Home இஸ்லாம் கட்டுரைகள் இஸ்லாமிய சிந்தனையில் ஏற்பட்டுவரும் அதிர்வுகள்
இஸ்லாமிய சிந்தனையில் ஏற்பட்டுவரும் அதிர்வுகள் PDF Print E-mail
Monday, 26 December 2016 08:05
Share

இஸ்லாமிய சிந்தனையில் ஏற்பட்டுவரும் அதிர்வுகள்

        உஸ்தாத் மன்ஸூர்      

இஸ்லாமிய சிந்தனைத் தளத்தில் அதிர்வுகள் உருவாகி வரும் காலப் பிரிவில் நாம் வாழ்கிறோம்.

இஸ்லாத்திற்கான அரசு, அதன் சமூக அமைப்பு பற்றிப் பேசி அதனை ஒரு இலட்சிய வாதமாக முன்வைத்த காலப்பிரிவு இதற்கு முந்திய இஸ்லாமிய சிந்தனைக் காலம்.

மனிதனால் இப் பிரபஞ்சத்தையோ மனிதனையோ சரியாகப் புரிந்து கொள்ள முடியாது. எனவே மனிதனுக்கு மனிதன் சட்டமியற்றக் கூடாது. சட்டமியற்றும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியது. இறை சட்டமே தூய்மையானது; பிழையற்றது; குறைபாடுகளற்றது. அந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் பிரச்சினைகள் ஒழியும். உன்னத சமூகமொன்று தோன்றும். தத்துவஞானிகள் கனவு கண்ட இலட்சிய உலகம் உருவாகும் என்றெல்லாம் அப்போது அழுத்திப் பேசப்பட்டது.

மேற்குலகமும், அதன் கொள்கைகளும் அப்போது மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இஸ்லாத்தின் பயங்கர எதிரியாக அது முன்னிறுத்தப் பட்டது.

கமியூனிஸ்ட்டுகள் கண்ட அதே இலட்சிய கனவு இங்கும் இடம் பிடித்தது. ஓர் உன்னத இஸ்லாமிய அகிலமொன்று மாற்றீடாக முன்வைக்கப்பட்டது.

இந்த எழுத்துகள் இஸ்லாமிய உலகை எழுப்பி விட்டது; உலுப்பி விட்டது. பாரியதொரு இஸ்லாமிய அலை அரபு உலகில் வீசியது. விளைவாக இயக்கங்கள் தோன்றின. அவற்றின் பொதுப் போக்கு வன்முறை சாரா சாத்வீக அடிப்படையில் அமைந்தாலும் படிப்படியாக வன்முறை சார் இயக்கங்களும் தோன்றின.

இத் தொடர் வரலாற்று ஓட்டத்தில் அரபு வசந்தமும் எதிர்பாராதவாறு, திட்டமிடப்படாதவாறு உருவாகியது. பல அரபுலக நாடுகளில் அதனை முன்னின்று கையிலெடுத்தவர்கள் இஸ்லாமிய வாதிகளாக அமைந்தனர். அப்போது இஸ்லாமிய ஆட்சி என்ற கனவு பலிக்கப் போகிறது எனப் பலரும் நம்பினர், எழுதினர், கோஷமிட்டனர். ஆனால் எதிர்ப் புரட்சி சக்திகள் அரபு வசந்தத்தை முடக்கிப் போடுவதில் வெற்றிபெற்றனர். இதற்கு இரண்டு காரணங்களை அடையாளம் காண முடிகிறது.

இஸ்லாமிய வாதிகளும், அவர்கள் சார் இயக்கங்களும் நவீன உலக சக்திகளோடு உறவாடும் அளவுக்கு ராஜதந்திர, போராட்ட உத்திகளைப் பயின்றில்லாமை.

இஸ்லாமிய சிந்தனைத் தளத்தில் ஆழ்ந்த விரிந்த விமர்சனங்களுக்கும், மீள் ஆய்வுக்கும் வந்தில்லாமை.

இப்போது இதுவரை காலமும் நிகழ்ந்தில்லாத வகையில் ஒரு பெரும் மோதலுக்குற்பட்ட இஸ்லாமிய வாதிகள் தமது சிந்தனைகளை மீள்பரிசீலனை செய்ய முற்பட்டுள்ளனர். உலக முழுக்கவும் பல்வேறு சிந்தனை மாற்றங்கள் நிகழ்ந்து வரும், நிகழ்ந்துள்ள இந்தக் காலப் பிரிவில் இஸ்லாமிய வாதிகளும் தம்மை மீட்டிப் பார்க்கின்றனர்.

அந் நிலையில் குறிப்பாக இஸ்லாமிய அரசியல் சிந்தனைகளும், பொதுவாக இஸ்லாமியக் கோட்பாடுகளும் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளமை தெளிவாகத் தெரிகிறது. இப் பின்னணியில் இந்தக் காலக் கட்டத்தில், எந்த ஒரு இஸ்லாமிய வாதியும் குழப்பமடையாதிருக்க முடியாது. முடிந்த முடிவுகளோடு பயணிக்கவும் முடியாது. முரண்பாடில்லாத ஒற்றைத் தெளிவுகளைக் கொண்டிருப்பதுவும் சாத்தியமில்லை. இஸ்லாத்தை ஒரு சமூக வாழ்வாகக் கண்டு நடைமுறைப் படுத்தல் இலக்கைக் கொண்டியங்கும் யாருக்குமே ஏற்படும் நிலை இது.

இஸ்லாம் பற்றிய இந்த மறுபரிசீலனை காரணமாக இஸ்லாமிய சிந்தனைப் பகுதியில் பல அதிர்வுகளைக் காண முடிகிறது என்று சொன்னோம். கீழே அவற்றிக்கான சில உதாரணங்களைத் தருகிறோம்.

சட்டமியற்றும் அதிகாரம் இறைவனுக்குரியது என்ற கோட்பாடு சட்டத்தில் மனித அறிவுக்கான இடத்தை நிராகரிக்காது. அந்த இடம் சாதாரணமானதல்ல, பாரியது. மனித ஆய்வு தலையிடும் போது அங்கு தவறுகள், குறைபாடுகள் இருப்பது சாத்தியம். கால, இட, சமூக நிலைகளால் வரையறுக்கப்படுவதும் சாத்தியம். இந்த வகையில் இஸ்லாத்தின் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியைப் பொறுத்தவரையில் சத்தியம் என்பது அங்கே ஒப்பீட்டுரீதியானது. முழுமை பெற்றும், கால, இட சமூக நிலைகளுக்கு அப்பாற்பட்டும் அது நிற்பதில்லை. இப் பின்னணியில் அடுத்த சமூகங்களின் ஆய்வுகள், அனுபவங்களை நோக்குவது, அவதானப் படுத்துவது, அச் சமூகங்களோடு கருத்துப் பரிமாறலுக்கு செல்வது இயல்பானது.சட்டமியற்றும் அதிகாரத்தை ஒட்டிய இக்கருத்து இன்று பரவலாக அழுத்தம் கொடுத்து விளக்கும் நிலை உருவாகியுள்ளது.

இஸ்லாமியப் பணியை, அரசை இலக்காகக் கொண்டு வரையறுத்தல், அதற்கேற்ப ஒழுங்குபடுத்தல் விடப் பட வேண்டும். சமூகமே அடிப்படையானது. அல் குர்ஆன் எப்போதும் சமூகத்தையே விளித்துப் பேசுகிறது. இந்த வகையில் சமூகத்தைக் கட்டியெழுப்பல், சீரமைத்தல், சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டல் என்பவையே வேலைத் திட்டமாக அமைய வேண்டும். விழிப்புணர்வும், அறிவு ஜீவத் தன்மையும், அநீதிகளுக்கெதிரான போர்க் குணமும், கொண்ட ஒரு சமூகத்தின் மீதுதான் ஜனநாயகப் பண்பு கொண்ட அரசை அமைக்க முடியும். இந்த வகையில் சமூகத்தை மையப் படுத்திய அதேவேளை அரசியல் பகுதிக்கும் ஒரு பங்கைக் கொடுத்த வேலைத் திட்டமொன்றே மிகப் பொருத்தமானது.

இஸ்லாமிய ஷரீஆ கலைகள் பற்றியும் பல புதிய பார்வைகள் எழுந்துள்ளன. அங்கே ஆழ்ந்த விமர்சனங்களையும் அவதானிக்க முடிகிறது. அல் குர்ஆனைப் பொறுத்தவரையில் நஸ்க் – சட்ட வசனங்கள் மாற்றப்படல் – என்ற கருத்து முற்றாக மறுக்கப்படும் நிலையைக் காண முடியும் அல்லது அதற்கு வித்தியாசமான விளக்கங்கள் கொடுக்கப்படுவதை அவதானிக்க முடியும்.

ஸுன்னா என்ற பகுதியில் உதாரணத்திற்கு கீழ்வரும் ஆய்வுகள் எழுந்துள்ளன.

சட்டவாக்க ஸுன்னாவும், சட்டவாக்கத்திற்கு உட்படா சுன்னாவும்.

ஸுன்னாவை அணுகுவதற்கான முறைமைகள்.

இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கால சமூக சூழல் பின்னணியிலிருந்து ஸுன்னாவை நோக்கல்.

ஸுன்னாவை மீள் ஒழுங்கு படுத்தல்.

ஸுன்னாவை மீள் ஆய்வுக்குட்படுத்தித் தூய்மைப் படுத்தல்.

சட்டவாக்க முறைமை –உஸூல் அல் பிக்ஹ்-

சட்ட மூலாதாரங்களை நிரல் படுத்துவதில் வித்தியாசம் காணல்.

சட்ட மூலாதார அறிவில் சமூகவியல் கலைகள் பற்றிய அறிவையும் இணைத்தல்.

சட்டமியற்றும் பகுதியில் சட்ட வசன ஆய்வுகள்சார் அறிஞர்களோடு சமூக யதார்த்தம் சார் ஆய்வறிஞர்களுக்கும் சம அந்தஸ்தை வழங்கல்.

சில குறிப்பிட்ட சட்டப் பகுதிகளிலும் பல புதிய சிந்தனைகளும், கண்ணோட்டங்களும் எழுந்துள்ளன. அது பற்றிய சில குறிப்புக்கள்:  

சட்ட பகுதிகளிலும் பல புதிய சிந்தனைகளும், கண்னோட்டங்களும் எழுந்துள்ளன என்று சென்ற முறை கூறினோம். அதற்கான சில உதாரணங்களைக் கீழே தருகிறோம்.

மனித சுதந்திரம் மிக அதிகமாகப் பேசப்படும் காலப்பிரிவு இது. எனவே சுதந்திர என்ணம் கொண்ட சமூகங்களின் மீது சட்டங்களின் திணிப்பு எந்த வகையிலும் பொருத்தமற்றது.

“மார்க்கத்தில் எந்த நிர்ப்பந்தமும் கிடையாது” (ஸூரா பகரா 2: 256)

என்ற வசனம் இஸ்லாத்தை ஏற்கமுன்னரும், பின்னரும் உள்ள எல்லா நிலைகளுக்கும் பொருந்தும். சட்டத்தின் பிடிக்குப் பயந்து செய்யப்படும் செயற்பாடுகளுக்கு அல்லாஹ்விடத்தில் கூலியும் கிடையாது.

இந்த வகையில் தொழுகை, நோன்பு போன்ற வணக்கவழிபாடுகளிலும் உடை போன்ற பகுதிகளிலும் மனிதன் பயிற்றுவிக்கப் பட வேண்டுமே தவிர தண்டனைகள் மூலம் நிர்பந்திக்கப்படக் கூடாது. மனிதனின் தனிப்பட்ட விவகாரங்கள் இவ்வாறே நோக்கப்பட வேண்டும்.

சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் பகுதியில்தான் தண்டனைகள் என்ற பகுதி நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

அதில் குற்றவியல் பகுதியில் காணப்படும் ‘ஹுதூத்’ எனும் வரையறுத்த தண்டனைகள் நவீன காலப்பிரிவில் சர்ச்சைக்கு உரியவைகளாக உள்ளன. ஏனைய சட்டப் பகுதிகள் நடைமுறைச் சட்டங்களோடு உடன்பட்டுச் செல்வதே மிக அதிகம்.

குற்றவியல் சட்டப் பகுதி பற்றி கீழ்வரும் சிந்தனைகள் எழுத்து வாதப் பிரதிவாதங்களுக்கு உட்பட்டு வருகின்றன.

மதம் மாறலுக்கான -ரித்தத்திற்கான- தண்டனை மதம் மாறலோடு முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடும் போதுதான் கொடுக்கப்பட வேண்டும். தனியாக ரித்தத்திற்கென்று தண்டனை கிடையாது. இது சம்பந்தமான அல் குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் திரட்டி ஆராயும் போது இந்த முடிவுக்கே வரவேண்டியுள்ளது.

ஹுதூத் சம்பந்தப்பட்ட குற்றம் ஒன்றைச் செய்துவிட்டு பாவமன்னிப்புக் கேட்டல் அத் தண்டனையை நீக்குவதாக அமையும்.

இக்காலப்பிரிவு சமூக, பொருளாதார, அரசியல் சூழல் ஹுதூத் தண்டனைகள் நடைமுறைப்படுத்தப்பட பொருத்தமற்றவையாகும். அவ்வாறு நடைமுறைப்படுத்தப்படல் பல்வேறு அநியாங்களுக்கு இட்டுச் செல்லும். எனவே அவை இடைநிறுத்தப்பட வேண்டும்.

“மகாஸித் ஷரீஆ” சட்டக் கொள்கை ஆய்வின் அடிப்படைக் கோட்பாடாகக் கடைபிடிக்கப்பட வேண்டும்.

இவ்வாறே அரசியல் பகுதி, சிறுபான்மை முஸ்லிம்கள் சார் பகுதி என்பவற்றிலும் பல புதிய சிந்தனைகள் தோன்றி வாதிக்கப்பட்டு வருகின்றன.

இப் புதிய சிந்தனைகள் பல சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில் இஸ்லாத்தை முன்வைக்கப் பங்களிப்பு செய்ய முடியும். அத்தோடு எமது சிறுபான்மை வாழ்வமைப்பை ஒழுங்குபடுத்துவதிலும் பங்களிப்பு செய்ய முடியும். இந்த வகையில் இவற்றை ஆய்வதிலும், படிப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்துதல் அவசியமாகும்.

இது முஸ்லிம் சமூகம் தன்னை மீள் புணரமைத்துக் கொள்ளும் பகுதி. ஒரு போதும் அக்கால சூழ்நிலைக்குத் தக அமைக்கப்பட்ட எமது சிந்தனைப் பாரம்பரியம் எமக்குப் பொருத்தமாக இருக்குமென எதிர்பார்க்க முடியாது.

இந்தப் பின்னணியிலிருந்து இப் பிரச்சினையை அணுக வேண்டும்.

http://www.usthazmansoor.com/transitions-in-islamic-thought-2/