நிழலே இல்லாத நாளில் PDF Print E-mail
Tuesday, 21 November 2017 08:28
Share

நிழலே இல்லாத நாளில்

      அல்லாமா இப்னு ஹஜ்ர் அஸ்கலானி       

      தமிழில்: மவ்லவி, சையித் அப்துர் ரஹ்மான் உமரி       
.
அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழல் தவிர வேறு நிழலே இல் லாத அந்நாளில் நிழல்தரும் மரங்களோ தருக்களோ இதம் தரும் நீர்நிலைகளோ தென்படாது; கூரைவேய்ந்த வீடுகள் எங்கு மிருக்காது. ஒதுங்க ஏதும் வாய்ப்பான இடம் கிடைக்காதா என எல்லா மனிதர்களும் விரண்டோடுவார்கள். தலைக்கு நேர்மே லாக சுட்டெரிக்கும் கதிரவன். திகைப்பும் தவிப்பும் தலைக்கு மேலாக கவிழ்ந்து காணப்படும் அந்நாளில் இறைவன் புறத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்படும். நற்பேறு பெற்றோர் ஒருசிலர் கூவிக்கூவி அழைக்கப்படுவார்கள்.
.
இந்நற்செய்தியை அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு உரைக்கிறார்கள்.

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹா அறிவிப்பதாவது, நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலின் கீழ் ஏழு பேர் காணப்படுவார்கள்.

(1) நெறிதவறா தலைவன்

(2) இறைவழிபாட்டில் இளமையைக் கழித்த இளைஞன்

(3) இறையில்லத்தோடு இணைந்திருக்கும் உள்ளம் கொண்ட மனிதன்

(4) அல்லாஹ் வுக்காகவே ஒருவரையொருவர் நேசித்த இரு வர் -இறைவனுக்காகவே ஒன்று சேர்ந்து, இறைவனுக்காகவே ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்தவர்கள்-

(5) அழகும் உயர்குடிச் சிறப்பும் கொண்ட பெண்ணொருத்தி மையலோடு அழைத்தபோது தான் இறைவனுக்கு அஞ்சுகிறேன் என்றவாறு ஒதுங்கிக் கொண்டவர்.

(6) இடக்கரம் அறியாதவாறு வலக்கரத்தால் தானம் செய்தவர்

(7) விழிகளில் கண்ணீர் கசியும் வண்ணம் தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவர் ஆகியோரே அவ்வேழு பேர் என இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

அல்லாஹும்ம அஜ்அல்னா மினஹும் பிமன்னிக்க வ கரமிக்க!
.
இந்நபிமொழியில் நிழல் எனக் குறிப்பிடப்படுவது அல்லாஹ்வின் அர்ஷின் நிழல் ஆகும். இறைமறையில் அல்வாகிஆ (56:30) அத்தியாயத்தில் இதேபோன்றதொரு நிழல் குறிப்பிடப்படுகின்றது. பரந்து விரிந்திருக்கும் நிழல்!,

செய்த செயல்களின் தகுதிக்கேற்ப பெறும் நன்மைகளின் படிநிலைகள் அமைகின்றன. இறைவனுக்குக் கீழ்ப்படிதல் (இதாஅத்) என்பது இரு நிலைகளில் அமைகின்றது.

(1) இறைவனுக்கும் அடியானுக்கும் இடையிலான தொடர்பிலும் உறவிலும்

(2) இறை அடியார்களுக்கும் அவனுக்குமான தொடர்பிலும் உறவிலும்

ஓர் அடியானுக்கும் அவனது இறைவனுக்கும் இடையிலான உறவை எடுத்துக்கொண்டால் அதில் நாவு இடம் பெறுகின்றது. நாவால் நினைவு கூருகிறான்.

உள்ளம் இடம் பெறுகின்றது. அவனுடைய உள்ளம் இறையில்லம் பள்ளிவாசலோடு இணைந் தும் பிணைந்தும் உள்ளது.

அவன் ஈட்டிய பொருளுக்கு இடம் உள்ளது. அதை இறைவனின் பாதையில் செலவு செய்கிறான்.

அவனுடைய உடலுக்கு பங்கு உள்ளது. அதன் கற்பையும் தூய்மையையும் கட்டிக் காக்கிறான்.

அபூ யுஸ்ர் வழியே பதிவாகும் அறிவிப்பொன்று முஸ்லிம் நூலில் உள்ளது. கஷ்டத்தில் உழல்கின்ற ஒருவனைக் கண்டு அவனுடைய சுமையை இறக்கி அவனது கஷ்டத்தை நீக்கு பவருக்கு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் தனது நிழலில் இடம் அளிக்கிறான் என அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்.

இவ்விரண்டு பண்புகளும் மேற்கண்ட எழுவர் நபிமொழியில் இடம்பெற வில்லை. ஆகையால், ஏழு என்னும் எண்ணிக்கை இறுதியன்று என்பது உறுதியாகின்றது.
இந்நபிமொழியை தொடர்ந்து நான் ஆராய்ச்சி செய்துவந்தேன்.

இந்த எண்ணிக்கையில் மேலும் ஏழு கூடிவிட்டது.

இறைவழிப் போராளிக்கு நிழல் ஏற்பாடு செய்பவர் (இந்நபிமொழி இப்னு ஹிப்பானில் உள்ளது)

முஜாஹிதிற்கு உதவி செய்பவர் (இது அஹ்மதிலும் ஹாக்கிமிலும் உளளது)

கஷ்டங்களில் உழல்பவருக்கு உதவி ஒத்தாசை செய்பவர், அவரது சுமையை இலேசாக்கு பவர் (முன்பே கண்டபடி இது முஸ்லிமில் உள்ளது)

கடனாளி யின் கடன் சுமையைக் குறைப்பவர், சாசனம் எழுதப்பட்ட அடிமைக்கு உதவுபவர் (இது அஹ்மதிலும் ஹாக்கிமிலும் உளளது)

சொல்லிலும் செயலிலும் வாய்மையோடு நடந்து கொள்ளும் வணிகர் (இமாம் பகவீ / ஷர்ஹுஸ் ஸுன்னா)
தொடர்ந்து மேலும் ஆராய்ந்ததில் மேலும் எழுவர் என் பார்வையில் பட்டனர்.

ஆயினும் அவைகுறித்த நபிமொழிகள் யாவும் பலவீனமானவை.

இறைவனின் நிழல்?

இறைவனின் நிழல் என்றால் என்ன? அது எதனைக் குறிக்கின் றது?

இறைவனின் தனிக்கருணையையும் தனிப்பட்ட அரு ளையும் குறிக்கின்றது என்கிறார் இயாழ்.

நிழல் அனைத்தும் அல் லாஹ்விற்கு உரியன. ஆயினும் ஒரு குறிப்பிட்ட நிழலை தனது நிழல் என்கிறான் இறைவன். அது அந்த அடியார்களுக்கு கிடைக் கவுள்ள சிறப்பையும் மாண்பையும் உணர்த்துகின்றது.

இறை யில்லங்கள் யாவும் அல்லாஹ்விற்குரியன. ஆயினும், கஅபத் துல்லாஹ் மட்டும் பைத்துல்லாஹ் எனப்படுகின்றது. காரணம் அதற்கென உள்ள தனிச்சிறப்பு.

அதுபோலவே இங்கே குறிப் பிட்ட சிறந்த சான்றோர்களுக்கு வழங்கப்பட உள்ள நிழல் இறை வனின் நிழலாக உருவகப்படுத்தப்படுகின்றது.

‘அவர் இறைவ னின் நிழலில் இருக்கிறார்!’ என்பது இறைக் கருணையையும் இறையருளையும் முற்றாக வெளிப்படுத்தும் அற்புதச் செய்தி.

இறைவனின் அர்ஷின் நிழல்?

இறைவனின் அர்ஷின் நிழலில் என்றால் என்ன பொருள்? இறைவனின் சிறகுவிரிப்பின் கீழ், இறைவனின் பாதுகாப்பில், இறைக்கருணையின் போர்வையில் - எனப்பொருள்.

தூபா என்னும் நிழல், சொர்க்கத்தின் நிழல் என்றெல்லாம் ஒருசிலர் இதற்குப் பொருள் தருகிறார்கள். ஆனால் அவை சரி யல்ல!. ‘நிழலே இல்லாத நாளில்!’ ‘கியாமத் நாளில்!’ என்னும் சொற்கள் நபிமொழிகளில் உள்ளன. இவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும்.

முதலாவதாக, சொர்க்கத்திற்குச் சென்றபின் தான் இவற்றின் நிழலில் ஒதுங்கமுடியும்.

இரண்டாவதாக, சொர்க்கத்திற்குச் செல்வோர் அனைவருக்கும் இந்நிழல் கிடைத் தே தீரும். அர்ஷின் நிழல் என்பதுதான் சரியான பொருள். கியா மத் நாள் என்னும் சொல் அதனைத் தீர்க்கமாக உணர்த்தி விடுகின் றது.

‘கியாமத் நாளன்று இறைவனுக்கு மிகவும் பிரியமானவர், இறைவனுக்கு அருகில் அமரும் தகுதியுள்ளவர் நேர்மையான நெறிதவறான தலைவர் ஆவார்’ என்றொரு தகவல் திர்மிதீயில் பதிவாகியுள்ளது.

‘கியாமத் நாளில் தனது அர்ஷின் நிழலின் கீழ் எழுவருக்கு அல்லாஹ் இடமளிப்பான். (1)நேர்மையான நெறிதவறாத தலைவர் (2) இடக்கரத்திற்குக்கூட தெரியாமல் வலக்கரத்தால் இறைவழியில் செலவு செய்தவர் (3) அழகும் அந்தஸ்த்தும் மிக்க அழகுநங்கை தன்னையே ஒப்படைக்க முன்வந்தபோது ‘உலகா ளும் இறைவனுக்கு நான் அஞ்சுகிறேன்’ என ஒதுங்கிக்கொண்ட வர் (4) அல்லாஹ்வை நினைவு கூருகையில் அல்லாஹ்வின் மீதான பயத்தால் அழுதவர் (5) இருவர் சந்தித்துக் கொண்டார்கள். -அல்லாஹ்வுக்காக உன்னை நான் நேசிக்கிறேன், அல்லாஹ்வின் மீது சத்தியம் என்றார் இவர். நானும் அல்லாஹ் வுக்காக உன்னை நேசிக்கிறேன் என்றார் அவர்- இவ்விருவர்.’ (ஸுஹைல் இப்னு அபூ ஸாலிஹ்/ முஅஜமுல் கபீர் / தபுரானி)

நெறிதவறான நீதிமிக்க தலைவர்

அத்லு என்றால் நீதி, நெறி தவறாமை. இமாம் மாலிக் பதிவு செய்துள்ள ஓர் அறிவிப்பில் அத்லு என்னும் சொல்லே பண்புரிச் சொல்லின் இடத்தில் கையாளப்பட்டுள்ளது. நீதியின் உருவா கவே வடிவமாகவே அவர் மாறி விட்டார் என்னும் ஒப்பற்ற பொருளை இது தருகின்றது. முஸ்லிம்களின் ஏதேனும் ஒரு பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப் படுகையில் நெறிதவறாது நீதி நேர்மையோடு அவர் நடந்துகொண்டார். இக்கருத்துக்கு வலுசேர்க்கும் பதிவொன்று முஸ்லிம் நூலில் உள்ளது.

‘அல்லாஹ்விடத்தில் நீதிநெறியாளர்களின் நிலை என்ன? ரஹ்மானின் வலப்புறத்தில் உள்ள ஒளியாலான மேடைகளில் வீற்றிருப்பார்கள். பொறுப்புகளை ஒப்படைக்கப்பட்டபோது தம் கட்டளைகளிலும் தம்மைச் சார்ந்தோரிடத்திலும் நெறிதவ றாது நடந்துகொண்டவர்கள் இவர்கள்.’ (சஹீஹ் முஸ்லிம்)

எப்பொருளை எங்கு வைக்க வேண்டுமோ அப்பொருளை இறை நியதிகளுக்கு உட்பட்டு கூடக்குறைவின்றி அங்கேயே வைக்கும் பண்பாளர்கள் இவர்கள்.

இளைஞன்

ததும்பும் இளமை வேகத்தையும் வீரத்தையும் தருகின்றது. மனம் ஆசைப்படுவதை எல்லாம் செய்ய முனைகின்றன வேக மும் வீரமும்! இவற்றோடு போராடி இறைவழிபாட்டில் இல யித்திருப்பதும் தக்வாவைக் கைக்கொள்வதும் மிகவும் கஷ்டம்!

‘தன் இறைவனுக்கு அடிமைப்பட்டிருப்பதில்’ என்பதற்குப் பதிலாக ‘அல்லாஹ்விற்கு அடிமைப்பட்டிருப்பதில்’ என்னும் சொல் முஸ்லிமிலும் அஹ்மதிலும் இடம் பெறுகின்றது.

அவ்வாறே வேறுசில பதிவுகளில் ‘அதே நிலையில் இறப்பைத் தழுவியவன்’ என்பதும் ‘அல்லாஹ்வுக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதிலேயே தன் இளமையைத் தொலைத்தவன், வளர்ந்து ஆளாகியவன்’ என்பதும் காணப்படுகின்றன.

மஸ்ஜிதில் தொங்குபவன்

இறையில்லத்தோடு இணைந்திருக்கும் உள்ளம் கொண்ட மனிதன் - என நாம் கூறுகிறோம். நபிமொழியில் முஅல்லக்குன் ஃபில் மஸாஜித் என்னும் சொற்றொடர்தான் உள்ளது.

முஅல்லக் என்றால் தொங்குவது!. பள்ளிவாசலில் தொங்குவது என்றால் தொங்குசீலை, தொங்கும் சர விளக்குகள் போன்றவை

தொங்குதல் என்பது எதைக் குறிக்கின்றது? தொடர்ந்த ஊழியத்தை!

உடல் பள்ளியில் இருக்கின்றதோ இல்லையோ உள்ளம் பள்ளிவாசலிலேயே தொங்கிக் கொண்டிருக்கின்றது. தொடர்ந்து பள்ளிவாசல் ஊழியத்திலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

அதாவது அவனுடைய உள்ளம் பள்ளிவாசலிலேயே தொங்கிக் கொண்டிருக்கின்றது என்னும் விளக்கமும் ஓர் அறிவிப்பில் உள்ளது.

பள்ளிவாசல் மீதுள்ள மிகுந்த பிரியம் அதனோடு இடைவிடாத தொடர்பைக் கொண்டிருக்குமாறு அவனைத் தூண்டுகின் றது.

‘பள்ளிவாசலோடு தொங்கிக் கொண்டிருப்பவன்’ என்னும் அஹ்மதுடைய பதிவும் ‘நேசத்தின் காரணத்தால்’ என்னும் ஸல்மானின் அறிவிப்பும் இதனை மேலும் தெளிவுபடுத்துகின்றன.

‘பள்ளியை விட்டு வெளியே சென்றால் மறுபடியும் எப்போது பள்ளிக்குத் திரும்புவோம் என்று அவனது உள்ளம் தவித்துக் கொண்டிருக்கின்றது’ என விளக்குகின்றது இமாம் மாலிக்கில் உள்ள பதிவு. இவ்வறிவிப்பு முஸ்லிமிலும் உள்ளது.

இந்நபிமொழியின் உண்மையான கருத்தை இவ்விளக்கம் தெளிவுபடுத்துகின்றது எனலாம். பள்ளிவாசலுக்கு உள்ள சிறப் பும் மாண்பும் அனைவரும் அறிந்ததே. பள்ளிவாசல் ஊழியத் தில் தொடர்ந்து ஈடுபட்டிருக்க வேண்டும். உடல் ஒருக்கால் பள்ளிக்கு வெளியேபோக நேரிட்டாலும் உள்ளம் இடைவிடா மல் பள்ளியிலேயே ஒட்டிக் கொண்டிருக்கவேண்டும்.

அல்லாஹ்வுக்காகவே நேசித்தோர்

ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கடுமையான நேசம் பாராட்டு கிறார்கள், அல்லாஹ்வுக்காக! நேசம் கொள்வதில் ஒருவருக் கொருவர் சளைத்தவர்களாக இல்லை. வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளும் நேசம் அன்று, உண்மையிலேயே உளப் பூர்வமாக நேசிக்கிறார்கள்.

‘அல்லாஹ்விற்காக உன்னை நேசிக்கிறேன் எனச்சொல்லி ஒருவரை ஒருவர் நேசித்துக்கொள்ளும் இருவர். (உதட்டளவில் நில்லாது) உளப்பூர்வமாக நேசிப்பவர்கள்’ என்றோர் அறிவிப்பு இதனைத் தெளிவு படுத்துகின்றது. (ஹம்மாத் இப்னு ஸைத்)

(‘இறைவனுக்கான) அந்த நேசத்தில் இணைந்து நிற்பார்கள். அதற்காகவே பிரிவார்கள்’ என விளக்குகின்றது மற்றோர் அறிவிப்பு. (காண்க: முஅத்தா இமாம் மாலிக்)

இது இறைவனுக்காக ஏற்பட்ட நேசம். ஆகையால் உலக நாட் டமோ உலகப் பொருட்களோ இந்நேசத்தை குலைக்க முடிவ தில்லை. அவர்கள் உலகை விட்டுப் பிரிந்தாலும் இந்நிரந்தர நேசம் ஒருபோதும் அழிவதில்லை.

ஆழ்ந்து கவனிக்கவேண்டிய அம்சமாகும் இது.

நேசம் என்பதே இருவருக்கிடையில் ஏற்படுவதுதான். நேசம் பாராட்டிக் கொள்கின்ற இருவருக்கிடையிலான நேச அளவு ஒன்றுபோல இருப்பதில்லை. இருப்பது சாத்தியமுமில்லை. நேசத்தில் ஏற்ற யிறக்கம் காட்டயியலாத அளவு இறைவனுக்காக நேசத்தில் நெருங்கி நிற்பவர்கள் இவர்கள்.

அழகுமங்கை அழைத்தபோது!

அடுத்து, அழகும் உயர்குடிச்சிறப்பும் கொண்ட பெண்ணொ ருத்தி மையலோடு அழைத்தபோது தான் இறைவனுக்கு அஞ்சுகிறேன் என்றவாறு ஒதுங்கிக் கொண்டவர். நாடியபோது என்றுதான் அறிவிப்பில் உள்ளது. கூப்பிட்ட போது என்னும் சொற்கள் இமாம் அஹ்மதுடைய அறிவிப்பில் உள்ளன.

கண்ணியம், கௌரவம் போன்றவற்றால்தான் உயர்குடிச் சிறப்பு கிடைக்கின்றது. குலச்சிறப்பு, குடிச்சிறப்பு, செல்வச் சிறப்பு ஆகியவற்றை இது உள்ளடக்கியுள்ளது. ஒருவரிடம் ஈர்ப் பையும் கவனத்தையும் காதலையும் தானாக தோற்றுவிக்கவல்ல அதிமுக்கியப் பண்புகள் இவை. புகழும் செல்வமும் அவற்றால் கிடைக்கின்ற சமூக அந்தஸ்த்தும் கூடவே கொட்டிக் கிடக்கின்ற பேரழகும் ஒருசேர ஒரு மங்கையிடத்தில் பார்ப்பது அரிது.

‘தன்னை ஆட்கொள்ளுமாறு அழைத்தாள்’ என்றும் ‘தன்னை யே ஒப்படைக்க முன்வந்தாள்’ என்றும் அறிவிப்புகளில் காண முடிகின்றது. எவ்வாறிருப்பினும் அவள் ‘சோரம்போக’வே அழைத்திருக்கிறாள்.

‘தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு’ அழைத்தாள் என்றும் ஒருசிலர் விளக்கம் தந்திருக்கிறார்கள். அவளை மண முடித்துக் கொண்டால் இறைவழிபாட்டிற்கு பங்கம் நேர்ந்து விடும் என்றவன் பயந்தான் என மேலும் விளக்குகிறார்கள்.

அல் லது தான் இறைவழிபாட்டில் மூழ்கி இருப்பதால் அவளுக்கு செய்தாக வேண்டிய கடமைகளில் குறைவைக்க நேரலாம் என அஞ்சினான் என்கிறார்கள்.

முதலில் கண்டதே சரியான விளக்கமாகும். திருமணத்திற்கு அழைத்திருந்தால் அதை தெளிவாகச் சொல்லியிருப்பாளே!

ஒப்பற்ற தகுதிகள் பலகொண்ட பெண்ணொருத்தி, கண்டவுடன் பார்வையையும் சிந்தனையையும் ஈர்க்கின்ற அழகும் உயர் குடிச் சிறப்பும் கொண்டவள், திட்டமிட்ட அவளை அடைய எண்ணினாலும் கூட அவ்வளவு எளிதில் கைகூடாத இடத்தில் நிலைகொண்டிருப்பவள் தானாக முன்வந்து அழைக்கிறாள்.

அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்

உலகாளும் அல்லாஹ்வுக்கு (ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறேன் என்றோர் அறிவிப்பில் உள்ளது. தீய நடத்தையில் ஈடுபட்டு விடுவோமோ என்னும் திடுக்கத்தினாலும் அப்பெண்ணிடமிருந்து தப்ப வேண்டுமே என்னும் பயத்தி னாலும் அவர் வாய்திறந்து இதனை உச்சரித்திருக்கலாம். அல்லது உள்ளத்தில் உதித்த மனமொழியாகக் கூட இருக்கலாம்.

‘அல்லாஹ்வைப் பற்றிய பயங்கரமான அச்சம், வலுவான தக்வா, அதீத வெட்கம் போன்றவற்றினால் இதை அவர் சொல்லி யிருக்கக் கூடும்’ என்கிறார் இமாம் குர்துபி.

இடக்கரம் அறியாமல்

வலக்கரத்தால் செய்த தானதருமத்தை இடக்கரம் அறியா நிலையில் - என்னும் சொற்றொடர் புகாரியில் உள்ளது. ஆனால், இதற்கு மாற்றமான சொல்லமைப்பு முஸ்லிமில் காணப்படு கின்றது. வலக்கரம் அறியாத நிலையில் இடக்கரத்தால் என முஸ்லிமில் உள்ளது. அதற்குரிய விளக்கத்தை முஸ்லிம் தமி ழாக்கத்தில் காண்க.

யாரும் அறியாமல் இறைவழியில் செலவு செய்வது சிறந்த பண்பாகும். அனஸ் அறிவிக்கும் நபிமொழி ஒன்று ஹஸன் தரத்தில் அஹ்மதில் பதிவாகி உள்ளது.

‘இறைவா! உனது படைப்பில் மலையை விடக் கடினமானது உண்டா?’ என வானவர்கள் வினவினார்கள்.

‘ஆம், உள்ளது. இரும்பு!’ என்றான் இறைவன்.

‘இரும்பை விடக் கடினமானது உள்ளதா?’

‘ஆம், உள்ளது. நெருப்பு!’

‘நெருப்பை விடக் கடினமானது உள்ளதா?’

‘ஆம், உள்ளது. நீர்!’

‘நீரை விடக் கடினமானது உள்ளதா?’

‘ஆம், உள்ளது. வாயு!’

‘காற்றை விடக் கடினமானது உள்ளதா?’

‘ஆம், உண்டு. இடக்கரத்துக்குத் தெரியாமல் மறைத்து வலக் கரத்தால் ஆதமின் மகன் செய்கின்ற தருமம்!’ என்றான் இறைவன்.

(காண்க: இமாம் ஹாஃபிழ் இப்னு ஹஜ்ர் அஸ்கலானி)

யாரேனும் ஒருவர் இந்த ஏழு பண்புகளையும் பெற்று சிறக்க முடியுமா? என்றொரு கேள்வியை ஹாஃபிழ் இப்னு ஹஜ்ர் எழுப்புகிறார். ஆர்வத்தை தூண்டுகின்ற கேள்வி! அதற்கான பதிலையும் தந்துள்ளார். அறிய விழைவோர் அவரது புலூகுல் முராம் நூலின் விரிவுரைப் பார்வையிடுக!

source: https://www.facebook.com/syed.umari.7/posts/686916961512702