Home இஸ்லாம் கட்டுரைகள் மனவளம் மிகுந்த வள்ளல்!
மனவளம் மிகுந்த வள்ளல்! PDF Print E-mail
Sunday, 04 February 2018 07:58
Share

மனவளம் மிகுந்த வள்ளல்!

      காதிர் மீரான் மஸ்லஹி       

தோட்டத்துக்குள் நுழைந்தது ஒரு நாய். காவலுக்கு உள்ளே நின்றிருந்த கருநிற அடிமையின் கண்களும் கவனித்தன அந் நாயை. ஆனாலும் அதனை விரட்டியடிக்கவில்லை அந்தக் காவலாளி. ஒட்டி உலர்ந்த அதன் வயிறும், வாடிச் சோர்ந்திருந்த முகமும் பார்க்கப் பரிதாபகரமாயிருந்தன.

பாவம்! எத்தனை நாட்களாகப் பசியோடு திரிந்ததோ அது; உண்ண எதையும் தேடி ஒவ்வொரு புறமாக முகர்ந்து கொண்டே அலைந்தது. காவலாளியின் பார்வையும் அது போகும் புறமெல்லாம் திரும்பிக் கொண்டேயிருந்தது. ஒரு பரபரப்பு அந்தப் பார்வையில்! பசித்தலையும் நாயின் நிலை கண்டு அவரின் உள்ளத்துள் சுரந்தெழுந்த உணர்வுகள் வெளிச்சமிட்டன. அந்தப் பார்வையில்!

அதற்குள் அந்தக் காவலாளிக்கான உணவும் வந்து சேர்ந்துவிட்டது. பொட்டலமாக வந்த அதனைப் பிரித்தார் காவலாளி. உள்ளே இருந்தவை மூன்று ரொட்டிகள்.

வாசனையை மோப்பம் பிடித்துவிட்ட நாய் காவலாளியின் அருகே வந்து நின்றது. அது முகம் ஏறிட்டு நோக்கியது அந்தக் காவலாளியை. ஒரு ரொட்டியை எடுத்து அதன் முன்னே வீசி எறிந்தாரவர்.

‘லபக்’கெனப் பாய்ந்து கவ்விய நாய், அதனைக் கவ்விய வேகத்திலேயே மளமளவென்று மென்று விழுங்கியது அதனை. காவலாளியும் பார்த்துக் கொண்டே இருந்தார். அதன் பசி தீரவில்லை என்பதை, ஒரு ஏக்கப் பார்வையைக் காவலாளியின் புறம் வீசியபடியே நின்றிருந்த அதன் தோற்றம் அவருக்குப் புரிய வைத்தது.

இன்னும் அது தின்னக் கேட்கிறது! மற்றொரு ரொட்டியையும் எடுத்து அதன் முன்னே போட்டார் அக் காவலாளி. அதைத் தின்று முடித்தும் நகரவில்லை அந் நாய். நன்றியுணர்வுடன் கூடிய அதன் பார்வை என்ன செய்ததோ அந்தக் காவலாளியை. கையிலிருந்த மூன்றாவது ரொட்டியையும் அதன் முன்னே வீசியெறிந்தாரவர்.

காவலாளியின் கை இப்போது வெறுமை. ஆனால், அவரின் முகத்தில் நிரம்பி வழிந்தது பெருமை!

அவ்வழியாகச் செல்ல நேர்ந்த ஹலரத் அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை ஆரம்பத்திலேயே ஈர்த்து நிறுத்தியது அக் காட்சி. நடப்பதையெல்லாம் நிதானமாகக் கவனித்துக் கொண்டே நின்றிருந்தார்கள்

அபிஸீனிய அடிமையாகவே தெரிந்தார் அக் காவலாளி. அவருடைய நிறமோ அண்டக் கருப்பு; ஆனால் உள்ளம்தான் எத்துணை வெண்மை. இறை நம்பிக்கையுடைவரே அவர் என்பதை அந்த வெண்மையே பளிச்சிட்டுக் காட்டியது. பொட்டலத்தில் வந்த அந்த உணவில் அவர் தமக்காக எதையுமே நிறுத்திக் கொள்ளாதது பெரும் வியப்பைத் தந்தது ஹலரத் அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் (ரலி) அவர்களுக்கு. மெதுவாக உள்ளே சென்று முகமன் கூறி அவ்வடிமையிடம் பேச்சுக் கொடுத்தார்கள்.

“அன்றாடம் உமக்கு எத்தனை ரொட்டிகள் கிடைக்கின்றன?”

“மூன்று ரொட்டிகள்”

“அப்படியானால், வந்த மூன்றையும் நீர் நாய்க்கே போட்டுவிட்டாயே!”

“ஐயா! இங்கே குடியிருப்புகள் எதுவுமே இல்லை. இந்த நாய் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை. இங்கே அதற்கு வேறெந்த உணவும் கிடைக்கப் போவதுமில்லை. பசித்த நிலையிலேயே அது துவண்டு திரும்புவதைக் காண என் மனம் ஒப்பவில்லை. இந்த ரொட்டிகளைத் தின்று அது பெற்றுவிட்ட தெம்பைத் தாங்கள் பார்க்கிறீர்களல்லவா? – என்ற அந்த அடிமையின் முகத்தில் மின்னிய திருப்தியின் ரேகைகளைக் கண்டு மனம் நெகிழ்ந்தார்கள். ஹலரத் அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.

“ஆம். ஒருவாறாக அதன் வயிறு நிரம்பிவிட்டது. ஆனால், உனக்காக நீ எதனையும் நிறுத்திக் கொள்ளவில்லையே இனி பட்டினி தானே கிடப்பாய்?” என வினவினார்கள் அப் பெரியார்.

"ஐயா! ஒரு நாள் பட்டினி கிடந்துவிடுவதால் என்ன குறை ஏற்பட்டு விடப் போகிறது – என்ற அடிமையின் பதில் அவரைப் பற்றிய ஓர் உயர்ந்த கணிப்பையே ஏற்படுத்தியது அவர்களின் இதயத்தில்.

சீதக்காதிபசித்து நிற்கும் பிராணிகளை உண்ணச் செய்வதும், தவித்து வருவனவற்றைத் தாகந் தீரச் செய்வதும் நம் மீது கடமையாக ஏவப்பட்டுள்ளது. பேச வாயற்ற ஜீவன்களிடத்தில் பரிவு காட்டி, பண்பாட்டைப் பேணி வெளிப்படுத்தவில்லையானால், படைப்பினங்களில் மேலானவனாக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் தான் என்று பெருமை கொள்ள மனிதனுக்கு என்ன அருகதையிருக்கிறது! வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகளிடத்திலோ நம் மீதுள்ள பொறுப்பு இன்னும் கடினமானது.

“வாயில்லாப் பிராணிகளின் விஷயத்தில் வரம்பு மீறிவிடுவது பற்றி, கடுமையாக வினவப்படுவீர்கள்” – என்று நபி பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள். பண்டைய அரேபியர்களில் ஒருவர் இறந்து போனால், அவருடைய வாகனத்தையும் பிராணியையும் அவரின் புதைகுழியின் அருகிலேயே கட்டிவிட்டுவிடுவார்கள். உண்ண உணவின்றி பருக நீருமின்றி பசியிலும் தாகத்திலும் அதுவும் செத்துத் தொலைய வேண்டியதுதான். எத்தகைய அநீதமான கொடுமை இது!

செம்மறியாட்டின் மடுவையும், ஒட்டகையின் திமிலையும் மட்டுமே அறுத்துப் புசித்துவிடும் பழக்கமும் அறியாமைக்கால அரபுகளிடையே இருந்தது. உயிருள்ள பிராணிகளின் உடலுறுப்புகளைத் துண்டிப்பவர்களைப் பற்றிய சாபக்கேடு ஸஹீஹூல் புகாரியில் காணப்படுகிறது. மிருகங்களைக் கட்டி வைத்து அவற்றின் மீது அம்பெய்து பழகலாகாதென ‘திர்மிதீ’யில் எச்சரிக்கப்பட்டுள்ளது. தீங்கிழைக்காத விலங்குகள், தீண்டாத ஜந்துக்களையும் கூட அவசியமின்றி கொல்வது அனுமதிக்கப்பட்டதல்ல. குறிப்பாக, ஹூத்ஹூது, தேனீ, எறும்புகளைக் கொல்ல வேண்டாம் என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்திருக்கிறார்கள்.

வாயற்ற ஜீவன்களின் விஷயத்தில் பல்வேறு வரம்புகளைப் பேணும்படி நமக்கு ஏவப்பட்டுள்ளது. பிராணிகளின் பேரிலான தன் கடமைகளைப் பேணாதவன் மனித உரிமைகளைப் பேணுவதிலும் பலஹீனப்பட்டவனாகவே ஆகி விடுவான்.

ஹலரத் அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், அபிஸீனிய ஹிஜ்ரத்தின் போது தம் நா வளம் கொண்டு அந்நாட்டின் மன்னரையே இஸ்லாத்தை ஏற்கச் செய்த மாநபித் தோழர் ஹலரத் ஜஅஃபர் இப்னு அபீதாலிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பெற்றெடுத்த செல்வராவர். ஹிஜ்ரி ஏழாம் ஆண்டில் ‘மூஅத்தா’வில் நடைபெற்ற போரில் தள நாயகராக நின்ற அத் தந்தை தம் இன்னுயிரை ஈந்து சுவனப் பெருவாழ்வை ஏற்கச் சென்றுவிட்டபோது அநாதையாகி நின்ற இச் செல்வரை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அப்துல்லாஹ் தோற்றத்தில் மட்டுமின்றி துயர சரித்திரத்திலும் என்னைப் போன்றவரே’ என்று கூறியபடி பரிவோடு அணைத்துக் கொண்டார்கள். ‘இறைவா! ஜஅஃபரின் மக்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நானே பொறுப்பேற்கிறேன்’ என்று அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்று வாழ்த்தினார்கள்.

கருணை நிறைந்த அந்தக் கொடை நிழலும் ஐந்து ஆண்டுகளில் விடைபெற்றுப் பிரிந்து போனது. என்றாலும் குறைந்த அக் கால கட்டத்திலேயே குணநல மேம்பாடுகளில் பண்பட்டு விட்ட அப்பாலகர் பிந்திய காலத்தில் வெளிப்படுத்திய தம் வள்ளன்மையின் காரணமாக, ‘பஹ்ருல் ஜூத் – ஈகைப் பெருங்கடல்’ ‘ஸக்கீயுல் முஸ்லிமீன்’ – முஸ்லிம்களின் புரவலர்’ என்றெல்லாம் புகழப்பட்டார்கள். அரபு நாட்டின் அன்றைய வரலாற்றில், வள்ளன்மையில் அவர்களுக்கு ஈடாக எவரும் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேராசியின் பலனாக பொருளாதார வளம் கொழிக்கப் பெற்று பெரும் வள்ளலாகத் திகழ்ந்த அப் பெரியார் அபிஸீனிய அடிமைக்கு முகமன் கூறி வாழ்த்தி விடை பெற்று, தங்கள் வழியைத் தொடர்ந்தார்கள். அவர்களின் சிந்தனை தாம் கண்ட அச் சம்பவத்தின் பேரிலேயே இலயித்திருந்தது.

வள்ளன்மைக்குப் பெருத்த செல்வமா தேவை? விரிந்த உள்ளத்தின் உள்ளிருந்து ஊற்றெடுப்பதல்லவா கொடைப் பெருக்கு! அந்தக் கரு நிறத்து ஹபஷீ ஓர் அடிமை. என்றாலும் ஒரு ஜீவனிடத்தில் அவர் காட்டிய கருணை, வழி நெடுகிலும் வள்ளல் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் எண்ணங்களை இனிமை பெறச் செய்து கொண்டிருந்தது.

சீதக்காதிநகரை வந்தடைந்த ஹலரத் அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நண்பர்களோடு நடத்திய கருத்துப் பரிமாற்றங்களினூடே அத் தோட்டத்தின் உரிமையாளரைப் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொண்டார்கள்; உடனடியாகவே சென்று அவரைச் சந்தித்து, தோட்டத்தை விலை பேசிப் பெற்று, தமதுடைமையாக்கிக் கொண்டார்கள். அவ்வடிமைக்குண்டான விலையையும் கொடுத்து அவரையும் தமக்குரியவராக்கிக் கொண்டார்கள். மீண்டும் அத் தோட்டத்தைச் சென்றடைந்த ஹலரத் அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள், அவ்வடிமையைச் சந்தித்துச் சொன்னார்கள்.” “இத் தோட்டத்தை நான் விலை கொடுத்து வாங்கிவிட்டேன்” என்று,

“சோபனம் தங்களுக்குச் சுப சோபனம்” என்று கூறி வாழ்த்தினார் அவ் வடிமை.

“உன்னையும் நானே விலை கொடுத்து வாங்கிவிட்டேன்” என்றார் வள்ளல்.

“மிக்க மகிழ்ச்சி. தங்களின் சேவையில் மனப்பூர்வமாக என் உடலை அர்ப்பணிப்பேன் என் எஜமானரே!” என்றார் அவ் வடிமை.

ஆனால், இப்போது நான் உனக்கு விடுதலையளித்து விட்டேன்” என்றார் அப் புரவலர்.

அதைக் கேட்ட அந்த அடிமை பரவசப்பட்டவராக, “தங்களின் கிருபையை எண்ணி, கிருபை நிறைந்த பேருள்ளத்தைக் தங்களுக்கு அருள்பாலித்துள்ள அல்லாஹ்வுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்” என்றார்.

“அவசரப்படாதே! என் சொற்களைப் பூரணமாக நீ கேள்!” என இடைப்பட்டார்கள் ஹலரத் அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.

“கூறுங்கள் என் தாளாளரே! தங்களின் சொற்களைப் பூரணமாகச் செவியேற்றுச் செயல்பட கடன்பட்டுக் காத்திருக்கிறேன்” என்றார் அடிமை.

“என் நெஞ்சத்தில் இடம் பற்றியவனே! இத் தோட்டத்தையும் உனக்கே நான் அன்பளிப்பாக தந்து விட்டேன்!” என்று ஹலரத் அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறக் கேட்டுத் திகைத்தே போனார் அந்த அபிசீனியர்!

“அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் எதைச் செலவு செய்த போதிலும் அதற்கான கூலியை உங்களுக்குப் பூரணமாகவே அளிக்கப்படும். (அதில்) ஒரு சிறிதும் உங்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது என்கிறது இறைமறை (அல்குர்ஆன் 8:60).

வாயற்ற ஜீவனுக்கு மனமிறங்கி ஓர் அடிமை அர்ப்பணித்தது மூன்று ரொட்டிகள். அதற்குப் பகரமாக அவர் பெற்றதோ வாழ்வின் முழு உரிமை! அதற்கும் மேலாகவா இந்தத் தோட்டம்!

கருத்த நிறம்! தடித்த உதடுகள், பருமனான உடல், ஆனால், அந்த உடலுக்குள்ளே ‘தக்வா’ வென்னும் இறையச்சம் பொதியப் பெற்ற உள்ளத்தைக் கொண்டிருந்த அந்த மனிதர் பேசினார். “என் ஏந்தலே! தங்களின் கருணைக்கு நன்றி செலுத்த வேண்டியதும் என் கடனல்லவா? அந்தக் கடனை நிறைவேற்ற இந்த என் தோட்டத்தையே தங்களுக்கு காணிக்கையாக்குகிறேன்; ஏற்று விடை தாருங்கள்” என்று

“ஏன் விடை? என்னைப் பிரிந்து எங்கே செல்லப் பார்க்கிறாய்?” எனத் துடித்தார்கள் அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் ரளியல்லாஹு அன்ஹு.

“என்னுடைய இதயத்தில் யதார்த்தமான ஒரு செயல் தங்களின் இதயத்தில் என்னைப் பற்றிய மிக உயர்ந்த எண்ணத்தை உருவாக்கி விட்டது. அதுவே எனக்குள் பெருமை உணர்வை ஏற்படுத்தி விடலாம். இனி நான் இங்கே தங்குவது தகாது. தாங்களோ எனக்கு உரிமை வழங்கிவிட்டீர்கள். அந்தக் கருணையை ஏற்றுச் சுகிக்க என்னை அனுமதியுங்கள். இனி என் வழியே செல்ல மகிழ்வுடன் எனக்கு விடை தாருங்கள். அல்லாஹ் தங்களுக்கு வளமும் நலமும் பெருகச் செய்வானாக!” என்று கூறி விடைபெற்றார் மனவளம் மிகைத்த அம்மாபெரும் வள்ளல்.

நன்றி : நம்பிக்கை, மே 2010

மலேஷியாவின் உலக இஸ்லாமியத் தமிழ் மாத இதழ்

source:   http://kadharmaslahi.blogspot.in/2012/06/blog-post_07.html