Home கட்டுரைகள் அப்துர் ரஹ்மான் உமரி இளமையை இறையடிமைத்தனத்தில் கழி!
இளமையை இறையடிமைத்தனத்தில் கழி! PDF Print E-mail
Thursday, 15 February 2018 07:24
Share

இளமையை இறையடிமைத்தனத்தில் கழி!

       அப்துர் ரஹ்மான் உமரி       

‘பருவகால இச்சைகளுக்குப் பலியாகாத இளைஞனைக் கண்டு உன்னிறைவன் வியப்படைகிறான்.’ (அபூ யஅலா, அஹ்மத்/ சஹீஹ் என்கிறார் அல்பானி)

இந்நபிமொழியில் உள்ள ‘ஸப்வத்துன்’ எனும் சொல், பருவ கால இச்சைகள், வாலிபத் தேட்டங்கள், பொழுதுபோக்கு கேளிக்கைகளில் ஆர்வம் போன்றவற்றை இது குறிக்கும்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். எவ்வளவு அற்புதமான பண்பு இது!

சிறு வயதில் ஞானம் பெற்றவனால்தான் இது சாத்தியம்! அப்புறம் ஏன் இறைவன் வியப்படைய மாட்டான்?

ஒருவன் சிறுவயதிலிருந்தே இறைவனின் பாதுகாப்பைப் பெற்றுள்ளான். பெரும்பாவங்களில் விழாமல் சிறுசிறு குற்றங்களை வழக்கப்படுத்தாமல் பாதுகாக்கப்படுகிறான். அவற்றைப் பற்றிய கேள்விகள் மறுமையில் அவனுக்கு இல்லவே இல்லை! ஸுப்ஹானல்லாஹ்! எவ்வளவு உன்னத பேறு இது!

மற்றொருவன் பாவங்களையும் குற்றங்களையும் சுவைத்துப் பார்க்கின்றான். அவற்றின் ‘இன்பங்களை’ நுகருகின்றான். பிறகு, மனந்திருந்தி இறைவனிடம் பாவமன்னிப்பு கோரி மீளுகின்றான்.

இவ்விருவரில் யார் சிறந்தவர் என எண்ணுகிறீர்கள்? சந்தேகமே இல்லாமல் முதலாமவர்தான்!

‘கியாமத் நாளில் அல்லாஹ்வுக்கு முன்னால் நிற்கையில் ஐந்து கேள்விகளுக்கு விடையளிக்காமல் எவனும் நகரவே முடியாது. தன் வாணாளை எப்படி கழித்தான்? தன் இளமைப் பருவத்தை எப்படி செலவிட்டான்? தன் செல்வத்தை எப்படி சம்பாதித்தான்? எப்படி செலவளித்தான்? தான் கற்றுக்கொண்டதற்கிணங்க என்னென்ன செய்தான்?’ (திர்மிதீ, - ஹஸன் என்கிறார் அல்பானி)

ஸீரீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி மகளான ஹஃப்ஸா சொல்கிறார், ‘இளைஞர்களே! இளமைப் பருவத்தில் செயலாற்றுங்கள். இறைவழிபாட்டில் லயித்திருங்கள். அதுதான் வலிமை! முற்பகலில் தான் சூரியன் வீரியமாக இருக்கும், பிற்பகலில் அல்ல!’

இஸ்லாமிய வரலாற்றில் மார்க்கத்தை தாங்கிப்பிடித்த பெரு மைக்கு சொந்தக்காரர்களாக இளைஞர்களே தென்படுகிறார்கள்.

‘(அவர்கள் எத்தகைய நம்பிக்கையாளர்கள் என்றால்) அவர்கள் (போரில்) தமக்குக் காயங்கள் ஏற்பட்ட பின்னரும் அல்லாஹ் வின் அழைப்புக்கும் தூதரின் அழைப்புக்கும் மறுமொழி அளித்தவர்கள்! (அல்குர்ஆன் 3:172)

வரலாற்றை புரட்டிப் பாருங்கள். ஹவாரிய்யூன்களாகவும் முஹாஜிரீன்களாகவும் அன்சார்களாகவும் உலமாக்களாகவும் குதபாக்களாகவும் முஜாஹிதீன்களாகவும் முஅல்லிம்களாகவும் பெருங் கணக்கில் இளைஞர்கள்தாம் தென்படுகிறார்கள். குகைத் தோழர்களைப் பற்றி இறைவன் என்ன கூறுகிறான், தெரியுமா?

‘அவர்களின் உண்மையான சரிதையை நாம் உமக்கு எடுத்துரைக்கிறோம். திண்ணமாக, அவர்கள் தம் இறைவன் மீது நம்பிக்கை கொண்டிருந்த இளைஞர்களாவர். நாம் அவர்களை நேர்வழியில் மேலும் மேலும் முன்னேறச்செய்தோம்.

அவர்கள் எழுந்து, ‘யார் வானங்களுக்கும், பூமிக்கும் அதிபதியாக இருக் கிறானோ அவனே எங்களுக்கும் அதிபதி! அவனை விடுத்து வேறெந்தக் கடவுளையும் நாங்கள் அழைக்கமாட்டோம். அவ்வாறு அழைத்தால் திண்ணமாக நாங்கள் முறையற்ற பேச்சை பேசியவர்களாவோம்’ என துணிந்து பிரகடனம் செய்தபோது அவர்களின் உள்ளங்களை நாம் திடப்படுத்தினோம்.’ (அல்குர் ஆன் 18:13,14)

உணர்ச்சிவசப்பட்டும் ஆவேசப்பட்டும்

பின்விளைவுகளை அறியாமல் செயலில் குதித்து

பிறகு இழப்புகளை எண்ணி வருந்தியழும்

கேவலப் பிறவிகளைப்பற்றி குர்ஆன் பேசவில்லை.

இறைவனைப் பற்றி நன்கு அறிந்து இறைவனின் ஆற்றலையும் அதிகாரத்தையும் உள்ளத்தில் பதியவைத்து இறைவனின் இருப்பைக் குறித்து தெளிவடைந்து இறைவனின் பண்புகளைப் பற்றி முழு விழிப்புணர்வைப் பெறும் நிலையைத்தான் ‘உணர் நிலை’ என்கிறோம்.

அந்நிலை இவ்விளைஞர்கள் பெற்றிருந்தார் கள். அதுதான் சமூகத்திற்கு எதிராக எழுந்துநிற்கும் துணிச்சலை கால்களுக்கு தருகின்றது. அசத்தியக் கோட்பாடுகளுக்கு எதிராக முழங்கும் வலிமையை நாவிற்கு அளிக்கின்றது.
.
எந்நிலையிலும் குன்றாத பொறுமையை நல்குகின்றது. ‘இறைவன் வியக்கும் முஃமின்கள்’ இவர்கள்தாம்!
.
‘அடிமையாய்க் கிடக்கின்ற சமூகத்திற்கு வாளாலும் பயனில்லை, வியூகங்களாலும் பயனில்லை. ஈமானிய சுவையின் மீது ஈர்ப்பு பிறந்தால் வெட்டியெறியும் அது விலங்குகளை!’ என்கிறார் அல்லாமா இக்பால்.
.
[ அப்துர் ரஹ்மான் உமரி அவர்கள் எழுதிய ''அர்ஷின் நிழலில்'' என்னும் நூலில் இருந்து! ]

source: https://www.facebook.com/syed.umari.7/posts/720147248189673