Home இஸ்லாம் கட்டுரைகள் மனிதனை பொருளாதாரப் பிராணியாக்கும் வறுமைப் பயம்
மனிதனை பொருளாதாரப் பிராணியாக்கும் வறுமைப் பயம் PDF Print E-mail
Sunday, 04 December 2016 08:14
Share

மனிதனை பொருளாதாரப் பிராணியாக்கும் வறுமைப் பயம்

[ வறுமைப் பயம் ஒரு முஸ்லிமைப் பொருத்த வரையில் பயங்கரமான ஒன்றாகும். மறுமையை மறக்கடிக்கும் அபாய நிலை இதனால் ஏற்படுகிறது. உலக ஆசை ஏற்பட்டு மனிதன் பொருளாதாரத்தின் பின்னால் ஓடும் இழி நிலைக்கு இந்நோய் அவனை ஆளாக்குகிறது.]

உலகிலுள்ள பெரும்பாலான மனிதர்கள் இன்று பொருளாதாரப் பிராணியாக மாறியுள்ளார்கள். இதனால் அவர்களுக்கு நேரம் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. தன்னுடைய சொந்தத் தேவைகளைக் கவனிப்பதற்கோ, மனைவி மக்களுடைய வசதிகளைப் பற்றி சிந்திப்பதற்கோ நேரம் இல்லாத துர்ப்பாக்கிய நிலைக்கு இத்தகைய மனிதர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பொருளாதாரத்தின் பின்னால் தன்னையே மறந்து ஓடும் இத்தகையவர்களிடம் சமூக விபரங்களுக்கு நேரத்தை எதிர்பார்ப்பது குதிரைக் கொம்பாகும்.

மனிதர்களை இத்தகைய நிலைக்கு இட்டுச் சென்ற அடிப்படையான காரணம் வறுமை பற்றிய பயம் என்று சொன்னால் அது மிகையாகாது. மனிதர்களில் சிலர் வறுமை என்பது ஒரு சாபக் கேடு என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வானத்திலிருந்தோ அல்லது வேறு ஒரு சக்தியிடமிருந்தோ திணிக்கப்படும் ஒர் விடயமாக இந்த வறுமையைக் கருதுபவர்களும் உள்ளனர்.

உண்மையில், வறுமை என்பது ஒன்று. அது பற்றிய பயம் என்பது வேறு ஒன்று. வறுமை யதார்த்தமானது. அது மனிதனுக்கு பொறுமையைப் பரிசோதிப்பதற்காக இறைவனால் கொடுக்கப்படும் ஒரு பரீட்சையாகும். ஒரு முஸ்லிமைப் பொருத்த வரையில் உலகத்தின் வெற்றி என்பது மறுமையில் அல்லாஹ்வின் திருப்தியையும் அதனூடாக சுவனத்தையும் பெற்றுக் கொள்வதாகும்.

இந்த வறுமையுடன் வாழ்க்கையை வாழ்ந்து அதன் மூலம் இறை திருப்தியைப் பெற்று சுவனத்தை அடைந்தவர்களுடைய வரலாறுகளை ஹதீஸ்களில் நாம் காண்கின்றோம். வறுமை ஒரு சாபக்கேடு என்றிருந்தால், அல்லாஹ்வின் இறுதித் தூதருக்கும் அவர்களுடைய உன்னத சமூகத்துக்கும் இந்நிலைமை வராமல் அல்லாஹ் நிச்சயம் பாதுகாத்திருப்பான்.

'வறுமைப் பயம்’ எனும் நோய் முஸ்லிம்களிடத்திலும் இன்று ஆழமாக இடம்பிடித்துள்ளது.

வறுமை என்பதற்கு எதிர்ப்பதம் செல்வமாகும்.

ஒருவனிடத்திலுள்ள செல்வ நிலை அவனுடைய சொத்துக்களின் அளவை வைத்து எடை போட முடியாது.

செல்வ நிலை உள்ளத்தை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றது.

இதனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு ஸகாபாக்களுக்கு விளக்கமளித்துள்ளார்கள்.

“நிச்சயமாக செல்வ நிலை என்பது போதுமென்ற மனம் எப்போது ஒருவருக்கு ஏற்படுகின்றதோ அதனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது’.

இன்று அனேகமானோரிடம் அளவில்லாத செல்வங்கள் காணப்படுகின்றன. இருப்பினும் அவர்கள் வறியவர்களாகவே உள்ளனர். காரணம் தன்னிடம் இருக்கின்ற செல்வத்தில் அவர்களுக்கு திருப்தி இல்லை. கஞ்சத்தனமும் பொருளின் மீதுள்ள ஆசையும் தன்னை தொடர்ந்தும் வறியவர்களாகவே பார்க்க வைக்கிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனிதர்களுடைய பேராசை குறித்து பின்வருமாறு வியாக்கியானம் கூறினார்கள். “ஆதமுடைய மகனுக்கு ஒரு உஹது மலையளவு தங்கக் குவியல் இருந்தாலும் அதைப் போன்று இன்னுமொன்று இருப்பதற்கு அவன் ஆசை வைப்பான்” (நபிமொழி)

வறுமைப் பயம் ஒரு முஸ்லிமைப் பொருத்த வரையில் பயங்கரமான ஒன்றாகும். மறுமையை மறக்கடிக்கும் அபாய நிலை இதனால் ஏற்படுகிறது. உலக ஆசை ஏற்பட்டு மனிதன் பொருளாதாரத்தின் பின்னால் ஓடும் இழி நிலைக்கு இந்நோய் அவனை ஆளாக்குகிறது.

படைத்த இறைவனின் பிரதிநிதியாக இவ்வுலகில் ஆற்ற வேண்டிய பணிகளைப் புரிய முடியாத துர்ப்பாக்கிய சாலியாக மனிதன் மாறுகின்றான். உண்மையில் தன்னிடம் வறுமை நிலை இல்லாமல் வறுமை குறித்து ஏற்படுத்திக் கொண்ட வீண் பயத்தினால் மறுமை வாழ்க்கையின் தோல்வியை தனதாக்கிக் கொள்கின்றான்.

இதற்கு முற்றிலும் மறுதலையான உண்மையை ஸகாபாக்கள் வாழ்க்கை எடுத்துக் காட்டுகிறது. வறுமை நிலை குறித்து ஒருவரினால் எந்தளவு கற்பனை செய்து பார்க்க முடியுமோ அதனை விட பல மடங்கு யதார்த்தமான வறிய நிலையை வாழ்க்கையில் சந்தித்தவர்கள் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், ஸகாபாக்களும்.

இஸ்லாத்தின் அடிப்படையில் வறுமை என்ற சோதனையை மிகச் சரியாக விளங்கி, வாழ்ந்து ஈடேற்றம் பெற்றுள்ளார்கள் நபியவர்களது சமூகத்தவர்கள். மறுமை வாழ்வு தொடர்பான சரியான கண்ணோட்டத்துடன் இவ்வுலகைப் பார்க்க முடியுமான அவர்களது கண்களுக்கு வாழ்க்கையின் வறுமை நிலை ஒரு பொருட்டாக தென்படவில்லை.

வீட்டில் பல நாட்கள் அடுப்பு எரியாதிருந்த நபியவர்கள் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். வறுமை என்ற பயம் அவர்களை வாட்டவில்லை. பொருளாதாரத்தில் அவர்களை அளவு கடந்து மூழ்கச் செய்யவும் இல்லை. இதில் விசேடம் என்னவென்றால், இவ்வளவு வறிய நிலையிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீசும் புயல் காற்றை விடவும் வேகமாக தர்மம் செய்திருக்கிறார்கள் என்பது. தன்னிடமிருப்பது போதும் என்ற மனோ நிலை தான் தர்ம சிந்தனையை அவர்களிடம் ஏற்படுத்தியது என்று கூறுவது பிழையாகாது.

ஸஹாபாக்களது வாழ்வும் இதற்கு விதிவிலக்கல்ல. பெரும்பாலான ஸகாபாக்கள் வறியவர்களாகவே வாழ்ந்துள்ளனர். ஆனால், வறுமை எனும் பயம் அவர்களைப் பிடிக்கவும் இல்லை. பொருளாதாரத்தின் பின்னால் அவர்களை துரத்தவுமில்லை.

அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களது வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை அல்குர்ஆன் சிலாகித்துக் கூறுகின்றது. பல நாட்கள் வீட்டில் அடுப்பெரியாத நிலையில் வாழ்க்கையைக் கழித்ததன் பின்னால், கோதுமை மா கொஞ்சம் கிடைக்கப் பெற்றது. அதனை அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது மனைவி பாதிமா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் கலந்துரையாடி மூன்றாக பங்கு வைக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் செய்தது மூன்று நாளைக்கு அதனை சாப்பிடலாம் என்ற எதிர்பார்ப்பிலாகும்.

இதனையடுத்து, முதலாவது பங்கை சமைத்து உண்ண தயாராகும் போது ஒரு ஏழை உணவு தருமாறு வாசலில் வந்து வேண்டினார். அதனை அந்த ஏழைக்கு கொடுத்து விடுகிறார்கள். பின்னர் அடுத்த பங்கை சமைத்து அதனை உண்ணத் தயாராகும் போது வாசலில் ஒரு அநாதை வந்து உணவு தருமாறு கேட்டார். அதனையும் அந்த அநாதைக்கு கொடுத்து விடுகிறார். மிச்ச முள்ளது இன்னும் ஒரேயொரு பங்கு மட்டும்தான் அதனையும் சமைக்கிறார்கள் உண்பதற்காக அப்போது ஒரு கைதி உண்ணத் தருமாறு கேட்கிறார். உடனே அந்த உணவையும் கைதிக்கு கொடுத்து விடுகிறார்கள். பல நாட்கள் பசித்திருந்து விட்டு கிடைத்த உணவுக்குத்தான் இப்படி நடந்தது.

அல்லாஹ்வின் திருப்தி உள்ளத்தில் நிறைந்திருந்தது. அனைத்து செயற்பாடுகளிலும் அல்லாஹ்வின் அன்பையும் திருப்தியையும் ஆசை வைத்தார்கள். கடுமையான வறுமையிலும் அவர்களுக்கு பயமிருக்கவில்லை. பசி வந்தால் பத்தும் பறக்கும் என்ற பழமொழி இவர்களது வாழ்வில் பொருந்தாமல் போனது.

இன்று எம்முடைய வாழ்வு இதற்கு முற்றிலும் மாறாகவுள்ளது என்ற உண்மையை கசப்பானாலும் ஏற்றே ஆகவேண்டும். நூறு நாட்களுக்கு உணவு போதுமாக இருக்கின்ற நிலையிலும் நூற்றி ஒருவரது நாளைய உணவு எப்படி? என்ற வறுமைப் பயம் ஆட்டிப் படைக்கும். இந்நிலையில் எப்படி தர்ம சிந்தை பிறக்கும். நூற்றி ஒராவது நாளைய உணவுக்காக மூச்சடைக்க ஓடும் நிலையே எம்மில் பெரும்பாலோரின் வாழ்வாகவுள்ளது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விருந்தாளியை அழைத்துச் சென்ற ஸகாபி, தனது குழந்தைகளுக்கு மட்டும் இருந்த சாப்பாட்டை குழந்தைகளைத் தூங்க வைத்து விட்டு, தாமும் பசியிலிருந்து விருந்தாளியை வயிறாற உண்ணச் செய்த சம்பவத்தை வரலாற்றில் படிக்கிறோம். அல்லாஹ்வின் திருப்தி மனதில் நிறைந்திருந்த இவர்களது வாழ்க்கை வறுமையிலும் செல்வந்த நிலையாகத் தான் காணப்பட்டது. இவர்கள் வறுமையைக் கண்டு பயப்படவில்லை. அடுத்த நாள் காலையில் தனது பிள்ளைகளது உணவுத் தேவை குறித்து அலட்டிக் கொள்ள வில்லை. அல்லாஹ்வின் மீதுள்ள ஆழமான நம்பிக்கை இவர்களை இவ்வாறு செயற்பட வைத்தது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வறுமையைக் கண்டு பயப்படவில்லை. அதனை இல்லாமல் செய்ய பொருளாதாரப் பிராணியாக மாறவில்லை. ஆனால், வறுமையை விட்டும் பாதுகாப்புத் தேடியிருக்கிறார்கள். வறுமைக்கான தீர்வு வெறுமனே பொருளாதாரப் பிராணியாக தன்னை மாற்றிக் கொள்வதல்ல. மாறாக அல்லாஹ்விடம் அதனைப் பொறுப்புச் சாட்டி படைத்தவனிடம் உதவியை எதிர்பார்த்து திருப்திப் பட்டார்கள்.

“இறைவா! நான் உன்னிடம் இறை நிராகரிப்பை விட்டும் வறுமையை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். மேலும் சிறுபிள்ளைத் தனமான முதுமையை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றேன். அத்துடன், கப்ருடைய வேதனையை விட்டும் உலகத்தின் பிரச்சினைகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்பைத் தேடுகின்றேன்’. (ஆதாரம்: முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலை மாலை ஓதும் பிரார்த்தனைகளிலும் தொழுகைக்குப் பின்னாலும் இந்த துஆவை ஓதியுள்ளார்கள். இதில் பல பயங்கரமான விடயங்கள் குறித்து பாதுகாப்பை தேடியிருப்பதனை காணலாம். அந்த பயங்கர அபாயங்களில் வறுமையும் ஒன்று என்பதனை விளங்கிக் கொள்ள முடியுமாகவுள்ளது.

அதிகமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த துஆவை ஓதியிருக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் பொருளாதார ரீதியில் பெரும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்ததாக வரலாற்றில் இல்லை. அப்படியானால் நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய வறுமை எதுவாக இருக்க முடியும்? நாம் பயப்படுகின்ற பொருளாதார வறுமை மட்டுமாக நிச்சயம் இருக்காது. உள்ளத்தில் போதுமென்ற மன நிலையைத் தான் இங்கு நபியவர்கள் வேண்டியிருக்க வேண்டும். இந்த நிலை இல்லாதபோது அது வறுமை நிலைதான் என்பதனை ஏனைய பல நபி மொழிகளில் விளக்கியுள்ளதை காண முடிகிறது.

ஒரு முஸ்லிம் மரணத் தருவாயில் இருக்கும் போது தன்னிடமிருக்கும் அனைத்து செல்வங்களையும் கொடுத்து விட்டு வருவதற்கு அவகாசம் கேட்பதனை நபிமொழிகள் சுட்டிக் காட்டுகின்றன. இருப்பினும் அந்த அவகாசம் அவனக்கு வழங்கப்படுவதில்லை. உலகில் போதாது என்று வறுமைப் பயத்துடன் தேடிய சொத்துக்களை ஒரே நிமிடத்தில் செலவழித்துவிட்டு வருவதாக ஒருவன் அவகாசம் கேட்பதாக இருந்தால், இது எவ்வளவு பயங்கரமான நிலையாக இருக்கும். வறுமைக்குப் பயந்து இவ்வுலகில் ஒரு பொருளாதாரப் பிராணியாக நாங்கள் சேர்த்த சொத்து பயனற்றது. எம்மை இவ்வுலகில் இயக்கிய வறுமைப் பயம் எவ்வளவு ஆபத்தானது, அர்த்தமற்றது என்பது இதில் புலப்படுகின்றது அல்லவா.

எனவே, இஸ்லாம் ஒரு நடு நிலையான வழிகாட்டலை சகல விடயங்களிலும் முன் வைக்கின்றது. அதனை மிகச் சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். எமது நலன்களுக்காக இஸ்லாத்தை வளைத்துப் போடக்கூடாது. இஸ்லாத்துக்கு நாம் சரியாக கட்டுப்பட வேண்டும். வறுமையை இல்லாமல் செய்வதற்கு இஸ்லாம் பல்வேறு திட்டங்களை முன்னிறுத்தியுள்ளது. ஸக்காத்தை ஸதகாவை அதிகம் தூண்டுகின்றது. இந்த திட்டங்களை நபியவர்களின் வழிகாட்டலில் முன்னெடுக்கும் போதே எம்மால் வெற்றியடைய முடியும். மாற்றம் காணலாம்.

போதுமொன்ற மனதை தன்னிடம் கொண்டு வரும் வரையில் வறுமையை ஒழிக்க முடியாது. இதற்கு சிறந்த வழி முறையை இஸ்லாம் கற்றுத் தருகின்றது. அல்லாஹ்வின் அருளை நினைப்பதற்கு உன்னைவிட குறைந்த அருளைப் பெற்றவனை உன் கண்முன் கொண்டு வந்திடு. உன்னை விட அதிகமாக அருள் கொடுக்கப்பட்டவனை நீ பார்த்து விடாதே! அப்போது உன்னால் திருப்திப்பட முடியாது! என்ற வழிகாட்டல் எவ்வளவு யதார்த்தமானது.

எடுக்கும் கரத்தை விட கொடுக்கும் கரம் சிறந்தது என்ற இஸ்லாத்தின் போதனையும் வறுமை ஒழிப்புக்கு வழி காட்டுகிறது. இதற்கும் வறுமைப் பயம் ஒருவனிடம் இல்லாமல் இருக்க வேண்டும்.

வறுமைப்பயம் என்பது ஒரு ஷைத்தானியத்தன உணர்வாகும். அது உங்களது நிம்மதியைப் போக்கி விடுகிறது. உலகாயத வாதியாக உங்களை அது மாற்றி விடுகின்றது. மறுமையையும் மௌத்துடைய (மரண) சிந்தனையையும் வெறுப்புக்குரியதாக்கி விடுகின்றது. கஞ்சத்தனம் குடிகொண்டவர்களாக மனிதர்களை இயக்கிவிடுகின்றது. தொழுகை முதல் ஏனைய இபாதத்துக்கள் அனைத்தும் ஒரு மனிதனிடம் ஏற்படுத்த விரும்பும் ஈகை, தியாகம் போன்ற தயாள குணங்களை சுட்டெரிக்கும் விறகாக இந்த வறுமைப் பயம் காணப்படுகின்றது.

வறுமையைப் போக்குவதற்கும் அது வராமல் பாதுகாத்துக் கொள்வதற்கும் சில அத்தியாயங்களை ஓதுமாறு நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். இதன் கருத்து அதனை ஓதுவதனால் வானத்திலிருந்தும், நிலத்துக்கடியிலிருந்தும் பணம் கொட்டும் என்பதல்ல. மாறாக அந்த ஸுரத்திலுள்ள மறுமைக் காட்சிகள் உள்ளத்தில் தாக்கம் செலுத்தி இவ்வுலக ஆசைகளின் யதார்த்தத்தை ஒவ்வொருவரும் விளங்கிக் கொள்ள வழி வகுக்கின்றது என்பதாகும்.

இதனடியாக உள்ளத்திலுள்ள வறுமை பற்றிய பயத்தை இல்லாமல் செய்து கொள்ளலாம். வறுமைப் பயம் இல்லாமல் மாறும் போது அவன் நிச்சயம் ஒரு செல்வந்தனாக மாறுகிறான் என்பதாகும். இதுமடடுமல்ல, அல்லாஹ் நாடினால் அதனை ஓதுபவருக்கு வானத்தைப் பிளந்து கொண்டும் கொடுக்க சக்தி படைத்தவன் என்பதுவும் மறுக்க முடியாத ஒரு நம்பிக்கையாகும்.

யா அல்லாஹ் வறுமையை விட்டும் எம்மைப் பாதுகாத்தருள்வாயாக! வறுமைப் பயத்தை எற்படுத்தும் ஷைத்தானை விட்டும் எம்மைப் பாதுகாத்தருள்வாயாக.

கஹட்டோவிட்ட ஆபூஷிபா

நவமணி இணையதளத்தில் வெளிவந்த கட்டுரை

source: http://islamakkam.blogspot.in/2013/08/blog-post_2746.html