Home கட்டுரைகள் அப்துர் ரஹ்மான் உமரி 'எது இஸ்லாம் இல்லை?' என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்!
'எது இஸ்லாம் இல்லை?' என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்! PDF Print E-mail
Thursday, 04 August 2016 02:41
Share

'எது இஸ்லாம் இல்லை?' என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்!

     மெளலானா,  சத்ருத்தீன் இஸ்லாஹி     

    தமிழாக்கம்: மெளலவி, அப்துர் ரஹ்மான் உமரி    

முஸ்லிமாக இருப்பதற்கு 'இஸ்லாம் என்றால் என்ன?' என்பதைத் தெரிந்து கொள்வது எவ்வளவு அவசியமோ அதே அளவு 'எது இஸ்லாம் இல்லை?' என்பதைத் தெரிந்து கொள்வதும் அவசியமாகும். இல்லாவிட்டால் இஸ்லாமை அதன் தனிப்பட்ட தூய வடிவில் பாதுகாப்பதோ, பின்பற்றுவதோ இயலாது போய்விடும்.

இன்று நாம் இஸ்லாமைப் பற்றி உண்மையான நல்ல விஷயங்கள் சிலவற்றைத் தெரிந்து கொள்வோம், நாளை இஸ்லாம் அல்லாத வேறு சில விஷயங்களைத் தெரிந்து கொள்வோம். இறுதியில் எது உண்மையான சொத்து என்பதை உணர முடியாமல், இயற்கையான உருவில் - அம்மண வடிவில் - நுழைவதில்லை. இஸ்லாமியப் பசுத்தோலைப் பொற்த்திக்கொண்டும், 'சலுகை'(ருஃக்ஸத்)களின் பெயராலும் தான் நுழைகின்றது. முஸ்லிம்களோ மிகமிக எளிதாக அதற்குப் பலியாகிவிடுகின்றனர். இல்லா மாஷா அல்லாஹ்!

முந்தைய சமூகத்தினர் தங்களுடைய இறைத்தூதர்களிடமிருந்து தூய, கலப்பற்ற தீனைப் பெற்ற பின்னும் - ஒன்றிரண்டு தலைமுறைக்குள்ளாக வழிகெட்டுப் போனதற்கு இதுதான் காரணமாக இருந்துள்ளது.

அந்த சமூகங்களின் பாமர மக்களுக்கு தீனைப்பற்றி கிட்டத்தட்ட ஒன்றும் தெரியாதிருந்தது. அப்படியே 'ஹக்' என்றால் என்ன? என்பது ஓரளவு தெரிந்திருந்தாலும், 'ஹக்' அல்லாதது எது? என்பது அறவே தெரியாமல் தான் இருந்தது. இதன் காரணமாக, அவர்களுடைய சிந்தனை, கொள்கைகள், ஷரீஅத்து, செயற்பாடுகள் போன்றவற்றில் 'ஹக்'கற்ற - இஸ்லாம் அல்லாத - செயல்கள் படிப்படியாக இடம்பெறத் தொடங்கின.

அவர்கள் அவற்றையும் இஸ்லாம் என்றே கருதிக் கொண்டனர் அல்லது இஸ்லாத்தில் இவற்றுக்கும் இடம் உள்ளது என்று கருதி, ஏற்று நெஞ்சோடு அணைத்துக் கொண்டனர்.

இப்படியாக கடைசியில் ஒருநாள் விடிந்தது. அன்று எழுந்து நின்று பார்த்தால் இஸ்லாமை நோக்கி முகங்களுக்குப் பதிலாக அவர்களுடைய முதுகுகளே இருந்தன! ஆனால், அவர்களோ தாம் சரியான திசையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

இஸ்லாம் அல்லாத விஷயங்களை அறிந்து கொள்வது, அறிந்து கொண்டே இருப்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். தனிப்பட்ட வாழ்வின் சீர்திருத்தம், பயிற்சி-இஸ்லாஹ் மற்றும் தர்பிய்யாவிற்கு இது எந்த அளவு அவசியமோ அதைவிடவும் அதிகமாக சமூகச்சீர்திருத்தம், சமூகத்தூய்மைக்கு அவசியம்.

இஸ்லாத்திற்கு எதிரான செயல்கள் எவை எவை என்பதை அறிந்து கொள்ளாத நிலையில் ஒரு சமுதாயம் கண்டிப்பாக இஸ்லாமியப் பாதையில் முன்னேறிச் செல்லவே முடியாது. எந்தெந்தச் செயல்களை விட்டு மக்கள் விலகி இருக்க வேண்டும் என்பதை எண்ணி எண்ணிச் சொல்வதும் அழைப்புப்பணியில் ஒரு முக்கிய அம்சம் ஆகும். தனி நபர் உள்ளமும், ஒட்டு மொத்த சமூக உள்ளமும் அப்போதுதான் அதை விட்டுத் தூய்மையாக இருக்கும்.

சத்திய அழைப்பின் திறந்த புத்தகமாக, இறுதிநாள் வரைக்கும் பாதுகாக்கப்படும் வேதமறையான அல்குர்ஆன் தீமையின் பக்கமும், வழிகேட்டின் பக்கமும் கைப்பிடித்து அழைத்துக்கொண்டு சென்று கழுத்தைப் பிடித்துத்தள்ளி விடுகின்ற செயல்கள் எவை? எவை? என்று அறிவித்துக்கொண்டே உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களான் ஸஹாபாக்கள் இவ்விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள். வான்மறை குர்ஆன் எனும் உரைகல்லில் தங்களை உரசிப்பார்த்துக் கொண்டே இருந்தார்கள். முனாஃபிக்குகளின் செயல் எதனையும் நாம் செய்துவிடக் கூடாதே! அமல்களை அழித்து, அழிவையும் தேடிக்கொள்ளக்கூடாதே! என்று நாளெல்லாம் பாயந்துகொண்டே இருந்தார்கள்.

சின்னஞ்சிறிய கரும்புள்ளி ஒன்று தமது உள்ளத்தில் வந்துவிட்டதாக, அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டாலும் பதறியடித்துக்கொண்டு ஓடினார்கள். "அபூபக்கர் அவர்களே! நான் முனாஃபிக் ஆகிவிட்டேன், நான் முனாஃபிக் ஆகிவிட்டேன்!" என்று அலறியடித்துக் கொண்டு ஹன்ளலா ரளியல்லாஹு அன்ஹு ஓடிப்போனாரே! எதற்காக?

அண்ணலார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு அமர்ந்திருந்தால் ஈமானிய உணர்வு பொங்கி வழிகின்றது, வீட்டிற்குப் போய் குழந்தை குட்டிகளோடு கலந்துவிட்டாலோ மங்கிவிடுகின்றது, அப்படியென்றால்...? அப்படியென்றால் என்ன பொருள்? நிஃபாக் வந்து விட்டது என்று தானே...! காரணத்தை கேட்டுக்கொண்ட பிறகு, "என்னுடைய நிலையும் இப்படித்தானே உள்ளது. அப்படியென்றால் நானும் முனாஃபிக் ஆகிவிட்டேன்!" என்று அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் சேர்ந்து அங்கலாய்க்கத் தொடங்கினார்கள். இருவரும் ஒன்றாக, அழுதுகொண்டே இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றார்கள். விஷயத்தை அறிந்து கொண்டு அண்ணலார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருவரையும் அமைதிப் படுத்தினார்கள். உள்ளத்தில் இத்தகைய தடுமாற்றம் ஏற்படுவது இயற்கையே, இது நிஃபாக் ஆகாது, என்று கூறி ஆறுதலடையச் செய்தார்கள்.

"நான் முப்பது நபித்தோழர்களை சந்தித்து உள்ளேன். "நான் முனாஃபிக்காக இருப்பேனோ?" என்று அவர்களில் ஒவ்வொருவரும் தம்மைப்பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்" என்று தாபிஈன்களில் புகழ்பெற்ற இப்னு அபி முலைக்கா அறிவிக்கிறார். (நூல்: புகாரி)

"தன்னிடம் நிஃபாக் இல்லவே இல்லையென்று ஒரு முனாஃபிக் மட்டும்தான் கருதுவான். அதைப்பற்றி பயந்துகொண்டே இருப்பதுதான் முஃமினுடைய பண்பு!" என்று ஹஸன் பஸரி ரஹ்மதுல்லாஹி அலைஹி குறிப்பிடுகிறார்கள்.

"தனக்குத் தெரியாமலேயே தன்னுடைய நற்செயல்கள் அழிந்துவிடக்கூடாதே என்கிற முஃமினின் அச்சம்!" எனும் தலைப்பில் இமாம் புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு தலைப்பையே வகுத்துள்ளார்கள். சத்திய ஸஹாபாக்களின் இம்முன்மாதிரி நடைமுறையை நாம் கண்டிப்பாக கடைப்பிடித்தே ஆகவேண்டும்.

- மெளலானா,  சத்ருத்தீன் இஸ்லாஹி

தமிழாக்கம்: மெளலவி, அப்துர் ரஹ்மான் உமரி

www.nidur.info