Home இஸ்லாம் தொழுகை வித்ர் தொழுகையின் சட்டங்கள்
வித்ர் தொழுகையின் சட்டங்கள் PDF Print E-mail
Wednesday, 03 August 2016 06:42
Share

        வித்ர் தொழுகையின் சட்டங்கள்       

வித்ர் தொழுகையின் ரக்அத்துக்கள் 1, 3, 5, 7, 9, 11

வித்ர் தொழுபவர் 1, 3, 5, 7, 9, 11 என எந்த ஒற்றைப்படையான எண்ணிக்கையிலும் தொழுது கொள்ளலாம்.

ஒரு ரக்அத்து:

வித்ர் ஒரு ரக்அத்தும் தொழலாம் என்பதுதான் பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாகும். அவர்களின் கருத்துக்களுக்குப் பின்வரும் ஆதாரங்களைச் சான்றாக முன் வைக்கின்றனர்.

‘இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேடை மீது இருக்கும்போது ‘இரவுத் தொழுகை பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று ஒருவர் கேட்டார். ‘இரண்டிரண்டாகத் தொழ வேண்டும். ஸுப்ஹை தொழ முடியாது என்று அஞ்சினால் ஒரு ரக்அத் தொழலாம். அவர் தொழுதது அவருக்கு வித்ராக அமையும். உங்களின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.’ (புகாரி: 472)

‘இப்னு அபீ முலைக்கா ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவித்தார்: முஆவியா ரளியல்லாஹு அன்ஹு, தம்மிடம் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அடிமையொருவர் (குரைப்) இருக்க, இஷா தொழுகைக்குப் பின் ஒரு ரக்அத் வித்ரு தொழுதார்கள். அந்த அடிமை இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்றார். (முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு ரக்அத் வித்ரு தொழுத விஷயத்தைக் கூறினார்.) இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ‘அவரை (அப்படியே தொழ)விட்டு விடு. ஏனெனில், அவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தோழமை கொண்டிருந்தார்’ என்று கூறினார்கள்.’ (புகாரி: 3764)

‘இரவின் இறுதியில் தொழப்படும் ஒரு ரக்அத்தே வித்ராகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: முஸ்லிம் 752-753)

இந்த அறிவிப்புக்களின் அடிப்படையில் வித்ர் ஒரு ரக்அத்தும் தொழலாம் என்பதை அறியலாம்.

எனினும், இமாம் அபூஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் வித்ர் மூன்றுக்குக் குறைய தொழ முடியாது என்ற கருத்தில் இருக்கின்றார்கள். ‘மஃரிப் என்பது பகலின் வித்ராகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.’ (அஹ்மத்: 4847)

இங்கே மஃரிப் தொழுகை வித்ருக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. மஃரிப் மூன்று ரக்அத்துக் களை உடைய தொழுகை. எனவே, வித்ர் தொழுகை மூன்று ரக்அத்துக்களுக்குக் குறைவாக இருக்கக் கூடாது என்பது அவரது வாதமாகும்.

நாம் ஏற்கனவே கூறிய ஆதாரங்கள் வெளிப்படையாகவே வித்ர் ஒரு ரக்அத்தும் தொழலாம் எனக் கூறும் போது இமாம் அபூஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ஒப்பீட்டின் அடிப்படையில் எடுத்த இந்தத் தீர்மானம் பலவீனமாகிவிடுகின்றது என்பதை நாம் அறியலாம்.

மூன்று ரக்அத்து வித்ர் தொழுதல்:

மூன்று ரக்அத்துக்களும் வித்ர் தொழலாம். வித்ர் மூன்று ரக்அத்துக்கள் தொழும் போது பின்வரும் இரண்டு அடிப்படைகளில் தொழப்படும்.

1. இரண்டு ஸலாம்களில் தொழுதல்:

முதலில் இரண்டு ரக்அத்துக்கள் தொழுது ஸலாம் கொடுத்துவிட்டு மீதி ஒரு ரக்அத்தை தனியாகத் தொழுதல்.

‘நாஃபிவு அறிவித்தார். இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு (மூன்று ரக்அத்களில்) இரண்டு ரக்அத்களுக்கும் ஒரு ரக்அத்துக்குமிடையே ஸலாம் கொடுப்பார்கள். (அவ்விடைவெளியில்) தம் சில தேவைகள் பற்றியும் (குடும்பத்தினருக்குக்) கட்டளை யிடுவார்கள். ‘ (புகாரி: 991)

இங்கே இது இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் நடைமுறையாகக் கூறப்படுகின்றது. இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சுன்னாவைப் பேணுவதில் அதிக அக்கறை கொண்ட நபித்தோழராகத் திகழ்ந்தவர் என்பதை அனைவரும் அறிவர். அவரின் இந்த நடைமுறை இப்படியும் தொழலாம் என்பதற்கான அனுமதி இருப்பதற்கான ஆதாரமாக அமைந்துள்ளது எனலாம்.

இதே வேளை, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படித் தொழுவார்கள் என இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களே அறிவிக்கவும் செய்கின்றார்கள். இரட்டைத் தொழுகைக்கும் ஒற்றை வித்ர் தொழுகைக்கும் இடையில் நாம் கேட்கக் கூடிய ஸலாத்தின் மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரிவை ஏற்படுத்துவார்கள் என இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: இப்னு ஹிப்பான்: 2435, அஹ்மத்)

அறிஞர் அல்பானி இதனை ஸஹீஹ் என்கின்றார்.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் இரண்டிரண்டாகத் தொழுது இறுதியில் ஒரு ரக்அத்து மட்டும் தொழும் விதத்திலும் வித்ர் தொழலாம். மூன்று ரக்அத்துக்கள் தொழுபவர்கள் முதலில் இரண்டு ரக்அத்துக்கள் தொழுது ஸலாம் கொடுத்து விட்டு தனியாக ஒரு ரக்அத்தையும் தொழலாம் என்பதை அறியலாம்.

2. மூன்று ரக்அத்துக்களையும் ஒரு ஸலாம் ஒரு அத்தஹிய்யாத்து மூலம் தொழுதல்:

இரண்டாம் ரக்அத்தில் அத்தஹிய்யாத் துக்காக அமராமல் மூன்றாம் ரக்அத்தில் அத்தஹிய்யாத்து ஓதி ஸலாம் கொடுக்க வேண்டும். இதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கொள்வர்.

‘அபூ ஸலமா அறிவித்தார். ரமழானில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷாஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானிலும் ரமழான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்’ என்று விடையளித்தார்கள்.

‘இறைத்தூதர் அவர்களே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா? என்று கேட்டேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஆயிஷாவே! என் கண்கள் தாம் உறங்குகின்றன. என் உள்ளம் உறங்குவதில்லை’ என்று விடையளித்தார்கள் என்றும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார். ‘ (புகாரி: 1147, 2013, முஸ்லிம்: 738-125, அபூதாவூத்: 1341)

இங்கே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வித்ர் மூன்று ரக்அத்துக்கள் தொழுவார்கள் என்று இடம் பெற்றுள்ளது.

‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஐந்து ரக்அத்துக்கள் மூலம் வித்ர் தொழுவார்கள். அதன் இறுதியில் அன்றி (அத்தஹிய்யாத்துக்காக) அமர மாட்டார்கள்’ என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: இப்னு ஹிப்பான்: 2439, 2440)

இந்த அடிப்படையில் மூன்று அல்லது ஐந்து ரக்அத்துக்கள் தொழும் போது இடையில் அத்தஹிய்யாத்துக்காக அமராமல் இறுதியில் ஓதும் அத்தஹிய்யாத்துடன் மட்டும் தொழுகையை முடித்துக் கொள்ள வேண்டும்.

வித்ர் தொழுகையை மஃரிப் போல் ஆக்கிக் கொள்ள வேண்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே, மூன்று ரக்அத்துக்கள் வித்ர் தொழும் போது இரண்டாம் ரக்அத்தில் அத்தஹிய்யாத்துக்காக அமரக் கூடாது! ஏற்கனவே கூறியது போல் இரண்டு ரக்அத்துக்கள் தொழுது விட்டு ஸலாம் கொடுத்து மீதி ஒரு ரக்அத்து தொழலாம். அல்லது நடு அத்தஹிய்யாத் துக்கு அமராமல் மூன்றாம் அத்தஹிய்யாத்தில் மட்டும் அத்தஹிய்யாத்து ஓதி ஸலாம் கொடுக்கலாம். இதுதான் மிகவும் ஏற்றமானதாகும்.

என்ன ஓதலாம்?

மூன்று ரக்அத்துக்கள் வித்ர் தொழும் போது முதல் ரக்அத்தில் பாதிஹாவுக்குப் பின்னர் ஸப்பி ஹிஸ்மஸவும், இரண்டாம் ரக்அத்தில் குல் யா அய்யுஹல் காபிரூனும், மூன்றாம் ரக்அத்தில் குல்ஹுவல்லாஹு அஹத்ஸ சூறாவும் ஓதுவது விரும்பத்தக்கதாகும்.

ஐந்து ரக்அத்துக்கள்:

ஏற்கனவே நாம் கூறிய ஆதாரங்களின் அடிப்படையில் ஐந்து ரக்அத்துகள் வித்ர் தொழுவதாக இருந்தால் இறுதியில் மட்டும் அத்தஹிய்யாத்து ஓதி ஸலாம் கொடுக்க வேண்டும். இடையில் அத்தஹிய்யாத்துக்காக அமர வேண்டியதில்லை.

ஏழு ரக்அத்துக்கள்:

ஏழு அல்லது ஒன்பது ரக்அத்துக்களும் வித்ர் தொழலாம். இவ்வாறு தொழும் போது கடைசிக்கு முந்திய ரக்அத்தில் அத்தஹிய்யாத் துக்காக அமர்ந்து அத்தஹிய்யாத்து ஓதிய பின்னர் எழுந்து ஒரு ரக்அத்தை தொழுது அத்தஹிய்யாத்து ஓதி ஸலாம் கொடுக்க வேண்டும். ஏழு தொழுபவர் ஆறிலும், ஏழிலும், ஒன்பது தொழுபவர் எட்டிலும், ஒன்பதிலும் அத்தஹிய்யாத்து ஓத வேண்டும்.

இதற்கு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் பின்வரும் அறிவிப்பு ஆதாரமாக அமைந்துள்ளது.

”முஃமின்களின் தாய் அவர்களே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வித்ர் தொழுகை பற்றி எனக்குச் சொல்லித் தாருங்கள்’ என்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்டேன்.

‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல் துலக்க மிஸ்வாக்கையும், சுத்தம் செய்ய நீரையும் ஏற்பாடு செய்து வைப்போம். இரவில் அவர்களை அல்லாஹ் எப்போது விழிக்கச் செய்ய நாடுகின்றானோ அப்போது அவர்கள் எழும்புவார்கள். பின்னர் பல் துலக்கி வுழூச் செய்வார்கள். பின்னர் ஒன்பது ரக்அத்துக்கள் தொழுவார்கள். எட்டாம் ரக்அத்தில்தான் (அத்தஹிய்யாத்துக்காக) அமர்வார்கள். அல்லாஹ்வை நினைவுகூர்ந்து, அவனைப் புகழ்ந்து அவனிடம் பிரார்த்திப்பார்கள். பின்னர் எழுந்து ஒன்பதாம் ரக்அத்தைத் தொழுவார்கள். பின்னர் அமர்ந்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்து அவனைப் புகழ்ந்து, அவனைப் பிரார்த்திப்பார்கள். பின்னர் எமக்குக் கேட்கும் படி ஒரு ஸலாம் கொடுப்பார்கள்.’ (அறிவிப்பவர்: ஹிஸாம் இப்னு அமீர் ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஆதாரம்: முஸ்லிம் 746-139, தாரமி 1620, நஸாஈ 1718)

வித்ருக்கு முன்னர் கியாமுல் லைல் தொழுதாக வேண்டுமா?

வித்ர் தொழுவதற்கு முன்னர் குறைந்த பட்சம் இரண்டு ரக்அத்துக்களாவது தொழுதிருக்க வேண்டும் என்ற கருத்து மாலிக் மற்றும் ஹனஃபி மத்ஹபுடைய அறிஞர்களுக்கு மத்தியில் இருக்கின்றது. எனினும், ஒருவர் வித்ருக்கு முன்னர் எதுவும் தொழாமலே வித்ர் தொழலாம் என்பதே சரியான கருத்தாகும்.

‘நான் தூங்கிக் கொண்டிருப்பேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது கொண்டிருப்பார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வித்ர் தொழ நாடும் போது என்னை எழுப்பிவிடுவார்கள். நான் வித்ர் தொழுவேன் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.’ (ஆதாரம்: புகாரி 512, 997, முஸ்லிம்-512-268)

இந்த ஹதீஸை வெளிப்படையில் பார்க்கும் போது ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் வித்ருக்கு முன்னர் எதுவும் தொழவில்லை என்பது தெளிவாகத் தெரியும்.

தொழவில்லை என்பதைப் புரியவும்:

இவ்வாறே நாம் ஏற்கனவே குறிப்பிட்ட, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒன்பது, ஏழு ரக்அத்துக்கள் வித்ர் தொழும் ஹதீஸ்களைப் பார்க்கும் போதும் வித்ருக்கு முன்னர் இரட்டைப்படையாக ஏதேனும் தொழ வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை என்பதை அறியலாம்.

ஸலாத்துல் வித்ர்

வித்ர் தொழுகையும் கியாமுல்லைல் தொழுகைக்குள் அடங்கக் கூடியதுதான். இருப்பினும் கியாமுல்லைல் இரவுத் தொழுகைக்கும் வித்ர் தொழுகைக்குமிடையில் சில வித்தியாசங்கள் உள்ளன.

எனவே, ஹதீஸ்கலை, பிக்ஹ் கலை அறிஞர்கள் இரண்டையும் தனித்தனித் தலைப்பாக பேசியுள்ளனர். இந்த அடிப்படை யில்தான் இங்கு வித்ர் தொழுகை குறித்துத் தனித் தலைப்பாக நோக்கப்படுகின்றது.

வித்ர் என்றால் ஒற்றைப்படை அதாவது 1, 3, 5, 7 என்ற எண்ணிக்கையைக் குறிக்கும். இந்த அடிப்படையில்தான் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.

‘உங்களில் ஒருவர் (சிறுநீர் கழித்துவிட்டு) கற்களைக் கொண்டு சுத்தம் செய்வதென்றால் ‘பல்யூதிர்’ ஒற்றைப்படையான எண்ணிக்கையில் கற்களைக் கொண்டு சுத்தம் செய்யட்டும்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: தாரமீ 723, இப்னு ஹிப்பான் 1410)

இந்த அடிப்படையில் ‘வித்ர்’ என்றால் ஒற்றைப்படை என்று அர்த்தப்படும். ஸலாதுல் வித்ர் என்றால் இஷாவுக்கும் சுபஹுக்கும் இடையில் தொழப்படும் ஒற்றைப்படைத் தொழுகையைக் குறிக்கும். இதன் மூலமாகத்தான் கியாமுல் லைல் இரவுத் தொழுகை முடிக்கப்படும். தனியாகத் தொழப்படும் ஒரு ரக்அத்தோ அல்லது 3, 5, 7 என சேர்த்து ஒரே ஸலாத்துடன் முடிக்கப்படும் தொழுகையாகவோ இது இருக்கும். இரவுத் தொழுகையின் இறுதித் தொழுகையாகவும் இது அமைந்திருக்கும்.

வித்ரும் கியாமுல் லைலும்

சில அறிவிப்புக்களில் இரவுத் தொழுகைக் கும் வித்ர் என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எத்தனை ரக்அத்துக்களைக் கொண்டு வித்ர் தொழுவார்கள் என நான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ‘நான்கையும் மூன்றையும் (7) கொண்டும், ஆறையும் மூன்றையும் (9) கொண்டும், எட்டையும் மூன்றையும் (11) கொண்டும், பத்தையும் மூன்றையும் (13) கொண்டும் தொழுதுள்ளார்கள். ஏழை விடக் குறைவாகவோ, 13 ஐ விடக் கூடுதலாகவோ அவர்கள் தொழுததில்லை” எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அபூ கைஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத் 1362, மிஷ்காத் 1264)

இமாம் அல்பானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இந்த ஹதீஸ் ஸஹீஹ் என்று சொல்கின்றார்.

இந்த அறிவிப்பில் முழு இரவுத் தொழுகையும் வித்ர் என்று கூறப்பட்டாலும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் சற்று பிரித்துக் கூறியிருப்பதையம் அவதானிக்கலாம். நான்கும் மூன்றும் என்று கூறும் போது மூன்று என்பது வித்ரையும் முன்னால் உள்ள 4, 6, 8, 10 என்பன கியாமுல் லைலயும் குறிக்கும். இந்த அடிப்படையில் வித்ரையும் கியாமுல் லைலையும் இப்படி பிரித்துப் பார்க்கலாம்.

o. கியாமுல் லைலுக்குள் வித்ர் அடங்கும். ஆனால், வித்ருக்கு முன்னால் தொழுத கியாமுல் லைல் வித்ரில் அடங்காது.

o. சட்டரீதியில் பார்த்தால் கியாமுல் லைலை விட வித்ர் வலியுறுத்தி ஏவப்பட்டுள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் பயணத்திலும் தொழுத சுன்னத்தாக சுபஹுடைய முன் சுன்னத்தும் வித்ரும் திகழ்கின்றன. எனவேதான் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்ற அறிஞர்கள் வித்ரை வாஜிப் என்றனர். ஆனால், கியாமுல் லைல் அந்தளவு வலியுறுத்தப்பட்டதன்று.

o ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது நான் அவர்களின் விரிப்பில் அவர்களுக்குக் குறுக்கே உறங்கிக் கொண்டிருப்பேன். அவர்கள் வித்ர் தொழ எண்ணும் போது என்னை எழச் செய்வார்கள். அதன்பின்னர் வித்ரு தொழுவேன். ‘ (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, புகாரி 512)

இங்கே வித்ர் தொழுகையையும் கியாமுல் லைலையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்கள் பிரித்துப் பார்த்திருப்பதைக் காணலாம்.

o இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள்: ‘இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களே! நீ முடித்துக் கொள்ள நாடினால் ஒரு ரக்அத்தைத் தொழு! அது முன்னர் தொழுததை ஒற்றையாக ஆக்கி விடும்.’ என அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.

(இரண்டாவது அறிவிப்பாளராகிய) காஸிம், ‘மக்கள் மூன்று ரக்அத்களை வித்ராகத் தொழுவதை நாம் காண்கிறோம். எல்லாமே அனுமதிக்கப்பட்டதுதாம். இதில் எப்படிச் செய்தாலும் குற்றமில்லை என கருதுகிறேன்’ என்று குறிப்பிட்டார்கள். (புகாரி 993)

இங்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கியாமுல் லைலையும் வித்ரையும் பிரித்துக் கூறியுள்ளார்கள். இரவுத் தொழுகை வித்ரைக் கொண்டு முடிவு செய்யப்படும். இரண்டிரண்டாத் தொழுது ஈற்றில் ஒரு ரக்அத் தொழுதால் அந்த ஒரு ரக்அத் வித்ராகவும் இரண்டிரண்டாகத் தொழுதது கியாமுல்லைலாகவும் இருக்கும். அல்லது 3, 5, 7 ரக்அத்துக்கள் தொடராகத் தொழப்பட்டால் அது வித்ராகவும் அதற்கு முன்னர் இரண்டிரண்டாகத் தொழப்பட்டது கியாமுல் லைலாகவும் இருக்கும். இப்படியான வேறுபாடுகள் இருப்பதனாலேயே அறிஞர்கள் இரண்டையும் வேறுபடுத்தி நோக்கியுள்ளனர்.

வித்ர் தொழுகையின் சட்டம்

வித்ர் தொழுகை ‘வாஜிப்’ – கட்டாயம் தொழப்பட வேண்டிய தொழுகை என்பது இமாம் அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களது கருத்தாகும். வித்ர் தொழுகையை ஏவி வரக்கூடிய ஹதீஸ்கள் இதற்கு ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றன.

ஏனைய அறிஞர்கள் வித்ர் தொழுகையை வாஜிப் அல்ல என்றும் கட்டாய சுன்னத் என்றும் கூறுகின்றனர். ஐவேளைத் தொழுகைதான் கடமை என்பதைக் குறிக்கக் கூடிய ஹதீஸ்களை இவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றனர். இதுதான் சரியான முடிவாகும். இது குறித்து இமாம் இப்னு தைமிய்யா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறும் போது,

‘இரவுத் தொழுகை தொழுதவருக்கு வித்ர் தொழுவது வாஜிப் என்று குறிப்பிடுகின்றார்கள். ‘உங்கள் இரவுத் தொழுகையின் இறுதியாக வித்ரை ஆக்கிக் கௌ;ளுங்கள்’ என்ற ஹதீஸை இதற்கு ஆதாரமாகக் கொள்கின்றார்கள். இதுதான் ஏற்புடைய பார்வையாகத் தென்படுகின்றது.’

தொழுகையின் நேரம்

இஷா தொழுகைக்கும் சுபஹ் தொழுகைக்கும் இடையில் இது தொழப்பட வேண்டும். இரவின் மூன்றாம் பகுதியில் தொழுவது ஏற்றமானதாகும். இது குறித்து கியாமுல்லைல் பகுதியில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.

வித்ர் தொழுதவர் மீண்டும் நபில் தொழலாமா?

ஒருவர் வித்ர் தொழுதுவிட்டு உறங்குகின்றார். இடையில் மீண்டும் விழிப்பு வந்து மீண்டும் சுன்னத் தொழலாமா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. ‘உங்கள் தொழுகையின் இறுதியாக வித்ரை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ என ஹதீஸ் கூறுகின்றது. வித்ர் தொழுதவர் மீண்டும் நபில் தொழலாமா என்ற ஐயம் பொதுவாக ரமழான் காலங்களில் எற்படுவதுண்டு. இது குறித்து அறிஞர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தொழலாம். ஆனால், வித்ரை உடைக்க வேண்டும். அதாவது, வித்ர் தொழுத ஒருவர் உதாரணமாக, ஐந்து ரக்அத் வித்ர் தொழுதுள்ளார். அவர் மீண்டும் தொழ ஆசைப்பட்டால் முதலில் தனியாக ஒரு ரக்அத் தொழ வேண்டும். இதன் மூலம் ஏற்கனவே அவர் தொழுத ஐந்து ரக்அத்துக்களுடன் இந்த ரக்அத்தும் சேர்ந்து ஆறு ரக்அத்துக்களாகிவிடும். முன்னர் தொழுத வித்ர் நீங்கிய பின்னர் அவர் விரும்பிய அளவு தொழுதுவிட்டு மீண்டும் வித்ர் தொழுது தொழுகையை முடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

ஷாஃபி மத்ஹபுடைய அறிஞர்களில் சிலரும் நபித்தோழர்களில் சிலரும் இந்தக் கருத்தில் உள்ளனர். இரவுத் தொழுகையின் இறுதியாக வித்ர் இருக்க வேண்டும் என்ற ஹதீஸை மையமாக வைத்தே இந்த முடிவுக்கு இவர்கள் வருகின்றனர். (பார்க்க: திர்மிதி 470) பின்வரும் காரணங்களால் இந்த முடிவு வலுவிழந்து போகின்றது.

1. ஒரு இரவின் இரண்டு வித்ர் தொழுகைகள் இல்லை என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு குஸைமா 1101, அபூதாவூத் 1440, திர்மிதி 470)

இந்த ஹதீஸின் அடிப்படையில் ஒரு இரவில் இரு வித்ர் தொழ முடியாது. இதை சரிபண்ணவே ஏற்கனவே தொழுத வித்ரை உடைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஏற்கனவே வித்ர் தொழுதவர் தனியாக ஒரு ரக்அத் தொழுது தான் ஏற்கனவே தொழுத வித்ரை உடைக்க வேண்டும் என்பது இவர்களது கருத்து. அப்படி உடைத்துவிட்டு தனக்கு வேண்டிய அளவு தொழுதுவிட்டு பின்னர் வித்ர் தொழுதால் அவர் இறுதித் தொழுகையாக வித்ரை ஆக்கியவராகவும் ஒரு இரவில் இரண்டு வித்ர் தொழுதவராகவும் மாறிவிடுவார் என்பது இவர்களது அபிப்பிராயமாகும்.

ஆனால், கவனமாக அவதானித்தால் ஒரே இரவில் மூன்று வித்ர் தொழப்படும் நிலை இங்கே உருவாகின்றது. எனவே, இது தவறான நிலைப்பாடாகும்.

o. வித்ர் அல்லாமல் தனியாக ஒரு ரக்அத் தொழக்கூடிய ஒரு தொழுகையை இஸ்லாம் அறிமுகப்படுத்தியதில்லை. இங்கு அது நடைபெறுகின்றது.

o. முதலில் தொழுத வித்ர் முடிந்துவிட்டது. பின்னர் உறங்கிவிட்டு மீண்டும் எழுந்து ஒரு ரக்அத் தொழுவது அந்த வித்ரை முறித்து இரட்டையாக மாற்ற முடியாது. எனவே, இந்த நடைமுறை போதிய ஆதாரமற்ற நடைமுறையாகத் தென்படுகின்றது.

இது குறித்து மாற்றுக் கருத்துக் கூறும் அறிஞர்களின் பின்வரும் முடிவு பொருத்தமாகப் படுகின்றது.

ஏற்கனவே வித்ர் தொழுதவர் மீண்டும் தொழ நினைத்தால் அவர் தொழுது கொள்ளலாம். ஆனால், அவர் மீண்டும் வித்ர் தொழக் கூடாது. உதாரணமாக, வித்ர் தொழுத ஒருவர் இரவில் விழிக்கின்றார். அவர் இரட்டைப்படையாக விரும்பிய அளவு தொழலாம். மீண்டும் வித்ர் தொழக் கூடாது. அப்படி வித்ர் தொழுதால் ஒரு இரவில் இரு வித்ர் தொழக் கூடாது என்ற ஹதீஸை மீற நேரிடும் என்பது இவர்களின் வாதமாகும்.

இந்த முடிவை எடுக்கும் போது உங்கள் இரவுத் தொழுகையின் இறுதித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்ற ஹதீஸ் மீறப்படுவதாகத் தென்படும். ஒருவர் இரவுத் தொழுகையின் இறுதித் தொழுகையாக வித்ரைத்தான் ஆக்கிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, ஒரே நேரத்தில் இரவுத் தொழுகை தொழும் ஒருவர் நான்கு ரக்அத்துக்கள் தொழுதுவிட்டு பின்னர் மூன்று ரக்அத்துக்கள் தொழுதுவிட்டு பின்னர் நான்கு ரக்அத் தொழும் விதத்தில் தொழுவது கூடாது. இதே வேளை வித்ருக்குப் பின்னரும் தொழுவதற்கான சலுகை இருப்பதை நபியவர்கள் உணர்த்தியுள்ளார்கள். அந்த ஆதாரங்களை இக்கருத்துடைய உலமாக்கள் தமது நிலைப்பாட்டிற்குப் பலமான ஆதாரமாகக் கொள்கின்றனர்.

‘நபியவர்கள் இரவில் 13 ரக்அத்துக்கள் தொழுவார்கள். 8 ரக்அத்துக்கள் தொழுவார்கள். பின்னர் வித்ர் தொழுவார்கள். பின்னர் இரண்டு ரக்அத்துக்களை இருந்தவர்களாகத் தொழுவார்கள். ருகூஃ செய்ய விரும்பினால் எழுந்து ருகூஃ செய்வார்கள். அதானுக்கும் இகாமத்துக்கும் இடையில் இரண்டு ரக்அத்து தொழுவார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: இப்னு குஸைமா 11102)

நபியவர்கள் வித்ருக்குப் பின்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழுததாக இப்னு குஸைமா (1105), அபூதாவூத்: 1340, 1351, இப்னுமாஜா: 1195, திர்மிதி: 471 என பல நூற்களிலும் ஹதீஸ்கள் பதிவாகியுள்ளன.

எனவே, வித்ர் தொழுதவர் மீண்டும் விழித்து தொழ நினைத்தால் இந்த சலுகையின் அடிப்படையில் மீண்டும் தொழலாம். அவர் அதன் பின்னர் வித்ர் தொழ வேண்டியதில்லை என்பதே வலுவான கருத்தாகத் திகழ்கின்றது.

source: http://www.islamkalvi.com/?p=106779