Home இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கல்விச் சிந்தனைகள்
இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கல்விச் சிந்தனைகள் PDF Print E-mail
Wednesday, 17 August 2016 17:59
Share

இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கல்விச் சிந்தனைகள் (1)

அறிவியலும் விஞ்ஞானமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் அசுர பலத்தோடு வளர்ந்து கொண்டிருக்கிற இந்த 21 ஆம் நூற்றாண்டில் ஒவ்வொரு நாடும், சமூகமும், குடும்பமும், ஒவ்வொரு தனிமனிதனும் தனது இருப்பை நிலை நிறுத்திக் கொள்ளவும், தனது நிலையை உயர்த்திக் கொள்ளும் தேடலுக்காகவும் தேர்ந்தெடுக்கின்ற வழியும் பயணமும்தான் கல்வி.

விஞ்ஞான வளர்ச்சியில் ஓடத்தொடங்கிய நமக்கு “எது கல்வி?” என்பதை யோசிக்கத் தெரியாததின் அல்லது யோசிக்கத் தவறியதன் விளைவு, ஒட்டு மொத்த உலகமும் தவறான பாதையில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது.

இன்று கல்வி என்று எது போதிக்கப்படுகிறதோ, அந்தக்கல்வி அறிவு இல்லாத, அறிவியல் அவ்வளவாக வளர்ந்திராத சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் குணாதிசயம், நடவடிக்கைகள், பழகும் தன்மை, குடும்பச் சூழல், சுற்றுச் சூழல், உடல், உள ஆரோக்கியம் போன்ற எத்தனையோ விஷயங்களை இந்த நூற்றாண்டில் வாழுகின்ற மனிதர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது ‘எது கல்வி?,’ ‘எது வளர்ச்சி?’ என்ற சந்தேகம் அடித்தட்டு மக்கள் முதல் ஆன்மீகவாதிகள், அறிவாளிகள் வரை அனைவருக்கும் எழும்.

கொலை, கொள்ளை, நம்பிக்கையின்மை, எங்கும் நோய் எதிலும் நோய் போன்ற கொடிய காரியங்கள் இன்று ஆல் போல் வளர்ந்து அருவி போல் ஓடக் காரணம் இன்றைய கல்வி முறை. இந்தக் கல்வி முறையும், விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் மனித சமூக வளர்ச்சியில் சாதித்தது என்ன என்ற வினாவுக்கு விடை தேடி சிறிது நேரம் யோசித்தால் “ஒன்றுமில்லை” என்பதே பதிலாக மிஞ்சும்.

ஒழுக்கம், அறம் சார்ந்த கல்வி எங்கு போதிக்கப்படுகிறதோ அங்குதான் ஒட்டு மொத்த மனித சமூகம் மற்றும் ஒரு நாட்டின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் காண முடியும்.

இன்றைய அறிவியல், விஞ்ஞான, தொழில் நுட்பத்தில் செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி தனது சாதனைகளை பெரிதுபடுத்துவதில் தங்களை நிலைப்படுத்தி இருக்கின்ற நாடுகளில் ஒழுக்கத்தைத் தவற விட்டுவிட்டு தங்களுக்குத் தெரிந்ததை / தங்களுக்கு சாதகமானதை மட்டும் ‘கல்வி’ என பிரகடனப்படுத்தி கல்வியை வியாபாரமாக மாற்றும் வேலைகள்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஒழுக்கம் இல்லாத கல்வி போதிக்கப்படுவதால் மாணவர்களின் தரமும் தகுதியும், மாணவர்களை நம்பி இருக்கிற சமூகத்தின் வளர்ச்சியும், நாட்டின் வளர்ச்சியும் கேள்விக்குறியாகி நிற்கிறது.

கல்வி வியாபாரமானதனால் கற்று வருகிற ஒவ்வொருவரிடமும் வியாபாரக் கண்ணோட்டம்தான் மிகுந்து காணப்படுகிறது. நடைமுறையில் உள்ள கல்வியினால் ஏற்படுகிற தாக்கத்தை உணர்ந்தவர்கள், ஒழுக்கம் சார்ந்த கல்விதான் நாட்டின், சமூகத்தின், தனிமனிதனின் தரத்தை நிர்ணயிக்கும் என்று யோசிப்பவர்கள் எல்லாம் “மாற்றுப் பயணத்திற்கான தேடலை” துவங்கி இருக்கிறார்கள்.

ஒழுக்கம் சார்ந்த கல்வியின் வரலாறுகளை மறுவாசிப்பு செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் நிறுத்தப்படிருக்கிறோம். அதன் அடிப்படையில் இன்றைய கல்வி முறையை மேலும் மெருகூட்டி, ஒழுக்கம் நிறைந்த மாணவக் கண்மணிகளை உருவாக்கி, உயர்வாக்க சுமார் 905 வருடங்கள் பின்னோக்கிப் பயணித்தால் “இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது கல்வி சிந்தனைகளால் சமூகத்தை உயர்த்திய வரலாறு நம்மை தலை நிமிர்ந்து நிற்கச் செய்கிறது.” அல்ஹம்துலில்லாஹ்.

    கல்வி என்பது என்ன?     

கல்வி என்ற வார்த்தைக்கு அரபு மொழியில் மூன்று விதமான பொருள் உண்டு.

1. تعليم (தஃலீம்) :- தஃலீம் என்ற வார்த்தைக்கு ‘தெரிந்து கொள்ளுதல்’ ‘கற்று உணர்தல்’, ‘எச்சரிக்கையுள்ள’, ‘மனதால் உணர்தல்’ என்ற அர்த்தங்கள் உண்டு. கற்பித்தல் மூலமாக பெறப்படுகின்ற அறிவுக்கு தஃலீம் என்று பொருள்.

2. تربية (தர்பியா) :- தர்பியா என்கிற வார்த்தைக்கு ‘வளர்ப்பது’, ‘அதிகமாகுவது’ என்று பொருள் உண்டு. படைத்தவனின் விருப்பத்திற்கிணங்க நீதி நெறிகளுக்கு உட்பட்ட அறிவை / நிலையை உள்ளடக்கிய கல்வி தர்பியா என்று சொல்லப்படும்.

3. تهذيب (தஹ்தீப்) :- தஹ்தீப் என்ற வார்த்தைக்கு ‘ஒழுங்குபடுத்துதல்’, ‘பண்படுத்தப்பட்ட’, ‘நாகரீகமான’ என்று பொருள் கொள்ளலாம். சமூகத்தில் ஒரு தனிமனிதனுடைய வளர்ச்சியைக் குறிக்கும். வளர்ச்சி என்பது மனித உணர்வுகளை புரிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளும் கல்வி முறைக்கு தஹ்தீப் என்று பொருள்.

    கல்வியின் நோக்கம்      

நடைமுறைக் கல்வியில் பயிலக்கூடிய ஒரு மாணவனிடமோ அல்லது அவர்களது பெற்றோர்களிடமோ எதற்காக கல்வி என்றால் “பணம் சம்பாதிப்பதற்குத்தான்” என்ற பதில் வரும்.

கல்வி கற்றால் பணம் சம்பாதிக்கலாம் ஆனால் பணம் சம்பாதிப்பதையே நோக்கமாக வைத்து கற்றுக் கொடுக்கப்படும் கல்வியின் விளைவு எப்படி இருக்கும் என்பதை விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

பொதுவாக ஒரு பிரச்சனை என்று வருகின்ற போது, அதற்கான தீர்வுகள் யோசிக்கப்பட்டு அந்த பிரச்சனை சரி செய்யப்படும். ஆனால் அதே பிரச்சனை அதே மனிதருக்கோ/ சமூகத்திற்கோ மீண்டும் வராது என்பதை உறுதியிட்டு சொல்ல முடியாது. காரணம் குறுகிய கண்ணோட்டத்தில் அப்போதைய நிலைக்கு ஏற்றவாறு கொடுக்கப்பட்டதுதான் அந்த தீர்வு.

ஆனால் இஸ்லாம் கொஞ்சம் வித்தியாசப்பட்டு நிற்கிறது. ஒரு பிரச்சனைக்கான தீர்வை குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்காமல் தொலை நோக்குச் சிந்தனையின் அடிப்படையில் அமைத்து பிரச்சனைக்கான ஆணிவேரை, அடிப்படையை தெரிந்து அதை நிவர்த்தி செய்யும் இஸ்லாத்தின் பாணி அலாதியானது அற்புதமானது.

அந்த இஸ்லாமிய பாரம்பரியத்தில் வார்த்தெடுக்கப்பட்ட இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கல்வி கற்பதின் நோக்கத்தை தெளிவுபடுத்துகிறார்கள்.

கல்வி கற்கின்ற ஒரு சமூகத்தின் நோக்கம் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த வழியை நடைமுறைப்படுத்துவதாகும். கல்வி கற்கின்ற ஒரு மனிதனின் இலட்சியம் என்பது இருஉலகிலும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ தன்னை இறைவனுக்கு அருகில் நெருக்கி வைப்பதாகும்.

ஒரு மனிதனை அல்லாஹ்வுக்கு நெருக்கமாகவும், ஒரு சமூகம் இஸ்லாமிய வழியில் அதன் மரபில் செல்லவும் கல்வி அவசியம் என்பதால், கல்வியின் பிரதான நோக்கம் ‘கல்வி’ கற்கின்ற மனிதனை பண்படுத்த வேண்டும்” என்று கூறுகிறார்கள்.

இந்த நோக்கத்தை தவிர்த்து பணம் சம்பாதிக்கவும், அந்தஸ்த்தை நிலை நிறுத்தவும் கற்கப்படுகின்ற கல்வி மறையக்கூடியதும், அழியக்கூடியதுமாகும் என்கிறார்கள்.

மேலும் இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கல்வியின் நோக்கத்தை விவரிக்கிற போது “கல்வியின் நோக்கம் என்பது பயன் உள்ளதாக இருக்க வேண்டும். கல்வி கற்பதினால் பெறப்படுகிற அறிவின் மூலம் தனிமனிதனுக்கும், சமூகத்துக்கும் பயனும் பலனும் கிடைக்க வேண்டும்.” அதாவது கல்வியின் நோக்கம் கல்வி கற்கின்ற மனிதரை நல்ல குணமுடையவராகவும், நன்மை தீமைகளை வித்தியாசப்படுத்தி, தீமையை விட்டும் நன்மையின் பக்கம் செல்லக்கூடியவராகவும் மாற்ற வேண்டும்.

     இஸ்லாமியக் கல்வி முறை    

இஸ்லாமியக் கல்வி முறை இரண்டு பெரும் பகுதிகளாக பிரிக்கப்படுகிறது.

1. Elementary schooling (மூலக் கோட்பாடுகளை கற்றுக் கொடுக்கக்கூடிய பள்ளி) இது இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது.

a. பொது மக்களுக்கான கல்வி :- ஒரு ஊரில் இருக்கின்ற அனைத்து மக்களுக்கும் மூலக் கோட்பாடுகளை கற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட பள்ளி. இதற்கு “குத்தாப்” (kuttab) என்று பெயர்.

b. சிறந்தவர்களுக்கான கல்வி :- மாணவர்கள் அவர்களின் கல்வி அறிவுக்கு தகுந்தவாறு வேறுபடுவார்கள். சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குத் தேவையான கல்வி இந்த வகுப்புகளில் வழங்கப்படும்.

2. Higher Education (உயர்கல்வி முறை)

இஸ்லாம் உயர்கல்வியை வலியுறுத்துகிறது. இஸ்லாமியக் கல்வி முறையில் உயர்கல்வி பள்ளிவாசல்கள், மதரஸாக்கள், நல்வாழ்வு மையங்களில் நடைபெறும். இஸ்லாமியக் கல்வி முறையில் பயிலுகின்ற ஒரு மாணவன் தனது சிறுவயதிலேயே மூலக் கோட்பாடுகளை தெரிந்து கொள்கிறான். அடிப்படைகளை ஆணித்தரமாக தெரிந்து கொள்கிற மாணவர்கள் தங்களது உயர்கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். காரணம் உயர்கல்வியைப் போதிக்கும் இடங்கள் அனைத்தும் ஆன்மீக (இஸ்லாமிய) அம்சங்களாக இருப்பதால் ஒழுக்கத்தோடு சேர்ந்த கல்வி கிடைக்கிறது. ஒழுக்கம் நிறைந்த மாணவர்கள் மூலம் சமூகத்திற்கும், நாட்டிற்கும் நன்மை கிடைக்கிறது.

ஆனால் இன்றைய நடைமுறைக் கல்வி முறையில் மாணவர்களுக்கு அடிப்படை விஷயங்களை, செய்திகளை சொல்லிக் கொடுப்பதில்லை. மாணவர்களுக்கு எது தேவை, அவனை எது பக்குவப்படுத்தும், பண்படுத்தும் என்ற சிந்தனையில்லாமல் தனக்கு தெரிந்ததை அவன் படிக்க வேண்டும் என்ற முதலாளித்துவக் கல்வி முறையில் போதிக்கப்படுவதால் மாணவர்கள் கம்பெனி(முதலாளி)களுக்கு பயன்படக்கூடிய தொழிலாளியாக உருவாக்கப்படுகிறார்கள்.

source: http://www.samooganeethi.org/index.php/category/salim

கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள "Next"" "ஐ "கிளிக்" செய்யவும்.