Home குடும்பம் பெண்கள் பெண்மையில்லாத உலகம்
பெண்மையில்லாத உலகம் PDF Print E-mail
Tuesday, 13 March 2018 08:16
Share

பெண்மையில்லாத உலகம்

பெண்மை இல்லாத ஓர் உலகத்தை எவ்வாறு கற்பனை செய்ய முடியும். அது சாத்தியமா?

ஓவ்வொரு தாயும் ஆண்குழந்தைகளை மட்டுமே பெற்றெடுத்தால் மனித இனம் விரைவில் அழிந்து போய்விடுமே! இது இறைவிதிக்கு முற்றிலும் மாற்றமானது.

ஏனெனில் இறைவன் உலகில் எல்லாப் பொருளையும் ஆண், பெண் என ஜோடிகளாகத்தான் படைத்திருக்கிறான். அது பல்கிப் பெருக வேண்டும் என்பது அவனது திட்டம்.

இது அல்லாஹ் ஏற்படுத்திய எல்லாப்படைப்புகளுக்கும் உள்ள பொதுவான மாற்றி எழுத முடியாத நியதி.

''ஓவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் (ஆண், பெண் என இருவகை கொண்ட) ஜோடிகள் இரண்டை அதில் உண்டாக்கினான்.'' (அல் குர்ஆன்: 13: 3)

''நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக ஒவ்வொரு பொருளிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) இருவகையை நாம் படைத்திருக்கிறோம்.'' (அல் குர்ஆன்: 51: 49)

ஆண், பெண் என பாகுபடுத்தி பார்க்க முடியாத கனிவர்க்கங்களிலும், மரம் செடி முதல் எல்லாப் பொருளிலும் ஆண் பெண் என இரு இனம் இருக்கும் போது மனித குலம் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா? எனவே, பெண்ணினம் இல்லாத ஓர் உலகை கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது. பெண்மை இல்லாத இனம் விரைவில் அழிந்து போய்விடும்.

பெண் குழந்தை பிறப்பதை வெறுத்து, தங்களுக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறார்கள். இவர்களது ஆசைப்படி ஆண்குழந்தையே அனைவருக்கும் பிறந்தால் என்ன பின் விளைவுகள், நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்பதை சிந்தித்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது.

அல்லாஹ்வின் அருளே!

எனவே, எந்த குழந்தை பிறந்தாலும் அல்லாஹ் தனக்கு செய்த அருள் என்று கருதி அவனுக்கு நன்றிசெய்யும் பண்பாட்டை கற்றுக் கொள்ள வேண்டும்.

பெண் குழந்தை கொடுத்தவன் இறைவனே! அதனை பாதுகாப்பாக வளர்ப்பவனும் அவனே! என்ற ஆழமான இறை நம்பிக்கை நம்மில் வளர்ந்து மிளிர வேண்டும். தாம் விரும்பும் குழந்தையை பெற்றுக் கொள்ளும் அதிகாரம் உலகில் யாருக்கும் வழங்கப்பட வில்லை. அது சாத்தியமும் அன்று.

யாருக்கு என்ன குழந்தையை தர வேண்டும் என்று தீர்மானிப்பதில் இறைவனைத்தவிர வேறு யாருடைய தலையீடும், அந்த தீர்மானத்தை மாற்றி எழுதும் வல்லமை பெற்ற யாரும் இந்த உலகில் இல்லை. இதனை பின்வரும் இறைவசனம் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது.

பெண்ணினத்தை வெறுப்பவன் இறைவனை வெறுப்பவனாவான்

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும் அவன் நாடியவற்றை அவன் படைக்கிறான் (ஆகவே) அவன் நாடியவர்களுக்குப் பெண்மக்களை அன்பளிப்பு செய்கிறான் அவன் நாடியவர்களுக்கு ஆண்மக்களை அன்பளிப்புச் செய்கிறான். அல்லது, ஆண்மக்களையும், பெண்மக்களையும் கலந்தே கொடுக்கிறான் அன்றியும் அவன் நாடியவர்களை மலடாகவும் ஆக்கி விடுகிறான். நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன் (தான் விரும்பியதைச் செய்ய) மிக்க ஆற்றலுடையவன். (அல்குர்ஆன்: 42: 49, 50)

யாருக்கு என்ன குழந்தையைக் கொடுக்க வேண்டும், யாரை குழந்தைப் பாக்கியமற்றவர்களாக ஆக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அல்லாஹ்விற்கு மட்டுமே உள்ளது என்று இந்த வசனம் உரக்கப் பேசுவதைக் கவனியுங்கள்.

எனவே, பெண்குழந்தை பிறப்பதை வெறுக்கும் ஒருவன் இறைவன் செய்த தீர்மானத்தை வெறுத்தவனாக கருதப்பட்டு இஸ்லாத்தின் வட்டத்திலிருந்தே வெளியேறியவன் என்று முத்திரை குத்தப்படும். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். இறைவனுடைய தீர்மானம், அது எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வது இறைவிசுவாசியின் கடமைகளில் ஒன்றாகும். அதனை ஏற்றுக் கொள்ளாத போது அவன் ஒரு முஸ்லிமாக அறவே இருக்கமுடியாது. எனவே ஒருவனுக்கு பெண் குழந்தை பிறப்பதும், ஆண் குழந்தை பிறப்பதும் அல்லாஹ்வின் தீர்மானமாகும்.

இறைவன் மட்டும் அறிந்த இரகசியம்

ஆணின் உயிரணுவை மனித வடிவமாக மாற்றி, கண், காது மற்றும் பல உடலுறுப்புகளையும் உருவாக்க வேண்டும் எனும் கட்டளைகள் வழங்கப்பட்ட வானவருக்கு, உரிய நேரம் வரும்வரை ஆணாக அல்லது பெண்ணாக அதனை ஆக்க வேண்டுமா? என்பது அறிவித்துக் கொடுக்கப்பட வில்லை. அதனால் அதனை ஆணாக அல்லது பெண்ணாக ஆக்க வேண்டுமா? என்பதற்கான அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். என்னவாக ஆக்க வேண்டும் என்று இறைவனிடத்தில் கேட்டும் விடுகிறார்.

உண்மையில் உயிரணு கருவறைக்குள் செல்லும் போதே அது ஆணா அல்லது பெண்ணா என்பது தீர்மானமாகிவிடும். (இது குறித்து பின்பு உரிய இடத்தில் விளக்கப்படும்.) எனினும் பாலுறுப்புகளை வெளிப்படுத்த வேண்டிய நேரம் வரும் வரை அல்லாஹ் மட்டுமே அறிந்த இரகசியமாக அது பாதுகாக்கப்பட்டு வருகிறது.

உரிய நேரம் வந்ததும், தான் எதுவாகப்படைக்க வேண்டும் என்று தீர்மானித்து வைத்திருந்தானோ அதற்குரிய பாலுறுப்பை வெளிப்படுத்த வானவருக்கு உத்தரவிடுகிறான். அந்த இறை உத்தரவைப் பெற்ற பிறகுதான் அந்த வானவர் அதனைச் செயல் படுத்துகிறார். அதற்கு முன்புவரை அந்த வானவராலும் அறிய முடியாது.

அது மட்டுமா? வேறு எவ்வளவு பெரிய அதிநுட்பமான நவீன கருவியின் மூலமும் ஆணா? பெண்ணா? என்பதை அறவே அறிந்து கொள்ள முடியாது. வானவர் பாலுறுப்பை வெளிப்படுத்தியப்பின்புதான் அதனை நவீன கருவிகளைப் பயன் படுத்தி அதன் மூலம் மனிதர்களால் அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு பாலுறுப்பு வெளிப்படுத்தப்பட்டப்பின்பு நவீன கருவிகள் மூலம் பார்த்து ஆணா? பெண்ணா? என அறிந்து கொள்வதில் நமக்கு என்ன பெருமை இருக்க முடியும்?.

சிறு குழந்தை கூட இந்த நவீன கருவிகளின் துணை கொண்டு கருவறையை உற்று நோக்கி அதனுள் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்பதைக் கண்டுபிடித்துத் தெள்ளத் தெளிவாக சொல்லி விடுமே. அதனைத் தெரிந்து கொள்வதற்கு பெரிய ஆய்வுகள் ஒன்றும் தேவையில்லையே! வெளிப்படுத்தப் பட்டுவிட்ட ஒரு பொருளை கருவிகளின் துணை கொண்டு அறிந்து கொள்வதில் என்ன பெருமை இருக்க முடியும்?.

பாலுறுப்புகள் வெளிப்படுத்தப்படும் முன்பு அந்த கரு ஆணா? பெண்ணா? என்பதை ஒருவரால் சொல்ல முடியும் என்றால் அது பெரிய சாதனைதான். அந்த அளவிற்கு விஞ்ஞானம் முன்னேற்றம் அடைந்துள்ளதா? என்றால் அதுதான் இல்லை. இனி ஒரு போதும் அது சாத்தியமும் இல்லை.

source: http://www.islamkalvi.com/portal/?p=4657