Home இஸ்லாம் கட்டுரைகள் இஸ்லாமிய உயர்வுக்கு வாலிபர்களின் பங்கு!
இஸ்லாமிய உயர்வுக்கு வாலிபர்களின் பங்கு! PDF Print E-mail
Saturday, 27 August 2016 09:26
Share

இஸ்லாமிய உயர்வுக்கு வாலிபர்களின் பங்கு!

      Abbas Riyazi      

[  வாலிபம் ஒருவகையான பைத்தியம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள். ஆம் உண்மைதான்! சிலருக்கு பெண் மீது பைத்தியம்-சிலருக்கு பணத்தின் மீது பைத்தியம்-சிலருக்கு அழகான ஆடையின் மீது பைத்தியம்-சிலருக்கு கம்ப்யூட்டர், லேப்டாப் மீது பைத்தியம்-சிலருக்கு மொபைல் பைத்தியம்- வேறு சிலருக்கோ பைக், கார் மீது பைத்தியம்.

ஒரு நாளில் பெரும்பகுதியை செல்போன் பயன்பாட்டில் மட்டுமே கழிக்கிற எத்தனையோ இளைஞர்கள் உண்டு. இதுவும் ஒருவகை போதைதான். அவர்கள் செல்போனை பிரிந்தாலோ அல்லது அவர்களின் செல்போன் தொலந்தாலோ ஒருவகையான மனநிலை பாதிப்புக்குள்ளாகி விடுவார்கள். இன்றைய இளைஞர்களின் கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் சவாலாக இருப்பது இணையதளங்களும், குறிப்பாக பேஸ்புக்கும் தான் என்று சமீபத்திய கணக்கெடுப்பு கூறுகிறது.

இவர்கள் பெற்றோரை பிரிந்துகூட இருந்துவிடுவார்கள், ஆனால் பேஸ்புக்கை பிரிந்து இவர்களால் இருக்க முடியாது. இங்கே நாம் இஸ்லாமிய இளைஞர்களை பற்றி கவலைப்படவேண்டும்.

தடம் புரளாத வாலிபனை பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்படுகிறான் என்றும், இறைவணக்கத்தில் ஈடுபடும் ஒரு வாலிபனுக்கு அல்லாஹ்தன் அர்ஷின் நிழலில் இடமளிப்பான் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.]

இஸ்லாமிய உயர்வுக்கு வாலிபர்களின் பங்கு!

ரப்புல் ஆலமீன் நமக்கு வழங்கிய அருட்கொடைகளில் உடல் ரீதியிலான அருட்கொடைகள் மிக அதிகம். நாம் அந்த அருட்கொடைகளை சரியாக பயன் படுத்தும் தருணம் வாலிப பருவம் தான்.

மனித வாழ்க்கையின் மூன்று பருவங்களில் வாலிபமே உயர்ந்து நிற்கிறது. காரணம் சிறுவயது அறியாமைக்குச்சொந்தமானது, வயோதிகம் இயலாமைக்குச்சொந்தமானது, இளமையே சாதனைக்குச்சொந்தமானதாகும்.

உலகில் சாதனையாளர்களாக வலம்வ ருபவர்கள் தங்களின் சாதனைக்கான விதையை வாலிபத்தில் தான் தூவினார்கள்.இதை அழகாக விவரிக்கிற அல்குர்ஆனின் வசனங்களை சற்று உற்றுநோக்கி கவனியுங்கள்.

الَّذِي خَلَقَكُم مِّن ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِن بَعْدِ ضَعْفٍ
قُوَّةً ثُمَّ جَعَلَ مِن بَعْدِ قُوَّةٍ ضَعْفًا وَشَيْبَةً
اللَّـهُ يَخْلُقُ مَا يَشَاءُ ۖ وَهُوَ الْعَلِيمُ الْقَدِيرُ

அல்லாஹ் தான் உங்களை (ஆரம்பத்தில்) பலஹீனமான நிலையில் படைக்கிறான்; பலஹீனத்திற்குப் பின்னர், அவனே பலத்தை உண்டாக்குகிறான்; (அந்தப்) பலத்திற்குப் பின், பஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான்; தான் நாடியதை அவன் படைக்கிறான் - அவனே எல்லாம் அறிந்தவன் பேராற்றலுடையவன்.

வாலிப பருவம் அல்லாஹ் நமக்கு அருளிய அனைத்து நிஃமத்துக்களும் முழுமையாக செயல்படும் பருவமாகும்.அதனால் தான் அல்லாஹ் அதை பலமிக்கது என்று வர்ணிக்கிறான்.

வாலிபம் பாக்கியமானது தான்,அதேசமயம் ஆபத்தானது.இந்த பருவத்தில் நிகழும் தீய பழக்கங்களின் விளைவு முழுவாழ்வையும் சங்கடத்தில் ஆழ்த்தி விடும்.அதனால் தான், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் நாளை மறுமையில் நடைபெறும் விசாரணை குறித்துச்சொல்லும்போது-

لن تزول قدما عبد يوم القيامة حتى يسأل عن أربع: عن عمره فيما أفناه، وعن شبابه فيما
أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وعن علمه ماذا عمل به

நாளை மறுமையில் நான்கு கேள்விக்கு பதில் கூறாதவரை ஒரு அடியானின் கால்கள் செயல்படாது. அவைகள்

1. வாழ்நாளை எப்படி கழித்தாய்?

2. வாலிபத்தை எப்படி அழித்தாய்?

3. பொருளை எப்படி சேர்த்தாய்? எப்படி செலவு செய்தாய்?

4. கற்ற கல்வியைக்கொண்டு என்ன அமல் செய்தாய்? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸில் கூறப்பட்ட வாழ்நாளுக்கு கீழ் வாலிபமும்வந்துவிட்டாலும் அல்லாஹ் வாலிபத்தை தனியாக விசாரிப்பான் என்பதிலிருந்து அதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளலாம்.

வாலிபம் ஒருவகையான பைத்தியம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள். ஆம் உண்மைதான்!சிலருக்கு பெண் மீது பைத்தியம்-சிலருக்கு பணத்தின் மீது பைத்தியம்-சிலருக்கு அழகான ஆடையின் மீது பைத்தியம்-சிலருக்கு கம்ப்யூட்டர், லேப்டாப் மீது பைத்தியம்-சிலருக்கு மொபைல் பைத்தியம்- வேறு சிலருக்கோ பைக், கார் மீது பைத்தியம்.

ஒரு நாளில் பெரும்பகுதியை செல்போன் பயன்பாட்டில் மட்டுமே கழிக்கிற எத்தனையோ இளைஞர்கள் உண்டு. இதுவும் ஒருவகை போதைதான். அவர்கள் செல்போனை பிரிந்தாலோ,அல்லது அவர்களின் செல்போன் தொலந்தாலோ ஒருவகையான மனநிலைபாதிப்புக்குள்ளாகிவிடுவார்கள். இன்றைய இளைஞர்களின் கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் சவாலாக இருப்பது இணையதளங்களும்,குறிப்பாக பேஸ்புக்கும் தான் என்று சமீபத்திய கணக்கெடுப்பு கூறுகிறது.

இவர்கள் பெற்றோரை பிரிந்துகூட இருந்துவிடுவார்கள், ஆனால் பேஸ்புக்கை பிரிந்து இவர்களால் இருக்க முடியாது. இங்கே நாம் இஸ்லாமிய இளைஞர்களை பற்றி கவலைப்படவேண்டும்.

தடம் புரளாத வாலிபனை பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்படுகிறான் என்றும், இறைவணக்கத்தில் ஈடுபடும் ஒரு வாலிபனுக்கு அல்லாஹ் தன் அர்ஷின் நிழலில் இடமளிப்பான் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.

15 வயதிற்குட்பட்ட ஒரு வாலிபன் சரியாக வழிகாட்டப்படவேண்டும்,அதை தவறவிட்டுவிட்டால் மீண்டும் சரியானபாதைக்கு கொண்டுவருவது கஷ்டமாகி விடும்.

அல்லாஹுத்தஆலா நபிமார்களுக்கு நபித்துவத்தை 40 வது வயதில் தான் தேர்வு செய்கிறான்.ஏனெனில் ஒவ்வொரு நபியும் தன் வாலிபத்தை பரிசுத்தமாகவும், மிகச்சிறந்த சாதனைக்குறியதாகவும் மாற்றிக்காட்டவேண்டும். இளமையின் இச்சையை கட்டுப்படுத்தி, இறைவணக்கத்தில் தன்னை ஈடுபடுத்தியவரே மக்களுக்கு வழிகாட்ட தகுதிபெற்றவர்.

அந்த அடிப்படையில் தங்களின் வாலிபத்தில் சாதனை புரிந்த ஐடியல் எங்ஸ்டர் அதாவது முன்மாதிரி இளைஞர்களை பற்றி அல்லாஹ் தன் திருமறையில் புகழ்ந்து கூறுகிறான்.

இப்றாஹீம் என்ற வாலிபர்!

இணைவைப்புக்கு எதிரான ஒரு இளைஞரின் குரல் உலகையே உலுக்கியது. இளமையின் துவக்கத்தில் படைப்புக்களை ஆய்வு செய்து படைத்தவனை தெரிந்துகொள்கிறார்கள்.இணைவைப்பின் கூடாரத்தில் பிறந்த இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் என்ற இளைஞரின் தவ்ஹீத் முழக்கம் தன் தகப்பனையே உசுப்பியது. 20 வயதை கூட தாண்டிடாத ஒரு இளைஞர் உலகத்தையே ஆட்சி செய்த நம்ரூதுக்கு முன் தன் ஆணித்தரமான கொள்கையை நிலைநாட்டினார்கள்.உலகில் முன்மாதிரி முஸ்லிம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

யூஸுப் என்ற வாலிபர்!

இவர்களின் வாழ்வு திருமறையின் தனி அத்தியாத்திற்கு சொந்தமானது.அழகு நிறைந்த ஒருவாலிபரின் பரிசுத்தமான ஒழுக்கமான வரலாற்றை அனுவாக அனுவாக அல்குர்ஆன் விவரிக்கிறது.

இளமையில் அவர்களின் பத்தினித்தனமான நடத்தைக்கு ஒரு பெரும் சோதனை வருகிறது.

ஒரு அழகரசியின் சபலத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்.இணங்கினால் அரச வாழ்க்கை,மறுத்தால் சிறை வாழ்க்கை.சபலத்தை விட சிறையே எனக்கு விருப்பம் என்று தேர்வு செய்கிறார்கள்.

قَالَ رَبِّ السِّجْنُ أَحَبُّ إِلَيَّ مِمَّا يَدْعُونَنِي إِلَيْهِ ۖ وَإِلَّا تَصْرِفْ عَنِّي كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ وَأَكُن مِّنَ الْجَاهِلِينَ

அவர், 'என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்" என்று (பிரார்த்தித்தவராக) கூறினார். (அல்குர்ஆன் 12:33)

அல்லாஹ் 12 ஆண்டு காலம் சிறைவாசத்தை கொடுத்தான்,பொருத்தார்கள். அப்பழுக்கற்ற அவர்களின் இளமைக்கு பரிசாக இரண்டு பெரும் நிஃமத்துக்களை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினான்.ஒன்று கனவுக்கு விளக்கம் சொல்லும் ஞானம்,மற்றும் எகிப்தின் ஆட்சி.

பொதுவாக- சந்தர்ப்பங்கள் அமையாத வரை யாவரும் நல்லவரே!சந்தர்ப்பமும்,சூழ்நிலையும் அமைந்தும் ஒருவர் பாவத்தை விட்டும் தன்னை பாதுகாக்கவேண்டுமானால் இறையச்சம் மட்டுமே பலன் தரும்.,அதனால் தான் ஸாலிஹீன்களான நல்லோர்கள் அல்லாஹ்விடம், யா அல்லாஹ்! பாவம் செய்யும் சந்தர்ப்பங்களை விட்டும் பாதுகாப்பாயாக என்று பிரார்த்திப்பார்கள்.அப்படியொரு சந்தர்ப்பம் நபி யூஸுப் அலை அவர்களுக்கு அமைந்தபோது-

قَالَ مَعَاذَ اللَّـهِ ۖ إِنَّهُ رَبِّي أَحْسَنَ مَثْوَايَ ۖ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ

அல்லாஹ் ( இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்" என்று சொன்னார். (அல்குர்ஆன்  12:23)

அல்லாஹுத்தஆலா அவரைப்பற்றி இப்படி கூறினான்

ۚ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِينَ

நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார். (12:24)

இப்படி எண்ணற்ற நபிமார்கள் தங்களின் வாலிபகாலத்தில் அல்லாஹ்வின் சோதனையை வென்றெடுத்த காரணத்தால் நபித்துவம் எனும் ஈமானிய ஒளி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஒரு சமுதாயத்தின் முதுகெலும்புகள் இளைஞர்கள் தான்,அவர்களின் ஒழுக்கம் சீரழிந்துவிட்டால் அச்சமுதாயமே சேரழிந்துவிடும். அதனால் நபி ஸல் அவர்கள் உருவாக்கிய சமுதாய இளவல்களை ஒழுக்க சீலர்களாக உருவாக்கினார்கள்.

ஆயிரம் இரக்கத்கள் தஹஜ்ஜுத் தொழுவதை விடவும் ஒரு ஹராமை செய்யாமல் இருப்பது மேலானது.

ஹராமை விட்டுவிடுங்கள்,நீங்களே மக்களில் பெரும் வணக்கசாலி என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

வாழ்நாளில் வாலிபம் ஒரு அமானிதம்.இனிக்கும் இளமையை இன்பமாக மட்டுமே கழித்துவிட்டவர்கள் காலம் கடந்தேனும் வருந்துவார்கள். எதையும் செய்யும் துடிப்புள்ள அப்பருவத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொண்டவர்களே மிகச்சிறந்த புத்திசாலிகள்.

வாலிபப் பருவம் அபார சக்திகளைக் கொண்ட வீரதீரமிக்கதொரு பருவம். உருவாக்கங்களைச் செய்கின்ற பருவம். எமது முன் சென்ற நல்லடியார்களான இளைஞர்கள் தஃவா களத்திலும், தியாகத்திலும், அறிவிலும், போராட்டத்திலும் சிறந்த முன்மாதிரிகளை எமக்கு விட்டுச் சென்றுள்ளனர். அத்துறைகளில் அவர்கள் சாதனைகள் படைக்கின்ற போது இருபது வயதைக் கூட அடைந்திருக்கவில்லை.

மக்காவில் தாம் ஏற்றுக் கொண்ட இஸ்லாமியக் கொள்கைக்காக தண்டனைகளையும் துன்பங்களையும் அனுபவித்த இவர்கள், அப்போது வளர்ந்து வரும் பருவ வயதை உடைய இளைஞர்களாகவே இருந்தனர்.

முஸ்அப் இப்னு உமைர் ரளியல்லாஹு அன்ஹு , ஸுபைர் இப்னு அவ்வாம் ரளியல்லாஹு அன்ஹு , தல்ஹது அல்-ஹைர் ரளியல்லாஹு அன்ஹு , ஸஃது இப்னு அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு , அலி இப்னு அபூதாலிப் ரளியல்லாஹு அன்ஹு  போன்றவர்கள் அவ்விளைஞர்களில் சிலராகும். இவர்கள் அபூதாலிப் எனும் பள்ளத்தாக்கில் சிறைபிடிக்கப்படடிருந்த வேளை பசியும் தாகமும் இவர்களைப் பதம் பார்த்துக் கொண்டிருந்த வேளை தங்களது வயிற்றினை வரிந்து கட்டிக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் பசியோடு இருந்தார்கள். இவர்கள் பசியின் கொடுமையால் சாப்பிடுவதற்கு எதுவுமின்றி இலைகுலைகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இவர்களது வயது பதினைந்தைக் கூட தாண்டியிருக்கவில்லை.

யாஸீர் ரளியல்லாஹு அன்ஹு   குடும்பத்தவர்கள், பிலால் இப்னு ரபாஃ ரளியல்லாஹு அன்ஹு , ஹப்பாப் இப்னு அல்-அத்ர் ரளியல்லாஹு அன்ஹு  போன்றோர்களும் எண்ணற்ற பல வேதனைகளை அனுபவித்தவர்கள். அதில் அவர்கள் பொறுமையோடு இருந்தார்கள். அத்தகைய வேதனைகள் யாவும் அவர்கள் எற்றுக் கொண்ட அவர்களது கொள்கையில், அவர்களது தீனில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

சலமா பின் அல்அக்வஉ ரளியல்லாஹு அன்ஹு   அவர்கள் கூறியதாவது: அலீ ரளியல்லாஹு அன்ஹு   அவர்கள் கைபர் போரின்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கிவிட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டிருந்தது. அப்போது அவர்கள் ”நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கிவிட்டேனே!” என்று (வருத்தத்துடன்) கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்று, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள்.

எந்த நாளின் காலைப் பொழுதில் கைபரை அல்லாஹ் வெற்றிகொள்ளச்செய்தானோ அதற்கு முந்தைய மாலை நேரம் வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”நாளை ”(முஸ்லிம்களின்) கொடியை ஒரு மனிதரிடம் தரப்போகிறேன்”; அல்லது ”ஒரு மனிதர் (முஸ்லிம்களின்) கொடியைப் பிடித்திருப்பார்”. ”அவரை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கிறார்கள்”; அல்லது ”அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அவர் நேசிக்கிறார்”. அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான்” என்று கூறினார்கள். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ ரளியல்லாஹு அன்ஹு   அவர்கள் (வந்து) எங்களுடன் இருந்தார்கள். அப்போது மக்கள், ”இதோ அலீ (வந்துவிட்டார்)” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தக் கொடியை அலீ ரளியல்லாஹு அன்ஹு   அவர்களிடமே கொடுத்தார்கள். அவர்களுக்கே அல்லாஹ் வெற்றியளித்தான்.  (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 44. நபித்தோழர்களின் சிறப்புகள் 4781.)

வாலிபப் பருவம் ஒரு பேராபத்தான ஒரு பருவம் எனச் சிலர் கூறுகின்றனர். அவர்களது இக்கூற்று பிழையானது என்பதற்கு மேற்குறிப்பிட்ட நிதர்சன நிகழ்வுகள் சான்றாய் உள்ளன. இஸ்லாமிய அகீதாவின் நிழலிலே கொடுக்கப்படுகின்ற பயிற்சிகள், இளைஞர்களை போராட்ட வீரர்களாகவும், ஏன்? உலகின் பல பாகங்களிலும் இஸ்லாத்தைப் பரப்புகின்ற இஸ்லாமிய படைகளை நடாத்திச் செலகின்ற தளபதிகளாகவும் அவர்களை மாற்றியிருக்கின்றன.

இன்று நமது இளைஞர்கள் விளையாட்டுக்காகவும், வீண்களியாட்டங்களுக்காகவும், பொழுது போக்குகளுக்காகவும் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றானர். ஆனால் இஸ்லாமிய தஃவாவின் ஆரம்ப காலப்பொழுதில் இருந்த இளம் இளைஞர்கள் போர்களில் கலந்து கொண்டு தங்களது இன்னுயிர்களை இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக அர்பணித்து விடுவதற்காகப் போட்டியிட்டுக் கொண்டிருந்தனர்.

என் இஸ்லாமிய சகோதரனே! போர்களில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டதற்காக கண்ணீர் வடித்த இளைஞர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? அப்போது அவர்கள் பருவ வயதைக் கூட அடைந்திருக்கவில்லை?

முஆத் இப்னு அல் ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹு அவரது சகோதரர் முஅவ்வத் ரளியல்லாஹு அன்ஹு ஆகிய இருவரும் மண் விளையாடும் சிறுபருவம். இவர்கள் அன்ஸாரி இளைஞர்கள். இவர்கள் மிகப் பெரும் பத்ர் யுத்தத்தில் கலந்து கொணடவர்கள். இரு இளைஞர்களும் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன் இப்னு அவ்ப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று அபூ ஜஹ்லை நீங்கள் அறிவீர்களா? அவன் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை துன்புறுத்துவதாக நாம் அறிகிறோம். அவனை எமக்குக் காட்டித் தாருங்கள் என்றார்கள். அவர் அவர்களுக்கு அவனை காட்டிக் கொடுத்தார். பின் யுத்தம் உச்சகட்டத்தை அடைகின்ற போது அவ்விரு இளைஞர்களும் அந்த அல்லாஹ்வின் விரோதியின் மீது பாய்கின்றார்கள். அவன் அப்படியே கீழே சாய்ந்து விடுகின்றான். உடன் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவனை தீர்த்துக் கட்டிவிடுகின்றார்கள். இவ்விரு இளவயது இளைஞர்களினுடைய இவ் உயர்ந்த துணிவு, அப்போது இருந்த இணைவைப்பாளர்களது படைத்தளபதியை விடவும் அவர்களது துணிவை விடவும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.

உஹத் யுத்தத்தின் போது சிறுவயது என்ற காரணத்தினால் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யுத்தத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்காது திருப்பி அனுப்பியவர்கள் ஏராளம். அவர்களில் ஒருவர் தான் அப்துல்லா இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். இவர் உஹத் யுத்தத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டார். ஹந்தக் யுத்தத்தில் கலந்து கொள்வதற்கு ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.

அப்போது அவருக்கு வயது பதினைந்து அவ்வாறே உஸாமா பின் ஸைத் ரளியல்லாஹு அன்ஹு, இப்னு ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு, அல் பர்ராஃ இப்னு ஆதிப் ரளியல்லாஹு அன்ஹு போன்றோரும் உஹத் களத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்கள். அவர்களுக்கு ஹந்தக் யுத்தத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இன்னும் ஸம்ரத் இப்னு ஹுதைஜ் ரளியல்லாஹு அன்ஹு போன்றோரும் அந்நாளில் திருப்பி அனுப்பப்பட்டவர்கள். அப்போது அவர்களது வயது பதினைந்து. அல்லாஹ்வின் தூதரே! ராபிஃ குறிவைத்து வேகமாக எறியக் கூடியவர் என்று கூறப்பட்டதும் உடன் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின் ஸம்ரத், ராபிஃ இப்னு ஹுதைஜை விட வேகமானவர் அல்லாஹ்வின் தூதரே! ஏன்று கூறப்பட்டதும் அவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இத்தகைய இளவயதையுடைய வீரர்களின் தியாக வரலாறுகள் முடிவற்றது. அவர்களில் மற்றும் ஒருவர் தான் உமைர் இப்னு அபீவக்காஸ். இவர் ஸஃத் இப்னு அபீ வக்காஸுடைய சகோதரர். ஸஃது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உமைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி இவ்வாறு கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் கண்டு பத்ர் யுத்தத்தில் கலந்து கொள்வதைத் தடுக்காமல் இருப்தற்காக ஏனையவர்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட நான் என் அருமைச் சகோதரனே! நீ ஏன் இவ்வாறு மறைந்து கொண்டிருக்கின்றாய்? எனக் கேட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னைக் கண்டால் நான் சிறியவன் எனக் கூறி என்னை யுத்தகளத்துக்கு வராமல் தடுத்து விடுவார்களோ! என நான் பயப்படுகின்றேன். ஆனால் நானோ யுத்தத்தில் கலந்து கொண்டு அல்லாஹ் எனக்கு ஷஹாதத் (வீர மரணத்தை) தர வேண்டும் என விரும்புகின்றேன் என்றார்.

உண்மையில் அவரை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போராட்டத்திற்கு அனுமதியளிக்கவில்லை. திருப்பி அனுப்பி விட்டார்கள். அப்போது அழுதார்கள். அதனைக் கண்ட ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறுபடியும் அனுமதி வழங்கினார்கள். அவர் சிறியவர் என்பதனால் அவருக்காக அவரது வாள் உறையை நான் சுமந்துகொண்டிருந்தேன். அவர் தனது பதினாறு வயதினிலேயே பத்ர் யுத்தத்தில் கொலை செய்யப்பட்டார். குறைஷியர்களின் படையில் இருந்த அம்ர் இப்னு வுத் என்பவன் தான் அவரைக் கொலை செய்தான். இந்த சிறியவர்களுக்கு முன்னால் இன்றைய இளைஞர்கள் என்ன கூறுகின்றார்கள்? இன்றைய பாடசாலைப் பருவத்தை உடையவர்களாக அன்று அவர்கள் இருந்தனர்.

இதோ ஹன்ழலா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், இவரைப் பற்றி இன்றைய இளைஞர்கள் என்ன கூறுகின்றார்கள்? திருமண இரவன்று தன் மனைவியுடன் இருந்த அவர் போருக்காக அழைப்பு விடுக்கப்பட்ட உடனேயே மனைவியை உதறித்தள்ளி விட்டு அதற்கு விடையளிக்கின்றார்கள். அந்த உஹத் யுத்தத்தில் அவர் ஷஹீதாக்கப்படுகின்றார்கள். பின்பு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூடி இருந்த ஸஹாபாக்களைப் பார்த்து உங்களது தோழர் ஹன்ழலாவை மலக்குகள் குளிப்பாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அவரைப் பற்றி அவரது மனைவியிடம் வினவப்பட்ட போது, யுத்தத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டதை கேட்ட உடனேயே குளிப்பு கடமையாகி இருக்கும் நிலையிலேயே அவர் யுத்த களத்தை நோக்கிச் சென்றார் என விடையளித்தார். இதனால் தான் மலக்குகள் குளிப்பாட்டினார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு இஸ்ஹாக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவித்தார்கள் .

இளம் வாலிபத் தளபதிகளில் ஒருவர் தான் உஸாமா பின் ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிக்கும் போது உஸாமா ரளியல்லாஹு அன்ஹு வுக்கு வயது இருபது. அப்போது அவருக்கு பதினெட்டு என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உஸாமாவை ஒரு பெரும் படைக்கு அமீராக நியமிக்கின்றார்கள். ஆனால் அப்படை புறப்படு முன்பே ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்து விடுகின்றார்கள். எனவே உடன் அபுபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஷாம் தேசத்தில் ரோமர்களுடன் போராடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அப்படையை உஸாமாவின் தலைமையின் கீழ் அனுப்பி வைக்கின்றார்கள். அதில் உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் இருக்கின்றார்கள். அவர் உஸாமாவை சந்திக்கும் பொழுதெல்லாம் அமீர் அவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்! நீங்கள் எனக்கு அமீராக இருக்கும் நிலையில் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று கூறாமல் சந்திப்பது கிடையாது. அப்படை ஷாம் தேசத்தை அடைந்த போது ஒரு பெரும் மேகக் கூட்டம் அவர்களை அப்படியே மறைத்துக் கொள்கின்றது. இது எதிரிகளின் கண்களில் படாமல் அவர்களது பாதுகாப்பு அரண்களை உடைத்து அவர்களைத் தாக்குவதற்கு வாய்ப்பாக அமைந்தது என உர்வத் இப்னு அஸ் ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்.

அறிவியல் துறையில் சாதித்தவர்கள்!

அறிவியல் துறையிலும் சாதனைகளைப் படைத்துள்ளார்கள். இவர்கள் அறிவின் தேர்ச்சியில் உச்சகட்டத்தை அடைந்திருந்தனர். இவ்வாறு தேர்ச்சி பெற்ற நபித்தோழர்களில் ஒருவர் தான் அப்துல்லா இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.

அல் குர்ஆனுக்கு விளக்கமளிப்பதில் சிறந்து விளங்கிய ஒருவர் தான் அப்துல்லா இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். நபித்தோழர்கள் அவரை அல் ஹப்ரு (அறிஞர்) என்ற பெயர் கொண்டு அழைத்தனர். அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஹதீஸ்களைத் தேடிப்பிடிக்கக் கூடியவராகக் காணப்பட்டார்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிக்கும் போது அவரது வயது பதிமூன்று, அவர் தன்னைப் பற்றி ஒரு முறை இவ்வாறு கூறியுள்ளார். எங்கேனும் ஒரு மனிதரிடத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஒரு ஹதீஸ் இருக்கும் செய்தி எனக்குக் கிடைத்து விட்டால் உடனே அவரைத் தேடி அவரது இடத்திற்குச் செல்வேன். அவர் வரும் வரைக்கும் அவரது வீட்டு வாசலில் எனது போர்வையைத் தலையணையாக வைத்து படுத்துக் கொள்வேன். வீசுகின்ற காற்று மண்ணை வாரி என் மீது இறைத்து விடும். அவர் வெளியே வந்து (நான் இருக்கும் நிலையில்) என்னைக் காண்பார். அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது சிறிய தந்தையின் மகனே! நீங்கள் எதற்காக இஙகு வந்தீர்கள்? நீங்கள் எனக்குத் தூது அனுப்பி இருக்கக் கூடாதா? நான் உங்களிடம் வந்திருப்பேனே! எனக் கூறுவார். அதற்கு இல்லை! நான் தான் உங்களிடம் வரவேண்டும் என்று கூறி அவரிடம் ஹதீஸைக் கேட்பேன் என்கிறார்கள், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.

இமாம்களின் இளமை கால சேவைகள்!

இமாம் அஹ்மத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது பதினாறாவது வயதிலேயே ஹதீஸ்களைத் தேடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவர்களாகக் காணப்பட்டார்கள். அவர் அனாதையாக வளர்ந்தார். அவரை அவரது தாய் பராமரித்து வந்தார். அவரது அறிவுத் திறமை பல பகுதிகளைலும் பிரபல்யமாகியது. அவர் தனது பதினைந்தாவது வயதிலேயே அறிவு தேட ஆரம்பித்தார் என்றும் கூறப்படுகின்றது. அவர் தனது இருபதாவது வயதிலேயே காலநடையாக வந்து தனது ஹஜ் கடமையை நிறைவேற்றினார். ஹஜ் கடமையை நிறைவேற்ற வரும் போது அவரிடம் ஒரு பையைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. அதில் அவரது புத்தகங்களே இருந்தன. தான் களைப்புறும் போது அப்பையை ஒரு கல்லின்; மீது வைத்து அதில் தனது தலையை வைத்து ஓய்வெடுப்பார்.

இந்த உம்மத்தின் மற்றுமோர் அறிஞர் தான் இமாம் புஹாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள். அவரையும் அவரது தாயே வளர்த்தார். அவர் தனது பதினாறு வயதிலேயே பிரபல்யமான இஸ்லாமிய நூற்களைப் படிக்க ஆரம்பித்தார். ஸஹாபாக்கள், தாபியீன்கள் பற்றிய நூற்களையும் அவர்களது கருத்துக்கள் பொதிந்த நூற்களையும் அவர் தனது பதினெட்டாவது வயதில் எழுதினார். அவர் இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மண்ணறைக்குப் பக்கத்தில் இருந்து கொண்டு நிலா ஒளியில் ஹத்யுஸ் ஸாரி முகத்திமது பத்ஹுல் பாரி எனும் வரலாற்று நூலை எழுதினார்.

இத்தகைய அறிஞர்கள் தாம் படித்த தமது ஆசிரியர்களுக்கு முன்னால் மிகவும் தாழ்மையுடனேயே நடந்து கொண்டார்கள். இமாம் அஹ்மத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவாகளிடம் சுன்னாவையும் வேறு சில அறிவுரைகளையும் கற்றுக் கொண்டார்கள். பின்பு அவர் எகிப்துக்கு வந்து அங்கு மரணமடைந்தார்கள். நான் முப்பது வருடங்களாக இமாம் ஷாபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களுக்காகப் பிரார்த்திக்காமல், அவருக்காக பாவமன்னிப்புக் கேட்காமல் நித்திரை செய்தது கிடையாது என இமாம் அஹ்மத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள். அவரது மகன் அப்துல்லாஹ்விடம் இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மனிதராக இருந்தார்கள் என்று கேட்கப்பட்ட போது, என் அருமை மகனே, ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் உலகுக்கு ஒரு சூரியனாகவும், உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருந்தார்கள், பின் வந்தவர்களில் எவரும் இந்த இரண்டிற்கும் இருக்கின்றார்களா?, என்று கூறினார்கள்.

எனது அன்பின் வாலிபச் சகோதரர்களே! இவர்கள் யாவரும் உங்களுக்குரிய முன்மாதிரிகள். முன்சென்ற சமூகத்தின் முன்னேற்றகரமான இளைஞர்கள், அவர்கள் வீண் விளையாட்டுக்களிலும், கேளிக்கைகளிலும் மூழ்கியிருந்த இளைஞர் பரம்பரையன்று.

நாம் இந்த உதாரணங்களை இன்றைய இளைஞர்களான உங்களுக்கு முன்னால் வைக்கின்றோம். ஏனெனில் அதில் உங்களுக்கு அழகிய முன்மாதிரிகள் இருக்கின்றன. அதனை முன்மாதிரியாகக் கொள்ளும் ஒவ்வொரு இளைஞனும் அவர்களைப் போன்று உயர்ந்த இடத்தை அல்லாஹ்வின் உதவியுடன் இன்றும் என்றும் அடையலாம். இன்னும் அல்லாஹ்வின் நிழலை, அன்று வேறு எந்த ஒரு நிழலும் இல்லாத அந்த மறுமை நாளில் அல்லாஹ் நிழல் கொடுக்கின்ற ஏழு பிரிவினரில் ஒருவராக நீங்களும் ஆகலாம்.

நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவினால் உருகுவதற்கும், அவன் இறக்கி வைத்த சத்தியத்தின் முன் பணிவதற்கும் நேரம் இன்னும் வரவில்லையா? மேலும், முன்னர் வேதம் வழங்கப்பட்டவர்களைப் போன்று அவர்கள் ஆகிவிட வேண்டாம். (பிறகு) நீண்ட காலம் அவர்கள் மீது உருண்டு ஓடி விட்ட பொழுது, அவர்களின் இருதயங்கள் இறுகிப் போய் விட்டன. (இன்று) அவர்களில் பெரும்பாலோர் தீயவர்களாகி விட்டிருக்கின்றனர். (அல்குர்ஆன்-57:16).

இளமையும் உணர்வுகளும்!

ஒரு சமுதாயத்தின் இணையற்ற பாரிய சக்தி அச்சமூதாயத்தின் இளைஞர்களே ஆவார்கள். சமூக மாற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பு என்பது மிகவும் இன்றியமையாத அம்சமாகும்.

இஸ்லாமிய வரலாறுகளில் இஸ்லாத்தின் வளர்ச்சிகளுக்கு ஈடு இணையற்ற பங்களிப்பை செய்தவர்களும் இளைஞர்களே ஆவார்கள். இன்றைய எமது முஸ்லிம் இளைஞர் யுவதிகளின் நிலைமைகளை உற்று பார்க்கும் பொழுது மிகவும் கவலைக்குறிய ஒரு பாதாள நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை காணலாம். நவீன ஊடகங்களின் அபரிமிதமான வளர்ச்சிகளுக்குள் மடிந்து முஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சிகளுக்கு துணைபோகக்கூடியதும், உன்னத மார்கத்துக்கு கலங்கம் விளைவிக்க கூடிய ஒரு சமுதாயமாகவே நமது முஸ்லிம் இளைஞர் சமுதாயம் மாறிக் கொண்டிருப்பதை காணலாம்.

யூசுப் கர்ளாவி அவர்கள் கூறும் ஒரு கருத்து இங்கு மிகவும் குறிப்பிட்டு கூறத்தக்கது. ” நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை விட மூளைகளும், உணர்ச்சிகளும் ஆக்கிரமிக்கப்படுவது மிகவும் பயங்கரமானது”

கர்ளாவி அவர்கள் குறிப்பிடுவது போன்று எமது சமூகம் இது போன்றதொரு அபாய நிலையிலேயே சிக்கித் தவிக்கின்றது. ஆபாச இணையத்தளங்கள் ஊடாக உணர்சிகள் தூண்டப்பட்டு ஒரு சமூக கட்டமைப்பை சீரழிக்கக் கூடிய நிலைக்கு இட்டு செல்கின்றது. சமுக வளைத்தளங்கள் ஊடாக கால, நேரம் வீணாக்கப்படுவது மாத்திரமன்றி காதல், வழிகேடு என தவரிய பாதையின்பால் இட்டு செல்கின்றது. இது மாத்திரமன்றி நவீன கால ஜாஹிலிய கலாச்சாரங்களால் மூழ்கடிக்கப்பட்டு மூளைகள் மந்தமாக்கப்பட்டுக் கொண்டிருகின்றது. இஸ்லாம் பற்றிய அடிப்படை அறிவு கூட அற்ற, இஸ்லாமிய கடமைகளில் பராமுகமும், இஸ்லாம் அறிவு பற்றிய ஒரு இழிவான எண்ணமும், இஸ்லாமிய கலாச்சாரங்கள் பற்றிய ஒரு கேவலமான பார்வையும் கொண்ட ஒரு இளைஞர் கூட்டமே முஸ்லிம்களுக்கு மத்தியில் உருவாகிக் கொண்டிருப்பதை காணலாம்.

இஸ்லாம் கூறும் இளைஞன்!

(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” (அல்குர்ஆன் 2:30)

அல்லாஹ் மனிதனை தனது பிரதிநிதியாக இவ்வுலகில் படைத்து கண்ணியபடுத்தியுள்ளான். அதுமாத்திரமன்றி அனைத்து விடயங்களையும் சீரான வழிகாட்டலுடன் மிகவும் இலகுவாக்கி, இறைவனின் படைப்புகளில் ஒரு சக்திமிக்க படைப்பாக படைத்து ஆட்சி செய்யும் அதிகாரத்தையும் சக்தியையும் மனிதனுக்கே வழங்கியுள்ளான். மனிதன் ஒரு பிரதி நிதி என்ற அடிப்படையில் தனது கடமையை, இறைவன் தனக்கு இட்ட கட்டளையை இறைவனுக்காக செய்யத்தவறியுள்ளான். ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு நாட்டின் பிரதி நிதியாக நாம் செல்கின்ற பொழுது நமது மேல் அதிகரிகளால் இடப்பட்ட கட்டளைகளை ஆர்வத்துடன், நற்பெயருக்ககாக நிறைவேற்றுவது போன்று அல்லாஹ்வினால் அவனது பிரதிநிதியாக படைக்கப்பட்டு அழகிய முறையில் வழிகாட்டப்பட்ட நாம் எவ்வளவு தூரம் அவனது ஏவல்களை நிறைவேற்றுகின்றோம் என்பது கேள்விக்குறியே?

இளமை பருவத்தின் முக்கியதுவத்தை உணர்த்துவதற்கு பின்வரும் ஹதீஸ்கள் போதுமானவையாகும்.
.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் ஏழு நபர்களுக்கு நிழல் கொடுப்பான்.

1. நீதமாக நடந்து கொண்ட ஆட்சியாளன்.

2. அல்லாஹ்வின் வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.

3. தனது உள்ளத்தைப் பள்ளியுடன்; தொடர்பு படுத்திக் கொண்டிருந்த மனிதன்.

4. அல்லாஹ்வுக்காக நேசம் கொண்டு அதற்காகவே இணைந்து அதற்காகவே பிரிந்த இரு மனிதர்கள்.

5. அந்தஸ்தும் அழகுமுள்ள பெண் தவறு செய்ய அழைத்தபோது நிச்சயமாக நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன் எனக் கூறிய மனிதன்.

6. வலது கை கொடுப்பதை இடது கை அறியாவண்ணம் தர்மம் செய்யும் மனிதன்.

7. தனித்திருந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து கண்ணீர் வடித்த மனிதன்.

இது ஆண்களுக்கு மட்டுமல்ல. பெண்களுக்கும் தான். அவர்களும் தம் செயல்கள் குறித்து விசாரிக்கப்படுவார்கள். அவர்களின் செயல்கள் நல்லவையாகயிருந்தால் நன்மையும் தீயவையாக இருந்தால் தீமையும் உண்டு. கேள்வி கணக்கும் கூலியும் தண்டனையும் ஆண்களுக்கு இருப்பது போலவே பெண்களுக்கும் உண்டு.

வாலிபத்தை எவ்வாறு கழித்தாய்? என்ற வினாவுக்கு விடை கொடுக்காமல் ஓர் அடியானின் பாதம் மறுமையில் நகர முடியாது என்பதை பின்வரும் ஹதீஸ் எச்சரிக்கின்றது- ‘மறுமை நாளில் ஓர் அடியான் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்கும் வரை அவனது கால்கள் இரண்டும் நகர முடியாது’. அவை யாவனஸ

1. தனது வாழ்க்கையை எவ்வாறு கழித்தாய்?

2. தனது வாலிபப் பருவத்தை எந்த விடயங்களில் ஈடுபடுத்தினாய்?

3. செல்வத்தை எவ்வாறு சம்பாதித்து எவ்வாறு செலவு செய்தாய்?

4. பெற்ற அறிவின் மூலம் என்ன செய்தாய்? (ஆதாரம் – தபராணி)

மேற்கூறிய ஹதீஸ்களின் மூலம் இளமை பருவம் வாழ்கையில் எவ்வளவு முக்கியமானது என்பதை புரிந்து கொள்ளலாம்

ஒரு மனிதனின் வாழ்க்கைக் கட்டிடத்தில் வாலிபப் பருவம் சிக்கல்களும் போராட்டங்களும் நிறைந்தது. அதில் அவதானமாகவும் நிதானமாகவும் செயற்படுவது நமது கடமையாகும். விட்டில் பூச்சிகள் விளக்கின் ஒளியை பூவாக நினைத்து ஏமாந்து அதில் தமது உயிரை மாய்த்துக் கொள்வது போல சில இளைஞர்கள் தமது வாலிபத்தை அழித்துக் கொள்கின்றனர். தமது விரல்களாலே தமது கண்களை குத்திக் கொள்கின்றனர்.

இஸ்லாத்தின் வரலாறுகளில் இளைஞர்களின் பங்களிப்பு!

இஸ்லாத்துக்கு அன்றைய முஸ்லிம் இளைஞர்கள் ஆற்றிய பணியும் மகத்தான சேவைகளின் துளிகளுமே இன்று பரந்த விரிந்து கிளைவிட்டு காணப்படும் முஸ்லிம் சமூகம்.

சிந்து சமவெளியை முஹம்மத் பின் காஸிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கைப்பற்றிய போது அவர்களிம் வயது (17)

பைஸாந்திய சாம்ராஜ்ஜியத்தை முஹம்மத் பின் பாதிஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கைப்பற்றிய பொழுது அவர்களின் வயது (23)

ஸ்பெயினை தாரிக் பின் ஜியாத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கைப்பற்றிய பொழுது அவர்களின் வயது (21) இது போன்ற வீரதீர செயல்களை செய்து இஸ்லாத்தின் வளர்சிக்கு தூண்களாக இருந்த இளைஞர்கள் இன்று எமது சமூகத்தில் எங்கே?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு இஸ்லாத்தை போதிப்பதற்காக அனுப்பப்பட்ட ஸஹாபி முஸ் அப் பின் உமைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு இளைஞர். அபிசீனியாவுக்கு முதன் முதலில் ஹிஜ்ரத் செய்த ஆண்களும், பெண்களும் இளைஞர்களும், யுவதிகளுமே ஆவார்கள். யெமனுக்கு நீதிபதியாகவும், விரிவுறையாளராகவும் அனுப்பட்ட முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு இளைஞர். அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களது காலத்தில் குர்ஆனை ஒன்றுதிரட்டும் பணியில் பங்கு கொண்டர்வ‌களுள் பலர் இளைஞர்களே ஆவார்கள்.

ஸூரா கஹஃப் குறிப்பிடப்படும் இளைஞர்களின் வரலாறு என பல்லாயிரம் படிப்பினைகளை கொண்டுள்ள அந்த இளைஞர்கள் எங்கே? எமது இன்றைய முன்மாதிரி இளைஞர்கள் எங்கே?

மது, மாது, அனாச்சாரம், அட்டூழியம், என ஜாஹிலியத்தின் உச்ச நிலையில் அந்த குறைஷிக் குல‌த்தில் உத்தமராக வாழ்ந்த நபி முஹம்மத்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களும் இளைஞர்களே. இஸ்லாம் மார்கத்தை வளரப்பதற்கு தமது உயிர்களை தியாகம் செய்த, பல இன்னோரன்ன துன்பங்களை, இன்னல்களை அனுபவித்த, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய ஒழுக்க முன்மாதிரிகளை அணுவ‌ளவும் பிசகாது வாழ்ந்த ஸஹாப்பக்களும் இளைஞர்களே ஆவார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் அவர்களை ஆரம்பத்தில் ஆதரித்தவர்கள் அனைவரும் இளைஞர்கள் நிராகரித்தவர்களில் அதிகமானோர் முதியவர்கள் என்றும்.

இது போன்று ஆயிரம், ஆயிரம் முன்மாதிரிகளை கொண்டுள்ள இன்றைய எமது சமூகத்தின் முன்மாதிரிகள் யார்? நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், செல்வந்தர்கள், அரசியல்வாதிகள் என இவர்களின் பின்னால் குடைபிடித்துத் திரியும் இளைஞர்கள் இது போன்று இஸ்லாம் கூறும், இஸ்லாமிய வரலாறுகளில் கண்ட உதராண புருஷர்களாக மாறுவது எப்போது?

நாம் அனைவரும் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும் இவ்வுலக வாழ்க்கை அல்லாஹ்வின் பார்வையில் மிகவும் அற்பமானது.முஸ்லிம்களாகிய நமக்கு இது நிரந்தரமற்ற தங்குமிடம், மரணத்தை சுவைக்கும்தருணம் எக்கணமும் எம்மை எத்தலாம்.

எமது முடிவற்ற கபுருடைய வாழ்கை, பல்லாயிரம் ஆண்டுகள் தங்கும் மஹ்ஸருடைய வாழ்க்கை மற்றும் எமது நிரந்தர தங்குமிடமான சுவர்கம் நரகத்தை தீர்மானிக்கப் போகின்றது.

பின்வரும் குர் ஆன் வசனங்கள் இவ்வுலக வாழ்கைக்கு சிறந்த உதாரணங்களாகும்.

“மேலும் மறுமையை நம்பாத அவர்கள்: “நமது இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை கிடையாது; நாம் இறக்கிறோம்; ஜீவிக்கிறோம்; “காலம்” தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை” என்று கூறுகிறார்கள்; அவர்களுக்கு அது பற்றிய அறிவு கிடையாது – அவர்கள் இது பற்றிக் கற்பனையாக எண்ணுவதைத் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 45:24)

அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் அது உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; இது மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; அதாவது: அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு மறுமையில் கடுமையான‌ வேதனையுண்டு; முஃமின்களுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை. (அல்குர்ஆன் 57:20)

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான், (2 : 2008)

மேலே கூறப்பட்ட அனைத்து வசனங்களும் இக்காலத்து வாலிபர்களை முன்வைத்தே இறக்கப்பட்டதோ என்று என்ன தோன்றுகிறது.

இஸ்லாம் மார்க்கம் பற்றிய தெளிவை பெறுவதற்கு முயற்சிப்பதுடன் அல்லாஹ்வினால் அமானிதமாக அருளப்பட்ட இவ்வுலக வாழ்கையை, இளமை பருவத்தை அல்லாஹ்வின் வழிகாட்டலின் நிழலில் செலவிட்டு இவ்வுலகிலும் மறு உலகிலும் வெற்றிபெறுவதற்க்கு முயற்சிக்க வேண்டும் .

வாலிபர்கள் முதன் முதலில் கடைபிடிக்க வேண்டியவைகள்!

1) தன் வாழ்வில் இறையச்சம் மிக அவசியம்.

2) எல்லாவித ஹராம்களை விட்டு விலகி நிற்பது.

3) பெருமானாரின் சுன்னதுகளின் மீது அளவுகடந்த பிரியம் வைப்பது.

4) பெற்றோரின் துஆகளை பெறக்கூடிய செயல்களை செய்வது.

5) நல்ல நண்பர்களோடு மட்டும் நட்பு வைப்பது,தீய நண்பர்களின் நட்பை உடனே முறித்து கொள்வது.

6) நமக்கு வழிகாட்டுவதற்காக நல்ல இறையச்சமுல்ல ஆலிமுடன் எப்போதும் சேர்த்திருப்பது.

இவைகளில் கவனம் செலுத்தி ஒரு உண்மையான இஸ்லாமிய வாலிபனாக வாழும் பாக்கியத்தை நம் அனைவர்களுக்கும் வல்லோன் அல்லாஹ் தந்தருள் புரிவானாக ஆமீன்.

குறிப்பு வழங்கியவர்கள்: ஷேக் ஆதம் தாவூதி ஹழ்ரத் சுவல்தான் சலாஹி ஹழ்ரத், நஸீர் மிஸ்பாஹி ஹழ்ரத், முஹம்மது இல்யாஸ் ஹழ்ரத், பீர் ஃபைஜி ஹழ்ரத். தொகுத்து வழங்கியவர் அப்பாஸ் ரியாஜி

source: http://warasathulanbiya.blogspot.in/2015/02/blog-post_37.html