Home குடும்பம் பெண்கள் பெண்ணிய கண்ணியம் பேணுவோம்
பெண்ணிய கண்ணியம் பேணுவோம் PDF Print E-mail
Tuesday, 27 December 2016 07:51
Share

பெண்ணிய கண்ணியம் பேணுவோம்

      SNR ஷவ்கத்அலி மஸ்லஹி      

இன்றைக்கு பெண் குழந்தைகள் பாதிக்கப்படுதல் அல்லது நசுக்கப்படுதல் என்பது சர்வசாதாரணமான ஒன்றாகிப் போய்விட்டது. அப்படி அவர்கள் செய்து விட்ட பாவம் தான் என்ன?

கிராமங்களில் கள்ளிப்பால் புகட்டப்பட்டும், பெருநகரங்களில் அவர்கள் தாய் வயிற்றுக்குள் சின்னஞ்சிறு சிசுவாக இருக்கும்போதே நன்கு "ஸ்கேனிங்" செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்படுவதும் ஏன்?

பண்டைய சவூதிய அரபுச் சமூகத்தில் பெண் குழந்தைகள் பாலைவன மணலில் குழி தோண்டிப் புதைக்கப்படுவதை வான்மறைக் குர்ஆன் தன் வார்த்தைகளால் வருத்தப்பட்டுக் கூறுவதை சற்று செவிகொடுத்துக் கேட்டுப்பாருங்கள் உங்களுக்குள் உடனடியாக ஒரு பேருண்மை புரியவரும்.

உயிருடன் புதைக்கப்பட்ட ஒரு பெண் (குழந்தை) வினவப்படும் போது அது எந்தக் குற்றத்திற்காக கொல்லப்பட்டது என்று? (அல்குர்ஆன் 81:8,9)

இதுதான் அந்த ஒரு அற்புத வசனம், மீண்டும் மீண்டும் இன்றைக்கும் நம் சிந்தனைகளை தூண்டிக்கொண்டே இருக்கிறது, பெண்சிசுக்கள் அப்படி என்ன செய்துவிட்டார்கள் என்று!

மதுவுக்கு அடுத்து மாதுவைக் கொண்டாடியவர்கள் பெண் குழந்தைகளை மட்டும் கொல்லத் துணிந்தது ஏன்? என்பது இன்றைக்கும் யாருக்கும் புரியாத புதிர்தான். பெண்பிள்ளைகள் கட்டாயம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். இன்றைக்கு அவிழ்த்து விடப்படும் வன்முறைகள் பலவும் பெண் பிள்ளைகளைத் தான் பெரிதும் குறிவைத்து நிகழ்த்தப்படுகின்றன.

அந்தப் பாலைவன மண்ணில் நின்று கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரத்த குரலில் சொன்ன மூன்று வரிகள் இவை: "நான் நறுமணத்தை விரும்புகிறேன். நான் தொழுகையை விரும்புகிறேன். நான் பெண்களை விரும்புகிறேன்." (நூல்: மிஷ்காத்)

இவை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. இதில் ஐவேளைத் தொழுகைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களோ அதே முக்கியத்துவத்தை நபிகளார் பாகுபாடின்றி பெண்களுக்கும் வழங்கியிருப்பது சற்று நாம் கூர்ந்து கவனிக்கத் தக்கதாகும். பெண்களைவிரும்புகிறேன் என்று பெருமானார் சொன்னது பெண்ணாசைப் பேராசைகொண்டல்ல..!

பெண்ணழிப்பின் கொடூரம் கண்டுதானே தவிர வேறொன்றுமில்லை. பெண்களைக் குறித்து குர்ஆன் நிறையவே, மிகநிறைவாகவே பேசியிருக்கிறது.

எதார்த்தத்தில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சமமாக முடியாதோ அப்படித்தான் சிற்சில இடங்களில் ஆணும், பெண்ணும் சமமாக ஆக முடியாது என தீனுல் இஸ்லாம் மிகத் தெளிவாகவே தெரிவித்துவிடுகிறது. இதைத் தவிர அவரவர் அன்றாடம் செய்யும் அமல்களைப்பற்றி குர்ஆன் பேசும்போது ஆண்,பெண் வேறுபாடு இன்றி சரிசமமான சமத்துவத்துடன் பேசிச் செல்வது மிகவும் கவனிக்கத்தக்கது. இதோ அவ்வசனம்!

நிச்சயமாக முஸ்லிம்களான ஆண் களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத் தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும்,பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான். (அல்குர்ஆன் : 33:35)

பெண்களைப் பற்றி குர்ஆன் பேசவில்லையே என்று அன்னை உம்மு சல்மா ரளியல்லாஹு அன்ஹா ஆதங்கப்பட்டு அண்ணலாரிடம் கேட்டபோது இறங்கிய வான்மறை வசனம் தான் இது.

இவ்வசனத்தில் சுமார் பத்து வகையான குணவதிகளைப் பற்றி குறிப்பிடப்படுகிறது, அதுவும் ஆண்களுக்கு நிகராக என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. பெண்கள்அவர்கள் எதிலும் எதற்கும் எப்போதும் அவ்வளவு சீக்கிரம் சளைப்பவர்களல்ல..! பின்தங்குபவர்களும் அல்ல..! நாம் தான் அவர்களை தகுதியற்றவர்கள், இலாயக்கில்லாதவர்கள், விவரமற்றவர்கள்,பேதைகள் என்றெல்லாம் சொல்லிச் சொல்லியே ஒரு மூலையில் ஓரமாய் ஒதுக்கி, அமர வைத்து விடுகிறோம். இது நமது நடுநிலைப் பண்புக்கு நல்லழகல்ல..! பிறப்பில் தொடங்கி இறப்புவரை ஒரு பெண்பிள்ளை தன்வாழ்நாள் முழுவதும் கல்வி, ஒழுக்கம், திருமணம் குழந்தைப்பேறு, குடும்பம், தாய்வீடு, சுயதொழில் என அவள் சந்திக்கும் சிக்கல்களும், சிரமங்களும் எந்த ஒரு எண்ணிலும், ஏட்டிலும் அடங்காதவை.

இது இஸ்லாமியப் பெண்களுக்கு மட்டுமல்ல, இதர எல்லாச் சமூகப் பெண்களுக்கும் இன்று இது தான் நிலை. காரணம் அவர்களிடம் மெய்யான "இஸ்லாம்" இல்லை. அவர்கள் வெறும் பெயர் தாங்கிகளாக மட்டும் இருக்கிறார்கள். இதனால்தான் இப்பெண்மணிகளும் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். ஆதலால் தான் குர்ஆன் இப்படிக் கூறுகிறது

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான், (அல்குர்ஆன் : 2:208)

இன்றைக்கு நாம் நமது மார்க்கத்தில் அரைகுறையாக இருப்பதுதான் நமக்கு நாமே தோண்டிக்கொள்ளும் படுகுழியாகும். அதிலும் குறிப்பாக, பெண்பிள்ளைகளிடம் மார்க்கக் கல்வியும், உலகக்கல்வியும் வந்துவிட்டால் பிறகு அவளைச் சுற்றியுள்ள அனைவரும் நிச்சயம் அவர்களைப் போற்றத் தொடங்கிவிடுவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் இன்றைக்கு அவர்களது கல்விநிலை எப்படியிருக்கிறது? இரண்டுபக்கமும் சொல்லிக் கொள்ளும்படியாக ஏதும் இல்லை.

வசதிபடைத்தவர்கள் வான்முட்ட தன்பெயரில் பள்ளிமினரா ஒன்று கட்டவேண்டும்; அதை எல்லோரும் அண்ணாந்து பார்த்து ஆ...! வென்று வாயைப் பிளக்க வேண்டும்; தன்னைப் பற்றி ஊரே விடியவிடிய பேச வேண்டும் என்றுதான் மனக்கோட்டை கட்டுகிறார்களே தவிரஒரு மகளிர் பள்ளிக் கூடம், மகளிர் நூலகம், மகளிர் கல்விமையம், மகளிர் கலாச்சாரக் கேந்திரம் என்று வகைவகையாய் நற்கூடங்கள் பலகட்டலாமே, அதனால் பன்னூற்றுக் கணக்கானோர் கல்வி கற்று பற்பல பயன்களைப் பெறுவார்களே என்றுஎவரும் எண்ணிப் பார்ப்பதில்லை. இந்நிலை இன்றும் நீடிப்பது நம் தீன் சமூகத்திற்கு இனியும் நல்லதல்ல..!

வாருங்கள்...!
பெண்ணியம் காப்போம்...!
கண்ணியம் காப்போம்...!

-SNR ஷவ்கத்அலி மஸ்லஹி, பேரா, DUIHA கல்லூரி, தாராபுரம்.

source: http://www.samooganeethi.org/index.php/category/salim-