Home இஸ்லாம் வரலாறு ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்?
ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்? PDF Print E-mail
Wednesday, 01 August 2018 09:18
Share

Pets Foods and Care - Which type of Foods Lovebirds Eat

ரிஜ்க் எவ்வாறு கிடைக்கும்?

ஆசிரியருக்கும் (இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி) மாணவருக்கும் (இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி) இடையே நடைபெற்ற ருசிகர சம்பவம்!

அல்லாஹ் எவ்வித காரணமுமின்றி ஓர் அடியானுக்கு அவனுக்குரிய உணவை அளிப்பான் என்பது இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கருத்து.

இல்லை! ஒருவன் சிறிதளவேனும் முயற்சி செய்தாலேயே தவிர அவனுக்கு அவனின் வாழ்வாதாரங்கள் கிடைக்காது என்பது இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் மாணவர் இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் நிலைப்பாடு.

 : "لو توكلتم على الله حق توكله، لرزقكم كما يرزق الطير، تغدو خِماصاً وتروح بِطاناً

நீங்கள் அல்லாஹ்வின் மீது தவக்குல் -நம்பிக்கையை வைக்கவேண்டிய முறையில் வைத்தால் பறவைகளுக்கு அல்லாஹ் உணவு அளிப்பதைப்போல் உங்களுக்கும் அளிப்பான்.   பறவைகள் காலை கூட்டை விட்டு பசியோடு வெளியே பறக்கின்றன. மாலை வயிறு நிரம்பிய நிலையில் தனது இருப்பிடத்திற்குத் திரும்புகின்றன" எனும் நபிமொழியை அதற்கு ஆதரமாக முன் வைத்தார்கள் இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.

பறவைகள் தனது இருப்பிடத்தை விட்டு வெளியே செல்வதினால் தானே அவைகளுக்கு உணவு கிடைக்கிறது.

அதே போல் மனிதன் வெளியே வந்து தேடினால் தான் அவனுக்குக் கிடைக்கவேண்டியது கிடைக்கும் என அதே நபிமொழியிலிருந்தே ஆதாரத்தைக்காட்டினார்கள் இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.

இருப்பினும் இமாம் மாலிக் தனது கருத்தில் உறுதியாக இருந்தார்கள்.

எப்படியாவது தனது கருத்திற்கு வலுசேர்க்கும் ஆதாரத்தை தனது ஆசிரியப்பெருந்தகைக்கு முன் வைக்கவேண்டும் என எண்ணிய வண்ணம் இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது ஒரு முதியவர் பழக்கூடை ஒன்றை சுமக்கமுடியாமல் சுமந்து செல்வதைக் கண்டார்கள்.

அருகே சென்று அந்தக் கூடையை வாங்கி தன் தோளில் சுமந்து கொண்டு அந்த முதியவரின் இருப்பிடத்திற்குச் சென்று இறக்கிவைத்தார்கள்.

இமாம் அவர்களின் பண்பை கண்டு மகிழ்ந்த அம்முதியவர் கை நிறைய பழங்களை அன்பளிப்பாகத் தந்தார்.

தாம் அவருக்கு உதவிய காரணத்தினாலேதானே அம்முதியவர் இந்தப் பழங்களைத் தந்தார். அவருக்கு நாம் உதவாவிட்டால் இப்பழங்கள் கிடைத்திருக்காதே!

இதை தன்னுடைய கருத்திற்கு சரியான ஆதாரம் எனக் கருதிய இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அப்பழங்களை எடுத்துக்கொண்டு இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் முன் வைத்து ஆசிரியப் பெருந்தகையே! இதோ பாருங்கள் நான் ஒருவருக்கு உதவி செய்தேன் அல்லாஹ் எனக்கு இந்த ரிஜ்கை வழங்கினான் என்றார்கள் பணிவுடன்.

புன்னகை புரிந்த வண்ணம் இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அப்பழங்களில் ஒன்றை எடுத்து சாப்பிட்டார்கள்

பின் சொன்னார்கள்: பார்த்தீரா முஹம்மது பின் இத்ரீஸ்! (இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் இயற்பெயர்) நான் எந்தவொரு முயற்சியும் செய்யாமல் சிரமத்தையும் அனுபவிக்கமலேயே என்னைத்தேடி இந்த ரிஜ்க் வந்திருக்கிறது என்றார்கள்.

இரண்டு அறிஞர் பெருமக்களும் குர்ஆனின் வசனங்களிலிருந்து தான் ஆய்வு செய்து கூறுகிறார்கள்

அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்காதவகையில் ரிஜ்க் அளிப்பான் என்று குர்ஆன் கூறுகிறது.

وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ‌ ؕ ا‏ 65:3.

அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான்.

அதே குர்ஆன் மனிதன் முயற்சித்தளவே தவிர அவனுக்குக்கிடைக்காது எனவும் கூறுகிறது.

53:39 وَاَنْ لَّيْسَ لِلْاِنْسَانِ اِلَّا مَا سَعٰى

"மனிதனுக்கு அவன் முயற்சித்தது தவிர வேறு இல்லை'' என்று இருப்பது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?

மனிதன் முயற்சிக்காமல் தானாக வரும் என அமர்ந்திருந்தால் இறைவன் நாடினால் கிடைக்கும் கிடைக்காமலும் போகலாம்.

ஆனால் ஒருமனிதன் இறைவனின் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து முயற்சித்தால் நிச்சயமாக அவனுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்கும்.

இமாம்களின் கருத்துவேற்றுமை பாமரமக்களுக்கு அல்லாஹ் அருளிய வழிகாட்டல் .

ஏதோ காரணத்தால் வாழ்வாதரங்களை போதுமான அளவு பெறமுடியாமல் சிரமப்படுபவர்கள் இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கருத்தின் படி

ஏதோ ஒரு வழியில் அல்லாஹ் நமக்கு உதவிடுவான்" என நம்பிக்கை யுடன் வாழவேண்டும், மனம் தளர்ந்து விடக்கூடாது.

ஆனால் ஒருவன் தனது வாழ்வாதரங்களை முயற்சி செய்து பெற இயலுமென்ற நிலையில் அவன் சோம்பலின் காரணமாக முயற்சி செய்யாமலிருந்தால் அவனுக்கு அல்லாஹ் உதவிசெய்யமாட்டான்" என்பதுதான் இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கருத்து.

- கனியூர் இஸ்மாயீல் நாஜி மன்பஈ