Home இஸ்லாம் கட்டுரைகள் அல்லாஹ்வை நேசிப்பதே வெற்றிக்கு உதவும்
அல்லாஹ்வை நேசிப்பதே வெற்றிக்கு உதவும் PDF Print E-mail
Sunday, 08 July 2018 08:51
Share

அல்லாஹ்வை நேசிப்பதே வெற்றிக்கு உதவும்

      ராஸ்மின் மிஸ்க்      

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : (மூன்று தன்மைகள் அமையப்பெறாத) எவரும் இறைநம்பிக்கையின் சுவையை உணரமாட்டார். (அவை)

1. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்விற்காகவே நேசிப்பது.

2. இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றியப் பிறகு மீண்டும் அதற்குத் திரும்புவதை விட நெருப்பில் வீசப்படுவதையே விரும்புவது.

3. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்றெதையும் விட அவருக்கு நேசத்திற்குரியோராவது. (அறிவிப்பவர் : அனஸ் பின் மாஆக் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 6041)

தன்னை முஸ்லிம் என்று சொல்லிக்கொள்பவர்களில் ஏராளமானோர் அல்லாஹ்வை நேசிப்பதின் அவசியத்தை உணராதவர்களாகத் தான் இருக்கிறார்கள். எனவே தான் தன் தாய் தந்தை நண்பர்கள் இன்ன பிற உறவினர்களை விரும்புவது போல் கூட அல்லாஹ்வை அவர்கள் நேசிப்பதில்லை.

தொழுகைக்கு வரும் தொழுகையாளிகளில் உண்மையில் அல்லாஹ்வின் மீது உள்ள நேசத்தால் தொழக்கூடியவர்கள் எத்தனை பேர்? அல்லாஹ்வை விரும்பியதினால் மனப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்றுள்ளவர்கள் எத்தனை பேர்?

 இந்த நேசத்தை நம் மனம் சுவைக்காத காரணத்தினால் தான் மக்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் சுமையாகத் தெரிகிறது. இறைவனை வழிபடுவது மலையாகத் தெரிகிறது. அவனுடைய நேசத்திற்கு ஒரு பெரும் பகுதியை நம் உள்ளத்தில் ஒதுக்கியிருந்தால் தொழுவதே நமக்கு இன்பமாக மாறியிருக்கும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வை நேசித்தக் காரணத்தினால் தொழுவது அவர்களுக்கு இன்பத்தைத் தரக்கூடியதாக இருந்தது.

அல்லாஹ்வை நேசிப்பதை சாதாரண ஒரு விஷயமாக நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. தொழுகை நோன்பு தர்மம் இவற்றையெல்லாம் விட மறுஉலக வெற்றிக்கு மிக அவசியமானதாக அது இருந்துகொண்டிருக்கிறது. ஏனென்றால் இது இருந்தால் தான் முஸ்லிம் என்ற வட்டத்திற்குள் மனிதன் வருகிறான். இத்தன்மை எப்போது அவனை விட்டும் நீங்கிவிடுகிறதோ அப்போது இஸ்லாத்தை விட்டும் அவன் வெளியேறிவிடுகிறான்.

ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே மறுமைநாள் எப்போது வரும்? என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதற்காக நீ என்ன முயற்சி செய்துள்ளாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் அதற்காக நான் அதிகமான தொழுகையையோ நோன்பையோ தான தர்மங்களையோ முன் ஏற்பாடாகச் செய்து வைக்கவில்லை. ஆயினும் நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்று சொன்னார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீ யாரை நேசிக்கின்றாயோ அவருடன் (மறுமையில்) இருப்பாய் என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அனஸ் பின் மாஆக் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 6171)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : மூன்று விஷயங்கள் யாரிடத்தில் இருக்கின்றதோ அவர் நரகத்தை விட்டும் தடுக்கப்படுவார். நரகம் அவரை விட்டும் தடுக்கப்படும். (அவை) அல்லாஹ்வை நம்புவது. அல்லாஹ்வை நேசிப்பது. இணைவைப்பிற்கு திரும்பிச் செல்வதை விட நெருப்பில் போடப்பட்டு கருக்கப்படுவது அவருக்கு விருப்பமானதாக வேண்டும். (அறிவிப்பவர் : அனஸ் பின் மாஆக் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத் 11679)

மறுமையில் மட்டுமல்லாது இவ்வுலகில் அல்லாஹ்வின் கோபப்பார்வையிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அல்லாஹ்வை நேசிக்க வேண்டும். அவனை நேசிக்காமல் அவனை மறந்து வாழ்ந்தால் நம்மை அழித்துவிட்டு அவனை நேசிக்கும் நல்லக்கூட்டத்தாரை அல்லாஹ் படைப்பான்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏக இறை வனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 5 : 54)

பல காரணங்களினால் நாம் ஒருவரை நேசிக்க ஆரம்பிக்கிறோம். எந்த விதமானத் தகுதிகளும் இல்லாமல் தன்னை நேசிக்க வேண்டும் என்று அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்க்கவில்லை. மற்றனைவர்களையும் விட எல்லா விதமானத் தகுதிகளையும் பெற்றுக்கொண்டு தான் நம்மிடத்தில் உரிமை கொண்டாடுகிறான்.

அள்ளித்தருவதில் அல்லாஹ் குறைந்தவனா?

மனிதன் பிறர் செய்யும் உபகாரத்திற்கு அடிமையாவான் என்று அரபியில் ஒரு பழமொழி கூட சொல்வார்கள். நமக்கு நன்மை செய்பவர்களை நாம் நேசிப்பதும் அவர்களுக்காக உயிரையும் கொடுப்பது மனித இயல்பு. ஒரு டீயை வாங்கிக்கொடுத்ததற்காக சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு அவருக்குப் பின்னால் அலைந்துகொண்டிருப்பவர்களும் உண்டு.

அல்லாஹ்வின் பெரும் பெரும் உதவியை ஒவ்வொரு நேரத்திலும் நாம் அனுபவித்துக்கொண்டு அவனை நேசிக்காமல் இருப்பது நன்றிகெட்டத் தனமில்லையா? இறைவன் நமக்குக் கொடுத்துள்ள ஆரோக்கியம் உடல் உறுப்புகள் அவற்றின் இயக்கம் தன்மை இவையனைத்தையும் விட பெரிய உதவி வேறு என்ன இருக்க முடியும்?. மனிதனுக்கு இறைவன் தந்திருக்கக்கூடிய பாக்கியங்களைப் பற்றி குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் உங்களால் எண்ண முடியாது. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். அல்குர்ஆன் (16 : 18)

உங்களிடம் உள்ள ஒவ்வொரு அருட்கொடையும் அல்லாஹ்வுடையது. பின்னர் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனிடமே முறையிடுகின்றீர்கள். (அல்குர்ஆன் 16 : 53)

அல்லாஹ் தான், வானங்களையும், பூமியையும் படைத்தான். வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் உங்களுக்கு உணவாகக் கனிகளை வெளிப்படுத்தினான். அவனது கட்டளைப்படி கடலில் செல்வதற்காக கப்பலையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். ஆறுகளையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். (அல்குர்ஆன் 14 : 32)

அல்லாஹ் அழகில் குறைந்தவனா?

உடல் தோற்றம் அழகாக இருப்பதினால் ஒருவரின் மீது நேசம் வருகிறது. நடிகன் நடிகர்களிடத்தில் ஏதோ ஒரு கவர்ச்சி இருப்பதினால் அவர்களுக்குப் பின்னால் விளங்காத கூட்டம் சென்றுகொண்டிருக்கிறது. இவர்களின் தோலும் தோற்றமும் வேண்டுமானால் வெண்மையாக இருக்கலாம். ஆனால் இவர்களின் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் அசிங்கமானவை. ஆபத்தானவை.

அல்லாஹ்வைப் பொறுத்தவரையில் அவனது தோற்றமும் அழகானது. அவனது எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் அழகானது. அவன் விரும்புகின்ற விஷயங்களும் அழகானது. அழகிற்காக ஒருவரை நேசிப்பதாக இருந்தால் முதலில் அல்லாஹ்வைத் தான் நாம் நேசிக்க வேண்டும்.

நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்ஆம் 147)

சொர்க்கத்தில் சொர்க்கவாசிகளுக்கு கிடைக்கும் இன்பங்கள் எல்லாவற்றையும் விடவும் அல்லாஹ்வை பாப்ப்பது தான் அவர்களுக்கு மிகவும் இன்பமாக இருக்கும். அல்லாஹ்வை பார்ப்பதே இனிமையாக இருக்கும் என்றால் அவன் எப்படிப்பட்ட அழகைக் கொண்டவனாக இருப்பான் என்பதை கவனிக்க வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்துவிடும் போது (அவர்களிடம்) அல்லாஹ் உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா? என்று கேட்பான். அதற்கு அவர்கள் இறைவா நீ எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா? எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்யவில்லையா? (இதைவிடக் கூடுதலாக எங்களுக்கு வேறென்ன வேண்டும்)? என்று கேட்பார்கள்.

அப்போது அல்லாஹ் (தன்னைச் சுற்றிலும் இருக்கும்) திரையை விலக்கி (அவர்களுக்கு தரிசனம் தந்தி)டுவான். அப்போது தம் இறைவனைக் (காணும் அவர்களுக்கு அவனைக்) காண்பதைவிட மிகவும் விருப்பமானது வேறெதுவும் வழங்கப்பட்டிராது. (நூல் : முஸ்ஆம் 297)

அல்லாஹ் அன்பு செலுத்துவதில் குறைந்தவனா?

நம்மீது ஒருவர் அன்புகாட்டினால் அவர் மீது நமக்கு அன்பு ஏற்படத்தொடங்கிவிடுகிறது. பெற்றெடுத்தத் தாய் குழந்தையின் மீது அதிக பாசத்தை பொழிவதால் குழந்தைக்கு தாயின் மீது அதிக பாசம் ஏற்படுகிறது. இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்தாலும் அல்லாஹ்வை அதிகம் அதிகமாக நேசிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். ஏனென்றால் அல்லாஹ் நம்மீது வைத்திருக்கும் அன்பைப் போல் எவரும் நம்மீது அன்புகாட்ட இயலாது.

இன்றைக்கு தாயின் பாசம் தான் உயர்ந்த நேசமாக உலகத்தில் சிறப்பித்துக் கூறப்படுகிறது. ஆனால் அல்லாஹ் அடியார்கள் மீது காட்டும் அன்பையும் ஒரு தாய் தன் குழந்தையின் மீது காட்டும் அன்பையும் ஒப்பிட்டுப்பார்த்தால் அல்லாஹ் அடியார்கள் மீது பொழியும் பாசத்தில் கடுகளவுக்குக் கூட தாய்ப்பாசம் நிகராகாது.

சகல சக்திகளையும் பெற்று எல்லா வகையிலும் சிறந்து விளங்கும் இறைவன் அற்பமான மனிதர்களை மிகவும் நேசிக்கிறான் என்றால் அவனை நாம் நேசிக்காமல் இருக்கலாமா?பின்வரும் ஹதீஸ்கள் அல்லாஹ்வின் அன்பை விவரிக்கக்கூடியவையாக இருக்கிறது.

(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள். குழந்தை கிடைக்கவில்லை.) கைதிகளில் (தன்) குழந்தையை அவள் கண்டபோது அதை வாரி எடுத்து தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள் என்றார்கள். நாங்கள் இல்லை. எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான் என்று சொன்னார்கள். (அறிவிப்பவர் : உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 5999)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்விற்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை ஜின் மனிதன் மிருகங்கள் ஊர்வன ஆகியவற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் அவை ஒன்றொன் மீதொன்று பாசம் கொள்கின்றன. பரிவு காட்டுகின்றன. அதன் மூலம் தான் விலங்குகூட தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் அடியார்களுக்கு அன்பு காட்டுவான். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்ஆம் 5312)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : உங்களுக்கு முன் (ஒரு காலத்தில்) ஒரு மனிதர் இருந்தார். அல்லாஹ் அவருக்கு செல்வத்தை வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கிவிட்ட போது தன் மகன்களிடம் உங்களுக்கு எப்படிப்பட்ட தந்தையாக நான் இருந்தேன்? என்று கேட்டார். அவர்கள் சிறந்த தந்தையாக இருந்தீர்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர் நான் நற்செயல் எதுவும் செய்யவில்லை. ஆகவே நான் இறந்துவிட்டால் என்னை எரித்துவிடுங்கள். பிறகு என்னை பொடிபொடியாக்கி சூறாவளிக் காற்று வீசும் நாளில் (காற்றில்) என்னைத் தூவிவிடுங்கள் என்று சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அவரை அல்லாஹ் ஒன்று திரட்டி (முழு உருவை மீண்டும் அளித்து) இப்படிச் செய்ய உத்திரவிடும்படி உன்னைத் தூண்டியது எது? என்று கேட்டான். அவர் உன் (மீது எனக்குள்ள) அச்சம் தான் என்று கூறினார். உடனே அவரைத் தன் கருணையால் அல்லாஹ் அரவணைத்துக் கொண்டான். (அறிவிப்பவர் : அபூசயீத் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 3478)

அல்லாஹ்வின் கருணையை விவரிக்கும் செய்திகள் ஏராளமாக இருக்கின்றன. உதாரணத்திற்காக சிலவற்றை மாத்திரம் கூறியுள்ளோம். அதிகமான வணக்க வழிபாடுகள் துன்பம் வரும் போது அல்லாஹ்வின் பக்கம் திரும்புவது நன்மை ஏற்படும் போது அவனைப் புகழ்வது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனைகள் போன்ற நற்காரியங்களை தொடர்ந்து செய்து வந்தால் அல்லாஹ்வின் நேசம் நம் மனதில் குடியேறத் தொடங்கிவிடும்.

எனவே நேசிப்பதற்குத் தேவையான அனைத்துத் தகுதிகளையும் பெற்ற இறைவனை நேசித்து இறைநம்பிக்கையை பாதுகாத்துக்கொள்ளும் சிறப்பை நம்மனைவருக்கும் அல்லாஹ் வழங்குவானாக.