காதல் மூலம் ஸாலிஹான துணையை அடைய முடியுமா? - ஒர் சிறப்பு பார்வை!! |
![]() |
![]() |
![]() |
Thursday, 06 July 2017 17:39 | |||
காதல் மூலம் ஸாலிஹான துணையை அடைய முடியுமா? - ஒர் சிறப்பு பார்வை!! காதல் என்ற வழிமுறை காதல் என்ற வழிமுறை மூலம் ஸாலிஹான துணையை அடைந்து கொள்ள முடியுமா? அல்லது காதல் என்பது மிகச் சரியான அல்லது ஸாலிஹான துணையை அடைந்து கொள்வதற்கு ஷரீஅத் அனுமதித்த ஒரு வழிமுறையா? இல்லையா? எனது மாணவர்களிடம் நான் அதிகம் எதிர்கொள்ளும் கேள்விகளுள் இதுவும் ஒன்று. இதில் சுவாரஷ்யம் என்னவென்றால், அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும்போது, “சேர், இதனை நாம் எமக்காகக் கேட்கவில்லை. எங்களிடம் பலர் இதுபற்றிக் கேட்கிறார்கள். அவர்களுக்கு விளக்கம் சொல்வதற்காகவே கேட்கிறோம்” என்பார்கள். பிறருக்காகக் கேட்பதாக இருக்கலாம். தமக்காகவே கேட்பதாக இருக்கலாம். எவ்வாறு இருப்பினும் இன்று இளைஞர் யுவதிகளிடத்தில் இது முக்கியமானதொரு கேள்வி என்பது மாத்திரம் உண்மை. அந்தவகையில் காதல் குறித்த சில வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்வது இந்தப் பத்தியின் நோக்கம். இன்றைய ஊடகங்கள், சினிமாக்கள் போன்றன காதலை மனித நாட்டத்திற்கு அப்பால்பட்ட ஒரு செயலாகவே சித்தரிக்கின்றன. அது அறிவுபூர்வமாக நடைபெறுகின்ற ஒரு விடயமல்ல. காதல் தன்னையறியாமலே தனக்குள் நுழைந்து விடும். அதனைத் தவிர்ந்து கொள்வது சாத்தியமில்லை. யாரும் அதிலிருந்து தப்ப முடியாது என்ற ஒரு பிரமையை ஏற்படுத்தியிருக்கின்றன. அதனைக் குறிக்கும் வகையிலேயே ‘காதலில் விழுதல்’ என்ற பிரயோகத்தைப் பயன்படுத்துகின்றனர். காதல் என்பது நின்று நிதானித்து சிந்தித்து எடுக்கும் முடிவு அல்ல. அது தன்னை மீறி நடைபெறும் ஒரு விடயம் என்பதே இந்த வார்த்தையின் மூலம் நாடப்படுகிறது. காதல் குறித்த இந்தப் பார்வை மனித இயல்புக்கும் முரணானது, ஷரீஅத்திற்கும் முரணானது. ஆனால் இந்த இடத்தில் இஸ்லாம் ஏற்றுக் கொண்ட ஒரு உண்மை இருக்கின்றது. ஒரு பெண் மீது ஆணுக்கு விருப்பம் ஏற்படுவதும், ஒரு ஆண் மீது பெண்ணுக்கு விருப்பம் ஏற்படுவதும் இயற்கையானது. இதனை இஸ்லாம் மறுக்கவில்லை. இந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே ஆணும் பெண்ணும் இணைந்து வாழ முடியும். ஆனால் அந்த விருப்பம் மனித நாட்டத்திற்கு அப்பால்பட்டு நடைபெறுகின்ற ஒரு விடயமாக இஸ்லாம் கூறவில்லை. அடுத்து, காதல் பரஸ்பர புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்புகிறது. எனவே, காதலித்து திருமணம் செய்யும் போது அந்தக் குடும்ப வாழ்வு நிலைக்கிறது. எந்தப் பிரச்சினையையும் எந்த சவாலையும் அவர்களது காதல் சமாளித்து விடும். காதல் என்பது இன்பமயம் என்று சிலர் காதலை விளங்கப்படுத்த முற்படுகின்றனர். இந்த எண்ணமும் வெறுமனே ஒரு கற்பனை மாத்திரமே. இங்கு நாம் ஒரு கேள்வியை நியாயமாகக் கேட்டுப் பார்க்க வேண்டும். திருமணத்திற்குப் பின்னர் அவசியமான புரிந்துணர்வை திருமணத்திற்கு முன்னர் செய்யும் காதல் உண்மையில் வழங்குகிறதா? காதலின் இந்த வடிவத்தை இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. திருமண நோக்கமில்லாத வெறுமனே டைம் பாஸிங்காக இருப்பினும் அதனைத் தாண்டிச் சென்று பாலியல் ஆசைகளைத் தீர்த்துக் கொள்வதாக இருப்பினும் அவை இஸ்லாத்தில் ஹராமானவை என்பதில் சந்தேகமில்லை. சிலரிடத்தில், காதல் அனுமதிக்கப்பட்டதா? என்று வினவினால் திருமணத்திற்கு முன்னர் அனுமதிக்கப்படவில்லை. திருமணத்திற்குப் பின்னர் அனுமதிக்கப்பட்டுள்ளது என்பர். இந்தப் பதில் பொதுப்படையாக சரியானது என்றிருப்பினும் இக்கருத்தை இன்னும் சற்று நுணுகிப் பார்த்தல் வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில், இந்தப் பத்தியில் காதல் என்ற சொல்லின் மூலம் திருமணத்திற்கு முன்னர் ஒரு இளைஞனுக்கும் யுவதிக்குமிடையில் தோன்றும் உறவு குறித்தே பேசப்படுகிறது. மாற்றமாக அதன் பொதுப்படையான கருத்தில் தத்துவார்த்தமாகப் பயன்படுத்தப்படவில்லை. எனவே, திருமணத்திற்கு முன்னர் இன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியில் பரவலாகக் காணப்படும் அந்த உறவின் உளவியல், ஷரீஅத் பக்கங்கள் குறித்தே இங்கு பேசப்படுகின்றது. அந்தவகையில் இன்று அந்த உறவு தவிர்க்கப்பட முடியாத, மனித நாட்டத்திற்கு அப்பால்பட்டு நிகழும் ஒரு செயல் என்ற கருத்தும், அதன் மூலமே திருமண வாழ்வின் புரிந்துணர்வும், நம்பிக்கையும் கட்டியெழுப்பப்பட முடியும் என்ற எண்ணமும் திருமண நோக்கமின்றி வெறுமனே களிப்புக்கும், பாலியல் தேவைக்குமாக மாத்திரம் நடைபெறும் நிலையும் தெளிவாக இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாத விடயங்களாகும். எனின், காதல் என்ற விடயத்தில் இஸ்லாம் மறுதலிக்காத பகுதிகள் என்ன? என்ற ஒரு கேள்வி தோன்ற முடியும். இங்கு நபியவர்கள், அவர்கள் இருவர் மத்தியில் காணப்பட்ட விருப்பத்தைத் தவறாகக் காணவில்லை. மாத்திரமன்றி அந்த விருப்பத்தை மதித்து அவர்களை சேர்த்து வைப்பதே நியாயமானது என்று குறிப்பிட்டுள்ளதையும் காணலாம். 1. சகோதரர்களே, சகோதரிகளே, காதல் ஒரு உணர்வாக சுகமானதுதான். அது தவறானதும் இல்லை. ஆனால் குடும்ப வாழ்க்கை என்பது பொறுப்புமிக்கது. பாரமானது. சுகங்களின் மீது மாத்திரம் அது கட்டப்படவில்லை. உங்கள் காதல் குடும்ப வாழ்வின் பொறுப்பை உணர்ந்து கொண்டதாய் அமையட்டும். 2. சகோதரர்களே, சகோதரிகளே, குடும்ப வாழ்வு ஒரு வணக்கம். நன்மை தரக்கூடியது. திருமணத்தின் பின் மனைவியை நோக்கிய ஒவ்வொரு செயலுக்கும் நன்மை இருக்கிறது. ஆனால் திருமணத்திற்கு முன்னர் காதல், உணர்வு என்ற எல்லையைத் தாண்டுகின்ற பொழுது ஒவ்வொரு செயலும் பாவமாக மாறிவிட வாய்ப்பிருக்கிறது. உங்கள் காதல் பாவமாக அமையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 4. சகோதரர்களே, சகோதரிகளே, உங்கள் வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்யும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. அதேவேளை உங்களது தீர்மானம் சரியாக அமையும் வகையில் உங்களுக்கு வழிகாட்டும் உரிமை உங்கள் பெற்றோருக்கு இருக்கிறது என்பதையும் மறவாதீர்கள். அந்தவகையில் எனக்கு விருப்பம் என்பதை மட்டும் வைத்து முடிவு செய்ய நினைக்காதீர்கள். பெற்றோரின் விருப்பமும் முக்கியமானதுதான். ஏனெனில், திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் இணைவது மட்டுமல்ல அது இரண்டு குடும்பங்களின் இணைவும்தான். 5. சகோதரர்களே, சகோதரிகளே, புறத்தோற்றம் மாத்திரம் நீங்கள் காதல் கொள்வதற்குக் காரணமாக அமைந்து விடக் கூடாது. புறத்தோற்றத்திற்கு அப்பால் குணங்கள், நடத்தைகள்தான் குடும்ப வாழ்வின் சந்தோசத்திற்கு அவசியப்படுகின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 6. சகோதரர்களே, சகோதரிகளே, ஒருவர் மீது உங்களுக்கு விருப்பம் தோன்றியது என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களையே நீங்கள் மூன்று கேள்விகளைக் கேட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். – அவர் மீது நான் ஏன் விருப்பப்பட்டேன்? (திருமண நோக்கமா? பொழுது போக்கா? பாலியல் நோக்கமா? புறத்தோற்றமா? நடத்தைகளா?) – அவரைத் திருமணம் செய்வதால் எனக்கு என்ன பயன்? (உலக மறுமைப் பயன்கள்) – அவரைத் திருமணம் செய்வதால் எனது குடும்பத்திற்கு என்ன பயன்? (நற்பெயர், களங்கம்) 7. சகோதரர்களே, சகோதரிகளே, ஒருவர் மீது விருப்பம் தோன்றியது, அந்த விருப்பம் மிக நியாயமானது என்பதில் நீங்கள் திருப்தியுடன் காணப்பட்டால் உங்கள் குடும்பத்தில் யாரிடம் கூறினால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமோ அவரிடம் மாத்திரம் கூறுங்கள். அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுங்கள். தயவுசெய்து பலரிடம் பேசி உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாத்திரமன்றி, உங்களுக்குக் கிடைத்துள்ள நிஃமத்தைப் பார்த்து பிறர் பொறாமைப்படவும் வாய்ப்பிருக்கிறது. நபியவர்கள் கூறினார்கள் உங்கள் தேவைகளை இரகசியமாக நிறைவேற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிஃமத்துகளைப் பார்த்து பிறர் பொறாமைப்படுவார்கள் என்றார்கள். 8. பெற்றோர்களே, இன்றைய சூழலில் உங்கள் பிள்ளைகள் காதல் உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கான எல்லா புற வாய்ப்புக்களும் இருக்கின்றன என்பதை மறவாதீர்கள். எனவே அவர்கள் மீதான உங்கள் அன்பும், அக்கறையும் மிகவும் அதிகமாக இருக்கட்டும். குடும்பத்தில் கிடைக்காத அன்பைத்தான் பிள்ளைகள் வெளியில் தேடிப் போகிறார்கள். 9. பெற்றோர்களே, வயது வந்த உங்கள் பிள்ளைகளுடன், மனம்விட்டு உரையாடுங்கள். அவர்களது மனநிலைகள், விருப்பு வெறுப்புக்கள், பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். பெற்றோருடன் நட்பான உறவு இன்மையே இளைஞர்களின் பாதிப் பிரச்சினையாகும். 10. பெற்றோர்களே, அவர்கள் தமது காதலைச் சொன்னால், அவசரப்பட்டுக் கோபம் கொள்ளாதீர்கள். நிதானமாக அணுகுங்கள். விடயத்தைப் புரிந்து கொள்ள முற்படுங்கள். பொறுத்தமில்லாத போது, வேண்டாம் என்ற ஒற்றை வார்த்தையில் மறுத்துரைக்காதீர்கள். அது பொறுத்தமற்றது என்பதை அவர்களாகவே உணர்ந்து கொள்ள வழி செய்யுங்கள். ஆனால் அவர்களது காதல் நியாயமானது பொறுத்தமானது என்றிருக்கும் போது, அவர்களைச் சேர்த்து வைக்கவும் தயங்காதீர்கள். அல்லாஹ்வே போதுமானவன். கட்டுரைக்கு மிக்க நன்றி – அக்ரம் அப்துஸ் ஸமத். source: http://www.vkalathurexpress.in/2017/02/blog-post_26.html
|