Home இஸ்லாம் வரலாறு ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ Part - 3
ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ Part - 3 PDF Print E-mail
Monday, 18 August 2008 18:21
Share

ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤  (3)

     போருக்கு மத்தியிலும் அழைப்புப் பணி      

உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் உத்தரவைப் பெற்றுக் கொண்ட சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள், படையணியில் இருந்த மிகச் சிறந்த, அறிவுள்ள, திறமையுள்ள, ராஜதந்திரமிக்க நபர்களைப் பொறுக்கி எடுத்து, ஈரானிய மன்னரின் அவைக்கு அனுப்பி வைத்தார்.

உலக வளங்களை தங்களது மேனியில் பூட்டி அழகு பார்த்துக் கொண்டிருந்த ஈரானிய அவையினருக்கு மத்தியில் இந்த உலக வாழ்வை மறுமை வாழ்விற்காக விற்று விட்ட அந்த கூட்டத்தினர், மிகவும் எளிமையான உடைகளுடன் சென்று ஈரானிய மன்னரது அவையில் நுழைந்தனர்.

இஸ்லாமிய ராஜதந்திரிகளின் ஆடம்பரமில்லாத எளிமையான அந்த தோற்றத்தை கண்ட ஈரானிய மன்னரது அவை சற்று நடுங்கித் தான் போனது. முஸ்லிம் ராஜதந்திரிகளின் தலைவராகச் சென்றவர் இப்பொழுது ஈரானிய அவையில் இவ்வாறு உரையாற்றினார்,

மன்னரே!! நம் அனைவரையும் படைத்த வல்ல அல்லாஹ் தான் எங்களைத் தேர்வு செய்து இங்கு அனுப்பி வைத்துள்ளான், எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மக்களின் பணி என்னவென்றால், கேடு கெட்ட சிலை வணக்கக் கலாச்சாரத்திலிருந்து மக்களை மீட்டெத்து உண்மையான நேர்வழியின் பால், படைத்த வல்ல அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கக் கூடிய மக்களாக அவர்களை வழி நடத்துவது ஒன்றே எங்களுக்கு இடப்பட்ட பணியாகும்.

இன்னும் வல்ல அல்லாஹ் அந்த மக்களை இருளிலிருந்து வெளிச்சத்தின் பாலும், அறியாமையிலிருந்து ஞான வெளிச்சத்தின் பக்கமும் வழி காட்டுமாறு பணித்துள்ளான். தனியொரு மனிதனை அவன் மீது சுமத்தப்பட்டுள்ள அடிமைத் தளையிலிருந்து அவனை விடுவித்து, அநியாயக்கார ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து அவனை பூரண சுதந்திர சுவாசக் காற்றை சுவாசிக்கும் இஸ்லாமிய பூங்காவுக்குள் நுழைவித்து, இறைவனது அருள் பெற்ற நன்மக்களாக மாற்றுவதொன்றே எம் மீது சுமத்தப்பட்ட பணியாகும்.

யார் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்கின்றார்களோ அவர்கள் வரவேற்கப்படுவார்கள், இன்னும் யார் இதனை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் மீது போர் தொடுக்கப்படும். அவர்களது பூமிகள் வெற்றி கொள்ளப்பட்டு எமது பூமிகளாக, இஸ்லாமிய ஆட்சிப் பிரதேசமாக மாற்றப்படும். இறைவனது அழைப்பை ஏற்றுக் கொண்டவர்களது பூமிகள் அவர்களுக்கே உரிமை வழங்கப்பட்டு, அதன் ஆட்சி அதிகாரம் அனைத்தும் அவர்களுடையதாகவே இருக்கும். இந்த அழைப்பை யார் உதாசினம் செய்தார்களோ, அவர்கள் மீது போர் தொடுக்கப்படும், இன்னும் அவர்களது பூமிகள் முற்றிலும் அல்லாஹ்வின் ஆட்சிப் பிரதேசமாக மாறும் வரைக்கும் அந்தப் போர் இடைவிடாது தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இப்பொழுது ஈரானிய மன்னர் ஆச்சரியம் கலந்த தொணியில், "உங்களது அழைப்பை ஏற்றுக் கொண்டவர்களுக்கு, உங்களது இறைவனின் என்ன வாக்குறுதியை வழங்கி இருக்கின்றான்?"

மரணித்திற்குப் பின் உள்ள வாழ்க்கையில் சுவனம் கிடைக்கும், அவர்கள் அங்கு மிகவும் கண்ணியமான வாழ்க்கையை வாழ்வார்கள். இன்னும் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லையெனில், வெகு சீக்கிரமே இந்தப் பூமிப் பிரதேசங்கள் எங்களுக்குச் சொந்தமானவையாக மாறும், மன்னர் மணிமுடியைத் துறக்க நேரிடும், இன்றைய உமது அதிகாரங்கள் மற்றும் ஆட்சிப் பிரதேசம் யாவும் முந்தைய வரலாறாக மாறித் தான் போய் விடும் என்று உறுதியாக எச்சரிக்கையான குரலில் பதில் கூறினார்கள்.

முஸ்லிம் ராஜதந்திரிகளின் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாகப் பொறுக்கி எடுக்கப்பட்ட விஷம் தோய்ந்த அம்புகள் பாய்வது போல ஈரானின் மன்னரின் மார்பில் பாய்ந்தது. பொறுமையையும் கட்டுப்பாட்டை இழந்த அந்த ஈரானிய மன்னன் அதிர்ந்த குரலில் எதிரே உள்ளவனை அழைத்தான். அந்த மனிதன் மன்னரே உங்களது கட்டளை என்ன என்பதைக் கூறுங்கள் என்பது போல் வந்து நின்றான்.

வெளியே சென்று சிறிது மணலை அள்ளி வா என்று ஆணையிட்டான் ஈரானிய மன்னன். சென்ற அவன் சிறிது நேரத்தில் ஒரு கூடை நிறைய மண்ணுடன் வந்து மன்னனின் முன் நின்றான். எதிரே நின்று கொண்ட முஸ்லிம் ராஜதந்திரிகளில் ஒருவரான ஆஸிம் பின் உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களுக்கு முன் அந்த மண் கூடையை மன்னன் எறிந்தான்.

அதனை தன்னுடன் எடுத்துக் கொண்ட ஆஸிம் பின் உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள், அதனை சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களிடம் எடுத்துச் சென்றார். வாழ்த்துக்கள்! ஈரானிய மன்னர் தானே முன் வந்து தனது மண்ணை நமக்குத் தாரை வார்த்து விட்டார்! என்று அந்த மண்ணைப் பார்த்து சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் உற்சாகம் மிகுந்த குரலில் கூறினார்கள்.

ஈரானின் மன்னரது அவையில் நடந்த அனைத்தையும் வரி விடாமல் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களிடம் அந்தக் குழு ஒப்படைத்த விட்டு, போர் என்ற பதிலைத் தவிர வேறு எதனாலும் அவருக்கு பாடம் புகட்ட இயலாது என்பதையும் தெரிவித்தனர். நமக்கிடையே உள்ள விவகாரத்தை போர் ஒன்றின் மூலமாக மட்டுமே தீர்த்துக் கொள்ள இயலும் என்பதை அவருக்குச் சொல்லி விட்டுத் தான் வந்தோம் என்றது அந்தக் குழு.

தனது தோழர்கள் ஈரான் மன்னர் முன்பாகத் தெரிவித்து விட்டு வந்த தீரமான, தீர்க்கமான பதிலைக் கேட்ட, சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களது கண்கள் குளமாகின. இந்தப் போர் இன்னும் சில நாட்களில், அதனை விடச் சீக்கிரமாகவே ஆரம்பிக்கப்பட்டு விடும் என்றார் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤

ஆனால் முஸ்லிம்கள் போர் தான் இறுதி முடிவு என்று உறுதியாகத் தீர்மானித்து விட்ட பின்னர் ஏற்பட்ட சூழ்நிலைகளில், சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் கடுமையான நோய்க்கு ஆளாகி விட்டார்கள். இதனால் அவர்களால் முன்னெப்பொழுதும் போல் செயல்பட இயலவில்லை.

அம்மை நோய் அவர்களைப் பீடித்திருந்தது. அதன் காரணமாக அவர்களால் எழுந்து நடக்கக் கூட திராணியற்றவர்களாகவும், உட்கார இயலாதவர்களாகவும் இருந்து கொண்டிருக்கின்ற நிலையில், எவ்வாறு குதிரை மீது ஏறி போர் செய்ய முடியும் என்ற நிலையில் இருந்தார். இந்த பாரதூரமான நிலையில் தான் என்ன செய்வதென்றே புரியாத நிலையில் இருந்து கொண்டிருந்தார் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள். அப்பொழுது இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதொரு அறிவுரை ஒன்று சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் மூலையில் தைத்தது.

ஆம்! முஸ்லிம்கள் எப்பொழுதும், நான் நினைத்திருந்தால் அல்லது முடிந்தால் என்பன போன்ற வார்த்தைகளை உபயோகிக்கக் கூடாது என்று கூறியிருந்தார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த அறிவுரை தனது நினைவுக்கு வந்த மாத்திரமே, விரைந்து எழுந்து நின்று தனது தோழர்களுக்கிடையே ஒரு சிறப்புரை ஒன்றை ஆற்றினார்கள், அப்பொழுது கீழ்க்கண்ட வசனத்தைத் தனது தோழர்களுக்கு ஓதிக் காட்டினார்கள்.

நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்; ''நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம். வணங்கும் மக்களுக்கு இதில் (இக்குர்ஆனில்) நிச்சயமாகப் போதுமான (வழிகாட்டுதல்) இருக்கிறது. (21:105-106)

இந்த உரையை முடித்துக் கொண்ட பின்பு, தனது படை வீரர்களுக்கு மதிய நேரத்து லுஹர் தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். தொழுகை முடிந்தவுடன் படை வீரர்கள் தத்தமது போர்க்கவசங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை தயார்நிலைப்படுத்தி, தங்களையும் போருக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டார்கள். அங்கே மிகச் சிறந்த கவிஞர்கள், பாடகர்கள் போன்றவர்கள் போர் வீரர்களை உற்சாகப்படுத்தும் ஓரிறைச் சிந்தனை மற்றும் மறுமைச் சிந்தனையைக் கொண்ட கவிதைகளைப் பாட ஆரம்பித்தார்கள்.

அப்பொழுது அங்கே பாடப்பட்ட மிகச்சிறந்த கவிதைகளில் சிறப்புக்குரியதாக ஹத்தீல் அஸதீ ரளியல்லாஹ¤ அன்ஹ¤ என்பவர் பாடிய பாடல் மிகச் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. ஓ! மிகப் பெரும் தளபதி சஅத் பின் அபீ வக்காஸ் (ரளியல்லாஹ¤ அன்ஹ¤)- ன் தோழர்களே!

உங்களது வாட்களை கோட்டை அரண்களாக ஆக்கிக் கொள்ளுங்கள்!

எதிரிகளை எதிர்க்கும் பொழுது சிங்கமாக நிலைகுலையாது நில்லுங்கள்!!

உங்களது வாட்கள் பயனற்றுப் போனால் விற்களைப் பயன்படுத்துங்கள்

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!

அம்புகள் தனது இலக்கை நோக்கிச் சரியாகச் செல்லும் என்றால்

வாட்களால் எந்தப் பயனுமில்லை.

இப்பொழுது முஸ்லிம் படைவீரர்களிடையே மரண சிந்தனை மேலோங்கியது, எங்கும் உற்சாகம் கரைபுரண்டோடியது. ஒவ்வொரு போர் வீரரும் தான் ஷஹீத் என்னும் உயர் பதவியை அடைந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையுடன் போருக்குத் தயாராக நின்றார்கள். அவர்களது அந்த உணர்வுகளை மேலும் கூர்மையாக்கிக் கொண்டிருந்தார்கள், மிகப் பெரும் காரிகள். ஆம்! அவர்கள் திருக்குர்ஆனிலிருந்து சூரா அன்ஃபால் மற்றும் சூரா அத்தவ்பா ஆகிய அத்தியாயங்களிலிருந்து இறைவழிப் போரை ஊக்கப்படுத்தக் கூடிய வசனங்களை போர் வீரர்களுக்கு முன் ஓதிக் காட்டி, இன்னும் அவர்களது உணர்வுகளை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் தமது தோழர்களது உற்சாகத்தை உயிர்ப்பிக்க வேண்டுமென்றால், அல்லாஹ¤ அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன் என்ற கோஷத்தை மட்டுமே எழுப்ப வேண்டியிருந்தது. அந்தக் கோஷம் கேட்டவுடன் எதிரிகளின் மீது பாய்வதற்கு வீரர்கள் தயாராகவே இருந்தார்கள்.

அன்றைய கால வழக்கப்படி, முழுமையாகப் போர் துவங்குவதற்கு முன் - அதாவது முழு படைவீரர்களும் போரில் ஈடுபடுவதற்கு முன், இரு புறமும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வீரரை அழைத்து போர் செய்ய வைப்பதென்பது வழக்கமாக இருந்தது. அந்த அடிப்படையில் போர் ஆரம்பமாகியது.

இப்பொழுது ஈரானின் புறத்திலிருந்து பட்டுத் துணியால் தன்னை அலங்கரித்துக் கொண்டு, போர்க்கவசங்களை அணிந்து கொண்டிருந்த மிகச் சிறந்த படை வீரனை முன்னிறுத்தப்பட்டது. அவனை எதிர்கொள்வதற்கு முஸ்லிம்கள் தரப்பிலிருந்து அம்ர் பின் மஅதி கர்ப் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் முன் வந்தார்கள். ஈரானியப் போர் வீரன் மிகவும் கவனமாக தனது முயற்சிகளை மேற்கொண்டு, அம்ர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களை வீழ்த்துவதற்குத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தான், அம்ர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களை நோக்கி ஒரு அம்பையும் எடுத்து எய்தான், அம்ர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் தன்னை நோக்கி வந்த அம்பை கவனமாகத் தடுத்து, தனது குதிரையின் மீதேறி எதிரியை நோக்கி மிக விரைவாகவும், அதிக வேகத்துடனும், உறுதியாகவும் செலுத்தி, தனது அத்தனை பலத்தையும் திரட்டி தனது வாளைக் கொண்டு எதிரியின் கழுத்தில் ஒரு வெட்டு வெட்டினார்கள். எதிரியின் தலை அவனது முண்டத்திலிருந்து தனித்துத் தெறித்து, தரையில் விழுந்தது. அதன் பின் ஒவ்வொரு வீரராக அழைக்கப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்திக் காட்டினார்கள்.

இறுதியாக, முழுப் படையும் போர்க்களத்தில் சந்திக்க ஆரம்பதித்தது. ஈரானியர்கள் தங்களது யானைப்படையை முன் கொண்டு வந்தார்கள். யானையை முன்னெப்பொழுதும் பார்த்திராத அரேபியக் குதிரைகள் இப்பொழுது மிரள ஆரம்பித்தன. ஒரு உயரமான பரணிலிருந்து முஸ்லிம் படைகள் சந்தித்துக் கொண்டிருந்த இந்த திடீர்த் தாக்குதலை மிகவும் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள்.இதே நிலைமை நீடித்தால் முஸ்லிம்களின் தரப்பு மிகவும் இக்கட்டுக்குள்ளாகி விடும் என்பதையும் உணர்ந்தார்கள். பனீ அசத் குலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரை அழைத்து, உமது போர்த்திறமைகளை வெளிப்படுத்துவீராக என்று குரல் கொடுத்தார்கள்.

பனீ அசத் - ன் மிகப் பெரும் தலைவரான அவர் தனது மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக பெருங்குரலெடுத்துக் கூறினார் : பனீ அசதின் இளம் வீரர்களே முன்னேறுங்கள், சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் உங்களது வீரத்தின் மீது நம்பிக்கை வைத்து உங்களைக் குறித்துப் போற்றுகின்றார்கள். இன்றைய தினம் உங்களது போர்த்திறமைகளையும், வீரத்தையும் வெளிப்படுத்தக் கூடிய சோதனைக் களம். எதிரியை நிலைகுலையச் செய்து இஸ்லாத்தின் புகழை ஓங்கச் செய்வதற்காக உங்களது உயிர்களை அர்ப்பணிக்க விரையுங்கள். முன்னேறிச் செல்லுங்கள், மலை போல் உங்கள் முன் நிற்கின்ற அந்த யானைப் படைகளோடு மோதுங்கள். நீங்கள் கொடுக்கக் கூடிய ஒரு அடியும் இடி போல் இறங்கினால், பெருமலையும் பொடிக் கற்களாகும் என்பதை அவர்கள் அப்பொழுது உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற வீரமிக்க உரையை நிகழ்த்தினார்கள்.

இந்த வீர உரையைக் கேட்ட பனீ அசத் வாலிபர்கள் முன்னேறிச் சென்று, யானைப் படையை தங்களது வாட்களால் பதம் பார்க்க ஆரம்பித்தார்கள். முடிவில்லாத உன்னதமான வாழ்க்கைக்காக தங்களது அற்ப கால இந்த வாழ்க்கையை இழக்கத் துணிந்த அந்த கூட்டத்தின் முன்பாக மிகப் பெரிய அந்த யானைப்படை கூட தாக்குப் பிடிக்க முடியாமல் திணறியது. முதலில் அவர்கள் யானையை ஓட்டி வந்த ஈரானிய வீரர்களைக் குறி பார்த்து தங்களது அம்புகளைத் தொடுத்தார்கள். அம்பு பட்டவுடன் காய்ந்த சறுகுகள் உதிர்வது போல் யானையிலிருந்து அவர்கள் உதிர்ந்தார்கள்.

இப்பொழுது சில முஸ்லிம் வீரர்கள் யானையின் துதிக்கையை வெட்ட ஆரம்பித்தார்கள். துதிக்கையை இழந்த யானைகள் இப்பொழுது பயம் கொண்டு பிளிற ஆரம்பித்தன, பயம் கொண்டு மிரண்டு போன அந்த யானைகள் பாய்ந்த பாய்ச்சலில் தனது படைகளையே தனது கால்களுக்குக் கீழே இரையாக்கிக் கொண்டு, ஈரானியப் படைக்களத்தை நாசமாக்கிக் கொண்டு பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தது. இதில் சில முஸ்லிம் வீரர்கள் கூட தங்களது இன்னுயிரை இழந்தார்கள். இந்த யானைப் படையை செயலிழக்கச் செய்ததன் காரணமாக, முதல் நாள் போர் முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தந்ததுடன் முடிவடைந்தது.

மறுநாள் காலை பொழுது புலர்ந்தவுடன், இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்து விட்டு, காயம்பட்டவர்களுக்கு சிகிச்சைகளை முடித்து விட்டு, முஸ்லிம் வீரர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட படையணிகளில் இணைந்து, அடுத்த நாள் போருக்குத் தயாரானார்கள். இருபடைகளும் மோதுவதற்கு சற்று முன்பதாக அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களால் அனுப்பப்பட்ட இன்னொமொரு படைப்பிரிவு ஹிஸாம் பின் உத்பா ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களது தலைமையில் வந்திணைந்து கொண்டது. இப்பொழுது முன்னணியில் இருக்கக் கூடிய படைப்பிரிவுக்கு காகா பின் அம்ர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார்கள். போர் ஆரம்பிப்பதற்கு முன்பதாக தனிப்பட்ட வீரர்கள் மோதும் களம் ஆரம்பமானது.

இதில் மிகவும் பிரிசித்தி பெற்ற போர்த் திறன் படைத்த முஸ்லிம் முன்னணி வீரர்கள் களம் இறங்கினார்கள். முதல் மோதலில் காகா பின் அம்ர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் ஈரானிய கமாண்டர் பீமன் என்பவனை எதிர்த்து நின்றார்கள். அவனது தலையை காகா பின் அம்ர்   ரளியல்லாஹ¤ அன்ஹ¤  அவர்கள் துண்டித்தார்கள். அடுத்து ஈரானின் மிகப் பெரும் வீரனாகத் திகழ்ந்த அஃவன் பின் கத்பா என்பவனும் இந்தப் போரில் கொல்லப்பட்டான். ஈரானின் மிகப் பெரும் போர் வீரர்களாகத் திகழ்ந்த அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள்.

போர் இப்பொழுது உக்கிரமாகத் தொடங்கியது, போர் துவங்கியது முதல் இரு படைவீரர்களும் வெற்றியை இலக்காக வைத்து கடுமையான மோதலில் இறங்கினார்கள். முஸ்லிம் படைகளில் உள்ள ஒட்டகங்கள் அனைத்தையும் சேர்த்து கயிறுகளால் பிணைத்து, ஒரு ஒட்டகத்திற்கும் இன்னொரு ஒட்டகத்திற்கும் இடைப்பட்ட கயிறை இறுக்கமில்லாமல் மிகவும் தளர்வான நிலையில் தொங்க விடும்படி காகா பின் அம்ர் அவர்கள் தனது படை வீரர்களுக்கு உத்தரவிட்டார்கள். காகா பின் அம்ர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் இந்த போர் உத்தி மிகவும் வேகமாக வேலை செய்தது.

எதிரிகளின் படை நடுவே ஓட்டி விடப்பட்ட இந்த கயிறு பிணைக்கப்பட்ட ஒட்டகங்களின் கயிறுகளில் சிக்கி, ஈரானியக் குதிரைகள் தடுக்கி தரையில் விழுந்தன. இதன் காரணமாக ஈரானியப் போர் வீரர்கள் தங்களது குதிரைகளைக் கட்டுப்படுத்த இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டனர், மிகவும் சிரமமப்பட்டனர். குதிரைகள் சரியாக ஒத்துழைக்காததால், தடுக்கியும் விழுந்ததால் போர்க்களம் இப்பொழுது ரணகளம் ஆனது, ஆம்! எங்கும் மரணக் கூச்சல் எதிரிகளின் தரப்பிலிருந்து கேட்க ஆரம்பித்தது. போர் இப்பொழுது கடுமையாக இருந்தது.

இப்பொழுது அபூ மஹ்ஜன் என்ற மிகப் பெரும் பாடகர் (ஏதோ ஒரு காரணத்திற்காக) சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்தார். போர்க் களக்காட்சிகளை தனது கூண்டுக்குள் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அவர், தானும் வெளியில் சென்று போர் செய்ய வேண்டும், எதிரிப் படைகளை துவம்சம் செய்ய வேண்டும் என்ற ஆவல் அவருக்கு அதிகரித்தது.

அப்பொழுது, அவருக்கு அருகே நின்று கொண்டிருந்த சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களது மனைவியை அழைத்து எனது சங்கிலியை அவிழ்த்து விடுங்கள் நானும் சென்று போர் செய்ய வேண்டும். நான் போரில் கொல்லப்படாமல் இருந்தால், நான் கண்டிப்பாக மீண்டும் இங்கே வந்து விடுகின்றேன் என்று உறுதியளிக்கின்றேன் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் மனைவி சலமா ரளியல்லாஹ¤ அன்ஹா அவர்கள் முதலில் மறுத்து விடுகின்றார்கள். பின் அபூ மஹ்ஜன் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் ஒரு பாடலைப் பாடுகின்றார்கள் :

துக்கம் என் தொண்டையை நெறிக்க . . .

துயரம் என் நெஞ்சைப் பிளக்க..

இதோ இன்னல்களுக்கு இடையே கதீஸிய்யா..!

நானோ பொங்கி நிற்க..

என் உயிரோ விம்மி நிற்க..

ஆர்வத்தால் என் அங்கங்கள் அதிர்ந்து நிற்க..!

அங்கே தோழர்கள் ..!

ஈட்டியும் வில்லுமாய் விரைந்திருக்க..

நானோ சங்கிலியின் சன்னலுக்கு

கம்பியாய் நிற்கின்றேன்..!

என் உறுதியை நிறுத்தும்

கயிறுகள் ஒரு பக்கம்..!

என் வேகத்தை விலை பேசும்

அதன் இறுக்கம் ஒரு பக்கம்..!

நான் ஓரடி முன்னேற

இரண்டடி பின்னுழுக்கும்

கால் விலங்கு ஒரு பக்கம்..!

ஓசையே இறுதி வழி என்று

ஓவென்று நான் அலற..!

எனது ஓசையின் ஒவ்வொரு இலக்கும்

பாலையில் தொலைத்த பனித்துளி யானதே..!

இவரது இந்த சோகமான பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த சலமா ரளியல்லாஹ¤ அன்ஹா அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் உடைப்பெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. அபூ மஹ்ஜன ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களைப் பிணைத்து வைத்திருந்த கூட்டின் அருகே சென்ற சலமா ரளியல்லாஹ¤ அன்ஹா அவர்கள் அவரைப் பிணைத்திருந்த கட்டுக்களை அவிழ்த்து, சிறையிலிருந்து வெளியே வர உதவுகின்றார்கள். உணர்ச்சியின் உச்சத்திலிருந்த அபூ மஹ்ஜன் ரளியல்லாஹ¤ அன்ஹ¤அவர்கள், அங்கே கட்டப்பட்டிருந்த சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் குதிரையின் மீதேறி போர்க்களத்தில் நுழைந்து, எதிரிகளின் தலைகளை வரிசையாகக் கொய்து, தரையில் புரள வைத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர் கொடுத்த அடியின் காரணமாக அவரது வலது புறமும், இடது புறமும் எதிரிகளின் தலைகள் தேங்காய் சிதறுவது போல் சிதறிக் கொண்டிருந்தன. போர்க்களக் காட்சிகளை பரணிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த சஅத் பின் அபீ வக்காஸ்   ரளியல்லாஹ¤ அன்ஹ¤   அவர்கள், போர்க்களத்தில் இப்பொழுது ஒரு மிகப் பெரும் மாற்றம் ஒன்று தெரிவதைக் கண்ணுற்று, தன்னுடைய மனைவியை அழைத்து, யார் அந்த மனிதர் இந்த அளவுக்கு உக்கிரமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றாரே! என்று வினவுகின்றார்கள்.

அப்பொழுது சலமா ரளியல்லாஹா அன்ஹா அவர்கள், அவர் தான் நீங்கள் கட்டிப் போட்டிருந்த அபூ மஹ்ஜன் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் என்று அவருக்கு ஞாபகமூட்டுகின்றார்கள். இன்னும் உயிருடன் இருந்தால் திரும்பி வந்து விட வேண்டும் என்ற கட்டளையின் அடிப்படையில் அவரை நான் தான் விடுவித்து அனுப்பினேன் என்று கூறினார்கள். இதனைக் கேட்ட சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள், வல்ல அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த அளவு வீரமிக்க தோழரை நான் இனிமேல் எப்பொழுதும் பிடித்து பிணையில் வைத்திருக்க மாட்டேன், இன்னும் நான் அவரை விடுதலை பெற்றவராவார் என்றும் அவருக்கு நன்மாரயங் கூறுகின்றேன் என்றும் கூறினார்கள்.

இரண்டாவது நாளும் முஸ்லிம்களுக்கே வெற்றி கிடைத்த போதிலும், இதுவே இறுதி வெற்றி என்றும் கூற முடியாத அளவுக்கு மூன்றாவது நாளும் போர் நடந்தது. ஒவ்வொரு நாளும் ஈரானிய மன்னன் புதுப்புதுப் படைப்பிரிவை அனுப்பி, மேலும் ஈரானியப் படைகளுக்கு வலுச் சேர்த்துக் கொண்டிருந்தான். இதனைக் கண்ட மிகவும் அனுபவம் வாய்ந்த படைத்தளபதியான காகா பின் அம்ர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் இன்னொரு உத்தியைக் கையாண்டார்கள்.

புதிதாக வந்து சேரக் கூடிய படைகளைத் தடுத்து நிறுத்தி விட்டால், வெற்றியை எளிதாக்கி விடலாம் என்பதே அவரது கணிப்பு. எனவே, சிரியாப் பகுதியிலிருந்து ஒரு படைப் பிரிவை அனுப்பி, புதிததாக ஈரானிலிருந்து வரக் கூடிய படைகளை, கதீஸிய்யாவில் போராடிக் கொண்டிருக்கக் கூடிய படைப்பிரிவுடன் இணையும் முன்பே தாக்குதல் தொடுத்து விட்டால், கதீஸிய்யா விலிருக்கும் படையை எளிதில் வெற்றி பெற்று விடலாம், அதே நேரத்தில் புதுப் படைப்பிரிவை செயலிழக்கச் செய்து விடலாம் என்பதே அவரது எண்ணமாக இருந்தது.

எனவே, ஒரு நூறு பேர் கொண்ட தீரமிக்க முஸ்லிம் படைவீரர்களைத் தேர்வு செய்து சிரியா பகுதிக்கு அனுப்பி வைத்தார்கள். இப்பொழுது இந்தப் படை புதிதாக ஈரானிலிருந்து வரக் கூடிய படைகளை எதிர் கொள்ள ஆரம்பித்தது. திடீரென வந்த தாக்குதலை எதிர்பார்க்காத ஈரானியப் படைகள், மேலும் மேலும் புழுதியைக் கிளப்பிக் கொண்டு வரும் முஸ்லிம்களின் படைகளைக் கண்டு மிரண்டார்கள். இன்னும் அவர்கள் சிரியாவிலிருந்து முஸ்லிம்களின் புதிய படைப்பிரிவொன்று வந்திருப்பதாகக் கணக்குப் போட்டார்கள்.

ஆனால் ஈரானியப் படைத்தளபதி, இந்தத் திடீர்த் தாக்குதலையும், அதன் நஷ்டத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. தனது படைகளை மீண்டும் தயார் செய்து தனது படைகளை நடுவே நிற்க வைத்து, படைக்கு இடதும், வலதுமாக யானைப் படையை காவலுக்கு அமைத்து படைகளை அனுப்பிக் கொண்டிருந்தான். ஆனால், ஈரானியத் தளபதியின் இந்த யுக்தியை அறிந்த அம்ர் பின் மஆத் யக்ரப் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள், யானைகளின் மீது தாக்குதல் தொடுக்குமாறு தனது படைவீரர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

யானைகளின் மீது தாக்கதல் ஆரம்பமானது, யானைகளில் தும்பிக்கைகள் வெட்டிச் சாய்க்கப்;பட்டன. தும்பிக்கைகளை இழந்த யானைகள், மிரண்டு போய், தனது படைகளின் நடுவே திரும்பி ஓட ஆரம்பித்தது. யானைகளின் காலடியில் சிக்கிக் கொண்ட ஈரானிய வீரர்கள், மடிந்ததோடல்லாமல், தோல்வியையும் தழுவினார்கள். இருப்பினும் மீண்டும் மீண்டும் ஈரானில் இருந்து போர் வீரர்களை ஈரானிய மன்னன் அனுப்பிக் கொண்டே இருந்தான்.

இப்பொழுது நிலைமையைச் சரியாகக் கணித்துக் கொண்ட காகா பின் அம்ர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள், மிகச் சிறந்த அம்பெறியக் கூடிய வீரர்களின் குழுவை அமைத்து, அதற்குத் தானே தலைமை தாங்கியவர்களாக ஈரானியப் படைத் தளபதி ருஷ்துமை நோக்கி, போர்க்களத்தில் நுழைந்தார்கள்.

காகா பின் அம்ர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களைக் கண்ட ருஷ்தும், தானே முன் வந்து அவர்களுடன் போர் செய்ய எத்தணித்தான். பின் இது நடவாத காரியம் என்பதை அறிந்து கொண்டவனாக, அங்கிருந்து தப்பிப் போக முயற்சி செய்து, அந்த இடத்தை விட்டே ஓட ஆரம்பித்த அவன், அருகில் இருந்த ஆற்றில் குதித்து தப்பிப் போக முயற்சி செய்தான்.

ஆற்றில் குதித்து தப்பிப் பிழைக்க நீந்திக் கொண்டிருப்பதைக் கண்ட முஸ்லிம் படைவீரர்களில் ஒருவரான ஹிலால் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள், தானும் ஆற்றில் குதித்து ருஷ்துமை விரட்ட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் ருஷ்துமை எட்டிப் பிடித்த ஹிலால் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள், அவனை இறுக்கப் பற்றிப் பிடித்துக் கொண்டு, தனது குறுவாளால் ஓங்கி ஒரு குத்து குத்தினார். இப்பொழுது, ருஷ்தும் ஆற்றிலேயே பிணமாக மிதக்க ஆரம்பித்தான்.

ஈரானியப் படைத்தளபதி கொல்லப்பட்ட செய்தியை, ஈரானியப் படைவீரர்களுக்கு மத்தியில் மிக வேகமாகப் பரப்பப்பட்டது. தன்னுடைய தளபதி இறந்த செய்தியைக் கேட்ட ஈரானியப் படைவீரர்கள் இப்பொழுது தாங்கள் வெற்றி பெறுவோம் என்பதில் நம்பிக்கை இழக்க ஆரம்பித்தனர், படைக்களத்தை விட்டுப் புறமுதுகிட்டு ஓட ஆரம்பித்தார்கள். ஓடிய அவர்களை மிக அதிக தூரம் விரட்டிச் சென்றதோடு, போரை முஸ்லிம்கள் முடிவுக்குக் கொண்டு வந்தார்கள். இப்பொழுது போரில் முஸ்லிம்கள் முழு வெற்றி பெற்று விட்டார்கள்.

கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள   "Next"   ஐ   "கிளிக்"   செய்யவும்