Home கட்டுரைகள் கல்வி கற்கை நன்றே... கற்கை நன்றே...

கல்வி மற்றும் கல்வியாளர்களின் சிறப்புக்கள் -அப்துல் பாஸித் புகாரி

கற்கை நன்றே... கற்கை நன்றே... PDF Print E-mail
Sunday, 26 August 2018 08:03
Share

கற்கை நன்றே... கற்கை நன்றே...

[ “ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே முஸ்லிம்கள் முன்னேற்ற பாதையில் நடைபோட்டனர்.

முஸ்லிம் நாடுகளின் அரசியல் எல்லைகள் அட்லாண்டிக் முதல் சிந்து வரையிலும், ஸ்பெயின், பிரான்ஸ் முதல் ஆப்ரிக்கா கண்டத்தின் சஹாராவின் விளிம்பு வரையிலும் வியாபித்து விரிந்து கிடந்தன.

முஸ்லிம்கள் ஆளுகையின்கீழ் இருந்த பிரதேசங்களில் தலை சிறந்த கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.

முஸ்லிம்கள் அறிவியல் வளர்ச்சியில் பெரும் பங்காற்றினர். அதில் இப்னு சீனா, இப்னு ருந்து, போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

உலகத்தின் வர்த்தகச் செழிப்பிற்கும் முஸ்லிம்கள் மகத்தான பங்களிப்பு செய்தனர். அதே காலத்தில் மேற்கத்திய நாகரிகம் மடமையிலும், வறுமையிலும் அமிழ்ந்து கிடந்தது”. – கேசவ மேனன். தி இந்து ஜனவரி 06 – 2006]

"கற்றவர்களும், கல்லாதவர்களும் சமமா?" என்று கேட்கிறது திருமறை.

கற்காதவர்கள் ஒருபோதும் கற்றவர்களுக்கு சமமாக வர முடியாது.

கற்பது என்பதை பலர் கல்லூரியில் படிப்பது என்பதாக மட்டுமே என்று நினைக்கிறார்கள். அது ஒரு பகுதிதான். அதையும் தாண்டி கற்க நிறைய இருக்கிறது. அதற்கு நாம் முதலில் புத்தக உலகத்திற்குள் நுழைய வேண்டும்.

பல்வேறு விசயங்களையும், நிகழ்வுகளையும், வரலாறுகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் புத்தகங்களை வாசிப்பதை கடமையாக்கி கொள்ளவேண்டும். வாசிப்பது என்பது நமக்கு பல்வேறு சிந்தனைகளை தூண்டும் நண்பனாக இருக்க வேண்டும்.

“எனக்கு அதிகம் தேவைப்படுகிறவர் யார் என்றால் இயன்றதைச் செய்யுமாறு தூண்டும் மனிதர்கள்தான்” என்கிறார் அமெரிக்க அறிஞர் எமெர்சன். ஆம்! வாசிப்பதும் அப்படிதான். அது நமக்கு பல்வேறு வகைகளில் நமக்கு உதவுகிறது. பலருக்கு உதவ தூண்டுகிறது.

இன்று சமூகம் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பெரும்பான்மையினர் மௌனம் சாதிக்கிறார்கள். அந்த பிரச்சனைகள் சம்மந்தமாக அவர்களுக்கு போதிய விவரம் இல்லாத காரணத்தால் அது குறித்து சிந்திக்க மறுக்கிறார்கள். அதுதான் சமூகத்திற்கு இருக்கும் முதன்மையான பிரச்சனையாக இருக்கிறது. முதலில் வாசிக்க வேண்டும், யோசிக்க வேண்டும், செயல்பட வேண்டும். அது நமக்கு, நம் சமூகத்திற்கு பல்வேறு வழிகளில் உதவிகரமாக இருக்கும்.

வாசிப்பதின் பலன்களை நம் சமூகம் அனுபவிக்காமல் இல்லை. அதன் பலன்களை ஏற்கனவே நம் சமூகம் கண்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தின் பொற்காலமாக இருந்தது. மருத்துவர்கள், அறிஞர்கள், சமூக சீர்திருத்தவாதிகள், மக்களை நேசிக்கும் தலைவர்கள் என அனைவரும் இஸ்லாமியர்களாக இருந்தார்கள்.

இஸ்லாம் வெற்றிகொள்ளப்படும் இடங்கள் எல்லாம் பல கல்விசாலைகள், நூலகங்கள் அமைக்கப்பட்டது. அது இருளில் சூழ்ந்திருந்த மக்களிடத்திலே புதிய வெளிச்சத்தை காட்டியது. அவர்கள் அந்த நிலைக்கு உயர்ந்ததிற்கு அடிப்படை காரணம் வாசிப்பு பழக்கம்தான்.

“ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே முஸ்லிம்கள் முன்னேற்ற பாதையில் நடைபோட்டனர். முஸ்லிம் நாடுகளின் அரசியல் எல்லைகள் அட்லாண்டிக் முதல் சிந்து வரையிலும், ஸ்பெயின், பிரான்ஸ் முதல் ஆப்ரிக்கா கண்டத்தின் சஹாராவின் விளிம்பு வரையிலும் வியாபித்து விரிந்து கிடந்தன. முஸ்லிம்கள் ஆளுகையின்கீழ் இருந்த பிரதேசங்களில் தலை சிறந்த கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. முஸ்லிம்கள் அறிவியல் வளர்ச்சியில் பெரும் பங்காற்றினர். அதில் இப்னு சீனா, இப்னு ருந்து, போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். உலகத்தின் வர்த்தகச் செழிப்பிற்கும் முஸ்லிம்கள் மகத்தான பங்களிப்பு செய்தனர். அதே காலத்தில் மேற்கத்திய நாகரிகம் மடமையிலும், வறுமையிலும் அமிழ்ந்து கிடந்தது”. – கேசவ மேனன். தி இந்து ஜனவரி 06 – 2006.

அதேபோல கஸ்ஸாலி இமாம் ஏழ்மையில் பிறந்தவர். கஷ்டப்பட்டு முன்னேறி உலகில் மிகப்பெரிய அறிஞராக விளங்கினார். வான இயல், தர்க்கம், தத்துவம், கணிதம், புவி இயல் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். அவர் நிறைய கற்றதினால், நிறைய கற்பித்துவிட்டு சென்றார். ஆம் அப்போதே அவர் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தான் கற்று தேர்ந்ததை பலரும் கற்கும் விதமாக செய்தார். அது பலருக்கு வழிகாட்டியாக இருக்கிறது.

மாவீரன். திப்பு சுல்தானை எடுத்துக்கொள்வோம். தனது திருமண பரிசாக தனது தந்தை ஹைதர் அலியிடம் அவர் கேட்டது என்ன தெரியுமா? மிகப் பெரிய நூலகத்தைதான். அங்கு அவர் கற்றதை தான் தனது ஆட்சியில் செயல்படுத்தினார். பல புரட்சிகர சீர்திருத்தங்களை செய்தார். பிரெஞ்சு புரட்சிக்கு ஆதரவாக் இருந்தார். அமெரிக்க புரட்சிக்கு நன்கொடை அளித்தார். பல வெளிநாடுகளிலும் வணிக தொடர்பை வைத்திருந்தார். போரில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தினார். காலனியாதிக்கத்துக்கு எதிராக கடுமையாக போராடினார். திப்பு பெரிய ஆளுமையாக செயல்பட்டதற்கு காரணம். அவர் பல விசயங்களையும் கற்க வேண்டும் ஆவல் கொண்டவராக இருந்ததினால்தான்.

“ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாதவரை அவர் வேறு, இவர் வேறு” என்கிறது ஒரு பாராசிக கவிதை. அதுபோலதான் புத்தகமும். நாம் நெருங்கி போகாதவரை, அந்த சிறப்புமிக்க வரலாறுகள், கருத்தாழமிக்க சிந்தனைகள் நம்மை நோக்கி வராது. வரவே வராது!

இன்று நாம் காணும் அதிசயிக்கத்தக்க அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக தற்கால உலகை 'அறிவியல் யுகம்' என்று வர்ணிப்பர். கனணி (computer), மின்அஞ்சல் (e-mail), இணையம் (Internet)இ டிஜிடல் தொழில்நுட்பம் என தகவல் தொழில் நுட்பத்துறை பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டி உலகை ஒரு பூகோளக் கிராமமாக (Global Village) மாற்றியுள்ளது. உலகம் ஒரு பூகோளக் குடும்பமாக (Global Family) சுருங்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என நம்பப்படுகின்றது. மறுபக்கத்தில் அறிவியல் ஆராய்ச்சியின் உச்ச நிலையில் போலாக்கம் (cloning) எனும் செயற்பாடு உலகை பெருவியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இத்தகைய அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னணியில் மத நம்பிக்கையானது கேள்விக் குறியாக்கப்பட்டு வருகின்றது. இது அறிவியல் யுகம்; மதத்துக்குரிய காலமல்ல் மதமானது அதன் பங்களிப்பை வரலாற்றில் செய்து முடித்து விட்டது; நவீன வாழ்க்கை அமைப்பில் அதற்கு இடமில்லை என்ற வாதம் முன் வைக்கப்படுகின்றது. இதற்கு பின்வருவன ஆதாரங்களாகக் கொள்ளப்படுகின்றன.

1. அறிவியலின்றி ஒரு நாகரிகம் தோன்ற முடியாது. மதமோ அறிவியலுக்கு எதிரானதாகும். சம கால மேற்குலகின் அனைத்துத் துறை சார்ந்த முன்னேற்றத்திற்கும் அது மதத்தை நிராகரித்து அறிவியலை ஏற்று விசுவாசித்தமையே காரணமாகும்.

2. மனித வாழ்வு வரலாற்று நோக்கில் மூன்று கட்டங்களைக் கொண்டது. அவையாவன :

1. சமயம்

2. தத்துவம்

3. அறிவியல்

மூன்றாம் கட்டமே இறுதிக் கட்டமாகும்.

3. மதம் என்பது அபினைப் போன்றது. மனித சமூகம் அதிலிருந்து விடுபடாத வரை அதற்கு விடுதலை இல்லை; சுபீட்சம் இல்லை.

அறிவும் அறிவியலும் இன்றி நாகரிகம் தோன்ற முடியாது என்பது ஒரு பேருண்மையாகும். ஆயினும் மதம் அறிவியலுக்கு முரணானது; அது அறிவியலை ஆட்சேபிக்கின்றது என்ற வாதம் பிழையானதாகும். மதம் அறிவியலுக்கு எதிரானது என்ற கருத்து ஐரோப்பிய வரலாற்றில் நடை பெற்ற சில நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுந்த ஐரோப்பிய நோக்காகும். மதத்திற்கும் அறிவியலுக்கும் இடையில் உலகில் வேறு எங்கும் போராட்டங்கள் நிகழவில்லை. அது ஐரோப்பாவிலேயே நிகழ்ந்தது.

மனித வரலாற்றில் மதம் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக எங்கும் அமைந்ததில்லை. ஐரோப்பாவில் தான் கிறிஸ்தவக் கோயில் அறிவு, ஆராய்ச்சிக்கும் சுதந்திரமான சிந்தனைக்கும் எதிராக வரலாற்றின் மத்திய காலப்பிரிவில் செயற்பட்டது.

ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் அது அறிவு ஆராய்ச்சியை ஊக்குவித்த மார்க்கம் மட்டுமல்ல அறிவை அடிப்படையாகக் கொண்டு எழுந்த மார்க்கமாகும்.

அறிவு ஆராய்ச்சிக்கும் அறிவியல் அணுகுமுறைக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆக்கமும் ஊக்கமும் அளித்தார்கள் என்பதற்கு அவர்களின் ஸீராவில் ஏராளமான சான்றாதாரங்கள் காணப்படுகின்றன.

'திட்டமிடல்' என்பது பிரதான அறிவியல் அணுகுமுறையாகும். அல்-குர்ஆன் நபி யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பதினைந்தாண்டு பொருளாதாரத் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. அதற்கூடாக எவ்வாறு அன்று எகிப்தும் அதைச்சூழவுள்ள பிரதேசங்களும் பெரும் பஞ்சத்திலிருந்து காப்பாற்றப்பட்டன என்பதை சுட்டிக்காட்டுகின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தனது பிரச்சார வாழ்க்கையில் எவ்வாறு நுணுக்கமாக திட்டங்களைத் தீட்டிச் செயற்பட்டார்கள் என்பதனைக் காணமுடிகிறது. முதலாம் ஹிஜ்ரத், இரண்டாம் ஹிஜ்ரத், யுத்தங்கள் முதலானவை இதற்கு சிறந்த ஆதாரங்களாகும்.

'கணக்கெடுப்பு' என்பது மற்றுமோர் அணுகுமுறையாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்குச் சென்று சில நாட்களிலேயே அங்குள்ள முஸ்லிம்களின் சனத்தொகையை கணக்கெடுக்குமாறு பணித்தார்கள். அவர்களின் தொகை அப்போது 1500 ஆக இருந்தது. (புகாரி)

இன்னுமோர் அறிவியல் போக்கான 'பரிசோதனை' முறையையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்று அங்கீகரித்தார்கள். ஈத்த மர மகரந்த மணிச்சேர்க்கைச் சம்பவம் இதற்கு சிறந்த சான்றாகும். (முஸ்லிம்)

நம்பிக்கைகள், விழுமியங்கள், பெறுமானங்கள், சட்டதிட்டங்கள் முதலான வற்றுடன் தொடர்பற்ற உலகாயத, தொழில்நுட்ப விவகாரங்களில் அந்நியரின் உதவியை நாடுதல், ஆலோசனைகளைப் பெறுதல் பிழையானவையல்ல என்பதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது செயற்பாடுகள் மூலம் எடுத்துக்காட்டினார்கள். பாரசீகர்களின் வழிமுறையான யுத்தத்தின் போது அகழி வெட்டும் உத்தியை ஸல்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியபோது அதனை ஏற்று செயற்பட்டமை, அன்னார் குத்பா பிரசங்கம் செய்வதற்காக ஓர் உரோம தச்சன் ஒரு மின்பரை செய்து கொடுத்தமை முதலியன சில உதாரணங்களாகும்.

அறிவு பற்றி அல்குர்ஆன்

''பின்னர் அவற்றை (அல்லாஹ்) வானவர்கள் முன் வைத்து 'நீங்கள் கூறுவது உண்மையாயின் இவற்றின் பெயர்களை நீங்கள் தெரிவியுங்கள்' எனக் கூறினான். அவர்கள் (அதற்கு) 'நீ மிகத் தூய்மையானவன்; நீ எங்களுக்கு கற்பித்தவற்றைத் தவிர எதை பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை; நிச்சயமாக நீயே நன்கறிந்தவன்; தீர்க்கமான அறிவுடையவன்' எனக் கூறினார்கள்.'' (1:32)

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மலக்குகளை விட அறிவில் உயர்ந்தவர்களாக விளங்கிய காரணத்தினாலேயே அன்னாருக்கு 'ஸுஜூத்' செய்யுமாறு அல்லாஹ் அவர்களை பணித்தான். ஸூரத்துல் பகராவில் தொடர்ந்து வரும் வசனம் இவ்வுண்மையை விளக்குகின்றது:

''மேலும் நாம் மலக்குகளிடம், 'ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள் எனக் கூறியபோது இப்லீஸைத் தவிர அவர்கள் (அனைவரும்) ஸுஜூது செய்தார்கள்...'' (1:34)

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் 'உலுல் அஸ்ம்' என்றழைக்கப்படும் ஆறு பெரும் திட உறுதி பூண்ட இறைத்தூதர்களில் ஒருவராவார். அத்தகைய உயர் அந்தஸ்தைப் பெற்றிருந்த அவர்கள் அறிவு ஞானத்தைப் பெற்றிருந்த ஓர் இறையடியாரை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கண்டுபிடித்து பொறுமையுடன் அவரிடம் அறிவைப் பெற்ற கதையை அல்-குர்ஆனின் அல்-கஹ்ப் அத்தியாயம் குறிப்பிடுகின்றது.

இனி நாம் அறிவின் முக்கியத்துவம் பற்றி நேரடியாகவே அல்-குர்ஆன் எப்படி பேசுகின்றது என்பதை கீழே கவனிப்போம்.

அறிவு எனும் பொருள்படும் 'இல்ம்' () என்ற பதம் அல்குர்ஆனில் என்பது இடங்களில் இடம் பெற்றுள்ளது. இப்பதத்தில் இருந்து பிறந்த சொற்களோ அல்குர்ஆனில் பல நூறு தடவைகள் வந்துள்ளன. அறிவு எனும் கருத்தைக் கொடுக்கும் அல்-அல்பாப் () எனும் சொல் அல்குர்ஆனில் பதினாறு முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பொருளைத் தரும் அந்நுஹா () என்ற சொல் இரு தடவைகள் வந்துள்ளன. அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள

பகுத்தறிவு என்ற பொருளைக் கொடுக்கின்ற அல்-அக்ல் ( ) என்ற வினையடியிலிருந்து பிறந்த சொற்களின் எண்ணிக்கை நாற்பத்தொன்பது ஆகும். சிந்தனை என்ற கருத்தில் பயன்படுத்தப்படும் அல்-பிக்ர் () என்ற சொல்லிலிருந்து பிறந்த பதினெட்டுச் சொற்களும் அதில் இடம்பெற்றுள்ளன் அல்-பிக்ஹ் () (விளக்கம்) என்ற பதத்திலிருந்து பிறந்த இருபத்தொரு சொற்களும் காணப்படுகின்றன. 'அல்ஹிக்மா' ஞானம் () என்ற பதம் இருபது தடவைகள் வந்துள்ளதுடன், ஆதாரம் என்னும் பொருள்படும் அல்-புர்ஹான் () என்ற சொல் ஏழு தடவைகளும் அல்-குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுடன் 'ஆராய்தல்', 'நோக்குதல்', 'சிந்தித்தல்' போன்ற கருத்துக்களைத் தரும் பல சொற்களும் அல்-குர்ஆனில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன.

இவை அனைத்துக்கும் மேலாக, முதன் முதலாக இறங்கிய அல்குர்ஆனின் வசனங்களே அறிவைப் பற்றியும் அறிவின் அடிப்படைகளாகத் திகழும் வாசிப்பு, எழுத்து, எழுதுகோல் பற்றியும் பேசுவதைப் பார்க்கின்றோம்.

''(நபியே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். நீர் ஓதும், உமது இறைவன் மாபெரும் கொடையாளி, அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.'' (96:5)

இவ்வசனங்களைத் தொடர்ந்து இறங்கிய வசனங்களும் அறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவனவாகவே அமைந்துள்ளன.

''நூன்'' எழுதுகோலின் மீதும் அதனைக் கொண்டு அவர்கள் எழுதுபவை மீதும் சத்தியமாக'' (68:1)

ஆராயுமாறும் சிந்திக்கும்படியும் மனிதர்களைத் தூண்டுகின்ற சுமார் 35 வசனங்கள் அல்குர்ஆனில் காணப்படுகின்றன. உதாரணத்திற்குக் கீழ்வரும் வசனத்தைப் படியுங்கள்.

''அவற்றின் கனிகளை நோக்குவீர்களாக. அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாகும் விதத்தையும் உற்று நோக்குவீர்களாக. விசுவாசம் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன'' (6:99)

கல்வியைத் தேடி உலகில் பயணம் செய்யுமாறு தூண்டும் சுமார் 50 வசனங்களை அல்குர்ஆனில் காண முடிகின்றது. இத்தகைய வசனங்களுக்கு உதாரணமாகப் பின்வரும் வசனத்தைக் குறிப்பிடலாம்.

(நபியே) நீர் கூறும், ''பூமியில் சுற்றித் திரிந்து (ஆரம்பத்தில்) சிருஷ்டிகளை எவ்வாறு படைத்தான் என்பதைப் பாருங்கள்'' (29:9)

அல்குர்ஆனில் பிரபஞ்சம் தொடர்பாகவும் அறிவியல் அத்தாட்சிகள் தொடர்பாகவும் பேசுகின்ற சுமார் 750 வசனங்கள் காணப்படுகின்றன.

அல்குர்ஆனில் இயற்கை விஞ்ஞானம், வானவியல், தாவரவியல், விலங்கியல், விவசாயம், மானிடவியல், மனோதத்துவம், மருத்துவம், சமூகவியல், வரலாறு, புவியியல் போன்ற துறைகளுடன் தொடர்பான பல உண்மைகளும், அவற்றோடு தொடர்புடைய பல அடிப்படைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அல்குர்ஆன் அறிவின் அவசியத்தை எந்தளவு வலியுறுத்துகின்றதெனில், அறிஞர்களே அல்லாஹ்வைச் சரியாகப் பயப்படுபவர்களாக இருப்பர் என்று கூறுகின்றது.

''அல்லாஹ்வை அவனது அடியார்களில் அஞ்சுபவர்கள் அறிஞர்களே.'' (35:28 மேலும், அல்குர்ஆன் அறியாமையையும் மடமையையும் நரகத்தின் பாதையென வர்ணிக்கின்றது.

''நிச்சயமாக மனிதர்களிலும் ஜின்களிலும் அதிகமானோரை நாம் நரகத்திற்காகவே படைத்திருக்கின்றோம். அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன் எனினும், அவற்றைக் கொண்டு அவர்கள் உணரமாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றன. எனினும், அவற்றைக் கொண்டு அவர்கள் பார்;க்க மாட்டார்கள். அவர்களுக்குக் காதுகள் உண்டு. அவற்றைக் கொண்டு கேட்க மாட்டார்கள். இத்தகையவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள். அன்றியும், அவற்றை விட வழிகெட்டவர்கள்'' (7:179)

இதுவரை நோக்கியவற்றிலிருந்து அல்குர்ஆன் அறிவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிவும். இனி, ஸுன்னா அறிவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் பற்றி கிழே நோக்குவோம்.

அறிவு பற்றி அல்-ஹதீஸ்

பெரும்பாலான ஹதீஸ் கிரந்தங்களில் 'கிதாபுல் இல்ம்' என்ற பெயரில் அறிவைப் பற்றிப் பேசும் ஹதீஸ்களைக் கொண்ட ஒரு தனியான அத்தியாயத்தைக் காண முடியும். அறிவுடன் தொடர்பான பல ஹதீஸ்கள் வேறு பல அத்தியாயங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. உதாரணமாக 'கிதாபுத் திப்பி' (மருத்துவம் பற்றியது) என்ற அத்தியாயத்தைக் குறிப்பிடலாம். நூற்றுக்கணக்கான ஹதீஸ் கிரந்தங்களில் ஒன்றான ஸஹீஹுல் புஹாரியில் மாத்திரம் 'கிதாபுல் இல்ம்' என்ற அத்தியாயத்தில் 102 நபிமொழிகள் காணப்படுகின்றன. இனி, அறிவின் சிறப்பைக் கூறும் சில ஹதீஸ்களைக் பார்ப்போம்.

'ஒருவர் ஓர் அறிவைத் தேடி ஒரு பாதையில் சென்றால், அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலகுபடுத்திக் கொடுக்கின்றான்.' (முஸ்லிம்)

"நிச்சயமாக அறிவைத் தேடிச் செல்பவனுக்கு, மலக்குகள் அவன் செய்யும் அவ்வேலையில் திருப்தியடைந்து தமது இறக்கைகளை விரிக்கின்றனர். அறிஞனுக்காக, நீரில் உள்ள மீன்கள் உட்பட, வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் பாவ மன்னிப்புக் கோருகின்றன. ஓர் 'ஆபித்' (வணக்கவாளிக்கு) முன்னால், ஓர் அறிஞனின் சிறப்பு, நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும். மேலும், அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர். நபிமார்கள் தங்க நாணயத்தையோ அல்லது வெள்ளி நாணயத்தையோ வாரிசாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் வாரிசாக விட்டுச் சென்றதெல்லாம் அறிவையேயாகும். அதனைப் பெற்றுக் கொண்டவர் பெரும் பேற்றைப் பெற்றுக் கொண்டவராவர்." (அபூ தாவூது, அஹ்மத்)

அறிவின் சிறப்பைக் கூறும் நமது முன்னோர் சிலரின் கருத்துக்களை கீழே கவனிப்போம்.

முஆத் இப்னு ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்:

''அறிவைக் கற்றுக் கொள்ளுங்கள். அதனை அல்லாஹ்வுக்காகக் கற்பது இறையச்சமாகும். அதனைத் தேடுவது இபாதத்தாகும். அதனை மீட்டுவது தஸ்பீஹாகும். அதனைப் பற்றி ஆராய்வது ஜிஹாதாகும். அறியாதவருக்கு அதனைக்கற்பிப்பது ஸதக்காவாகும். அதனை அதற்குரியவர்களுக்கு அளிப்பது நற்கருமமாகும்.

அது (அறிவு) தனிமையின் தோழன், மார்க்கத்தின் வழிகாட்டி, இன்ப துன்பத்தின் போது உதவியாளன், நண்பர்க்கு மத்தியில் மந்திரிஇ நெருக்கமானவர்களுக்கு மத்தியில் நெருங்கியவன்இ சுவனப் பாதையின் ஒளிவிளக்கு; இதனைக் கொண்டு அல்லாஹ் சிலரை உயர்த்தி, அவர்களை நன்மையான விடயங்களுக்கு முன்னோடிகளாகவும் ஆக்கிவிடுகின்றான்.

அவர்களின் அடிச்சுவட்டில் பலர் செல்வர். அவர்களின் தோழமையை மலக்குகளும் விரும்புவர். மலக்குகள் அவர்களைத் தங்களது இறக்கைகளினால் தடவிடுவர். கடலில் உள்ள மீன்கள், ஏனைய ஜீவராசிகள், கரையில் உள்ள மிருகங்கள், கால்நடைகள், வானம், நட்சத்திரங்கள் உட்பட பசுமையான,  காய்ந்த, உலர்ந்த அனைத்தும் அவர்களுக்காகப் பிரார்த்திக்கின்றன..........''

அல் ஹஸனுல் பஸரி கூறுகின்றார் : ''அறிஞர்கள் இல்லாதிருந்தால் மனிதர்கள் மிருகங்களைப் போன்றிருப்பர்''. ''அறிஞர்கள் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உம்மத்தினர் மீது அவர்களின் பெற்றோரைவிட அன்பு கொண்டவர்கள்'' என்று யஹ்யா இப்னு முஆத் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள். இதனைக் கேட்ட சிலர் 'அது எப்படி' என்று வினவினர். அதற்கு யஹ்யா இப்னு முஆத், ''அவர்களின் பெற்றோர் உலக நெருப்பிலிருந்து அவர்களைப் பாதுகாக்கின்றனர். அறிஞர்களோ அவர்களை மறுமையின் நெருப்பிலிருந்து பாதுகாக்கின்றனர்'' என்றார்.

அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ''மனிதர்கள் யார்'' என்று வினவப்பட்டது. அதற்கு அவர் ''அறிஞர்கள்'' என்று கூறினார். ''மனிதனுக்கு உணவு, பானம் ஆகியவற்றின்பால் உள்ள தேவையை விட, அறிவின் பால் உள்ள தேவையே மிகவும் அதிகம்'' என்றார்கள் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல். ஸுன்னத்தான வணக்க வழிபாடுகளைவிடக் கல்வி கற்பதிலும், அறிவைத் தேடுவதிலும் ஈடுபடுவது சிறந்தது என்பது இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாகும். ஏனெனில், அறிவின்றி வணக்கத்தில் ஈடுபடுவது அத்திவாரமின்றி ஒரு கட்டடத்தை எழுப்புவது போலாகும். அறிவின் மூலமே ஒருவனால் வணங்கங்களின் முறைகள், ஒழுங்குகள், நிபந்தனைகள் போன்றவற்றையெல்லாம் அறியமுடிகின்றது. எனவேதான் அறிவைத் தேடுவதை மிகச் சிறந்ததொரு வணக்கமாக இமாம்கள் கருதுகின்றனர். இதனை விளக்கும் சில பெரியார்களின் கருத்துக்களைக் கீழே தெரிந்துகொள்வோம்.

''கல்வி கற்பது ஒரு வணக்கமாகும்'' (இப்னு மஸ்ஊத்). ''சிறிது நேரம் கல்வி கற்பது ஓர் இரவு நின்று வணங்குவதை விட மேலானதாகும்'' (அபூதர்தா) ''சிறிது நேரம் இருந்து எனது மார்க்கத்தைப் பற்றிய அறிவைப் பெறுவது ஓர் இரவு முழுவதும் விடியும் வரை நின்று வணங்குவதை விட எனக்கு விருப்பமானதாகும்'' (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு)

''கடமையான பர்ளுளை அடுத்து அறிவைத் தேடுவதைவிடச் சிறந்ததோர் அமல் இல்லை'' (இமாம் அஸ்ஸெளரி ரஹ்மதுல்லாஹி அலைஹி) ''நபீலான தொழுகையை விட அறிவைப் பெறுவது சிறந்தது'' (இமாம் அஷ்ஷாபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி)

அறிவைத் தேடுவது அடிப்படையான, கடமையான வணக்க வழிபாடுகளுக்குத் தடையாக அமைவது கூடாது என்பதை நாம் மனதிற் கொள்ளல் வேண்டும்.

அறிவைப் பெறுவது இஸ்லாத்தில் மிக மேலான அமலாகக் கருதப்படும் ஜிஹாதைவிடச் சிறந்தது என்றும் கருதப்படுகின்றது. ஏனெனில் ஜிஹாதின் சிறப்பு, அதன் வரையறைகள், நிபந்தனைகள் போன்றவற்றையும் அறிவைக்கொண்டே விளங்க முடியும்.

அறிவைப் பெறுவது ஜிஹாதை விடச் சிறந்தது என்ற கருத்தைக் கீழ்வரும் வாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.

''எனது ஆன்மா எவன் கைவசம் இருக்கின்றதோ, அவன் மீது சத்தியமாக, அல்லாஹ்வின் பாதையில் கொலைசெய்யப்பட்ட ஷஹீதுகள் மறுமையில் அறிஞர்களின் அந்தஸ்தைக் கண்டு, தாங்களும் அறிஞர்களாக எழுப்பப்பட்டிருக்க வேண்டுமே என்று விரும்புவார்கள்.'' (அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு )

''அறிஞனின் மையையும் ஷஹீதுகளின் இரத்தத்தையும் நிறுத்தால், அறிஞர்களின் மையே கனமாக இருக்கும்.'' (அல் ஹஸனுல் பஸரி ரஹ்மதுல்லாஹி அலைஹி)

அறிவு குறைந்து, உலகில் அறியாமை இருள் சூழும் போது உலக வாழ்வு நிலைப்பதற்கில்லை. இந்நிலை உலகின் அழிவுக்குக் கட்டியம் கூறுவதாக இருக்கும் என்ற கருத்தைத்தரும் பல ஆதாரபூர்வமான ஹதீஸ்களைக் காண முடிகின்றது.

''அறிவு உயர்த்தப்படுவதும், அறியாமை நிலை பெறுவதும் யுக முடிவின் அடையாளங்களில் ஒன்றாகும்'' என நபியவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி)

இதிலிருந்து இந்த உலகமும் அறிவிலேயே நிலைத்திருக்கின்றது என்ற உண்மையை விளங்கமுடிகின்றது.

முதற்பகுதியில் இஸ்லாம் கல்விக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விளங்கிக் கொண்ட நீங்கள், இப்பகுதியில் கல்வி பற்றி இஸ்லாத்தின் கண்ணோட்டத்தையும், அறிவு பற்றிய அதன் கோட்பாட்டையும் விளங்கிக் கொள்ளப் போகின்றீர்கள்.

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன். அனைத்து விடயங்கள் பற்றியதுமான பூரண அறிவு அவனிடமே உள்ளது. அறிவு பற்றிய இஸ்லாத்தின் இந்த நோக்கைக் கீழ்வரும் அல்குர்ஆன் வசனம் அழகாக விளக்குகின்றது.

''மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே இருக்கின்றன. அவற்றை அவனையன்றி வேறெவரும் அறியமாட்டார்கள். தரையிலும் கடலிலும் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் எந்தவொரு இலையும் உதிர்வதில்லை. பூமியின் அடர்ந்த இருளில் கிடக்கும் வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (அவனுடைய) தெளிவான புத்தகத்தில் இல்லாமலில்லை''. (6:59)

இவ்வாறு கூறும் போது இயற்கையைப் பற்றியும், அதன் நிகழ்வுகளைப் பற்றியும், பிரபஞ்சத்தைப் பற்றியும், அதில் பொதிந்து கிடக்கும் இரகசியங்களைப் பற்றியும் ஆராய்வதை இஸ்லாம் வரவேற்கவில்லை என்பது கருத்தல்ல. இஸ்லாம் அறிவு, ஆராய்ச்சி, சிந்தனை போன்றவற்றிற்கு எந்தளவு அழுத்தம் கொடுக்கின்றது என்பதை முன்னைய பகுதியில் கண்டோம். உண்மையில், குறித்த அம்சங்கள் பற்றிய மனிதனது ஆய்வானது, பிரபஞ்சத்தில் தொழிற்படும் விதிகளுக்குப் பின்னால் செயற்படும் அல்லாஹ்வின் வல்லமையையும் ஞானத்தையும் கண்டறிவதையே நோக்கமாகக் கொண்டிருத்தல் வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது.

இதனால்தான் மனிதனது அறிவும் ஆராய்ச்சியும் இறை நம்பிக்கையின் அடிப்படையில் அமைய வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இறை விசுவாசத்தின் அடிப்படையில் அமையாத கல்வி, ஆக்கத்திற்குப் பதிலாக அழிவிற்கே இட்டுச் செல்லும் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கையாகும். இவ்வுண்மையை இன்றைய உலகம் நிதர்சனமாகக் காண்கின்றதல்லவா?.

''படைத்த இறைவனது நாமத்தைக்கொண்டு வாசிப்பீராக'' என்று அல்குர்ஆன் கூறுவதன் மூலம், அறிவும் ஆராய்ச்சியும் ஈமானின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது.

இறைநம்பிக்கையில்லாத அறிஞர்களிடம் தமது அறிவில் கொண்ட மதிமயக்கத்தையும், மமதையையுமே காணமுடியும். தமது மூளையையும், அறிவாற்றலையும் பூஜித்து வணங்கும் நிலையிலேயே அத்தகையோர் இருப்பர். ஆனால், இறை நம்பிக்கை கொண்ட நல்லடியார்களான அறிஞர்களோ தமது அறிவாற்றலைக் கொண்டு எத்தனை சாதனைகளைப் படைத்தாலும் இறுமாப்படையாதுஇ தமது திறமைக்கான காரணம் இறை கருணையே என்று நம்புவர். இத்தகைய அறிஞர்களைப் பற்றி அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

உலகின் ஆட்சி அதிகாரமும், மற்றும் பல ஆற்றல்களும், சக்திகளும் கொடுக்கப் பெற்றிருந்த நபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் நிலை கண்டு மதிமயங்கவில்லை. அவர்களது மனோநிலை எப்படி இருந்தது என்பதை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

1. ''இது, எனது இறைவன் நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா?, இல்லையா என்று என்னைச் சோதிப்பதற்காக எனக்குப் புரிந்த பேரருளாகும்'' (27:40) உலகில் பல அற்புதமான சாதனைகளை நிலைநாட்டிய துல்கர்னைன் என்பார் இறுதியில் ஒரு பெரும் மதிலைக் கட்டிவிட்டு, அதற்காக அவர் பாராட்டப்பட்டபோது மொழிந்த ஈமானின் ஒளி சிந்தும் அடக்கமான வசனங்களையும் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

2. ''இது என்னுடைய இறைவனின் அருள்தான். எனது இறைவனின் வாக்குறுதி (யாகிய யுகமுடிவு) வரும்போது தூள் தூளாக்கிவிடுவான். எனது இறைவனின் வாக்குறுதி உண்மையானதே'' என்று கூறினார்கள். (18:98)

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அறிவு இறைநம்பிக்கைக்கு (ஈமான்) முரணானதல்ல. மதம் என்பது, அறிவுக்கும் அறிவியலுக்கும் எதிரானது, மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது, அறிவாராய்ச்சியையும் சிந்தனையையும் மட்டம் தட்டுவதிலேயே அதன் வெற்றி தங்கியுள்ளதென்பது போன்ற கருத்துக்கள், இஸ்லாத்தைப் பொறுத்தளவில் பொருந்தாது.

இஸ்லாமிய வரலாற்றில் அறிவுக்கும் இறைவிசுவாசத்திற்குமிடையில் எத்தகைய முரண்பாடும் இருந்ததாகக் காணமுடியாது. ஏனெனில். ''கண்ணை மூடிக்கொண்டு என்னைப் பின்பற்று'' என்பது இஸ்லாத்தின் போதனையல்ல.

''எமது மூதாதையர் எதில் இருக்கக் கண்டோமோ அதுவே எமக்குப் போதுமானது''. ''நாம் எமது தலைவர்களையும் பெரியோர்களையும் பின்பற்றுபவர்கள்'' என்று கூறிச் செயற்படுவோரை இஸ்லாம் மூடர்கள் என்று கண்டிக்கின்றது
.
மேலும், இஸ்லாம் அறிவியலுக்கு முரணான யுகங்களை மறுத்துரைக்கிறது. அனைத்து நம்பிக்கைகளும், மார்க்க நம்பிக்கைகள் உட்பட உறுதியான அறிவின் அடிப்படையில் அமையவேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றது. முஷ்ரிகீன்களைப் பற்றியும் அவர்களது கற்பனையான தெய்வங்களைப் பற்றியும் கூற வந்த அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.:

''இவைகளெல்லாம் நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்களேயன்றி வேறில்லை. அதற்காக அல்லாஹ் (உங்களுக்கு) எவ்வித ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. அவர்கள் சந்தேகத்தையும் மனோ இச்சையையுமே பின்பற்றுகின்றனரேயன்றி வேறில்லை''. (53:23)

நம்பிக்கைகள் அனைத்தும் ஆதாரத்தின் அடிப்படையில் அமையவேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது. எனவேதான் அல்குர்ஆன் பிழையான நம்பிக்கைகளைக் கொண்ட மனிதர்களை விளித்து, கீழ்வருமாறு கோரும்படி நபியை வேண்டுகின்றது.

''நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் உங்களது ஆதாரத்தை கொண்டுவாருங்கள் என்று (நபியே) கூறுங்கள்''(2:111)

உண்மையான அறிவு ஈமானுக்கு அழைப்பு விடுப்பதாகவே இருக்கும் என்பது அல்குர்ஆனின் கருத்தாகும்.

''எவர்களுக்குக் கல்வியறிவு கொடுக்கப்பட்டிருக்கின்றதோ, அவர்கள் நிச்சயமாக, இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என்று உறுதியாக அறிந்து, இதை விசுவாசித்து மனப்பூர்வமாகவே அவனுக்கு வழிப்படுகின்றனர்'' (22:54)

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அறிவை அறிவுக்காகத் தேடுவது பிழையானதாகும். அறிவும், நம்பிக்கையும், செயலும் இணைந்து தொழிற்பட வேண்டும். செயலற்ற அறிவு பயனற்றது. மேலே நாம் கண்ட அல்குர்ஆன் வசனம், ஒருவனது அறிவு அவனை இறைநம்பிக்கையின் பால் இட்டுச் செல்கின்றது; அந்த இறைநம்பிக்கையின் அடியாக அவனில் இறையச்சம் தோன்றுகின்றது; இதனால் இறைவனை அஞ்சிப் பயந்து அவனுக்கு அடிபணிந்து வழிபடும் நிலை அவனில் உருவாகின்றது என்ற கருத்தைக் கூறுகின்றது. இது அறிவுக்கும் நடத்தைக்கும் இடையிலான இறுக்கமான உறவை அழகாக எடுத்துக் காட்டுகின்றதல்லவா?.

இலட்சியமற்ற கல்வியை இஸ்லாம் கண்டிக்கின்றது. தார்மீக மதிப்பீடுகளும், ஆத்மீகப் பரிமாணமும் அற்ற கல்வி அர்த்தமற்றது என்கிறது. புகழ், கீர்த்தி போன்றவற்றைப் பெற்றுக் கொள்ளல்இ அறிஞர்களை விவாதத்தில் வெற்றி கொள்ளல், மடையர்களை மட்டந்தட்டல், சபைகளில் முன்னுரிமையைப் பெறல் போன்ற உலோகாயத நோக்கங்களுக்காகக் கல்வியைத் தேடுவது பிழையானது எனக் கூறும் இஸ்லாம், அத்தகைய நோக்கங்களுடன் அறிவைத் தேடுபவர் சுவனத்தின் வாடையைக் கூட நுகரும் வாய்ப்பைப் பெறப் போவதில்லை என்றும் கூறிக் கண்டிக்கின்றது.

இஸ்லாத்தின் பார்வையில் அறிவு என்பது இரு வகைப்படும்.

1. மனிதனது ஆன்மீக, தார்மீக மேம்பாட்டுக்கு உதவும் அறிவு

2. உலக வாழ்வில் மனித சுபீட்சத்திற்குத் துணைபுரியும் அறிவு.

முதல்வகை அறிவு இறைவனால் இறைதூது மூலம் வழங்கப்படுகின்றது. அல்குர்ஆனும், அல்ஹதீஸும் இந்த அறிவின் மூலாதாரங்களாக விளங்குகின்றன. இரண்டாம் வகை அறிவு மனிதனது அவதானம், ஆராய்ச்சி போன்ற பகுத்தறிவின் மூலம் பெறப்படுவதாகும்.

இவ்விருவகை அறிவுக்கும் இடையில் இஸ்லாமிய நோக்கில் முரண்பாடு இல்லை. மாறாக, இவையிரண்டினதும் அவசியத்தை இஸ்லாம் வலியுறுத்துகிறது. எனவேதான் ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள் தப்ஸீர், ஹதீஸ், பிக்ஹ் போன்ற ஆன்மீகத் துறைசார்ந்த கலைகளில் மாத்திரமின்றி, வானவியல், கணிதம் மருத்துவம் தத்துவம்-போன்ற துறைகளிலும் ஈடுபட்டு, அவற்றில் முன்னோடிகளாகவும் விளங்கினார்கள்.

இஸ்லாமிய நோக்கில் அறிவானது கூறுபோடப்படுவதில்லை. இந்த வகையில் பயனுள்ள, ஆக்கப் பயிற்சிக்கு உதவும் அனைத்துக் கலைகளையும் இஸ்லாம் வரவேற்கத் தக்க அறிவாகக் கொள்கின்றது. இந்த அடிப்படையில் இறைவனது ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் இஸ்லாம், அறிவின் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்துகின்றது எனலாம். ஏனெனில், பயனுள்ள எல்லா வகையான அறிவினதும் மூலமாக இருப்பவன் அந்த ஏக இறைவனே.

இஸ்லாமிய நோக்கில் கல்வி என்பது பாடபோதனையுடன் மட்டுப்படத்தப்பட்ட ஒன்றல்ல. மாணவனது மூளையில் தகவல்களைத் திணிப்பது அதன் நோக்கமல்ல. அது மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றுமல்ல. மாறாக, அது தனிமனிதனது ஆளுமையின் பரிபூரண வளர்ச்சிக்குத் துணை புரியக் கூடியதாக அமைய வேண்டும்.

ஆளுமை என்பது மனிதனது உடல், உள்ளம், உணர்வு, சிந்தனை, அறிவு, ஆன்மா, நடத்தை, பண்பாடு போன்ற அனைத்துடனும் தொடர்புள்ளது என்பது இஸ்லாத்தின் கருத்து. இஸ்லாமிய கல்வியின் நோக்கம், மனிதனது ஆளுமை முழுமையாக வளர்ந்து, ஓர் உன்னதமான மனிதனை உருவாக்குவதாகும்.

குறிப்பாக இஸ்லாமிய கல்வியின் ஆன்மாவாக அமைவது பண்பாட்டுப் பயிற்சியாகும். மாணவர்களின் ஒழுக்க மேம்பாட்டுக்கும் தார்மீக வளர்ச்சிக்கும் துணைபுரிவதாகக் கல்விப் போதனை அமைய வேண்டும் என்பதில் இஸ்லாம் கண்டிப்பாக உள்ளது.

கல்வித் துறையில் பூரண சுதந்திரம் பேணப்படல் வேண்டும் என்பது இஸ்லாத்தின் கருத்தாகும். கல்வித் துறையில் சமத்துவம் பேணப்படுவதுடன் அனைவருக்கும் சம சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது. இந்த வகையில், இஸ்லாமிய கல்விமுறை அமுலில் இருந்த இஸ்லாமிய ஆட்சிக் காலத்தில் கல்வி நிலையங்கள் அனைவருக்கும் திறந்துவிடப்பட்டன.

அங்கு தரவேறுபாடு கருத்திற் கொள்ளப்படவில்லை. வயதுக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கவில்லை. சான்றிதழ்கள், புள்ளிகள் போன்றன பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளப்படவுமில்லை. கல்வி, கேள்வி, ஆய்வு போன்றவற்றில் ஆர்வமும், ஈடுபாடுமே பிரவேசத்திற்கான தகைமைகளாகக் கொள்ளப்பட்டன.

source:   http://velliarangam.blogspot.com