Home கட்டுரைகள் Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) சமத்துவ ஹஜ் பயணம்-சிறப்புப் பார்வை!
சமத்துவ ஹஜ் பயணம்-சிறப்புப் பார்வை! PDF Print E-mail
Monday, 09 October 2017 07:41
Share

Related image

சமத்துவ ஹஜ் பயணம்-சிறப்புப் பார்வை!

      டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)       

[ இந்த வருடம் 23 லட்சம் மக்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். அதில் இந்தியா சார்பாக 1,70,025 பேர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். அவர்களில் அரசு ஹஜ் மூலம் 1,36,020 பேர்களும், 45,000 பேர்கள் தனியார் அமைப்பின் மூலமும் ஹஜ்ஜினை நிறைவேற்றியுள்ளனர்.. தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான்-நிக்கோபார் பகுதியிலிருந்து 3226 பேர்கள் ஹஜ் மேற்கொண்டனர்.]

முஸ்லிம்களின் கடைசி கடமையான புனித ஹஜ் பயணத்தினை மேற்கொள்வது ஒவ்வொரு வசதியுள்ள மற்றும் உடல் திடகார்த்தமான முஸ்லிமின் கடமையாகும் என்பது அனைவருக்கும் தெரியும்.

1999ம் ஆண்டு அரசு சார்பான அலுவலக பணியில் உம்ரா மனைவியுடன் செய்துள்ளேன். இருந்தாலும் 2006 ம் ஆண்டு பணி ஓய்விற்கு பின்பு ஹஜ்ஜினை நிறைவேற்றவில்லை என்கிற நெருடல் என் மனதில் இருந்தது.

தனியார் டிராவல்ஸ் மூலமும், அரசு ஹஜ் அமைப்பின் மூலமும் ஹஜ் மேற்கொண்டோர் சொல்லும் செய்திகளையும், பள்ளிவாசல் பயான்கள் மூலம் ஹஜ்ஜின்பயனைப் பற்றி சொல்ல கேட்கும் போதும் நாமும் எப்படியாவது இந்த வருடம் ஹஜ் பயணத்தினை மேற்கொண்டு விடவேண்டும், அதுவும் அரசு சார்பாக மிக குறைந்த செலவினைக் கொண்ட ஹஜ்ஜினை நிறைவேற்றிவிட என்று எண்ணி விண்ணப்பித்தேன். எனது வயது 70தினை தாண்டிவிட்டதால் குலுக்கல் இல்லாமல் மனைவியுடன் செல்ல அனுமதி கிடைத்தது.

தனியார் நிறுவனங்கள் மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ளும்போது சாப்பாடு மற்றும் தங்குமிடம் சிறப்பாக இருக்குமென்றாலும் சில சமயங்களில் தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறைகளுடன் அமைந்து விடுகின்றது. சில புற்றீசல் போன்ற அமைப்புகள் சில இமாம்கள் மூலம் இதனை ஒரு தொழிலாகவே செய்வதும் வெளிப்படையானது.

18 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையினைச் சார்ந்த ஒரு ஹஜ் டிராவல் நிறுவனம் ஹஜ்ஜுக்கு அனுப்புகின்றோம் என்று பணம் வசூல் செய்து ஏப்பமிட்டதும், ஒரு தொழிலதிபரை நம்பி பணத்தினை ஏமாந்த அப்பிராணி சாகுல் ஹமீது என்பவர் பெங்களூர் லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டதும் பலருக்குத் தெரியும்.

இந்த வருடம் சௌதி அரசு 61 போலி ஹஜ் ட்ராவல்ஸ் நிறுவனங்களைக் கண்டுபிடித்தும், 10,533 சௌதி குடிமக்கள் மற்றும் 2,13,533 மற்ற நாட்டு குடிமக்களை பிடித்து விசாரித்து வருவதாக (23.8.2017) செய்தி வெளியிட்டுள்ளது.
அரசு அமைப்பின் மூலம் ஹஜ் செல்பவர்களை இந்திய வெளியுறவுத் துறையினர் விருந்தாளிகளாக கருதுவதால் அவசரகாலத்தில் சௌதியில் உதவும் காட்சிகளைக் காணமுடிகிறது.

இந்த வருடம் 23 லட்சம் மக்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். அதில் இந்தியா சார்பாக 1,70,025 பேர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். அவர்களில் அரசு ஹஜ் மூலம் 1,36,020 பேர்களும், 45,000 பேர்கள் தனியார் அமைப்பின் மூலமும் ஹஜ்ஜினை நிறைவேற்றியுள்ளனர்.. தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான்-நிக்கோபார் பகுதியிலிருந்து 3226 பேர்கள் ஹஜ் மேற்கொண்டனர்.

20.8.2017 ந் தேதி இரவு சௌதி விமானம் மூலம் புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலையில் ஜெத்தா வந்தடைந்தோம். எங்களுக்கு மக்காவில் ரூபாத் என்ற ஆற்காடு தங்கும் விடுதியில் இடம் கிடைத்தது. ஜெத்தா விமான நிலையத்திலிருந்து காலந்தாழ்த்தி புறப்பட்ட எங்கள் பஸ் பாலைவனம் மற்றும் மரமில்லா கற் குன்றுகளைக் கடந்து சென்றது.

Image result for hajj 2017 images

ஒன்றுமே விளையாத மக்கா நகரில் 23 லட்ச மக்களைக் ஈர்க்கும் தன்மை எப்படி ஏற்பட்டது என்று இஸ்லாமிய வரலாறு படித்த என் சிந்தனையினை தூண்டியது. அந்தப் பெருமை பெருமானாருக்கு ஏக இறை தத்துவத்தினை வகி மூலம் இறக்கிய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே தகும். பல்வேறு இன அமைப்பாக இருந்த சௌதி அராபியாவினை ஒரு அரசின் கீழ் கொண்டு வந்த பெருமை மற்றும் எண்ணெய் கிணறு வளத்தினை 1933ல் கண்டு பிடித்த பெருமை அரசர் அப்துல் அஜீஜ் பின் சாத் அவர்களுக்கும், இன்றைய நவீன செல்வம் பொங்கும் நாடாக 1973-74ல் மாற்றிய பெருமை அரசர் அப்துல்லாவிற்கும் தகும் என்றால் மறுப்பதிக்கில்லை.

இந்த வருடம் மட்டும் 6.7லட்சம் குபீக் மீட்டர் தண்ணீரினை சௌதி அரசு மக்கா மாநகருக்கு ஹாஜிகளின் உபயோகத்திற்காக கொடுத்திருக்கின்றது என்றால் பாருங்களேன்.

இரவின் கண்ணைப் பறிக்கும் மின்விளக்குகளில் புனித ஹரத்திற்கு எத்தனை கோகினூர் வைரங்கள் வந்தாலும் ஈடாகாது. தவாப் செய்வதற்கும் காபாவை மற்றும் அஸ்வத் கல்லினை தொடுவதிற்கும் முண்டியடிக்கும் ஆண், பெண் ஆகியோர் ஆர்வ மிகுதியால் காண முடிகிறது. ஆனால் கலீபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அஸ்வத் வெறும் கல் தான், வலது கையினை தூக்கி ‘இறைவன் பெரியவன்’ என்று சொன்னாலே போதும் என்று சொன்னதாக வரலாறு சொன்னாலும் கூட வயதான ஆண்கள் மற்றும் பெண்கள் அதன் அருகில் நெருங்க முயற்சிப்பது தேவையில்லாத ஒன்றாகவே கருத வேண்டியுள்ளது. அதனை அங்குள்ள பாதுகாவலர்களும் விரும்புவதில்லை.

முன்பெல்லாம் காபாவிற்கே வெளியே கையேந்தும் யாசகர்களை சிறு கம்பு கொண்டும் விரட்டும் அரேபிய கண்காணிப்பாளர்களைக் காண முடிந்தது. ஆனால் அந்த முறை ஒழிந்து விட்டதோ என்று என்னும் அளவிற்கு புர்கா பெண்கள் யாசகம் கேட்பதினை காண முடிந்தது.

அப்போது தான் என் நண்பர் ஒருவர் சொல்லும்போது, சிலர் ஹஜ்ஜுக்கு குறைந்த செலவில் அனுப்புகின்றோம் என்று பெண்களைக் கூட்டி வந்து ஹரத்திலும், மதினா மஸ்ஜிதே நவாபியிலும் விட்டு கையேந்தி யாசகம் கேட்டு அதனை வசூல் செய்து பின்பு திருப்பி அனுப்பி விடுவதாக கூறுவதில் உண்மை இருக்குமோ என்று நம்ப வேண்டியுள்ளது. அது மட்டுமல்லாது மக்காவிலும், மதினாவில் சுத்தப் படுத்தும் வேளையில் ஈடுபடும் ஆசிய நாட்டு தொழிலாளர்கள் ஹாஜிகளிடம் ஒரு ரியால், இரண்டு ரியால் காசுக்காக தங்கள் கடமையினை செய்யாமல் நிற்பதும் காண முடிந்தது. இவ்வாறு கையூட்டுக்காக ஏங்கும் தொழிழாளர்களால், புர்கா போட்ட பெண்களாலும் ஒரு காலத்தில் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நினைக்கத் தோன்றுகின்றது.

காபத்துல்லாவிலும், மதினா மஸ்ஜிதே நவாபியிலும் காவலர்கள், ஹாஜி, ஹாஜி என்று அதட்டி வரம்பு மீறுபவர்களை ஒழுங்கு படுத்துகிறார்களே தவிர, இங்குள்ள காவலர்கள் போல தடி கொண்டு தாக்குவதில்லை. அதிகாலை தகஜத், மற்றும் பஜர் தொழுகையின் போதும் காவலர்கள் பாதுகாப்பாகவும், போக்குவரத்து ஒழுங்கு படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தனர், அதன் மூலம் அத்தனை மக்கள் கூடும் இடங்களில் பெரிய விபத்தோ அல்லது இங்குள்ள வழிப்பறி, கொள்ளை மற்றும் ஆதாயக் கொலைகள் நடக்கவில்லை என்ற பெருமை அந்த நாட்டின் கடுமையான சட்டத்தினையே சாரும்.

28.8.2017ல் பஜ்ருக்குப் பின்பு மக்காவிலிருந்து மீனாவிற்கு பஸ் வரும் தயாராக இருங்கள் என்று முத்தவல்லியிடமிருந்து நோட்டிஸ் ஓட்டப் பட்டது. ஆகவே ஆண்கள் மற்றும் பெண்கள் இக்ரா உடை உடுத்தி தயாராக இருந்தார்கள், ஆனால் சொன்னபடி மதியம் ஒருமணி வரை வண்டி வரவில்லை, ஆகவே அடுத்த கட்டிடத்திற்கு பாகிஸ்தான் ஹாஜிகளை ஏற்ற வந்த பஸ்களில் டிரைவர்கள் உதவியுடன் ஒரு வழியாக மினா வந்து கிடைத்த படுக்கைகளை பிடித்தோம். அந்தப் படுக்கைகள் 6அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்டது. ஒரு கூடாரத்தில் 100லிருந்து 150 வரை ஹாஜிகள் தங்க வைக்கப் பட்டனர். அந்த படுக்கையின் மீது விரிக்க புது விரிப்பு வழங்கப் பட்டது. அதனை சிலர் தங்கள் பைகளில் பத்திரப் படுத்திக் கொண்டனர்.

படுக்கைகள் நெருக்கமாக இருந்ததாலும், படுக்கைகளில் செருப்புக் காலுடன் நடந்ததாலும் சிறு-சிறு சச்சரவு ஏற்பட்டது. அத்துடன் ஒரே டெண்டில் பல இடங்களில் ஜமாத் தொழுகை படுக்கையினை எடுத்து விட்டு நடந்தது. ஆகவே இனி வருங்காலங்களில் அடுக்குமுறை படுக்கைகள் வைத்து 50 வயதுக்குமேல் உள்ளவர்கள் நடு, மேல் அடுக்குகளில், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் கீழ் படுக்கைகளிலும் அமர்த்தினால் வசதியாக இருக்கும்.

முதல் நாள் போலவே அடுத்தநாள் அரபாத் மைதானத்திற்கு செல்ல வேண்டிய மக்தப் 55க்கு வாகனம் வரவில்லை. ஆகவே பக்கத்தில் உள்ள மக்தப் 52, 56 வண்டிகளில் ஓட்டுநர் உதவியுடன் மதியம் வந்து சேர்ந்தோம். அந்த மைதானத்தில் உள்ள மலைக்குன்றில் வெயில் இருந்தாலும், கூடாரத்தில் வெயில் அடித்தாலும் அகிலம் போற்றும் பெருமானார் எந்த வித ஒலி பெருக்கியில்லாமல் லட்ச மக்கிளிடையே கடைசி உரை ஆற்றிய இடம் என்று தங்கி கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டு துவா செய்தது கல் நெஞ்சையும் கரைய வைக்கும் காட்சியாக இருந்தது.

மாலை மங்கியதும் முஸ்தலிபா மைதானத்திற்கு வந்து சேர்ந்தோம். அது ஒரு திறந்த வெளி மைதானமாகவும், இரவு பகல் போல மின்சார ஒளி கொண்டதாகவும் இருந்தது. சாரை, சாரையாக மக்கள் வெள்ளம் அங்கு வந்து சேர்ந்து, மைதானத்தில் சிறு,சிறு கற்களை தேடி கண்டுபிடித்து எடுக்க ஆரம்பித்தது தென் ஆப்பிரிக்க மக்கள் ஓடைகளில் வைரங்களை தேடுவது போல இருந்தது. அவரவர் கொண்டு வந்த படுக்கைகளும், துண்டுகளையும் விரித்து தொழுது விட்டு படுத்தாலும் தூங்காமல் கண்விழித்து அங்கு சேரும் பல்வேறு நாட்டு ஹாஜிகளைப் ஆவலாக பார்த்துக் கொண்டு இருந்தனர். அதிகாலையானதும் மினா நோக்கிப் புறப்பட்டனர். கருப்பு இன மக்கள் ஹாஜிகள் விட்டுச் சென்ற படுக்கைகளை, விரிப்புகளை இங்குள்ள காகிதம் சேகரிப்பது போல சேகரித்துக் கொண்டிருந்தனர்.

மறுபடியும் முஸ்தலிபாவினை விட்டு மினா வருவத்திற்காக மக்தப் 55 வண்டியினை சிரமப்பட்டு கண்டுபிடித்தால் அராபிய டிரைவர் தரையில் படுத்துக் கொண்டு வரமாட்டேன் என்கிறார். எங்களோடு வந்த ஒருவர் முதவல்லியிடம் தொலை பேசியில் பேசினார்.

இருந்தாலும் பயனில்லாததால் கிடைத்த வண்டியில் ஏறி மினா வந்து பெரிய ஜம்ரத்திற்கு கற்களை வீசினோம். அன்று மாலை 6 மணிக்கு நாங்கள் குர்பானிக்கு ரூபாய் கட்டியதிற்காக குர்பானி கொடுக்கப் பட்டுவிட்டது என்கிற தொலை பேசிக்கு தகவல் வரும் என்றார்கள். ஆனால் இரவு முழுவதும் அந்த தகவல் வரவில்லை.

அன்று இரவு மினாவில் எனக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது. அது என்னவென்றால் நான் உம்ரா நிறைவுற்றதிற்கான அடையாளமாக தலை முடியினையும், முறுக்கு மீசையையும் மழிக்கவில்லை. அதனிப் பார்த்த பலர் என்னிடம் நேரிலேயே கேட்டு விட்டார்கள். தியாக திருநாளில் தலை முடியைக் கூட மழிக்க மனம் வரவில்லையே என்ற குறை ஏற்பட்டது. அதனை எனது அறை நண்பர் முகமது ஷபியிடம் சொன்னேன். உடனே அவர் நீங்கள் விரும்பினால் நான் எடுக்கின்றேன் என்று டிஸ்போஸபிள் ரேசரை எடுத்து வந்து சிறு பிள்ளையை உட்கார வைப்பது போல தரையில் உட்கார வைத்து முடியினை மழித்தது 65 வருடத்திற்கு முன்பு சிறுவனாக இருந்த போது தான். அன்று ஹாஜி நண்பர் ஒரு நாவிதராகி என்னை ஒரு சிறு பிள்ளையாக்கி முடியினை மழித்து எனது ஹஜ் கடமையினை முடித்தது மறக்க முடியாதது ஆகும்.

இந்த ஹஜ்ஜினை உடல் திடகார்த்தமானவர்கள் மட்டும் நிறைவேற்றவில்லை மாறாக கண்பார்வையற்றோர், முடமானவர், ஆட்டிச நோயால் பாதிக்கப் பட்டோர் , வயதானவர் பிறர் உதவியுடன் நிறைவேற்றினார்கள். தவா மற்றும் ஸயீ செய்வதிக்காக தாயினையும், மனைவியினையும், சகோதர சகோதரிகளையும் அவர்கள் முடியாதவர்கள் என்று எண்ணி மனமுவர்ந்து அவர்கள் கடமையினை நிறைவேற்ற செய்தது எப்படி இஸ்லாத்தில் பெற்றோர்களுக்கும், உடன் பிறந்தவர்களுக்கும் கடமையினை செய்யவேண்டும் என்று எடுத்துக் காட்டியது.

நான் பெரிய ஜம்ரத்திற்கு கல்லடிக்க செல்லும்போது ஆஜானுபாகவான் போன்ற இருவர் இக்ரா உடை உடுத்தி என் முன்னே சென்று கொண்டிருநதனர். எனது ஆவல் மிகுதியால் அவர்கள் அருகில் சென்று நீங்கள் ஜப்பானியர்களா என்றேன் அவர்கள் இல்லை நாங்கள் ஹாங்காங் நாட்டினவர் என்றனர். நீங்கள் சுமோ மல்யுத்தக் காரர்களா என்று வினவியதிற்கு அவர்கள் ஆம் நங்கள் சுமோ யுத்தம் செய்பவர்கள் என்கிறார்கள்.

மாமிச மலைபோன்று இருக்கின்ற அவர்களையும் அல்லாஹ் ஏக இறை தத்துவத்தால் தன் பக்கம் இழுத்து விட்டான் என்று எண்ணும்போது இறைவனின் மகிமையினை அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்ல வைத்தது.

Image result for hajj 2017 images18.9.2017 அன்று மதினா வந்தோம். அழகு கல்லோவியம் தாஜ் மகாலையும் மிஞ்சும் பளிங்கு கற்களால் அலங்கரித்து எழுப்பப்பட்ட ரசூலுல்லாஹ் வாழ்ந்த, மறைந்த இல்லத்தினை காண ஒரு பரவசமேற்பட்டது. அங்குள்ள பாதுகாவலர்கள் ரசூலுல்லாஹ் அடக்கத்தலத்தை ஒரு தர்காவாக்கிவிடக்கூடாது என்று மிகவும் கவனமாக இருந்து ஒரு நொடிக்குமேல் நிற்க அனுமதிப்பதில்லை. மதினாவில் ஒரு தடவை மழைப் பொய்த்து பஞ்சமானபோது வற்றா கிணத்துடன் செழித்து நிற்கும் தோட்டத்தினை ரசூலுல்லாஹ் கேட்டுவிட்டார்களே என்பதிற்காக சதக்காவாக கொடுக்கப் பட்ட பேரித்தம் பழத்தோட்டத்தினை இன்றும் தற்காலிக குடைமூலம் பாதுகாத்து வருகிறார்கள்.

குரான் கண்காட்சி பார்க்க வேண்டிய ஒன்று. மூன்றாம் கலீபா உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கைப்பிரதியிலிருந்து, பல்வேறு காலக் கட்டத்தில் ஓவியம் போல எழுதப் பட்ட குரான் பிரதிநிதிகள் கண்களையும், மனதையும் கவர்ந்தது. இஸ்லாம் மற்ற மதங்கள் போல ஒரு மாயையினை போதிக்கவில்லை, அது ஒரு அழிக்கமுடியா வர லாற்று பெட்டகம் என்றால் மிகையாகாது.

ஏட்டு சுரைக்காய் கதைக்குதவாது என்பார்கள். சிலர் ஹஜ் பயணம் செய்து வரலாற்று சுவடுகளை நேரில் பார்க்காமலே பல கட்டுரைகள், புத்தகங்கள் எழுதி காசாக்குவார்கள். ஆனால் அங்கு நேரில் சென் றால் தான் மக்கா, மதினா எப்படி இஸ்லாத்தில் ஒரு முக்கிய பங்காற்றியது என்று தெரிய வரும். அதுவும் அதிக பணம் செலவழித்து தனியார் மூலம் ஹஜ் செய்யாது அரசு செய்து கொடுக்கும் வசதிகள் மூலம் ஹஜ் செய்தால் தான் அனைத்து தரப்பு மக்களின் நிறை, குறைகளை அறியமுடியும்.

ஹஜ் சென்றவர்கள் கொண்டு வருவது வற்றா ஜம் ஜம் நீர், பேரித்தம் பழம், தொழுகை விரிப்பு, பெண்கள் விரும்புவது புர்கா, மக்கானா மற்றும் தங்க நகைகள். ஆனால் உண்மையில் அங்குள்ள தங்க நகைகளை 21 காரட் நகைகள் தான் என்று சொல்லி விற்பனை செய்கிறார்கள்.

இங்குள்ளது போல 22 காரட் அதுவும் கேடிஎம் பொரித்தது என்று ஏமாற்றுவதில்லை. தமிழ்நாடு ஹஜ் கமிட்டி ஹாஜிகளுக்கு சேவை செய்ய 19 உறுப்பினர்களை அனுப்பியதாக தகவல் உள்ளது. ஆனால் அவர்கள் ஒரு அடையாளத்திற்காக மேல் சட்டை எதுவும் அணியாமல், ஹாஜிகள் வருகை தந்தவுடன் அவர்கள் நலம் பற்றி விசாரிக்காமலும், மினா, அரபாத், முஸ்தலிபா மற்றும் மதினாவில் ஹாஜிகளுக்கு வழிகாட்டுபவர்களாக இருக்கவில்லை. மாறாக அவர்களும் சொந்த செலவில் ஹஜ்ஜுக்கு வந்தவர்கள் போல சென்றுவிட்டார்கள். ஆனால் பக்கத்து கேரள மாநில மற்றும் இந்தோனேசிய, அல்ஜீரியா போன்ற நாடுகளிலிருந்து வந்த ஊழியர்கள் தங்கள் அடையாளம் கொண்ட சட்டைகளை அணிந்து சேவை செய்கின்றனர். ஒருவேளை தமிழக ஊழியர்களுக்கு அதுபோன்ற அடையாள சட்டை அணிவது கேவலமாக தெரிகிறதோ என்னவோ. இனியாவது அவர்கள் அடையாளத்துடன் சேவை செய்ய தமிழக ஹஜ் கமிட்டி வழி வகுக்க வேண்டும்.

இதுமட்டுமல்லாமல் பெரும்பாலான இந்தியன் ஹஜ் சேவை ஊழியர்கள் கேரளா மாநிலத்தவர்களாக இருக்கின்றார்கள். அங்கு ஹஜ் நேரத்தில் எல்லா அலுவலர்களுக்கும் விடுமுறை அளிக்கப் படுகிறது. ஏன் சௌதியில் வேலை செய்யும் தமிழ் நாட்டுக்காரர்கள் அந்த சேவையினை செய்ய முன்வரவில்லை என்று தெரியவில்லை.

27.9.2017 அன்று இரவு வந்து இறங்கிய அனைத்து ஹாஜிகளுக்கும் ஊர், உறவு வித்தியாசமில்லாமல் வரவேற்பு விமானதளத்தில் கொடுக்கப் பட்டது உண்மையிலே சமத்துவ ஹஜ்ஜின் மகிமையினை வெளிக்காட்டியது.

- AP.Mohamed Ali