Home இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கல்விச் சிந்தனைகள் (2)
இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கல்விச் சிந்தனைகள் (2) PDF Print E-mail
Sunday, 25 December 2016 07:55
Share

இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கல்விச் சிந்தனைகள் (2)

இஸ்லாமிய பாடத் திட்டம்

ஒரு கல்லூரியில் படித்து விட்டு வெளிவருகின்ற மாணவ சமூகத்தை எதிர்பார்த்தும், அவர்களை நம்பியும்தான் அவர்கள் சார்ந்திருக்கின்ற குடும்பம், சமூகம், நாடு அனைத்தும் இருக்கிறது.

உலகை வளப்படுத்தும் பொறுப்பை சுமக்க இருக்கின்ற மாணவர்களுக்கு குடும்பம் முதல் நாடு வரையிலான அவர்களது பொறுப்புகளையும், கடமைகளையும் உணர்த்தி தலை சிறந்த மனிதர்களாக உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்த்னையில் உருவாக்கப்பட்டதுதான் பாடத்திட்டம்(Syllabus).

ஒரு மாணவன் பெற்றோர்களுக்கு குழந்தையாக, உடன் பிறந்தவர்களுக்கு சகோதரனாக, உறவுகளுக்கு உறவாக, நட்புகளுக்கு தோழமையாக, வாழ்க்கைத் துணைக்கு நல்ல இணையராக, சமூகத்திற்கும், நாட்டிற்கும் சேவை செய்பவனாக, ஒரு மாணவனின் உறவும் பொறுப்பும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அப்படியெனில் இவ்வளவு கடமைகளையும் பொறுப்புகளையும் உணர்ந்து அதை செயல்படுத்தும் உந்துதலை தருவதாக் பாடத்திட்டம் அமைய வேண்டும்.

அவன் சார்ந்த உறவுகளில் அவன் எதிர்கொள்கின்ற பிரச்சனைகளையும், அதற்கான தீர்வுகளும் சொல்லித்தரப்பட வேண்டும். அப்படி உருவாக்கப்படுகிற பாடத்திட்டத்தில் படித்து வெளிவருகின்ற போது, அவனது ஒழுக்கம், குணம், தகுதி என அனைத்தும் பண்படுத்தப்படுகிறது.

ஆனால், இன்று நமது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதிக்கப்படுகின்ற பாடத்திட்டத்தின் தரம் மற்றும் தகுதிக்கு அதில் படித்து விட்டு வருகின்ற மாணவர்களின் நடவடிக்கைகளே சாட்சியாக அமைகிறது.

இன்றைய பாடத்திட்டம் படிக்கின்ற மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் “பணம்” என்பதையே இலக்காக கற்பிக்கிறது. பணமே அவனை இயக்குவதால் பணத்திற்காக எதையும் செய்யத் துணிந்து விடுகிறான் மாணவன். தனக்கு சாதகமானதையே படிக்க வைக்கும் முதலாளித்துவ சிந்தனையில் உருவாக்கப்படுகின்ற பாடத்திட்டங்கள் மாணவனின் உணர்வை நசுக்கி விடுகிறது.

தன் பிள்ளை தன்னைக் காப்பாற்றுவான், தனக்கு மரியாதை தேடித் தருவான் என்பதற்காக ஆயிரங்களையும் லட்சங்களையும் செலவழித்துப் படிக்க வைத்து ஏமாற்றமடைந்த பெற்றோர் மனம் உடைந்து இன்று மாற்றுப் பாடத்திட்டத்தைத் தேடி பயணிக்கின்றனர்.

படிக்கின்ற காலங்களில் கூத்தடித்து விளையாடிய மாணவன் 10 – 12 ஆண்டுகளுக்குப் பின் அவனது வாழ்க்கையை அவனே நொந்து கொள்ளும் நிலையைத் தான் இன்று பார்க்க முடிகிறது.

எனவே படிக்கின்ற மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அறிஞர்கள்ஸ என அனைவரிடமும் ஒரு மாற்றுப் பாடத்திட்டத்திற்கான தேடல் தொடங்கி இருக்கிறது.

அவர்களின் தேடலுக்குப் பதிலாக, உணர்வுகளுக்கு உணவாக அமைவதுதான் இஸ்லாமிய பாடத்திட்டம்.

எதற்கெடுத்தாலும் இஸ்லாம்! இஸ்லாம்! என்கிறீர்களே அப்படி என்னதான் அந்த இஸ்லாமிய பாடத்திட்டத்தில் இருக்கிறது என்று யோசிக்கின்ற பேசுகின்ற எழுதுகின்ற நபர்களுக்கு அதற்கான வாசலை திறந்து விடுகிறோம். நீங்களே உள்ளே வந்து பாருங்கள் அதில் என்னதான் இருக்கிறது என்று..?

இஸ்லாமிய பாடத்திட்டம்

இஸ்லாமிய கல்வி முறை இரு பெரும் கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளதை ஏற்கனவே பார்த்தோம்.

1. (Elementary schooling) மூலக்கோட்பாடுகளை கற்றுக் கொடுக்கும் பள்ளி.

2. Higher Education (உயர் கல்வி)

Elementary schooling என்பது : - ஒரு குழந்தை 4 – 5 வருடங்களை நிறைவு செய்த பின், பள்ளிக்கு செல்கின்ற ஆறாம் வயதில் முதல் வகுப்பில் தொடங்குகின்ற ஆரம்ப பள்ளிக்கு Elementary schooling என்று சொல்லப்படும்.

இந்த வயதில் சொல்லிக் கொடுக்கப்படுகின்ற ABCD யும் 1234 ம் அ ஆ இ ஈ வும் கடைசி நிலை வரை அவனுக்கு உதவுகிறது. எனவே பிஞ்சு மனதில் எதை சொன்னாலும் அப்படியே பதிகின்ற அந்த மாணவர்களுக்கு இஸ்லாமிய பாடத்திட்டம் சொல்கின்ற முதல் அம்சம்.

திருக்குர்ஆன், ஹதீஸை சொல்லிக் கொடுப்பது

கல்வி கற்க விரும்பும் மாணவன் அவனது ஆரம்ப நிலையில் திருக்குர்ஆனையும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பொன்மொழிகளையும் கற்க வேண்டும். இதற்கு ‘ஓதுவது’ என்பது மட்டும் பொருளல்ல! திருக்குர் ஆனின் விளக்கங்களை அவனது வயதிற்கு பயிற்சியளிக்க வேண்டும்.

திருமறையின் உள்ளடக்கத்தை வாழ்வியல், வணக்கவியல் சார்ந்த விஷய்ஙகள் என இரண்டு வகையாக பிரிக்கலாம்.

இன்றைய கால சூழ்நிலையில் சூழ்நிலையில் திருக்குர்ஆனை வணக்கத்திற்கு மட்டும்தான் பயன்படுத்துகிறோம். வாழ்வியலுக்கு அல்ல என்ற கசப்பை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களில் சந்தேகம் எழுந்தால் குர்ஆன் ஹதீஸில் தேடுகின்ற நாம் அரசியலில், அறிவியலில், பொருளியலில், சமூகவியலில் எழுகின்ற சிக்கல்கள் சந்தேகங்கள் எழுந்தால் இஸ்லாமியத் தீர்வுகளைத் தேடாமல், துறை சார்ந்த அறிஞர்களைத்தானே தேடுகிறோம். இஸ்லாத்தில் எல்லாம் இருக்கிறது என்று நம்புகிற நாம் வாழ்வியலுக்கு பொருந்தாது என்று நினைத்து குர்ஆன், ஹதீஸை ஒதுக்கி வைப்பது அசிங்கம்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உருவாக்கிய முதல் தலைமுறை உத்தமர்களான ஸஹாபிகள் முதல் 13 ஆம் நூற்றாண்டுகள் வரை வாழ்ந்த மக்கள் குர்ஆன், ஹதீஸை தங்களது வாழ்விலும், வணக்கத்திலும் நடைமுறைப்படுத்தி வந்ததால் எல்லாத்துறைகளிலும் முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் வாழ்ந்த அந்த வாழ்வியலின் வணக்கவியலின் சாராம்சத்தை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை இஸ்லாமிய பாடத்திட்டம் வலியுறுத்துகிறது.

திருமறை கூறும் வாழ்வியல் நெறிகள்

ஒரு மனிதன் பிறந்தது முதல் இந்த உலகை விட்டும் மறைகின்ற வரை வாழும் வாழ்க்கையில் பல அம்சங்கள் உள்ளங்கி இருக்கின்றன. அன்பு, பாசம், உறவினர்களோடு இருப்பது, பொருளீட்டல், வியாபாரம், ஏழைகளை ஆதரிப்பது, திருமணம், பிர உயிரினங்களுக்கு பாதுகாப்புக் கொடுப்பது போன்ற வாழ்வியலின் கருத்துக்களை பொதிந்துள்ள குர்ஆன் – ஹதீஸை விஷயங்களை குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும்.

திருமறையின் வணக்கவியல் நெறிமுறைகள்

தொழுகை, நோன்பு, குர்ஆன் ஓதுதல் போன்ற வணக்கங்களைத் தாண்டி, தெருவில் கிடக்கும் இடையூறளிக்கும் பொருட்களை அப்புறப்படுத்துவது, சகோதரனை புன்முறுவலோடு பார்ப்பது, மனைவிக்கு ஒரு கவள உணவு ஊட்டுவது போன்ற ஏராளமான வணக்கங்கள் நிரம்ப இருக்கிறது.

எனவே வாழ்வியலிலிருந்து வணக்கத்தையும் வணக்கத்திலிருந்து வாழ்வியலையும் பிரித்துப் பார்க்க முடியாது.

மேலும் வணக்கவியல், வாழ்வியல் பற்றி ம்ட்டும் சொல்லிக் கொடுக்காமல் அது சார்ந்த சட்டங்களும் சொல்லிக்கொடுக்கப்பட வேண்டும். சட்டங்கள் தெரிந்து ஒழுக்கங்களோடு செய்யப்படுகின்ற வணக்கங்களில்தான் உயிரோட்டம் இருக்கிறது. இதன் மூலம் சிறந்த மனிதர்களாக மாணவர்கள் உருவாக்கப்பட முடியும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் சொன்னார்கள்: “உங்கள் குழந்தைகளுக்கு 7 வயது ஆனால் தொழச் சொல்லுங்கள் 10 வயது ஆனால் அடித்து தொழச் சொல்லுங்கள்.” மேற்காணும் ஹதீஸின் படி 7 வயதுக்கு முன்பே குழந்தைகள் தொழுகைக்காக பழக்கப்படுத்தப்பட வேண்டும்.

இன்று நமது தொழுகை, நோன்பு இன்ன பிற அமல்கள் மூலம் நாம் அடைய வேண்டிய நோக்கத்தை அடைந்திருக்கிறோமா என்றால் இல்லை என்று தான் பதில் வரும்.

அடிப்படை தெரியாமல் வாழ்வதால்தான் வாழ்வதற்கு வழி இல்லாமல் வாழ்கிறோமோ என்ற சிந்தனை இதனால் எழுகிறது.

வளரும் தலைமுறை மாணவர்களுக்கு இது போன்ற சங்டங்கள் ஏற்படாமல் வணாக்கவியலும் வாழ்வியலும் சேர்ந்து கற்பிக்கப்பட வேண்டும்.

திருமறை கூறும் தன்னம்பிக்கை

எல்லாம் வல்ல அல்லாஹ் தனது ஏகத்துவத்தை மக்களிடம் கற்பிக்க சுமார் 1 இலட்சம் நபிமார்களை அனுப்பினான் அவர்களில் சிலரின் வாழ்வு குறித்து அல் குர்ஆன் பேசுகிறது.

நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் சொந்த சகோதரர்கள் பொறாமையால் கிணற்றில் எறியப்பட்டது முதல் எகிப்தின் தலைமை பொறுப்புக்கு வருவது வரை அவர்கள் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல! அல்லாஹ்வுக்காக அவைகளை பொறுத்துக் கொண்டதன் காரணமாக யூசுஃப் நபியின் அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்தினான்.

நபி அய்யூம் அலைஹிஸ்ஸலாம் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் போன்றோர்களின் வாழ்வும் அப்படித்தான்.

துன்பங்களை சகித்துக் கொண்ட நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வாழ்க்கை மனிதர்ளுக்கு உதாரணமாக ஆக்கப்பட்டிருக்கிறது. நபிமார்களின் வாழ்வில் ஏற்பட்ட இன்பமான நிகழ்வுகளை விட அவர்களது வாழ்வில் ஏற்பட்ட சிக்கல்களை ஏன் குறிப்பிடுகிறான் தெரியுமா?

சிக்கல்கள், பிரச்சனைகள், துயரங்கள் வருகிற போது அல்லாஹ்வை குறை கூறாமல் பொறுமையாக இருந்து இறை நம்பிக்கையுடன் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்துவதற்குத்தான் இது போன்ற வரலாறுகளை குர்ஆன் கூறுகிறது.

இதை மாணவப் பருவத்தில் படிக்கின்ற மாணவர்கள் எதிர்காலத்தில் அவர்களது குடும்பம், சமூகம், நாடு சார்ந்து ஏறபடுகிற சிக்கல்களுக்கு இறை வழிகாட்டுதலின் அடிப்படையில் தீர்வைத் தருகிறவர்களாக உருவாகிற போது அவர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

இஸ்லாத்தின் அடிப்படைகளை சொல்லிக் கொடுப்பது

மாணவர்களுக்கான பாடத்திட்டம் “எல்லா விஷயங்களையும் அடிப்படையில் இருந்து சொல்லிக் கொடுப்பதாக அமைய வேண்டும்.”

அந்தப் பாடத் திட்டத்தில்தான் ஏன் படிக்கிறோம், இந்த பாடத்திற்கும் எனக்கும் எனது எதிர்கால வாழ்வுக்கும் என்ன தொடர்பு என்ன என்பது எல்லாம் தெளிவுபடுத்தப்படும். தெளிவு பெற்ற மாணவன் எதிர்காலத்தில் மக்களுக்கு பயனளிக்கிறவனாக உருவாகிறான்.

ஆனால் இன்றைய பாடத்திட்டம் அடிப்படையை தகர்த்து விட்டு மோலோட்டமான படிப்பாக இருப்பதால் அதிலிருந்து வெளிவருகிற மாணவர்களும் தரமில்லாதவர்களாக வெளிவருகிறார்கள்.

படித்த மாணவனிடம் “வண்டியை சரி செய்வது எப்படி” எனும் புத்தகத்தைக் கொடுத்து இதை படித்து விட்டு எனது இரு சக்கர வாகனத்தை சரி செய்து தாருங்கள் என்று கூறினால் அவரால் முடியும் என்று நம்புகிறீர்களா? நிச்சயம் முடியாது.

ஆனால் ஒரு மெக்கானிக்கிடம் உங்களது வண்டியை கொடுத்து இதை சரி செய்து தாருங்கள் என்றால் 2 மணி நேரத்தில் சரி செய்து கொடுப்பார்.

பார்த்தீர்களா? படிப்பதற்கும், கற்றுக் கொள்வதற்கும் உண்டான வேறுபாடு இதுதான்.

+2 முடித்த மாணவனை அழைத்து கடந்த 12 ஆண்டுகள் (சுமார் 4383 நாட்களில்) நீ கற்றுக்கொண்டதை ஒரு மணி நேரம் பேசு என்றால் பேச முடியுமா..? நிச்சயம் முடியாது.

வெறுமனே படிக்கின்ற மாணவர்களை உருவாக்குகின்ற பாடத்திட்டத்தை வைத்துக் கொண்டு சமூகத்திற்கும் நாட்டிற்கும் மிகப்பெரும் பலனை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்.

எனவே, மாணவர்களுக்கு எந்த விஷயத்தையும் அடிப்படையில் இருந்து கற்றுக் கொடுக்கப்படும் பாடத்திட்டமாக அமைவதுதான் இஸ்லாமிய பாடத்திட்டம்.

தீனுல் இஸ்லாத்தை வழங்கிய அல்லாஹ்ஸ அதன் வழிகாட்டியான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதை நமக்கு கொண்டு வந்து சேர்த்த ஸஹாபாக்கள், தாபியீன்கள் தபவுத் தாபியீன்க, இமாம்கள், முஃபஸ்ஸிரீன்கள், முஹத்திதுகள் போன்றவர்களின் வரலாறுகள் எங்கே போனதுஸ?

இஸ்லாத்தை நிலை நிறுத்துவதற்காக அவர்கள் மேற்கொண்ட தியாகங்கள், உழைப்புகள், இழப்புகள் எல்லாம் சொல்லிக் கொடுக்கப்படாததால் அவர்களை தரக்குறைவாக பேசுவதற்கு ஒரு சமூகம் உருவாகி விட்டது.

எழுதுவதற்கும் படிப்பதற்கும் கற்றுக் கொடுப்பது

ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் அந்த விஷயம் முதலில் நமக்கு புரிய வேண்டும். மாணவர்கள் ஒரு விஷயத்தை புரிய வேண்டும் என்றால் அதற்கு உறுதுணையாக இருப்பது எழுத்தும், படிப்பும்தான். ஒருமுறை எழுதுவது பத்து முறை படிப்பதற்கு சமம் என்று சொல்வார்கள்.

அதன் அடிப்படையில் கல்வியை கற்க துவங்குகின்ற மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி மூலமும், ஒரு பாடத்தை தெளிவாக படிப்பதன் மூலமும் பெறப்படுகின்ற கல்வி நிலைத்து நின்ரு பயன் தரும் என்பதால் இஸ்லாமிய பாடத்திட்டம் எழுத்தறிவை வலியுறுத்துகிறது.

இலக்கியம்
இலக்கணம்
சம்பவங்கள் / நீதி போதனை
கணிதம்
மேற்காணும் 7 பாடங்களோடு சேர்த்து ஒழுக்கததையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

ஒழுக்கத்துடன் மேற்கண்ட பாடத்திட்டங்களில் பயின்று வருகின்ற ஒரு மாணவனின் சிந்தனையும், தரமும், தகுதியும் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். சுப்ஹானல்லாஹ்.

Elementary schooling – மற்றொரு பிரிவான “சிறந்த மாணவர்களுக்கனா பாடத் திட்டம்”:

புரிந்து கொள்கின்ற மனப்பக்குவம், விஷயத்தை உள் வாங்கும் தன்மை, விளங்கியதை பிறருக்கும் பிறருக்கு புரிய வைக்கும் திறன், தொலை நோக்கு சிந்தனை, சமூக ஈடுபாடு போன்ற காரணங்களால் மாணவர்களில் வேறுபாடு ஏற்படுவது உண்டு.

மாணவர்களை அவர்களின் திறனுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து மேற்சொன்ன பாடத்திட்டத்தி ஆழ்ந்து சிந்திக்க கற்றுக் கொடுப்பதின் மூலம் துறை வாரியாக தலை சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும்.

துறை சார்ந்த வல்லுநர்களை உருவாக்குவதன் மூலம் ஒரு சமூகத்தின் நாட்டின் எதிர்காலத்தை திட்டமிடுவதற்கும் அதன் மூலம் சமூக பொருளாதார வளர்ச்சியை அடைவதற்குமான கொள்கை வகுப்பாளர்களை (Polcy Makers) உருவாக்க முடியும்.

சிறுவயதில் இருந்தே சமூகப் பொறுப்பை கடமையை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஒழுக்கம் சார்ந்து கற்பிக்கப்பட்டு வார்த்தெடுக்கப்படுகின்ற மாணவர்கள் துறை சார்ந்த நிபுணர்களாக உருவாகி வந்து, அவர்களின் தொலை நோக்குப் பார்வையில் வழிக்காட்டப்படுகிற திட்டங்கள், அரசின் கொள்கைகள் (Government Polcy) நாகரீக வளர்ச்சியோடு சமூகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

சிறந்த மாணவர்களை உருவாக்குவதன் மூலம் “கொள்கை வகுக்கும் அறிஞர்களை” இஸ்லாமிய பாடத்திட்டம் உருவாக்குறது.

ஆனால் இன்றை கல்வி முறைஸ சுமார் 40 – 50 ஆண்டு காலமாக படித்து வந்த மாணவர்களின் நிலைஸ ஒரு முதலாளித்துவ கம்பெனிக்கு வேலை செய்து கொடுக்கும் Labor ரைத்தான் உருவாக்கி இருக்கிறது.

எனவே மாணவர்களை தொலை நோக்கு சிந்தனையின் அடிப்படையில் சமூகத்தின், நாட்டின் வளர்ச்சியை மையப்படுத்தி வழங்குகின்ற பாடத்திட்டம்தான் இஸ்லாமிய பாடத் திட்டம்.

உயர் கல்விக்கான பாடத்திட்டம் Higher Education பாடத்திட்டம்

Elementary schooling- கில் குர்ஆன், ஹதீஸ், இலக்கண, இலக்கியம், கணிதம் போன்ற பாடங்களை ஒழுக்க உணர்வோடு படித்து விட்டு உயர் கல்விக்குள் நுழைகின்ற போது அனைத்துப் பாடங்களையும் ஆராய்ச்சி கண்ணோட்டத்தோடு பார்த்து அந்தந்த சமூக மற்றும் நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப தனது ஆராய்ச்சிகளை வழங்க வேண்டும்.

மனித சமூகத்தை அழிக்கின்ற ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இக்காலத்தில் மனித சமூகத்தை தரம் உயர்த்தி மேம்படுத்துகின்ற ஆராய்ச்சியை இஸ்லாமிய பாடத்திட்டம் வலியுறுத்துகிறது.

இஸ்லாமிய பாடத்திட்டம் எப்படி இருந்தது? 

கட்டுரையின்  தொடர்ச்சிக்கு  கீழுள்ள   "Next"  ஐ  "கிளிக்"  செய்யவும்.

source:    http://www.samooganeethi.org/