்தையும் சக்திபடுத்துவோம்!! 1. உடல் வலிமை : عن أبي هريرة- رضي الله عنه- قال மஸ்ஜித்துன் நபவீயின் மிம்பரில் நின்று பிரசங்கம் செய்து கொண்டிருந்த ஃகலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் “நீங்கள் லாயிலாஹா இல்லல்லாஹீ என்ற வார்த்தைக்குப்பிறகு ஆரோக்கியத்தைத்தவிர வேறு எதனையும் உங்களுக்குச் சிறந்த ஒன்றாக வழங்கப்பட வில்லை. எனவே, நீங்கள் அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தை கேளுங்கள்! என்று இதே போன்றதொரு நாளில், இதே மின்பரில் நின்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன் என்று கூறிய அபூபக்கர் சித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நினைவு சூழ்ந்து கொள்ளவே அழுதார்கள். (நூல்: முஸ்னத் அபூ யஃலா, நஸாயீ) وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال : قال لي رسول الله صلى الله عليه وسلم : يا عبد الله ألم أخبر أنك تصوم النهار وتقوم الليل فقلت : بلى يا رسول الله ، قال : فلا تفعل صم وأفطر وقم ونم فإن لجسدك عليك حقا وإن لعينك عليك حقا وإن لزوجك عليك حقا وإن لزوْرك عليك حقا وإن بحسبك أن تصوم كل شهر ثلاثة أيام فإن لك بكل حسنة عشر أمثالها فإن ذلك صيام الدهر كله فشدَّدتُ فشدَّد عليَّ قلت يا رسول الله إني أجد قوة قال فصم صيام نبي الله داود عليه السلام ولا تزد عليه قلت وما كان صيام نبي الله داود عليه السلام قال نصف الدهر فكان عبد الله يقول بعد ما كبر يا ليتني قبلت رخصة النبي صلى الله عليه وسلم . رواه البخاري ( 1874 ) ومسلم ( 1159 ) . زوْرك : أي ضيفك . அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ”நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம், ''அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக நான் அறிகின்றேனே!'' அது உண்மையா? என்று கேட்டார்கள். அதற்கு, நான் ''ஆம்! அல்லாஹ்வின் தூதரே!'' என்றேன். அப்போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''இனி அவ்வாறு செய்யவேண்டாம்! (சில நாட்கள்) நோன்பு வைத்து; (சில நாட்கள்) விட்டுவிடுவீராக! (சிறிது நேரம்) தொழுது; (சிறிது நேரம்) உறங்குவீராக! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் சிலது உமக்கிருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் சிலது உமக்கிருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் சிலது உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!'' என்று கூறினார்கள். நான் சிரமத்தை வரிந்து கட்டிக்கொண்டு ஏற்றுக்கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது!'' ஆம்! அப்போது அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!'' என்று நான் கூறினேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''தாவூத் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்!'' என்றார்கள். ”தாவூத் நபியின் நோன்பு எது?' என்று நான் கேட்டேன். ''வருடத்தில் பாதி நாட்கள்!'' என்றார்கள். ''அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வயோதிகம் அடைந்த காலத்தில் ”எனக்கு 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அளித்த சலுகைகளை நான் ஏற்காமல் போய்விட்டேனே!' என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள்!'' என அபூசலமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள். (நூல்: புகாரி) இங்கே, அதிகமாக தொழுகிற, நோன்பு நோற்கிற, நபித்தோழரை அழைத்து மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாராட்டவில்லை. பரிசில்கள் வழங்கி சோபனங்களோ, நன்மாராயமோ கூறவில்லை. மாறாக, கருணையே உருவான மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வணக்க, வழிபாடுகளின் பெயரால் தன்னுடைய உடல் ஆரோக்கியத்தை இழந்து விடுவதன் ஆபத்து குறித்து எச்சரிக்கை செய்தார்கள். ஷம்வீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் ஜாலூத் என்கிற மன்னனின் அழிச்சாட்டியம் குறித்தும் அமாலிக்கா என்கிற கூட்டத்தாரின் வன்முறை குறித்தும் முறையிட்ட பனூ இஸ்ரவேலர்கள் இந்த இருவரையும் எதிர் கொள்ள ஓர் அரசர் தேவை அதற்காக அல்லாஹ்விடம் இறைஞ்சுமாறு வேண்டி நின்றனர். ஷம்வீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அல்லாஹ்விடம் பிர்ரர்த்தித்தார்கள். அல்லாஹ் அந்த பிரார்த்தனையை அங்கீகரித்து அவர்களுக்கு தாலூத் என்பவரை அரசராக நியமித்தான். தாலூத் என்பவரின் தலைமையை ஏற்க மறுத்த பனூ இஸ்ரவேலர்கள் அவர் ஏழை என்றும் சாதாரணமானவர் என்றும் விமர்சித்த போது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய பதில் இது தான். அல்பகரா அத்தியாயம் 247 –ஆம் வசனத்தில்... “அவர்களுடைய நபி, “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை, உங்களுக்கு அரசராக நியமித்திருக்கின்றான்” என்று அவர்களிடம் கூறினார். இதைக்கேட்ட அவர்கள் “எங்கள் மீது ஆட்சி செய்ய எவ்வாறு அவர் உரிமையுடையவராவார்? நாங்களோ ஆட்சியதிகாரத்திற்கு அவரை விட அதிகத் தகுதியுடையோராய் இருக்கின்றோம்; மேலும், அவர் செல்வவளம் அளிக்கப்பட்டவரும் அல்லவே!” என்று கூறினார்கள். அதற்கு, அந்த நபி “உங்களுக்கு மேலாக அல்லாஹ் அவரையே தேர்ந்தெடுத்து இருக்கின்றான். மேலும், அறிவாற்றலையும், உடல் வலிமையையும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான். தான் நாடுபவர்களுக்கு தன்னுடைய பூமியில் ஆட்சி, அதிகாரத்தை வழங்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே இருக்கிறது. மேலும், அல்லாஹ் விசாலமுடையோனும், பேரறிவுடையோனாகவும் இருக்கின்றான்” என்று கூறினார். இறுதியாக, அம்மக்கள் தாலூத் என்கிற அரசனையும், அமாலிக்கா கூட்டத்தாரையும் பெரும் போர் ஒன்றில் சந்தித்தனர். குறைவான எண்ணிக்கையில் இருந்த பனூ இஸ்ரவேலர்கள் பெரும் எண்ணிக்கையோடு இருந்த ஜாலூத்தை வெட்டி வீழ்த்தி அமாலிக்கா கூட்டத்தாரை மகத்தான வெற்றி கண்டார்கள். அல்லாஹ் அந்த வெற்றி குறித்து கூறும் போது... “எத்தனையோ சின்னஞ்சிறு கூட்டம், அல்லாஹ்வின் அனுமதி கொண்டு பெரும், பெரும் கூட்டங்களை வெற்றி கொண்டிருக்கின்றது; மேலும், அல்லாஹ் பொறுமையாளர்களோடு இருக்கின்றான்”. (அல்குர்ஆன்: 2: 250) வரலாறு படைத்த மாவீரர் : غزو تستر)) قال الوليد بن هشام القحذمي، عن أبيه وعمه أن أبا موسى لما فرغ من الأهواز، ونهر تيرى، وجند يسابور، ورامهرمز، توجه إلى تستر، فنزل باب الشرقي، وكتب يستمد عمر، فكتب إلى عمار بن ياسر أن أمده، فكتب إلى جرير وهو بحلوان أن سر إلى أبي موسى، فسار في ألف فأقاموا أشهرا، ثم كتب أبو موسى إلى عمر: إنهم لم يغنوا سيئا. فكتب عمر إلى عمار أن سر بنفسك، وأمده عمر من المدينة.
முஜ்ஸஆ இப்னு ஸவ்ர் அஸ்ஸதூஸி அல் பக்ரீ ரலியல்லாஹு அன்ஹு, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஃப்த்ஹ் மக்காவிற்குப் பின் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இளவல். பக்ரீ கோக்கிரத்தைச் சார்ந்த இவர்கள் மகத்தான பல ஆற்றல்கள் கொண்ட வீரரும் கூட. வரலாற்று ஆசிரியர்கள் முஜ்ஸஆ குறித்து வியந்து கூறும் ஒரு கூற்றும் உண்டு. பெரும் பலசாலிகளான நூறு பேர்களைக் கூட மிகச் சாதரணமாக துவம்சம் செய்பவர் என்று. உமர் ரலியல்லாஹு அன்ஹு ஆட்சிக்காலம் அது. இஸ்லாமிய தேசத்தின் எல்கைகள் நீண்டு கொண்டே இருக்கும் தருணமும் கூட. பாரசீகர்களை காதிஸிய்யாவில் தோற்கடித்ததைத் தொடர்ந்து பலம் வாய்ந்த முப்பெரும் தளபதிகளில் ஒருவனான ருஸ்தம் அந்த யுத்தத்தில் அழிந்தும் போனான். தோல்வியுற்று ஓடிச் சென்ற இன்னொரு தளபதியைப் பின் தொடர்ந்து சென்று ஆற்றின் கரையோரம் ஒன்றில் வைத்து ஜாலினூஸ் என்கிற இரண்டாம் தளபதியை கொன்று பாரசீக வல்லரசை பலமிழக்கச் செய்தார் ஜுஹ்ரா இப்னு அல் ஹாவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். மீதமிருக்கிற ஹுர்முஸான் மட்டும் அடுத்தடுத்து நடைபெற்ற சிறு, சிறு போர்களுக்கு தலைமை தாங்கி பாரசீக வல்லரசின் ஆளுமையை நிரூபிக்கத் துடியாய் துடித்துக் கொண்டிருந்தார். ஆனாலும், பாரசீகப்படைத் தொடர்ந்து தோல்வியைத் தழுவியதோடல்லாமல் பாரசீகத்தின் பெரும்பகுதிகளை இழந்து கொண்டே இருந்தது. தளபதி ஹுர்முஸான் தப்பித்து தலைமறைவாவதும், அடுத்து போர் செய்வதும் என்கிற இந்த கதை தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்நேரத்தில் ராம்ஹெர்முஸ் எனும் பகுதியில் பெரும் படையோடு திரண்டிருந்த ஹுர்முஸானின் படையை எதிர்கொள்ள ஆலோசனையும், படை வீரர்களும் கேட்டு கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள் காதிஸிய்யாவைத் தொடர்ந்து பாரசீகப் படைகளுக்கு எதிராக தளபதியாக களம் கண்டிருக்கும் ஸஅத் இப்னு அபீ வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பஸராவின் ஆளுநராக இருந்த அபூமூஸல் அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தலைமையாகக் கொண்டு ஒரு படையையும், கூஃபாவில் இருந்து நுஃமான் இப்னு முகர்ரின் அல் மாஜினீ ரலியல்லாஹு அவர்களின் தலைமையில் ஒரு படையை அனுப்புமாறும் உத்தரவிட்டார்கள். இதை ஹுர்முஸானும் அறிந்து பலம் பொருந்திய படையை எதிர் கொள்ள சக்தியில்லாமல் அங்கிருந்து தப்பியோடி பாரசீகத்தின் இரும்புக் கோட்டையான தஸ்தர் எனும் மலைக் கோட்டைக்குள் புகுந்து பெரும் கதவை மூடி அம்பெறி, வில் வித்தை வீரர்களோடு உள்ளே இருந்து கொண்டார். அபூமூஸல் அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு இதை விளக்கி கடிதம் ஒன்றை அனுப்பி கூடுதல் படையை அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதற்கு, பதில் கடிதம் எழுதிய உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தஸ்தர் கோட்டையை முற்றுகையிடுங்கள். உங்கள் படையில் முஜ்ஸஆ இப்னு ஸவ்ர் அஸ்ஸதூஸீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களை முக்கிய வீரராக இடம் பெறச் செய்யுங்கள் என்று எழுதியிருந்தார்கள். உமர் ரலியல்லாஹு அன்ஹு உத்தரவிற்கும், ஆலோசனைக்கும் இணங்க முஜ்ஸஆ ரலியல்லாஹு அன்ஹு முக்கிய வீரராக இடது பக்க படையின் தலைவராக நியமிக்கப்பட்டார். முற்றுகை ஆரம்பித்தது. நாட்களைக் கடந்து, வாரங்களைத் தொடர்ந்து மாதக்கணக்கில் நீடித்தது. ஆம்! சுமார் ஒன்றரை ஆண்டுகள் 18 மாதங்களாக முற்றுகை நீடித்தது. இதற்கிடையே முற்றுகையின் போது அவ்வப்போது தஸ்தர் கோட்டையில் இருந்து வெளியே வந்து ஹுர்முஸானின் வீரர்கள் ஒவ்வொருவராக இஸ்லாமியப் படையின் வீரர்களோடு மோதிக் கொள்வதற்கு வருவார்கள். அப்பொழுதெல்லாம் அபூமூஸல் அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முஜ்ஸஆ ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அனுப்புவார்கள். நேருக்கு நேர் ஒருவரையொருவர் சந்தித்து சண்டையிட்டுக் கொள்ளும் அந்த காட்சி உண்மையில் பாரசீகர்களின் உள்ளத்தில் ஒரு வித பயத்தை ஏற்படுத்தியது. ஆம்! தாம் சந்தித்த நூறு பேர்களை, பலம் வாய்ந்த நூறு வீரர்களை கொன்று குவித்தார் முஜ்ஸஆ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். இன்னும் சொல்லப்போனால் முஜ்ஸஆ என்ற வார்த்தையைக் கேட்டாலே பாரசீக வீரர்கள் பயந்து நடுங்கினர். நேருக்கு நேர் சண்டையிடுதல் அத்தோடு முற்றுப் பெற்று, உள்ளிருந்து திடீர் திடீரென அம்பெய்து தாக்கி முஸ்லிம் படை வீரர்களை காயப்படுத்துவதும், உள்ளிருந்து பழுக்கக் காய்ச்சிய பெரிய பெரிய கொக்கிகளை நீண்ட மதில் சுவருக்கு வெளியே வீசி முஸ்லிம் படை வீரர்களை தீக்காயங்களுக்கு உள்ளாக்குவது என்கிற மன உளைச்சல் தருகிற தாக்குதல் தர தொடங்கினர். அபூமூஸல் அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு நாள் இரவு நேரத்தில் கோட்டையின் கதவையும், கோட்டையின் சுவரையும் ஏதாவது வழி கிடைக்குமா? என்று ஆய்வு செய்து கொண்டே வருகின்றார்கள். திடீரென ஒரு அம்பு உள்ளிருந்து அவர் அருகே வந்து விழுகின்றது. அதில் ஒரு கடிதமும் இருந்தது. அதைப் பிரித்து படித்துப் பார்க்கின்றார்கள். படிக்க படிக்க அபூமூஸல் அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் முகம் பிரகாசித்தது. கடிதத்தின் உள்ளே “உங்களின் வீரத்தை எப்படி நான் அறிவேனோ அது போன்று உங்களின் நேர்மையையும் நான் அறிவேன். நீங்கள் எனக்கும், என் மனைவி மக்களுக்கும், என் குடும்பத்தாருக்கும் அபயம் தருவீர்களென்றால் நீங்கள் கோட்டைக்குள் வருவதற்கும், ஹுர்முஸானை கைது செய்வதற்கும் இந்த போரில் வெற்றி பெறுவதற்கும் உண்டான ஏற்பாட்டை நான் செய்து தருகின்றேன். ஆம்! இந்தக் கோட்டைக்குள் வருகிற இரகசிய வழியொன்றை நான் அறிவேன். ஹுர்முஸானால் நானும் என் குடும்பமும் பாதிக்கப்பட்டு இருக்கின்றோம். எனக்கும் இது தான் ஹுர்முஸானைப் பழிவாங்க நல்ல தருணம் ஆகும். என்ன சொல்கின்றீர்கள்? என்று எழுதப்பட்டிருந்தது. மின்னல் வேகத்தில் செயல்பட்ட அபூமூஸல் அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அபயம் தருவதாக வாக்களித்து எழுதிய கடிதத்தை அதே அம்பில் வைத்து உள்ளே எறிந்தார்கள். சில மணித்துளிகளுக்குப் பிறகு ஒருவர் வந்தார். அபூமூஸல் அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்து நகரின் ஒரு பகுதியில் இரகசிய பாதாள பாதை ஒன்று இருக்கின்றது. நீச்சலும், நல்ல ஆற்றலும் நிறைந்த ஒருவரை என்னோடு அனுப்புங்கள்! நான் அவருக்கு ஹுர்முஸான் ஒளிந்திருக்கும் இடத்தையும், உள்ளே செல்வதற்கான வழியையும் காண்பித்து தருகின்றேன். அருகில் நின்ற முஜ்ஸஆ அவர்களிடம் யாரை அனுப்புவது என்று கேட்டார்கள் அபூமூஸல் அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். சற்றும் தாமதிக்காமல் நான் செல்கின்றேன் என்று கூற, அபூமூஸல் அஷ்அரீ ரலியல்லாஹு அவர்கள் அவரோடு அனுப்பி வைத்தார்கள் முஜ்ஸஆ அவர்களை. பல மைல் தூர பயணம், நடுநிசி, வளைந்து நெளிந்த குறுகலான பாதை, இடையில் ஆற்று நீரின் சுழற்சி என பல்வேறு சிரமங்களுக்குப் பின்னர் கண்ணுக்கு எதிராக ஹுர்முஸானை பார்க்கின்றார்கள். கோட்டையின் உள்ளே நுழைவதற்கான வழியையும் அறிந்து கொண்டு, போன அதே வேகத்தில் வெளியே வருகின்றார்கள். அதற்குள்ளாக விடிந்திருந்தது. உள்ளே நுழைந்ததில் இருந்து ஹுர்முஸானைக் கண்டது வரையிலான காட்சிகளை விவரித்தார் முஜ்ஸஆ அவர்கள் படைத்தளபதி அவர்களிடம். உங்களுக்கு என்ன வேண்டும்? உங்களோடு யார் வேண்டும்? என்று கேட்டார்கள் அபூமூஸல் அஷ்அரீ அவர்கள். எல்லாக் கலையும், நீச்சலும் தெரிந்த 300 போர் வீரர்களை எனக்குத் தாருங்கள் என்று கூறினார்கள். 300 வீரர்களைக் கொடுத்து முஜ்ஸஆ ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் தளபதியாக ஆக்கி, நகருக்குள் நுழந்ததும் அல்லாஹு அக்பர் என்று உரக்க தக்பீர் முழங்குங்கள்! நாங்கள் வெளியிலிருந்து தாக்க ஆரம்பிக்கின்றோம் என்று கூறி உற்சாகத்தோடு அனுப்பி வைத்தார்கள் தளபதி அபூமூஸல் அஷ்அரீ அவர்கள். 300 வீரர்களை அழைத்துக் கொண்டு இரகசிய பாதை வழியாக ஊடுருவிச் சென்றார். முஜ்ஸஆ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். அதிகாலை நேரமும் வந்து விட்டது. தக்பீர் முழக்கத்தை எதிர்பார்த்து காத்திருந்தார் பெரும் போருக்கு தயாராயிருந்த படைத்தளபதி அபூமூஸல் அஷ்அரீ அவர்கள். ஆனால், முன்னிரவில் கிளம்பிய படை அதிகாலை நேரமாகியும் நகருக்குள் நுழையாததைக் கண்டு இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார் தளதி. தளபதி அஷ்அரீ அவர்களுக்கென்ன தெரியும் சுரங்கப்பாதையிலே மூச்சு விடக்கூட இடமில்லாமல் 210 பேர் ஷஹீதாகி விட்டார்கள் என்று. மிச்சமிருந்த 80 வீரர்களை அழைத்துக் கொண்டு விண்ணுயர தக்பீர் முழக்கத்தோடு நகருக்குள் நுழைந்தார் முஜ்ஸஆ ரலியல்லாஹு அன்ஹு. வெளியிலிருந்து தாக்குதல் தொடுக்க ஆரம்பித்திருந்தார்கள் காத்திருந்த முஸ்லிம் படையினர். கடும் போர், உக்கிரமாக முஸ்லிம் படையினர் தாக்க பாரசீகர்கள் நிலைகுலைந்து போயினர். கடுமையான போருக்கு நடுவே ஹுர்முஸானை தேடிக்கொண்டிருந்தார் முஜ்ஸஆ ரலியல்லாஹு அன்ஹு. ஹுர்முஸானைக் கண்டு அவரருகே சென்று வாள் வீச தப்பித்தார் ஹுர்முஸான். இரண்டாவது முறையாக மயிரிழையில் தப்பித்தார் ஹுர்முஸான். மூன்றாம் முறையாக முன்னேறிச் சென்று நேருக்கு நேராக ஹுர்முஸானோடு வாள் சண்டையிட தீப்பொறி பறக்க மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருக்க, ஒரு கட்டம் வாளை ஹுர்முஸானின் கழுத்தை நோக்கி கொண்டு செல்ல குறி தப்பி, ஹுர்முஸானைக் கடந்து முஜ்ஸஆ செல்ல, சந்தர்ப்பத்தைக் காத்திருந்த ஹுர்முஸான் முஜ்ஸஆ ரலியல்லாஹு அன்ஹு அவர்களை தாக்குகின்றார். தாக்குதலின் கடுமையால் தலை துண்டாகி கீழே விழுந்து ஷஹீதானார் முஜ்ஸஆ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். இதே நேரத்தில் முஸ்லிம் படையினர் தஸ்தர் நகரை தகர்த்து, பாரசீகர்களைப் பந்தாடி ஹுர்முஸானைக் கைதும் செய்து மகத்தான வெற்றி வாகை சூடினர். ஆனால், இந்த வெற்றிக்கு வித்திட்ட வீர மகன் வீர மரணம் அடைந்து தஸ்தர் நகரின் வீழ்ந்து கிடக்கின்றார். கைது செய்யப்பட்ட ஹுர்முஸான் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் முன்பாக நிறுத்தப் படுகின்றார். நீண்ட உரையாடலுக்குப் பின்னர் ஹுர்முஸான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றார். முஜ்ஸஆ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் உடல்வலிமையைக் கொண்டு இஸ்லாத்தை வலுப்படுத்தினார். ஆம்! இஸ்லாமிய சாம்ராஜ்யம் பாரசீகத்தை வெல்வதற்கும், ஆள்வதற்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். (அல் அஃலாம் லிஇமாமி கைருத்தின் அஸ்ஸர்கஜீ ரஹ் பாகம்: 5, பக்கம் 279, தாரீக் அல் இஸ்லாம் லிஇமாமி அத்தகபீ ரஹ், பாகம்: 3, பக்கம் 198 – 200) அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அன்னாரைப் பொருந்திக் கொள்வானாக! ஆமீன்!! 2. பொருளாதார வலிமை : இஸ்லாத்தின் ஆரம்ப கால வளர்ச்சியில் முக்கியப் பங்கும் பெரும்பங்கும் வகித்தது பொருளாதார வலிமை தான். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அடிக்கடி மகிழ்ச்சியோடு சுட்டிக்காட்டுவார்களாம். எங்களின் தலைவர்களை - பிலால், அம்மார், கப்பாப் போன்றவர்களை அடிமைத்தளையிலிருந்து மீட்டெடுத்தார்கள்” இவ்வகையிலும் இன்னும் பல வகையிலும் அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தின் துவக்க காலத்தில் 80,000 தீனார்களை இஸ்லாத்திற்காக வாரி வழங்கினார்கள். அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கணக்கிலடங்கா செல்வங்களும், சொத்துக்களும் இஸ்லாமிய வளர்ச்சிக்காக செலவிடப்பட்டுள்ளது. ஹிஜ்ரத் செய்து வந்த பின்னர் : உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு, அபுத்தர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆகிய செல்வந்தர்களின் பொருளாதாரமும் கணக்கில்லாமல் செலவிடப்பட்டுள்ளது. மேலும், இது அவர்கள் வாழும் காலங்களில் தொடர்ந்ததை வரலாற்றில் நிரம்பவே காண முடிகிறது. உஸ்மான் தின் நூரைன், உஸ்மானில் கனீ என்றழைக்கப்பட்ட உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சமூகத்தொண்டு அளப்பரியது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜிரத் செய்து மதீனா வந்த புதிதில் முஸ்லிம்களுக்கு தண்ணீர் தேவை அதிகரித்தது வறட்சியான காலமும் கூட அது. அருகிலிருக்கும் ஒரு யூதனின் பிஃர-ரூமா எனும் கிணற்றிலிருந்து தான் முஸ்லிம்கள் ஒரு முத்து விலையாக கொடுத்து ஒரு பாத்திரம் (ஒரு குடம்) தண்ணீர் பெற்றுக் கொண்டிருந்தனர். في صحيح البخاري قَالَ عُثْمَانُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ يَشْتَرِي بِئْرَ رُومَةَ فَيَكُونُ دَلْوُهُ فِيهَا كَدِلَاءِ الْمُسْلِمِينَ فَاشْتَرَاهَا عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ) விலையில்லாமல் அந்த தண்ணிரை மக்களுக்கு யாராவது பெற்றுத் தர மாட்டார்களா? என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது விருப்பத்தை தெரிவித்தபோது, ஹல்ரத் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு 12,000 தீனார் கொடுத்து ஒரு நாள் யூதனுக்கும், ஒரு நாள் முஸ்லிம்களுக்கும் தண்ணீர் எடுத்துக் கொள்ளும் உரிமையை பெற்றுத்தந்தார்கள். மீண்டும் நெருக்கடி ஏற்படவே மீண்டும் 12,000 தீனார் கொடுத்து முழுக்கிணற்றையும் விலைக்கு வாங்கி மதினமாநகர் முழுவதுமுள்ள மக்களெல்லாம் பயன்பெறுமளவுக்கு அதை அர்ப்பணித்தார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தில் சாரை சாரையாய் மக்கள் இணைந்து கொண்டிருந்த தருணம், மஸ்ஜித் நவபி நெருக்கடியில் திக்குமுக்காடியது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அருகிலிருக்கும் இடத்தை யாராவது பெற்றுத்தந்தால் மஸ்ஜித் நவபீயை இன்னும் விஸ்தரித்து இடநெருக்கடியை குறைத்து கொள்ளலாமே? என தமது விருப்பத்தை வெளிப்படுத்திய போதும் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களே15,000 தீனார் கொடுத்து மஸ்ஜிதுக்கு அருகாமையில் இருந்த இடத்தை வாங்கி அர்ப்பணித்தார்கள். மாபெறும் வெற்றியான ஃபத்ஹ்-மக்காவிற்குப்பின் இஸ்லாமிய எழுச்சி ஹரம் ஷரீஃபிலும் எதிரொலித்தது! ஆம் அங்கும் இட நெருக்கடி 10,000 தீனார் விலை கொடுத்து அருகே இருந்த இடத்தை வாங்கி (விஸ்தரிக்க) அற்பணித்தார்கள். முஸ்லிம்களின் தேவைகள் அதிகமான போதெல்லாம் தாமாகவே முன்வந்து ஒவ்வொரு முறையும் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இறை திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தமது செல்வத்தின் மூலம் பல சமூக சேவைகள் புரிந்துள்ளார்கள். ( நூல்: குலஃபாவுர்ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பக்கம் 185, 186) இம்மூவரும் வாழ்ந்த காலங்களில் ஏழ்மையும், ஏழ்மையானவர்களும் இல்லை. வறுமையும், வாழ வழியில்லாதவர்களும் இல்லை. ஒரு புறம் இப்படியென்றால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலம் முதற்கொண்டு சன்மார்க்கப்பணிகளுக்கும், யுத்தகளங்களுக்கும் இவர்களின் பங்கே முதல் மூன்றிடத்தைப் பெற்றிருக்கும். அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய பொருளாதார வலிமையைக் கொண்டு இஸ்லாத்தையும் வலிமை படுத்தினார்கள். முஸ்லிம் உம்மத்தையும் வலிமை படுத்தினார்கள். ஒரு மேற்கோளுக்காக இவ்விரண்டு அம்சங்களையும் குறிப்பிட்டு உள்ளேன். ஒரு முஃமினால் எந்தெந்த வகையில் எல்லாம் பலம் பெற முடியுமோ, எந்தெந்த வகையில் எல்லாம் சமூகத்தை பலப்படுத்த முடியுமோ அந்தந்த வகையிலெல்லாம் பலப்படுத்த முயற்சிக்க வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அத்தகைய மகத்தான ஆற்றல்களையும், பங்களிக்கிற வாய்ப்புகளையும் நல்குவானாக!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!! வஸ்ஸலாம்!!! source: http://vellimedaiplus.blogspot.com/
|