Home கட்டுரைகள் எச்சரிக்கை! வரம்புமீறி வசைபாடும் மார்க்க அறிஞர்களுக்கு...
வரம்புமீறி வசைபாடும் மார்க்க அறிஞர்களுக்கு... PDF Print E-mail
Friday, 29 December 2017 08:11
Share

Image may contain: text

வரம்புமீறி    வசைபாடும் மார்க்க அறிஞர்களுக்கு...

"அகீதா"வின் வேறுபாடு காரணமாக இன்று மார்க்க அறிஞர்கள் சிலர் வரம்புமீறி வசை பாடுவதையே தொழிலாகக் கொண்டு வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.  இதுபோன்ற  தவறான  செயல்களுக்கு ஜும்ஆ பயானை பயன்படுத்துவது கொடுமையாக இருக்கிறது.    இது நிச்சயமாக ஆரோக்கியமான செயலல்ல என்பதை அவர்கள் உணர வேண்டும்.

இதுபோன்ற ஆலிம்களுக்காக கீழ்காணும் நபிமொழிகளை இங்கு இடம்பெறச் செய்துள்ளோம். படித்த பிறகாவது திருந்துவார்களாக!

வரம்புமீறி வசைபாடும் பள்ளி இமாம்கள்  மட்டுமல்ல மற்றவர்களும்  அழுத்தமாக மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டிய நபிமொழிகள்...

0 "மக்கள் நாசமடைந்து விட்டனர்" என்று எவன் கூறுவானோ, மக்கள் அனைவரையும் விட அதிகமாக அவன் தான் நாசமடைந்து போவான். (ஏனெனில் இவ்வாறு சொல்பவன் மற்றவர்களை இழிவாகக் கருதியதால் தற்பெருமை என்னும் பாவத்தில் பீடிக்கப்பட்டுள்ளான்) என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

0 "அடியான் சிந்திக்காமல் ஒரு சொல், சொல்லிவிடுகின்றான். அதன் காரணமாக கிழக்கு – மேற்கிற்கு இடையே உள்ள இடை தூரத்தைவிடவும் அதிக தூரம் நரகத்தில் போய் விழுகிறான்" என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

0 "மனிதன் ஒரு வார்த்தையை பேசி விடுகிறான், அதைச் சொல்வதில் எந்த குற்றமும் இல்லை என்று கருதுகிறான். ஆனால் அதன் காரணமாக எழுபது வருட தொலை தூரத்திற்குச் சமமான அளவு நரகத்தில் போய் விழுகிறான்." என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)

0 "எவரேனும் தன் முஸ்லீம் சகோதரரைப் பார்த்து, 'காஃபிரே' (அல்லாஹ்வை நிராகரித்தவரே) எனக் கூறினால் குஃப்ரு அவ்விருவரில் ஒருவரிடம் அவசியம் வந்தே தீரும். இவர் கூறியது போல் அவர் உண்மையிலேயே காஃபிராக இருந்தால் சரி, இல்லையானால், காஃபிர் என்று சொன்னவரிடமே குஃப்ரு (இறை நிராகரிப்பு) திரும்பி வந்துவிடும்' என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹிப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்;)

0 "நீங்கள் உங்கள் சகோதரனிடம் ஏதேனுமொரு பொய்யான செய்தியைச் சொல்ல அதை அவர் உண்மை என்று நம்புகிறார், இது மிகப்பெரிய மோசடியாகும்" என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதைக் கேட்டேன்" (அறிவிப்பாளர்: ஸுஃப்யானிப்னு அஜீத் ஹளரமீ, நூல்: அபூதாவூது)

0 "ஓர் அடியயான் பொய் சொன்னால் அவனுடைய பொய்யின் துர்வாடையினால் மலக்கு அவனை விட்டு ஒரு மைல் தூரம் தூரமாகிவிடுகிறார்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லா ஹிப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ;)

0 "புறம் பேசுவது விபச்சாரத்தைவிட மிகக்கொடியது" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது, "யா ரஸுலல்லாஹ்! புறம் பேசுவது விபச்சாரத்தைவிட மிகக்கொடியதாக எப்படி ஆகும்?" என ஸஹாபாக்கள் கேட்டனர். "ஒருவன் விபச்சாரம் செய்துவிட்டு 'தவ்பா' (இனி அப்பாவத்தை ஒருபோதும் செய்வதில்லை என அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டல்) செய்தால் அல்லாஹ் அவனது தவ்பாவை ஒப்புக்கொள்வான். ஆனால், எவரைப்பற்றி புறம் பேசப்பட்டதோ அவர் மன்னிக்காதவரை அல்லாஹ்வின் புறத்திலிருந்து புறம் பேசியவனுககு மன்னிப்பு கிடையாது" என்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஸஃத் மற்றும் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: பைஹகீ)

0 இறைநம்பிக்கையாளன் குத்திப் பேசுபவனாகவும் அடிக்கடி சாபமிடுபவனாகவும் இருப்பது இல்லை. மானங்கெட்ட செயல்புரிபவனாகவும், சண்டையில் தீய வார்த்தைகள் பேசுபவனாகவும் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஹாகிம்)

0 எவன் ஒரு முஸ்லிமுக்கு தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு தீங்கிழைப்பான். எவன் ஒரு முஸ்லிமை கஷ்டத்தில் ஆழ்த்துகிறானோ, அல்லாஹ் அவனை கஷ்டத்தில் ஆழ்த்துவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸிர்மா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ)

0 உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்திற்கு உள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனக்கு உதவி செய் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்திற்கு உள்ளானவருக்கு நாங்கள் உதவி செய்வோம் ஆனால் அக்கிரமக்காரனுக்கு எப்படி உதவி செய்வோம்? என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனை அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து விடு(ங்கள்) இதுவே நீ(ங்கள்) அவனுக்கு செய்யும் உதவி என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2444).

0 ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும், (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்தக்கொண்டிருக்கின்றன, அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சல் கண்டு விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : நுஃமான் பின் பஸீர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 4011).

0 ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள், பிணங்கிக்கொள்ளாதீர்கள், (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்த ஒரு முஸ்லிமும் தம் சகோதரனுடன் முன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 4045).

0 மக்களை அதிகமாக சுவர்க்கத்தில் புகுத்துபவை இறையச்சமும் நற்குணமும்தான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதீ, ஹாகிம்).