Home இஸ்லாம் கட்டுரைகள் "உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு"
"உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு" PDF Print E-mail
Friday, 07 September 2018 10:04
Share

"உங்கள் மார்க்கம் உங்களுக்கு,    எங்கள் மார்க்கம் எங்களுக்கு"

முஸ்லிம்கள் மதவாதிகள், அவர்கள் தாலிபான்கள், காட்டுமிராண்டிகள், கருத்து சுதந்திரத்திற்கும், பெண் சுதந்திரத்திற்கும் எதிரானவர்கள், அவர்கள் வாழ வேண்டியது ஆஃப்கானிஸ்தானிலோ, பாகிஸ்தானிலோதான் இந்தியாவில் இல்லை. இன்னும் ஏராளமான கமெண்ட்கள்....

இதுவரை இந்துத்துவவாதிகளால் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்ட சொல்லாடல்கள் பெரியாரியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களிடம் இருந்தும் பெண்ணியவாதிகளிடமிருந்தும், பொதுவுடமை பேசுபவர்கள் என்ற பெயர்களில் வெறுப்பு வார்த்தைகள்.....

ஆழ் மனதிலிருந்து தெரித்துவிழுந்த வெறுப்புணர்வு... முஸ்லிம்கள் பொதுவெளியில் என்னதான் நட்புடனும் சகோதரத்துடனும் பழகினாலும்.. நெருக்கடி நிலையில் அவர்கள் தனிமை படுத்தப்படுவார்கள், குஜராத்தில் மோடியின் நரவேட்டையிலும் அப்படித்தானே நடந்திருக்கும், பக்கத்துவீட்டுக்காரர், நெருங்கி பழகிய நண்பர்கள், மதச்சார்பற்ற அமைப்புகள், நெருக்கடி நேரம் என்று வரும் பொழுது அவன் முஸ்லிம்..

அடிப்படை மதவாதம், மதத் தீவிரவாதம், மத பிற்போக்குவாதம் என்பதெல்லாம் பொதுவாக இஸ்லாம் என்ற மதத்தை குறிப்பிடும் சொல்லாடல்களாக ஊடகங்கள் மூலமாகவும், ஆளும் வர்க்கத்தினர் மூலமாகவும் அடையாளமாக்கப் பட்டுள்ளது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் காலம் காலமாக தொடர்ந்து தஸ்லீமா நஸ்ரின் முதல் சல்மான் ருஸ்டி வரை அவர்களின் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்களே என்பதுதான் நடுநிலையாளர்களின் வேதனையாக உள்ளது. இஸ்லாம் என்ற மதம் பொதுவெளி மக்களுடன் இரும்பு திரை கொண்டு மூடி இருப்பதாகவும், மதத்தை பற்றிய அறிதலுக்கும், கருத்து புரிதலுக்கும் எதிராக உள்ளதாக கூறுகின்றனர்.

பொதுவாக தனி மனிதனின் கருத்துச் சுதந்திரத்தினை தடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. அதில் யாருக்கும் மாறுபட்ட கருத்தும் இல்லை. இஸ்லாத்தை பற்றிய விமர்சனத்திற்கோ அல்லது எதிர் கேள்விகள் கேட்பதற்கோ இஸ்லாம் எதிராக உள்ளதா என்றால் அப்படி எங்குமே இல்லை. இறைவனின் அருளிய திருக்குரானில்   "இது உலகத்தார் அனைவருக்குமான திருமறை, இதில் நிர்பந்தங்கள் எதுவும் இல்லை" என்பதை எல்லா இடங்களிலும் வற்புறுத்துகிறது.

முதன் முதலாக அருளப்பட்ட திருக்குர்ஆனின் வசனமே "ஓதுவீராக" இஸ்லாம் கற்று கொள்வதை வழியுறுத்துகிறது. மூடத்தனத்துடன் மார்க்கத்தை பின்பற்றுவதை தடுக்கிறது, மனிதன் தன் சுய அறிவை பயன்படுத்த சொல்கிறது. கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்கிறது, வரிக்கு வரி மனிதர்களுக்கு படிப்பினைகளையும் சாட்சிகளையும் எடுத்துக்கூறி சிந்திக்க சொல்கிறது.

அப்படிபட்ட ஒரு மார்கத்தை தனி மனிதர்களாக கட்டி காப்பாற்ற வேண்டும் என்றோ இல்லை தனி மனிதர்களின் தாக்குதல்களில் அழிந்து சிதைந்து விடும் என்றோ முஸ்லிம்கள் நினைப்பார்கள் என்றால் அது மிகவும் தவறான பார்வையாகும். ஆனால் இங்கு விமர்சனம் என்பதை தாண்டி அவதூறு என்ற எல்லைகளுக்குள் போகும், இஸ்லாத்தில் இருந்து கொண்டே அதற்கு எதிரான பிரச்சாரங்களை கட்டமைக்கப்படும் போதும் மட்டுமே பிரச்சனைகள் உருவாகிறது.

முஸ்லிம்களாக இருந்து கொண்டே ஏன் விமர்சனம் செய்ய கூடாது என்றும் கேட்கலாம், இந்திய சூழலில் முஸ்லிம்ககளிடம் படிந்து கிடக்கும் மூட நம்பிக்கைகளை இன்றளவும் சரியான ஆதாரங்கள் மூலமாகவும், விவாதங்கள் மூலமாகவும் இஸ்லாத்தின் உண்மையான வடிவத்தை உணரும் முயற்சியில் எத்தனையோ இஸ்லாமிய அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்குள் விவாதங்களும், உடன்பாடற்ற நிலைகளும் நடக்கின்றது, ஆனால் அவர்களை யாரும் முஸ்லிம்கள் இல்லை என்று மதவிலக்கம் கொடுக்கபடவில்லை.

இதில் ஒன்றை கூர்ந்து கவனித்தால் தெரிவது இங்கு மேற்சொல்லப்பட்ட சல்மான் ருஸ்டி முதல் தஸ்லீமா வரை அனைவரும் "இஸ்லாத்தினை தங்களது மதமாக ஏற்று கொண்டும் அதற்குள் இருந்து கொண்டும் அதன் மீது அவதூறுகளை பரப்புகிறவர்கள், எதிர் பிரச்சாரம் செய்பவர்கள் மட்டுமே. அவர்கள் திரைமறைவு சக்திகளால் இஸ்லாத்திற்கு எதிராக இயக்கப்படுபவர்கள். ருஸ்டியை இன்றளவும் பாதுகாத்துவருவது அமெரிக்க- யூத சியோனிஸ கூட்டங்கள்.

அவர்களுக்கு எதிராக மட்டும் தான் மார்க்க தீர்ப்பு என்று சொல்லப்படுகிற ஃபத்வா கொடுக்கப்படுகிறது. அவர்கள் இஸ்லாமியர்கள் இல்லை என்று அந்த சமூகத்தின் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களை மதவிலக்கம் செய்யப்படுகிறார்கள்.

ஒரு கருத்தாக்கத்திலோ, அமைப்பின் மீதோ நம்பிக்கையற்றவர்களை அந்த கட்சியோ, அமைப்போ வெளியேற்றுவது தான் பொதுவான நடைமுறை.   அல்லது கருத்து உடன்பாடில்லாத ஒரு அமைப்பிலிருந்து அவர்களாகவே வெளியேறிவிடுவது தான் நடைமுறை.

அலுவலகங்களில் கூட விதிமுறைகளை மீறிய தொழிலாளர்களை ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் வேலையிலிருந்து வெளியேற்றுவதும் நடைமுறையில் உள்ளது. அதே போன்று தான், தனக்கு உடன்பாடில்லாத மதத்தை விட்டு அவராகவே வெளியேறுவதும் அல்லது வெளியேற்றப்படுவதும் பொதுவான நடைமுறையே. அதுவே நாகரீகமான நடைமுறையும் கூட.

எனது நாத்தீக நண்பர் கேட்டார், மதவிலக்கம் என்பது வன்முறைதானே? பெரியார் முதல் எல்லா நாத்தீகர்களும் இந்து மதத்திற்குள்ளே இருந்து கொண்டு தானே நாத்தீக பிரச்சாரம் செய்கிறார்கள்? ஏன் அப்படி இஸ்லாம் உள்ளிருந்து கொண்டே நாத்தீக பிரச்சாரத்திற்கு அனுமதி கொடுப்பதில்லை என்று கேட்டார்.

இந்து மதத்தின் தன்மையானது தனக்கு எதிர் கருத்துக் கொண்டு சமூக புரட்சி செய்யும் மார்கத்தை முதலில் பலம் கொண்டு எதிர்க்கும் பிறகு அவர்களையும் சேர்த்து இந்து மதம் என்று பரினாமம் காணும். இந்து மதத்தில் பிறப்பின் அடிப்படையிலேயே இந்து மதத்துடனும்,அவன் சார்ந்த சாதி குறியீடுடனும் தான் பிறப்பதாக நம்பபடுகிறது.

என்னதான் நாத்தீகம் பேசினாலும் கடைசியில் அவன் இந்து என்ற அடையாளத்துடன் தான் மரணிக்கிறான்.. எந்த மதத்தை எதிர்த்து தன் வாழ் நாள் எல்லாம் பிரச்சாரம் செய்கிறார்களோ அந்த மத அடையாளத்துடனே தானும் தன்னை பின் பற்றியவர்களும் மரணிப்பதில் என்ன புரட்சி இருக்கிறது. அப்படி ஒரு வசதி இஸ்லாத்திலும் எதிர்ப்பார்ப்பது முற்றிலும் முரண் என்பது எப்படி என் நண்பருக்கு தெரியாமல் போனது.

சரி ஒரு பேச்சுக்கு, தன்னை ஒருவன் முழு நாத்திகன் என்று கூறிக்கொண்டு சங்கராச்சாரியாரின் பாதங்களில் விழுந்து கும்பிட்டு , தீவிர மத வழிபாடுகள் செய்து திரிபவனை தாய்மை உள்ளத்துடன், சரி நீ நாத்திகனாகவே இருந்துவிட்டு போ என்று கூறுவார்களா பகுத்தறிவுவாதிகள்?

கமல்ஹாசனை நாத்தீகன் என்று ஏற்றுகொள்வார்களா? இல்லை பிரபஞ்சன் காஞ்சி சங்கரமடத்தை ஆதரித்து எழுதியதற்கு ஆமோதித்து அவரை நாத்தீகர்தான் என்று ஏற்றுக் கொள்வார்களா?

தமிழ் தேசியத்தின் நாயகனாக பூஜிக்கும் பிரபாகரனை யாராவது விமர்சனம் செய்தாலே அவர்களை ஒதுக்கிவைக்கும் தமிழ் தேசியவாதிகள் ஏன் தனிமனித கருத்து சுதந்திரத்திற்கு இடம் கொடுப்பது இல்லை?.

மாற்று கருத்துக்களை தாங்கி நிற்கும் இனையதளங்களில் கூட நமது எல்லா கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுவதற்கு இடம் தருவார்களா என்றால் என்றால் இல்லை, அந்த தளத்திற்கு உட்பட்ட கருத்து ஒற்றுமை இருந்தால் மட்டும் தான் இணையதளங்களிலும் பகிர்ந்து கொள்ளமுடிகிறது. அது போலத்தான் இஸ்லாமிய வாழ்வியல் என்பது முழுவதும் ஒரு புரிதலுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம், அந்த ஒப்பந்தங்கள் முறியும் போது தனக்கு பிடித்த மார்க்கத்தை நோக்கி சென்றுவிடலாம். இங்கு நிர்பந்தம் இல்லை.

"உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு"

உடன்பாடு இல்லாவிட்டாலும் கடைசி வரையிலும் முஸ்லீமாகவே மரணிக்கவேண்டும் என்ற நிர்பந்தம் இங்கு இல்லை.

இங்கு ஊர்விலக்கம் வேறு, மதவிலக்கம் வேறு.. ஊர் விலக்கம் என்பது எல்லா சமூக மக்களிடம் இருந்து விலக்களிப்பது அது அவர்களின் வாழ்வுரிமைக்கு எதிரான செயல்.. அப்படி யாராவது செய்திருப்பார்கள் என்றால் நிச்சயமாக தடுக்கப்பட வேண்டியது தான். பல சமூக மக்கள் வாழும் ஒரு ஊரில் மதக் காரணங்களுக்காக ஊர்விலக்கு எந்த ஜமாத்துகளினாலும் செய்யமுடியாது.

இஸ்லாத்திற்கு வெளியிலிருந்து தொடர் கருத்து தாக்குதல்களும், விமர்சனங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாகரீகமான முறையில் கருத்து விவாதங்களையும், கருத்தரங்களையும் இன்றளவும் இந்தியாவில் இஸ்லாமிய அமைப்பினர்கள் நடத்திக் கொண்டும் மாற்று தளத்தில் உள்ளவர்களிடம் ஒரு புரிதல்களை ஏற்படுத்திக் கொண்டும் உள்ளனர்.

முஸ்லிம்களை குறிவைத்து மிகவும் கேவலமான வார்த்தைகளால் கொச்சைப் படுத்தும் இந்து தீவிரவாதிகளுக்கே எதிர்வினை செய்யாத இந்திய முஸ்லிம்ககளை காட்டுமிராண்டிகள் போல வர்ணிப்பது துவேசத்தின் உச்சம்.

கற்பு கெட்டவர்களில் சிறந்தவர் யார் கதிஜாவா, மேரியா, மணியம்மையா என்று பட்டிமன்றம் வைத்து தகாத வார்த்தைகளால் கொட்டியபோதும், "துலுக்கனை வெட்டு துலுக்கச்சியை கட்டு" என்றபோதும்,

"துலுக்கச்சி கற்ப பையில் இந்துவின் விந்துவை செலுத்து" என்று தமிழ் நாட்டில் இந்து தீவிரவாதி இராமகோபாலன் பேசாத பேச்சுகளா?... "இந்துக்கள் முஸ்லிம் கடைகளில் பொருள் வாங்காதீர்கள்" என்று பகிரங்க அறிவிப்பு செய்யும் அமைப்புகளும் இன்றும் இயங்கி கொண்டுதானே இருக்கின்றது.

சிந்தனையாளர்களே! நடுநிலையாளர்களே! நீங்கள் தனிமனித சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்ற பெயரில் உண்டாக்கும் சிறு சலசலப்பினால் ஏற்கனவே அச்சத்துடன் வாழும் சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகம் பாதுகாப்பற்றதாகி விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

பெரியார் கடைபிடித்த இஸ்லாமிய நல்லுறவை, அவரின் வழி நடக்கும் நாத்தீகர்களும் கடைபிடிக்க வேண்டும். அது என்ன காரணம் என்று தெரியவில்லை பெரியார் அவர்கள் இஸ்லாத்தை பற்றி கூறிய பக்கங்களை மட்டும் யாரும் புரட்டுவதற்கு கூட தயாராக இல்லை.

பெரும்பான்மையான மக்கள் சமுகத்தின் மத்தியில் சிறுபான்மை மக்கள் சமுகத்தை பாதுகாக்கும் பொறுப்பும், ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக அடக்கப்படும் சமூகத்திற்காக ஆதரவாக நிற்பதுமே சிறந்த மனித நேயப்பண்பாகும்.

-முஹம்மது ஃபரூக்