Home இஸ்லாம் கட்டுரைகள் நாம் ஒரு வணிகச் சமூகம்
நாம் ஒரு வணிகச் சமூகம் PDF Print E-mail
Wednesday, 24 January 2018 08:15
Share

நாம் ஒரு வணிகச் சமூகம்

அரபுலகில் வணிகச் சமூகமாக வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் மக்காவின் வணிகப் பிரமுகர்கள். அவர்களுக்கு மத்தியில் உண்மையாளராகவும் வாய்மையாளராகவும் அறியப்பட்ட முஹம்மது  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நேர்மையான வணிகராக அன்றைய சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள்.

வணிகம் என்பது வருமானத்தைப் பெருக்கும் வழியாக பார்க்கப்பட்ட மனித சமூகத்துக்கு மத்தியில் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி மூலம் வணிகத்தை இறைவணக்கமாக மனிதகுலத்துக்கு செய்யும் சேவையாக மறுமையில் உயர்ந்த அந்தஸ்த்தை பெறும் காரணியாக வணிகத்துக்கும் வணிகர்களுக்கும் இஸ்லாம் சிறப்பிடத்தை வழங்கியது.

அல்லாஹ்வின் வழிகாட்டுதல் அடிப்படையில்   முஹம்மது  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள், அவர்களுக்குப் பின் வந்த முஸ்லிம்கள் மிகப்பெரும் வணிகர்களாக அரபுலகம் உட்பட உலகம் முழுவதும் பரவிச் சென்றார்கள். தங்களது வணிகத்தில் கிடைத்த மேலதிக பொருளாதாரத்தை தங்களைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களுக்கு பகிர்ந்தளித்து தாங்கள் வாழ்ந்த நிலத்தை வளப்படுத்தினார்கள்.

தாம் குடியேறிய எல்லா பிரதேசங்களிலும் போலவே தமிழகத்திலும் வணிகத்தின் வழியாகவே இஸ்லாம் அறிமுகமானது. தொடக்கத்திலிருந்து தமிழக முஸ்லிம்களின் வரலாற்றை பார்க்கும் போது இதை அறிந்துகொள்ள முடியும்.

தங்களது வணிகத்தின் மூலம் தங்களது வரலாற்றை தமிழக மண்ணில் ஆரம்பித்த மண்ணின் மைந்தர்களோடு இரண்டறக் கலந்து தமிழகத்தில் தங்களது கலாச்சார பண்பாட்டுத் தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் மஸ்ஜிதுகளை அமைத்தார்கள். அந்த மஸ்ஜிதுகளை மையமாக வைத்து குர்ஆன் மத்ரஸாக்களை, பாடசாலைகளை அமைத்துக் கொண்டார்கள்.

தமிழகத்தைப் பொருத்தவரையில் வாழ்வாலும் வணிகத்தாலும் முஸ்லிம் சமூகம் 1350 ஆண்டுகால மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. தென் தமிழகத்தில் முஸ்லிம்கள் வணிகச் சமூகமாக அறிமுகமாகிப் பரவலாகக் குடியேறி, மண்ணின் மக்களாக தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு வரலாற்றிலே இடம்பிடித்தனர்.

காலம் காலமாக ஒரு வணிக சமூகமாக இனம் காணப்பட்டு வந்த தமிழக முஸ்லிம் சமூகம் தமது வர்த்தகத்தின் மூலம் தாங்கள் வாழும் நிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக உயர்ந்த பங்களிப்பை செய்துள்ளது.

கி.பி. 9 ஆம் நூற்றாண்டிலும் அதற்குப் பிந்திய நூற்றாண்டுகளிலும் தென்னிந்தியக் கடற்கரையோரங்களில் முஸ்லிம் வணிகர்களே கோலோச்சி வந்தனர். ஆசிய ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வர்த்தகத்துக்கு முக்கியத்துவம் வழங்கி வணிகம் செய்த மிக நெடிய வரலாறு முஸ்லிம் சமூகத்துக்கு தமிழகத்தில் உண்டு.

கால மாற்றத்தில் போர்த்துக்கீசிய ஃப்ரெஞ்ச், பிரித்தானியர்களின் வருகை, அவர்களின் மேலாதிக்கம், கூட்டு வணிகம் ஆகியவை காரணமாக தென்னிந்தியக் கடற்கரையோரங்களில் முஸ்லிம்களின் வணிகம் கொஞ்சம் கொஞ்சமாக முடங்கியது.

தங்களின் கட்டுப்பாட்டினை இழந்த நெருக்கடியான காலக்கட்டத்தில், தமிழகத்தின் உட்பகுதிகளில் இருந்து புதிதாக முஸ்லிம் வியாபார சமூகம் ஒன்று அன்றைய மதராஸ் இன்றைய சென்னையில் வந்து குடியேறியது. அதற்கு முன்பே மதராஸில் பல்வேறு இந்தியப் பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம்களும் வணிகம் நடத்தி வந்தார்கள்.

20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதராஸ் மகாணத்தில் முஸ்லிம்களே வர்த்தக உலகில் பெருமளவில் வியாபித்து இருந்தனர்.

வரலாறு முழுவதும் வணிகத்தில் முதன்மைச் சமூகம் என்ற சிறப்பான அடையாளத்தை பெற்றிருந்த தமிழக முஸ்லிம் சமூகம் இன்று மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தன் பாரம்பரியம் அறியாமல் மாத ஊதியப் பணியாளர்களாக மாறிவரும் இன்றைய படித்த இளைய தலைமுறையிடம் வணிகத்தின் மேன்மையை விதைக்க வேண்டிய அவசியமும், தேவையும் உள்ளது.

இஸ்லாமியப் பரவலுக்கும், உலக வரலாறு கண்ட இஸ்லாமிய பொற்காலத்திற்கும், மேம்பட்ட முஸ்லிம்களின் சமூக வாழ்க்கைக்கும் முஸ்லிம் வணிகர்களின் பொருளாதாரமே அடித்தளமாய் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

வணிகம் குறித்த விரிவான வழிகாட்டுதல்களை இஸ்லாம் மனித சமூகத்துக்கு வழங்கியுள்ளது. ஆயுள் முழுவதும் கூலித் தொழிலில் கிடைக்காத அபிவிருத்தி நேர்மையான வகையில் செய்யப்படும் வணிகத்தில் கிடைக்கும்.

Related imageவணிகத்தில் கிடைத்த அளவிடமுடியாத அருள்வளத்தின் மூலம்தான் இறைஇல்லங்களும், அறிவாலயங்களான கல்வி நிறுவனங்களும் உருவாக்கப்பட்டு சமூகத்தின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது என்பதற்கு நம் கண் முன் ஆயிரம் சாட்சிகள் இருக்கிறது.

வரலாற்றை மீட்டெடுக்கும் முகமாக வளரும் முஸ்லிம் இளம் தலைமுறையினரை வணிகத்தின் பக்கம் திருப்பவும் மாறிவரும் காலச் சூழ்நிலைக்கேற்ப தொழில் துறைகள் சம்பந்தமான அறிவைப் பெற உற்சாகப்படுத்துவதற்காகவும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் “நாம் ஒரு வணிகச் சமூகம்” என்ற தலைப்பில் தொடர்ந்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பன்னாட்டு, உள்நாட்டு கூட்டு நிறுவனங்கள் தங்களது கூட்டு முயற்சியில் பெரும் பெரும் வணிக நிறுவனங்களை உருவாக்கி வணிக உலகை ஆகரமித்திருக்கும் இன்றை சூழலில் இது ஒரு தற்காலிகமான முயற்சியே!

அருள் வளம் நிறைந்த வணிகத்தை ஒரு அறிவாக, வாழும் காலத்தை உள்வாங்கி மாற்று வணிகச் சிந்தனைகளை அடுத்து வரும் இளம் தலைமுறையின் உள்ளத்தில் ஆழப்பதிக்க வேண்டும். இஸ்லாம் வழங்கும் வணிக வழிகாட்டுதல்களை இன்றைய சூழலோடு பொருத்தி ஒரு வணிகப் பள்ளியை உருவாக்குவதே நிரந்தரத் தீர்வாக அமையும்.

எனவே இன்ஷா அல்லாஹ் அதன் ஒரு முயற்சியாக பாண்டிச்சேரியில் உருவாக இருக்கும் பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனத்தின் ஒரு பிரிவாக “இந்தோ - அரப் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ்” ஒன்று உருவாக்கப்பட இருக்கிறது.

அதில் சமூகத்தின் பங்களிப்பு அவசியம். சமூகப் பங்களிப்பு இல்லாமல் கல்வி நிறுவனங்கள் உருவாகுவது சாத்தியமற்றது.

முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவும் ஒரு முன்மாதிரி வணிகப் பள்ளியை உருவாக்கும் இந்தப் பணியில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

source:   http://www.samooganeethi.org/index.php/category/salim-articles/item/1046-