Home இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்!
இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்! PDF Print E-mail
Friday, 11 November 2016 07:54
Share

இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்!

      மவ்லவி யூனுஸ் தப்ரீஸ்       

ஷாஃபிஈ   இமாமின் பெயரால் அல்லது ஷாஃபிஈ   மத்ஹபின் பெயரால் இப்படி தான் செய்ய வேண்டும் என்று சொல்லக் கூடிய நல்லுள்ளம் படைத்தவர்களுக்கு இது ஒரு நற் செய்தியாக அமையட்டுமாக!

குர்ஆன் அல்லது ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டினாலும், இல்லை நாங்கள் ஷாஃபி மத்ஹபு, அந்த மத்ஹபின் அடிப்படையில் தான் அமல்களை நடை முறைப்படுத்துவோம். என்று பிடிவாதம் பிடிக்க கூடியவர்கள் பின் வரும் இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் சொற்களை நடைமுறைப்படுத்துவார்களா? அல்லது இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களையும் ”வஹாபி” பட்டியலில் சேர்த்து விடுவார்களா?

அவர்கள் சொன்ன சில சட்டங்களை பார்ப்பதற்கு முன், இமாம் அவர்களால் முன் வைக்கப்பட்ட சொந்த கருத்துக்களை கவனிப்போம்.

”என்னுடைய கிதாபுகளில் நபிகளாருக்கு மாற்றமான செய்திகளை நீங்கள் பெற்றுக் கொண்டால் நான் சொன்னதை விட்டு விட்டு, நபிகளார் சொன்னதையே சொல்லுங்கள். (கிதாபுல் மஜ்மூஃ பாகம் 1 பக்கம் 63)

”ஹதீஸ் ஸஹீஹானால் அதுவே என் மத்ஹபாகும். (கிதாபுஷ்ஷஅரானி பாகம் 1 பக்கம் 57 )

நபிகளாரை தொட்டும் வந்த செய்திகளே எனது சொல்லாகும். அதை என்னிடமிருந்து நீங்கள் கேட்கவில்லையானாலும் சரியே ! (இப்னு அபீ ஹாதிம் பக்கம் 93,94)

நான் ஏதாவது ஒன்றை சொல்லி நான் சொன்னதற்கு மாற்றமாக நபிகளாரின் வழிமுறை இருந்தால், நபிகளாரின் சொல் மிக ஏற்றமானதாகும். ஆகவே என்னை பின்பற்ற வேண்டாம். (இப்னு அபி ஹாதிம் பக்கம் 93)

நான் சொன்ன ஒவ்வொரு தீர்ப்புக்கும் மாற்றமாக ஹதீஸ் கலை வல்லுனர்களிடம்,நபிகளாரின் ஹதீஸ் தரிப்பட்டு விட்டால் நான் சொன்ன தீர்ப்பை விட்டும் இவ்வுலகிலும், மறுவுலகிலும் நான் மீளக்கூடியவனாக உள்ளேன்.(இஃலாமுல் முவக்கிஈன் பாகம் 2 பக்கம் 363)

நான் சொன்னதற்கு மாற்றமாக நபிகளாரின் ஹதீஸ் தரிப்பட்டு விட்டதை நீங்கள் கண்டால் என்னுடைய சிந்தனை போய் விட்டது என்பதை (மக்களே) நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.” ( ஆதாபுஷ் ஷாபிஈ பக்கம் 93)

யாராவது ஒருவருக்கு நபிகளாரை தொட்டும் ஒரு ஸுன்னத் (வழிமுறை) தெளிவானால் அதை யாருடைய சொல்லுக்காக வேண்டியும் விடுவது ஹலாலாக மாட்டாது. என்பது முஸ்லி்ம்கள். அனைவரும் ஏகோபித்த முடிவாகும். (ஈகாழு ஹிமமி உலில் அப்ஸார் பாகம் 1 பக்கம் 103)

மேற்குறிப்பிடப்பட்டுள்ள இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கூற்றுக்களைப் பார்க்கும் போது உண்மையிலேயே அவர்கள் இந்த இஸ்லாமிய மார்க்கத்தை துாயவடிவில் உள்ளதை உள்ளபடி விளங்க வேண்டும் என்பதில் எவ்வாறு கவனம் செலுத்தியுள்ளார்கள்என்பதை தெட்டத் தெளிவாக விளங்க முடிகின்றது.

இது இவ்வாறு இருக்க போலி சடங்குகளை எல்லாம் இமாம் ஷாபிஈ இமாமின் மீது, அல்லது ஷாபிஈ மத்ஹபின் மீது சுமத்தாட்டுவது தான் மிக வேதனைக்குறிய விடயமாகும்.

எனது கருத்துக்களை விட ஹதீஸிற்குதான் அதி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று இமாம் அவர்களே சொல்லியிருப்பது உங்களுக்கு போதாதா? ஏன் வரட்டு பிடிவாதம் பிடிக்கிறீர்கள்.

ஷாஃபிஈ இமாம் அவர்கள் சட்ட ரீதியாக சொன்ன தீர்ப்புகளை அலசுவோம்.!

ஜூம்ஆவுக்கு ஒரு பாங்கு ?

ஜூம்ஆடைய தினத்தில் இமாம் பள்ளியில் நுழைந்து அவர் குத்பா பிரசங்கம் செய்யுமிடத்தில் உட்காரும் போது அதான் சொல்லப்படுவதையே நான் விரும்புகிறேன். அவ்வாறே இமாம் உட்கார்ந்தால் முஅத்தின் அதான் சொல்ல ஆரம்பிப்பார். அதான் முடிந்தவுடன் இமாம் பிரசங்கம் நடத்துவார்.

மேலும் ஜூம்ஆடைய அதானை பொருத்தவரை நபிகளாரின் காலத்திலும், அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்திலும் இமாம் மிம்பரில் உட்கார்ந்த பின்பே அதான் சொல்லப்பட்டது

பிறகு உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு காலத்தில் மக்கள் தொகை அதிகமான போது, இரண்டாவது அதான் சொல்ல ஏவப்பட்டது. தொடர்ந்தும் அவ்வாறே இருந்தது.

மேலும் அதாஃ என்ற தாபிஈ உஸ்மான் அவர்கள் தான் இந்த அதானை ஏற்படுத்தினார்கள் என்பதை மறுத்து முஆவியா தான் இதை ஏற்ப்படுத்தினார் என்று கூறுபவராக இருந்தார். அவை எவ்வாறு இருந்தாலும் நபியவர்களின் காலத்தில் காணப்பட்ட விடயமே (ஒரு அதானே) எனக்கு மிக விருப்பமானதாகும். (கிதாபுல் உம்மு பாகம் 1 பக்கம் 224)

ஐவேளை தொழுகையின் பின் துஆ...

தொழுது முடித்தபின் இமாமும், மஃமூம்களும் அமைதியாக திக்ரு செய்வதை நான் தேர்ந்தெடுக்கின்றேன்.ஆனால் மஃமூம்கள் அந்த இமாமிடமிருந்து (திக்ருகளை, துஆக்களை) கற்றுக்கொள்வதாக இருந்தால் மாத்திரம் இமாம்சத்தமிட்டு கூறலாம். மஃமூம்கள் (திக்ருகளை, துஆக்களை) கற்றுக்கொண்டு விட்டதாக அறிந்தால் இமாம் அமைதியாக ஓதுவார். ஏனெனில் அல்லாஹ் குர்ஆனில் “உங்களுடைய பிரார்த்தனையை சப்தமிட்டு செய்யாதீர்“என்று குறிப்பிட்டுள்ளான். அதாவது அல்லாஹ் துஆவை அதிகமாக அறிந்தவன். எனவே சப்தமிட்டு செய்யவும் வேண்டாம், இன்னும் உங்களுக்கு கேட்காத அளவிற்கு இரகசியமாகவும் செய்யவும் வேண்டாம். (கிதாபுல் உம்மு பாகம் 1 பக்கம் 150)

ஜனாஸாவின் கைகளை எவ்வாறு வைப்பது...?

இறுதியாக மைய்யித்தை கழுவியதன் பின் அம்மைய்யித்தின் இரு கைகளையும் மடித்து விரிக்கப்பட வேண்டும். பின்பு அவ்விரு கைகளையும் நீட்டி வைக்கப்பட்டு விலாப்புறத்துடன் சேர்த்து வைக்கப்படவேண்டும். (கிதாபுல் உம்மு பாகம் 1 பக்கம் 321)

மரண வீட்டாருக்கு உணவு..?

மைய்யித்தின் வீட்டில் அயலவர்கள் அல்லது அவர்களின் உறவினர்கள் மரணமாகியவரின் குடும்பத்தாருக்கு அன்றை நாள் பகலிலும், இரவிலும், அவர்களுக்கு போதுமான உணவை தயாரித்துக் கொடுப்பதை நான் விரும்புகிறேன்.ஏனெனில் அது சுன்னத்தாகும். (கிதாபுல் உம்மு பாகம் 1 பக்கம் 317)

மரண வீட்டில் (கத்த) சாப்பாடு...?

நான் துக்கச் சாப்பாட்டை வெறுக்கிறேன்.அது ஒரு கூட்டம் அவர்களுக்காக அழவில்லையானாலும் சரியே ! ஏனெனில் அது (துக்கச்சாப்பாடு) கவலையை புதுபிக்கின்றது. மேலும் வீண் செலவுகளை ஏற்ப்படுத்துகின்றது. (கிதாபுல் உம்மு பாகம் 1 பக்கம் 318)

கப்ரை எந்த அளவு உயர்த்த வேண்டும்...?

நான் விரும்புவதெல்லாம் நிலமட்டத்திலிருந்து ஒரு சாண் அளவு கப்ரை உயர்த்துவதாகும்.அல்லது அது போன்ற அளவு உயர்த்துவதாகும். (கிதாபுல் உம்மு பாகம் 1 பக்கம் 316, 322)

கப்ரை சமப்படுத்துதல்...?

கப்ரை சமப்படுத்தி வைக்க வேண்டும் அவ்வாறு தான் நபியவர்கள் தனது மகன் இப்றாகீமுடைய கப்ரை சமப்படுத்தி அதன் மீது (அடையாளத்திற்கு) கல் ஒன்றை வைத்தார்கள். என்ற செய்தி எங்களுக்கு கிடைத்தது. (கிதாபுல் உம்மு பாகம் 1 பக்கம் 311, 322)

நபியவர்களின் கப்ரு...?

நான் நபியவர்களின் கப்ரையும், அபூ பக்ர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கப்ருகளை சமப்படுத்திய நிலையிலேயே தான் நான் கண்டேன். என்று காஸிமிப்னு முஹம்மத் சொன்ன செய்தி எங்களுக்கு கிடைத்தது. (கிதாபுல் உம்மு பாகம் 1 பக்கம் 311)

முக்கோண வடிவ கப்ரு...?

கப்ரை முக்கோண வடிவில் வைக்க வேண்டும் என்று சிலா் கூறுகின்றனர். ஆனால் முஹாஜிரீன்கள், அன்சாரிகளின் கப்ருகள் எங்களிடத்தில் சமப்படுத்தப்பட்டதாகவே இருக்கின்றன. எனவே நில மட்டத்திலிருந்து ஒரு சாண் அளவு கப்ரு உயர்த்தப்பட வேண்டும். (கிதாபுல் உம்மு பாகம் 1 பக்கம் 311)

கப்ரை கட்டுவதும், பூசுவதும்...?

கப்ருகள் கட்டப்படாமல் இருப்பதையும், பூசப்படாமல் இருப்பதையும் நான் விரும்புகிறேன். ஏனெனில் அப்படி செய்வது ஆடம்பரத்திற்கும். அழகு படுத்தலுக்கும் ஒப்பாகி விடும்.இன்னும் மரணம் என்பது அவ்விரண்டிற்கும் உரிய இடமில்லை. மேலும் முஹாஜிரீன்கள், அன்சாரிகளின் கப்ருகள் நிறந்தீட்பபட்டதாக நான் காணவில்லை. (கிதாபுல் உம்மு பாகம் 1 பக்கம் 316)

மதிப்புக்குரிய மௌலவிமார்களே ! இலங்கை நாட்டில் சுமார் 1200 வருடங்களாக ஷாபிஈ மத்ஹபை அடிப்படையாக கொண்டு தான் சட்டமும் தீர்ப்பும் வழங்கப்படுகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கும் உங்களுக்கு இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சொல்லிக் காட்டிய இப்படியான சட்டங்கள் தெரியுமா? அல்லது தெரிந்தும் பொதுமக்களுக்கு சொல்லாமல் மறைத்து விட்டீர்களா?

1437 வருடங்களாக இருந்து வரும் குர்ஆன், மற்றும் ஹதீஸ் என்ற கொள்கையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதனால் அவைகளை தொடர்ந்து படித்து வருகிறோம். ஷாபிஈ மத்ஹபினர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கிதாபான உம்முவை படித்திருக்கிறீர்களா ? அதில் சொல்லப்பட்ட சட்டங்களை மக்களுக்கு தெளிவு படுத்தியுள்ளீர்களா ? அல்லது சும்மா வெறுமனே நாங்கள் ஷாபி மத்ஹபு என்று மழுப்புகிறீர்களா ?

உண்மையாக நீங்கள் ஷாபிஈ இமாமை விரும்பக்கூடியவர்களாக இருந்தால், இந்த செய்திகளை ஒரு தரம் உறுதி செய்து விட்டு உடனே நீங்கள் முதலில் நடைமுறைப்படுத்துவதோடு, பொதுமக்களுக்கும் எத்தி வையுங்கள்.

அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !

நீங்கள் சொல்கிறீர்களோ இல்லையோ இன்ஷா அல்லாஹ் இப்படியான தெளிவுகளை நாங்கள் மக்களுக்கு எடுத்துக் காட்டி அவர்கள் செய்து கொண்டிருக்கும் மார்க்க ரீதியான தவறுகளை சுட்டிக்காட்ட உள்ளோம். மேலும் இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களால் சொல்லப்பட்ட இப்படியான சட்டங்கள் தொடா்பான செய்திகள் பாகம்,மற்றும் பக்கங்களோடு, உங்களுக்கும் பொது மக்களுக்கும் தொடர்ந்தும் எடுத்துக் காட்ட உள்ளோம்.

source: http://www.islamkalvi.com/?p=109126