Home கட்டுரைகள் அப்துர் ரஹ்மான் உமரி ஈமான் என்றால் என்ன? நம்பிக்கையும் நினைப்பும்!
ஈமான் என்றால் என்ன? நம்பிக்கையும் நினைப்பும்! PDF Print E-mail
Wednesday, 12 December 2018 08:05
Share

ஈமான் என்றால் என்ன? நம்பிக்கையும் நினைப்பும்!

       மவ்லவி அப்துர் ரஹ்மான் உமரி       

ஈமான் என்றால் என்ன? என்பதைப் பற்றி நமக்கு ஓரளவு தெரியும்.

இறைவனை நம்பியேற்றுக் கொண்டவர்களும் அவன் காட்டிய வழியில் வாழ்வை அமைத்துக் கொண்டவர்களும் முஃமின்கள் என்பதையும் நாம் அறிவோம்

நாமும் முஃமின்கள், நாமும் நம்பிக்கையாளர்கள் என்னும் எண்ணம் நம்முடைய நெஞ்சத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது.

நம்மிடம் ஈமான் இருக்கின்றது என நாமெல்லாம் நினைத்துக் கொண்டுள்ளோம்

இந்த ‘நினைப்பு’ தான் இன்று பெரும் ஆபத்தாக உரு வெடுத்துள்ளது.

நம்பிக்கை என்றால் என்ன?

நம்பிக்கை இருப்பதாக நினைத்துக்கொள்வது என்றால் என்ன? என்பதை கொஞ்சமும் உணராத மக்களாகவே நாமிருக்கிறோம்

‘நினைப்பு’ மயக்கத்தைத் தருகின்றது. ‘மயக்கம்’ மனநிம்மதியைத் தருகின்றது. ‘மனநிம்மதி’ தொலைந்துபோன பாதையைப் பற்றி சிந்திக்கவிடாமல் நம்மைத் தடுத்து விடுகின்றது.

இதன் காரணமாக, ஸஹாபாக்களும் தாபிஈன்களும் எந்த ‘ஈமானைப்’ பெற்றிருந்தார்களோ, ஏறக்குறைய அதே ‘ஈமானை’ நாமும் பெற்றிருப்பதாக ‘நம்பிக்’ கொண்டுள்ளோம். என்ன, கொஞ்சம் குறைவாக பலவீனமானதாக இருக்கக் கூடும் என சமாதானம் வேறு செய்துகொள்கிறோம்

நம்பிக்கைக்கும் நினைப்பிற்கும் உள்ள வேறுபாட்டை சரி வர புரிந்து கொண்டால்தான் நம்மிடம் இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் ஈமானை துல்லியமாக எடை போட்டுப் பார்க்கமுடியும்

ஈமான் ஏற்படுத்திய புரட்சி

ஈமான் இந்த உலகத்தில் ஏற்படுத்திய புரட்சியை எண்ணி எண்ணி வியக்கிறோம். வரலாற்றில் ஈமான் ஏற்படுத்திய புரட்சியையொத்த புரட்சியை வேறெந்த கொள்கையும் கோட்பாடும் ஏற்படுத்தியதே இல்லை. அரபு நிலப்பரப்பில் வாழும் வகையறியாமல் நாடோடிகளாக ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த அரபுக்களை ‘உலகையே மேய்க்கும் மேய்ப்பாளர்களாக’ இந்த ஈமான்தான் மாற்றியது

ஒட்டக ஓட்டிகள் அரசியல் ராஜதந்திரிகளாக மாறினார்கள், அடிமைகளாக உழன்றுகிடந்தோர் அறிவுலகில் பிரகாசித்தார்கள், ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தோர் உலக மாந்தருக்கான வழிகாட்டிகளாக மாறினார்கள்

மிஅராஜ் பயணத்தின் போது நடந்த ஒரு நிகழ்வை அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுக் கூறினார்கள். ஜிப்ரீல் அலைஹிஸ் ஸலாம் அவர்களோடு சொர்க்கத்தில் சென்று கொண்டிருந்தபோது தமக்கு முன்னால் யாரோ செல்வதைப்போல காலடி ஓசையை அண்ணலார் செவியுற்றார்கள். யார் இது என விசாரித்த போது அவர்தான் பிலால். அவருடைய காலடி ஓசைதான் இது என பதில் கூறப்பட்டது

இந்த அறிவிப்பை கேட்ட பிறகு சித்தீக்குல் அக்பர் அபூ பக்கர் ரழியல்லாஹு அன்ஹு பிலாலுடைய தாய்க்கும் தந் தைக்கும் மகனாக நான் பிறந்திருக்கக் கூடாதா? பிலாலைப் போல் நானும் ஆகியிருக்கக் கூடாதா? என அங்கலாய்ப் போடு கூறினார். (காண்க- அல்முஃஜமுல் கபீர், தபுரானி)

மக்கா வெற்றிபெற்ற நாளன்று இறைத்தூதரின் அறிவிப்பாளரான பிலால் ரழியல்லாஹு அன்ஹு இறையில்லம் கஅபதுல்லாஹ்வின் மேற்கூரையின் மேலேறி நின்று பாங்கு கொடுத்தார். நூற்றுக்கணக்கான ஆண்டுகாலமாக இனப் பாகுபாடு வம்சப் பெருமையில் மூழ்கிப் போய்க் கிடந்த சிலர் இதனைக் கண்டார்கள். இக்காட்சியை அவர்களால் சகித்துக் கொள்ள இயலவில்லை.

கஅபதுல்லாஹ்வின் மீது நின்று கொண்டு இந்த கருப்பு அடிமை அதான் கொடுக்கிறானா? என முகத்தை சுழித்தார்கள், மூக்கை சுருக்கினார்கள். இன்னும் சிலரோ இந்த விஷ யம் இறைவனுக்கு பிடிக்கவில்லை என்றால் அவனே இதை அகற்றிவிடுவான் என ஆட்சேபத்தை உமிழ்ந்தார்கள்

அக்காலகட்டத்தில்தான் ‘மனிதர்களே! உங்களை நாம் ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்திருக்கின்றோம். ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்வதற்காக குலங்களாக வும் கோத்திரங்களாகவும் ஆக்கி இருக்கின்றோம். உங்களில் யார் இறையச்சம் மிகுந்தவரோ அவர்தான் இறைவனிடத் தில் கண்ணியத்தில் உயர்ந்தவராவார்’ என்னும் வசனம் இறக்கி அருளப்பட்டது

தம்முடைய மரணத்தறுவாயில் தமக்குப் பிறகு யார் கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதை தீர் மானிப்பதற்காக உமர் ஆறு பேர் கொண்ட குழு ஒன்றை ஏற்படுத்தினார். அப்போது மக்களைப் பார்த்து ‘ஸாலிம் மட் டும் இப்போது உயிரோடு இருந்தால் ஆலோசனை செய்து அடுத்த கலீஃபாவை தேர்ந்தெடுப்பதற்காக இந்தக் குழுவை நியமிக்க வேண்டிய அவசியமே எனக்கு இருந்திருக்காது’ என்றார். அதாவது ஸாலிமையே நான் கலீஃபாவாக அறிவித் திருப்பேன் என்பது பொருள்

அபூ ஹுதைஃபா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய அடிமைதான் இந்த ஸாலிம். அடிமையாக இருந்த ஸாலிமை தமது மகனாக அபூ ஹுதைஃபா ஆக்கிக் கொண்டார். அது மட்டுமல்ல, தனது தமக்கையின் மகளான ஃபாதிமா பின்த் வலீத் இப்னு உக்பா என்னும் அழகு மங்கையை அவருக்கு திருமணம் முடித்துக்கொடுத்தார்

அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அருள்மறை குர்ஆனை கற்றுக் கொள்வதாக இருந் தால் நான்கு நபித்தோழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள். இந்த இந்த நபித்தோழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்’ என சில சஹாபாக்களின் பட்டியலை மக்களிடம் அறிவித்தார் கள். அதில் ஸாலிமும் ஒருவர். (புகாரி, முஸ்லிம்)

இஸ்லாமிய ஆட்சியின் இரண்டாவது கலீஃபாவாக திகழ்ந் தவர் அமீருல் முஃமினீன் உமர் ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹு. மிகப்பெரிய சஹாபி. இஸ்லாமிய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கபட்டவர். பிலால் ரழியல் லாஹு அன்ஹு மரணமடைந்த பொழுது ‘எங்களுடைய தலைவர்’ என்னும் சொல்லை உமர் ஃபாரூக் உதிர்த்திருக்கிறார். எங்கள் தலைவரின் (சித்தீக்குல் அக்பர் ரழியல் லாஹு அன்ஹு) அடிமையான எங்கள் தலைவர் பிலால் ரழியல்லாஹு அன்ஹு இறப்பெய்துவிட்டார்’ என்றார்

ஓர் அடிமையின் மகனாக அடிமையாக வாழ்ந்த அம்மார் இப்னு யாசிரை உமர் ஃபாரூக் ரழியல்லாஹு அன்ஹு தம் முடைய ஆட்சிக் காலத்தில் கூஃபா மாகாணத்தின் ஆளுனராக பதவியில் அமர்த்தினார்.

அம்மாருக்கும் காலித் இப்னு வலீதுக்குமிடையே ஏதோ ஒரு விஷயத்தில் கருத்து மோதல் ஏற்பட்டுவிட்டது. வாக்கு வாதம் வலுத்தது. இதைப் பற்றி தகவல் அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எட்டிய போது, அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ‘யார் அம்மாருக்கு விரோதியாக இருக்கி றாரோ இறைவனும் அவருக்கு விரோதியாவான். யார் அம்மாரை வெறுக்கிறாரோ அவரை இறைவனும் வெறுக்கிறான்’ என்றார்கள். (ஸஹீஹ் இப்னு ஹிப்பான், அஹ்மத்)

ஆடுகளையும் செம்மறிகளையும் மேய்ப்பதிலேயே அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதின் இளமைப்பருவம் முழுக்க கழிந்தது. மக்காவில் ஓரிறைக் கோட்பாட்டிற்கான அழைப்பு விடுக்கப்பட்டபோது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத், உக்பா இப்னு ஆமிர் என்பாருடைய ஆடுகளை அப்போது மேய்த் துக் கொண்டிருந்தார். (உஸதுல் காபா)

அல்லாஹ்வின் வல்லமையையும் ஆற்றலையும் கொஞ்சம் பாருங்கள். ஆடு, மாடுகளை பாலைவனத்தில் மேய்த்துக் கொண்டிருந்த ஓர் இறை நம்பிக்கையாளரை தன்னுடைய அறிவுக் கலாசாலையில் இறைவன் கொண்டு வந்து சேர்த்தான். அறிவையும் கல்வியையும் அள்ளி அள்ளி வழங்கினான். கல்வி வானில் பிரகாசித்து மின்னும் நட்சத்திரமாக அவர் மாறினார், ஒளிவீசும் சுடராக வழிகட்டினார்

அறிவார்ந்த வல்லாண்மை, இஜ்திஹாத் பேராற்றல் போன்ற அரும் பெரும் பண்புகளால் மற்ற எல்லா நபித் தோழர்களை விட இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு சிறந்து விளங்கினார். அவரைப் பார்க்கும் போது உமருக்கு பெரு மகிழ்ச்சி கிடைக்கும்.

னஹனு கைஃப முலீஅ இல்மா   (அறிவால் எப்படி நிரப்பப் பட்டுள்ளார்?) என்பார். (முஸ்தத்ரக் ஹாக்கிம், தபக்காத் இப்னு ஸஅத்) 

குர்ஆனிய அறிவிலும் குர்ஆனிய கல்வியிலும் அப்துல்லாஹ் சிறந்து விளங்கினார் என்பதற்கான சான்றிதழை அண்ணலார் கொடுத்திருக்கிறார்கள். குர்ஆனை நான்கு நபர்களிட மிருந்து கற்றுக் கொள்ளுங்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ் ஊத், ஸாலிம், முஆத் இப்னு ஜபல், உபை இப்னு கஅப் ஆகியோரே அந்நால்வர் (புகாரி)

source: https://www.facebook.com/syed.umari.7/posts/850784811792582?__tn__=K-R