இஸ்லாம் கூறும் திருமணம் ‘காதல்’ அல்ல ‘விருப்பம்’ |
![]() |
![]() |
![]() |
Tuesday, 04 October 2016 07:42 | |||
இஸ்லாம் கூறும் திருமணம் ‘காதல்’ அல்ல ‘விருப்பம்’ கேப்டன் சேக்காதி காமப்பசி வயிற்றைப் பிசையும் போது அதற்காகக் காத்திருக்க மனமில்லாத மனிதன் விபச்சாரத்திலும் விழுகிறான். திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதினால், அவள்/அவன் மேல் இருக்கும் ஆசை குறைந்துபோகத் தொடங்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. மறுபடி அவளைத் தேடினாலும் உடலுறவுக்காகவே தேடுவாய், திருமண உறவின் பந்தம் அர்த்தமற்றதாகிவிடும். கற்பை அழித்துவிட்டு கன்னியைக் காப்பதில் என்ன அர்த்தம் இருக்கின்றது. கற்பைத் தின்றுவிட்டு உடலை வீசிவிடும் வாலிபர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களது ஆசை வார்த்தைகளுக்கு அடிபணிந்து விடாது இருங்கள். திருமணத்திற்கு முன் தவறான உடலுறவினால் கரு உண்டாகிவிட்டால் என்ன செய்வது? கலைத்துவிட வேண்டியதுதானே என்பதுதான் பலரது பதிலாக இருக்கும். கருவும் ஒரு உயிர் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். கருக்கலைப்பு ஒரு கொலை என்பதை மறந்துவிடக்கூடாது. கருவைக் கலைத்துவிட்டு கனவிலும், நினைவிலும் துன்பப்படுவோர் அநேகர். உனது தவறான உறவினை மறைக்க ஒரு உயிர் பலி கொடுப்பது நியாயமாகுமா? அந்த நரபலியினை இறைவன் அங்கீகரிப்பானா? அதற்குப் பதில் செய்யப்படாமல் போகுமா? தவற்றிற்கு உடனடி நிவாரணம் தேடும்போது இவைகள் நினைவில் வருவதில்லை. உடலுறவினால் கன்னி என்ற அந்த தன்மை அழிந்து விடுமல்லவா?! வாலிபனிடத்தில் பாலுறவு கொள்ளுவதால் பெண் மாத்திரம் கற்பழிக்கப்படுவதில்லை, உறவு கொண்ட அந்த வாலிபனும் கற்பழிக்கப்படுகிறான். விபச்சாரிகள் மட்டும் உலகில் இல்லை விபச்சாரன்களும் உண்டு. சட்டங்களை மனிதன் தனக்கு சாதகமாக வளைத்துக்கொண்டதால் விபச்சாரன்கள் என்ற பதம் உபயோகத்திலில்லாமற் போய்விட்டது. திருமண வாழ்க்கையில் இணையவிருக்கும் மனைவிக்காக சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியவைகளை அசுத்தப்படுத்துவது நியாயமாகுமா?] குறிப்பு: இந்த கட்டுரையை பொறுமையுடன் முழுவதும் வாசியுங்கள்; பாதியில் நிறுத்திவிட்டால் முழு கருத்தும் உங்களுக்கு புரியாமல், ஒரு சார்பாக நீங்கள் சிந்திக்கும் வாய்ப்பு உண்டு.
வாலிபப் பருவத்தில் அடியெடுத்து வைக்கின்ற சகோதரிகளாகிய உங்கள் மேலும், சகோதரர்களாகிய உங்கள் மேலும் காதல் காற்று வீசுவது தற்போது வழக்கமாகிப்போனது. காதலியின் பெயரையோ நண்பர்களிடம் சொல்லிக்கொள்வதிலும், காதலிக்காவிட்டால் வெறுமை என மனதுடன் காதலிப்பதிலும் பெருமை கொள்ளுகின்ற காலம் இது. காதலிப்பது தவறா? நான் வாழப்போகும் பெண்னை அல்லது வாலிபனை நான் ஏன் தெரிந்தெடுக்கக்கூடாது? என்ற பல தரப்பட்ட கேள்விகள் வாலிபப் பருவத்தில் உங்களுக்கு உண்டாகலாம். வாலிப வயதினை அடையும்போது எதிர்பாலரின் மேலான ஈர்ப்பு ஏற்படவே செய்யும். அந்த உணர்வு இறைவனின் படைப்பு; ஆனால், அதனை நீங்கள் உங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளப் பழகவேண்டும். அழகினாலோ, அணிந்து வரும் ஆடைகளினாலோ ஈர்க்கப்பட்டு விடக்கூடாது. அவள்/அவன் யார்? என்பதை அழகிலோ, ஆடையிலோ அல்து அவளது ஒரு சில நடக்கைகளினாலோ, வார்த்தைகளினாலோ மாத்திரம் அறிந்துகொள்ள இயலாது. மனிதர்கள் முகத்தைத்தான் பார்க்கிறார்கள். மனிதனின் இதயத்தைக் காணும் சக்தி உலகத்தில் எவருக்கும் இல்லை. அழகையும், ஆடைகளையும் கண்டு மசிந்து காதலில் விழும் பலரால் திருமண வாழ்க்கையினை மகிழ்ச்சியாகத் தொடர இயலவில்லை; காரணம் இதயத்தை அறியாமல் அவர்கள் இடறிவிழுந்ததால். எந்த ஒரு வாலிபனும், வாலிப பெண்ணும் தன்னிடத்திலுள்ள கெட்ட பழக்க வழக்கங்களையும், தோல்விகளையும், பலவீனங்களையும் வெளியே காட்டிக்கொள்ள விரும்புவதில்லை. காதலியின் நினைவினால் தன்னை மறந்து படிப்பினை இழந்து அவனையே நினைத்து வாழ்க்கையை அழித்து எப்படி வாழ்வது? என்று கேள்விக்குறியோடு எதிர்காலம் நின்றுவிடக்கூடாது. எந்த வயதில் எதைச் செய்யவேண்டும் என்று சரியாகப் பகுத்து ஆராய்ந்து செயல்படாவிட்டால் வாழ்கை சிதைந்து போகும். படிக்கின்ற வயதில் காதலித்து படிப்பின் மேல் கவனம் செலுத்த இயலாமல் போவதினால் எதிர்காலத்தில் உண்டாகப்போகும் நஷ்டத்தை நீ ஈடுகட்ட இயலாது. அப்பொழுது எத்தனை கண்ணீர் வடித்தாலும் நஷ்டத்தை நிவிர்த்தி செய்யும் சந்தர்ப்பமும் உனக்குக் கிடைக்காது. பெண் முழு உலகமல்ல, வாழும் உலத்தில் அவள் ஒருத்தி. காதலிக்கும் வாலிபர்களில் பலர் தங்களுக்கு வரும் ஆலோசனைகளை ஒரு காதில் கேட்டு மறு காதில் விட்டுவிடுகின்றனர்; ஆலோசனைகளின் கருத்தை அறிந்துகொள்ளக்கூட அவர்கள் முயற்சிப்பது இல்லை. எங்கே நாம் காதலிப்பதை இவர் வேண்டாம் என்று சொல்லி தடுத்துவிடுவாரோ என்ற பயத்துடனேதான் அவர்களது பேச்சு காணப்படும். அதிகமாகப் போனால் ஆலோசனை கொடுப்பவர்களைக் கண்டு விலகிக்கொள்வார்கள். காதலிக்கும் நண்பர்களும், காதலை ஊக்கப்படுத்தும் நண்பர்களும் இருந்தால் கவனமாயிருக்கவேண்டும்; அவர்களுடைய செயல் உங்களிடம் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். காதலை ஊக்கப்படுத்தும் நண்பர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். உனக்கும், அவளுக்கும் இடையில் தரகர்களைப் போல செயல்படுவது, நல்லதைச் செய்வது போல தோன்றலாம் யாரையோ நம்பி ஆழம் தெரியாமால் காலை விடுவது நல்லதன்று. நண்பர்களின் தூண்டுதலினால் நீ தொடங்கினாலும், தூண்டிலில் மாட்டிக்கொள்வது நீதான்.
‘காதல்’ என்ற வார்த்தையினை உபயோகிப்பதைக் காட்டிலும் ‘விருப்பம்’ என்ற வார்த்தையே அதற்கு பொறுத்தமானது. கடையில் காணும் எந்த ஒரு பொருளின் மேலும் விரும்பம் கொள்வது தவறல்ல. ஆனால், அதனை வாங்கும் தகுதி நமக்கு இல்லாதிருக்கும்போது, அதனையே நினைத்து நினைத்து ஏங்குவது தவறல்லவா! அதிக விலையுடைய ஒரு கைக்கடிகாரத்தை கடையில் காணுகின்றீர்கள், அது உங்களுக்கு கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை உண்டாகின்றது, வாங்கவேண்டும் என்ற விருப்பம் ஏற்படுகின்றது; ஆனால், கையிலோ பணம் இல்லை; அதற்காக அதனைத் திருடிவிடமுடியுமா? அப்படி திருடினால் அது சரியாகுமா? அப்படி திருடி அகப்பட்டுக்கொண்டால் அதற்குறிய தண்டனையை அனுபவிக்கவேண்டும் அல்லவா? அப்படித்தான் இன்று பல காதலர்கள் மாட்டிக்கொண்டார்கள்? தன்னுடையதல்லாத வாலிபன்மேல் அல்லது வாலிப பெண்ணின்மேல் ஆசை வைத்து அவர்களைத்தான் கட்டாயம் திருமணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதம் பிடித்து, இறைவன் வேறொருவனுக்காக நியமித்ததை அறியாது இச்சித்து ஆசை வைத்து அவளை/அவனை வசப்படுத்திக்கொண்டு; திருமண வாழ்க்கைக்குப் பின்னர் திருடியதற்கான தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். வழியில் நிற்கும் யாரோ ஒருவருடைய அழகான காரை ஃபோட்டோ எடுப்பது தவறல்ல. ஆனாால், அந்த ஃபோட்டோவைக் காட்டி அந்த கார் என்னுடையது என்று பிடிவாதம் பிடித்தால், வாதிட்டால் அது தவறுதானே. கல்லூரியில், வெளியில் காணும் வாலிப சகோதரிகளை கண்டு ரசிப்பதோடு நிறுத்தாமல் ருசிக்கும் மனதுடன் செயல்படுவது தவறுதானே; எல்லாவற்றிற்கும் சரியான வழி ஒன்று உண்டல்லவா?! கீழ்கண்ட காரியங்களில் ஏதாவது ஒன்றினால் எதிர்பாலரின் மேல் விருப்பம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு: 1. வயது வரும்போது உடல் ரீதியாக உண்டாகும் மாற்றத்தினால் எதிர்பாலரின் மேல் ஈர்ப்பு ஏற்படும். 2. அழகானவர்களைக் காணும்போது விருப்பம் ஏற்படலாம். 3. அன்பாய் பேசுகிறவர்களைக் கண்டால் விருப்பம் ஏற்படலாம். 4. அவர்களது பழக்கவழக்கங்களைக் கண்டு விருப்பம் ஏற்படலாம். 5. காதலிக்கும் மற்றவர்களைக் கண்டு உனது மனதிலும் காதலிக்கும் விருப்பம் ஏற்படலாம். 6. சினிமாவைச் சார்ந்திருப்பதும் காதலைத் தூண்டுவதற்கு ஒரு காரணம் என்பதை மறுக்க இயலாது. 7. தேவைக்கு அதிகமாக எதிர்பாலருடன் பேசுவதால். ஆனால், மேற்கண்டவைகளைக் கொண்டு உனது துணையை உடனே நீ தீர்மாணித்துவிடமுடியாது என்பதை அறிந்துகொள்ளவேண்டும். ஒரு பெண்ணின் மேல் விருப்பம் உண்டானால், முதலில் அதனை நீங்கள் உங்கள் பெற்றோரிடத்தில் தெரிவிக்கவேண்டும். உன்னைப் பெற்ற பெற்றோர், உன்னை வளர்த்த பெற்றோர் உனது வாழ்க்கைக்கு நல்லவைகளையே யோசிப்பார்கள் என்ற நம்பிக்கை உனக்கு மனதில் உண்டாகவேண்டும். மற்றவர்களைப் பகைப்பதுபோல பெற்றவர்களையும் பகைத்து அவர்களை எதிரியாகப்பாராதே; அவர்கள் உனக்கு எதிரானவர்கள் அல்ல.
ஒரு பெண்ணின் மேல் விருப்பம் ஏற்படும் போது எதனை முதலில் செய்யவேண்டும், எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற காரியங்களிலேயே இன்றை இளைய தலைமுறை தவறுகிறது. பெண்ணின்மேல் விருப்பம் ஏற்பட்டதும், அவளுடன் பேசி நேரம் செலவழித்து, உல்லசமாய் சுற்றி, இன்பமாய் நாட்களைப் போக்கி, எல்லைகளையும் மீறி திருமணத்திற்கு பின்னர் அனுபவிக்கவேண்டியவைகளுக்காகக் காத்திராமல் உடலுறவு கொண்டு, இத்தனையையும் பெற்றோருக்குத் தெரியாமல் செய்துவிட்டு பின்னர் அதனை தெரிவிப்பது எத்தனை தவறானது. திருமணத்திற்கு முன் உன்னை அனுபவிக்க நினைப்பவன் திருடன். இரவில் வந்து காமத்தைத் தின்றுவிட்டு மோகத்தில் போய்விடுவான். இன்பத்தில் லயித்திருக்கும்போது இதெல்லாம் ஞாபகத்தில் வருவதில்லை. யாரோ ஒரு வாலிபனுக்கு உடலைக் கொடுத்துவிட்டு பின்னர் அவனது அன்பிற்காக வாலிப சகோதரியே நீ ஏங்கி அலையாதே. காமத்தை நிறைவேற்றியவுடன் சில காதலர்கள் காணாமல் போய்விடுவதுண்டு. அவன் வேறெங்கும் போயிருக்கமாட்டான் உன்னைப் போல ஏமாறும் வேறு பெண் அகப்படமாட்டாளா என அலைந்துகொண்டிருப்பான். அவர்கள் உன்னைக் காதலித்தது அந்தத் தேவைக்குத்தான் என்பது அப்போது உனக்குப் புரியும் என்றாலும், கற்பை இழந்தது இழந்ததுதானே; கருப்பை இருக்கும் ஆனால் கற்பு இருக்காது. வாலிப பெண்ணே வரிபனிடம் நீ நெருங்கிப் பழகினால் உனது கற்பு நொறுங்கிப்போகும் என்பதை மறந்துவிடாதே. செய்வதெல்லாவற்றையும் மறைமுகமாகச் செய்துவிட்டு பின்னர் பெற்றோரின் அங்கீகாரத்தைத் தேடுவது முறையாகுமா? பெற்றோர்கள் உங்கள் இன்பத்திற்கு எதிரிகள் அல்ல, அவர்கள் உங்களை இன்பமாக வைக்க விரும்புகிறவர்களே. இந்நிலைக்கு வந்துவிட்ட வாலிபர்கள் பெற்றோரை தங்கள் வழிக்குள் எப்படியாவது இழுத்து அவர்களைச் சம்மதிக்க வைக்கவேண்டும் என்றே செயல்படுவார்கள். இப்படியானால், பெற்றோரின் விருப்பத்திற்கு இடமில்லையே! அவர்கள் செய்யவேண்டியது என்ன இருக்கிறது? அவளைத்தான் திருமணம் முடிப்பேன் என்று தீர்க்கமான முடிவு எடுத்துவிட்டு பெற்றோரிடம் செல்வது தவறான ஒன்று. இது உனது திருமணத்திற்கு பெற்றோருக்கு அழைப்பிதழ் கொடுக்கும் நிலை. இச்சூழ்நிலையில், பெற்றோர் மறுத்தாலோ அல்லது எதிராகப் பேசினாலோ என்னவாகும், அவர்களைத்தான் வெறுக்கத்தான் மனம் வரும். பெற்றோரது பதிலை சகித்துக்கொள்ளாமல் தற்கொலை போன்ற தவறான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு நீங்களே உங்களைத் தள்ளிவிடுவீர்கள். பெற்றோருக்கு இத்தகைய செயல் எத்தகைய மனமடிவை உண்டாக்கும். கட்டாயமாக அவளைத்தான் திருமணம் செய்வேன் என்று பெற்றோரின் ஆசியை தூசியைப் போல உதறிவிடும் வாலிபர்களும் ஏராளம். பெற்றோரிடம் ஒரு பெண்ணைக் குறித்ததான உனது விருப்பத்தைத் தெரிவிக்கும்போது பெற்றோர்களின் பதிலுக்கேற்ப உனது முடிவை மாற்றிக்கொள்ளும் மனநிலையுடன் நீ காணப்படவேண்டும். அவர்கள் சாகமாகப் பேசினாலோ அல்லது பாதகமாகப் பேசினாலோ அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு உனக்கு வேண்டும்; இதுவே பெற்றோருக்கு நாம் செய்யும் மரியாதை. இதுவே சரியான முறை.
திருமணத்திற்கு முன் ஏன் உடலுறவு வைத்துக்கொள்ளக்கூடாது? நான் அவளைத்தானே திருமணம் செய்துகொள்ளப் போகின்றேன், இதில் எந்த மாற்றமும் இல்லையே; அப்படியிருக்க அவளோடு திருமணத்திற்கு முன் நான் ஏன் உடல் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது? ஒருத்தியோடு உறவு வைத்து அவளை ஏமாற்றிவிட்டு மற்றவளை திருமணம் செய்தால்தானே தவறு என்று கேட்காமல் மனதில் கேள்விகளோடு தவறு செய்பவர்கள் உண்டு. அப்படி திருமணத்திற்கு முன் உனது காதலியுடன் நீ உடலுறவு வைத்துக்கொண்டால் நீ காதலுக்கு அல்ல காமத்திற்கே முதலிடம் கொடுப்பவன்/கொடுப்பவள் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். காமப்பசி வயிற்றைப் பிசையும் போது அதற்காகக் காத்திருக்க மனமில்லாத மனிதன் விபச்சாரத்திலும் விழுகிறான்.. திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வதினால், அவள்/அவன் மேல் இருக்கும் ஆசை குறைந்துபோகத் தொடங்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. மறுபடி அவளைத் தேடினாலும் உடலுறவுக்காகவே தேடுவாய், திருமண உறவின் பந்தம் அர்த்தமற்றதாகிவிடும். கற்பை அழித்துவிட்டு கன்னியைக் காப்பதில் என்ன அர்த்தம் இருக்கின்றது. கற்பைத் தின்றுவிட்டு உடலை வீசிவிடும் வாலிபர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களது ஆசை வார்த்தைகளுக்கு அடிபணிந்து விடாது இருங்கள். திருமணத்திற்கு முன் தவறான உடலுறவினால் கரு உண்டாகிவிட்டால் என்ன செய்வது? கலைத்துவிடவேண்டியதுதானே என்பதுதான் பலரது பதிலாக இருக்கும். கருவும் ஒரு உயிர் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்; கருக்கலைப்பு (abortion) ஒரு கொலை என்பதை மறந்துவிடக்கூடாது. கருவைக் கலைத்துவிட்டு கனவிலும், நினைவிலும் துன்பப்படுவோர் அநேகர். உனது தவறான உறவினை மறைக்க ஒரு உயிர் பலி கொடுப்பது நியாயமாகுமா? அந்த நரபலியினை இறைவன் அங்கீகரிப்பானா? அதற்குப் பதில் செய்யப்படாமல் போகுமா? தவற்றிற்கு உடனடி நிவாரணம் தேடும்போது இவைகள் நினைவில் வருவதில்லை. ஒரு தவற்றை மறைக்க மற்றொரு தவறு செய்வதுதான் மனித இயல்பு. நான் நம்பிய வாலிபன் என்னோடு உடலுறவு கொண்டுவிட்டு ஓடிப்போய்விட்டான்? நான் கருவுடன் இருக்கிறேன் என்ன செய்வது? அதனை எனது பெற்றோருக்கும், மற்றவர்களுக்கும் எப்படி மறைப்பது? என்ற கேள்விக்கு கருவைக் கலைத்துவிடு என்பது சாதகமான பதிலாக இருந்தாலும்; அதினால் உண்டாகும் பாதகத்திற்கும், சாபத்திற்கும் அவள் தப்ப இயலாது. செய்த தவற்றினை இறைவன் மன்னித்துவிடலாம், அதற்காக அந்த சிசுவின் கொலையை அவன் ஏற்றுக்கொள்வானா? நிச்சயம் மாட்டான்; இறைவன் தீமைக்கு விரோதமானவன். உனது தவற்றிற்காக அடுத்தவனைக் கொன்றுவிடு என்று இறைவன் எப்பொழுதும் சொல்லுவதில்லை. அந்த சிசு நிச்சயம் வளர்கப்படவேண்டும்; அதினிமித்தம் உண்டாகும் பிரச்சனைகளுக்குத்தான் வரும் நாட்களில் தீர்வு காணவேண்டுமே ஒழிய அதனைக் கொன்றுவிடுவது தீர்வாகாது. உடலுறவினால் கன்னி என்ற அந்த தன்மை அழிந்துவிடுமல்லவா. வாலிபனிடத்தில் பாலுறவு கொள்ளுவதால் பெண் மாத்திரம் கற்பழிக்கப்படுவதில்லை, உறவு கொண்ட அந்த வாலிபனும் கற்பழிக்கப்படுகிறான். விபச்சாரிகள் மட்டும் உலகில் இல்லை விபச்சாரன்களும் உண்டு. சட்டங்களை மனிதன் தனக்கு சாதகமாக வளைத்துக்கொண்டதால் விபச்சாரன்கள் என்ற பதம் உபயோகத்திலில்லாமற்போய்விட்டது. திருமண வாழ்க்கையில் இணையவிருக்கும் மனைவிக்காக சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியவைகளை அசுத்தப்படுத்துவது நியாயமாகுமா? திருமணம் முடிக்கும் எண்ணமில்லாமல் காமத்திற்காவே இணைந்து வாழும் வாலிப ஜோடிகளும் இந்நாட்களில் பெருகிவருகின்றது. கட்டுக்கடங்காத உடலுறவுக்கு இவர்கள் தயங்குவதில்லை. இவர்கள் திருமணம் முடிக்கும் நோக்கத்தில் அல்ல காமப் பசியினை நிறைவேற்றும் ஒப்பந்தத்துடன் இணைந்துகொண்டவர்கள். திருமணம் வரும்போது அவரவர் வேறு நபருடன் திருமணம் செய்துகொள்ளும் மனமுடையவர்கள். இப்படி நடந்தாலும், அவர்களது பழைய வாழக்கையின் பாவங்கள் அவர்களைத் தொடராமல் விடுவதில்லை. உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும்
எனக்கு வேண்டும் என்ற குணமே மனிதனிடத்தில் எப்பொழுதும் மேலாங்கி நிற்கிறது. எனக்கு அவள் வேண்டும் என்ற விருப்பத்துடன் அவளுக்கு நான் வேண்டுமா என்ற அவளது விருப்பத்தையும் அறிந்துகொள்வது அவசியமல்லவா. ஒரு பெண்ணை விரும்புகின்றாய் அந்த பெண்ணுக்கு உன்மேல் விருப்பமில்லை, ஆனால், அவளது அழகையும் மற்றவைகளையும் பார்த்து அவளை விட்டுவிட உனக்கு மனதில்லை, எப்படியாகிலும் அவளை திருமணம் முடித்துவிடவேண்டும் என்ற எண்ணம் உனக்குள் உருவாகின்றது; இது எத்தனை கொடுமையானது; இதுதான் ஒருதலை விருப்பம். இப்படிப்பட்ட நிலை உருவாகும்போது அதனை விட்டுவிடுவதே உச்சிதமானது. அவளுக்கு விருப்பம் இல்லாதபோது அவளது வீட்டாரைக்கொண்டோ மற்றவர்களைக் கொண்டோ அவளைத் திருமணத்திற்குச் சம்மதிக்கவைப்பது தவறானது; அப்படிச் செய்தால் உனது திருமண வாழ்க்கை சந்தோஷமாயிராது என்பது நிச்சயம். இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் விருப்பம் இருந்தால்தான் இல்லறம் நல்லறமாக அமையும். தான் விரும்பும் பெண் தன்னை விரும்பவில்லை என்பதை அறிந்தால் அப்பெண்ணுக்கு எதிரியாக அவளை அழித்துவிடவேண்டும் என்ற வெறியுடன் அலையும் வாலிப சமுதாயம் உலகத்தில் உண்டு. சிலர் தான் விரும்பும் நபர் தன்னை விரும்பாததால் உலகமே இருண்டு விட்டதைப்போல உணர்வுக்குள்ளாகிவிடுவார்கள். தான் விரும்பிய பெண் தன்னை விரும்பாததால் துக்கமடைந்து மதுபானத்தினால் தனது உடலைக் கெடுத்துக்கொள்ளும் வாலிபர்களும் உண்டு. யாருக்காகவோ நீ உன்னை ஏன் அழித்துக்கொள்ளவேண்டும்? அவளை நினைத்து நினைத்து ஏங்கி உன்னை அழித்துக்கொள்வதால் உனக்கு கிடைக்கும் பலன் என்ன? வரப்போகின்ற நல்ல வாழ்க்கையைக் கூட அனுபவிக்க இயலாத வருத்தம்தான் உன்னை கவ்விப்பிடிக்கும். தாடி வளர்த்துக்கொண்டும், சோகப்பாடல் பாடிக்கொண்டும் இருக்க அவசியமில்லை; உனக்குரியது உனக்கு உண்டு. பெற்றோர் பெண் தேடும்போது சில வாலிபர்கள் எதுவுமே பேசுவதில்லை, ஊமையாகவே இருந்துவிடுவார்கள், அவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உள்ள உறவைப் பொறுத்தே இந்த நிலை ஏற்படுகிறது. திருமணம் முடிந்த பின்னர் நான் அப்படி படித்த, வேலை பார்க்கின்ற, கலரான, அழகான பெண்ணைக் கட்ட நினைத்தேன் என்று பெற்றோரை நொந்துகொள்ளுவதில் எந்த அர்த்தமும் இல்லை. உங்களுக்கான வாழ்க்கைத் துணை தேடலில் பெற்றோருடன் நீங்கள் ஏன் இணைந்து செயல்படக்கூடாது? அதற்கான முழு உரிமையும் உங்களுக்கு உண்டு. டிப்ஸ் : வாலிப வயதினை அடைந்தவர்கள் எதிர்பாலருடன் வைத்துக்கொள்ளும் உறவிலும், பேச்சிலும் அதிக எச்சரிக்கை தேவை. வீட்டிலேயே முடங்கிக்கிடக்கவேண்டும் என்பதில்லை, கவனமாயிருக்கவேண்டும். தனது வயதுள்ளவர்களுடனானாலும், தன்னைவிட வயதில் குறைவாகவோ, அதிகமாகவோ உள்ள எதிர்பால் நபரிடம் கவனமாகவே நடந்து கொள்ளவேண்டும். நீங்கள் நல்ல மனநிலையுடன் காணப்பட்டாலும், அவர்கள் உங்களை இழுத்துவிடும் ஆபத்து உண்டு. பெற்றோருடன் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் மதிப்பிற்குரியவர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். பெற்றோருடன் நேரம் செலவழிக்க பழகுங்கள்; எப்பொழுதும் உங்கள் நண்பர்களே தஞ்சம் என்று கிடக்காதீர்கள். உங்களது வாலிபத்தின் கேள்விகளை தயங்காமல் பெற்றோரிடத்தில் கேட்க முற்படுங்கள்; உங்களுக்கான பதில் அவர்களிடத்தில் உண்டு; இதில் வெட்கம் எதற்கு? காதலையும், காம உணர்வுகளையும் தூண்டும் புத்தங்களையும், சினிமாக்களையும் விட்டு வெளியேறுங்கள்; இவைகள் உங்கள் மனதை தீமைக்கு நேராக இழுத்துச் செல்லும் சக்தி கொண்டவைகள். பெற்றோரின் ஆலோசனைகளுக்கோ, அறிவுரைகளுக்கோ சட்டென கோபப்படாதீர்கள். பெற்றோர் கண்டிக்கும்போது மெளனம் தேவை; ஐயங்களை வெறுக்காமல், அவர்களிடமே கேளுங்கள். பெற்றோரை உங்கள் எதிரியாக நினைக்காதிருங்கள். பெற்றோர்களைப் பற்றி குறை பேசுவதை விட்டுவிடுங்கள். இந்த குடும்பத்தில் ஏன் பிறந்தோம், என்று மற்ற குடும்பத்தோடு மற்ற பெற்றோரோடு உங்கள் குடும்பத்தை ஒப்பிட்டு உங்களுக்கான தனித்தன்மையை இழந்துவிடாதிருங்கள். பெற்றோரை பாராட்டுவது நல்லது, அவர்களது திருமண நாள்கள், பிறந்த நாட்களை உங்கள் நினைவில் வைத்து அவர்களை வாழ்த்துங்கள். அவர்கள் எடுத்துத்தரும் உடைகளைக் குறித்தோ, உணவினைக் குறித்தோ குறைவாக மதிப்பிடாதிருங்கள். அவர்களது பிள்ளை என்ற ஸ்தானத்தை அவர்கள் மரித்தாலும் நீங்கள் மரிக்கும்வரை மாற்ற இயலாது என்பதை மறந்துவிடவேண்டாம்.
ஒரு பெண்ணையோ அல்லது வாலிபனையோ விரும்பும் பிள்ளைகள் கொண்ட பெற்றோர் என்ன செய்யவேண்டும்? பிள்ளைகள் தங்களிடம் தனது விருப்பத்தைத் தெரிவிக்கும்போது உடனே கோபப்படாமல் சாந்தமாக, அமைதியாக அவர்களது வார்த்தைகளைக் கேட்கவேண்டும். அவர்களது வாரத்தையிலோயே அவர்களது விருப்பத்தின் நிலை எத்தனை உறுதியானது என்பதை உங்களால் அறிந்துகொள்ள முடியும். பிள்ளைகள் பேசத் தொடங்கிய உடன் கோப்பட்டு பேசி பேச்சு வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடக்கூடாது. பிள்ளைகள் உடனே உங்கள் பதிலை எதிர்பார்த்தாலும், நீங்கள் உடனே சரி என்றோ அல்லது வேண்டாம் என்றோ சொல்லிவிடாமல் ஓரிரு நாட்கள் யோசித்து அந்த பெண்ணைக்குறித்து விசாரித்து நமது பிள்ளைக்கு அந்த பெண் தகுந்தவளா, அந்த வீட்டில் பெண் கேட்டால் கொடுப்பார்களா அல்லது பிரச்சனை செய்வார்களா போன்ற காரியங்களை மறைமுகமாக நம்பிக்கையான சில நபர்களின் துணையோடு செய்யவேண்டும். தகுந்தது அல்ல என்று அறிந்த பட்சத்தில் அதனை கோபத்துடன் சொல்லாமல் மெதுவாக அவர்களை அழைத்து சாந்தமான முகத்துடன் அவர்களைப் புரிந்துகொள்ளச் செய்யவேண்டும். உங்களது எதிர்மறையான பதிலுக்கு அவர்களது நிலை என்ன என்பதை அறிந்துகொள்ளவேண்டும். இச்சமயத்தில் அவர்கள் உங்கள் பதிலை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கின்றார்களா இல்லையா என்பது தெளிவாகிவிடும். ஆயத்தமாயிருப்பதாகத் தெரிந்தால் அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளைக் கொடுத்து பின்வரும் நாட்களில் பிள்ளைகளுடன் அதிகமாக நேரம் செலவிட்டு அவர்களது மனதை பெற்றோர்கள் தங்கள் வசம் இழுத்துக்கொள்ளமுடியும். பிள்ளைகள் உங்கள் பதிலை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிராவிட்டால் அவர்களை அவர்கள் பாதையில் விட்டுவிடுவது நல்லது. அவர்களுக்கு விரோதியாக மாறி அவர்கள் தங்களை அழித்துக்கொள்ளும் மனநிலைக்கு பிள்ளைகளைத் தள்ளிவிடக்கூடாது. பட்டு திருந்தும்போது பெற்றோரின் நினைவு வருவது நிச்சயம். பிள்ளைகளின் விரோதமான போக்கு உங்களுக்கு மனநோவைக் கொடுப்பது தவிற்கமுடியாதது. காலம் செல்ல செல்ல நிகழ்ந்தவை சாதகமாக கைகூடிவரும்போது அதனை ஏற்றுக்கொள்ள தயங்கவேண்டாம். வீட்டை விட்டு வேறொருவனுடன் ஓடிவிட்டாள் இனி நான் உனக்கு தாய் அல்ல தந்தை அல்ல என்று நீங்கள் சொன்னாலும் அந்த ஸ்தானத்தை மாற்ற உங்களால் கூடாது. பல வருடங்களுக்குப் பின்னர் உங்களைத் தேடி வந்தால் ஏற்றுக்கொண் மகிழ்சியாயிருங்கள்; நடந்ததை நினையாதிருங்கள். டிப்ஸ் : குழந்தையாய் இருக்கும்போது பெற்றோர்கள் மடியிலும் தொட்டிலிரும் வைத்து தாலாட்டி பாட்டுபாடு அவர்களுடன் அதிக நேரம் செலவழிப்பது இயல்பான ஒன்று. என்றபோதிலும், பிள்ளைகள் வளர வளர வாலிப பருவத்தை அடையும்போது இது கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்துகொண்டே போய்விட வாய்ப்புகள் உண்டு. நண்பர்களின் உலகத்தில் அவர்கள் வாழும்போது குடும்ப உறவிற்கு முக்கியத்துவம் கொடுக்க அவர்கள் மறப்பது இயல்பானது. இதனை பக்குவமாக கையாளவேண்டும். வாலிப வயதிலான பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்கவேண்டும். அவர்களுடன் அமர்ந்து உணவருந்துவது, தேனீர் அருந்துவது, சுற்றுலா செல்வது போன்ற காரியங்களை நீங்கள் செய்யலாம். அவர்கள் உங்களைவிட்டு விலகி வேறெங்கும் ஒட்டிக்கொள்வதற்கு முன்னர் நீங்கள் அவர்களுடன் ஒட்டிக்கொள்ளவேண்டும். திறந்த மனதுடன் பேசவும், அவர்களுடன் சிரித்து விளையாடவும் வேண்டும். குடும்பத்தில் நீங்கள் மாதிரியாக வாழ்வது மிக மிக முக்கியமான ஒன்று. கணவன் மனைவி இடையிலான உறவில் நீங்கள் உங்கள் குழந்தைக்கு முன்னோடியாக இருக்கவேண்டும். நீங்கள் சண்டையிட்டால் பிள்ளைகள் வேறு எங்கும் போய் சிக்கிக்கொள்ளும் என்பதை மறந்துவிடக்கூடாது. கணவன் மனைவியை நேசிப்பதிலும், மனைவி கணவனை நேசிப்பதிலும் பிள்ளைகள் காண நீங்கள் முன்னோடியாக இருக்கவேண்டும். பிள்ளைகளை கண்டிப்பது தவறல்ல, ஆனால் எதற்காக கண்டித்தோம் தண்டித்தோம் என்பதை அவர்களுக்கு சொல்லாமல் இருப்பதும், ஒரு முறை தண்டித்துவிட்டு பின்னர் அதையே நினைவில் கொண்டு அவர்களை எப்போதும் கோபத்துடன் பார்ப்பதும் பெற்றோர் பிள்ளைகள் இடையிலான உறவுகளின் விரிசலை பெரிதாக்கிவிடும். அவர்களது செயல்களை பாராட்டவும், பிள்ளைகளது பிறந்த நாட்களை கொண்டாடவும் பழகவேண்டும். தங்கள் பிள்ளைகளின் குறைவுகளை வெளியில் மற்றவர்களிடம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அவர்களை மற்ற வாலிபர்களோடு ஒப்பிடுவதையும் தவிர்ப்பது நல்லது. தங்கள் பிள்ளைகள் யாரையாவது திருமணம் முடித்துக்கொள்ள விரும்பினால், அந்த விருப்பத்தை பிள்ளைகள் பெற்றோரிடம் சொல்லும்போது, அதனை லாவகமாக கையாளும் தன்மை வேண்டும். எதையும் குறித்து விசாரிக்காமல் உடனே தங்கள் பிள்ளைகள் மேல் மூர்க்க கோபமடையக்கூடாது. தீர விசாரித்த பின்னர் நிறைவுகளையும், குறைவுகளையும் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை புரிந்துகொள்ளச் செய்யவேண்டும். நல்ல பெண் அல்லது வாலிபன் என்று பெற்றோருக்கு தெரியவந்தால் அதனை அங்கீகரிப்பது தவறல்ல. பிள்ளைகளுக்கு திருமண துணை தேடும்போது பெற்றோர்கள் அதனை அவர்களுடன் கலந்து ஆலோசிக்கவேண்டும். நாங்கள் பார்ப்பதை நீ கட்டித்தான் ஆகவேண்டும் என வற்புறுத்தக்கூடாது. அவர்களின் விருப்பங்களை தள்ளிவிடாமல் அதற்கும் இடமளிக்கவேண்டும். source: http://muthupettaimedia.com/muthupet/39080
|