Home இஸ்லாம் இம்மை மறுமை மறுமை சிந்தனையில் குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலீ
மறுமை சிந்தனையில் குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலீ PDF Print E-mail
Wednesday, 10 August 2016 06:31
Share

மறுமை சிந்தனையில் குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலீ

      அபூ ஜமீல்     

[  உண்மையில், இந்த உடலுக்குள் தற்காலிகமாக உயிரை வைத்து உங்களை இறைவன் சோதிக்கிறான். எவ்வாறு நாம் பிறரிடம் நடந்து கொள்கிறோம்? இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்கிறீர்களா? இல்லையா? என்பதை பரிசோதிக்கவே இந்த வாழ்க்கை!

நான் மரணிக்கப் போகிறேன் என்பது உறுதி. அதன் பின்னர் நரகத்திற்கே செல்லப்போகிறேன் என்று கர்ப்பனை செய்தால், அந்த அதிர்ச்சியை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது.

மரணம் எந்த நேரமும் எனக்கு வரலாம். அப்போது மறுமையை நான் நேரில் சந்தித்தே ஆக வேண்டும். இறைவனின் விசாரணையை நான் சந்தித்தே ஆக வேண்டும். இறைவனின் விசாரணையிலிருந்து எவரும் தப்பவே முடியாது.

இவ்வுலகில் நீங்கள் மக்களைக் கொல்லலாம், கொள்ளையடிக்கலாம்... எல்லாம் செய்துவிட்டு போலீஸ் பிடியில் இருந்தும் தப்பலாம். ஆனால், இறைவன் ஒருவனின் பார்வையை விட்டோ அல்லது அவனது தண்டனையை விட்டோ ஒருக்காலும் தப்பிக்க வழி இல்லை.

அதனால், மரணத்திற்குப் பின் நிரந்தரமான உலகில், நரகத்தை தவிர்த்து, சுவர்க்கத்தை அடைய ஆவன செய்வதுதான் சிறந்த வழி.]

மறுமை சிந்தனையில்  குத்துச்சண்டை வீரர்  முஹம்மது அலீ

      அபூ ஜமீல்      

அமெரிக்காவைச் சேர்ந்த உலகப்புகழ் குத்துச்சண்டை வீரர் முஹம்மது அலீ தனது 74 ஆவது வயதில் 4-6-2016 அன்று வஃபாத்தானார் அல்லவா? அவர் 1977 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நேயர்களில் ஒருவரான ஒரு சிறுவனின் கேள்விக்கு அளித்த அற்புதமான பதில்:

கேள்வி: நீங்கள் குத்துச்சண்டையிலிருந்து ஓய்வு பெற்றபின் என்ன செய்யப் போகிறீர்கள்?

கூறிய பதி: நான் இங்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். அது உங்கள் எல்லோரையும் சிந்திக்க வைக்கலாம். இந்த வாழ்க்கை உண்மையில் சிறியது. இதில் உங்களுடைய தூக்கம், பள்ளி வாழ்க்கை, பொழுதுபோக்கு அனைத்தும் அடங்கும். நம்முடைய பாதி வாழ்க்கை எதுவும் செய்யாமலேயே கழிந்து விடுகிறது.

இப்போது எனக்கு 35 வயது. இன்னும் 30 வருடங்களில் எனக்கு 65 வயது ஆகிவிடும். அந்த வருடங்களி, 9 வருடங்கள் எனது தூக்கத்திலேயே கழிந்துவிடும். எனது அமெரிகா பயணத்திறு ஆறு முதல் ஏழு மணி நேரம் ஆகிறது. அடித்த எனது 30 வருட எல்லாப் பயணங்களையும் சேர்த்தால் 4 வருடங்கள் காலி, மற்ற பொழுதுபோக்குகளில் 3 வருடங்கள் செலவாகிவிடும். ஆக 30 வருடங்களில் 16 வருடங்கள் எனக்கு பயனுள்ளதாக இருக்கலாம். இவ்வாறான நமது சொந்த வாழ்க்கை பெரும்பாலும் பயனற்றதாகவே கழிகிறது.

சரி...! இந்த 16 வருடங்களில் நான் என்ன செய்யப்போகிறேன் என்பதுதானே கேள்வி? அதற்கு ஒரு வழி இருக்கிறது. அதுதான் இறைவனை சந்திக்க இன்றே தயாராவது. இறைவன் தன்னிடம் தயார் செய்து வைத்துள்ள சுவர்க்கத்தை அடைய முயற்சிப்பது!

ரியல் எஸ்டேட் தொழிலோ, வியாபாரம் செய்வதோ, குத்துச்சண்டை வீரர்களுக்கு பயிற்சியளிப்பதோ.. இவை எல்லாம் என்னை சுவர்க்கத்திற்கு கொண்டுசெல்லப் போவதில்லை.

இங்கு எத்தனைப்பேர் இறைவன் இருக்கின்றான் என்பதை நம்புகிறீர்கள்?இந்த சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் படைத்த சக்தி ஒன்று நமக்கு மேலே இருக்கிறது என்று எத்தனை பேர் நம்புகிறீர்கள்? நம்மைவிட அறிவுடைய ஒரு சக்தி இவற்றைப் படைத்தது என்று எத்தனைபேர் நம்புகிறீர்கள்?

பலர் கைகளைத் தூக்குகிறார்கள்.

"இறைவனே இல்லை என்று எத்தனை பேர் நம்புகிறீர்கள்?"

ஒரு சிலர் கை தூக்குகிறார்கள்.

உடனே, முஹம்மது அலீ மேஜை மீதிருந்த கண்ணாடியைக் காட்டி, இறைவனை நம்ப மறுப்பவர்களிடம் கேட்கிறேன்; இதோ இந்த கண்ண்டிக்குவளை! இதை எந்த மனிதனும் உருவாக்கவில்லை என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? இல்லைதானே!

நீங்கள் நம்ப மறுக்கிறீர்கள். யாரும் நம்ப மாட்டார்கள். இதோ இந்த தொலைக்காட்சி நிலையம்! இதை யாரும் உருவாக்கவில்லை என்று சொன்னால், முஹம்மது அலீக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று தானே சொல்வீர்கள்?!

ஆக, இந்தக் குவளை தன்னைத்தானே உருவாக்கிக்கொள்ள முடியாது என்றால், இந்த ஆடைகள் தன்னைத்தானே உருவாக்கிக்கொள்ள முடியாது என்றால், இம்மாபெரும் பிரபஞ்சத்தைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த சந்திரன் எப்படி தானாக வர முடியும்? இந்த சூரியன், நட்சத்திரங்கள், நெப்டியூன், வியாழன், செவ்வாய் மற்றும் இயற்கை - இவையெல்லாம் எந்த அறிவின் பின்துணையும் இல்லாமல், ஒரு திட்டமில்லாமல் எவ்வாறு தானாக உருவாக முடியும்? இவையெல்லாம், இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு சான்று பகர்ந்து கொண்டு இருக்கின்றன.

நமது செயல்கள் எல்லாம் கண்காணிக்கப்படுகின்றன. அந்த இறைவனால் நாம் எல்லோரும் தீர்ப்பளிக்கப்பட இருக்கின்றோம் என்று நான் நம்புகிறேன். ஒரு மனிதன், அனைத்து யூதர்களையும் கொன்றுவிட்டு அப்படியே சென்றுவிட்ட ஹிட்லர் மாதிரி இருக்க வேண்டுமா? அவர் செய்த குற்றத்திற்கு தண்டனை பெற வேண்டும். அதற்கான ஏற்பாடு இந்த உலகில் இல்லை. அந்தக் குற்றவாளி இப்போது தண்டிக்கப்படவில்லை என்றால், அவர் மரணித்த பிறகு தண்டனை கிடைக்கும். அதற்கான ஏற்பாடுதான் மறுமையில் நரகம்.

ஆக, நான் குத்துச்சண்டையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்யப்போகிறேன்?

நான் இறைவனை சந்திப்பதற்கு தயாராக வேண்டாமா? ஏனெனில் என்னுடைய விமானம் விபத்துக்குள்ளாகலாம். நம் நாட்டில் விமானக்கள் விபத்துக்குள்ளாகவில்லையா? ஒவ்வொரு நாளும் மனிதர்கள் மரணிக்கவில்லையா? எனக்கும் மரணம் நிச்சயம். மரணத்திற்குப் பிறகு நமக்கு காத்திருப்பது சுவர்க்கம் அல்லது நரகம். இந்த இரண்டில் ஒன்றுதான் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

நரகம் என்பது நினைப்பதற்கே அதிர்ச்சியான ஒன்று. இறைவனது கட்டளைப்படி வாழாவிட்டால், நான் நரகத்தில் என்றென்றும் முடிவே இல்லாமல் எரிந்து கொண்டு இருப்பேன். அந்த நரகத்தைத் தவிர்க்க நான் என்ன செய்யப் போகிறேன்? இதைத்தான் நான் சிந்திக்க வேண்டும். நான் இறந்த பின் அங்கு சுவர்க்கம் இருந்தால் அதை நான் அடைய விரும்புகிறேன். யோசித்துப் பாருங்கள்.

நாம் இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழப் போகிறோம்? 80 வருடங்கள் இந்த பூமியில் இருக்கப் போகிறோம் என்றே வைத்துக்கொண்டாலும், வாழ்க்கை என்பது ஒரு சோதனை என்பதுதானே உண்மை! நமக்குத் தரப்பட்ட இந்த தவணையை நாம் எவ்வாறு செலவழித்தோம் என்பதையே இறைவன் பார்க்கப் போகிறான். அதைப் பொறுத்தே நமது நாளைய இருப்பிடம் சுவர்க்கமா அல்லது நரகமா என்று தீர்மானிக்கப்படும்.

இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருப்பது உண்மையான வாழ்க்கை இல்லை. உங்கள் உடலுக்கு வயதாகிறது. தோற்றம் மாறுகிறது. நீங்கள் கண்ணாடி முன் நின்று பாருங்கள். உங்களில் சிலருக்கு பற்கள் இல்லை. தலைமுடி கொட்டிப்போகிறது. உடம்பு பலகீனமடைகிறது. ஆனால், உங்களுடைய உயிர் அல்லது ஆத்மா என்றும் மரணிக்காது. அவை என்றும் வாழப்போகின்றன. ஆக, உங்களுடைய உடல் என்பது, உயிரையும், ஆத்மாவைஅயும் (தற்காலிகமாக) தக்க வைத்துள்ள இடமாகும்.

உண்மையில், இந்த உடலுக்குள் தற்காலிகமாக உயிரை வைத்து உங்களை இறைவன் சோதிக்கிறான். எவ்வாறு நாம் பிறரிடம் நடந்து கொள்கிறோம்? இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்கிறீர்களா? இல்லையா? என்பதை பரிசோதிக்கவே இந்த வாழ்க்கை!

நம்முடைய உண்மையான - நிரந்தரமான வாழ்விடம் சுவர்க்கத்தில் அமைய வேண்டுமானால், இன்றே நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இந்த உடல் நீண்ட நாள் நீடிக்கப்போவதில்லை. இந்தக் கார், இந்தக் கட்டிடம், அதைக் கட்டியவர்கள் மரணிக்கும்போது, அவை இங்கேயே இருக்கப் போகிறது. இங்கிலாந்தில் நிறைய மன்னர்கள், ராணிகள் இருந்தார்கள். ஆனால், இப்போது இறந்து விட்டார்கள். ஆக, ஒருவர் இறந்தபின் இன்னொருவர் வருகிறார். நாம் இங்கே நிலைத்திருக்கப் போவதில்லை.

நாம் அனைவரும் பயணிகளே! நம்முடையது என்று கூறிக்கொள்ளும்படியாக எதையும் நாம் சொந்தம் கொண்டாட முடியாது - நம் குழந்தைகள் உட்பட! மரணத்தின் போது அனைத்தையும் விட்டுப் பிரிந்தே ஆக வேண்டும். மிக மிக முக்கியமாக நாம் இப்போது சிந்திக்க வேண்டியது என்னவென்றால், நாம் மரணித்த பிறகு போகப்போவது சுவர்க்கத்திற்கா? அல்லது நரகத்திற்கா?

அந்த சுவர்க்கம், நரகம் முடிவே இல்லாதது. ஆக, நான் மரணிக்கப் போகிறேன் என்பது உறுதி. அதன் பின்னர் நரகத்திற்கே செல்லப்போகிறேன் என்று கர்ப்பனை செய்தால், அந்த அதிர்ச்சியை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. மரணம் எந்த நேரமும் எனக்கு வரலாம். அப்போது மறுமையை நான் நேரில் சந்தித்தே ஆக வேண்டும். இறைவனின் விசாரணையை நான் சந்தித்தே ஆக வேண்டும். இறைவனின் விசாரணையிலிருந்து எவரும் தப்பவே முடியாது. இவ்வுலகில் நீங்கள் மக்களைக் கொல்லலாம், கொள்ளையடிக்கலாம்... எல்லாம் செய்துவிட்டு போலீஸ் பிடியில் இருந்தும் தப்பலாம். ஆனால், இறைவன் ஒருவனின் பார்வையை விட்டோ அல்லது அவனது தண்டனையை விட்டோ ஒருக்காலும் தப்பிக்க வழி இல்லை. அதனால், மரணத்திற்குப் பின் நிரந்தரமான உலகில், நரகத்தை தவிர்த்து, சுவர்க்கத்தை அடைய ஆவன செய்வதுதான் சிறந்த வழி.

ஆம்! நான் இறைவனை சந்திக்க தயாராகப் போகிறேன். அதுதானே அறிவார்ந்த செயல்?

(இதுதாம் முஹம்மது அலீ கேள்வி கேட்ட சிறுவனுக்கு அளித்த விரிவான பதில்.)

''ஜமாஅத்துல் உலமா" மாத இதழ் - ஆகஸ்ட் 2016

www.nidur.info