Home இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் போதைப் பொருள் பாவனை: ஓர் இஸ்லாமிய நோக்கு
போதைப் பொருள் பாவனை: ஓர் இஸ்லாமிய நோக்கு PDF Print E-mail
Friday, 16 March 2018 07:26
Share

Image result for குடி குடியைக் கெடுக்கும்

போதைப்பொருள் பாவனை: ஓர் இஸ்லாமிய நோக்கு

குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். மது மாத்திரமன்றி எல்லா போதைப் பொருட்களும் தீமை பயக்கவல்லவை. அவற்றை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

ஜாஹிலிய்யாக்கால மக்கள் மதுபானப் பிரியர்களாக இருந்தனர். இஸ்லாம் மதுபானத்தை கட்டம் கட்டமாக, படிப்படியாக தடைசெய்து, இறுதியில் மதுப் பழக்கத்தை முற்றாக ஒழித்தது. ஆரம்பத்தில் மதுபானத்தில் உள்ள நன்மைகளை விட தீமைகள் அதிகம் என்று அல்குர்ஆன் கூறியது. அடுத்த கட்டமாக போதையுள்ள நிலையில் தொழுகைக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்தது. மூன்றாம் கட்டமாக ஸுரா அல்மாயிதாவின் 90, 91ஆம் வசனங்கள் இறங்கின:

''விசுவாசிகளே! மதுபானமும் சூதாட்டமும் விக்கிரக வணக்கமும், அம்பெறிந்து குறிகேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளிலுள்ளவையாகும். ஆகவே, இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி பெறுவீர்கள்''

''மதுபானத்தின் மூலமும் சூதாட்டத்தின் மூலமும் உங்களுக்கிடையில் விரோதத்தையும் குரோதத்தையும் உருவாக்கவும் அல்லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே இவைகளிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்வீர்களா?''

அல்லாஹுதஆலா இந்த இரு வசனங்களிலும் மதுபானத்தையும் சூதாட்டத்தையும் ஷிர்க்குடன் இணைத்துக் குறிப்பிட்டுள்ளான். அறுவருக்கத்தக்க செயல்கள் என்றும் வர்ணிக்கின்றான். மதுவையும், சூதையும் தவிர்ப்பதை வெற்றிக்கான வழி என்றும் கூறுகின்றான். மேலும் இவை இரண்டின் மூலமாகவும் ஏற்படும் சமூக ரீதியான தீங்குகள் என, உறவுகள் அறுக்கப்படுவதையும், பகைமையும் வெறுப்பும் தோன்றுவதையும் குறிப்பிட்டுள்ளான். மேலும் திக்ர், தொழுகை முதலான ஆன்மீக சன்மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தடையாக இவை இரண்டும் அமைகின்றன எனக் கூறி இவற்றினால் விளையும் ஆன்மீகக் கேடுகளையும் அல்லாஹ் விளக்குகின்றான்.

இந்த அல்குர்ஆன் வசனங்களை நபித்தோழர்கள், இறைவிசுவாசிகள் எதிர்கொண்ட விதம் அற்புதமானது. அல்லாஹ்வின் இந்தக் கட்டளையை செவிமடுத்தவுடன் மதுக் கிண்ணங்களை கையில் வைத்துக் கொண்டிருந்தோர் அப்படியே அவைகளை தரையில் தூக்கி எறிந்தார்கள். வீதிகளில் இருந்த மதுபானப் பீப்பாக்களை உடன் கொட்டி வீதிகளில் ஓடவிட்டார்கள்.

மதுபானம் அருந்தினால் விளையும் தீங்குகளைக் கவனத்திற் கொண்டு பல நாடுகள் பெருந் தொகையான செலவுகளைச் செய்து மதுப்பழக்கத்தை ஒழிக்க கடந்த காலங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகள் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கத் தவறியமையை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.

இஸ்லாம் மதுபானத்தை ஹராமாக்கியுள்ளமைக்கான காரணம் அது போதையை ஏற்படுத்துகின்றது என்பதாகும். எனவே, ஒரு பானம் எந்தப் பொருளில் தயாரிக்கப்பட்டிருந்தாலும் சேர்மானங்கள் எதுவாக இருந்தாலும் அது போதையை ஏற்படுத்தும் என்றிருந்தால் அது ஹராமாகக் கொள்ளப்படும்.

ஒரு முறை நபியவர்களிடம் தேன், அல்லது பார்லி அல்லது கோதுமை முதலானவற்றில் தயாரிக்கப்படும் ஒருவகை மதுபானம் பற்றி வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள், சொற் சுருக்கத்துடனும் பொருட் செறிவுடனும் பின்வருமாறு கூறினார்கள்:

'போதையை ஏற்படுத்தும் அனைத்தும் 'கம்ர்' எனும் மதுபானமாகும். அனைத்து 'கம்ரும்' ஹராமாகும்.' (முஸ்லிம்)

மேலும் அதிக போதை ஏற்படுத்தக்கூடிய மதுபானங்கள் மட்டுமன்றி குறைவாகப் போதையைக் கொடுப்பவையும் ஹராமானவையாகும். இது பற்றி நபி மொழி ஒன்று பின்வருமாறு கூறுகின்றது.

;'அதிக போதை ஏற்படுத்தக் கூடியதை குறைவாக உட்கொள்வதும் ஹராமாகும்' (அஹ்மத், அபூதாவுத், திர்மிதி). இந்த வகையில் மதுபானம் போன்றவற்றில் ஓரிரு மிடர்கள் அருந்துவதும் ஹராமானதாகவே கொள்ளப்படும்.

மதுபானம் அருந்துவது மட்டுமன்றி அதை விற்பனை செய்வதும் ஹராமானதாகும். ஒரு முஸ்லிம் மதுபானம் வடிக்கவோ, விற்கவோ, விற்கும் இடத்தில் வேலை செய்யவோ முடியாது. மதுபானம் தொடர்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அதனை வடிப்பவர், விற்பவர், வாங்குபவர், குடிப்பவர், சுமப்பவர் உட்பட மதுபானம் பரிமாறப்படுவதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களிப்புச் செய்யும் பத்துப் பேரை சபித்தார்கள். இது தொடர்பான ஹதீஸ், ஸுனன் திர்மிதி, ஸுனன் இப்னுமாஜா ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

இது மட்டுமன்றி 'ஹராத்துக்கு வழி சமைக்கும் வழிகளை அடைத்தல்' என்ற இஸ்லாத்தின் சட்ட விதியின் அடிப்படையில் திராட்சைப் பழம் விற்பனை செய்வது ஹலாலாயினும் அதனை மதுபானம் தயாரிப்பதற்காக வாங்குபவருக்கு விற்பனை செய்வது ஹராமானதாகும்.

பியர் (BEER) அருந்தலாமா?

சிலர் BEER அருந்துவது பிழையானதல்ல என்ற கருத்தை கொண்டிருக்கிறார்கள். பியர் பானம் மதுபான வகையில் அடங்குமா இல்லையா என்பதில் வேறுபட்ட கருத்து இருப்பினும் சர்வதேச போதை வஸ்து எதிர்ப்பு அமைப்பானது பியரையும் தடை செய்யப்பட்ட மதுபானங்களின் பட்டியலில் அடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

'போதை தரக்கூடிய அனைத்தும் மதுவாகும். அனைத்து மதுவும் ஹராமானதாகும். குறைந்த அளவிலோ அல்லது கூடிய அளவிலோ போதையை ஊட்டக் கூடிய அனைத்தும் ஹராமானதாகும்' என்பது நபி மொழி. இந்த வகையில் நோக்கும் போது பியரில் குறைந்த பட்சம் சிறிதளவு மதுசாரமாவது உண்டு என்பதை மறுக்க முடியாத காரணத்தினால் அதனை அருந்த ஆகுமான பானமாகக் கொள்ள முடியாது.

ஒரு குடிவகை சமூகத்தில் மதுபானமாகக் கருதப்படுவதில்லை என்பதை வைத்து, அதற்கு அங்கீகாரம் வழங்க முடியாது. இதனையிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் கீழ்வருமாறு எச்சரித்துள்ளார்கள்.'எனது சமூகத்தில் சிலர் மதுபானம் அருந்துவர், ஆனால், அதனை அவர்கள் வேறு பெயர் கொண்டு அழைப்பவர்களாக இருப்பர்' (நஸாஈ)

பியர் போன்ற பானங்களை நாடவேண்டிய தேவை இல்லாத அளவுக்கு மார்க்கம் அனுமதித்துள்ள மென்பான வகைகள் (Soft Drinks) இன்று தாராளமாகக் கிடைக்கின்றன. ஹராமானவற்றை நாடவேண்டிய தேவை இல்லாத அளவுக்கு அவற்றை ஈடு செய்யும் விதத்தில் அவற்றுக்கு பிரதியீடாக பலவற்றை ஆகுமானதாக அல்லாஹ் ஆக்கித் தந்துள்ளமை அவனின் தனிப் பெரும் அருளாகும்.

மது மருந்தாகுமா?

நோய்களுக்கு மருந்தாக மதுபானத்தை பாவிக்க முடியுமா? என்ற கேள்வி சிலபோது எழுப்பப்படுவதுண்டு.

அடிப்படையில் மதுபானத்தை மருந்தாகப் பயன்படுத்துவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. ஒருமுறை ஒருவர் தான் மருந்துக்காக மதுபானம் தயாரிப்பதாகக் கூறினார்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: 'அது மருந்தல்ல. உண்மையில் அது நோயாகும்' என்றார்கள். (முஸ்லிம்)

மற்றொரு சந்தர்ப்பத்தில் நபியவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்:

'அல்லாஹ் நோயையும் அதற்கான மருந்தையும் இறக்கியுள்ளான். எனவே, மருந்து உபயோகிப்பீர்களாக. ஹராமானதைக் கொண்டு சிகிச்சை பெறாதிருப்பீர்களாக.' (அபூதாவூத்)

போதைப் பொருட்களைப் பற்றிக் குறிப்பிடும் போது இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்:

'அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக்கியவற்றில் (நோய்களுக்கான) நிவாரணத்தை அமைத்து வைக்கவில்லை' (புகாரி)

மதுபானம் ஹராமானதாக இருக்க அதனை மருந்தாகப் பயன்படுத்த அனுமதிப்பது அதில் ஆசையூட்டுவதாக அமையும். அது ஷரீஅத்தின் நோக்கத்திற்கு முரணானதாகும். ஷரீஅத் ஒன்றைத் தடைசெய்தால் அதனை எல்லா வகையிலும் தவிர்க்க வேண்டும். எல்லா வழிகளிலும் அதனை விட்டும் தூரமாக வேண்டும்.

மதுபானத்தை அல்லது போதை வஸ்துக்களை மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று கூறி அனுமதித்தால், மனிதர்கள் அவற்றில் நன்மைகள் இருக்கின்றனவே என்று நியாயம் கண்டு நோயில்லாத சாதாரண நிலைகளிலும் அவற்றைப் பயன்படுத்துவார்கள்.

ஆயினும், நிர்ப்பந்தங்களுக்கு ஷரீஅத்தில் விதி விலக்குகள் உண்டு. இந்த வகையில் ஒரு போதைப் பொருளையோ அல்லது அது கலந்த ஒன்றையோ மருந்தாக எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தால் உயிர் ஆபத்து ஏற்படும் என்ற நிலையில் அதனை வரம்பு மீறாமலும் அளவு கடக்காமலும் பயன்படுத்த அனுமதி உண்டு.

''எவர் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவர் அளவு மீறாமலும் வரம்பு மீறாமலும் (இவைகளைப் புசித்து விட்டால் அது குற்றமாகாது.) நிச்சயமாக உமது இறைவன் மிக மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கின்றான்'' (அல்அன்ஆம்: 145)

ஆட்கொல்லி போதைப் பொருட்கள்

மதுபானத்தைப் போலவே கஞ்சா, அபின், ஹெரோய்ன் போன்ற போதை வஸ்துக்களும் ஹராமானவையாகும்.

மதுபானம் அருந்தியவருக்கு இஸ்லாமிய சட்டத்தின் படி (ஹத்) தண்டனை நிறைவேற்றப்படும். 40 அல்லது 50 கசையடிகள் மதுபானம் அருந்தியவருக்கு வழங்கப்படும்.

ஹெரோயின் போன்ற மிக ஆபத்தான போதைப் பொருட்களை கடத்துபவர்கள், வியாபாரம் செய்பவர்கள், ஆகியோருக்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என்பது நவீன கால இஸ்லாமிய சட்ட அறிஞர்களின் சன்மார்க்கத் தீர்ப்பாகும்.

புகைத்தல் ஹராமாகும்

மதுபானம், போதைவஸ்த்துக்களைப் பற்றிப் பேசும்போது புகைப்பிடித்தல் பற்றிய ஷரீஅத் நிலைப்பாட்டையும் நாம் கலந்துரையாடுவது அவசியமாகும்.

இன்று பாவனையில் இருக்கும் சிகரெட், சுருட்டு, பீடி போன்றவை ஆரம்ப காலத்தில் பரவலாக இல்லாமல் இருந்த காரணத்தினாலும் இவற்றுக்கு பயன்படுத்தப்படும் புகையிலை முதலானவற்றினால் விளையும் சுகாதாரக்கேடுகள் பற்றி அன்று அறியப்படாமல் இருந்த காரணத்தினாலும் புகைத்தல் பற்றிய தெளிவான மார்க்கத் தீர்ப்பை ஆரம்பகால இமாம்கள் வழங்கவில்லை. அண்மைக் காலம் வரை புகையிலையின் தன்மை, புகைத்தலால் ஏற்படும் விளைவுகள் பற்றிய அறிவுபூர்வமான, விஞ்ஞான ரீதியிலான தெளிவான முடிவுகள் பெறப்படாததனால் புகைப்பிடித்தல் பற்றிய தீர்ப்பிலும் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவி இருக்கின்றன.

சிலர் புகைத்தல் மக்ரூஹ் என்றார்கள். வேறு சிலர் முபாஹ் (பிழையானதல்ல) அது ஆகுமானது என்றார்கள். மற்றும் சிலர் ஹராம் என்று தீர்ப்பு வழங்கினார்கள். தற்காலத்தில் பெரும்பாலான ஆலிம்கள் புகைத்தலை ஹராம் என்றே கருதுகிறார்கள். புகைத்தல் ஹராமானது என்பதற்கு நியாயமான பல காரணங்களைக் காணமுடிகிறது. அவற்றைச் சுருக்கமாக கீழே நோக்குவோம்.

1. போதையை ஏற்படுத்துதல்:

புகைத்தல் போதையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆரம்ப பழக்கமுடையோருக்குச் சிறிது கூடுதலாகவே போதை ஏற்படுகிறது. ஏனைய போதைவஸ்துக்களைப் பாவிப்பதன் மூலம் ஏற்படுகின்ற அளவுக்குப் போதை ஏற்படாத போதும், மிகக் குறைந்த அளவிலாவது புகைப்பவர்கள் போதை கொள்கிறார்கள். 'குறைந்தளவு போதையை ஏற்படுத்தக்கூடியதும் ஹராமானது' என்பது நபிமொழி.

2. சோர்வை ஏற்படுத்துதல்:

புகைப்பதனால் போதை ஏற்படுவதில்லை என்று வாதிப்போரும் புகைத்தல் சோர்வை ஏற்படுத்துகிறது என்பதை மறுப்பதில்லை. நபியவர்கள் உடல் உறுப்புக்களில் சோர்வை ஏற்படுத்தக் கூடியவற்றையும் தடுத்துள்ளார்கள். இது பற்றிய ஹதீஸ் முஸ்னத் அஹ்மத், அபூதாவூத் முதலான கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.
இவற்றுடன் புகைப்பதனால் மூன்று வகையான தீமைகள் விளைகின்றன.

i. உடல்நலனுக்கு ஏற்படும் கேடு:

புகைப்பதனால் உடல்நலனுக்கு ஏற்படும் பயங்கரமான பாதிப்புக்களைப் பற்றியும் சுகாதாரக் கேடுகளைப் பற்றியும் நவீன மருத்துவம் மிக விரிவாகப் பேசுகிறது. ஒரு காலத்தில் புகைத்தலால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி உறுதியான, முடிவான அறிவியல் ரீதியான ஆய்வுகள், முடிவுகள் இருக்கவில்லை என்பதனால் இது பற்றிய நிலைப்பாடுகளும் வேறுபட்டன. ஆனால் இன்று இதன் கேடுகள் குறித்து எத்தகைய சந்தேகத்தையும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு இது பற்றிய ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

வருடாந்தம் புகைத்தல் தொடர்பான நோய்களினால் 2.5 மில்லியன் மக்கள் வயதாவதற்கு முன்னதாகவே இறப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவிக்கிறார். அதாவது ஒவ்வொரு 13 வினாடிகளுக்கும் ஒரு மரணம் இதன் மூலம் சம்பவிக்கிறது. மற்றுமோர் ஆய்வின்படி புகைப்பதனால் தினமும் 300 பேர் கொல்லப்படுகிறார்கள். இன்னுமோர் ஆய்வின்படி தினமும் இரண்டு சிகரெட்டுக்கு மேல் புகை பிடிப்பவர்களில் நான்கில் ஒருவர் வயதாவதற்கு முன்பே இறக்கிறார்.

புகைத்தலால் பலவேறுபட்ட நோய்கள் உருவாகின்றன. புகைப்பிடிப்பதனால் ஏற்படும் நோய்களில் புற்றுநோய் குறிப்பிடத்தக்கதாகும். பலவிதமான புற்றுநோய்கள் இருக்கின்றன. பிற புற்றுநோய்களைக் காட்டிலும் நுரையீரல் புற்றுநோயால் அதிகமான மக்கள் மரணமடைகிறார்கள். 90மூ க்கும் அதிகமான நுரையீரல் புற்றுநோய், புகைப்பிடிப்பதனால் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்த நோய் தொற்றிக் கொள்ளும் அபாயம்,

புகை பிடிக்காதவர்களைக் காட்டிலும் புகைப்பிடிப்பவர்களுக்கு 15 மடங்கு அதிகமாகவுள்ளது. தொண்டை அல்லது வாய்ப்புற்று நோய் அபாயத்தை புகைப்பிடித்தல் தோற்றுவிக்கிறது. மேலும் புகைப்பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்கள் உணவுக்குழல், இரைப்பைப் புற்றுநோயினால் இறக்கும் அபாயம் அதிகம் இருக்கிறது. புகைப்பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்கள் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக புற்றுநோய் ஆகியவற்றாலும் தாக்கப்படும் ஆபத்தும் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.

புகைப்பிடித்தல் இதய நோய்களுக்கும் முக்கிய காரணமாக விளங்குகிறது. புகைக்கப்படும் சிகரெட்டின் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் தீவிரமடைகிறது.

சிகரெட்டில் நிகோடின் அடங்கலான 4000 கேடு விளைவிக்கும் இரசாயனப் பொருட்கள் இருப்பதாக விஞ்ஞானம் கூறுகிறது.

புற்றுநோய்கள், இருதய நோய்கள் மட்டுமன்றி புகைப்பிடிப்பதால் அபாயகரமான சுவாசக் கோளாறுகளும் ஏற்படுவதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. மார்புச்சளி, ஆஸ்துமா, எம்பீஸிமா (Emphysema) உட்பட மற்றும் பல சுவாசக் கோளாறு நோய்களை புகைத்தல் தீவிரப்படுத்துகிறது என்பதற்கு போதிய அறிவியல் ஆதாரங்கள் கிடைக்கின்றன.

புகைப்பிடித்தல் இனப்பெருக்க சுகாதாரத்திற்கும் ஊறுவிளைவிக்கும் என்பதும் மருத்துவம் கூறும் மற்றுமோர் உண்மையாகும்.

சொத்தைப்பல், பல்விழுதல், ஈறு வீக்கம், வாயில் துர்நாற்றம் முதலான பல நோய்களுக்கும் புகைத்தல் காரணமாக அமைகிறது.

மேலும் புகைத்தல் நுகர்திறனைக் குறைக்கின்றது. உபயோகிக்கும் மருந்துகளின் பயன்தரும் திறனைக் குறைக்கிறது. குடற்புண் நோய்களை தீவிரப்படுத்துகிறது.

இதுவரை கண்ட விளக்கங்களிலிருந்து புகைப்பிடித்தல் உடல் நலனை எவ்வாறு கடுமையாகப் பாதிக்கிறது என்பதை விளங்க முடிந்தது. இவ்வாறு மனிதனின் சுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடியன இஸ்லாமிய நோக்கில் ஹராமானவையாகவே கொள்ளப்படுகின்றன. அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:

''உங்களை நீங்களே கொல்ல வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகவும் அன்புடையோனாக இருக்கின்றான்'' (அல்குர்ஆன் -அந்நிஸா: 25)

''மேலும் உங்களை நீங்களே அழிவுக்கு உட்படுத்திக் கொள்ளாதீர்கள்'' (அல்குர்ஆன் - அல்பகரா:195)

மனிதனுக்கு கேடுவிளைவிக்கும் அனைத்தையும் நபிகளார் தடுத்துள்ளார்கள் என்பதற்கு பல ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன. இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களை வகுக்கும்போது கவனத்திற் கொள்ளும் அடிப்படையான விதி, 'நலன்கள் - நன்மைகள் விளைதல் வேண்டும். தீங்குகள், கேடுகள் தவிர்க்கப்படல், அல்லது தடுக்கப்படல் வேண்டும்' என்பதாகும்.

புகைப்பிடிப்பதனால் விளைகின்ற மூன்று வகையான கேடுகளில் உடல்நலத்திற்கு ஏற்படும் கேடுகளைப் பற்றியே இதுவரைக்கும் கலந்துரையாடினோம். இரண்டாம் வகைக் கேடு பொருள் நஷ்டமாகும்.

ii. பொருள் நஷ்டம்:

புகைப்பிடிப்பதனால் பணம் விரயமாகிறது. உடலுக்கோ, ஆன்மாவுக்கோ எத்தகைய பயனுமளிக்காத ஒன்றிற்காக பணம் விரயமாக்கப்படுகிறது. வீண்விரயம் செய்வதை நபியவர்கள் தடுத்துள்ளார்கள். அல்குர்னும் இதனைக் கண்டிக்கிறது.

''வீண்விரயம் செய்யாதீர்கள், ஏனெனில் மிதமிஞ்சிச் செலவு செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்கள்''

வீண்விரயம் பற்றி இமாம் இப்னு ஹஸ்ம் பின்வருமாறு கூறியிருக்கிறார்:

வீண்விரயம் செய்வது ஹராமாகும்.

வீண்விரயம் (மூன்று வகைப்படும்)

'1. அல்லாஹ் விலக்கியவற்றில் செலவு செய்வது. அது ஒரு கொசுவின் இறக்கையளவு அற்பமாக இருப்பினும் சரியே.

'2. அவசியம் தேவையற்ற ஒன்றில் செலவுசெய்தல். இந்தச் செலவினால் குறித்த நபரின் செல்வநிலை அகலும் ஆபத்து ஏற்படும்போது அதுவும் வீண்விரயமாகும்.

'3. செல்வத்தை வீணாக வீசியெறிதல், இது குறைந்தளவுடையதாக இருப்பினும் சரியே...

iii. ஆன்மாவுக்கு ஏற்படும் தீங்கு

புகைத்தலுக்கு பழக்கப்பட்டவர்கள் தமது மனோவலிமையை இழந்து, இத்தீய பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர். ஏதோ காரணத்தால் புகைப்பிடிக்கின்ற சந்தர்ப்பத்தை இழக்கின்ற வேளையில் இத்தகையோரின் நடவடிக்கைகள் எவ்வளவு தூரம் கேவலமானதாகவும் கீழ்த்தரமானதாகவும் அமைகின்றன என்பதை அவதானிக்க முடியும்.

எனவே, சுகாதார கண்ணோட்டத்தில் நோக்கினாலும், பொருளாதார கண்ணோட்டத்தில் பார்த்தாலும், ஆன்மிகக் கண்ணோட்டத்தில் அணுகினாலும் புகைப்பிடித்தல் ஹராமானது என்ற கருத்தே மிகைத்து, பலமானதாக விளங்குகிறது. அல்லாஹ்வே யாவற்றையும் நன்கு அறிந்தவன்.

source: http://www.sheikhagar.org/articles/fiqh/38-pothaiporulpavana