Home இஸ்லாம் ஹஸீனா அம்மா பக்கங்கள் "இறைவன் கொடுத்த உயிர்" ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை" (6)
"இறைவன் கொடுத்த உயிர்" ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை" (6) PDF Print E-mail
Sunday, 04 September 2016 09:11
Share

{jcomments on}

"இறைவன் கொடுத்த உயிர்" ஹஸீனா அம்மா அவர்களின் "எனது சுய சரிதை" (6)

அப்பொழுது நீடூர் நெய்வாசல் மெயின் ரோடில் இருக்கும் எங்கள் உறவினர் J.பக்கீர் முஹம்மத் (J.P.) அவர்களின் மனைவி மூத்த மகளை பெற்றெடுக்கும்போது  பிரசவம் பார்த்த வைத்தீஸ்வரன்கோயிலைச் சேர்ந்த விஜயலட்சுமி எனும் நர்ஸின் அறிமுகம் கிடைத்தது.

ஒரு மாத காலம் விஜயலட்சுமி நர்ஸ் எங்கள் வீட்டிலேயே தங்கி என்னை கவனித்துக்கொண்டார்கள். என் அன்புக் கணவர் என்மீது கொண்டிருந்த அக்கறையும், பொறுப்புணர்வுமே இதற்குக்காரணம். விஜயலட்சுமி நர்ஸ் எங்கள் குடும்பத்தில் ஒருவரைப்போன்றே நடத்தப்பட்டார்கள், நடந்து கொண்டார்கள். என் பிள்ளைகள் மீது மட்டற்ற பிரியத்தையும், அன்பையும் அவர்கள் செலுத்தினார்கள். அவர்கள் மரணிக்கும்வரை எங்கள் குடும்பத்தில் பலருக்கு பிரசவம் பார்த்தார்கள்.

விஜயலட்சுமி நர்ஸ் மூலமே இரண்டு மாதங்கள் கழித்து 30-11-56 அன்று ஆண் குழந்தையை பெற்றெடுத்தேன். அடுத்தடுத்த குழந்தைகள் பெறும்போதும் இவர்களே பிரசவத்தை சிறப்பாக கையாண்டார்கள். அனைத்தும் சுகப்பிரசவம் தான். அத்தனையும் எங்கள் வீட்டிலேயே தான். எங்கள் வீட்டிலுள்ள ஒரு அறைக்கு பிரசவ அறை என்றே பெயருண்டு.

எங்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்த எங்கள் அருமை மகன் ஜலாலுத்தீன் விரும்பியபடி, சொல்லியிருந்தபடி ஸலாஹுத்தீன் என்ற பெயரே குழந்தைக்குச் சூட்டப்பட்டது. அப்பாஸ் அப்பா எங்களுடனேயே இருந்தார்கள்.

ஸலாஹுத்தீன் 3 மாதக் குழந்தையாக இருந்தபோது என் கணவர் வியட்நாம் சென்றார்கள். என் பிறந்த வீட்டினர் என் கணவரைப் பார்த்து மிகவும் மகிழ்வுற்றனர். 15 தினங்கள் கழித்து என் கணவர் ஊர் திரும்பும்போது எனக்கும், பிள்ளைகளுக்கும் நிறைய அன்பளிப்புப் பொருள்களை அவர்கள் அனுப்பினார்கள்.

என் கணவர் வியட்நாமிலிருந்து திரும்பிய இரு மாதங்களில் ஆமினா அம்மா அழைத்ததால் அப்பாஸ் அப்பா தங்கள் சொந்த ஊரான தேரிழந்தூருக்குச் சென்று விட்டார்கள்.

கணவரின் ஹஜ்ஜுப் பயணம்

1957 -ல் நான் கர்ப்பமாக இருந்தேன். என் கணவர் தன் நண்பர், பள்ளிவாசல் தெரு மூஸா அவர்களுடன் புனித ஹஜ் பயணம் புறப்பட்டார்கள். என்னை மறுமுறை செல்லும்போது அழைத்துப் போவதாக கூறினார்கள். வீட்டில் நானும், எங்கள் செல்வங்கள் மட்டும் இருந்தோம். நான் அல்லும் பகலும் என் கணவர் புனித ஹஜ் கடமையை முடித்துவிட்டு நலமுடன் ஊர் திரும்ப துஆ செய்தேன்.

என் கணவர் புனிதப் பயணத்தில் இருக்கும்போதே அப்பாஸ் அப்பா மெளத்தானார்கள். மூன்று மாதங்கள் கழித்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு என் கணவர் தாயகம் திரும்பினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

என் கணவரின் தாய் மாமா நான்கு பேர்! மாமா நால்வருமே காலமாகிவிட்டிருந்தார்கள். மாமா நால்வரின் மனைவிமார்களும் (ஹமீதாம்மா, சஃபூராம்மா, காஸராம்மா, ராபியா) எங்கள் மேல் பிரியமாக இருந்தார்கள். எனது மாமியார் (என் கணவரின் முதல் மனைவியின் மாமியார்) ஹமீதாம்மா தான் மூத்த சகோதரி.

என் கணவர் வந்ததும் ஹாஜியை சந்திக்க மாமிகளும், மற்ற உறவினர்களும் வந்தார்கள். அடுத்த மாதம் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. மெஹ்ருன்னிஸா எனப் பெயர் சூட்டினோம். வீட்டுபணியில் எனக்கு உதவுவதற்காக Ba Haniff பாண்டிச்சேரியிலிருந்து மல்லிகாவை மூன்று மாதங்களுக்கு அனுப்பி வைத்தார்கள்.

மூத்த மகள் ஃபாத்திமாவுக்கு 15 வயது. பல இடங்களில் இருந்தும் பெண் கேட்டு வந்தார்கள். இந்தியப் பழக்கவழக்கம் எனக்குத் தெரியாது, எனவே மெத்திஸ் (அதாவது வியட்நாமும் வசிக்கும் நாட்டின் உறவும் கலந்தவர்கள்) மாப்பிள்ளைக்கு நம் மகளை மணம் முடித்துக் கொடுக்கலாம் என்ற என் கருத்துக்கு என் கணவர் இசைந்தார்கள். தஞ்சையில் வசித்து வந்த என் தோழி ஃபரீதாவுக்கு (இவரும் என்னைப்போல் வியட்நாமிலிருந்து இந்திய மாப்பிள்ளைக்கு வாக்கப்பட்டு வந்தவர்) அறிமுகமான மெத்திஸ் குடும்பம் ஒன்று லால்பேட்டையில் இருந்தது.

மரியம், இப்ராஹிம்ஷா. இவர்களுக்கு மூன்று ஆண் மக்கள், 3 பெண் மக்கள். மூத்த மகன் ஷர்ஃபுத்தீன். நானும், என் தோழி ஃபரீதா இருவரும் என் மகள் ஜமீலாவுடன் மாப்பிள்ளை பார்க்கச் சென்றோம். எங்களுக்கு மாப்பிள்ளை பிடித்துப் போயிற்று. மாப்பிள்ளை நம் பெண்ணுக்குப் பொருத்தமானவர் எனத் தோன்றியது. என் கணவர் மாப்பிள்ளையைப் பார்த்து சம்மதம் தெரிவித்தார்கள்.

என் கணவர், "மாப்பிள்ளை திருமணம் முடித்ததும் வீட்டின் மூத்த மகனாக பொறுப்பேற்க வேண்டும்" என்று கூறினார்கள். ஏனெனில் எங்கள் குடும்பப் பொறுப்புகளைக் கவனித்துக்கொள்ள மூத்த ஆண் மகன் இல்லை. மாப்பிள்ளை இதற்கு ஒப்புக்கொள்ள மறுத்தார். மிகவும் வற்புறுத்தி குடும்பத்தின் சூழ்நிலையை எடுத்துக் கூறவும் மாப்பிள்ளையும், அவர் பெற்றோரும் சம்மதித்தார்கள்.

மூத்த மகளின் திருமணம்

1959 -ல் ஃபாத்திமா, ஷர்ஃபுத்தீன் திருமணம் நீடூரில் எங்கள் வீட்டில் சிறப்பாக நடைபெற்றது. நிகாஹ் நடக்கப்போகும் நேரத்தில் மணமகன், விரலில் தங்க மோதிரம் அணிந்திருப்பதைப் பார்த்த எனது கணவர் மணமகனுக்கு அருகில் இருந்தவர்களிடம் ஜாடை காண்பித்து மாப்பிள்ளையின் விரலிலுள்ள மோதிரத்தை கழட்டிவிட்டு நிகாஹ் நடத்துமாறு பணிக்கவும், மாப்பிள்ளையும் உடனே தங்க மோதிரத்தை கழட்டி விட்டு நிகாஹ் செய்து கொண்டார்.  அதற்குப்பிறகு என்மருமகன் தங்கம் அணிந்ததே இல்லை.

மருமகன் ஷர்ஃபுத்தீன் குடும்பத்தின் மூத்த மருமகனாக தன் கடமைகளை, பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றினார்.

என் கணவர் குத்தாலத்துக்கு அருகில் உள்ள கொக்கூர் என்னும் கிராமத்தில் வயல் வாங்கியிருந்தார்கள். அந்தப் பண்ணையின் பொறுப்பை மருமகன் ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட்டார்கள். என் கணவர் மாயூரம் ஜங்ஷனில் M.A.VAHAB&CO என்ற பெயரில் மளிகைக்கடை (Whole Sale) வைத்திருந்தார்கள். அப்பொழுதெல்லாம் மாயூரம் ஜங்ஷனில் உள்ள கடைகளை நீடூர் மக்களே பெரும்பாலும் வைத்திருந்தனர்.

என் கணவர் கடையையும், மருமகன் விவசாயத்தையும் சிறப்பான முறையில் கவனித்து வந்தார்கள்.

டிசம்பர் 10 ஆம் தேதி எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. எங்கள் வீட்டு மாடியில் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை பிறந்த செய்தியைக் கேட்டதும், என் கணவர் மூத்த மகள் ஃபாத்திமாவிடம், "அம்மாவிடம் கவலைப்பட வேண்டாம் என்று சொல், பெண் குழந்தை பிறப்பது பரக்கத்" என்று சொல்லி அனுப்பினார்கள். டாக்டர் சென்றதும் மாடிக்கு வந்த என் கணவர் குழந்தையைத் தூக்கி குழந்தையின் காதுகளில் பாங்கும், இகாமத்தும் ஓதினார்கள். பத்ருன்னிஸா என்று பெயர் சூட்டினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

4-5-1960 -ல் மூத்த மகள் ஃபாத்திமாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குடும்ப நர்ஸான விஜயலட்சுமியே இந்த பிரசவத்தையும் எங்கள் வீட்டிலேயே சிறப்பாக கையாண்டார். எங்களின் முதல் பேரக்குழந்தைக்கு முஹம்மது முஹ்யித்தீன் என்று பெயர் சூட்டப்பட்டது.

தொடர்ச்சிக்கு  கீழுள்ள  "Next"    "கிளிக்"  செய்யவும்

www.nidur.info

நீடூரில்  எங்களுக்காக எனது அன்புக்கணவர் அவர்களால், கிளியனூர் அப்பா ஷரீஃப் அவர்களின் மேற்பார்வையில் 1953-ல்  கட்டப்பட்ட எங்களது அழகிய இல்லம்.

எங்கள் வீட்டின் அழகிய உட்புறத்தோற்றத்தின் ஒருபகுதி. 

வியட்நாமில் இருந்தபோது சிறிய வீட்டில் தங்கியிருந்த எங்களுக்கு இந்தியாவில் அழகிய இல்லத்தை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி.

www.nidur.info