ஹஸீனா அம்மா பக்கங்கள் (4) |
![]() |
![]() |
![]() |
Thursday, 15 September 2016 07:11 | |||
ஹஸீனா அம்மா பக்கங்கள் (4) குழந்தை வளர்ப்பு "ஒரு மனிதன் தன் குழந்தைக்கு ஒழுக்கம் கற்றுக்கொடுப்பது ஒரு மரக்கால் தானியம் தர்மம் செய்வதைவிடச் சிறந்தது" ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். சதக்கா (தர்மம்) செய்வது சிறப்புடையதே, எனினும் தம் மக்கட்கு ஒழுக்கம் கற்றுக்கொடுப்பது அதிலும் சிறப்பானதாகும். "தந்தை தன் மக்களுக்குச் செய்யும் நன்கொடையில் சிறந்தது நல்ல கல்வியும், சிறந்த ஒழுக்கத்தையும் கற்றுத்தருவதாகும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். நல்ல கல்வியும், சிறந்த ஒழுக்கமும் இருந்தால் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமை, அடியானுக்கு செய்ய வேண்டிய கடமை முதலியவற்றை உணர்ந்து நிறைவேற்ற முயலுவான். இல்லையெனில், மக்களாலும், பொருளாசையாலும் இம்மை, மறுமை இரண்டுமே சீர்படாது கெட்டொழிந்துவிடும். தர்மமும் கடனும் "தர்மம் செய்வதற்கு பத்து மடங்கு நன்மை. கடன் கொடுப்பதற்கு பதினெட்டு மடங்கு நன்மை" என்று சொர்க்க வாசலில் எழுதியிருப்பதை மிஃராஜ் இரவில் கண்டேன். "தர்மத்தைக் காட்டிலும் கடன் கொடுப்பது எப்படிச் சிறந்ததாகிறது?" என்று ஜிப்ராயீலைக் கேட்டேன். "தர்மம் கேட்போர் தம்மிடம் ஏதும் பொருள் இருக்கும்போது கூடக் கேட்கலாம்; ஆனால், கடன் கேட்பவரோ தேவையில்லாமல் தம்மிடம் பொருளை வைத்துக்கொண்டு கேட்க மாட்டார்களே!" என்று ஜிப்ராயீல் (அலைஹிஸ்ஸலாம்) பதிலளித்தார்" என்று பெருமானர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (பிலால்) அண்டை வீட்டார் சேவை இறைவன் தன் அருள்மறையில் நவின்றுள்ளான்: "உறவினர்களான அண்டை வீட்டார், உறவினரல்லாத அணடை வீட்டார், நண்பர் ஆகியோருக்கு உதவி செய்யுங்கள்" என்று. (அல்-குர்ஆன் -ஸூரத்துன் நிஸா) மேற்கண்ட திருவசனத்தில் மூன்று விதமான அண்டை வீட்டார்களைப் பற்றி கூறப்படுகிறது. 1. உறவினரான அண்டை வீட்டார். 2. உறவினரல்லாத அண்டை வீட்டார். 3. தொழில், பிரயாணம் ஆகிய சந்தர்ப்பங்களில் ஏற்படும் நண்பர்களும் அண்டை வீட்டாரின் அந்தஸ்தைப் பெறுகின்றனர். இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் இம்மூவரும் மூன்று வகையான அண்டை வீட்டார். அவனி போற்றும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மேலும் மற்றோரிடத்தில், "தந்து அண்டைவீட்டார் பசித்திருக்க உண்பவன் உண்மை முஸ்லிம் அல்ல" என்றும் நவின்றுள்ளார்கள். ''ஹாஜி'' என்ற பட்டம் பற்றி "காயிதே மில்லத்" அவர்கள் "அன்றாடம் தொழுதுகொள்வருக்கு "தொழுகையாளி" என்ற பட்டமில்லை. வருடம் தவறாது ரமளானில் நோன்பிருப்பவருக்கு "நோன்பாளி" என்ற பட்டமில்லை. ஜகாத் - தர்மம் வழங்குபவருக்கு "கொடையாளி" என்ற பட்டமில்லை. ஆனால், ''ஹஜ்'' செய்தவருக்கு மட்டும் "ஹாஜி" என்ற பட்டம் ஏன்?" என்று காயிதே மில்லத் இஸ்மாயீல் சாஹிபிடம் ஒரு சகோதரர் கேட்டபோது, அதற்கு அவர்கள் அளித்த பதில்: "தொழுகை, நோன்பு, ஜகாத்-தர்மம் போன்ற கடமைகளெல்லாம் ஒரு நாளில் அல்லது ஒரு தடவையில் முடிவுபெறும் கடமையல்ல. மனிதன் உயிர் உடலை விட்டுப் பிரியும்வரை அவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், 'ஹஜ்' அப்படியல்ல. ஒருவர் ஒருமுறை ஹஜ் செய்துவிட்டாலே கடமை பூர்த்தியாகிவிடுகிறது. கடமை பூர்த்தியாகி விட்டபிறகு பட்டத்தைப்பெற அவருக்கென்ன தடை?" என்றார்கள். குழப்பத்தில் ஆழ்த்தும் செல்வம் "ஒவ்வொரு உம்மத்துக்கும் குழப்பத்தில் ஆழ்த்தும் பொருள் ஒன்று இருக்கும். என் உம்மத்துக்கு அதேபோல குழப்பத்தில் ஆழ்த்தும் பொருளாக செல்வத்தை இறைவன்" ஆக்கியுள்ளான். (நபிமொழி) ஆறின் அழகு ஆறில் 1. கல்வியின் அழகு செயலில், 2. நீதியின் அழகு அதிகாரத்தில். 3. கொடையின் அழகு சீமானிடத்தில், 4. பாவமீட்சியின் (தவ்பா) அழகு வாலிப பருவத்தில், 5. பொறுமையின் அழகு ஏழ்மையில், 6. வெட்கத்தின் அழகு பெண்களிடத்தில். அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்படும் மூவரின் துஆ 1. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக கேட்கும் துஆ. 2. பயணியின் துஆ. 3. அநீதம் இழைக்கப்பட்டவர் கேட்கும் துஆ.
|