Home இஸ்லாம் கட்டுரைகள் அறிவின் அழகு
அறிவின் அழகு PDF Print E-mail
Wednesday, 23 May 2018 20:22
Share

அறிவின் அழகு

நான் இஸ்லாத்திற்கு வந்த போது, என்னை மிகவும் ஆழமாக நெகிழச்செய்தது, இஸ்லாமில் கல்விக்கு உள்ள முக்கியத்துவம். இஸ்லாம், நாம் வாழும் தினசரி வாழ்வோடு முழுமையான தொடர்புடைய ஒரு ஞானத்தின் கருவூலம்.

ஆம்! அல்லாஹ் (சுபஹ்) அறிவை(இல்ம்)த் தேடுவதை ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாக்கியிருப்பது எனக்கு மிகவும் வியக்கத்தக்கதாகவும் அழகானதாகவும் தெரிகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: “அறிவைத்தேடுவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கட்டாயக் கடமை.” (அத்திர்மிதி)

என் வாழ்வில் ஒரு கட்டத்தில், நான் என்னை பலவிதமான சூழ்நிலைகளில், அவை என்னை ஒரு திசையை நோக்கி தள்ளுவதைக் கண்டேன் – அது இஸ்லாம். நான் “ஒரு போதும் முஸ்லிமாக மாட்டேன்”என சொல்லிக் கொண்டிருந்தேன். நான் மிகக் குறைவாகவே அறிந்திருந்தேன்.

“நான் இஸ்லாமை, அதில் எனக்கு எதுவும் இல்லை என்பதை நிரூபிப்பதற்க்காக படிக்கப்போகிறேன்.”என்ற முடிவை நான் எடுத்தேன் அதைத்தான் நான் செய்தேன். அது என் வாழ்வில், மிகவும் சிந்தையைத் தூண்டிய, மனதை உலுக்கிய, வாழ்வை மாற்றிய பயணமாக இருந்தது. ஏனென்றால், நான் புத்தகங்களைப் படிக்கவும், அறிவுள்ளவர்களின் பேச்சைக் கவனிக்கவும், சீராவையும், குர்ஆனையும் படிக்கவும் துவங்கியபோது, இவை அத்தனையும் தர்க்கரீதியாக இருப்பதை நம்ப முடிந்தது.

அதனால், என்னால் சரணடைவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை. நான் ஒரு நாள் என் சமையலறையில் நின்று கொண்டு, வான் நோக்கி தலையை உயர்த்தி ஷஹாதா சொன்னேன், அன்றிலிருந்து அல்லாஹ், அல் ஹாதி, வழிகாட்டுபவன், என்னை அறியாமை என்ற இருளிலிருந்து ஈமானின் ஒளிக்கு இட்டுச்சென்றான்.

அறிவைத்தேடுவதன் அழகும், இஸ்லாமில் அதற்க்குள்ள முக்கியத்துவமும் என் வாழ்வை நிரந்தரமாக மாற்றியது. இந்த ஹதீஸை நான் படிக்கும்போது என் மனதைப் பறி கொடுத்தேன்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: “அல்லாஹ், அவனுடைய வானவர்கள், வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும், பொந்திலுள்ள எறும்புகளும், நீரிலுள்ள மீன்களும், பயனுள்ள கல்வியை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பவர்களை வாழ்த்துவார்கள்.” (அத்திர்மிதி : 422)

நம் அனைவருக்கும் இந்தத் திறமை – இஸ்லாமைக் கற்பதும், கற்பிப்பதும் – இருக்கிறது என நான் உறுதியாக நம்புகிறேன். அதனால், கீழே நீங்கள் ஒர் ஆக்கபூர்வமான மாணவராகவும், ஆசிரியராகவும் இருப்பதற்க்கான சில பாடங்கள்!

     பாடம் 1:      

நீங்கள் பெற்ற கல்விக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள்

மூஸா மற்றும் கிதருடைய கதையிலிருந்து ஆயத்துகளை எடுப்பதற்குமுன், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அளித்த முக்கியமான பாடத்தைப்பார்ப்போம்: ஒரு முறை மூஸா நபி எழுந்து நின்று பனி இஸ்ராயீல்களிடம் சொற்பொழிவாற்றிய போது, அவர்கள் கேட்டார்கள்:

‘மக்களில் மிகவும் கல்வியறிவு பெற்றவர் யார்?’என்று. அதற்கு அவர், ‘நான் தான் மிகவும் கல்வியறிவு பெற்றவன்’என்றார். அவர் அனைத்தையும் அறிந்திருப்பது அல்லாஹ்வின் தன்மை என்று கூறாததால், அல்லாஹ் மூஸா (அலை)வை எச்சரித்தான். அவருக்கு வஹி அறிவிக்கப்பட்டது –

‘இரு கடல்கள் சந்திக்கும் இடத்தில் என்னுடைய அடிமை இருக்கிறார். அவர் உம்மை விட அறிவு பெற்றவர்.’ மூஸா (அலைஹிஸ்ஸலாம்) “என்னுடைய ரப்பே, அவரை நான் எப்படி சந்திப்பேன்?”என கேட்டார்கள் (அல் புகாரி)

அனைத்தையும் அறிந்த ஒருவரும் இல்லை, அல்லாஹ் (சுபஹ்) அவன் நாடியவர்களுக்கு குறிப்பிட்ட அறிவைக் கொடுக்கிறான். மூஸா (அலைஹிஸ்ஸலாம்) தன்னுடைய அறிவை அல்லாஹ்வோடு தொடர்பு படுத்தவில்லை. நம் அறிவு அனைத்தும் நாம் அல்லாஹ்விடமிருந்து பெற்றது, மேலும் அதற்க்காக அல்லாஹ்விற்கு நன்றி சொல்ல வேண்டும்.

குறிப்பு: விவேகத்தில் பாதி ‘லா அத்ரீ’- ‘எனக்குத் தெரியாது’என சொல்லும் திறனில் உள்ளது. சிலர் அல்லாஹ்வைப்பற்றி அறிவேதும் இல்லாமல் அவனைப்பற்றி பேசுவது ஷிர்க்கை விட மோசமானது. அதனால், “எனக்குத் தெரியாது”என சொல்லும்போது உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்கிறீர்கள்!

     பாடம் 2:      

உறுதியாக இருப்பதின் முக்கியத்துவத்தை அடையாளம் காணுங்கள்

வசனம் 60: இன்னும் மூஸா தம் பணியாளிடம், “இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன். அல்லது வருடக் கணக்கில் நான் போய்க்கொண்டிருப்பேன்.”என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக.”

மூஸா (அலைஹிஸ்ஸலாம்) தன்னை விட அறிவில் சிறந்தவர் ஒருவர் இருக்கிறார் என தெரிந்தபோது, அவரைக் கண்டுபிடிக்க தீர்மானித்தார். அறிவுத்தேடலில் உங்களுக்கு ஒரு உறுதியான தீர்மானம் இருக்க வேண்டும். மூஸா (அலைஹிஸ்ஸலாம்), அல் கிதரைச் சந்திக்கும் வரை ஓய மாட்டேன் என்றார்.

அபு ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவைப்பெறுவதில் தீர்மானமாக இருந்தார். அதை அடையும் வரை அவர் உண்ண மாட்டார்!

     பாடம் 3:      

அறிவைத்தேடும்போது தோழமையின் முக்கியத்துவத்தை உணருங்கள்

வசனம் 62: ‘அவ்விருவரும், அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது, தம் பணியாளை நோக்கி, “நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா. இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச்சந்திக்கிறோம்”என்று (மூஸா) கூறினார்.’அறிவுத் தேடலில் நண்பர்களின் முக்கியத்தை உணருங்கள். ஒருவருக்கொருவர் உதவுங்கள்.

    பாடம் 4:      

ஷைத்தான் அறிவுக்குத் தடை போட முயல்வான் என்பதை அறியுங்கள்

வசனம்63: ‘அதற்கு “அக்கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் நீங்கள் பார்த்தீர்களா? நிச்சயமாக நான் மீனை மறந்து விட்டேன்.”மேலும், அதை (உங்களிடம்) சொல்வதை ஷைத்தனையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை. மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது.”என்று பணியாள் கூறினார்.’

அறிவுத் தேடல் என்பது ஒரு லேசான காரியமல்ல என்பதற்கு இது ஒரு நினைவூட்டல், மேலும், சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பது நிச்சயம். ஷைத்தான் உங்களை அறிவைப்பெறுவதிலிருந்து தடுக்க எப்போதும் முயல்வான். ஏதாவது நல்லவற்றை நீங்கள் மறந்தால் அது ஷைத்தானிடமிருந்து தான்.

    பாடம் 5:      

மாணவர்களுக்கு நல்ல நடத்தை இருக்க வேண்டும்.

வசனம்66: ”உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா?”என்று அவரிடம் மூஸா கேட்டார்.’

அறிவைத் தேடுபவர் எப்போதும் மரியாதையாகவே கேட்பார். மூஸா (அலைஹிஸ்ஸலாம்) தன் கேள்விகளை எப்போதும் மென்மையாகத்தான் கேட்பார். நாமும் அதே போல் தான் நம்முடைய ஆசிரியரையோ, அறிஞரையோ அணுக வேண்டும்.

குறிப்பு: ஒரு கேள்வியைக் கேட்பதற்கு முன், அவர்களுக்காக துவா செய்ய வேண்டும். உதாரணமாக, ‘அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஜன்னதுல் ஃபிர்தௌஸ் அருள்வானாக, என்னுடைய கேள்விஸ’என கேட்க வேண்டும்.

    பாடம் 6:      

ஆசிரியர்களுக்கும் நன்னடத்தை இருக்க வேண்டும்.

வசனம் 67,68: ‘(அதற்கவர்), “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலமாட்டீர்!”என கூறினார். “(ஏனெனில்) எதைப்பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்?”என்று கேட்டார்.’

ஆசிரியருக்கு தன் மாணவனைத் தெரியும்; அல் கிதர் தன் மாணவனை நன்றாக அறிந்திருந்தார். ஆசிரியர் தன் மாணவனுக்கு அறிவுரை வழங்க வேண்டும்; சில சமயம் ஆசிரியர் தன் மாணவனுக்கு எது சிறந்தது என்பதை மாணவனை விட நன்கு அறிவார்.

ஆசிரியருடைய மற்றொரு நன்னடத்தை, மாணவனின் தரத்திற்கு தகுந்தவாறு பேசுதல். அல் கிதர் அவர்கள், மூஸா (அலைஹிஸ்ஸலாம்) காண முடியாத, அல்லாஹ்வின் விவேகம் தனக்கு இருப்பதாகக் கூறுகிறார்கள், ஆனால் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை அவமானப்படுத்துவதில்லை.

    பாடம் 7:      

பொறுமையுடனும் கீழ்ப்படிதலுடனும் இருங்கள்

வசனம் 69,70: (மூஸா அலைஹிஸ்ஸலாம்), “இன்ஷா அல்லாஹ், நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்”என கூறினார். (அதற்கு அவர்), “நீர் என்னைப்பின் தொடர்வதானால், எந்த விஷயத்தைப்பற்றியும் – நானாகவே அதைப்பற்றி உமக்கு அறிவிக்கும் வரை – நீர் என்னிடம் கேட்கக் கூடாது.”என்று கூறினார்.’

மூஸா அலைஹிஸ்ஸலாம் விடவில்லை, அவர் பொறுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்.

மாணவர்களுடைய முக்கியமான பிரச்சினை அவசரப்படுதல். எத்தனை முறை நாம் படிக்க ஆரம்பித்து, அதன் பின் தொடர பொறுமையில்லாமல் இருந்திருக்கிறோம்? ஆரம்பத்திலிருந்தே நீங்கள் “நான் பொறுமையாக இருக்கப்போகிறேன்”என்று சொல்லிக்கொண்டிருந்தால், உங்கள் மனப்போக்கு மிகச் சரியாக இருக்கும்.

அறிவுத்தேடலில் ஈடுபட்டிருக்கும் உங்களுக்குத் தேவையானவற்றில் ஒன்று பொறுமை, மற்றொன்று உங்கள் ஆசிரியர் உங்களுக்குக் காட்டிய வழியில் கீழ்ப்படிதல். ஆசிரியர் ஒரு மாணவனுக்கு பெற்றோர் போன்றவர்; யாருக்காவது நீங்கள் சொல்லிக்கொடுப்பதாக இருந்தால், அதை அன்புடனும், கருணையுடனும் செய்யுங்கள்.

    பாடம் 8:      

அறிவிலிருந்து ஆக்கபூர்வத்திற்கு நகருங்கள்.

வசனம் 82: “இனி (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டினத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது. அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது. அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார். எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்து தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உன் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை. என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை. எதைப்பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்.”என்று கூறினார்.”

நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: எந்தப்பயனையும் தராத கல்வி, இறைவனின் பாதையில் செலவிடப்படாத புதையலைப்போன்றது. (அத்திர்மிதி)

அறிவு, உங்களை அல்லாஹ்வுக்கு அருகில் கொண்டு செல்கிறது, உங்களுக்கு தக்வாவைக் (இறையச்சத்தை) கொடுக்கிறது என்றால் அது அல்லாஹ்வின் அருள். அறிவு ஒரு சோதனையாகக் கூட இருக்கலாம்; அதை நீங்கள் தவறாகப் பயன்படுத்தலாம், அல்லது நீங்கள் கற்றதன்படி நடக்காமல் இருக்கலாம்!

அறிவு எப்படி உங்களை ஆக்கபூர்வமாக ஆக்கும்? சில செயல்களைப்பற்றிய அறிவும், அவற்றின் பெரும் கூலியும் உங்களை அல்லாஹ்விற்கு அருகில் கொண்டு செல்லும். உதாரணம், ஃபஜருக்கு முன்னால் இரு ரக்கஅத் சுன்னத் தொழுவது. சிலருக்கு இதைப்பற்றிய ஞானம் இல்லை, அதனால் அதை விட்டுவிடுவார்கள். அதனால், படியுங்கள், படித்தவற்றைப் பழகுங்கள், பெற்ற அறிவை மற்றவர்களுக்குப் புகட்டுங்கள்!

நீங்கள் பயன்பெற வேண்டுமென பிரார்த்திக்கிறேன்!

source:   http://www.understandqurantamil.com/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%