Home இஸ்லாம் வரலாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணந்த இளவரசி!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணந்த இளவரசி! PDF Print E-mail
Saturday, 01 October 2016 09:19
Share

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணந்த இளவரசி ஸஃபிய்யா பின்த் ஹுயை ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்

    rasminmisc    

ஸஹாபாக்கள் வரலாறு இஸ்லாத்தின் வேர் இப்பூமியில் ஆழமாக வேரூண்ற பாடுபட்ட நபித் தோழர்களின் வரலாறுகளை படிக்கும் போது அவர்களுடைய ஈமான், நல்லமல்களுடன் நம்முடையை ஈமான், அமல்களை உரசிப் பார்க்க நேரிடுகின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியர்களில் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா, ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை தவிர வேறு மனைவிமார்களின் பெயர்களை கூட சரியாக பெரும்பாலானோர் அறிந்து வைத்திருப்பதில்லை. எனவே நபியின் மனைவியரில் ஒருவரான அன்னை ஸஃபிய்யா பின்த் ஹுயை ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இங்கு சுருக்கமாக நோக்குவோம்.

அறிமுகம் :

இவரின் இயற் பெயர் ‘'ஸைனப்” இவர் யூத குலத்தின் தலைவியும், நபி ஹாருன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வம்சத்தை சார்ந்தவரும் ஆவார்.

மதீனாவிலேயே பலம் பொருந்திய யூத கோத்திரமான பனூ குரைலாவின் தலைவர் ஹுயை, ஸஃபிய்யா அவர்களின் தந்தையாவார். இவரைத் தவிர யூதப் பெண்களில் யாரையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணமுடிக்கவில்லை. இவர் தனது 14 வது வயதில் ஸலாம் பின் மிக்ஷம் என்பவரை திருமணம் செய்தார்கள். அவரின் பிரிவின் பின் கினானா பின் ரபிஃ என்பவரை திருமணம் முடித்தார்கள். கைபர் போரின் போது ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கணவர் கினானாவும், அவரின் தந்தையும், சகோதரரும் கொலை செய்யப்பட்டார்கள்.

நபிகளாருடன் திருமணம்

ஹிஜ்ரி 07ல் கைபர் வாசிகளை அல்லாஹ் கைபர் போரின் போது தோற்கடித்தான். கைபர் போரில் கைதியாக கிடைக்கப் பெற்ற ஸஃபிய்யா பின்த் ஹுயை ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பனூ குரைழா கோத்திரத்தின் தலைவி என்பதினால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் செய்து, முஃமின்களுக்கு தலைவியாக அவர்களை மாற்றினார்கள்.

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஹிஜ்ரீ ஏழாவது ஆண்டு) கைபர் மீது போர் தொடுத் தார்கள். பிறகு தாக்குதல் மூலம் கைபரை நாங்கள் கைப்பற்றினோம். (போருக்குப் பின்) போர்க் கைதிகள் திரட்டப்பட்டபோது, திஹ்யா (அல்கல்பீ-ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! கைதிகளில் ஓர் அடிமைப் பெண்ணை எனக்கு (போர்ச் செல்வமாக)த் தாருங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நீங்கள் சென்று ஓர் அடிமைப் பெண்ணைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார்கள்.

திஹ்யா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், (கணவனை இழந்திருந்த) ஸஃபிய்யா பின்த் ஹுயை ரளியல்லாஹு அன்ஹா அவர்களைப் பெற்றுக்கொண்டார்கள்.

இந்நிலையில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! குறைழா, நளீர் குலத்தாரின் தலைவரான ஹுயையின் மகள் ஸஃபிய்யாவை திஹ்யாவுக்கு வழங்கி விட்டீர்களே! ஸஃபிய்யா, உங்களுக்குத் தவிர வேறெவருக்கும் பொருத்தமாகமாட்டார் என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், திஹ்யாவையும் அப்பெண்ணையும் அழைத்து வாருங்கள் என்றார்கள். ஸஃபிய்யாவுடன் திஹ்யா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்தார்கள்.

ஸஃபிய்யாவைக் கண்டதும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (திஹ்யா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம்), ''கைதிகளில் இவரல்லாத மற்றோர் அடிமைப் பெண்ணை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று சொன்னார்கள். பிறகு நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஃபிய்யாவை விடுதலை செய்து தாமே மணந்துகொண்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்) (முஸ்லிம் 2793)

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் கைபர்வாசிகளைத் தோற்கடித்தான். (போர்ச் செல்வங்களில்) திஹ்யா அல்கல்பீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களது பங்கில் ஓர் அழகிய இளம் பெண் போய்ச்சேர்ந்தார். பின்னர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏழு அடிமைகளைக் கொடுத்து அப்பெண்ணை (திஹ்யா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து) வாங்கிக்கொண்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்) (முஸ்லிம் 2796)

இதனால் தான் போரின்போது தலைவரினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெயர் வந்தது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழங்கிய மஹர் தொகை :

அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:

நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவி யார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தம் துணைவியருக்குக்) கொடுத்த மணக்கொடை (மஹ்ர்) எவ்வளவு? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் துணைவியருக்கு வழங்கிய மணக்கொடை, பன்னிரண்டு ஊக்கியாவும் ஒரு நஷ்ஷுமாகும் என்று கூறிவிட்டு, நஷ்ஷு என்றால் என்னவென்று தெரியுமா? என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன். அவர்கள், அரை ஊக்கியாவாகும் (ஆக மொத்தம்) அது ஐநூறு திர்ஹங்கள் ஆகும். இதுவே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் துணைவியருக்கு வழங்கிய மணக்கொடையாகும் என்று சொன்னார்கள். (முஸ்லிம் 2787)

ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை விடுதலை செய்வதையே நபியவர்கள் மஹராக ஆக்கினார்கள். அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (போர்க் கைதியான) ஸஃபிய்யாவை விடுதலை (செய்து திருமணம்) செய்தார்கள் மேலும், அவரது விடுதலையையே மணக்கொடையாக (மஹ்ர்) ஆக்கினார்கள் (முஸ்லிம் 2794)

இல்லற வாழ்வின் ஆரம்பம் :

கைபர் போரில் இருந்து திரும்பி வரும் வழியில் ‘ஸத்துஸ் ஸஹ்பா” எனும் இடத்தில் நபியவர்கள் தனது மனைவி ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் உறவு கொண்டார்கள்.

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஹிஜ்ரீ ஏழாவது ஆண்டு) கைபர்மீது போர் தொடுத்தார்கள். பிறகு தாக்குதல் மூலம் கைபரை நாங்கள் கைப்பற்றினோம். (போருக்குப் பின்) போர்க் கைதிகள் திரட்டப்பட்டபோது, திஹ்யா (அல்கல்பீ ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள் வந்து, அல்லாஹ்வின் தூதரே! கைதிகளில் ஓர் அடிமைப் பெண்ணை எனக்கு (போர்ச் செல்வமாக)த் தாருங்கள் என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நீங்கள் சென்று ஓர் அடிமைப் பெண்ணைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்கள்.

திஹ்யா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், (கணவனை இழந்திருந்த) ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களைப் பெற்றுக்கொண்டார்கள். இந்நிலையில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! குறைழா, நளீர் குலத்தாரின் தலைவரான ஹுயையின் மகள் ஸஃபிய்யாவை திஹ்யாவுக்கு வழங்கி விட்டீர்களே! ஸஃபிய்யா, உங்களுக்குத் தவிர வேறெவருக்கும் பொருத்தமாகமாட்டார் என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், திஹ்யாவையும் அப்பெண்ணையும் அழைத்து வாருங்கள் என்றார்கள். ஸஃபிய்யாவுடன் திஹ்யா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்தார்கள்.

ஸஃபிய்யாவைக் கண்டதும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (திஹ்யா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம்), கைதிகளில் இவரல்லாத மற்றோர் அடிமைப் பெண்ணை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஃபிய்யாவை விடுதலை செய்து தாமே மணந்துகொண்டார்கள்.

நாங்கள் (கைபரிலிருந்து திரும்பி வரும்) வழியில் (சத்துஸ் ஸஹ்பா எனுமிடத்தில்) இருந்தபோது, (புது மணப்பெண்) ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை (என் தாயார்) உம்மு சுலைம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் (அலங்கரித்துத்) தயார்படுத்தி, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார்கள். (முஸ்லிம் 2793)

இளவரசியின் திருமணத்திலும் எளிமையான விருந்து :

ஹைஸ் எனும் (பேரிச்சம் பழம், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றை கலந்த) உணவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் திருமணத்திற்கான வலீமா விருந்தாக கொடுத்தார்கள். அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கைபருக்கும் மதீனாவுக்கும் இடையில் (உள்ள சத்துஸ் ஸஹ்பா’ எனுமிடத்தில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை மணமுடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள்.அங்கு ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் தாம்பத்திய உறவு கொண்டார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வலீமா – மணவிருந்துக்கு முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட்டு (அவ்வாறே அது கொண்டு வந்து விரிக்கப்பட்டபோது) அதில் பேரீச்சம்பழம், பாலாடைக்கட்டி, நெய் ஆகியவற்றை இட்டார்கள் (ஹைஸ் எனும் எளிய உணவு துரிதமாகத் தயாரானது). இதுவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வலீமா – மணவிருந்தாக அமைந்தது. (ஹதீஸின் சுருக்கம்) (புகாரி 5085)

இளவரசியாக இருந்த ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் செய்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது வலீமா விருந்தை எளிமையாக வழங்கியிருக்கின்றார்கள். என்பதில் இருந்து வலீமா விருந்தை சிறமப்பட்டோ, கடன் பெற்றோ வழங்க வேண்டியதில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும். எளிமையான திருமணத்தில் பரகத் உண்டு என்ற நபியவர்களின் வார்த்தையின் நடை முறையாக இத்திருமணத்தை நாம் அறிந்து கொள்ள முடியம். ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அடிமையல்ல, நபியவர்களின் மணைவியே!

அன்னை ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை வலீமா தினத்தன்று முஸ்லிம்கள் நபிகளாரின் அடிமைப் பெண் என்றே கருதினார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அடிமையல்ல, தனது மனைவி தான் என்பதை மக்களுக்கு பகிரங்கப் படுத்தினார்கள். அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: முஸ்லிம்கள், ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை (நபியவர்களின் துணைவி)யரில் ஒருவரா? அல்லது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடிமைப் பெண்ணா? என்று பேசிக் கொண்டனர்.

அப்போது ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜாப் – திரையிட்(டுக் கொள்ளும்படி கட்டளையி)ட்டால், அவர் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியரில் ஒருவர் அப்படி அவர்களுக்குத் திரை(யிட்டுக் கொள்ளும்படி கட்டளை)யிடாவிட்டால், அவர் அடிமைப் பெண்களில் ஒருவர் என்று (மக்களில் சிலர்) கூறினர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது வாகனத்தில் புறப்பட்டபோது தமக்குப் பின்னால் ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்காக இருக்கையமைத்து இடம் கொடுத்து (அவர்கள் அமர்ந்த பிறகு) ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும் மக்களுக்குமிடையே திரையிட்டு இழுத்து (மூடி) விட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்) (புகாரி 5085)

கணவனின் கவுரவம் காத்த மனைவி. :

நபியை விட அழகிய குணம் கொண்ட ஒருவரை பார்த்ததில்லை என அண்ணை ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் (முஸ்னத் அபீ யஃலா) இன்றைய காலத்தில் பெரும்பாலான திருமணங்கள் விவாகத்தில் முடிகின்றன. இதற்குறிய முக்கிய காரணமாக அறியப்படுவது தம்பதிகள் தமது துணைக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் வழங்க வேண்டிய உரிமைகளையும் சரியாக புரியாமையாகும். இதனால் தான் இனிமையில் ஆரம்பிக்கும் திருமணங்கள் முடிவில் கசப்பானதாக மாறிவிடுகின்றன.

திருமண வாழ்வில் நாள்தோறும் பிரச்சினைக்குள்ளாகும் தம்பதியர்களிடத்தில் “உங்கள் வாழ்க்கைத் துணை எப்படிப்பட்டவர்?” என்று கேட்டால் பெருமூச்சுடன் “நல்லவர்” என்று சொல்வார்கள். சிலர் வாய் திறந்த மாத்திரத்திலேயே தன் துணையின் குறைகளை பகிரங்கப் படுத்தி சந்தி சிரிக்க வைத்து விடுவார்கள். பெரும்பாலானவர்கள் எனது கணவன் மிகச் சிறந்தவர் என்றோ அல்லது என் மனைவி மிகவும் சிறந்தவள் என்றோ நற்சான்று பகிர மாட்டார்கள். ஆனால் இந்த உலக மக்களுக்காக இறைவனால் அனுப்பப்பட்ட மிகச் சிறந்த வழிகாட்டியான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ “உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியிடத்தில் சிறந்தவர்” என்ற செய்தியை எத்தி வைத்தது மட்டுமன்றி, அதனை செயல் வடிவத்திலும் கொண்டு வந்து ஒரு சிறந்த கணவனுக்கு முன்மாதியாக திகழ்ந்தார்கள்.

அண்ணை ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மாத்திரமன்றி தனது அணைத்து மனைவியரிடத்திலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு சிறந்த கணவர் என்ற நற்சான்றைப் பெற்றுக் கொண்டார்கள். அண்ணை ஸபிய்யா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்ந்து கூறுமளவு அவர்களுடைய குடும்ப வாழ்வு எப்படி இருந்தது என்பதைப் பார்ப்போம்.

நபியவர்களுடன் பிரயாணத்தில் :

பல குடும்பங்களில் கணவன் மணைவி வெளியிடங்களுக்கு சென்றால் அருகருகில் அமர்ந்து கொள்ள மாட்டார்கள். பக்கத்தில் கூட நிற்பதற்கு வெட்க்கப்படுவார்கள். சொல்லப் போனால் யாரையோ பார்ப்பதைப் போன்று பார்ப்பார்கள். காரணம் பிறர் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் தான். இதனால் வெளியிடங்களில் தன் மனைவி எதிர்நோக்கும் அசௌகரியங்களைக் கணவனோ, தன் கணவன் எதிர்நோக்கும் அசௌகரியங்களை மணைவியோ கூட கவனத்தில் கொள்ள மாட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களுடைய அன்பு மனைவி ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் எப்படி ஒருவருக்கொருவர் உதவியாக வெளியிடங்களில் கூட நடந்து கொண்டார்கள் என்பதை கீழுள்ள சம்பவங்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் கூறியதாவது :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கைபருக்கு(ப் படையெடுத்து) வந்து, அல்லாஹ் (கமூஸ்) கோட்டையை அவர்களுக்குத் திறந்துவிட்டபோது, ஸஃபிய்யா பின்த் ஹுயை ரளியல்லாஹு அன்ஹா என்பவரின் அழகு பற்றிக் கூறப்பட்டது. புது மணப் பெண்ணாக இருந்த அவருடைய கணவர் கொல்லப்பட்டுவிட்டார். அவரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (போர்ச் செல்லத்தில்) தமது பங்காகப் பெற்று (மணந்து) கொண்டார்கள். அவரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடன் அழைத்துக்கொண்டு புறப்பட்டார்கள். “சத்துர் ரவ்ஹா’ எனுமிடத்தை நாங்கள் அடைந்தபோது அவர் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். பிறகு (பேரீச்சம் பழம், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றைக் கலந்து) “ஹைஸ்’ எனப்படும் ஓர் உணவைத் தயாரித்து சிறிய தோல்விரிப்பில் வைத்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (என்னிடம்) “”உம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு அறிவியும்!” என்றார்கள்.

ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மணந்ததற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழங்கிய மணவிருந்தாக அது அமைந்தது! பிறகு நாங்கள் மதீனாவை நோக்கிப் புறப்பட்டோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒட்டகத்தின் மேல், ஒரு போர்வை (போன்ற அங்கி)யால் ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைச் சுற்றி திரை அமைத்தார்கள். பிறகு ஒட்டகத்தின் அருகில் அவர்கள் அமர்ந்தார்கள். ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முழங்கால் மீது தமது காலை வைத்து ஒட்டகத்தில் ஏறினார்கள். (புகாரி : 2235)

அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர் கள் கூறியதாவது:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உஸ்ஃபானிலிருந்து (போர் முடிந்து) திரும்பிய போது நாங்கள் அவர்களுடன் இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது வாகனத்தின் மீது அமர்ந்திருந்தார்கள். (தமது துணை வியார்) ஸஃபிய்யா பின்த்து ஹுயை ரளியல்லாஹு அன்ஹா அவர்களை (வாகனத்தில்) தமக்குப் பின்னே அமர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய ஒட்டகம் கால் சறுக்கி விட அவர்களிருவரும் ஒரு சேரக் கீழே விழுந்தார்கள்.

உடனே, அபூ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (தம் வாகனத்திலிருந்து) கீழே குதித்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக!” என்று கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “(முதலில்) அந்தப் பெண்ணை (ஸஃபிய்யாவை) கவனி” என்று கூறினார்கள். உடனே, அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு துணியைத் தம் முகத்தின் மீது போட்டு மூடிக் கொண்டு ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் சென்று அவர்கள் மீது அந்தத் துணியைப் போட்டார்கள். பிறகு இருவருக்கும் அவர்களுடைய வாகனத்தைச் சரிசெய்து கொடுத்தார்கள். உடனே அவ்விருவரும் (வாகனத்தில்) ஏறிக் கொண்டார்கள்.

நாங்கள் அல்லாஹ்வின் தூதரைச் சுற்றிலும் (வட்டமாக) நின்று கொண்டு அவர்களுக்குப் பாதுகாப்பாகச் சென்றோம். நாங்கள் மதீனாவை நெருங்கியவுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “பாவ மன்னிப்புக் கோரியவர்களாக எங்கள் இறைவனையே வணங்கியவர்களாக (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாக நாங்கள் திரும்பிக் கொண்டிருக்கின்றோம்” என்று கூறினார்கள். மதீனாவிற்குள் நுழையும் வரை அவர்கள் இப்படியே சொல்லிக் கொண்டிருந்தார்கள். (புகாரி : 3085)

அண்ணை ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு நபியவர்கள் தம் வாகனத்தில் ஏறுவதற்கு உதவி செய்தது மட்டுமன்றி, ஒட்டகத்திலிருந்து இருவரும் கீழே விழுந்த போது நபியைக் காப்பாற்ற தோழர்கள் ஓடி வந்த நேரத்தில் உடனடியாக தனது மனைவியை காப்பாற்றுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தோழர்களுக்கு கட்டளையிடுகின்றார்கள். இந்த சம்பவம் நபித் தோழர்களின் முன்பாகவே நடைபெருகின்றது. அடுத்தவர்கள் முன்னால் நபியவர்கள் தனது மனைவியுடன் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை மேற்கண்ட செய்தி உணர்த்துவதைப் போலவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அண்ணை ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் எவ்வளவு பாசமாக பழகிய கணவன் மனைவி என்பதையும் மேற்கண்ட சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

கவலையின் போது ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை ஆறுதல் படுத்திய

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் :

அன்னை ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைப் பற்றி யூதப் பெண் என்று மற்ற மனைவியரில் சிலர் கூறிய ஒரு சந்தர்ப்பத்தில் ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆறுதல் வார்த்தைகள் கூறி தேற்றியது மாத்திரமல்லாமல் அண்ணை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மிகச் சிறந்த வார்த்தைகளைக் கொண்டு சிறப்பித்துப் பேசினார்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஸஃபிய்யாவை பற்றி என்ன நினைக்கின்றாய் என்று நபி கேட்டார்கள். அவர் ஒரு யூதப் பெண் என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா பதில் சொன்னார்கள். அப்படி கூற வேண்டாம். அவர் இஸ்லாத்தை ஏற்றுவிட்டார் அவருடைய இஸ்லாம் அழகானது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அல் இஸாபா- 11401)

கணவன் மீது கொண்ட பாசத்தினால் தீட்டிய திட்டம் :

எவருடைய மனைவியானாலும் கணவன் தன்னுடன் மாத்திரம் மிகவும் பாசமாகவும், பரிவாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இதற்கு நபியின் மனைவியரும் விதிவிலக்கானவர்கள் அல்ல.

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தேனும் இனிப்பும் மிக விருப்பமானவைகளாக இருந்தன. அஸர் தொழுகையை முடித்ததும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் துணைவியரிடம் செல்வார்கள்; அவர்களில் சிலருடன் நெருக்கமாகவும் இருப்பார்கள். இவ்வாறு (ஒரு முறை) தம் துணைவியரில் ஒருவரான ஹஃப்ஸா பின்த் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்று வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்து விட்டார்கள். ஆகவே, நான் ரோஷப்பட்டேன். அது குறித்து நான் விசாரித்தேன். அப்போது ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்நத ஒரு பெண் அவருக்கு (தாயிஃப் நகர சுத்த)த் தேன் உள்ள ஒரு தோல் பையை அன்பளிப்பாக வழங்கினாள் என்றும்இ அதிலிருந்து தயாரித்த பானத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது.

உடனே நான் “அல்லாஹ்வின் மீதாணையாக! இதனை நிறுத்துவதற்காக இதோ ஒரு தந்திரம் செய்வோம்” என்று கூறிக்கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியரில் ஒருவரானன சவ்தா பின்த் ஸம்ஆவிடம், (ஹஃப்ஸா வீட்டில் தேன் அருந்திவிட்டு) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்கள் அருகில் வருவார்கள். அப்போது கருவேல பிசின் சாப்பிட்டீர்களா? என்று கேளுங்கள்! “இல்லை’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவார்கள். உடனே தங்களிடமிருந்து ஏதோ துர்வாடை வருகிறதே அது என்ன? என்று கேளுங்கள்! அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “எனக்கு ஹஃப்ஸா (ரளியல்லாஹு அன்ஹா) தேன் பானம் புகட்டினார்’ என்று கூறுவார்கள். உடனே நீங்கள் “இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்துவிட்டு (தேனை உறிஞ்சிக் கொண்டு) வந்திருக்கலாம். (ஆகவேதான் வாடை வருகிறது)’ என்று சொல்லுங்கள்! நானும் இவ்வாறே சொல்கிறேன். ஸஃபிய்யாவே! நீங்களும் இவ்வாறே சொல்லுங்கள் என்று (மற்றொரு துணைவியாரான ஸஃபிய்யாவிடமும்) கூறினேன்.

(நான் சொன்ன பிரகாரம் செய்துவிட்டு) சவ்தா (ரளியல்லாஹு அன்ஹா)அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் வீட்டு வாசலில் வந்து நின்றவுடன் உங்களுக்கு பயந்து நீங்கள் என்னிடம் சொன்னபடி நபியவர்களிடம் சொல்ல விரைந்தேன். என்னை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நெருங்கியதும்இ “அல்லாஹ்வின் தூதரே! கருவேலம் பிசினைச் சாப்பிட்டீர்களா?’ என்று கேட்டேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “இல்லை’ என்றார்கள். “தங்களிடமிருந்து ஏதோ துர்வாடை வருகிறதே அது என்ன?’ என்று கேட்டேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஹஃப்ஸா எனக்குத் தேன் பானம் புகட்டினார்’ என்றார்கள். உடனே நான் “இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (தேன் உறிஞ்சி) விட்டு வந்திருக்கலாம். (ஆகவேதான் தேனில் வாடை ஏற்பட்டது போலும்.)’ என்று சொன்னேன்.

(தொடர்ந்து ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்:) என்னிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்த போது நானும் அவ்வாறே கூறினேன். ஸஃபிய்யாவிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சென்றபோதும் அவரும் அவ்வாறே சொன்னார். பிறகு (மறுநாள்) ஹஃப்ஸாவிடம் சென்றபோது “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் அருந்துவதற்குச் சிறிது தேன் தரட்டுமா?” என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அது எனக்குத் தேவையில்லை” என்று சொன்னார்கள்.

(இது குறித்து) சவ்தா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் “அல்லாஹ்வின் மீதணையாக! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அதைக் குடிக்கவிடாமல் தடுத்துவிட்டோமே’ என்று சொன்னார்கள். உடனே அவரிடம் நான்இ “சும்மா இருங்கள்! (விஷயம் பரவிவிடப்போகிறது!)” என்று சொன்னேன். மேற்கண்ட சம்பவத்தில் அண்ணை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும், ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் தமது கணவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது கொண்ட பாசத்தின் வெளிப்பாடாக ஒரு திட்டம் தீட்டி அதனை நடைமுறைப்படுத்தியதைப் பார்க்க முடிகின்றது.

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் குழுவைச் சேர்ந்தவர் :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்கள் இரு குழுக்களாக இருந்தார்கள் அதில் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் குழுவில் ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இணைந்திருந்தார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதருடைய மனைவி மார்களான நாங்கள் இரு குழுக்களாக இருந்தோம். ஒரு குழுவில் நானும் ஹஃப்ஸா, ஸஃபிய்யா, மற்றும் சவ்தா ஆகியோரும் இருந்தோம். மற்றொரு குழுவில் உம்மு சலமா அவர்களும் அல்லாஹ்வின் தூதருடைய மற்ற மனைவி மார்களும் இருந்தனர். (புகாரி : 2581)

இஃதிகாபின் போதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை    சந்தித்தவர்கள் :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்கும் சந்தர்ப்பங்களில் நபியின் மனைவியாகிய ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அடிக்கடி சந்திக்கக்கக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.

ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்கும்போது அவர்களைச் சந்திக்க நான் செல்வேன். சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் என்னுடன் எழுந்து பள்ளியின் வாசல் வரை வருவார்கள். பள்ளியின் வாசலுக்கு அருகிலிருந்த உம்மு சலமாவின் வாசலை அடைந்தபோது அன்ஸாரிகளில் இருவர் நடந்து சென்றனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சலாம் கூறினர். அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நில்லுங்கள்; இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் “ஹுயை (ரளியல்லாஹு அன்ஹா) ஆவார்” எனக் கூறினார்கள். அவ்விருவரும் (ஆச்சரியத்துடன்) “சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்றனர். இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது அவ்விருவருக்கும் உறுத்தியது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” எனக் கூறினார்கள். (புகாரி : 2035)

இஸ்லாத்தின் அடிப்படை செய்திகளில் ஒன்றை அறிவித்தவர்கள் :

இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளில் மிக முக்கியமானவைகளில் ஒன்று ஜோசியம்இ குறிபார்ப்பது போன்றவற்றை நம்பிக்கை கொள்ளக் கூடாது என்பதாகும். இது பற்றிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸை அறிவித்தவர்களில் ஒருவராக அன்னை ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இருக்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒருவர் சோதிடனிடம் சென்று எதைப் பற்றியாவது கேட்டால் அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை. இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியரில் சிலரிடமிருந்து ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் : 4488)

இறுதி ஹஜ்ஜில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் கலந்து கொண்டவர்கள் :

நபியவர்கள் தனது வாழ்நாளில் செய்த முதலும் இறுதியுமான ஹஜ்ஜில் நபியவர்களுடன் கலந்து கொண்ட மனைவியர்களில் அண்ணை ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் ஒருவராவார்.

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாவது: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஹஜ்ஜை முடித்துக் கொண்டு மக்காவிலிருந்து) புறப்பட விரும்பினார்கள். அப்போது (தம் துணைவியாரான) ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தமது கூடார வாசலில் சோர்வாகவும் கவலையாகவும் இருக்கக் கண்டார்கள். ஏனெனில், அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறைஷியரின் வழக்கில் (செல்லமாகச் ஏசப்படும் வார்த்தையில்) அல்லாஹ் உன்னை அறுக்கட்டும்! உனக்குத் தொண்டை வலி வரட்டும்! நீ எம்மை (மக்காவிலிருந்து புறப்படவிடாமல்) தடுத்துவிட்டாய்” என்று கூறினார்கள். பிறகு, “நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆவது) நாளில் நீ (கஅபாவைச்) சுற்றி வந்தாயா?” என்று கேட்டார்கள். ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், “ஆம்” என்று சொன்னார்கள். “அப்படியானால் (உன் ஹஜ் பூர்த்தியாகி விட்டது). நீ புறப்படு” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். (புகாரி : 6157)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் ஒரு அங்கமாகவே நபியுடனேயே இருந்தவர்களில் ஒருவராக ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் திகழ்கின்றார்கள். இளவரசியாக இருந்துஇ புனித இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு இறுதியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியாகிய அன்னை ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஹிஜ்ரி 52 ல் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக் காலத்தின் போது மரணித்தார்கள்.

source: http://rasminmisc.com/safiyya-rali-varalaru/