Home இஸ்லாம் கேள்வி பதில் கேள்வி பதில் பகுதி - 2
கேள்வி பதில் பகுதி - 2 PDF Print E-mail
Monday, 18 August 2008 19:45
Share

21. கேள்வி: ஜின் சூரா ஓதினால் நாற்பது நாளில் ஜின் வருமா? எந்த நேரத்தில் ஓதுவது?

பதில்: தயவுசெய்து அந்த துறையில் நுழையாதீர்கள். கொஞ்சம் அசந்தால் உங்களையே மக்கள் ஜின்னாக ஆக்கி விடுவார்கள்.

  

22. கேள்வி: தொழுகையில் சில நேரங்களில் சுஜூது செய்யும்போது ஒரு தடவைதான் செய்கிறேன். இது தொழுகை முடிந்தவுடன் நினைவுக்கு வருகிறது. தொழுகை கூடுமா?

பதில்: தொழுகை கூடாது. திருப்பித் தொழுக வேண்டும்.

  

23. கேள்வி: தர்ஹாவிற்கு சென்று அங்கே அடங்கியிருக்கும் மனிதரிடம் 'நாங்கள் செய்த பாவத்திற்காக இறைவனிடம் நீங்கள் பரிந்துரை செய்யுங்கள்' என்று கூறலாமா?

பதில்: கூடாது. வேறு வழியில் (ஈமானை இழக்கும் நிலைக்கு) கொண்டு போய் விட்டு விடும்.

 

24. கேள்வி: ஆண் ஆடுகளை குர்பானி கொடுப்பது வழக்கம். பெண் ஆடுகளை குர்பானி கொடுக்கலாமா?

பதில்: ஷரீஅத் ரீதியாக எந்த தடையும் இல்லை.

 

25. கேள்வி: பள்ளிவாசலுக்கு பணத்தை திரட்டி அதை சரிவர பள்ளிக்கு செலவிடாமல் கோல்மால் செய்வது பற்றி ஷரீஅத் கூறும் எச்சரிக்கை என்ன?

பதில்: இப்படிப்பட்ட செயல் முனாஃபிக்கின் அடையாளம் என்றும், அவன் இப்பொழுது அபகரித்த பொருளுடன் கியாம நாளில் வருவான் என்றும் ஷரீஅத் சொல்கிறது. மறுமையில் அவர்களுக்கு நரகம் என்று ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

 

27. கேள்வி: தர்ஹாக்களின் கொடி மரத்தில் நம்மவர்களில் சிலர் தண்ணீர் ஊற்றுகிறார்கள். அம்மரத்தை சுற்றி வருகிறார்கள். அம்மரத்தில் பத்தி கொளுத்தி வைக்கிறார்கள். இவ்வாறு செய்வது கூடுமா?

பதில்: பக்கா ஹராமாகும்.

 

28. கேள்வி: கோணல் வகிடு எடுக்கக்கூடாது என்று சொல்கிறார்களே! ஷரீஅத் என்ன சொல்கிறது?

பதில்: ஷரீஅத் ரீதியாக அப்படி எதுவுமில்லை.

 

29. கேள்வி: ஆண்களுக்கு முன்புற வழுக்கை அழகா? பின்புற வழுக்கை அழகா?

பதில்: உங்களுக்கு எந்த பக்கம் வழுக்கை? அதை முதலில் சொல்லுங்கள்!

 

30. கேள்வி: என் கணவர் வெளி நாட்டிலிருந்து விடுமுறையில் வந்துள்ளார். நானும் அவரும் நோன்பு வைக்கிறோம். சமயத்தில் என் கணவர் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார். அப்போது அவரின் ஆண் உறுப்பிலிருந்து தண்ணீர் போன்ற நீர்த்துளிகள் வெளிவரும். நோன்பு முறிந்து விட்டது என்று நான் கூறுவேன். ஆனால், என் கணவரோ விந்து வெளியானால்தான் நோன்பு முறியும் என்று கூறுகிறார். எனவே நோன்பு கூடுமா? கூடாதா?

பதில்: நோன்பு கூடும். எனினும் நோன்புக்கால பகல் நேரங்களில் இதுபோன்ற சூழ்நிலைகளை உருவாக்குவது நோன்பு முறியும் அளவுக்கு கொண்டு போய் விட்டுவிடும், எச்சரிக்கை!

 

31. கேள்வி: தூக்கத்தில் கெட்ட கனவு, திகில் ஏற்பட்டால் என்ன செய்வது?

பதில்: தூக்கத்தில் கெட்ட கனவுகள் ஏற்பட்டால் இடது புறம் திரும்பி மும்முறை துப்பி, திசை மாறி படுக்க வேண்டும். பின்னர் சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டும், இக்கெட்ட கனவுகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன் (அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்) என்று மும்முறை ஓதிக் கொள்ள வேண்டும்.

 

32. கேள்வி: சாப்பிட்ட பின் இனிப்பு சாப்பிடுவது சுன்னத்தா?

பதில்: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது என்று ஹதீஸ்களில் வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் உணவுக்குப் பின் இனிப்பு சாப்பிடுவதை காட்டாயமாக ஆக்கியதில்லை. அதிகமான சமயம் பேரிச்சம்பழம் சாப்பிட்டு தண்ணீர் குடிப்பார்கள். பல நேரங்களில் பேரிச்சம்பழம் சாப்பிடும் சந்தர்ப்பமும் கிடைக்காது என்று அறிவிப்புகளில் காணப்படுகின்றன.

 

33. கேள்வி: பல்லியை அடிப்பது, கொல்வது குறித்து ஹதீஸ் ஏதேனும் வந்துள்ளதா? சுட்டம் என்ன?

பதில்: பல்லியை அடிப்பது, கொல்வது கூடும். அதற்கு நன்மையும் உண்டு. நம்ரூத் மூட்டிய நெருப்பில் பல்லியும் நெருப்பை ஊதிப் பெருக்கி, இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தீங்கு விளைவித்ததில் உதவி செய்தது. அதனால் அதை அடிப்பதில் நன்மை உண்டு என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)

34. கேள்வி: அரசாங்கம் ஹாஜிகளுக்கு வழங்கும் மானியத்தைப் பெறலாமா? சிலர் இதை வட்டிப்பணம் என்று ஆட்சேபனை செய்கிறார்கள்? மேலும், நமது வணக்கத்தில் அரசாங்கத்தின் உதவி ஏற்படுவது போன்ற தோற்றம் உள்ளதே! விளக்கம் என்ன?

பதில்: இந்திய அரசு ஹஜ் கமிட்டியின் மூலமாக ஹஜ் பயணிகளுக்கு வழங்கும் மானியம் நமக்கு செய்யும் உதவி அல்ல. மாறாக, இந்திய சட்டப்படி இந்திய அரசாங்கத்தின் கடமையாகும். இந்த சலுகை யாரும் கேட்டு கிடைத்ததல்ல.

மேலும், இவ்வுதவியை எப்பணத்தின் மூலம் நமக்கு அளிக்கிறது என்று ஆராய்வது நம்மீது கடமையாகவும் ஆக்கப்படவில்லை. மேலும், ஆட்சிப் பீடங்களில் முஸ்லிம் அல்லாதோருக்கே உயர் அதிகாரங்கள் இருப்பதால், அவர்களின் கொடுக்கல் வாங்கல் வட்டியாக இருப்பினும்கூட அவையிடம் உதவி பெறுவது தடையல்ல. (கிதாபுல் ஃபதாவா பக்கம்:110, பாகம்:4)

குறிப்பு: இந்தியாவின் மத்திய மார்க்கத் தீர்ப்பாயமாக விளங்கும் தாருல் உலூம் தேவ்பந்த் மளாஹிருல் உலூம் சஹாரன்பூர், ஜாமிஆ காஸிமிய்யா-ஷாஹீ முராதாபாத், தாருல் உலூம் நத்வதுல் உலமா, லக்னோ ஆகிய இடங்களில் இருந்தும் இதுபோன்ற பதில்களே வந்துள்ளன. அல்லாஹ் நன்கறிந்தவன். (-குர்ஆனின் குரல்)

35. கேள்வி: கபரில் அடங்கியிருப்போரிடம் நமது தேவைகளை முறையிடுவது கூடுமா?

பதில்: அல்லாஹுத்தஆலா தன் அடியார்களுக்கு, உன்னையே வணங்குகிறோம் மேலும் உன்னிடமே உதவி தேடுகிறோம் என்று கூறுமாறு 'ஃபாத்திஹா சூராவில்' போதித்துள்ளான். இந்த கோட்பாட்டை நமது உள்ளத்தில் பதிய வைப்பதற்காகவே தொழுகையின் ஒவ்வொரு ரக்அத்திலும் இதனை ஓதுவதை கடமையாக்கி உள்ளான். எனவே, அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் அல்லாஹ்விடமே உதவி கேட்க வேண்டும் என்று அருள்மறை திருக்குர் ஆன் கூறிவிட்டபோது, மற்றவரிடம் எந்த கோரிக்கையையும் சமர்ப்பிப்பது கூடாது.

இதனால்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன் ஹு அவர்களுக்கு, நீர் கேட்டால் அல்லாஹ்விடமே கேட்பீராக! நீர் உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடமே உதவி தேடுவீராக! என்று கூறினார்கள். (- மிஷ்காத் பக்கம் 453)

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அவர்கள் மேற்கூறப்பட்ட ஹதீஸை குறிப்பிட்டுவிட்டு பின்வருமாறு கூறுகிறார்கள்:

படைப்பினங்களை இறைவனுக்கு இணையாகக் கருதுபவர்களே! உள்ளத்தால் அந்த படைப்பினத்தை முன்னோக்குபவர்களே! படைப்பினத்தை புறக்கணித்து விடுங்கள். ஏனெனில, அவற்றால் எந்த நஷ்டமும் இலாபமும் கிடையாது. அவை எதையும் கொடுப்பதற்கோ தடுப்பதற்கோ சக்தி பெறமாட்டா. உனது உள்ளத்தில் ஷிர்க் - இணைவைப்பை மறைத்துக் கொண்டு தவ்ஹீதை வாதிடாதே. ஆதனால் உனக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. மேலும் அவர்கள் கூறுகிறார்கள், 'அனைவரையும் விட அல்லாஹ் உனக்கு மிக நெருக்கமாக இருக்க அவனை விட்டு விட்டு மற்றவரிடம் கேட்பதற்கு உனக்கு உன்மீதே வெட்கம் வரவில்லையா?'

ஷரீஅத் சம்பந்தப்பட் கேள்வி பதில்கள், பிரபலமான இஸ்லாமிய மாத இதழ் ஆசிரியர்களான உலமா பெருமக்கள் அளித்த பதில்களாகும்.

தொடர்ச்சிக்கு கீழுள்ள "NEXT" ஐ "கிளிக்" செய்யவும்