Home இஸ்லாம் வரலாறு "குரைஷிகளின் காதுகளில் விழும் வண்ணம் குர்ஆனை சப்தமிட்டு ஓதியே தீருவேன்"
"குரைஷிகளின் காதுகளில் விழும் வண்ணம் குர்ஆனை சப்தமிட்டு ஓதியே தீருவேன்" PDF Print E-mail
Tuesday, 20 March 2018 08:36
Share

Kuran-ı Kerim'de kaç sure ve kaç ayet vardır?

வரலாற்றுப் பொன்னேடுகள்

எண்ணிக்கையில் அடங்கும் அளவு ஒரு சிறு கூட்டமாக முஸ்லிம்கள் இருந்த ஒரு தருணத்தில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாமை ஏற்றார்கள்.

மக்காவில் அண்ணல் நபிகளாரைத் தவிர வேறு யாரும் சத்தம்போட்டு குர்ஆனை திலாவத் செய்யவோ வாசிக்கவோ முடியாது. ஆகையால், ஒருமுறை ஸஹாபாக்கள் ஒரு குழுவாக அமர்ந்து இந்த விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘இறைவன் மீது சத்தியமாக, உரத்த குரலில் குர்ஆன் ஓதப்படுவதை இதுவரை குறைஷிகள் கேட்டதே இல்லை’ என்பதை எல்லோரும் ஒருமித்து ஏற்றுக்கொண்டார்கள்.

இப்போது கேள்வி என்னவெனில் குறைஷிகள் காதில் படும்படி அவர்களுக்கு முன்னால் சத்தமாக குர்ஆனை ஓதவேண்டும், இதைச் செயவ்து யார்?

‘நான் ஓதுகிறேன்’ என தாமாக முன்வந்து அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

‘இல்லை நீங்கள் இச்செயலைச் செய்ய முடியாது. அது உகந்ததல்ல. குடும்பமும் கோத்திரமும் வலிமையோடு இருக்க வேண்டும். உங்களுக்கு பக்கபலமாக முஷ்ரிக்கீன்களிலேயே ஒரு குழுவினர் முன்வந்து ஆதரிக்க வேண்டும். அப்படிப்பட்டவர்தான் குர்ஆனைப் போய் வாசிக்க முடியும். எனவே, நீங்கள் போய் வாசிப்பதெல்லாம் சாத்தியப்படாது’ என மற்ற ஸஹாபாக்கள் யாவரும் கூறிவிட்டார்கள்.

‘இல்லை. நான் போய் குர்ஆனை ஓதியே தீருவேன். என்னை இறைவன் பாதுகாப்பான். என்னை விட்டுவிடுஙகள்’ என்றார் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

அவ்வாறே மறுநாள் பகலில் குறைஷியர் அனைவரும் ஒன்றாகக் கூடியிருக்கும் தருணத்தில் இந்த இஸ்லாமின் தூதன் ஒரு பக்கமாகப் போய் நின்றுகொண்டான். கேட்போரை ஈர்த்து மதி மயக்கி கதிகலங்கி வைக்கும் உன்னத இறைவேதம் குர்ஆனை ஓதத் தொடங்கினார்.

Kuran-ı Kerim'de kaç sure ve kaç ayet vardır?பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்றவாறு ஓரிறைக் கொள்கையின் உன்னத கீதத்தை இசைக்கத் தொடங்கினார். வியப்பால் விழிகள் விரிய திகைப்போடு இறைவசனங்களை இறைநிராகரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள்.

‘இப்னு உம்மு அப்த் என்ன கூறுகிறான்?’ என தமக்குள்ளாக கேட்டுக் கொண்டார்கள்.

‘முஹம்மது தனக்கேதோ வேதம் இறங்குவதாகப் பிதற்றுகிறாரல்லவா, அதை ஓதிக் கொண்டிருக்கிறான்’ என்று யாரோ ஒருவர் கண்டுபிடித்து சொன்னதுதான் தாமதம், கோபத்தின் உச்சிக்கே போய்விட்ட அக்கூட்டம் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது பாய்ந்தது.

வெறிபிடித்தாற்போன்று அடித்துத் துவைத்தார்கள். முகமெல்லாம் வீங்கிப் புடைத்துவிட்டது.கொளுந்துவிட்டு எரியும் நெருப்பை ஒருசில நீர்த்துளிகள் மேலும் பொங்கி எரியச் செய்து விடுகின்றன. அதுபோல அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஈமான் இறைநிராகரிப் பாளர்களின் கோபத்தீயை மேலும் கிளறிவிட்டது.

இறைநிராகரிப்பாளர்கள் அடித்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய நாவு தன் ஓட்டத்தை நிறுத்தவேயில்லை.

எடுத்துச்சென்ற பணியை முடித்துவிட்டு குற்றுயிரும் குலையுயிருமாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் தோழர்களிடம் திரும்பினார்கள்.

‘இதற்காகத்தான் நாங்கள் முதலிலேயே சொன்னோம். போகாதீர்கள் என்று தடுத்தோம்’ என்றார்கள் தோழர்கள்.

‘இன்று இறைவனுடைய எதிரிகளை கீழ்த்தரமாக எண்ணியதைப் போல வேறு எந்நாளும் எண்ணியதேயில்லை. நீங்கள் விரும்பினால் நாளைக்கும் போய் நான் குர்ஆனை வாசிக்க தயாராகவே இருக்கிறேன்’ என்றார் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

‘இல்லையில்லை, இதுவே போதும். அவர்கள் எதனை ஒரு போதும் காது கொடுத்துக் கேட்கவே கூடாது என எண்ணிக் கொண்டிருந்தார்களோ, அதனை நீங்கள் அவர்களிடமே போய் உரத்த குரலில் சொல்லிவிட்டீர்கள்’ என்றார்கள் தோழர்கள். (அஸதுல் காபா, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றிய குறிப்புகள்)

k5அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்  இஸ்லாமை ஏற்ற    சுவையான நிகழ்வு

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தாம் இஸ்லாமை ஏற்ற சுவையான நிகழ்வை தாமே சொல்கிறார்கள்.

‘சிறு வயதில் உக்பா இப்னு ஆமிருடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். (சின்ன வயது பையன்களை ஆடுகளை மேய்க்க அனுப்புவது அரபுக்களின் குலவழக்கம்.

அவர்கள் என்னதான் பெரிய செல்வந்தர் வீட்டுப் பையன்களாக இருந்தாலும் அதையெல்லாம் பார்க்காமல் ஆடுகளை மேய்க்க அனுப்பி விடுவார்கள். ஏனெனில் அதன் மூலமாக சகிப்புத் தன்மையையும் மென்மையையும் பொறுமையையும் கற்றுக் கொள்ள முடியும்.

ஏறக்குறைய அனைத்து நபிமார்களும் ஆடுகளை மேய்த்துள்ளார்கள். அண்ணல் நபிகளார் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட ஆடுகளை மேய்த்துள்ளார்கள். இதனால்தான் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் ஆடுகளை மேய்த்துள்ளார்கள்.

ஒருமுறை அண்ணலார் வருகை புரிந்தார்கள். அண்ணலாரோடு அபு பக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் இருந்தார்கள். முஷ்ரிக்கீன்களிடம் இருந்து தப்ப அவர்கள் இருவரும் வந்திருந்தார்கள்.

அவர்கள் இருவரும் என்னிடம், ‘சிறுவனே, உன்னிடம் ஆட்டுப் பால் உள்ளதா? குடிக்கக் கிடைக்குமா?’ என வினவினார்கள்.

‘ஆனால், இவை என்னிடம் அடைக்கலமாக ஒப்படைக்கப் பட்டுள்ளனவே. நான் உங்களுக்கு குடிக்கக் கொடுக்க இயலாதே’ என்றேன் நான்.

‘கிடாவோடு சேராத பெட்டையாடு ஏதேனும் உன்னிடம் உள்ளதா?’ என அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடம் வினவினார்கள்.

ஆமென்றேன் நான். அவ்வாறே ஒரு பெட்டை ஆட்டை அவர்களுக்கு அருகில் கொண்டு வந்தேன். அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்பெட்டையாட்டைக் கட்டினார்கள். அவ்வாட்டின் மடிமீது கைவைத்துத் தடவினார்கள். பின்பு துஆ செய்தார்கள். அவ்வாட்டின் மடிகள் இரண்டும் பாலால் நிரம்பி பெருத்து விட்டன.

அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அங்குமிங்கும் தேடி குழியுள்ள கற்களாகப் பொறுக்கிக் கொண்டு வந்தார்கள். அக்கற்களில் பாலைக் கறந்தார்கள்.

அப்பாலை அபூபக்கரும் நானும் குடித்தோம், பிறகு ‘சுருங்கி விடு’ என அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கட்டளை இட்டார்கள். அவை சுருங்கி விட்டன.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். ''நான் அண்ணலாருக்கு அருகில் சென்றேன். எனக்கும் அந்த துஆவைக் கற்றுத் தாருங்கள்'' என்றேன்.

‘நீ கல்வியறிவுள்ள சிறுவனாக இருக்கிறாய்’ என்றார்கள் அண்ணலார்.

இந்நிகழ்வு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. அதே நிமிடத்தில் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்கள்.

அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னதைப் போலவே நான் அண்ணலாரின் நாவிலிருந்தே எழுபது (70) அத்தியாயங்களை மனனம் செய்து கொண்டேன் என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (தபக்காத் இப்னு சஅத், பா: 3 பக்: 150 முஸ்னத் அஹ்மத் இப்னு ஹன்பல் நூற்பதிவு)

-      சையத் அப்துர் ரஹ்மான் உமரி      

[ அறிவிற்சிறந்த நபித்தோழர்கள் - 3 (அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு) கட்டுரையிலிருந்து ]     

source:   http://www.nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7541