Home இஸ்லாம் கட்டுரைகள் விநோதமான வெட்டுக்கிளி
விநோதமான வெட்டுக்கிளி PDF Print E-mail
Monday, 13 February 2017 08:57
Share

விநோதமான வெட்டுக்கிளி

       ரஹ்மத் ராஜகுமாரன்      

வெட்டுக்கிளி வலிமை மிக்க ஏழுவகைப் பிராணிகளின் உருவ அமைப்பில் உள்ளது.

1. அதன் தலை குதிரையின் தலையாகும்.

2. அதன் கழுத்து காளையின் கழுத்தாகும்.

3. அதன் மார்பு சிங்கத்தின் மார்பாகும்.

4. அதன் இறக்கை கழுகின் இறக்கையாகும்.

5. அதன் கால்கள் ஒட்டகத்தின் கால்களாகும்.

6. அதன் வால் பாம்பின் வாலாகும்.

7. அதன் வயிறு தேளின் வயிராகும். (நூல்: தஹ்தீபுல் கமால்)

விநோதமான வெட்டுக்கிளி

       ரஹ்மத் ராஜகுமாரன்      

உலகில் பலநாடுகளில் விவசாயிகளிடம் வெட்டுக்கிளி என்று சொன்னால் ஒரே பயம்தான். ஒன்றல்ல, இரண்டல்ல, கோடிக்கணக்கில் வெட்டுக்கிளிகள் கூட்டாகப் படையெடுத்து வந்து பயிர்களை மட்டுமின்றிச் செடி, கொடி, மரம் என அனைத்தையும் தின்று தீர்த்து அப்படி ஒரு பொருள் இருந்ததற்குரிய அடையாளமே தெரியாமல் செய்துவிடும்.

வெட்டுக்கிளி படையெடுப்பு என்பது மிகவும் பயங்கரமானது. வட ஆப்பிரிக்காவின் மேற்குக் கோடியில் பாலைவனப் பகுதிகளில் தொடங்கி சீனாவின் வடபகுதி வரை பல நாடுகள் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் பாதிக்கக் கூடியவை. இந்த பட்டியலில் இந்தியாவின் ராஜஸ்தான், குஜராத், பஞாப், ஹரியானா ஆகிய மாநிலங்களும் அடங்கும்.

குர்ஆனில் வெட்டுக்கிளி

குர்ஆனில் "அல்ஜராது" என்று வெட்டுக்கிளியை அழைக்கப்படுகிறது. முஜாஹித் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது; "ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய சமூகத்தாருக்கும் சோதனையாக அனுப்பப்பட்ட வெட்டுக்கிளிகள் அவர்களது வீட்டுக்கதவுகளில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகள் மற்றும் இரும்பாலான பொருட்களை சாப்பிட்டு விட்டு மரப்பலகைகளை விட்டுவிடும். (நூல்: தஃப்ஸீர் தபரி)

பொதுவாக வெட்டுக்கிளிகள் மரப்பலகைகளைப் போன்ற மிருதுவான பொருட்களைத்தான் தின்று தீர்க்கும். இது என்னவோ மிருதுவான பொருட்களை விட்டுவிட்டு கடினமான இரும்பை தின்று தீர்த்தது என்றால் இந்த வெட்டுக்கிளிகள் இறைவன் புறத்திலிருந்து வந்த சோதனையான வெட்டுக்கிளியாக இருப்பதால், இதே மாதிரி விநோத செயல்பாடுகளில் இறங்கியுள்ளது.

கிறிஸ்தவ   விவிலியம் பழைய ஏற்பாட்டில்  வெட்டுக்கிளி

பாலைவன வெட்டுக்கிளிகள் இது மாதிரி இருக்காது. ஆனால் ஃபிர்அவ்னின் சோதனைக்கு வந்த வெட்டுக்கிளிகள் பற்றி கிறிஸ்தவ   விவிலியம் பழைய ஏற்பாட்டில் காணப்படுவதாவது, வெட்டுக்கிளிகள் எகிப்து தேசம் எங்கும் பரவி, எகிப்தின் எல்லை முழுவதும் இறங்கிற்று. அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் இதற்கு முன் இருந்ததும் இல்லை, அதற்குப் பின் இருந்ததும் இல்லை. அவை பூமியின் முகம் முழுவதையும் மூடிற்று. தேசம் அவற்றால் அந்தாகரப்பட்டது. கல்மழைக்கு தப்பி இருந்த நிலத்தின் பயிர் வகைகள் யாவும் மரங்களின் கனிகள் யாவையும் அவை பரீட்சித்துப்போட்டது. எகிப்து தேசமெங்குமுள்ள மரங்களிலும், வயல்வெளியான பயிர் வகைகளிலும் ஒரு பச்சிலையும் மீதியாய் இருக்கவில்லை. (யாத்திராகமம் 10,14,15)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''வெட்டுக்கிளிகள் ஒரு தனிப்பட்ட உயிரினம் அல்ல; மாறாக அவை கடலில் உள்ள மீன் ஒன்றின் தும்மல் மூலம் உருவானவை'' என்றார்கள்.

ஒரு மீன் தும்மல் போட்டு வெட்டுக்கிளியை வெளிப்படுத்தியதை நேரில் கண்ட ஒருவர் தமக்கு இந்த ஹதீஸை அறிவித்ததாக அறிவிப்பாளர் ஸியாத் பின் அப்தில்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறினார்கள்.

இதை ஆய்வு செய்த ஒருவர் கூறியதாவது; ''கடலிலுள்ள மீன் இனங்களில் ஒன்று கடலோரத்தில் வந்து முட்டையிடும். பின்னர் அங்குள்ள தண்ணீர் வற்றிக் காய்ந்ததும், அந்த முட்டையில் சூரிய ஒளி படும். அந்த முட்டைகள் வெடித்து அவற்றிலிருந்து சிறகடிக்கும் வெட்டுக்கிளிக் குஞ்சுகள் வெளிவரும். (நூல்: திர்மிதி, இப்னுமாஜா)

வெட்டுக்கிளியை நாம் உண்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது!

நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது; "நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஏழு போர்களில் கலந்து கொண்டோம். அப்போது நாங்கள் வெட்டுக்கிளிகளை உண்டோம். (நூல்: புகாரி, முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; "தானாக செத்தவற்றில் இரண்டும், இரத்தங்களில் இரண்டும் நமக்கு உண்ண அனுமதிக்கப்பட்டுள்ளது. செத்தவற்றில் மீனும், வெட்டுக்கிளியும், இரத்தங்களில் கல்லீரலும், மண்ணீரலும் ஆகும். (அறிவிப்பாளர்: ஜாபி பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ, அபூதாவூத், தாரமி)

வெட்டுக்கிளிகளால் கிராமப்புறங்கள் மட்டுமே பாதிக்கப்படும் என்பதில்லை. ஒரு சமயம் சீனாவின் வட பகுதியில் ஹோ ஹாட் நகரை வெட்டுக்கிளிக் கூட்டம் தாக்கியது. சாலையில் சென்றவர்களின் முகத்தை வெட்டுக்கிளிகள் அப்பிக்கொண்டன். கார்கள் மீது வெட்டுக்கிளிகள் படை படையாக மோதின. பின்னர் இவற்றை லாரி லாரியாக அகற்ற வேண்டியிருந்தது.

இந்தியாவில் 1978 ஆன் ஆண்டிலும் பின்னர் 1993 ஆம் ஆண்டிலும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு நிகழ்ந்தது.

வெட்டுக்கிளிகளின் தாக்குதல் கடுமையாக இருக்கும்போது ஒரு சதுர மீட்டரில் 10,000 வெட்டுக்கிளிகள் வரை இருக்கும். சில சமயங்களில் இது பல நூறு சதுர மீட்டராகவும் இருக்கலாம். இந்த மாதிரியான வெட்டுக்கிளி கூட்டத்தில் 4 கோடி முதல் 8 கோடி வெட்டுக்கிளிகள் வரை இருக்கும். இவைகள் படையெடுத்து வரும்போது மிகப்பெரும் மேகக்கூட்டங்கள் நகர்ந்து பூமிக்கு வருவதுபோல் இருக்கும்.

ஃபிர்அவ்னுக்கு இறை சோதனையாக....

இதைவிட மிகப்பெரிய வெட்டுக்கிளி படையை ஃபிர் அவ்ன் தேசத்து எகிப்து மீது இறை சோதனையாக அனுப்பி வைத்ததாக அல்-குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

"அவர்கள் மூஸாவை நோக்கி, "நீங்கள் எங்களை வசப்படுத்துவதற்காக, எவ்வளவோ (அற்புதமான) சூனியத்தை நீங்கள் எங்கள் முன் செய்த போதிலும் நாங்கள் உங்களை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்" என்று கூறிவிட்டார்கள். ஆகவே அவர்கள் மீது (மழையுடன் கூடிய) புயல் காற்று, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் ஆகிய தெளிவான இவ்வத்தாட்சிகளை ஒன்றன்பின் ஒன்றாக நாம் அனுப்பி வைத்தோம். இதன் பின்னரும் அவர்கள் கர்வம் கொண்டு குற்றம் செய்யும் மக்களாகவே இருந்தார்கள். (அல்-குர்ஆன் 7:132,133)

வெட்டுக்கிளியை நீங்கள் கொன்றுவிடாதீர்கள், அது மிகப்பெரியவனான அல்லாஹ்வின் படை என்று ஒரு ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. அவைகள் விவசாயப்பயிர்களுக்கு தீங்கு செய்யாமல் இருந்தாலதான் அவற்றை கொல்லக்கூடாது. அவைகளால் தீங்கு ஏற்படும் பட்சத்தில் கொல்ல அல்லது அப்புறப்படுத்துதல் செய்யலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னிலையில் ஒரு வெட்டுக்கிளி வந்தது. அதனைப்பிடித்துப் பார்த்ததில் அதன் இறக்கைகளின் மீது அப்ரானி மொழியில், "நாங்கள் மிகப்பெரியவனான அல்லாஹ்வின் படை, எங்களுக்கு 99 முட்டைகள் இருக்கின்றன. எங்களுக்கு 100 முட்டைகள் பூர்த்தி அடைந்தால் நாங்கள் உலகையும் அதிலுள்ளதையும் தின்று தீர்த்துவிடுவோம்" என்று எழுதப்பட்டிருந்தது.

அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "அல்லாஹ்வே வெட்டுக்கிளியை அழிப்பாயாக, அவற்றில் பெரியவைகளைக் கொன்று சிறியவைகளை மரணிக்கச் செய்வாயாக! அவற்றின் முட்டைகளை வீணாக்கி, அவற்றின் வாய்களை முஸ்லிம்களின் பயிர்களை விட்டுத் தடுப்பாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையை கேட்பவனாக இருக்கிறாய்" என்று பிரார்த்தித்தார்கள். பிறகு ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து, "அந்தப் பிராத்தனையில் சில உமக்கு அங்கீகரிக்கப்பட்டது" என்று கூறினார்கள். (நூல்: தஃப்ஸீர் ஹமீத்)

ஷஅபீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது; ஒருமுறை நீதிபதி ஷுரஹ் பின் அல்ஹாரிஸ் அவர்களிடம் வெட்டுக்கிளிகளின் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்,

"அல்லாஹ் வெட்டுக்கிளிகளை இழிவாக்குவானக! அதில் வலிமை மிக்க ஏழுவகைப் பிராணிகளின் உருவ அமைப்பு உள்ளது.

1. அதன் தலை குதிரையின் தலையாகும்.

2. அதன் கழுத்து காளையின் கழுத்தாகும்.

3. அதன் மார்பு சிங்கத்தின் மார்பாகும்.

4. அதன் இறக்கை கழுகின் இறக்கையாகும்.

5. அதன் கால்கள் ஒட்டகத்தின் கால்களாகும்.

6. அதன் வால் பாம்பின் வாலாகும்.

7. அதன் வயிறு தேளின் வயிராகும்'' என்றார்கள்.  (நூல்: தஹ்தீபுல் கமால்)

நீங்கள் வெட்டுக்கிளியைப் பிடித்து நன்றாக கவனித்துப் பாருங்கள். மேற்கண்ட 7 பிராணிகளின் உருவ அமைப்பு தெரியவரும்.

"ரஹ்மத்" மாத இதழ், பிப்ரவரி 2017

www.nidur.info