Home கட்டுரைகள் சமூக அக்கரை பெண்ணுரிமை பேசப்படும் இன்று பெண்குழந்தையின் அவலம்!
பெண்ணுரிமை பேசப்படும் இன்று பெண்குழந்தையின் அவலம்! PDF Print E-mail
Tuesday, 24 April 2018 07:10
Share

பெண்ணுரிமை பேசப்படும் இன்று பெண்குழந்தையின் அவலம்!

      டாக்டர் ஷேக் சையது M.D      

பெண்ணுரிமைச் சங்கம், பெண்விடுதலை இயக்கம் எல்லாம் தோன்றி, பெண்ணுரிமைகளுக்காக (!) பல மாநாடுகளும், போராட்டங்களும் நடத்தி பெண்ணுரிமை, பெண் விடுதலை(!) என மூச்சுக்கு மூச்சு பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் பெண்ணுரிமைகள் பாதுகாக்கப் படுகின்றனவா? அவர்களின் உயிருக்கும், உடமைக்கும், கற்புக்கும் பாதுகாப்பு உள்ளதா? அல்லது பெண்சிசுக் கொலைதான் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறதா?.

  டெல்லியில் 8 மாத குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக அக்குழந்தையின் 28 வயது உறவினரை போலீஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட குழந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறது.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில், "கடந்த ஞாயிற்றுக்கிழமை வடமேற்கு டெல்லிக்கு உட்பட்ட சகர்பூர் பஸ்தி பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் இருந்த 8 மாத குழந்தையை வெளியே கூட்டிச் செல்வதாகக் கூறிவிட்டு சூரஜ் (28) என்பவர் குழந்தையை ஒதுக்குப்புறமான இடத்துக்குக் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், அந்தக் குழந்தையை மீண்டும் வீட்டில்வந்து கிடத்திவிட்டு எதுவும் அறியாததுபோல் வெளியே சென்றுவிட்டார்.

குழந்தையின் தாய், வீடு திரும்பியபோது குழந்தை ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. அதன், அந்தரங்க உறுப்பிலிருந்து கடுமையான ரத்தப்போக்கு இருந்துள்ளது. இதனையடுத்து அத்தாய் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். மருத்துவமனை நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தது. குழந்தைக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சூரஜிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சூரஜ் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் மீது (போஸ்கோ) குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி நேற்று பொருளாதார ஆய்வறிக்கை பிங்க் (இளம் சிவப்பு) நிறத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் 8 மாத குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது பெண்களுக்கு மட்டுமல்ல பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதையே உணர்த்துகிறது.

குழந்தை ஆணாக அல்லது பெண்ணாக பிறப்பதற்கு பெண்தான் காரணம் என்ற கருத்து அன்று முதல் இன்றுவரை பாமர மக்களிடையே நம்பப்பட்டு வருகிறது. படித்த மருத்துவ அறிஞர்களிடமும் இந்த மூட நம்பிக்கை ஆழமாக வேரூன்றிருப்பது வேடிக்கையாகும். அதனால் அன்றும் இன்றும் ஆண் குழந்தை பெற்றுத்தராத மனைவிகளை கடும் சித்தரவதை செய்து வருகிறார்கள் இந்த ஆண்வர்க்கம்.

பெண்ணுக்கு உயிருடன் சமாதி கட்டிய அநியாயம்

குழந்தை ஆணாக அல்லது பெண்ணாக பிறப்பதற்கு பெண்தான் காரணம் என்ற கருத்து அன்று முதல் இன்றுவரை பாமர மக்களிடையே நம்பப்பட்டு வருகிறது. படித்த மருத்துவ அறிஞர்களிடமும் இந்த மூட நம்பிக்கை ஆழமாக வேரூன்றிருப்பது வேடிக்கையாகும். அதனால் அன்றும் இன்றும் ஆண் குழந்தை பெற்றுத்தராத மனைவிகளை கடும் சித்தரவதை செய்து வருகிறார்கள் இந்த ஆண்வர்க்கம். பெண் சிசுவைப் பெற்ற பெண்ணை வேதனைப்படுத்துவதில் தானும் ஒரு பெண் என்ற நினைவில்லாத மாமியாரும் சேர்ந்திருப்பது இன்றைய நவீன காலத்தின் சாதனையாகும். பெண் குழந்தை பெற்றதால் ஒரு தாய் வார்த்தையில் எழுதமுடியாத அளவிற்கு அன்றும் இன்றும் பல சங்கடத்திற்கு உள்ளாகிறாள்.

அன்று பெண்குழந்தையின் நிலை

ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்ற சந்தோஷமான சுப செய்தி சொல்லப்படும் போது, தன்மீது இடிவிழுந்து தனது வாழ்க்கையே நாசமாகி விட்டது போன்ற பிரமை ஏற்பட்டு, பெண்ணைப் பெற்றுத்தந்த தனது மனைவியின் மீதுள்ள கோபத்தை விழுங்கிய நிலையில் செய்வதறியாது முகம் கருத்துப் போய்விடுகிறான். யாருக்கும் தெரியாமல் அந்த பெண் சிசுவை மண்ணுக்குள் புதைத்து விடுவதா? அல்லது காலம் முழுவதும் இழிவை சுமந்த நிலையில் அந்த குழந்தையை வளர்ப்பதா? என்ற வேதனையான யோசனையில் ஆழ்ந்து, தனக்கு நிவர்த்தி செய்யமுடியாத பேரிழப்பு ஏற்பட்டுவிட்டதாக நினைத்து கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி மக்களின் பார்வையிலிருந்து மறைந்து வாழ்கிறான்.

அந்தளவு பெண் குழந்தை பிறப்பதை வெறுத்து வந்தார்கள் அன்றைய ஆண்வர்க்கத்தினர்.

இந்த தகவலை குர்ஆன் பின் வருமாறு எடுத்துரைக்கிறது.

وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنْثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدّاً وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ

مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلا سَاءَ مَا يَحْكُمُونَ

இன்னும் அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை (பிறந்திருப்பது) கொண்டு நன்மாராயங் கூறப்பட்டால், கோபத்தை அடக்கி விழுங்கியவனாக அவன் இருக்க அவனுடைய முகம் (துக்கத்தால்) கருத்ததாக ஆகிவிடுகிறது. எதனைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ அதன் தீமையினால் இழிவுடன் அதை வைத்துக் கொள்வதா? அல்லது அதை மண்ணில் புதைத்து விடுவதா? என்று (கவலைப்பட்டு, மக்கள் முன் வராமல்) சமூகத்தாரை விட்டும் மறைந்து கொள்கிறான். அவர்கள் செய்யும் தீர்மானம் மிகக் கெட்டது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். (அல் குர்ஆன்: 16: 58,59)

பெண் குழந்தை பிறந்த இழிவைத்தாங்கிக் கொள்ள முடியாத அவர்கள், எந்தப் பாவமும், யாருக்கு எந்தத் தீமையும் செய்யாத அந்த குழந்தையை உயிருடன் மண்ணுக்குள் புதைத்துவந்தார்கள். உயிருக்குப் போராடும், கல் மனதையும் கரைய வைக்கும் தனது குழந்தையின் மரண ஓலத்தை கேட்டுக் கொண்டே இந்தக் கொடூரச் செயலை எவ்வாறு அவர்களால் செய்ய முடிந்தது.?

பெண்ணுரிமை பேசப்படும் இன்று பெண்குழந்தையின் அவலம்

அன்றைய அறியாமை காலத்தில் பெண்ணுரிமைச் சங்கம் இல்லை பெண் விடுதலை இயக்கம் நடத்தப்படவில்லை. அதனால் பெண்கள் உயிர் வாழும் உரிமை பறிக்கப்பட்டு, உயிருடன் புதைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆன்மா என்பது ஒன்று இருக்கிறதா? என்றெல்லாம் பேசப்பட்டுவந்த அறியாமைக்காலம் அது. ஆனால் பெண்ணுரிமைச் சங்கம், பெண்விடுதலை இயக்கம் எல்லாம் தோன்றி, பெண்ணுரிமைகளுக்காக? பல மாநாடுகளும், போராட்டங்களும் நடத்தி பெண்ணுரிமை, பெண் விடுதலை? என மூச்சுக்கு மூச்சு பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் பெண்ணுரிமைகள் பாதுகாக்கப் படுகின்றனவா?

அவர்களின் உயிருக்கும், உடமைக்கும், கற்புக்கும் பாதுகாப்பு உள்ளதா? அல்லது இந்த பெண்சிசுக் கொலைதான் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறதா?. பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்ட இந்த சங்கங்களின் காதுகளுக்கு இந்த செய்தி எட்டவில்லையா?

பெண் சிசுக் கொலையை தடுத்து நிறுத்தி பெண்களுக்கு உயிர் வாழும் உரிமையை வாங்கித்தர ஏன் இந்த இயக்கங்கள் பாடுபட வில்லை. தஸ்லீமாவைப் போல் வேலிதாண்டியவர்களுக்கு வக்காலத்து வாங்கி களத்தில் இறங்கிய இயக்கங்கள் இந்தசிசுக் கொலை கொடுமையை கண்டிக்க முன்வரவில்லையே! ஏன்? இந்தக் கொடுமை தாங்கள் சார்ந்திருக்கும் இந்து மதமக்கள் மட்டும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற காரணத்தினாலேயா?

அறியாமை காலத்தில் நடந்த முறையை விட மிகக் கொடூரமான முறையை பின்பற்றியல்லவா இன்று பெண் சிசுக்கள் கொல்லப்படுகிறது. அன்று ஆண்கள் தான் இந்த மன்னிக்கமுடியாத குற்றத்தை செய்தார்கள் என்றால் இன்றோ தனது மாமியார், கணவனின் தொல்லைகளுக்கு பயந்து, பாலூட்டி தாலாட்டி வளர்க்க வேண்டிய அன்புள்ள அன்னையே தனது கருணையான உள்ளத்தை கல்லாக்கி, துடிதுடித்து உயிரை விடப்போகும் தனது அன்புக் குழந்தையைக் காண தைரியம் இல்லாமல் தனது இருக்கண்களையும் இறுக மூடிக் கொண்டு, அரவணைக்க வேண்டிய அன்புக் கரங்களாலேயே கள்ளிப்பாலை ஊற்றி சாகடிக்கும் கொடுமையான நிகழ்வுகள் அல்லவா அன்றாட செய்தியாக மாறிவிட்டது.

தனது அன்புத் தாய் தனது பசியை போக்க தனக்கு அமுதூட்டுகிறாள் என்று கருதி நாக்கை வளைத்து, சுழித்து சப்பைக் கொட்டி, சுவைத்து கள்ளிப்பாலை அருந்தும் அந்த குழந்தைக்கு இது கள்ளிப்பால், நீ துடிதுடிக்க உனது உயிரைக் குடிக்கப்போகும் பால், உனது பசியை நீக்க அல்ல, அழுகிய இருதயம் பெற்ற மனிதர்கள் வாழும் இந்த உலகத்திலிருந்தே உன்னை நீக்கப்போகும் பால் என்பதை எடுத்துச் சொல்தவற்குக்கூட அப்போது யாருமில்லையே.

பெரியவர்களே உண்பதற்கு முடியாத உம்மியுடன் கூடிய நெல்லை அந்த சிசுவின் சிறிய வாயில் திணித்து கொல்லப்படும் கொடூரமான முறையையும் தமிழகத்தின் சில பகுதிகளில் கடைபிடித்து வருவதை எழுதுவதற்கே வெட்கமாக இருக்கிறது. வேதனையால் பேனா முணை எழுத மறுக்கிறது. இந்தளவிற்கு கொடூரமான வழிமுறையை பின்பற்றி கொல்லப்படும் அளவிற்கு அந்த சிசு என்ன மன்னிக்கமுடியாத பாவம் செய்தது?. பெண்ணாக பிறந்தது அந்த சிசுவின் குற்றமா? அல்லது அதனைப் பெண்ணாகப் பெற்ற தாய் குற்றத்திற்காக அந்த சிசு தண்டிக்கப்படுகிறதா? பெண்ணாக பிறப்பதற்கு யார் காரணம்? ஆண் மகன் நீ அல்லவா? யோசனை செய்து பார்.

இந்த கொடூரத்தை நிறுத்துவதற்கு உருப்படியான திட்டத்தை வகுத்து அதனை செயல்படுத்தி, இந்த ஈனச்செயலை நிறுத்த முடிந்ததா இந்த பெண்ணுரிமை இயக்கங்களால்?. தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம் அந்த பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக ஆக்கி இருப்பதுடன், அந்தப் பெண் வளர்ந்து புரிந்து கொள்ளும் பருவம் அடைந்தப்பின் தாய், தந்தை அறியாத தனக்கு ஏற்பட்டுள்ள இந்த அவமான நிலையை நினைத்து மனமுடைந்து தற்கொலை செய்து கொள்வதற்கல்லவா இந்தத் திட்டம் வழிவகுத்துள்ளது. இதனால் சிசுக் கொலை குறைந்துள்ளதா? இல்லையே! கற்பனைக்கெட்டாத அளவிற்கு பல சமுதாயப்பிரச்சனைகள் தோன்றுவதற்கு இந்த திட்டம் காரணமாக ஆகிவிட்டது.

என்ன குற்றத்திற்காக இந்த சிசு கொடூரமாக கொல்லப்பட்டது என மறுமை நாளில் இந்த குழந்தை பற்றி விசாரிக்கப்படும் என்பது உணர்த்தப்படாத வரை, வேறு எந்த வழிமுறையினாலும் இந்த குற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. மறுமை நாள் விசாரணையில் மாட்டிக் கொள்வோம் என்று இந்த சமுதாய மக்கள் புரிய ஆரம்பித்துவிட்டால் அவர்களிடையே இந்த குற்றம் அறவே இல்லாமல் ஆகிவிடும். அன்று குர்ஆன் உருவாக்கிய மிகப்பெரிய இஸ்லாமிய சமுதாயம் அதற்கு மிகச் சரியானதொரு எடுத்துக்காட்டாக இன்றும் திகழ்கிறது.

وَإِذَا الْمَوْؤُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ

என்ன குற்றத்திற்காக அவள் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்ட பெண்பிள்ளை வினவப்படும்போது... (அல் குர்ஆன்: 81: 8,9)

இந்த இறைவசனம் இறக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை முஸ்லிம் சமூகம் எவ்வளவு பெரிய வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழ்ந்து கொண்டிருந்தாலும், இந்த கொடூரத்தைச் செய்வதற்கு முன்வர மாட்டார்கள். உதாரணத்திற்குக் கூட முஸ்லிம் சமூகத்திடம் ஒரு நிகழ்வினை காண முடியாது. அறியாமையால் ஒரு காலத்தில் அந்தக் குற்றத்தைச் செய்து வந்த மக்களும் இந்த வசனத்தை அருளிய அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பின் முற்றிலுமாக மாறி, தான் செய்த அந்த குற்றத்திற்காக அவனிடம் மன்றாடி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்.

உதவி: - டாக்டர் ஷேக் சையது M.D அவர்களின் "இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்" கட்டுரை

source: http://www.islamkalvi.com/portal/?p=4656