Home கட்டுரைகள் சமூக அக்கரை இளைஞர்களது ஆளுமை விருத்தியும், எதிர்காலத்திற்கான ஆயத்தமும்
இளைஞர்களது ஆளுமை விருத்தியும், எதிர்காலத்திற்கான ஆயத்தமும் PDF Print E-mail
Wednesday, 23 November 2016 07:13
Share

இளைஞர்களது ஆளுமை விருத்தியும், எதிர்காலத்திற்கான ஆயத்தமும்

ஒரு சமூகம் பெற்றுள்ள பௌதீக வளங்கள், ஏனைய செல்வங்களை விட அதன் மனித வளமே ஒரு சமூகத்தின் நிலைபேறு, வளர்ச்சி, முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆதாரங்களுள் ஒன்றாக விளங்குகின்றது.

ஒரு சமூகத்தின் பௌதீக வளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு, நிர்மூலமாக்கப்பட்ட நிலையில்கூட, எஞ்சியுள்ள அதன் சிறிய மனித வளத்தை உரிய முறையில் பயன்படுத்தி, அந்த இழப்பை ஈடுசெய்து ஒரு சமூகமோ, நாடோ முன்னேற்றமும், வளர்ச்சியும் அடைய முடியும் என்பதற்கு ஜப்பான் நாடு ஒரு சிறந்த உதாரணமாகும்.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் பௌதிக வளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்ட நிலையில் அதன் மனித வளத்தை உரிய முறையில் பயன்படுத்தி அந்நாடு மிகக் குறுகிய காலப் பிரிவில் வியத்தகு வளர்ச்சியைக் கண்டது.

ஒரு சமூகத்தின் மனித வளத்தின் மிக முக்கிய அங்கமாக இளைஞர்கள் உள்ளனர். இளமை என்பது மனித ஆளுமையின் வளர்ச்சியில் ஒரு முக்கிய காலகட்டமாகும். மனிதனின் உடலும் உள்ளமும் பலமும் உறுதியும் பெற்றுள்ள, துடிப்பும் உற்சாகமும் உத்வேகமாக செயல்படுகின்ற, எதிர்காலத்தைப் பற்றி இலட்சியக் கனவுகள் காணுகின்ற உணர்வும், துடிப்புமிக்க பருவமாக இளமை உள்ளது.

அல்-குர்ஆன் பல்வேறு சந்தர்ப்பங்களில் இளைஞர்கள் பற்றியும், அவர்களது செயல்பாடுகள் பற்றியும் குறிப்பிடுகின்றது: ‘அவர் இளைஞராக இருக்கும்போதே நாம் அவருக்கு ஞானத்தை வழங்கினோம்’ (அல்-குர்ஆன் 21: 12)

-என யெஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இளைஞராக இருக்கும்போதே அவருக்கு நபித்துவப் பணியைச் சிறப்பாக மேற்கொள்ள அவசியமான அறிவுஞானத்தை வழங்கியதைக் அல்-குர்ஆன் குறிப்பிடுகின்றது.

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இளைஞராக இருக்கும்போதே இறைவனுக்கு இணைவைப்பதற்கு ஏதிராக போராட்டத்தை ஆரம்பித்ததைக் குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

‘அவர்கள் கூறினார்கள் இத்தகைய செயலை எமது தெய்வங்களை நிந்திக்கும் வகையில் புரிந்தவர் யார்? நிச்சயமாக அவர் அநியாயக்காரர்களில் ஒருவராவர். அப்போது அதனைக் கேட்டோர் கூறினார்கள், அந்த தெய்வங்கள் பற்றி ஓர் இளைஞர் பேசிக்கொண்டிருப்பதை நாங்கள் கேட்டோம். அவர் இப்ராஹீம் என அழைக்கப்படுகிறார்’ (அல்-குர்ஆன் 21: 59,60)

தூய்மையான ஏகத்துவக் கோட்பாட்டையும், விசுவாசத்தையும் பாதுகாத்துக்கொள்வதற்காக இணை வைப்பவர்களின் கொடுமைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு குகையில் தஞ்சம் புகுந்த இளைஞர்கள் பற்றி ஸூரா அல் கஹ்ப் பேசுகின்றது:

‘(நபியோ!) அவர்களுடைய உண்மையான சரித்திரத்தை நாம் உமக்குக் கூறுகிறோம்: நிச்சயமாக அவர்கள் சில வாலிபர்கள்ளூ அவர்கள் தங்கள் இறைவனை விசுவாசித்தார்கள். (ஆகவே, பின்னும்) பின்னும் நேரான வழியில் நாம் அவர்களைச் செலுத்தினோம்.’ (18:13)

‘அன்றி, அவர்களுடைய இருதயங்களையும் (நேரான வழியில்) நாம் ஸ்திரப்படுத்திவிட்டோம். (அக்காலத்திய அரசன், அவர்களை விக்கிரக ஆராதனை செய்யும்படி நிர்ப்பந்தித்த சமயத்தில்) அவர்கள் எழுந்து நின்று, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவன்தான் எங்கள் அறைவன். அவனையன்றி (வேறெவரையும் ஆண்டவன் என) நாங்கள் அழைக்க மாட்டோம். (அவ்வாறு அழைத்தால்,) நிச்சயமாக அடாத வார்த்தையைக் கூறியவர்களாவோம்’(அல்-குர்ஆன் 18:14) என்றார்கள்.

யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இளமைத் துடிப்பும், உணர்வும் மிக்க இளைஞராக இருந்த நிலையில் தனது மனோ இச்சையின் தூண்டுதலுக்கு ஆளாகாமல், தனது கீழான உணர்வுகளுக்கு எதிராகப் போராடி தனது கற்பொழுக்கத்தை பாதுகாத்துக்கொண்ட வரலாற்றை ஸூரா யூஸுப் விளக்குகின்றது.

உடல் துடிப்பும்- உணர்வுத் தூண்டுதல்களும் மிக்க இளமைப் பருவத்தை இறை திருப்தியைப் பெறும் வகையில், உணர்வுகளைக் கட்டுப்படுத்தி இறை வணக்கத்தில் ஈடுபட்ட இளைஞன், எத்தகைய நிழலுமற்ற மறுமை நாளில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் பாதுகாவல் பெறும் பாக்கியம் பெறுவான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

ஐந்து விடயங்களை ஐந்து விடயங்கள் உங்களுக்கு நேர முன்னர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்:

உங்கள் இளமையை முதுமை வந்தடைய முன்னரும், உங்களது உடல் ஆரோக்கியத்தை நோய் வர முன்னரும், உங்கள் ஓய்வை வேலைகளும் பொறுப்புக்களும் வர முன்னரும், உங்கள் வாழ்க்கையை மரணம் வந்தடைய முன்னரும், உங்களது செல்வத்தை வறுமை பீடிக்க முன்னரும் நன்மை புரிவதில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்ற நீண்ட ஹதீஸில் ஒருவனை முதுமை வந்தடைந்து, உடல் பலவீனமுற்று, நோய்களுக்கு ஆளாகி தளர்ந்த நிலையை அடைய முன்னர்- உடல் பலமும் உணர்ச்சித் துடிப்பும் மிக்க இளமைப் பருவத்தை நன்மை புரிவதில் பயன்படுத்திக் கொள்ளும்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆரம்பகால இஸ்லாமிய அழைப்புப் பணியும், பிற்காலத்தில் இஸ்லாத்தின் பரவலிலும் இளைஞர்கள் மிக முக்கிய பங்கு வகித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்லாத்தின் ஆரம்பப் பிரசாரத்தின் இரகசியக் களமாக பயன்படுத்திய ‘தாருல் அர்கமில்’ இளைஞர்கள் முக்கிய இடம் பெற்றனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறைதூது அருளப்பட்டபோது அவர்கள் நாற்பது வயதை அடைந்திருந்தார்கள். இளமைப் பருவம் அதன் பூர்த்தியை அடையும் நிலையில் இறைதூது அவர்களுக்கு வழங்கப்பட்டது. அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்போது நபியவர்களை விட மூன்று வருடங்கள் இளையவராக இருந்தார்கள். உமர் ரளியல்லாஹு அன்ஹு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டபோது அவர்கள் இருபத்தேழு வயதை அடைந்திருந்தார்கள். உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வயதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வயதை விடக் குறைவாகவே இருந்தது. அலி ரளியல்லாஹு அன்ஹு இவர்கள் அனைவரையும் விட மிக இளையவராக இருந்தார்கள். இவ்வாறே இஸ்லாத்தின் ஆரம்பகால வளர்ச்சிக்கு அரும் பங்களிப்புச் செய்த அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத், ஸஈத் இப்னு ஸெய்த், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப், பிலால் பின் ரபாஹ், முஸ்அப் பின் உமைர் போன்ற நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியிலும் அழைப்பிலும், பரப்புவதிலும் முக்கிய பங்கு கொண்டார்கள். சிரியா, எகிப்து, ஈராக், வட ஆபிரிக்கா, மத்திய ஆசியா போன்ற பிரதேசங்களை வெற்றி கொள்வதிலும், பாரசீக, ரோமப் பேரரசுகளின் ஆதிக்கத்தை முறியடித்து இஸ்லாமிய சாம்ராச்சியத்தைக் கட்டி எழுப்புவதிலும் இளைஞர்கள் ஆற்றிய பங்கு காத்திரமானது.

வட ஆபிரிக்காவை வெற்றிகொண்ட பதினெட்டு வயதுடைய இளைஞரான உகபா பின் நாபிஃ, வட ஆபிரிக்காவைத் தாண்டி தனது படையை முன்னெடுத்துச் செல்ல அத்திலாந்திக் சமுத்திரம் தடையாக இருந்ததை அவதானித்தார். அந் சமுத்திரத்தை நோக்கி அந்த இளைஞனின் உணர்ச்சிக் குமுறல் பின்வரும் வார்த்தைகளில் வெளிப்பட்டது.

‘முஹம்மதின் இரட்சகன் மீது சத்தியமாக இந்த சமுத்திரம் மட்டும் எனக்குத் தடையாக இருக்காவிட்டால் அதனையும் தாண்டி இஸ்லாத்தின் தூதைச் சுமந்து சென்றிருப்பேன்! இறைவா எனது இந்த வார்த்தைகளுக்கு நீயே சாட்சியாக இருப்பாயாக’ உகபாவின் இந்த வார்த்தைகள் அவரின் அர்ப்பணத்தையும் வீர உணர்வையும் தியாக சிந்தையையும் சிறப்பாகப் புலப்படத்துகின்றது. இது போன்று, சிந்துப் பிரதேசத்தை வெற்றிகொண்ட மூஸா பின் நுஸைர், ஸ்பெயினை வெற்றி கொண்ட தாரிக் பின் ஸியாத் ஆகியோர் இளைஞர்களாவர்.

இவ்வாறு இஸ்லாமிய வரலாற்றில் இளைஞர்கள் மிகச் சிறப்பான பங்களிப்பைச் செய்ய மூலகாரணம் அவர்களது சிந்தனையும், உணர்வுகளும் சரியான முறையில் நெறிப்படுத்தியமையாகும். ஜாஹிலிய்யாக் காலப் பிரிவில் தவறான வழிகளில் செலுத்தப்பட்ட இளைஞர்களின் உணர்வுகளும், சிந்தனையும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழங்கிய பண்பாட்டுப் பயிற்சியின் காரணமாக சரியான வழியில், ஆக்கபூர்வமான வகையில் நெறிப்படுத்தப்பட்டது. இந்த நெறிப்படுத்தலின் விளைவே அம்ரு இப்னு ஆஸ், காலித் பின் வலித், அபூ உபைதா, முஸ்அப் பின் உமைர் போன்ற உடல் பலமும், மன உறுதியும் ஆழமான இறைவிசுவாசமும், அர்ப்பணமும் கொண்ட இஸ்லாமிய இளம் ஆளுமைகளின் தோற்றத்திற்குக் காரணமாக அமைந்தது.

இளமை என்பது மனித ஆளுமையின் முக்கியமான ஒரு வளர்ச்சிக் கட்டமாக அமைவதால், துடிப்பும் உற்சாகமும் மிக்க இலட்சியக் கனவுகள் காணுகின்ற, எந்த ஒரு கொள்கைக்கும் தன்னை அர்ப்பணிக்கும் சிந்தனைப் பாங்கு கொண்ட இந்தப் பருவத்தில் உள்ள இளைஞர்கள் சரியான வழியில் நெறிப்படுத்தப்படல் மிக அவசியமாகும். ஏனெனில் இளமைப் பருவத்தில் இளைஞர்களின் உணர்வுகளும், மனப்பாங்கும், சிந்தனையும், செயல்பாடும் தவறான வழியில் நெறிப்படுத்தப்பட்டால் அது பெரும் அழிவு சக்தியாக மாறி சமூக ஆரோக்கியத்தையே பாதித்து சமூகக் கட்டுக்கோப்பையே சீர்குலைத்துவிடும்.

ஒரு இளைஞனின் ஆளுமையை சிறுவயது முதல் ஆரோக்கியமான வகையில் வளர்ச்சியடையச் செய்வதில் குடும்பம் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. குடும்பம் என்பது ஒரு சிறு சமூகமாக உள்ளது. குடும்பத்தின் வீட்டுச் சூழல் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்களின் ஆளுமை வளர்ச்சியில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. கணவன்- மனைவியிடையே நல்லுறவு காணப்படாத, எப்பொழுதும் சண்டையும் சச்சரவும் நிறைந்த குடும்பங்களிலிருந்தே கல்வியில் ஆர்வமற்ற, போதைப்பொருள் பாவனை போன்ற குற்றங்கள் புரிகின்ற, தவறான ஒழுக்க நடத்தையுள்ள இளைஞர்கள் உருவாகின்றனர். Broken homes என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற சீர்குலைந்த குடும்ப அமைப்பின் உருவாக்கமே இத்தகைய இளைஞர்களாவர். எனவே இளைஞர்கள் சரியான வழியில் நெறிப்படுத்தப்படவும், அவர்களது ஆளுமை ஆரோக்கியமான வளர்ச்சியைக் காணவும் உறுதியான, ஆரோக்கியமான குடும்பக் கட்டுக்கோப்பு வீட்டுச் சூழல் மிக அவசியமாகும்.

இளமைப் பருவமே மனித உடல், உள வளர்ச்சியில் பல மாற்றங்கள் நிகழும் காலகட்டமாகும். இக்காலகட்டத்தில் இளைஞர்கள் உளரீதியான சில பிரச்சினைகளை எதிர்நோக்க வாய்ப்புள்ளது. சில போது வீட்டுச் சூழல் நல்லதாக அமைந்த போதும், பாடசாலைச் சூழல், சமூகச் சூழலின் பாதகமான சில தாக்கங்கள் காரணமாக ஓர் இளைஞனின் உணர்வு ரீதியான பிரச்சினைகள், நடத்தைப் பிறழ்வுகள் தோன்றலாம். இத்தகைய செயல்பாட்டை புரிந்துகொண்டு செயல்படும் தன்மை பெற்றோர்களில் காணப்படல் வேண்டும்.

இன்று நாம் வாழும் புறச் சமூக அமைப்பு ஓர் ஆரோக்கியமான இஸ்லாமிய ஆளுமையின் வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் ஒரு சவாளாகவே உள்ளது. இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள், விழுமியங்கள், பெறுமானங்களுக்கு எதிரான பேரலைகள், ஆர்த்தெழுகின்ற, தொடர்பு சாதனங்களின் மலிவான நிகழ்ச்சிகளின் தாக்கம் மிக உக்கிரமாக செயல்படுகின்ற, சந்தைப் பொருளாதாரத்தின் விளம்பரக் கலாசாரம் ஆதிக்கம் செலுத்துகின்ற இக்காலப் பிரிவில் பெற்றோர்களின் பொறுப்பு மிகப் பாரதூரமானது. ஆனால், இன்னொரு வகையில் நோக்கும்போது இந்த ஆபத்தை உணருகின்ற அறிவுபடைத்த பெற்றோர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். இந்நிலையில் முஸ்லிம் சமூகத்திலுள்ள இஸ்லாமிய அமைப்புக்களின் பொறுப்பு மிகப் பெரியது. இளைஞர்களும், பெற்றோர்களும் இத்துறையில் சரியான முறையில் வழிகாட்டும் பொறுப்பு இந்த அமைப்புகளைச் சாருகின்றது.

குடும்ப வாழ்வின் ஆரோக்கியத்திற்கும், இளைஞர்களின் ஆரோக்கியமான ஆளுமை வளர்ச்சிக்கும் சவாலாக அமையும் விடயங்கள் பற்றி பெற்றோர்களுக்கும் இளைஞர்களுக்கும் இக்காலத்தில் அறிவூட்டி வழிகாட்டும் மாபெரும் பொறுப்பை இந்த இஸ்லாமிய அமைப்புகள் நிறைவேற்றுதல் வேண்டும். அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் இதனை சமூகத்தின் ஒரு பொதுப் பிரச்சினையாகக் கருதி, தங்கள் வளங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி இப்பணியில் ஈடுபடல் வேண்டும்.

மக்களின் எண்ணங்கள், விருப்பு வெறுப்புக்கள், சிந்தனைப் பாங்கு ஆகியவற்றை உருவாக்குவதில் நவீன தொடர்புச் சாதனங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன.

மூன்றாம் உலக நாடுகளில் மேற்கத்திய பெறுமானங்களைத் திணித்து, இந்நாடுகளின் தேசிய கலாசாரங்கள், பன்மைத்துவம், பண்பாட்டுப் பாரம்பர்யம் ஆகியவற்றைச் சிதைத்தும், அழித்தும், மேற்கத்திய கலாசாரப் பண்பாட்டின் விழுமியங்களின் அடிப்படையில் மக்களின் சிந்தனைப் பாங்கு நடைமுறைகள் உருவாக்குவதில் ஊடகங்கள் மிகப் பெரும் பங்கை வகிக்கின்றன. இந்த ஊடகக் கலாசாரத்திற்கு முஸ்லிம்கள், குறிப்பாக இளைஞர்கள் பலியாகி வருவதை இன்று நாம் நிதர்சனமாகக் காணமுடிகின்றது. இந்த வகையில் ஆளுமையில் ஊடகத்தின்- குறிப்பாக இலத்திரணியல் ஊடகத்தின் செல்வாக்குத் தாக்கம் பற்றி அவற்றின் சாதகமான விடயங்களிலிருந்து பயன் பெற்று பாதக விளைவுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் முறைகள் பற்றியும் இளைஞர்களுக்கும் ஏன்? முதியோர் உட்பட அறிவூட்டப்படல் வேண்டும்.

நவீன இயந்திர நாகரீகம் நுகர்வுப் பொருளாதாரம், மேற்கத்திய பெறுமானங்கள் பற்றி சரியான தெளிவு வழங்கப்பட்டு இளைஞர்கள் நெறிப்படுத்தப்படல் வேண்டும்.

இன்று மேற்கத்திய ஊடகங்கள் முஸ்லிம் உலகில் நிகழும் போர்கள் அழிவுகள் பற்றி மிக நுட்பமான பிரசுரங்களை மேற்கொண்டு- மேற்கின் ராணுவ, அரசியல், அறிவியல், தொழில்நுட்ப பலத்தின் முன் முஸ்லிம் உலகத்தின் பலவீனத்தை- இயலாமையை எடுத்துக்காட்ட மிகத் திட்டமிட்டு செயல்படுகின்றன. இதன் மூலம் வரலாற்றில் இஸ்லாத்தின் அத்தியாயம் முடிவடைந்துவிட்டது- எதிர்காலம் மேற்கிற்கே என்ற மன உணர்வினை தோற்றுவிக்க முனைகின்றனர். The new Amarican century – அமெரிக்காவின் புதிய நூற்றாண்டு என்ற ஜொர்ஜ் புஷ்ஷின் பிரசார கோசமும், புகயாமாவின் (Fukayama) வரலாற்றின் முடிவு- End of History என்ற நூலும் மேற்கின் இந்த பெருமையையும், கர்வம் நிறைந்த பிர்அவ்னிய சிந்தனையின் வெளிப்பாடாகும்.

மேற்கத்திய ஊடகத்தின் இந்த பிரசார முயற்சிகளும், மேற்குலகத் தலைவர்களின் அகந்தை மிக்க ஆக்கிரமிப்புத் தொனியும், முஸ்லிம்களை- குறிப்பாக இளைஞர்களை மானசீக ரீதியாகப் பலவீனப்படுத்தி- இஸ்லாத்தின் எதிர் காலம் பற்றி நம்பிக்கையிழக்கச் செய்யும் முயற்சியாகும். மானசீக ரீதியான தோல்வி ராணுவ ரீதியான தோல்வியை விட பகிரங்கமானது. எனவே முஸ்லிம் இளைஞர்கள் இஸ்லாத்தின் எதிர்காலத்தில் நம்பிக்கையிழக்காது துணிவுடன் எதிர்காலத்தை நோக்கும் உளப்பண்பு அவர்களில் உருவாக்கப்படல் வேண்டும். சர்வதேச ரீதியாக மட்டுமன்றி தேசிய ரீதியாகவும், முஸ்லிம் சமூகம் இந்நாட்டில் எதிர்நோக்கும் அறைகூவல்களை எதிர்கொள்வதற்கு திட சித்தமும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் பெற்ற மனநிலை மிக அவசியமாகும்.

முஸ்லிம் இளைஞர்கள், கல்வித்துறையில் எதிர்நோக்கும் மிக முக்கிய பிரச்சினை சரியான வழிகாட்டலின்மையாகும். உயர் கல்வித்துறையில் அவர்களுக்குச் சரியான, தெளிவான, ஆக்கபூர்வமான வழிகாட்டல்கள் வழங்கப்படல் வேண்டும். இத்துறையில் காத்திரமான சில முயற்சிகள் மேற்கொள்ளப்ப டுவதை இன்று ஓரளவு காணமுடிகின்றது.

கால நிர்வாகம், நேரத்தின் பயன்பாடு பற்றிய சரியான உணர்வு பெரும்பான்மையான முஸ்லிம் இளைஞர்கள்பால் காணப்படு வதில்லை. இன்று நவீன மனிதனின் காலத்தை எத்தகைய பயனுமற்ற வழியில் வெறுமனே கழிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. நவீன தொடர்பு சாதனங்கள் இதற்கான பல வழிகளை வணிக நோக்கில் திறந்துவிட்டிருக்கின்றன. எனவே காலத்தைப் பயன்தரும் வகையில் செலவழிப்பதன் முக்கியத்துவமும் அது ஒருவனின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் காத்திரமான செல்வாக்கும் உணர்த்தப்படுவதோடு, காலத்தை வீணாகக் கழிப்பதன் பாதகமான விளைவுகள் குறித்தும் இளைஞர்கள் அறிவுறுத்தப்படல் வேண்டும்.

முஸ்லிம் இளைஞர்களிடையே வாசிப்புப் பழக்கம் மிகக் குறைவாகக் காணப்படுவது நேரத்தை பயனற்ற வழிகளில் கழிக்க ஒரு முக்கிய காரணமாக விளங்குகின்றது. இந்த வகையில் வாசிப்புத் துறையில் முஸ்லிம் இளைஞர்கள் தூண்டப்படல் வேண்டும். இது உண்மையில் முஸ்லிம் சமூகம் மிக அவசரமாக வேண்டி நிற்கும் ஒரு பணியாகும். தங்களது காலத்தைப் பயன்தரும் வகையில் கழிக்கவும், சிந்தனைத் தெளிவு பெறவும், சமகால உலகைப் புரிந்துகொள்ளவும், அறிவு விசாலமடைந்து பரந்த கண்ணோட்டம் ஏற்படவும் வாசிப்பு துணைபுரியும்.

முஸ்லிம் இளைஞர்களின் ஒழுக்க, ஆத்மிக ஆளுமையின் வளர்ச்சியில் மிக முக்கிய கவனமும் அவதானமும் செலுத்தப்பட வேண்டிய காலகட்டமாக நாம் வாழும் யுகம் உள்ளது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டவாறு, நவீன தொடர்புச் சாதனைகள் இளைஞர்களின் சிந்தனைப் பாங்கில் மட்டுமன்றி, அவர்களது ஒழுக்க ஆளுமையிலும் மிகப் பாரதூரமான தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன.

ஒரு நாகரிகத்தின் பண்பாட்டின், சமூகத்தின் அழிவுக்கு ஒழுக்கச் சீர்கேடு முக்கிய காரணியாக விளங்குவதை அல்-குர்ஆன் பல்வேறு சந்தர்ப்பங்களில் உணர்த்துகின்றது. சமூகங்களின் எழுச்சி, தேக்க வீழ்ச்சி பற்றிய இந்த யதார்த்தத்தை மனித வரலாறு உறுதிப்படுத்துகின்றது. ஆரோக்கியமான சமூக அமைப்பிற்கும் நிலைபேற்றிற்கும் ஒழுக்க ரீதியாக பண்பாடு பெற்ற இளைஞர்களின் உருவாக்கம் மிக அவசியமாகும்.

மேலே நாம் மிகச் சுருக்கமாகத் தொட்டுக் காட்டிய, முஸ்லிம் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஈடுகொடுப்பதற்கு இளைஞர்கள் ஆயத்தப்படல் மிக அவசியமாகும். இஸ்லாம் திட்டமிடல் பற்றி வலியுறுத்துவதுடன், முஸ்லிம் சமூகம் தனக்கு எதிராகத் தொகுக்கப்படும் சவால்களைச் சமாளிக்க தனது எல்லா சக்திகளையும் பயன்படுத்தி ஆயத்த நிலையில் இருக்கும் படியும் கூறுகின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலப் பிரிவில் முஸ்லிம்கள் ராணுவ ரீதியான சவாலை எதிர்நோக்கினர். இந்த சவாலுக்கு எதிராக முழு ஆயத்தத்தையும் மேற்கொள்ளும்படி குர்ஆன் குறிப்பிட்டது:

‘அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்தையும், (திறமையான) போர்க் குதிரைகளையும், உங்களுக்குச் சாத்தியமான அளவு நீங்கள் (எந்நேரமும்) சித்தப்படுத்தி வையுங்கள். இதனால் அல்லாஹ்வுடைய விரோதியையும், உங்களுடைய விரோதியையும் நீங்கள் பயப்படச் செய்யலாம். இவர்களன்றி (விரோதிகளில்) வேறு சிலர் இருக்கின்றனர். அவர்களை நீங்களறிய மாட்டீர்கள்ளூ அல்லாஹ்தான் அவர்களை அறிவான். (இதனால் அவர்களையும் நீங்கள் திடுக்கிடச் செய்யலாம். இதற்காக) அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் எதைச் செலவு செய்த போதிலும் (அதன் கூலியை) உங்களுக்குப் பூரணமாகவே அளிக்கப்படும்ளூ (அதில்) ஒரு சிறிதும் உங்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது’. (அல்குர்ஆன் 8:60)

இங்கு அல்-குர்ஆன் குறிப்பிடும் ஆயத்தம் என்ற பதம், நவீன கால சவால்களை கருத்தில் கொண்டு விரிவான கருத்தில் நோக்கப்படல் வேண்டும். இன்று ராணுவ ரீதியான சவால்களோடு இணைந்து சிந்தனா ரீதியாக, கருத்து ரீதியாக, உளரீதியாக, ஒழுக்கரீதியாக விடுக்கப்படும் சவால்கள் முஸ்லிம் உம்மத்தை நோக்கி நவீன தொடர்புச் சாதனங்களைப் பயன்படுத்தி தொடுக்கப்படுகின்றன. இந்நிலையில் இச்சவால்களைச் சமாளிக்க சிந்தனா ரீதியாகவும் (இஃதாதுல் பிக்ரி), உள ரீதியாகவும் (இஃதாதுந் நப்ஸீ) ஒழுக்க ரீதியாகவும் (இஃதாதுல் குல்கீ) முஸ்லிம் சமூகம்- குறிப்பாக இளைஞர்கள் ஆயத்தப்படல் வேண்டும். இதற்கான திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டு, எல்லா மட்டங்களிலும் செயல்படுத்தப்படல் வேண்டும். இளைஞர் அமைப்புக்கள், கல்விக் கூடங்கள், சமூக சேவைச் சங்கங்கள் இதனை ஒரு முன்னுரிமையாகக் கொள்ளுதல் வேண்டும்.

இளைஞர் ஒன்றுகூடல்கள், செயலமர்வுகள், கருத்தரங்குகள் இத் தொனிப் பொருளில் நடாத்தப்பட்டு, முஸ்லிம் இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி உணர்த்தப்பட்டு அவர்களது இஸ்லாமிய ஆளுமை பாதுகாக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

முஸ்லிம் இளைஞர்கள் எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும், அவர்களை நோக்கி மிகப் பிரகாசமான இஸ்லாத்தின் எதிர்காலம் காத்துள்ளது. உலகளாவிய இஸ்லாமிய மறுமலர்ச்சியில் பங்குகொண்டு உழைக்கும் ஈமானிய உணர்வை, அறிவாளுமையை,இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளால் ஒளியூட்டப்பட்ட உள்ளங்களை அல்லாஹ் முஸ்லிம் இளைஞர்களுக்கு வழங்கி எதிர்கால முஸ்லிம் உம்மாவைக் கட்டிஎழுப்பும் பங்காளர்களாக அவர்களை ஆக்க வேண்டும்.

அல்லாமா இக்பால் முஸ்லிம் இளைஞனில் வைத்துள்ள ஆழமான நம்பிக்கையை பின்வருமாறு வெளிப்படுத்துகின்றார்,

நட்சத்திரத்தை நோக்கி தனது கணையைத்

தொடுக்கும் இளைஞனை நேசிக்கிறேன்

இறைவா, முஸ்லிம் இளைஞனுக்கு எனது

அதிகாலைப் புலம்பல் போன்ற உணர்ச்சியை வழங்குவாயாக!

பூமியில் உள்ள அந்த ராஜாளிக்கு

வானின் உச்சியை நோக்கிப்

பறக்கும் இறக்கைகளை மீண்டும்

வழங்குவாயாக!

source: http://drshukri.net/