Home இஸ்லாம் தொழுகை ''ஜும்ஆ'' தினத்தில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள்
''ஜும்ஆ'' தினத்தில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் PDF Print E-mail
Friday, 31 March 2017 08:46
Share

''ஜும்ஆ'' தினத்தில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள்

முஸ்லீம்களில் ஐவேளை தொழுபவர்களைவிட ஜும்ஆ மட்டும் தொழுபவர்களே அதிகம் என்பது நிதரிசனமான உண்மை. அப்படி ஜும்ஆவுக்கு வரும் முஸ்லீம்களை மூன்று பிரிவு (ஜாதி)களாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிரித்துள்ளார்கள்.

பரவலாக முஸ்லீம்கள் நிறைந்து வாழும் ஊர்களில் பல மஸ்ஜிதுகள் இருந்தாலும் சில குறிப்பிட்ட மஸ்ஜிதுகளில் தான் ஜும்ஆ நடைபெறும். அப்படிப்பட்ட ஜும்ஆ மஸ்ஜிதுகளுக்கு பல திசைகளிலிருந்தும் மக்கள் வந்து கூடுவர். இவர்களைப் பற்றி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்,

‘ஜும்ஆவுக்கு மூன்றுவித நபர்கள் வருகை தருகின்றனர்.

முதலாவது மனிதர் ஜும்ஆவுக்கு வருகிறார். ஆனால் வீண் பொழுதுபோக்கில் நேரத்தை போக்கிவிடுகிறார் (ஜும்ஆவில்) அவரது பங்கு அவ்வளவுதான்.

இரண்டாவது நபர் இறைவனிடம் இறைஞ்ச வேண்டும் என்ற நோக்கில் வருகிறார். இவர் விரும்பியதை அல்லாஹ் வழங்கவும் செய்யலாம் அல்லது மறுக்கவும் செய்யலாம்.

மூன்றாவது மனிதர் ஜும்ஆவில் அமைதியாகவும் (வீண்பேச்சு எதுவுமின்றி) வாய் மூடியிருக்கும் நிலையில் கலந்து கொள்கிறார்.  மேலும் அவர் எந்த முஸ்லீமின் பிடரியைத்தாண்டி (சென்று) விடவும் இல்லை. எவருக்கும் தொந்தரவு கொடுக்கவும் இல்லை.

இந்த மூன்றாவது மனிதருக்கு அடுத்த ஜும்ஆ வரை பாவமன்னிப்பு கிடைக்கிறது. மேலும் மூன்று நாட்கள் கூடுதலாகவும் இப்பாக்கியம் நீடிக்கப்படுகிறது. இதையே அல்லாஹ், ‘ஒரு நன்மை செய்தவருக்கு அதுபோன்ற பத்து பங்கு (நன்மைகள்) உண்டு எனக் கூறுகிறான்’ (ஆதாரம்: அபூதாவூது)

இந்த நபிமொழி நமது ஜும்ஆ எந்த நிலையில் உள்ளது? என்பதை சீர்தூக்கிப் பார்க்க வலியுறுத்துவது போன்று அமைந்திருக்கிறது.

ஜும்ஆ நாளன்று குளிக்கிறோம். தூய ஆடை அணிகின்றோம். நறுமணம் பூசுகின்றோம். இப்படியாக சுன்னத்துகளை நிறைவேற்றிவிட்டு மஸ்ஜிதில் குத்பா ஓதப்படும் நேரத்தில் வீண் பேச்சுக்கள் என்ன? அது தீன் பேச்சாக இருந்தாலும் ஜும்ஆ பாழாகி விடும். வாரம் ஒரு முறை வரும்போது பல உறவினர்களை, நண்பர்களை பல நாட்களுக்குப் பின் சந்திப்பதால் பலவற்றைப் பேச வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவது இயற்கைதான். ஆனால் அதை இந்த நேரத்தில் பயன்படுத்திவிட்டால் ஜும்ஆவின் விசேஷ பலனை வீணடித்த குற்றத்திற்குள்ளாகிறோம். இவர்தான் முதல் பிரிவைச் சேர்ந்தவர்.

நபித்தோழர் ஹளரத் உபை ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு நாள் குத்பாவை செவிமடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் ‘பராஅத்’ அத்தியாயம் எப்போது இறங்கியது? எனக் கேட்டார். அதற்கு உபை ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பதிலளிக்கவில்லை. தொழுது முடித்தபின் அந்த மனிதர் உபை ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், ‘நீர் ஏன் என் கேள்விக்கு பதிலளிக்கவில்லை?’ எனக் கேட்டார்.

அப்போது உபை ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘(குத்பாவின்போது பேசிவிட்டதால்) நம்மோடு நீர் ஜும்ஆவில் (கலந்து கொண்டும்) கலந்து கொள்ளாதவராகிவிட்டீர். (அதாவது அந்த பாக்கியத்தை இழந்து விட்டீர்)’ என்றார்கள்.

உபை ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்றை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், அவர் எடுத்துரைத்தபோது, ‘உபை உண்மையையே உரைத்திருக்கிறார்’ என்றார்கள் உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். (நூல்: மிர்காத்)

குத்பா பேருரையின்போது பேசிக்கொண்டிருப்பவரைப் பார்த்து ‘பேசாதீர்!’ என்று சொல்வதும்கூட கூடாது.

இன்னும் சிலர் குத்பா முடிந்து தொழுகை நடக்கும் நேரத்தில் அவசரகோலத்தில் மிக வேகமாக வருவார்கள். இவர்கள் நோக்கமெல்லாம் துஆவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதுதான். முக்கிய பயான்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கம்போது அதைக் கேட்காது வெளியில் பொழுது போக்கும் சிலர் துஆ ஓதபப்போகிறார்கள் என்று தெரிந்ததும் ஓடோடி வந்து கலந்து கொள்வதைப் பார்க்கிறோம். இவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்; குறிப்பிட்ட இரண்டாம் தரத்தில் இருக்கிறார்கள்.

பாராட்டுக்குரிய மூன்றாம் பிரிவு மனிதரை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கும்போது ‘அவர் எந்த முஸ்லீமின் பிடரியைத் தாண்டி சென்று விடவுமில்லை’ என்று குறிப்பிட்டுள்ளதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

பின்னால் வந்து பரபரப்புடன் கலந்து கொள்ளும் சில பிரமுகர்கள், மற்றவர்களின் பிடரிகளை தாண்டி தாண்டி வரும் காட்சியை பல மஸ்ஜிதுகளில் காணலாம். இப்படிப்பட்டவர்களைப் பார்த்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஜும்ஆ தினத்தில் மனிதர்களின் பிடரியைத் தாண்டி வருபவர் நரகத்திற்கான பாலத்தை எடுத்துக்கொண்டார்’ (நூல்: திர்மிதீ) என எச்சரிக்கிறார்கள்.

எனவே எந்த விதத்திலும் பிறருக்கு தொந்தரவு விளைவிக்கக் கூடாது என்பதே இந்த ஹதீஸின் கருத்தாகும். உரிய நேரத்துக்கு முன்னால் வரும் சகோதரர்களும் சற்று பெரிய மனம் வைத்து முன்னால் உள்ள இடங்களை நிறைவு செய்த பிறகே அடுத்தடுத்து அமர வேண்டும். இதனால் நமக்கு நன்மைகள் அதிகமாக கிடைப்பதோடு மற்றவர்கள் குற்றவாளிகள் ஆகாமல் பாதுகாத்த நன்மைகளும் கிடைக்கும்.

நன்றி: ஜமாஅத்துல் உலமா – மாத இதழ் ஏப்ரல், 1998

www.nidur.info