Home கட்டுரைகள் அப்துர் ரஹ்மான் உமரி இஸ்லாமின் முதல் அழைப்பாளர் அஷ்ஷஹீத் முஸ்அப் (ரளி)
இஸ்லாமின் முதல் அழைப்பாளர் அஷ்ஷஹீத் முஸ்அப் (ரளி) PDF Print E-mail
Friday, 16 February 2018 08:00
Share

Image result for முஸ்அப்   ரளியல்லாஹு அன்ஹு

இஸ்லாமின் முதல் அழைப்பாளர்

அஷ்ஷஹீத் முஸ்அப்   ரளியல்லாஹு அன்ஹு

     அப்துர் ரஹ்மான் உமரி     

இறைவனின் தூதரால் மதீனாவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட முதல் இஸ்லாமிய அழைப்பாளர், முஸ்அப் இப்னு உமைர். இளம்வயது நபித் தோழர். இஸ்லாம் வெற்றிகள் பலபெற்று தன் பெயரை நிலைநாட்டும் முன்பே இறைவனைப் போய்ச்சேர்ந்து விட்டவர். இறைத்தூதரின் கண்களுக்கு முன்பாகவே இறைவன் அவரை ஷஹீதாக உயர்த்திக் கொண்டான்.

அற்புதமான பல நபித்தோழர்கள் இவரது கைகளால் இஸ் லாமை ஏற்றுக் கொண்டார்கள். யாருடைய இறப்பின்போது ரஹ்மானின் அர்ஷ் நடுங்கியதோ அந்த ஸஅதும் யார் குர்ஆனை ஓதினால் மலக்குகள் வரிசையில் நின்று கேட்பார்களோ அந்த உஸைதும் இவர் மூலமாகத்தான் இஸ்லாமில் நுழைந்தார்கள்.

அழகும் இளமையும் புகழும் பெருமையும் நிறைந்த குறைஷி குல இளங்காளை முஸ்அப். குறைஷியரின் அவைகளை அலங் கரிக்கும் பொன் விளக்காய் புது நிலவாய் ஜொலித்தவர். இஸ்லாமை ஏற்றபிறகு, ஈமானின் இலக்கணமாய் நன்றியுணர்வின் நெடுந்தூணாய் உருமாறி நின்றவர். அவரது வாழ்வின் ஒவ் வொரு பக்கங்களிலும் மானுடர் குலத்து இளந் தலைமுறைக்கு அரியபல படிப்பினைகள் நிரம்பியுள்ளன.

(1)  புறத்தோற்றத்தை அழகுபடுத்தி புலன்களுக்கு தீனி போடு வதையே ‘பெருவாழ்வாக’ போதிக்கின்றது, ஜாஹிலிய்யா. அப்படிப்பட்டதொரு பெரு வாழ்வுக்கு சொந்தக்காரர், முஸ் அப். அவரது அன்றாட வாழ்வு உலகியல் அருட்கொடைகளால் நிரம்பி வழிந்தது. காலையில் ஓர் ஆடை, மாலையில் ஓர் ஆடை. நறுமணம் கமழும் மிடுக்கான, அவரது உடுப்பு! அன்றலர்ந்த மலர் போன்ற அவ்வுடுப்புகளைக் காணவே கூட்டம் ஒன்று சேரும். ‘இப்பேரருட்கொடையில்’ இருந்து ‘பஞ்சப்பரதேசி’ வாழ்விற்கு மனமுவந்து அவர் மாறினார். அழகழகான ஆடை களை இழந்தார். அறுசுவை உணவுகளை இழந்தார். ஒருநாள் உணவு, ஒருநாள் பட்டினி எனும் தரித்திர வாழ்வை ஏற்றார்.

‘எல்லாம்’ கைநிறையப் பெற்றவர்கள் ‘எல்லாவற்றையும்’ இழந்தது அக்காலம். ‘எதுவுமே’ இல்லாதவர்கள் கூட இஸ்லா மைப் பயன்படுத்தி ‘ஏகப்பட்டதை’ அள்ள எண்ணுவது இக்காலம்!

இழந்தது கொஞ்சம்தான், அடைந்ததுதான் அளவற்றது என்பதை அப்பெருமகன் உணர்ந்துகொண்டார். அவரது ஆடைகள் ஜொலிப்பை இழந்தன. ஆனால் உள்ளமோ ஒளிரத் தொடங்கி யது. அவரது புறத்தோற்றம் பொலிவிழந்தது. அவரது அகத் தோற்றமோ மெருகடைந்தது. ஈமானையும் இஸ்லாமையும் அல்லாஹ்வின் நூரையும் அவர் அள்ளி அள்ளி தன் அகத்தில் நிரப்பிக் கொண்டார்.

(2)  ஒரு தகுதிபெற்ற நம்பிக்கையாளர் எனில் ஏதேனும் ஒரு பணிக்காக நீங்கள் ‘தேர்வாக’ வேண்டும். ‘தேர்ந்தெடுக்கப்பட்ட சான்றோர்கள்’ என இறைமறை இறைத்தூதர்களைப் பற்றி குறிப்பிடுகின்றது.

‘திண்ணமாக அவர்கள் நம்மிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சான்றோர்கள் ஆவார்கள்.’ (அல்குர்ஆன் 38:47)

இஸ்லாமிய பெருவிருட்சத்தை மதீனத்து புதுநிலத்தில் ஆழ மாய் ஊன்றும் பணிக்காக அண்ணலார் ஸல்லல்லாஹு அலை ஹி வ ஸல்லம் அவர்கள் முஸ்அப்பை தேர்ந்தெடுத்தார்கள். மதீனத்து அன்சார்களுக்கு தீனை அடையாளங்காட்டி இறையொளியை அறிமுகப்படுத்தும் பணியை முஸ்அப் மிகச்சிறப் பாக ஆற்றினார். ஒன்று, இரண்டு என அகபா உடன்படிக்கைகள் நடந்தேறின. மதீனத்து புதுநிலத்தை இஸ்லாமியப் பெருநிலமாக மாற்றுவதற்கு தன்னிளமையை முஸ்அப் அர்ப்பணம் செய்தார்.

‘முஸ்தஃபா’ எனும் பெயரை இறைத்தூதர்களோடு இணைத் துக் கூறுவது இஸ்லாமிய மரபு! இல்லையெனில் நாம் முஸ்அப் பையும் ‘முஸ்அப் முஸ்தஃபா’ என்றே குறிப்பிடுவோம்.

‘எங்களிடத்தில் முதலில் வந்தவர் முஸ்அப். கூடவே வந்தவர் இப்னு உம்மி மக்தூம். அப்புறம் அம்மார் இப்னு யாஸிர் வந்தார். அடுத்து பிலால் வந்தார்’ என பராஃ குறிப்பிடுகிறார். (புகாரி)

இடைவிடாமல் கடலலைகள் தொடர்ந்தடிப்பதைப் போன்று ஈமானிய பேரொளியின் தூதுவர் மதீனத்து பெருந்தலைகளை தொடர்ந்து சந்தித்துக் கொண்டேயிருந்தார். உஸைத் இப்னு குழைர், ஸஅத் இப்னு முஆத், ஸஅத் இப்னு உபாதா உள்ளிட்ட அவ்ஸ், கத்ரஜ் குலத்து பெருந்தலைவர்கள் அனைவரையும் சந்தித்தார். அவர்களில் பலரை இஸ்லாமிய வட்டத்திற்குள் நுழைத்துவிட்டார்.

பத்ருப்போரில் கலந்துகொள்ளும் பெருவாய்ப்பைப் பெற்றார். உஹதுப் போரிலோ இஸ்லாமிய படையணியின் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பையும் பெற்றார். முஸ்லிம்கள் துவண்ட போது உருக்குலையாமல் உறுதி குலையாமல் நிலைத்து நின்றார் முஸ்அப். இப்னு கமிஅஹ் என்பான் குதிரையில் சவாரி செய்த வாறு அவரிடம் வந்தான். அவரது வலக்கரத்தில் ஓங்கி வாளைப் பாய்ச்சினான். வலக்கரம் துண்டாகிவிட்டது.

‘முஹம்மத் ஒரு தூதரேயன்றி வேறல்லர். திண்ணமாக, அவருக்கு முன்பும் தூதர் கள் பலர் சென்றுள்ளனர்.’ (3:144) என்றவாறு கொடியை முஸ்அப் இடக்கரத்தில் தாங்கிக் கொண்டார்.

அவன் இடக் கரத் திலும் வாளைப் பாய்ச்சினான். இடக்கரமும் துண்டாகிவிட்டது. ‘முஹம்மத் ஒரு தூதரேயன்றி வேறல்லர். திண்ணமாக, அவ ருக்கு முன்பும் தூதர்கள் பலர் சென்றுள்ளனர்.’ (3:144) என்றவாறு தம்மிரு கைப்புஜங்களையும் ஒன்றுசேர்த்து கொடியை முஸ்அப் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டார்.

இப்போது அவன் அம்பையெடுத்து குறிபார்த்து எய்தான். முஸ்அப் கீழே சாய்ந் தார், கொடி வீழ்ந்தது. விண்மீன்களிடையே ஷஹீதாக முஸ்அப் உயர்ந்து சென்றார்.

வாழ்க்கைப் புத்தகத்தில் அழியா நறுமண மாக கமழ்ந்து நிற்கிறார்.
உண்மையில் முஸ்அபைப் பார்த்து அண்ணலார் என இப்னு கமிஅஹ் எண்ணிக் கொண்டான். குறைஷியரிடம் போய் நான் முஹம்மதுவை கொன்றுவிட்டேன் என்றுவேறு தம்பட்டம் அடித்துக் கொண்டான். பிறகு அண்ணலார் அல்லர் அவர் எனத் தெரியவந்தது. உஹதுப் போரில் அண்ணலாரின் திருவாய்ப் பற்களை ஷஹீதாக்கிய கொடியவனும் இவன்தான்!

இவ்வற்புதத் தோழரை அடக்கம் செய்தபோது கஃபன் துணி கூட போதுமானதாக இல்லை என்பதையும் கடைசியில் புற் களைக் கொண்டு உடலின் ஒருபகுதி மறைக்கப்பட்டது என்பதை யும் நீங்கள் அறிவீர்கள். (புகாரி, முஸ்லிம்)

ஸஅத் இப்னு இப்ராஹிம் அறிவிப்பதாவது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் அவர்களுக்கு முன்னால் ஒரு நாள் உணவு வைக்கப்பட்டது. முஸ்அப் இப்னு உமைரை அச்சந்தர்ப்பத்தில் நினைவு கூர்ந்தார்.

‘முஸ்அப் இப்னு உமைர் கொலை செய்யப் பட்டுவிட்டார். என்னைவிட அவர் மிகமிக சிறந்தவர். ஆனால், அவருக்கு கஃபனாக போர்த்த ஒரு ஆடைகூட கிடைக்கவில்லை. ஹம்ஸா கொலையுண்டார், அவர் என்னைவிட மிகவும் சிறந்தவர். ஒரு ஆடைகொண்டுதான் அவர் கஃப்ன் போர்த்தப் பட்டார். பயன்கள் எல்லாம் எனக்கு முன்கூட்டியே கொடுக்கப் படுகின்றதோ, உலக வாழ்விலேயே கொடுக்கப்படுகின்றதோ என எனக்கு பயமாக இருக்கின்றது’ என்று தேம்பி அழத் தொடங்கிவிட்டார். (புகாரி)

- அப்துர் ரஹ்மான் உமரி எழுதிய அர்ஷின் நிழலில் என்னும் நூலில் இருந்து.

Image result for முஸ்அப்   ரளியல்லாஹு அன்ஹு