Home கட்டுரைகள் சமூக அக்கரை அப்படி நாங்கள் என்ன தவறு செய்து விட்டோம்?
அப்படி நாங்கள் என்ன தவறு செய்து விட்டோம்? PDF Print E-mail
Monday, 03 October 2016 09:22
Share

அப்படி நாங்கள் என்ன தவறு செய்து விட்டோம்?

மது, சூது, விபச்சாரம் போன்ற தீமைகளின் பட்டியலில் தற்போது குழந்தைகளின் மீது நடைபெறும் குற்றங்களையும் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.

குழந்தைகள் மீதான் பாலியல் வன்கொடுமைகள் தினசரி பத்திரிக்கைகளிலும், தொலைக் காட்சிகளிலும் பார்க்கின்ற போது நம் நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

இது புறமிருக்க, குழந்தை இல்லாதவர்களுக்கு விற்பனை செய்ய, பிச்சை எடுக்க, விபச்சாரத்தில் ஈடுபடுத்த, உடல் உறுப்புக்களுக்காக, குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்த, பணயம் வைத்து பணம் பறிப்பதற்காக அல்லது மிரட்டுவதற்காக என்று பல்வேறு காரணங்களுக்காக பிறந்த குழந்தைகளும், சிறுவர் சிறுமிகளும் அதிக அளவில் கட்த்தப்பட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 44,475 குழந்தைகள் காணாமல் போகிறார்கள்.

தமிழ்நாடு குற்றவியல் ஆவணக் காப்பகம் கொடுத்துள்ள தகவலில் இது பற்றி கூறியிருப்பதாவது :

தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 810 குழந்தைக் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 136 பேர். மற்ற அனைவரும் குழந்தைகள். கடந்த நான்கு ஆண்டுகளில் 2982 பேர் காணாமல் போயிள்ளனர். இதில் 1700 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.

சென்னை, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில்தான் குழந்தைகளைத் திருடி விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளன. பிறந்த குழந்தைகளைக் கடத்தும் சம்வங்கள் 74 சதவிகிதம் அரசு மருத்துவமனைகளில்தான் நடக்கிறது.

குழந்தை கடத்தல் பற்றி தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்தியாவில் ஆண்டுக்கு 44475 குழந்தைகள் காணாமல் போகின்றனர். இதில் 13881 பேரின் நிலை என்னவென்றே கண்டுபிடிக்க முடிவதில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

குழந்தைகள் கொலை செய்யப்படுவதில் இதியாவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தேசிய ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவலின் படி ஒவ்வொரு ஆண்டும்

மகாராஸ்டிரத்தில் 141 குழந்தைகளும்,

உத்தரப் பிரதேசத்தில் 96 குழந்தைகளும்,

தமிழகத்தில் 90 குழந்தைகளும் கொலை செய்யப்படுகின்றனர்.

அண்டை மாநிலங்களான கர்நாடகத்தில் 73,

கேரளத்தில் 49 குழந்தைகள் கொலை செய்யப்படுகின்றனர்.

பிஹாரில் 28, டெல்லியில் 23 குழந்தைகள் ஒரு ஆண்டில் கொலை செய்யப்படுகின்றனர்.

குழந்தைகளின் ஆதங்கம் :- குழந்தைகளாக இருந்த நாங்கள் இளமைப் பருவத்தை அடைந்து சமூகத்திற்கும், தேசத்திற்கும், பெற்றோர்களுக்கும் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற ஆசை ஒரு புறம், ‘வாழ்க்கை’ எனும் ஆன்ந்தத்தை அன்றாடம் அனுபவிக்க வளரும் பிஞ்சுகளை நஞ்சுகளாக மாற்றி அறுத்தெறிந்து விடும் கொடுமை மறுபுறம்.

நீங்கள் சுகமாக வாழ வேண்டும் என்பதற்காக எங்களை பலிகடாக்களாக்குவது எந்த விதத்தில் நியாயம்? நாங்கள் குழந்தைகளாக இருந்த போது எங்களை தூக்கி வைத்து கொண்டாடும் நீங்கள், வளர்ந்த போது தூக்கி எறிந்து விடுவது ஏன்?

குழந்தைகளாக நாங்கள் எங்கள் தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த போது முழு கவனத்தையும் எங்கள் மீது வைத்து அன்போடு கவனித்து வந்த உயிரினும் மேலான எங்களது பெற்றோர்களே! பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் எங்களை சேர்த்துவிட்ட பின் எங்கள் மீது கவனமற்று போவது நியாயமா?

உங்களது இந்த கவனமற்ற நிலைதான் எங்களின் அனைத்து தீமைகளுக்கும் காரணம் என்பதை நீங்கள் அறியாதது உங்கள் குற்றமா? எங்கள் குற்றமா?

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்...

பள்ளிகளில் படிக்கின்ற காலங்களில் காலை 7.30 மணிக்கு அழுது கொண்டே எழுந்து அவசரமாக பல் துலக்கி, குளித்து, பள்ளி சென்று அதன் பின் டியூஷன் சென்று ‘படி... இல்லன்னா அடி...’ எனும் சொல்லை மீண்டும் மீண்டும் கேட்டு இரவு வந்தவுடன் சாப்பிட்டு படுக்கப் போகும் எங்களது நிலைக்கும் இயந்திரங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.

உங்களுக்கு மனக் கஷ்டம் வரும்போது உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நீங்கள் எங்கள் மனக்கஷ்டங்களை பெற்றோர்களாகிய உங்களிடம் சொல்ல வரும் போது அதை மனமுவந்து ஏற்றுக் கொள்ள ஏன் மறுக்கிறீர்கள்?

அண்டை வீடுகளுக்கும், உறவுகளின் இல்லங்களுக்கும் செல்லும் போது அங்கிருக்கும் குழந்தைகளிடம் கொஞ்சி குழாவி முத்தம் கொடுத்து மகிழுகின்ற நீங்கள், உங்கள் குழந்தைகளான எங்களிடம் அன்பை பரிமாற ஏன் மருக்கிறீர்கள்...?

சிறு வயதில் எங்களை நீங்கள் தள்ளி, ஒதுக்கி வைப்பது தானே... நாங்கள் பெரியவர்களாகி உங்களை ஒதுக்கி வைப்பதற்கு காரணமாகி விடுகிறது என்பதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்...?

பெற்றோர்களாகிய நீங்கள் எங்களுக்கு முன் மாதிரியாக இல்லாததினால் யார் யாரையோ பின்பற்றும் அவலம் எங்களுக்கு ஏற்படுகிறது.

எந்த தவறுகளையும் செய்யாத, செய்யத் தெரியாத எங்களை எங்களது பெற்றோர்களாகிய நீங்களும், இந்த சமூகமும் ஒதுக்கி வைக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிற நாங்கள் அப்படி என்ன தவறுகளை செய்து விட்டோம்.

உலகில் குழந்தைகளாக பிறந்ததுதான் தவறு என்றால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?

முனைவர் மு.ஃபக்கீர் இஸ்மாயீல் பிலாலி,  பொருளாதாரத் துறை பேராசிரியர், புதுக் கல்லூரி, சென்னை.

source: http://www.samooganeethi.org/index.php/category/special-articles/item/490-%