Home இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் இஸ்லாமும் இயற்கையும்
இஸ்லாமும் இயற்கையும் PDF Print E-mail
Thursday, 27 September 2018 07:15
Share

இஸ்லாமும் இயற்கையும்

[ இயற்கை என்பது இறைவனால் உருவாக்கப்பட்டது, வளப்படுத்தப்பட்டது, அவனே அதனை அறிந்தவனாகவும், அதனுடன் நெருங்கிய தொடர்புள்ளவனாகவும், தொடர்ச்சியாக அவற்றை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனாகவும்  இருக்கிறான்.   

 இன்னும் மிகச் சிறிய அணுத்துகளிலிருந்து இன்னும் மிகப் பிரம்மாண்டமானவைகளான கோள்கள் அனைத்தையும் அவனே உருவாக்கி, படைத்து, பரிபாளித்து வருவதோடு, அவற்றை அவன் முற்றிலும் அறிந்தவாக இருக்கின்றான். இவை அனைத்தும் இறைவனது ஒருங்கிணைந்த சட்ட திட்டங்களைப் பின்பற்றுகின்றன, நடைமுறைப்படுத்துகின்றன, வரம்பு மீறாது நடந்து கொள்கின்றன.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயன்பாட்டிற்காகப் படைக்கப்பட்டுள்ளது, எனவே அவற்றிற்குரிய பங்களிப்பு உண்டு, அது படைக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஏனைய படைப்பினங்களுடன் இயைந்து தன்னுடைய பணியையும் குறிப்பிட்ட தனக்கேயுரிய பாணியில் பணியாற்றுகின்றது, இவை அனைத்தையும் சூழ்ந்தறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இறைவன் இருக்கின்றான்.

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றன, சேவையாற்றுகின்றன, இன்னும் அவனைப் புகழ்கின்றன, அவை அவை அவற்றிற்கு உரிய பாதையில் பயணிக்கின்றன.]

 இஸ்லாமும் இயற்கையும்

இயற்கையானதும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததுமானதொரு சட்டம் எங்கிருக்கின்றது என்று தேடுபவர்களா நீங்கள்?

மனிதர்கள், விலங்கினங்கள், தாவரங்கள், செடி கொடிகள், நிலம், நீர் இன்னும் முழு உலகத்தையும் பாதுகாக்கக் கூடிய சட்டம் ஒன்று தேவை என்பதை உணர்ந்தவர்களா நீங்கள்?

நிச்சயமாக.., அது உங்களுக்கு அருகாமையிலேயே இருக்கின்றது..! இஸ்லாம்.. தூய்மையானது, இயற்கையானது இன்னும் சுற்றுச்சூழலுக்கு நண்பன் போன்றது..! எப்படி என்கிறீர்களா.. மேலே படியுங்கள்..!

இயற்கைச் சட்டங்கள் என்றால் என்ன?

இயற்கைச் சட்டங்கள் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு இயற்கையைச் சற்று நோட்டமிட்டாலும் போதும்.., சிறிது உங்களுக்கு அதன் சட்டங்களை விளக்கப்படுத்தும். இருப்பினும், இயற்கையை ஆய்வு செய்வதனால் மட்டும் ஒருவருக்கு அதன் சட்டங்கள் இன்னதென்ற உண்மையை முழுமையாக உணர்த்தி விடாது.

மனிதனும் கூட இயற்கையைப் பற்றி பல்வேறு ஆய்வுகளை வெளியிட்டுள்ளான். ஆனால் மனிதன் தான் இயற்கையிலிருந்து எதனைக் கற்றுக் கொண்டானோ அதனை உலகுக்கு அறிவித்துக் கொடுப்பதில் தங்களுக்குள்ளேயே பல்வேறு முரண்பாடுகளுடனேயே அதனை அறிவித்துக் கொடுத்தான்.

அவர்களது புலனுக்கு உட்பட்டு உணர்ந்த வகையில் கூட அவர்களால் அதனை உண்மையான வடிவில் அறிந்து கொள்ள இயலவில்லை. எனவே அவர்களுக்கு இன்னும் அது குறித்து அறிந்து கொள்வதற்கு அதிகப்படியான கல்வி ஞானம் மற்றும் ஆதாரங்கள் தேவைப்படுகின்றது, இன்னும் அதனைக் கொண்டு எது சரி, எது தவறு என்பதைத் தீர்மானிக்க வேண்டியதிருக்கின்றது.

திருமறைக் குர்ஆனானது தன்னை அறிவுப் பெட்டகமாகவும், இன்னும் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டியதொன்றாகவும் தன்னைப் பிரகடனப்படுத்துகின்றது, இன்னும் அதனைப் பின்பற்றுவதே மிகச் சரியான மற்றும் முழுமையான வழிகாட்டி என்பதையும், இன்னும் மனித குலத்திற்கு தன்னை ஒரு அருட்கொடை என்றும், இறைவனுடைய தூதாகிய இந்தத் திருமறைக் குர்ஆனை இதற்கு முன் வாழ்ந்து மறைந்து போன தூதர்கள் அனைவரும் உறுதிப்படுத்தியதோடு, அவ்வாறு உறுதிப்படுத்தியவர்களில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டும் இருக்கவில்லை, மாறாக, ஆப்ரஹாம் என்ற இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம், மோஸே என்ற மூஸா அலைஹிஸ்ஸலாம் மற்றும் ஜீஸஸ் என்ற ஈஸா அலைஹிஸ்ஸலாம் ஆகியோர்களும் அதில் அடங்குவர்.

இன்னும் திருமறைக் குர்ஆனானது தன்னை 'சத்திய வேதம்' என்றழைத்துக் கொள்வதோடு, இறைவன் எவ்வாறு அதனை அருள் செய்தானோ அவ்வாறு எந்தவித கூட்டல், கழித்தல்கள் இல்லாமல் பாதுகாக்கப்பட்டு வருவதோடு, மக்களைப் பார்த்து இது போன்றதொரு குர்ஆனை நீங்கள் உருவாக்கிக் காட்டுங்கள் பார்ப்போம் என்று சாவல் விடுவதோடு, அவ்வாறு இயலாது என்பதையும் அது நிரூபித்துக் கொண்டிருக்கின்றது.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனக்குக் கிடைத்த வழிகாட்டுதல்களைத் தானே பின்பற்றி வாழ்ந்து காட்டினார், இன்னும் அவர்களை ஆயிரக்கணக்கான அவர்களது தோழர்களும் முன்னுதாரணமாகக் கொண்டு பின்பற்றினார்கள், அல்லது அவரது சுன்னாவைப் பின்பற்றினார்கள், அதனை அவரது வாழ்நாளிலேயே அவரிடமே கற்றுக் கொண்டு அவரைப் போல வாழ்வதற்கு முயற்சித்தார்கள். இன்னும் அந்தத் தூதர் வாழ்ந்து மறைந்து இப்பொழுது 1400 ஆண்டுகள் ஆகி விட்டதன் பின்னரும், மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் அவர் வழங்கிய திருமறைக் குர்ஆனைப் பின்பற்றுவதோடு, அவரது வாழ்வியலான சுன்னாவையும் பற்றிப் பிடித்து வாழ்ந்து வருவதைப் பார்க்கின்றோம்.

திருமறைக் குர்ஆனும், இன்னும் சுன்னாவும் இந்த உலக வாழ்க்கைத் தேவைக்குரிய அத்தனை சட்டங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது, இன்னும் புதுப் புதுப் பிரச்னைகள் முஸ்லிம் சமூகத்தில் தளைக்கும் பொழுது, அதனைக் குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஆய்வு செய்து அதனை எவ்வாறு எதிர்கொள்வது.

இன்னும் அதில் சத்தியம் எது அசத்தியம் எது என்பதை அரிதியிட்டுக் கூறுவதற்காக உலமாக்கள் என்றழைக்கப்படக் கூடிய இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் ஒன்று கூடி கலந்தாலோசனை செய்து இந்த இஸ்லாமிய சமூகத்திற்கு வழிகாட்டக் கூடிய விளக்காக இருக்கின்றார்கள் என்பதையும் நாம் கண்டு வருகின்றோம். தவறான சட்டத்தின் அடிப்படையில் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடாது என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது சமூகத்திற்கு அறிவுரை பகர்ந்து விட்டுச் சென்றிருக்கின்றார்கள்.

இந்த வகையில் 'சுற்றுச்சூழ்நிலையியல் நிர்வாகம்' குறித்து இஸ்லாமியச் சட்டங்கள் என்ன கூறுகின்றன? என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

இஸ்லாமிய நடைமுறைகள் :

அனைத்து சொல்லும், செயலும் சரியான புரிந்துணர்வின் அடிப்பiயில், சத்தியம் என்றால் என்ன என்பது உண்மையினை அடித்தளமாகக் கொண்டும், இன்னும் கவனமான சிந்தித்துணர்வின் அடிப்படையிலும் இருக்க வேண்டும். செயல்கள் எப்பொழுதும் கண்மூடித்தனமான கொள்கை மற்றும் நடைமுறைகளைக் கொண்டதாக இருக்கக் கூடாது.

மக்கள் சொன்னார்கள் என்றோ இன்னும் குடும்பம், ஆன்மீகத் தலைவர், கணவன், மனைவி, முதலாளி, புனிதமிக்கவர்கள் எனக் கருதக் கூடியவர்கள், ஆசிரியர்கள், ஆட்சியாளர்கள், மீடியா, சொந்த விருப்பு வெறுப்புகள், அல்லது தனிப்பட்ட உணர்வுகள் ஆகியவற்றைப் பின்பற்றுதல் கூடாது.

இவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் சிந்திப்பதற்கு மட்டுமே சக்தி வழங்கப்பட்டவர்கள், தவழிழைத்து விடக் கூடியவர்களாக, சுயநலமிக்கவர்களாக, இன்னும் தீயகுணங்களைக் கொண்டவர்களாக இருந்து விடக் கூடும். இத்தகையவர்களைப் பின்பற்றுவது என்பது மனித இன நலன் மற்றும் சூழ்நிலையியலில் தாக்கத்தை ஏற்படுத்தி விடக் கூடும்.

உதாரணமாக, இன்றைக்கு மிகப் பெரிய கம்பெனிகள் தங்களது கழிவுகளை மக்கள் வசிக்கும் பகுதிகளில் கொட்டி விடுவதைப் பார்க்கின்றோம், ஏனென்றால் அதனைப் பாதுகாப்பது மற்றும் அதனைச் செயலிழக்கச் செய்வதற்கு அவர்களுக்கு மிகப் பெரிய செலவாகும்.

மனித குலத்திற்கு பயன் விளைவிப்பது என்பதை எவ்வாறு கணக்கிடுவது என்றால், பயன்பாட்டுக்கும் இன்னும் தீங்கு விழைவிப்பதற்கும் இடைப்பட்ட உறவின் தன்மையைப் பொறுத்துத் தான் இருக்கின்றது. பயன்பாடுகளும், தீங்குகளும், இஸ்லாமிய சட்டவியல் அடிப்படையில், இன்னும் சரியான ஆதாரங்களின் அடிப்படையில், அதனை மிகவும் கவனமாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்த அணுகுமுறையைக் கொண்டே புதிய, சிக்கலான சூழ்நிலைகளையும், தொழிற்கண்டுபிடிப்புகளையும், இன்னும் அணுச் சக்தியையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டிருக்கின்றானோ அதனைப் போல இறைவனால் படைக்கப்பட்ட அத்தனை அம்சங்களிலும், மனிதன் தன்னுடைய கையை நுழைத்து அதில் மாற்றத்தை உண்டாக்கலாகாது.

எனவே, இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது உங்களது பார்வையை உறுதியான முறையில் சத்தியத்தின் பக்கம் செலுத்துவதற்குத் தயார்படுத்துவது தான். இறைவன் எவ்வாறு இந்த உலகத்தினையும், அதில் உள்ள ஜீவராசிகளையும் படைத்துள்ளானோ அதன்படியே அதனை விட்டு வைப்பது. இறைவனின் தண்டனையிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காக அதில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் இருப்பது. இதுவே சரியானதொரு மார்க்கத்திற்கான அணுகுமுறையாகும். ஆனால் மனித வர்க்கத்தினர் அனைவரும் இதனைப் புரிந்து கொண்டார்களில்லை. இதனைத் திருமறைக் குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.

ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். (அல்குர்ஆன் 30:30)

இன்றைக்கு மரபியல் சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகள், இதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை கண்டுபிடிப்பதும், அதனைப் பயன்படுத்துவதும் ஆகுமானதா என்பதைத் தீர்மானிப்பதற்கும் உதவுவதோடு, இன்னும் இன்றைக்கு புத்தம் புதிய உயிரினங்களைக் கண்டுபிடித்து, இதுவரைக்கும் அந்த நாடுகளில் வாழாத அந்த உயிரினங்களை அங்குள்ள வளிமண்டலத்தில் உலவ விடும் போக்கு பல்வேறு நாடுகளில் காணப்படுகின்றது,

இவ்வாறு செய்வது கூடுமா கூடாதா என்பதைப் பற்றியும் ஆய்வு செய்வதற்கும் இது துணை புரியும். எங்கு இவ்வாறான இயற்கைக்கு மாறான போக்கு காணப்படுகின்றதோ, அங்கு கடுமையான அழிவுகளே விளைவுகளாகிப் போனதை நாம் கண்கூடாகக் காண முடிகின்றது, முயல்களினால் பிளேக் நோய்கள் பரவுகின்றன, கரும்புகளில் தவளைப் பிரட்டைகள் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன, அமெரிக்காவில் கொலைகார வண்டுகள் வட்டமிடுகின்றன என்பன போன்ற பல்வேறு பேரழிவுகள் சூழ்நிலை இயலில் அழிவை ஏற்படுத்தி வருவதைக் காண்கின்றோம்.

இவை அனைத்திலும் நடுநிலையான போக்கும், இன்னும் நவீனத்துவத்தையும் கடைபிடிக்க வேண்டியதிருக்கின்றது.

மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான். நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக. ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலைநிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள். (அல்குர்ஆன் 55:7-9)

சுயக் கட்டுப்பாடு, மற்றும் வரம்பு மீறாதிருத்தல் - கட்டுப்படுத்த இயலாத முதலாளித்துவம் போன்றோ மற்றும் திறந்த வணிக அமைப்பு போன்றோ, இன்னும் அடக்குமுறை ஆட்சியாளர்கள் போன்றும் வேண்டாம், இந்தப் பூமியிலிருந்து அனைத்தையும் உறிஞ்சிக் கொண்டு அதற்குப் பிரதியீடாக எதனையும் கொடுக்காமல் இருப்பது போன்றும் வேண்டாம், காட்டில் விளையும் விலையுயர்ந்த மரங்களை வெட்டிக் கொள்கின்றோம், ஆனால் வெட்டிய இடங்களில் ஒரு மர விதையை நடவோ அல்லது மீண்டும் அந்த இடத்தில் இன்னொரு செடி முளைக்க வைக்கவோ நாம் முயலுவதில்லை, இத்தகைய சுயநலப் போக்கு இருக்கக் கூடாது.

இவ்வாறான வாழ்கைக்கு அழிவு தான். ஒரு மனிதனை வாழ வைப்பது என்பது முழு மனித சமூகத்தையும் வாழ வைப்பது போன்றது, எவரொருவர் ஒரு மனிதனைக் கொலை செய்கின்றாரோ அவர் முழு மனித சமூகத்தையும் கொலை செய்தவர் போலாவார்.

விலங்கினங்களின் உடலியல், உணர்வுகள் மற்றும் மனோ ரீதியாக அவை பாதிப்படைவதிலிருந்தும், அத்தகைய பாதிப்பு ஏற்படுவதிலிருந்தும் குறைக்க முயற்சிக்க வேண்டும். தேவயைற்ற முறையில் தாவரங்களை, மரங்களை அழிப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும், உதாரணமாக போர்களின் போது அல்லது விலங்கினங்களை உணவுக்காக பயன்படுத்தும் போதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவைகள்.

மறுசுழற்சியின் மூலமாக சூழ்நிலைக்கும் மற்றும் வாழும் உயினங்களுக்கும், மனிதர்கள் உள்ளிட்டவர்களுக்கும் ஆபத்துக்கள் விளைவிப்பதிலிருந்தும் குறைகிறதோ, அத்தகைய செயல்பாடுகள் இஸ்லாமியச் சட்டங்களுக்கு உகந்தவையாகும். இன்னும் இஸ்லாமிய சட்ட அடிப்படையின்படி, எந்தவொரு பொருளையும் தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொண்டு விரையமாக்கக் கூடாது', மறுசுழற்சி என்பது நடக்காது போனால் இந்தப் பூமிப் பரப்பெங்கும் குப்பையும் கூழமாகவும் தான் காட்சியளிக்கும்,

இன்னும் அதிகமாகச் சொல்ல வேண்டுமென்றால் அழுகி மக்காத குப்பைக் கூழங்களிலிருந்து வெளியாகும் கெட்ட நச்சு வாயுக்கள், உதாரணமாக பேட்டரிகள், பிளாஸ்டிக் பொருட்கள், எளிதில் பற்றக் கூடிய வாயுக்கள் போன்றவற்றை ஒரு இடத்தில் கொட்டி தேக்கி வைக்கும் பொழுது, அதிலிருந்து வெளியாகக் கூடிய 'மீத்தேன்' என்ற நச்சு வாயு மனித இனத்திற்குக் கேடு விளைவிப்பதாக இருக்கின்றது.

முறைப்படுத்தப்படாத கழிவு நீர் நிலத்தில் பாய்ந்து, அங்கு நச்சு வாயுக்களையும், தீங்கு பயக்கக் கூடிய அமிலத் தன்மையையும் சுரப்பதால், அந்த நிலம் விவசாயப் பயன்பாட்டுக்கு லாயக்கற்றதாக மாறி விடுகின்றது. இந்த நிலை தொடருமானால், விவசாயத்திற்கு உகந்த நிலம் இந்த பூமியில் இருப்பதே அரிதாகி விடும்.

இன்னும், உபயோகத்தில் இல்லாத பிளாஸ்டிக், ரப்பர் போன்ற பொருட்களை எரிப்பதன் மூலமாக காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு (கரியமில வாயு) கலந்து, வாயு மண்டலத்தையே பாதிக்கின்றது, ஓசோன் படலத்தில் ஓட்டையை ஏற்படுத்துகின்றது. இதன் பொருட்டு இப்பொழுது உலக அளவில் இதற்கு எதிராக எச்சரிக்கைக் குரல்கள் எழுந்துள்ளன. இந்த நிலை பன்னெடுங்காலமாகத் தொடர்வதால், இந்த உலகத்தில் வாழ்ந்த எத்தனையோ விலங்கினங்கள், பறவைகள், தாவர இனங்கள் மாறுபட்ட சூழ்நிலையில் வாழ இயலாமல் மடிந்து போய் விட்டன என்பதை விஞ்ஞானம் உறுதிப்படுத்தி இருக்கின்றது.

அவை யாவும் மனித இன நலத்துக்கு தொடர்புடையவை, அவை வாழும் சூழலில், வளி மண்டலம், நிலம், நீர், காடுகள் போன்றவற்றில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் தான் அவற்றின் அழிவுக்குக் காரணமாகின, அதன் மூலம் மனிதனும் கூட அபாயத்தின் விளிம்பில் இருக்கின்றான் என்பதை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.

எனவே, இஸ்லாமானது மனித இனத்திற்கு கேடு விளைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காக மறுசுழற்சி முறையை ஊக்கப்படுத்துகின்றது, இன்றைய உலகில் அடுப்பங்கரையில் கழிக்கப்படும் பொருட்களை மறுசுழற்சி முறையில் உரமாக்குவதற்கும், கண்ணாடி, பேப்பர், அட்டைகள், உலோகப் பொருட்கள், எண்ணெய், துணி, புத்தகங்கள், வீட்டுச் சாமான்கள், மேஜை நாற்காலி போன்றவைகள், பேட்டரிகள், டிவி, கம்ப்யூட்டர் பாகங்கள், மற்றும் பல்வேறு பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை மறுசுழற்சிக்கு உட்படுத்தி அவற்றை மீண்டும் மனிதப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முனைப்புக் காட்டப்படுகின்றது.

இவ்வாறான மறுசுழற்சி முறை சரியான முறையில் கடைபிடிக்கப்படுமானால், நம்முடைய வளிமண்டலம், காற்று, மண் போன்றவை ஆரோக்யமாக இருக்கும், ஆரோக்கியமான வளிமண்டலம், ஆரோக்கியமான நீர், காற்று ஆகியவற்றில் வாழும் மனிதனும் ஆரோக்கியத்துடன் வாழ வழி ஏற்படும்.

இங்கு சுதந்திரமான உணர்வுகள், மற்றும் நம்பிக்கைள் இருப்பதோடு, பேச்சுரிமையைப் பயன்படுத்துவது, வாழ்க்கை, கௌரவம் மற்றும் அனைவரது சொத்துக்களையும் பாதுகாப்பதாகவும் இருக்க வேண்டும். இவற்றுக்கு ஏற்படுத்தப்படும் கெடுதிகளும் மட்டுப்படுத்தப்பட அல்லது குறைக்கப்பட வேண்டும், இன்னும் சூழ்நிலை மற்றும் தேவை என்பனவற்றைப் பொறுத்து அதனைப் பயன்படுத்தும் அலகுகள் மாறுபடும், ஒரு மனிதனுக்கும் பிரிதொரு மனிதனுக்கும் இடையே வித்தியாசம் ஏற்படும், இது தவிர்க்க இயலாதது.

வரம்பு மீறுதல் இருக்கக் கூடாது, உதாரணமாக, தனியார் ஆதிக்கம், அதிகப்படியான லாபம் அல்லது வட்டியை அமுல்படுத்துதல் கூடாது. கட்டிடங்கள், அல்லது நிலங்கள் ஆகியவற்றில் தங்களது முதலீடுகளை இருப்பாக வைக்கவோ அல்லது சொத்தக்களாகவோ வாங்கி அவற்றைப் பயன்படுத்தாது, சந்தை நிலவரம் உயரும் என்ற எதிர்பார்ப்புடன், விலையேற்றத்திற்காகக் காத்திருப்பதும் விலையேறியதுடன் அவற்றை விற்பதும் கூடாது, இத்தைகய நிர்ணயமற்ற, எதிர்பார்ப்புடன் கூடியவற்றில் பணத்தை முடக்கக் கூடாது.

இதனை இஸ்லாம் சூதாட்டம் என்கிறது. இதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. இவ்வாறான நடவடிக்கைகளில் சமூகத்தில் ஒரு சாராரிடம் மட்டுமே பணப்புழக்கத்தை ஏற்படுத்துவதோடு, சமூகத்தில் ஏழை பணக்காரர்களுக்கிடையே உள்ள வித்தியாசத்தை அதிகப்படுத்திக் காட்டுவதாக அமைந்து விடும், பொருளாதாரமானது சுயமாகச் சுற்றி வராமல் ஒரு சாராரது கட்டுப்பாட்டுக்குள் முடங்கி விடக் கூடியதாகி விடும்.

உழைப்பின் மூலமாக ஒருவர் தன்னுடைய சொத்துக்களை அதிகப்படுத்திக் கொள்ள இஸ்லாம் ஊக்குவிக்கின்றது, வளத்தைப் பகிர்ந்து அதன் மூலம் பிறரும் பயனடையச் செய்வது நன்மை பயப்பதாகும், அதனை சரியான விகிதத்தில் முறையாக வழங்கும் பொழுது பயன்பாடுகள் இன்னும் அதிகரிக்கும். இதன் நோக்கம் என்னவெனில் பணக்காரருக்கும் ஏழைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதேயாகும்.

இன்றைக்கு மழையை உருவாக்கும் காட்டு வளங்கள் இன்றைக்கு குறைந்து போனதற்குக் காரணம், உலக வங்கி மற்றம் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றில் பெற்ற கடனை அடைப்பதற்காக, அல்லது வட்டி கட்டுவதற்காக பல்வேறு நாடுகள் தங்கள் காட்டு வளங்களை அழித்து வருகின்றன. வறுமையும், தட்டுப்பாடுகளும் குற்றச் செயல்களை அதிகரித்து வருகின்றன.

வளங்கள் யாவும் தேவைக்குத் தகுந்தாற் போல பங்கீடு செய்யப்பட வேண்டும். உதாரணமாக, தண்ணீர், உணவு, மற்றும் நிலம் மற்றும் ஊதியம் போன்ற யாவும் ஒரு குடும்பத்தின் சாராசரித் தேவையை நிறைவு செய்வதாக இருத்தல் வேண்டும். முறையான தான தர்மங்கள், பரந்த மனப்பான்மையுடன் கூடிய உதவிகள், சுய அர்பணிப்பு ஆகியவற்றைப் புரியும்படி அனைவரையும் ஊக்கப்படுத்துதல் வேண்டும்,

இன்னும் ஒருவர் சொந்தமாக்கிக் கொண்டிருக்கும் தன்னுடைய வளத்தில் இருந்து முறையாக நெறிப்படுத்தப்பட்ட வகையில் எல்லோரும் அதனை எளிதாகக் கடைபிடிக்கும் வகையில், ஆண்டொன்றுக்கு 2.5 சதவீதத்தை ஏழைகளுக்கு தானமாக வழங்கிடல் வேண்டும், மேலும் அதிகப்படியான செல்வம் என்பது என்னவென்பது வரையறைப்படுத்தப்பட்டுள்ளது.

இன்னும் மிதமிஞ்சிய வகையிலும் செல்வங்கள் விரையமாக்கப்படக் கூடாது. உதாரணமாக, ஆடம்பர வாழ்க்கைக்காக மிதமிஞ்சிய அளவில் பணத்தை விரையமாக்குவது, உபயோகப்படுத்தாமல் உணவுப் பொருட்களை குப்பையில் வீசி எறிவது, அதிகப்படியாகச் சமைத்து அவற்றை விரையமாக்குவது, தேவைக்கு அதிகமாகத் தண்ணீரை உபயோகப்படுத்துவது, இன்னும் இது போன்றவற்றை ஒருவரது தேவைக்கு அதிகமாகவே பயன்படுத்துவதைக் குறிக்கும்.

உபயோகத்தில் உள்ள பொருட்கள் கெட்டு விட்டாலோ அல்லது உபயோகத்தில் உள்ள துணிகள் கிழிந்து விட்டாலோ அவற்றைச் சீர் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வராததன் மூலமும் நாம் வளத்தை விரையம் செய்கின்றோம்.

வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 6:141)

மனிதன்.. அவனுக்கு விதிக்கப்பட்டதேயன்றி வேறொன்றும் அவனுக்குக் கிடைத்து விடாது. சுகத்தையும், நலத்தையும் பாதுகாப்பது என்பது எளிதான காரியமல்ல, இதற்கான முறையான உழைப்பு தேவையாக இருக்கின்றது, படைத்த இறைவனின் திருப்பொருத்தத்திற்காக வேண்டி பணியாற்ற வேண்டியதிருக்கின்றது, மனித நலத்துக்கு எதிராகத் திரண்டிருக்கும் சக்திகளின் அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாது இவற்றுக்காக உழைக்க வேண்டியுள்ளது.

சொல்வதற்கு அனைத்துமே எளிதாகவே இருக்கும், ஆனால் அவற்றைப் பின்பற்றுவதற்கு மக்களை எவ்வாறு தயார்படுத்துவது?

முதலாவதாக, இஸ்லாம் என்பது மனிதர்கள் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றப்படும் மார்க்கமல்ல, எனவே மக்களின் இதயத்தோடும், சிந்தனையோடும் அதனை ஒன்றிணைக்க வேண்டியதிருக்கின்றது, இந்த இரண்டைக் கொண்டும் இஸ்லாம் சரியான மார்க்கம் தானா அல்லது வழிமுறை தானா என்பதில் அவை கருத்தொற்றுமை காண வேண்டியதிருக்கின்றது, ஆதாரங்களின் அடிப்படையிலும், சரியான காரணங்களின் அடிப்படையில் குர்ஆன் மிகத் தெளிவாகவே பிரகடனப்படுத்துகின்றது,

''நிச்சயமாக இறைவனது வார்த்தையானது சத்தியமானது, இன்னும் முஹம்மது  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் இறுதித் தூதராகவும் இருக்கின்றார்கள்'' என்று தௌ;ளத் தெளிவாகவே அறிவிக்கின்றது. எப்பொழுது ஒருவர் இதனை ஏற்றுக் கொண்டு விட்டாரோ, அப்பொழுது அவர் இறைநம்பிக்கை கொண்டவராக ஆகி விடுவதோடு, இன்னும் அவரது நம்பிக்கையானது உணர்ச்சி வசப்பட்டதன் காரணமாக எடுக்கப்பட்ட முடிவாக இல்லாமல், அதுவே அவர் ஏற்றுப் பின்பற்றவிருக்கும் மார்க்கத்திற்கான அடிப்படையாகவும் அது அமைந்து விட வேண்டும்.

எனவே, ஒரு மனிதன் இறைநம்பிக்கை கொண்டு விட்;டதன் பின்பு, இஸ்லாத்திற்கு அடி எடுத்து வைத்து விட்டதன் பின்பு, அவரது வாழ்க்கையை முற்றிலும் மாறியதொரு வாழ்க்கைப் போக்காக மாறி விடுவதைக் காண முடிகின்றது. முதலாவதாக இயற்கை குறித்த அவரது பார்வை அல்லது கருத்து இன்னும் அது குறித்த நோக்கங்களில் அவருக்கு ஏற்பட்ட தாக்கமானது, அவரது பொதுவான பண்புகளில் முக்கியமானதொரு மாற்றத்தை உருவாக்கி விடுகின்றது.


இயற்கை குறித்த இஸ்லாமியப் பார்வை

இயற்கை என்பது இறைவனால் உருவாக்கப்பட்டது, வளப்படுத்தப்பட்டது, அவனே அதனை அறிந்தவனாகவும், அதனுடன் நெருங்கிய தொடர்புள்ளவனாகவும், தொடர்ச்சியாக அவற்றை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனாகவும், இன்னும் மிகச் சிறிய அணுத்துகளிலிருந்து இன்னும் மிகப் பிரம்மாண்டமானவைகளான கோள்கள் அனைத்தையும் அவனே உருவாக்கி, படைத்து, பரிபாளித்து வருவதோடு, அவற்றை அவன் முற்றிலும் அறிந்தவாக இருக்கின்றான். இவை அனைத்தும் இறைவனது ஒருங்கிணைந்த சட்ட திட்டங்களைப் பின்பற்றுகின்றன, நடைமுறைப்படுத்துகின்றன, வரம்பு மீறாது நடந்து கொள்கின்றன.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயன்பாட்டிற்காகப் படைக்கப்பட்டுள்ளது, எனவே அவற்றிற்குரிய பங்களிப்பு உண்டு, அது படைக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஏனைய படைப்பினங்களுடன் இயைந்து தன்னுடைய பணியையும் குறிப்பிட்ட தனக்கேயுரிய பாணியில் பணியாற்றுகின்றது, இவை அனைத்தையும் சூழ்ந்தறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இறைவன் இருக்கின்றான். இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றன, சேவையாற்றுகின்றன, இன்னும் அவனைப் புகழ்கின்றன, அவை அவை அவற்றிற்கு உரிய பாதையில் பயணிக்கின்றன.

பூமி படைக்கப்பட்டது யாருக்காக?

இந்தப் பூமிப் பந்தானது மனிதனுக்காக மட்டுமே படைக்கப்படவில்லை, மாறாக அனைத்து ஜீவராசிகளுக்காகவும் படைக்கப்பட்டது. விலங்கினங்களும் மனிதனைப் போலவே சமூக கூட்டமைப்புடன் தான் வாழுகின்றன.

இந்த பூமியில் நடமாடுகின்ற விலங்கினங்களும், சிறகடித்துப் பறக்கின்ற வண்டினங்களும் கூட மனிதர்களைப் போல சமூக கட்டமைப்புடன் வாழக் கூடியவைகளே.

பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும். (6:38)

இறைவன் தன்னுடைய கட்டளைப் பிரகாரம் அனைத்து ஜீவராசிகளுக்கும் வாழ்வாதாரத்தை வழங்கி இருக்கின்றான், அவற்றிற்கு உரிய அறிவை வழங்கி இருக்கின்றான், இன்னும் அவை எதற்காக வாழ வேண்டும் என்பதனையும் அதற்கு உணர்த்தி இருக்கின்றான். இன்னும் அவற்றில் ஏராளமானவை மிக நீண்ட காலங்களாக இந்த உலகத்தில் வாழ இயலவில்லை எனினும், அவற்றைப் பற்றி இங்கு குறிப்பிடப்படவில்லை எனினும், மனிதனைப் பொறுத்தவரை இறைவனது படைப்பினங்களிலேயே மிகச் சிறந்த படைப்பாக இருக்கின்றான், அதன் மூலம் அவனை அல்லாஹ் கௌரவப்படுத்தி இருக்கின்றான், தன்னுடைய படைப்பினங்களில் ஓர் அங்கமாகவும் ஆக்கி வைத்திருக்கின்றான்.


மனிதனைப் பற்றி இறைவன் என்ன கூறுகின்றான்?

இறைவனது படைப்பினங்கள் அனைத்திற்கும் ஒவ்வொரு பொறுப்பிருக்கின்றது, அவை இறைவனது சட்டத்திற்கு விரும்பியும், அதனை குறிக்கோளாகவும் கொண்டும், சொல்லாலும், செயலாலும் கட்டுப்பட்டு நடக்கின்றன, ஆனால் மற்ற உயிரினங்கள் எவ்வாறு இறைவனது கட்டளைகளுக்கு முழு சம்மதத்துடன் அடிபணிந்து வாழ்கின்றனவோ, அதைப் போலல்லாது அல்லது இவ்வாறு நடப்பதிலிருந்து இறைவன் மனிதனுக்கு சில சுதந்திரமான தேர்வுகளை வழங்கியுள்ளான். அவன் அதனை ஏற்றுக் கொண்டு தான் படைக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு, சில விதிவிலக்குகளையும் வழங்கியுள்ளான்.

ஏனைய ஜீவராசிகள் விரும்பினாலும் சரி அல்லது அவை விரும்பா விட்டாலும் சரி அவற்றின் அவையங்கள் யாவும் இறைக் கட்டளைக்கு அடிபணிந்து விடுகின்றன. ஆனால், இவ்வாறு அடிபணிவதனின்றும் மனிதனுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டதன் நோக்கமே, மனிதன் இறைவனது கட்டளைகளுக்கு அடிபணிகின்றானா அல்லது அடிபணிய மறுக்கின்றானா என்று அவனைப் பரிசோதிக்க வேண்டும் என்ற இறை விருப்பமேயாகும். அவன் இறைவனது கட்டளைகளுக்கு அடிபணிய விரும்புகின்றான் எனில், இந்த பூமிப் பந்திற்கான பிரதிநிதி, பாதுகாவலன், நலஆர்வலன் என்ற அடிப்படையில் அதன் மீது தனக்கு இருக்கும் பொறுப்புகளை அவன் தவறாது நிறைவேற்றக் கூடியவனாக ஆகி விட வேண்டும்.

மனிதர்கள் பூமியின் பிரதிநிதிகள் அல்லது பாதுகாவலர்கள்

இறைவனது கட்டளைகளைச் சிரமேற்று, இந்தப் பூமிப் பந்தைப் பாதுகாக்கும் பொறுப்பிற்கான தன்னுடைய பிரதிநிதியாக, முழு உலகையும் படைத்துப் பரிவக்குப்படுத்தி, வாழ்வாதரங்களை வழங்கி வரும் இறைவன் மனிதனை நியமித்திருக்கின்றான். இறைவனது ஏனைய படைப்புகளான தாவரங்களும், விலங்கினங்களும் மனிதனின் உபயோகத்திற்காக, அவனது கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளது, இன்னும் அதனைப் பயன்படுத்துவதில் தன்னிச்சையான போக்கு இல்லாமல், இறைவனது வரையறைகள் பேணப்பட வேண்டும் என்பதை அவன் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான் - நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன். மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடயவன். (அல்குர்ஆன் 6:165)

பல்வேறு சந்தர்ப்பங்களில், தான் விசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டோம் என்பதையிட்டு அநீதி இழைக்கப்பட்டு விடுகின்றது, இதற்கான தீர்வு என்ன?

ஆனால் முஸ்லிம்கள் அவ்வாறிருக்க முடியாது, தான் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் விசாரணை உண்டு, இறைவன் தன்னை விசாரணைக்கு உட்படுத்தி, அதற்கான தீர்ப்பினை வழங்குவான், இந்த உலகத்தின் மற்றும் மறு உலகத்தின் விளைவுகள் யாவும் நம்முடைய செயல்களின் முடிவுகளைப் பொறுத்ததே.

முதலாவதாக, எல்லா சந்தர்ப்பங்களிலும், செயல்களின் விளைவுகளானது ஒரு மனிதனுக்கு நன்மையையும் அல்லது தண்டனையையும் பெற்றுத் தந்து விடும். நன்மைகள் யாவும் இறைவன் புறத்திலமைந்தவைகள், இன்னும் தீமைகளும், வரம்பு மீறுதல்களும் இறைவன் அனுமதித்திருப்பதற்குக் காரணமே, அவனுக்கு வழங்கப்பட்ட பகுத்தறிவை அவன் தவறாகப் பயன்படுத்தியதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை அவனுக்கு உணர்த்துவதற்காகவே தான்.

மனிதன் இறைவனது கட்டளைகளுக்கு அடிபணிய மறுப்பானாகில், அதன் எதிர்விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை அவனையே சுவைக்க வைக்கின்றான். இன்னும் அல்லாஹ்.., தண்டனையை வழங்குவதற்கு முன்பாக மிகவும் அமைதியாக பொறுமையாகவே இருக்கின்றான், ஏனெனில் அவர்கள் தங்களது தவறுகளை உணர்ந்து திருந்தி வருந்துவதற்காகவும், அடிபணிவதற்காகவும் தான்.

மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின் (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான். (அல்குர்ஆன் 30:41)

அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான். (அல்குர்ஆன் 42:30)

இறைவனது தண்டனைகள், வரம்புமீறுதல்களும் இன்னும் துரதிருஷ்டங்களும் இறைவனது சோதனைப் பொருளாகவே வருகின்றன, நம்முடைய வாழ்கையை அதன் மூலம் சீர்திருத்தி, இறைவன் பக்கம் திரும்பி, அவனிடம் செய்து விட்ட பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடக் கூடியவர்களாகவும், அவனது உதவியை நாடியும், இன்னும் நம்முடைய பழக்க வழக்கங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும் மன்றாட வேண்டும். இன்னும் வாழ்வாதாரங்கள் அதிகரிப்பதும், சுகங்களும் கூட இறைவனது சோதனைப் பொருட்களாகி விடலாம், அவற்றை அனுபவிக்கின்ற மனிதன் பெருமையடிப்பவனாகவும், இறைவனை மறந்து விடக் கூடியவனாகவும் ஆகி விட்டால், அல்லது அவனுக்கு நன்றி மறந்த நிலையில், அவனுக்கு பணிவிடை செய்கின்றதைப் புறக்கணிக்கும் போக்கு மிகைத்து விட்டதென்றால், அவனுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதாரங்களும் கூட சோதனைப் பொருட்களாகி விடும்.

அனைத்து உயிர்களுக்கும் இறைவனுடைய நீதி செலுத்தப்படும் நாள் :

இரண்டாவதாக, முஸ்லிம்களின் இறைநம்பிக்கையின் இன்னுமொரு கருப் பொருள் என்னவென்றால், மறுமையை நம்புவது, இந்த உலகத்திலிருந்து மறைந்து விட்ட ஒவ்வொரு ஆத்மாவும் உயிர் கொடுத்து எழுப்பப்படுகின்ற நாளொன்று இருக்கின்றது, அத்தகைய அந்த மறுமை நாளில் அவர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள்.

அந்த நாளில் ஒவ்வொரு மனிதனும், அவனுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகள், பார்த்தவைகள், செய்தவைகள், பேசியவைகள் மற்றும் சத்தியத்தின்படி வாழ்ந்தானா என்பது குறித்த விசாரணைக்கு உட்படுத்தப்படுவான். அவனுக்குரிய பாதையைத் தேர்வு செய்து கொள்ள வழங்கப்பட்ட உரிமைகள் ஞாபகப்படுத்தப்படும், இறைவனுக்கு கீழ்ப்படிந்தானா, அனைத்திலும், சிறிய மற்றும் பெரிய, அவற்றைச் செய்வதற்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட சக்திகள் அல்லது முன்னுரிமைகள், இன்னும் அதற்காக அவர் பொறுப்புச் சாட்டப்பட்டிருந்தார் என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டு அவருக்கு நீதி வழங்கப்படும். எனவே,

அவருக்கு வழங்கப்பட்டிருந்த அருட்கொடைகளுக்கு தகுந்தவாறு அவர் செய்திருக்கும் செயல்பாடுகளை வைத்து இறைவன் அவருக்;கு வெகுமதிகளையும், தனக்கு மிக அருகில் இருக்கும் வாய்ப்பையும், சுவனத்தில் தொடர்ந்து இருக்கக் கூடிய வாய்ப்பையும் வெகுமதியாக வழங்குவான் அல்லது தனக்குக் கீழ்ப்படிய மறுத்தமைக்காக அவனுக்கு தண்டனையை வழங்குவதோடு, தன்னுடைய பேரருளை விட்டும் அவனைத் தூரமாக்கியே வைத்திருப்பான்.

இறைநம்பிக்கை கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் மனதின் அடித்தளத்திலிருந்து ஊற்றெடுக்கின்ற வாஞ்சையோடு இஸ்லாம் குறித்தும், அது சுமத்துப் பொறுப்புகள் குறித்தும் மிகவும் கவனத்தோடு செயல்பட வேண்டும். அதன் மூலம் அவர்கள் தங்களுக்குள் இஸ்லாமியச் சட்டத்தை செயல்படுத்துபவர்களாக ஆகி விடுகின்றார்கள். அன்றைக்கு இருந்தது போன்று இஸ்லாமிய ஆட்சி நிலைபெறுமானால், பொதுமக்கள் முன்னிலையில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு தண்டனைக்கு உட்படுத்தப்படுவான், அவர்களது குற்றங்கள் மூலம் மனித சமூகத்தை அச்சுறுத்தலுக்கு உட்படுத்தியமைக்காக, இன்னும் அவர்களது குற்றங்கள் சந்தேகமற நிரூபிக்கப்பட்;ட பின் தண்டனை வழங்கப்படுவார்கள்.

மரணம் என்பது குறித்தும், அந்த மரணத்திற்குப் பின் நியாயத் தீர்ப்பு ஒன்று உண்டு என்பது குறித்தும் முஸ்லிம்கள் கவனமிக்கவர்களாக இருக்க வேண்டும். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், 'நான் ஒவ்வொரு நாளும் இருபது முறை மரணத்தைப் பற்றி நினைவு கூர்கின்றேன்' என்றார்கள். இதன் காரணமாக முஸ்லிம்கள் இந்த உலக வாழ்க்கை பற்றி முழுமையாக மறந்து விட வேண்டும் என்பதல்ல. மாறாக, இத்தகைய மரண சிந்தனையானது இறைவன் மீதுள்ள அச்சத்தின் நிலையை உயர்த்துவதோடு, ஒவ்வொரு முடிவையும் எடுக்கும் பொழுது மிகவும் ஆய்வுக்கு உட்படுத்தி எடுக்கக் கூடியவனாக அவன் மாறி விடுவான்.

இத்தகையவர்கள் கீழ்க்கண்ட நெறிமுறைகளினால் வழிநடத்தப்படக் கூடியவர்களாக இருப்பார்கள் :

நாளைக்கு மரணத்தைச் சந்திக்கப் போகின்றோம் என்று நினைத்து மறுமைக்குத் தேவையானதைத் தயார்படுத்திக் கொள், இன்னும் நிலையானதொரு வாழ்க்கைக்காக இந்த உலகத்தில் அதற்குத் தேவையானதைத் தயார்படுத்திக் கொள்.

மறுமையில் நாம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவோம் என்ற உறுதியான நம்பிக்கை மனதளவில் ஆழப்பதிந்து விட வேண்டும், நீதித் தீர்ப்புநாளின் பொழுது, அதாவது ஒவ்வொரு ஆத்மாவும் சந்திக்கவிருக்கின்ற அந்த நாள், எப்பொழுதும் நிகழ்ந்து விடலாம் என்ற நம்பிக்கை உருவாகி விட வேண்டும்.

முஸ்லிம்கள் தங்களது ஆசைகளையும் இச்சைகளையும் வளர்த்துக் கொண்டு, இந்த உலகத்திலேயே சுவனத்தைக் கட்டமைப்பதற்காகப் பாடுபடக் கூடியவர்களாக மாறி விடக் கூடாது. இஸ்லாமிய மார்க்கமானது மனிதனை நடுநிலையோடு அவனது ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்ளப் பண்படுத்துவதோடு, நம்முடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கானதொரு வாழ்க்கையையே வாழப் பணிக்கின்றது. எனவே, நீங்கள் இஸ்லாத்தைப் பூரணமாகப் பின்பற்றத் தலைப்பட்டு விட்டால், உங்களிடம் நுகர் பொருள் மோகம் நீங்கி விடும் அல்லது குறைந்து விடும், இயற்கைக்கு முரணான விகிதத்தில் அங்கே அதிகப்படியான சுமைகளையும் ஏற்றிக் கொள்ள மாட்டான்.

குறிப்பாக முஸ்லிம்கள் இறைவனது சட்ட திட்டங்கள் மேலோங்குவதற்காகப் பாடுபட வேண்டும், மனித ஆத்மாவிலிருந்து நன்மை பயக்கக் கூடிய அம்சங்கள் விளைவதற்காக உதவிகள் செய்ய வேண்டும், இந்த உலக வளத்தைப் பங்கிடுவதில் நாமும் ஒரு அங்கம் என்று நினைத்து சூழ்நிலைகளில் மாசு ஏற்படுத்துவதனின்றும் பொறுப்புடனும், கடமையுணர்வுடனும் நடந்து கொள்வதோடு, இயற்கையை அதன் இயற்கைத் தன்மையோடு பேணிப்பாதுகாப்பவர்களாகவும், அதன் அழகைப் பாதுகாப்பவர்களாகவும், அவற்றில் மிளரக் கூடிய இறைவனது அத்தாட்சிகளைக் கண்டு அவற்றில் இருந்து படிப்பினைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகச் செய்ய முடியாதிருப்பின், அல்லது அழிவுகள் ஏற்பட்டு விடின், இறைநம்பிக்கை கொண்ட மனிதன் தன்னுடைய அறிவிற்கு உகந்த அடிப்படையில், தன்னுடைய சீரிய முயற்சியின் அடிப்படையிலும் இஸ்லாமிய நெறிமுறைகளைப் பேணி இயற்கைச் சூழலைப் பாதுகாக்கக் கூடியவர்களாகவும், அதில் நம்பிக்கையீனங்கள் ஏற்பட்டு விடாமல், வளமான எதிர்காலத்தின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து திட்டமிட்ட அடிப்படையில், நம்முடைய செயல்களை இறைவன் கண்காணித்தவனாக இருக்கின்றான் என்பதை மனதிற் கொண்டவர்களாக,

மனித சமூகத்திற்கு நன்மை பயக்கக் கூடிய இந்தப் பணியை தன்னால் இயன்ற அளவில் மிகச் சிறப்பாகச் செய்திட முயற்சிகளை மேற் கொள்ளுதல் வேண்டும். இந்த உலக வாழ்க்கை நிலையானதல்ல, இந்த பூமியும் நிலையானதல்ல, ஆனால் நம்முடைய ஆத்மாக்களுக்கு மரணம் என்பதே கிடையாது, அவை நிரந்தர வாழ்விற்காகப் படைக்கப்பட்டவை.

source: http://www.iswaasso.com/index.php/2013-05-18-19-17-52/163-2012-06-07-03-45-04