Home இஸ்லாம் கட்டுரைகள் மாற்றுக் கருத்துக்களும் மாறக் கூடாத நட்புகளும்
மாற்றுக் கருத்துக்களும் மாறக் கூடாத நட்புகளும் PDF Print E-mail
Tuesday, 18 April 2017 08:02
Share

மாற்றுக் கருத்துக்களும் மாறக் கூடாத நட்புகளும்

”மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” - அறிஞர் அண்ணா அவர்கள் எதிர்கட்சியில் இருந்த போது, அவர்களது கருத்துக்களையும் அரசு கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் உதிர்த்த முத்தான வார்த்தை இது .

இந்த உலகத்திற்கு வந்து மறைந்து போனவர்கள் எண்ணிலடங்காதவர்கள். இரண்டு மூன்று தலைமுறைகளுக்குப் பின் அவர்களது சந்ததியினர்களுக்குக் கூட அவர்களது முந்திய தலைமுறைகள் குறித்து ஞாபகமிருப்பதில்லை. ஆனால் சில தலைவர்களின் பெயர்கள் இன்றளவும் மக்கள் மத்தியில் இருக்கின்றது . ஆழ்ந்து கவனித்தால் தெரியும். அவர்கள் எவ்வாறு பிறர் கருத்துக்களை உள்வாங்கி பிறகு, தங்களது கருத்துக்களை மேம்படுத்தி செயல்படுத்தினார்கள் என்பது

இது இன்றளவில் நம்மிடையே எப்படியிருக்கின்றது என்று பார்ப்போம்,

நமது வட்டத்திற்குள் வசிப்பதே நமக்கு சுகமாக இருக்கின்றது.இந்த வட்டம் எதுவென்றால் அது நாம் சொல்வதை ஆமோதிப்பவர்களின், பாராட்டுபவர்களின் வட்டம் ஆகும். நமது ”Comfort Zone” என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். ஆனால் நாம் என்று நமது வட்டங்களை தாண்டுகிறோமோ அன்று தான் நமது சிந்தனைகள், பார்வைகள் அதன் விளைவாக வெளிப்படும் உன்னதமான செயல்பாடுகள் பரந்து விரிகிறது.

கருத்து வேறுபாடுகள் என்பது மனித இயல்பு. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை என்றொன்று உண்டு. ஒவ்வொருவரின் சிந்தனைகளும், செயல்களும், விருப்பங்களும் வித்தியாசமாக இருப்பதால் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. உதாரணத்திற்கு எல்லோருமே மருத்துவர்கள் என்றால் இந்த உலகம் எப்படி இயங்கும்? எல்லோரும் ஒரே மாதிரி சிந்தித்தால் நாம் இந்த ஆக்கத்தை உருவாக்குவதற்கு, இதை நீங்கள் படிப்பதற்கு அவசியமே இருக்காது.

அடுத்து, மனித இயல்புகளில் ஒன்று மற்றவர்களுக்கு முத்திரை குத்தும் போக்கு ஆகும். இவர் இந்த இயக்கம், இந்த கட்சி, இந்தத் தலைவரின் ஆதரவாளர், இந்தத் தலைவரின் எதிரி என்று ஏதாவது ஒரு முத்திரையை மற்றவர்களின் மீது குத்தும் வரை நமது உள்ளம் ஏனோ நிம்மதி அடைவதில்லை. இந்த முத்திரை அவர் கூற வரும் கருத்தை புரிந்து கொள்வதற்கு முன்னே செல்கிறது, அதாவது அவரதுக் கருத்தை இந்தக் கோணத்தில் தான் அணுக வேண்டும் என்ற ஒரு கண்ணாடியை நமக்கு அணிவித்து விடுகிறது, அதன் விளைவாக எல்லாமே அந்தக் கண்ணாடியின் நிறமாகவேத் தெரிகிறது. எதிர் கருத்தின் உண்மை நிறம் மறைந்து விடுகிறது, மறைக்கப் பட்டு விடுகிறது.

அது மட்டுமல்ல, நமது கருத்திற்கு எதிராக கருத்து கூறுபவர்களின் கூற்றை நாம் உள்வாங்கும் அதே நேரத்திலேயே, நமது உள்ளம் அதை புரிந்து கொள்வதை விட அதற்கு எதிராக நமது கருத்தை எவ்வாறு வலியுறுத்தலாம் என்ற எண்ணத்தில் சிந்திக்க ஆரம்பித்து விடுகிறது. இதன் விளைவாக முடிவில்லா விவாதங்கள் மற்றும் மனக்கசப்புகள் தோன்றுகின்றன.

நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நமது நலனை விரும்புகிறார்களா என்பது தான் முக்கியம், அதைவிடுத்து நாம் சொல்வதெல்லாம் சரி என்று ”ஆமாம் சாமி” போடுபவர்கள் தாம் நம்மைச் சுற்றியிருக்கவேண்டும் என்று விரும்பினால், அது நமக்கு நாமே தோண்டும் குழியாக அமைந்துவிடும்.

இதோ நீங்கள் இரயிலில் பயணம் செய்கிறீர்கள். சென்னை சென்று நாள் முழுவதும் வியாபாரத்திற்காக ஓய்வின்றி சுற்றித் திரிந்துவிட்டு, ஒரு மாதம் முன்னதாக படுக்கை முன்பதிவு செய்து விட்டு, அப்பாடா! என்று தூங்க ஆரம்பிக்கிறீர்கள்.
இரயில் விழுப்புரம் அருகே வரும் போது ஒரு முதியவர் இரண்டு சிறுவர்களுடன் இரயிலில் ஏறுகிறார். அவர் படுக்கை முன்பதிவு செய்திருக்கவில்லை. ஒரு ஓரமாக அமர்ந்து கொள்கிறார். இரயில் புறப்படுகிறது, சிறிது நேரத்தில் இந்த சிறுவர்கள் விளையாட ஆரம்பிக்கின்றனர், அமைதியான விளையாட்டு சத்தமாக மாறுகிறது.

போகப் போக ஓடிப்பிடித்து விளையாடும் விளையாட்டாக மாறுகிறது, ஆரம்பத்தில் இடையூராக இருந்த சப்தம், இப்போது அவர்கள் விளையாட்டினால் உங்கள் மீது விழவும் இடிக்கவும் செய்வதால் உங்கள் பொறுமை எல்லை மீறிகிறது. ஆனால் இதையெல்லாம் சிறிதும் சட்டைச் செய்யாமல் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் பெரியவரை கவனித்ததும் உங்கள் கோபம் வார்த்தைகளில் வெடிக்கிறது. ”ஏய்யா பெருசு கொஞ்சம் புள்ளைங்களை கவனிக்கக் கூடாது, போனால் போகட்டும் என்று உட்கார இடம் கொடுத்தால் மனுசனை தூங்க விட மாட்டுக்கிறாங்க, ஒரு வார்த்தைக் கூட அவர்களைக் கண்டிக்காமல் என்னத்தான் பண்ணுகிறீர்ஸ..”

உங்கள் சத்தத்தினால் திடுக்கிட்ட அவர் அப்போதுதான் அங்கு நடப்பதைக் கவனிக்கிறார். பின்னர் கூறுகிறார்ஸ

”மன்னிச்சுக்குங்க தம்பி,ஸ அவசரமா புறப்பட வேண்டியாகிவிட்டது, ரிசர்வேசன் பண்ண நேரமில்லை இதோ இந்தச் சிறுவர்களின் பெற்றோர்கள் காரில் ஊருக்கு இன்று காலை கிளம்பினார்கள். ஆனால் வழியில் நடந்த விபத்தில் அவர்கள் இருவரும் மரணமடைந்துவிட்டனர். அவர்களது உடம்பு ஆஸ்பெத்திரி மார்ச்சுவரில் இருக்கிறது. அதற்காகத்தான் போய்க் கொண்டிருக்கின்றோம். இவர்களுக்கு இன்னும் முழு விவரம் தெரியாது மன்னித்துக் கொள்ளுங்கள் என்கிறார்ஸ.”

எப்படியிருக்கும் உங்கள் மனநிலை?

சிறிது நேரத்து முந்தைய உங்கள் கோப உணர்விற்கும், இப்போது உங்கள் மனதில் இருக்கும் இரக்க உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தை சற்றே சிந்தித்துப் பாருங்கள்.ஏனெனில் அந்தக்கோபம் உங்களின் பார்வை. இப்போதைய இரக்க உணர்வு இந்த பெரியவரின் பார்வை.

ஆகவே அடுத்தவர்களின் கருத்தை எடுத்த எடுப்பிலேயே எனது கருத்துக்கு ஒத்துவரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக புறந்தள்ளாமல் புரிந்துக் கொள்ள முயலுதல் நமது பண்பை, அறிவை மேலும் பண்படுத்தும். இது எளிதான காரியமில்லை, ஆனால் நம்மை படிப்படியாக இது போன்ற பயிற்சிக்கு உட்படுத்தினால் பிறரின் கருத்துக்களை நம் மனது சகிப்புத் தன்மையோடு ஏற்க பழகும்

ஆனால் அதே நேரத்தில், உண்மை மற்றவர்களின் கருத்துக்கு மாற்றமாக இருக்குமானால் அதை உறுதியாக எடுத்து வைக்கவும் தயங்கக் கூடாது. கூறினால் அவர்கள் வருத்தப் படுவார்களோ? என்ற எண்ணமும் இருக்கக்கூடாது.

இஸ்லாமிய வரலாற்றில் ஒரு முக்கியமான கால கட்டம் அது. முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம்) அவர்கள் மறைந்து விட்டார்கள். முஸ்லீம்களின் தலைவராக அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். மதீனா நகரைச் சுற்றிலும் இந்த ஒரு தருணத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர் முஸ்லீம்களின் எதிரிகள்.

அரசியலில் ஒரு முக்கியமான தலைவர் இறந்து விட்டால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை தமிழக அரசியல் சிறிது நாட்களுக்கு முன்பு நமது கண்களுக்கு காட்டியது. இது புதிது அல்ல.வரலாறு படித்தவர்கள் அறிவார்கள். இது மனித குலத்தில் ஆட்சி அதிகாரம் தோன்றிய காலத்திலிருந்தே நடைபெற்று வரும் நிகழ்வு என்று .

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் ஏற்கனவே ஷாம் பகுதியில் உள்ள எதிரிகளைக் கட்டுப்படுத்த அந்தப் பகுதிக்கு ஒரு படையை அனுப்ப ஏற்பாடு செய்திருந்தார்கள். நபிகளாரின் மரணத்தால் அது தாமதமடைந்தது. தலைவராக பதவியேற்றதும் முதலில் அந்தப் படையை நபிகளாரின் ஏற்பாட்டின் படி அனுப்ப முனைந்தார் அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு. ஆனால் மற்றவர்கள் அனைவரும் இதற்கு நேரெதிரான கருத்தைக் கொண்டிருந்தனர்.

இப்போது நிலைமை மாறிவிட்டது, நமது எதிரிகள் மதினாவை தாக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றனர். இப்போது இந்தப் படையை அனுப்பினால் அது எதிரிகளுக்கு மிகச் சாதகமாக அமைந்துவிடும் என்று. ஆனால் அபுபக்கர் (ரலி) இதற்கு செவி சாய்க்கவில்லை நபிகளாரின் ஏற்பாட்டில் சிறிதும் மாற்றம் செய்ய மாட்டேன் என்று படையை அனுப்பிவிட்டார்கள்.

இது காணாதென்று ஒரு கூட்டத்தினர் அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து பேரம் பேசினர். இஸ்லாத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் ஆனால் ”ஜகாத்” என்ற கட்டாய தருமத்தை மட்டும் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்றார்கள். அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களோ இஸ்லாம் முழுமையானது அதில் எந்தக் கடைமைக்கும் சலுகைகள் கிடையாது என்று ஆணித்தரமாக கூறினார். பேரம் பேச வந்தவர்கள் சும்மா வரவில்லை, அவர்கள் பேரத்திற்கு அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு ஒத்து வரவில்லையெனில் மதீனாவை தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படையுடன் போருக்கும் தயாராகவே வந்திருந்தார்கள்.

இந்த இக்கட்டான நேரத்தில் அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்த உறுதியான முடிவு அவரது ஆலோசகர்ளின் கருத்திற்கு முற்றிலும் மாற்றமாக அமைந்தது. அவரது முதல் தர ஆலோசகரான உமர்ரளியல்லாஹு அன்ஹு (இவர் தான் அபுபக்கர் (ரலி) அவர்களுக்குப் பின் முஸ்லீம்களின் தலைவராக பொறுப்பேற்றார்) கூட தற்போது நிலைமை சரியில்லை மதினாவைக் காப்பதற்கு போதிய படைகள் இல்லை ஆகவே இப்போது அவர்களுக்கு ஜகாத்தில் சலுகை வழங்கலாம் பின்னர் நிலைமை சரியான பின்னர் அதை நாம் வலியுறுத்தலாம் என்றார்.

இதைக் கேட்ட அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் நெஞ்சில் அடித்துக் கூறினார்.

"என்ன உமரே! இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் இருந்த வீரம், இஸ்லாத்தை ஏற்ற பின் கோழைத்தனமாக மாறிவிட்டதோ? ”

”எனது உடம்பை நாய்கள் கடித்து மதினாவின் தெரு வழியாக இழுத்தும் செல்லும் நிலையேற்பட்டாலும் நான் எடுத்த முடிவில் மாற மாட்டேன் ஏனெனில் இஸ்லாம் இறைவனால் முழுமைப் படுத்தப் பட்டுவிட்டது அதில் சலுகை செய்யும் உரிமை யாருக்குமில்லை" என்று கூறினார்.

உமரும் மற்ற ஆலோசகர்களும், தோழர்களும் உண்மையை உணர்ந்தார்கள். தங்களது தலைவரின் முடிவுக்கு கட்டுப் பட்டார்கள். பொருப்பினை உணர்ந்து செயல்பட்டார்கள். இஸ்லாம் என்றொரு மார்க்கம் இன்றளவும் தனது முழுத் தன்மையுடன் நிலைத்து நிற்கின்றது.

உண்மையை எடுத்துரைப்பதில் தயக்கம் கூடாது, அது மற்றவர்களின் கருத்துக்கு எதிராக இருந்தாலும் சரி. ஆனால் அதே நேரத்தில் நாம் கூறுவது உண்மை என்று மற்றவர்கள் உணரும் வகையில் நமது எண்ணங்களும் செயல்பாடுகளும் அமைந்திருக்க வேண்டும்.

இதில் கவனிக்கப் படவேண்டிய மற்றொரு விடயம் என்னவெனில் தலைவரின் கருத்து தோழர்களின் கருத்துக்கு முரணாக இருந்தாலும் அனைவரின் நோக்கமும் ஒன்றாகவே இருந்தது. அதாவது தளிர்விட்ட வேகத்திலேயே இஸ்லாம் தளர்ந்து விடக்கூடாதென்பது. ஆனால் தலைவரின் பார்வை தொலைநோக்குப் பார்வையாக இருந்தது, தோழர்களின் பார்வை உடனடி அபாயத்தை நோக்கியது. ஆம் நோக்கம் ஒன்றாக இருந்தாலும் கருத்தில் வேறுபாடுகள் இருக்கமுடியும்.

மாற்றுக் கருத்துக்களை உள்வாங்குங்கள், அதை புரிந்து கொள்ள முயலுங்கள், மாற்றுக் கருத்துக்கள் கூறுபவர்கள் எல்லாம் நமது எதிரிகள் அல்ல. உண்மையில் ஒரு விடயத்தை நமக்கு வேறொரு கோணத்தில் நம் கவனத்திற்கு கொண்டு வருகிறார்கள் என்பது தான் உண்மை.

நாகூர் ஹனிஃபாவின் பாடல் வரிகளில் ஒன்று “புத்தி சொல்லும் தகுதி வாய்ந்து புகழ் மணக்கச் சிறந்திடு” என்று வரும். எப்போது நாம் மற்றவர்களின் கூற்றை பொறுமையுடன் கேட்டு அதை பல கோணங்களிலும் சிந்தித்து நமது கருத்தை எடுத்து வைக்கின்றோமோ அப்போது தான் நம் மீது மற்றவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். அவர்களும் நம்மை ஒரு நல்லதொரு ஆலோசகராக அங்கீகரிப்பார்கள். எந்த ஒரு காரியத்திலும் நம்மோடு ஆலோசனை செய்வார்கள், நமது கருத்துகளுக்கும் மதிப்பளிப்பார்கள்.

நாம் மற்றவர்களுக்கு இப்படியொரு நல்லா நண்பராக, இதேப் போன்று நமக்கும் நல்ல நண்பர்கள் அமைந்துவிட்டால் நமது வாழ்க்கைப் பயணம் சுகமாக அமையும் என்பது நிதர்சனம்.

- நெல்லை ஏர்வாடி S. பீர் முஹம்மத்.

source: www.nellaieruvadi.com