Home இஸ்லாம் கட்டுரைகள் உலமாக்கள் ஒன்றிணைந்தால் சமுதாயம் சங்கமிக்கும்!
உலமாக்கள் ஒன்றிணைந்தால் சமுதாயம் சங்கமிக்கும்! PDF Print E-mail
Tuesday, 09 October 2018 08:49
Share

உலமாக்கள் ஒன்றிணைந்தால் சமுதாயம் சங்கமிக்கும்!

நேற்று ஓரிடத்திலும் இன்று இன்னோர் இடத்திலும், நாளை பிரிதோர் இடத்திலும் பெருநாள் கொண்டாடுவது என்பது சமுதாயம் எந்த அளவுக்கு பிளவுபட்டு நிற்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

பெருநாட்கள் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயம் தொடர்பான காரியமாக இருப்பதால் அது பற்றி இஸ்லாமிய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இஸ்லாமிய அரசு இல்லாத நாடுகளில் இத்தகைய பணிக்காக அரசாங்கத் தால் நியமிக்கப்பட்டுள்ள இஸ்லாமியத் துறைகளின் அறிவிப்புகளை ஏற்று அந்நாட்டு மக்கள் செயல்பட வேண்டும்.

அவ்வாறு அரசாங்கத்தால் எந்தத் துறையும் ஏற்படுத்தப்படாவிட்டால் அந்நாட்டு முஸ்லிம்கள் ஒன்றுகூடி இத்தகைய பணிக்காக ஒரு இஸ்லாமியத் துறையை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கு கட்டுப்பட்டு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இவ்வாறுதான் சவூதி அரேபிய அரசாங்க மார்க்கத் தீர்ப்பு கமிட்டியும் ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) வழங்கியுள்ளது.

பெருநாட்கள்தான் முஸ்லிம்களின் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்தும் அடையாளச் சின்னம்! ஊர் மக்கள் அனைவரும் தக்பீர் கூறியவர்களாக பெருநாள் திடலுக்குப் புறப்பட்டு, இபாதத்களை நிறைவேற்ற வேண்டும். தொழுகை கடமையிலிருந்து விதிவிலக்குப் பெற்ற மாதவிடாய் பெண்கள் உட்பட அனைவரும் பெருநாள் திடலுக்கு வர வேண்டும்.

திடலுக்குப் புறப்பட ஹிஜாப் ஆடை இல்லாத பெண்களுக்கு பிற பெண்கள் தங்களின் மேலதிக ஆடைகளை வழங்கியாவது அவர்களை திடலுக்கு அழைத்து வர வேண்டும். அங்கு மகிழ்ச்சியையும் பிரார்த்தனைகளையும் வாழ்த்துக்களையும் தங்களிடையே பரிமாறிக் கொள்ளவேண்டும்.

பெருநாள் தினத்தன்று முஸ்லிம் ஏழைகள் உணவின்றி கஷ்டப்படக் கூடாது என்பதற்காக பெருநாள் தொழுகைக்கு முன்னர் ஏழைகளின் உணவான ஃபித்ரா (பெருநாள் தர்மம்) வழங்க வேண்டும். பெருநாள் தினத்தன்று வீர விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்து, ஆண்களும் பெண்களும் கண்டு களித்திடலாம். நல்ல கருத்துள்ள பாடல்களை சிறார்கள் பாடக் கேட்டு மகிழ்ந்திடலாம். ஆனால் இவை யனைத்தும் பெருநாள் ஒரே நாளாக இருந்தால் தானே சாத்தியம்!

தங்களுக்கு சரியெனத் தோன்றும் நியாயமான காரணங்களால் நோன்பைத் துவங்குவதில் மாறு பட்டாலும் குறைந்த பட்சம் பெருநாளையாவது தமிழக முஸ்லிம்கள் அனைவரும் இணைந்து கொண்டாட வேண்டும் என்பதே ‘சமுதாய ஒற்றுமை’யின் வேண்டுகோள்!

ஹதீஸ்கலையின் சமகால வல்லுனராகத் திகழ்ந்த இமாம் ஷேக் அல்பானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தமாமுல் மின்னா என்ற தமது நூலில் சமுதாயத்துடன் ஒன்றிணைந்து செயல்படுவதையே வலியுறுத்தியுள்ளார்கள்.

இன்று உலகம் முழுவதும் இஸ்லாமிய அறிஞர்களிடம் பிறை ஓர் ஆய்வுப் பொருளாக மாறியுள்ளது. ஆய்வுக்குத் தகுதியான கல்வியாளர்கள், அல்லாஹ்வுக்குப் பயந்து, மார்க்க வரையறையை பேணி ஆய்வு செய்வதை மார்க்கம் வரவேற்கிறது. அவைகள் ஆரோக்கியமான நடையில் அமைய வேண்டும் என எதிர்பார்ப்பது போன்று ஒருவர் மற்றவரையோ, அவர்களின் ஆய்வையோ தரக் குறைவாக விமர்சிப்பதையும் மார்க்கம் தடுக்கிறது.

பெருநாள் பிரச்சனையின் முக்கியக் காரணங்களில் ஒன்றான பிறைக் காலண்டரை பிழை திருத்தம் செய்யும் முயற்சியில் பொதுமக்களில் சிலர் இறங்கியுள்ளனர். நிச்சயமாக இது பொதுமக்கள் கையில் எடுக்கும் பணியல்ல. முஸ்லிம் சமூகத் தலைமையின் பணி.

எனவே தலைமை காஜி அவர்களும் ஜமாஅத்துல் உலமா சபையினரும் மார்க்க அறிஞர்களும் சமுதாயத் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் முஸ்லிம் இயக்கத் தலைவர்களும் காலண்டர் துறைசார்ந்த அறிஞர்களும் தாமதமின்றி களமிறங்கவேண்டும். சரியான பிறை காலண்டரை முஸ்லிம் உம்மத்திற்கு தரவேண்டும்.

முஸ்லிம் சமுதாயம் தீர்வு காணவேண்டிய முக்கியத் தகவல்களை மூத்த மார்க்க அறிஞர்களிடம் கலந்தாலோசித்து, அவர்களின் மேலான கருத்துக்களை காய்தல் உவத்தல் இன்றி, சமுதாய ஒற்றுமை கருதி பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

source: http://www.samuthayaotrumai.com/?p=194