Home இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் உலகின் பேசுபொருளாக என்றுமே இருக்கும் இஸ்லாம்
உலகின் பேசுபொருளாக என்றுமே இருக்கும் இஸ்லாம் PDF Print E-mail
Friday, 14 September 2018 07:47
Share

உலகின் பேசுபொருளாக என்றுமே இருக்கும் இஸ்லாம்

[ இஸ்லாம் இன்றும் பேசுபொருளாக இருப்பதற்கு காரணங்கள் நிறையவே இருக்கின்றன. அந்தக் காரணங்களால் அது உலகம் அழியும் வரை பேசுபொருளாகவே இருக்கும்.

அதனை தன் உயிரோட்டமான இருப்பிலிருந்து கற்றவோ அழித்துவிடவோ எந்த சக்தியாலும் முடியாது. அந்தக் காரணங்களை முஸ்லிம்கள் நன்கு விளங்கி பேசும் களத்தில் பங்கெடுப்பார்களாயின் அவர்கள் இஸ்லாம் பற்றிய விவாதத்தில் ஜெயிக்கலாம்.

முஸ்லிம்கள் இந்தக் கடமைப்பாட்டிலிருந்து   விலகினால் இந்தக் கடமைப்பாட்டைப் புரிந்து கொள்ளும் ஒரு சமூகம் உருவாகும் வரை இன்றைய முஸ்லிம்கள் தோற்றுப் போகலாம். அவ்வாறனதொரு நிலை ஏற்படாதிருப்பதற்கு இஸ்லாத்தைப் பேசுபோருளாக மாற்றிய காரணிகள் விடயத்தில் முஸ்லிம்கள் அதிக கவனம் செலுத்தி தெளிவு பெற்றாக வேண்டும்.

நாம் விரும்பியோ விரும்பாமலோ இஸ்லாத்தை ஒரு பேசுபொருளாக அல்லாஹ் ஆக்கி வைத்திருக்கிறான். அதனை இனி நாங்கள் பேசியே ஆக வேண்டும். எப்படிப் பேசப் போகிறோம் என்பதில்தான் அணிகளின் வெற்றி, தோல்விகள் தங்கியிருக்கின்றன.

இஸ்லாத்தை அலங்கோலமாகக் காட்ட விரும்பும் உலகில் அதன் அழகைக் காட்டும் நோக்கோடு அறிவு பூர்வமாக போராட வேண்டிய ஒரு களத்தில் இன்றைய முஸ்லிம்களை அல்லாஹ் இறக்கியிருக்கின்றான்.

இந்தப் போரட்டத்தில் அவர்கள் உயர்த்திப் பிடிக்க வேண்டிய ஆயுதம் அறிவு ஒன்றே. அந்த ஆயுதம் அவர்கள் வசம் இருக்கிறதா?]

உலகின் பேசுபொருளாக என்றுமே இருக்கும் இஸ்லாம்உலகின் பேசுபொருளாக என்றுமே இருக்கும் இஸ்லாம்

உலகின் பேசுபொருளாக என்றுமே இருக்கும் இஸ்லாம்சாதகமாகவோ பாதகமாகவோ எல்லோரும் பேசுகின்ற, எல்லோராலும் பேசப்படுகின்ற பேசுபொருளாக ஒரு செய்தி மாறுகின்றபோது அது பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் அதிகரிக்கின்றது.

ன்பால் மக்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. பலரும் அதனைத் தேடஸ அறியஸ ஆவல் கொள்கின்றனர். இறுதியில் தன் உண்மை நிலை வெளிச்சத்துக்கு வருகின்றது. அது போலியாகப் பேசப்பட்ட விடயங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கின்றது. அந்த முற்றுப்புள்ளி பொய்யர்களின் வாய்களை அடக்கி விடுகின்றது. உண்மையின் பேரோளியை உலகிற்கு பாய்ச்சி விடுகின்றது.

இந்தக் கருதுகோளை மனதில் இருத்திய வண்ணம் இஸ்லாத்தின் செய்தி அன்றும் இன்றும் பேசுபொருளாக மாறியிருப்பது பற்றி ஒரு பார்வையை செலுத்துவோம், இன்ஷா அல்லாஹ்.

அன்று 1400 ஆண்டுகளுக்கு முன்பதாக இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அரேபியாவில் இஸ்லாத்தின் சங்கநாதத்தை முழங்கினார்கள்.

அப்போது அறபு மக்களின் பேசுபொருளாக அது மாறியது. குறைஷிகளின் இராஜ்ய சபையிலிருந்து உரோம, பாரசீக மன்னர்களின் ஆட்சி பீடம் வரை அதன் எதிரொலி பரவியது. அங்கெல்லாம் இஸ்லாத்தின் செய்தி பேசப்பட்டது. பேசியவர்களில் அதிமானவர்கள் சாதகமாகப் பேசவில்லை என்பது உண்மையானாலும், அவர்களது தூக்கத்தை மறக்கடித்துவிட்ட செய்தியாக அதுவே இருந்தது.

அதே நேரம் பலரது கவனத்தை ஈர்க்கும் செய்தியாகவும் அது மாறியது. அதனால் பலர் அதனைத் தேட முயன்றனர். அது பற்றிய உண்மையை அறிய விரும்பினர். உண்மை தெரிய வந்தபோது அதனை அரவணைப்பதற்குத் தடையாக உலகில் எந்த சக்தியாலும் நிற்க முடியவில்லை.

இன்றும் நாம் அதனையே பார்க்கின்றோம். செப். 11 இல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டது (இன்று வரை அதன் சூத்திரதாரியைப் துப்பறிவதற்குப் பெயர் போன உலக இன்டலிஜன்சுகளால் முடியவில்லை என்ற கதை வேறு). எனினும், கோபுரத்தை விட உலகெங்கும் இஸ்லாமே அதிகமாகப் பேசப்பட்டது.

இஸ்லாம் பற்றி அப்போது உலகம் சாதகமாகப் பேசவில்லை. இஸ்லாத்தின் எதிரிகள் பொறிவைத்து அதில் இஸ்லாத்தை சிக்க வைக்கவே இரட்டைக் கோபுர நாடகத்தைத் திட்ட மிட்டிருந்தார்கள். எனினும், அந்த சதிக்குப் பிறகு உலகில் அதிகமாக விற்பனை செய்யப் பட்ட, வாங்கிப் படிக்கப்பட்ட நூலாகக் குர்ஆ னும் இஸ்லாம் பற்றிய ஏனைய நூல்களும் இருந்தன. இன்று உலகின் தீவிர பேசுபொருளாக இஸ்லாம் மாறி வருகிறது.

அன்று முஸ்லிம்கள் அதனைப் பேசுபொருளாக மாற்றினார்கள். இன்று முஸ்லிமல்லாத வர்கள் அதனைப் பேசுபொருளாக மாற்றுகின்றார்கள். ஒரு செய்தி, அதனை ஏற்றுக் கொண்டவர்களாலும் அதனை நிராகரிப்பவர்களாலும் நீண்டயுகங்கள் பேசப்பட்டிருந்தால் அது இஸ்லாம் ஒன்று மட்டுமே. ஏதேனுமொரு கொள்கை அல்லது கோட்பாடு யுகம் யுகமாகப் பேசப்பட்ட வரலாறு, சூடாக விவாதிக்கப்பட்ட அதிசயம், சுவை குன்றாமல் விசாரிக்கப்பட்ட தொணி இருந்திருக்குமானால் அது இஸ்லாத்திற்கு மட்டுமே உரித்தானது.

ஏனைய கொள்கைகள், கோட்பாடுகளைப் பேசி அலுத்துப் போனவர்கள்ஸ பேசிப் பயனில்லை என்பதை அனுபவத்தில் கண்டவர்கள்ஸ பேசுவதால் மக்களில் எந்த மாற்றமும் வரவில்லை என்பதை உணர்ந்தவர்கள்ஸ மனித உள்ளங்களை சூடேற்றுவதற்கும்ஸ தூங்கியவர்களை விழிப்படையச் செய்வதற்கும் இஸ்லாத்தையே பேசுபொருளாக மாற்றினர்.

இவர்கள் இஸ்லாத்தைப் பாராட்டிப் பேசவில்லை. தன் மகிமைகளை உலகறியச் செய்வ தற்காகப் பேசவில்லைஸ மாறாக, அதனைப் பூதாகரமாக்கிப் பேசினார்கள்ஸ அதனைப் பயங்கரமானது என சித்திரித்துப் பேசினார்கள்ஸ அதனைக் கொச்சைப்படுத்திப் பேசினார்கள்.

விளைவு என்ன தெரியுமா? சிலர் கிளர்ந்தெழுந்து அதற்கெதிராகப் போர்க் கொடி தூக்கினாலும், பலர் அது பற்றித் தேடி அறிந்து கொள்ளப் புறப்பட்டார்கள். அது மட்டுமல்ல, அதன் மகிமைகளைப் பேச வேண்டியவர்கள் உறக்கம் களைந்து விழித்துக் கொண்டார்கள். தங்களது வீட்டுக் கூரையில் யாரோ கல்லெறிந்த சப்தம் போன்று அது அவர்களை விழிப்படைய வைத்தது.

விழித்ததும் அவர்களுக்கு முன்னால் ஆயிரம் கேள்விக்கணைகள் அவர்களின் பதில்களை எதிர்பார்த்துக்காத்திருந்தன. இஸ்லாம் பற்றி அவர்கள் அறியாத கேள்விகள் பல அவர்களுக்கு முன்னால் எழப்படுவதை இப்போது அவர்கள் உணருகின்றார்கள். அவற்றுக்கு என்ன பதில் சொல்வதென்றே அவர்களுக்குப் புரியவில்லை. அவர்களுக்கு முன்னால் இப்போது இரண்டு தெரிவுகள் மட்டுமே இருக்கின்றன.

இஸ்லாத்தை நன்கு கற்று உரிய பதில்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்குதல்.

கேள்விகளைப் புறக்கணித்து விட்டு வாளாவிருத்தல்

இரண்டாவது தெரிவை அவர்கள் தமதாக்கிக் கொண்டால் இஸ்லாம் தோல்வியடைந்தது போலத் தென்படலாம். அது இஸ்லாத்தின் தோல்வியல்ல. இஸ்லாத்தைப் பற்றி பேசுபவர்களின் தோல்வி. அவர்கள் நீண்ட தூக்கத்திலிருந்து விழித்ததனால்ஸ உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதனை அறிந்து கொள்வதற்காக இன்னும் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளாததனால்ஸ.

இன்றைய உலகின் தரத்திலிருந்து பேசக் கற்றுக் கொள்ளாததனால்ஸ அல்லது அவர்கள் பேசும் மொழி முஸ்லிம்களுக்கு மட்டுமே விளங்குகின்றது என்பதனால் இஸ்லாம் பற்றிய விவாதத்தில் அவர்கள் தோற்றுப் போயிருப்பார்கள். எனினும், ஒரு நாள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்தவர்களாக இஸ்லாத்தின் மகிமைகளை உலகம் போற்றும் வகையில் அவர்கள் பேசுவார்கள். அப்போது இஸ்லாம் வெல்லும்.

எது எவ்வாறாயினும், முஸ்லிம்கள் தோற்றாலும் வென்றாலும் உலகின் பேசுபொருளாக எப்போதும் இஸ்லாமே இருக்கும்ஸ அதனைப் பேசுபொருளாக மாற்றுவோர் அல்லாஹ் உருவாக்கிக் கொண்டே இருப்பான். அவர்களுள் சாதகமாகப் பேசுவோரும் இருப்பார்கள், பாதகமாகப் பேசுவோரும் இருப்பார்கள். இறுதியில் உண்மைகள் வெளியாகி, போலிகள் மறைந்துபோகும்.

உண்மைகள் வெளியாகி, போலிகள் மறைந்து விடாமல் பாதுகாப்பதற்குத்தான் இஸ்லாம் பற்றி சிலர் அபத்தமாகப் பேசுகிறார்கள். எனினும், இறுதி விளைவு அவர்களின் எதிர்பார்க்கைக்கு மாற்றமாகவே இருக்கும். அதுதான் வரலாறு. நபிமார்கள் அனுப்பி வைக்கப்பட்ட எந்த சமூகமும் இஸ்லாம் பற்றி அபத்தமாகப் பேசுபவர்களைக் காணாதி ருக்கவில்லை. எனினும், இறுதி முடிவு அவர்களுக்கு சார்பாக அமையவில்லை.

தொன்று தொட்டுஸ நபிமார்கள் காலம் முதல்ஸ ஏன்? மனிதனின் பாதம் இந்தப் பூமியில் பட்டது முதல் இன்று வரை ஓயாத பேசுபொருளாக இருப்பது இஸ்லாம் ஒன்று மட்டுமே! இறுதி நபி உலகை விட்டுப் பிரிந்து இன்றைக்கு 1400 வருடங்கள் சென்று விட்டன. எனினும் இன்றும், இன்னமும் இஸ்லாம் உலகின் பேசுபொருளாகவே இருக்கிறது. சாதகமாகவும் பாதகமாகவும் து பற்றி உலகம் விவாதித்துக் கொண்டே இருக்கிறது.

மதங்கள் உருவாகிய மௌட்டீக காலமல்ல நாம் வாழும் காலம். அனைத்து மதங்களையும் வென்றுவிட்ட விஞ்ஞானயுகத்தில் நாம் வாழ்கிறோம் என்று இக்காலத்தவர்கள் மார்தட்டிக் கொள்கிறார்கள். அவ்வாறாயின், ஒரு பழைய மதத்தை, விஞ்ஞானத்தால் தோற்கடிக்கப்பட்ட மதத்தை, ஏன் இவர்கள் இவ்வளவு அலட்டிக் கொள்ள வேண்டும்?!

மதங்களின் காலம் மலையேறி விட்டது என்று கூறுபவர்கள் ஏன் அவற்றுள் ஒரு மதத்தை இந்தளவு சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும்?! மதங்களை மியூஸியத்தில் வைத்து விட்டோம் என்று பெருமையடித்தவர்கள், அவற்றுள் ஒன்று மீண்டும் வாழ்க்கை நீரோட்டத்தில் உயிரோட்டத்தோடு இருப்பதைக் கண்டு அஞ்சியதனாலா?!

ஆம், இஸ்லாம் இன்றும் பேசுபொருளாக இருப்பதற்கு காரணங்கள் நிறையவே இருக்கின்றன. அந்தக் காரணங்களால் அது உலகம் அழியும் வரை பேசுபொருளாகவே இருக்கும். அதனை தன் உயிரோட்டமான இருப்பிலிருந்து கற்றவோ அழித்துவிடவோ எந்த சக்தியாலும் முடியாது. அந்தக் காரணங்களை முஸ்லிம்கள் நன்கு விளங்கி பேசும் களத்தில் பங்கெடுப்பார்களாயின் அவர்கள் இஸ்லாம் பற்றிய விவாதத்தில் ஜெயிக்கலாம்.

முஸ்லிம்கள் இந்தக் கடமைப்பாட்டிலிருந்து விலகினால் இந்தக் கடமைப்பாட்டைப் புரிந்து கொள்ளும் ஒரு சமூகம் உருவாகும் வரை இன்றைய முஸ்லிம்கள் தோற்றுப் போகலாம். அவ்வாறனதொரு நிலை ஏற்படாதிருப்பதற்கு இஸ்லாத்தைப் பேசுபோருளாக மாற்றிய காரணிகள் விடயத்தில் முஸ்லிம்கள் அதிக கவனம் செலுத்தி தெளிவு பெற்றாக வேண்டும்.

உலகில் என்றும், எப்போதும்

சூடான பேசு பொருளாக   

இஸ்லாம் இருப்பதற்கு   

வழியமைத்த காரணிகள்

    அல்லாஹ்:      

இஸ்லாத்தின் மையப் பொருளாக இருப்பவன் அல்லாஹ். அவனே பிரபஞ்சத்தின் சொந்தக்காரன். அனைத்தினதும் படைப்பாளன். அனைத்தையும் நிருவகிப்பவன். எனவே, அவனது இருப்பு யதார்த்தமானது. சந்தேகங்களுக்கிடமற்றது என்பதனை எந்தளவு உறுதியாக உலகின் ஒரு சாரார் நம்புகிறார்களோ அதேயளவு மற்றுமொரு சாரார் அவனை நிராகரிக்கவும் செய்கிறார்கள். அதனால் இஸ்லாம் என்ற பேசுபொருள் சோபையிழக்காமலே இருக்கும்.

     மறுமை:      

அல்லாஹ் மனிதர்களின் வாழ்க்கையையும் நடத்தைகளையும் பரிசோதித்து அவற்றுக்கு சன்மானமோ தண்டனையோ வழங்கும் ஒரு நாளை ஏற்பாடு செய்தி ருக்கிறான். அதுவே மறுமை நாளாகும். அவனை ஏற்றுப் பணிந்தவர்களுக்கு சுவனமும் அவனை நிராகரித்து வரம்பு மீறியோருக்கு நரகமும் அந்நாளில் தயார் செய்யப்பட் டுள்ளன என்று இஸ்லாம் அறிவிப்புச் செய்கிறது. இந்த அறிவிப்பு மனித மூளைகளைக் குடைந்தெடுக்கிறது. அதனாலும் உலகின் இறுதி நாள் வரை பேசப்படுகின்ற ஒரு பேசுபொருளாக இஸ்லாம் இருப்பதைத் தவிர்க்க முடியாது.

தூதர்களும் வேதங்களும்: மறுமையின் சன்மானமோ அல்லது தண்டனையோ முன்னறிவிப்பின்றித் திடீரென வழங்கப்படுவதில்லை. அந்த முன்னறிவிப்பை விரிவாக, சந்தேகங்களுக்கிடமின்றி மனித சமூகத்திற்கு முன்வைப்பதற்காகவே வேதங்களைக் கொடுத்து தனது தூதர்களை அல்லாஹ் அனுப்பி வைத்தான். அந்தத் தூதர்களில் இறுதியானவர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.

வேதங்களில் இறுதியானது அல்குர்ஆன். அந்த இறுதி நபியைப் பின்பற்றி குர்ஆனைக் கடைபிடித் தொழுகுபவர்தான் மறுமையின் விமோசனத்தைப் பெறுவார் என்ற இஸ்லாத்தின் அடுத்த செய்தி மறுமையை நம்பாதவர்களிடமும் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதன் மூலம் சாதகமாகவும் பாதகமாகவும் பேசப்படுகின்ற ஒரு பேசு பொருளாக அது மாறுகின்றது.

    குர்ஆன்:     

குர்ஆன் வெறும் தர்ம போதனைகளை மட்டும் உள்ளடக்கிய ஒரு வேதமல்ல. அது முழு மனித சமூகத்தின் வாழ்வையும் நாகரிகத்தையும் மேலே கூறப்பட்ட 3 அடிப் படைகள் மீது வடிவமைக்க வந்த வழிகாட்டி. அந்த வழிகாட்டலுக்கேற்ப நபி (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஓர் ஒப்பற்ற சமூக அமைப்பை உருவாக்கி, ஓர் அற்புதமான வாழ்க்கை முறையையும் நாகரிகத்தையும் உலகுக்கு வழங்கிவிட்டுச் சென்றார்கள். அந்த வாழ்க்கை முறையும் (ஸுன்னா) அதற்கு அடித்தளமாக இருந்த வேதமும் (குர்ஆன்) இன்று வரை அன்றிருந்தது போலவே பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றன.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசித்த ஒரு மனிதனது வாழ்க்கையின் ஆணிவேர், அவை இரண்டுமே. அவை இரண்டினதும் செல்வாக்கைக் குறைத்து அவற்றின் தாக்கங்களிலிருந்து மனிதர்களை விடுபடச் செய்துஸ அவற்றின் தூய்மையைக் களங்கப்படுத்துவதில் இஸ்லாத்தின் எதிரிகள் என்றும் போல் இன்றும் முனைப்பாக இருக் கிறார்கள். அதனாலும் இஸ்லாம் தொடர்ந்தும் பேசு பொருளாகவே இருக்கின்றது.

    இஸ்லாமிய வாழ்க்கை முறை:     

எப்படியும் வாழலாம்? (சில வணக்க வழிபாடுகளைச் செய்துவிட்டு) என்ற கோட்பாட்டை இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. மாறாக, இப்படித்தான் வாழ வேண்டும் என்று கூறும் ஒரு வாழ்க்கை முறையை தனிப்பட்ட, குடும்ப, சமூக, பொருளாதார, அரசியல் விவகாரங்கள் அனைத்திலும் இஸ்லாம் வலியுறுத் துள்ளது. இவற்றுள் என்றுமே மாறாதவையுமுண்டு.

காலத்துக்கேற்ப மாற்றங்களைச் செய்து கொள்வதற்குத் தேவையான அடிப்படைகள் மட்டும் தரப்பட்டுள்ள பகுதிகளுமுண்டு. இஸ்லாமிய வாழ்க்கை முறையில் சில கண்டிப்பானவை மற்றும் சில ஐதானவை இன்னும் சில அந்த வாழ்க்கை முறையின் மேற்பரப்பை அலங்கரிக்கின்றவை. இவையனைத்தையும் ஷரீஆ வார்த்தையில் ஷரீஆ என்கின்றோம்.

இந்த ஷரீஆ உலக மக்களுக்கு பிழையானதொரு கோணத்தில் இன்று காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனாலும் இந்தப் பேசுபொருளின் சூடு தணிவதில்லை.

    முஸ்லிம்களின் வரலாறு:     

உலக வரலாறுகளில் முஸ்லிம்களின் வரலாற்றுக்கு ஒரு தனிச் சிறப்புண்டு. மனித நாகரிகங்கள் அனைத்தும் நதிக் கரைகளில் தோற்றம் பெற்றன என்பார்கள். அதற்கு மாறாக இஸ்லாமிய நாகரிகம் பாலை நிலத்தின் சுடு மணலில் உதயமாகின்றது. உதயமாகி ஓர் அரை நூற்றாண்டு முடிவதற்குள் உலகின் பெரும் பகுதி அந்த நாகரிகத்தை அரவணைத்துக் கொள்கிறது.

முஸ்லிம்கள் அதனை ஓர் உலக நாகரிகமாக மாற்றிய வரலாறு அதிசயமானது. முழு மனித சமூகத்துக்கும் அந்த வரலாறு வழங்கிய பங்களிப்புகள் அபாரமானவை. அந்த வரலாறு சிலரால் அதிசயமாக பார்க்கப்படுகிறது. இன்னும் சிலரால் அச்சத்தோடு பார்க்கப்படுகிறது. அதியசமாக அதனைப் பார்க்கின்றவர்கள் நடுநிலையானவர்கள். அச்சத்தோடு பார்ப்பவர்கள் தங்களது நலன்களை முன்னிறுத்தி சிந்திப்பவர்கள். முஸ்லிம்கள் தமது வரலாறை மீட்டிவிடக் கூடாது என்பதில் அவர்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். அதனாலும் இஸ்லாத்தை எதிர்மறை யானதொரு பேசுபொருளாக அவர்கள் மாற்றியிருக்கிறார்கள்.

    முஸ்லிம்களின் வாழ்க்கை:     

முஸ்லிம்களின் வாழ்க்கை இஸ்லாத்தை நூறு வீதம் பிரதிபலிக்கும் வாழ்க்கையல்ல. அத்தகைய பிரதிபலிப்புக்கள் இருந்த காலமும் உண்டு. குறைந்த காலமும் உண்டு. இன்றும் நிலைமை அது போன்றதே. இஸ்லாத்திற்கு நற்சான்று வழங்குபவர்களும் அவர்களுள் இருக்கிறார்கள். எதிர்ச்சான்று வழங்குவோரும் அவர்களுள் இருக்கிறார்கள்.

இல. 5 இல் கூறப்பட்டவாறு இஸ்லாமிய வாழ்க்கை முறையில் காணப்படும் கண்டிப்பான அம்சங்கள், ஐதானவை, அலங்காரமானவை போன்றவற்றை வேறுபடுத்தி அறியாமல் அவர்கள் வாழுகிறார்கள். எனவே, அவர்களது வாழ்க்கை விமர்சிக்கப்படுகிறது விசாரிக்கப்படுகிறது. அந்த வாழ்க்கையால் இஸ்லாமும் விசாஷணைக் கூண்டில் நிறுத்தப்படுகிறது. இஸ்லாத்தின் போதனைகளுக்கு தவறாக அர்த்தம் கற்பிக்கப்படும் நிலையும் இதனால் தோற்றம் பெற்றுள்ளது. இதுவும் இஸ்லாத்தை ஒரு பேசுபொருளாக மாற்றியுள்ள கவலை தரும் ஒரு காரணியாகும்.

     இன்றைய உலகம்:      

இன்றைய உலகம் உன்னதமான கொள்கைகளாலும் உயர்ந்த விழுமியங்களாலும் வழிநடத்தப்படுவதில்லை. சுயநலன்களாலும் பேராசைகளாலும் வழிநடத்தப்படுகின்ற உலகமாகவே அது மாறியிருக்கின்றது. தேசியவாதம், இனவாதம், மொழி வாதம், மதவெறி போன்றவற்றுக்கு மவுசு இன்று அதிகரித்திருக்கின்றது.

ஓரினச் சேர்க்கை ஒரு மனித உரிமை என்ற அந்தஸ்த்தைப் பெற்றிருக்கிறது. மது, மாது, சூது என்பன நாகரிகமாக இன்று கருதப்படுகின்றது. இலஞ்சம், ஊழல் மோசடி என்பவற்றில் நாளை ஈடுபடுவதற்கு தருணம் பார்த்திருப்பவர்கள் இன்று அவற்றில் ஈடுபட்டிருப்பவர்களைக் கண்டு கொள்வதில்லை. நீதிகள், அதிகாரத் துஷ்பிரயோகங்கள் என்பன கீழ் மட்டத்திலிருந்து வல்லரசு மட்டம் வரை அதிகாரிகளையும் தலைவர்களையும் பீடித்திருக்கின்ற பொது நோய்களாக மாறிவிட்டன.

இத்தகையதோர் உலகில் விழுமியங்களையும் உயர்ந்த உன்னதமான கொள்கைகளையும் நிலைநாட்ட விரும்புகின்ற இஸ்லாம் எப்படி விமர்சிக்கப்படாதிருக்கும்? எவ்வாறு பேசுபொருளாக மாறாதிருக்கும்?

இந்த வகையில் உலகின் பேசுபொருளாக இஸ்லாம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். முஸ்லிம்கள் அதனைப் பேசுபொருளாக ஆக்காதிருந்தாலும், தன் எதிரிகள் அதனைப் பேசியே தீருவார்கள். அவ்வாறான தொரு நிலைதான் இன்றும் தோற்றம் பெற்றிருக்கிறது.

இப்போது முஸ்லிம்களும் இஸ்லாம் பற்றிப் பேச நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். அவர்கள் இஸ்லாத்தை உலகின் பேசுபொருளாக மாற்றிய காரணிகளின்பால் கவனம் செலுத்தி அவை ஒவ்வொன்றிலும் எழுப்பப்படுகின்ற சர்ச்சைகளுக்கு அறிவுபூர்வமாகப் பதிலளிக்கவும் பேசவும் முன்வர வேண்டும்.

எனினும் அவர்கள் எதைப் பேசுவார்கள்? எப்படிப் பேசுவார்கள்? இன்றைய மொழியில் இன்றைய உலகத்திற்குப் பொருத்தமாகப் பேசுவார்களா? அல்லது பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட மொழியில் அக்கால மனிதர்களுக்குப் பேசியதைப் பேசுவார்களா? எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வாக ஒரே விடயத்தைத் திரும்பத் திரும்பப் பேசுவார்களா? அல்லது ஒவ்வொரு விவகாரத்திற்கும் அதனதன் விடயதானத்திற்குப் பொருத்தமாகப் பேசுவார்களா? உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவார்களா? அறிவுபூர்வமாகப் பேசுவார்களா? பாமரத்தன்மையோடு பேசுவார்களா? விஞ்ஞான ரீதியாகப் பேசுவார்களா? மேலோட்டமாகப் பேசுவார்களா? ஆழ அகலத்தோடு, தர்க்கரீதியாகப் பேசுவார்களா?

நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ இஸ்லாத்தை ஒரு பேசுபொருளாக அல்லாஹ் ஆக்கி வைத்திருக்கிறான். அதனை இனி நாங்கள் பேசியே ஆக வேண்டும். எப்படிப் பேசப் போகிறோம் என்பதில்தான் அணிகளின் வெற்றி, தோல்விகள் தங்கியிருக்கின்றன.

இஸ்லாத்தை அலங்கோலமாகக் காட்ட விரும்பும் உலகில் அதன் அழகைக் காட்டும் நோக்கோடு அறிவு பூர்வமாக போராட வேண்டிய ஒரு களத்தில் இன்றைய முஸ்லிம்களை அல்லாஹ் இறக்கியிருக்கின்றான். இந்தப் போரட்டத்தில் அவர்கள் உயர்த்திப் பிடிக்க வேண்டிய ஆயுதம் அறிவு ஒன்றே. அந்த ஆயுதம் அவர்கள் வசம் இருக்கிறதா? அறிவுபூர்வமாகப் பேசுவதற்கும் செயலாற்றுவதற்கும் அவர்களால் முடிகிறதா?

முஸ்லிம் சமூகமே! இந்தக் கேள்விகள் உன்னை நோக்கித்தான்.

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர். இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
(இக்கட்டுரை – August 2014 இல் எழுதப்பட்டது)

source: http://www.usthazhajjulakbar.org/2017/03/22/